Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கரோனாவும் அசைவப் பிரியா்களும்


கொல்லாமையை வலியுறுத்திய திருவள்ளுவரும், ஜீவகாருண்யத்தை போதித்த வள்ளலாரும் பிறந்த புண்ணிய பூமி இது. இருந்தபோதிலும், அசைவ உணவை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் லட்சக்கணக்கில் இங்கு வாழ்கின்றனர். உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், உலகெங்கிலும் உள்ள அசைவ உணவுப் பிரியர்களை விட்டுவைக்கவில்லை. இதில் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?


கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. மாநில அரசுகளும் அதைச் செயல்படுத்துவதில் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கின்றன. மக்கள் கூடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதே சமயம், மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களான பால், மளிகை, காய்கறி போன்றவற்றை வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் நிலைக்கு ஏற்ப நேர அட்டவணைகளை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டன. விற்பவர்கள், வாங்குபவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டன. ஆனால், பொது முடக்கம் தொடங்கிய நாளிலிருந்தே, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைப் பற்றி கவலைப்படாமல் நெருக்கிக் கொண்டு வாங்கிச் சென்றதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.

இதனால், சில மாவட்ட நிர்வாகங்கள் தங்கள் பகுதிகளில் இறைச்சிக் கடைகள் செயல்படுவதற்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன. கடைகள் செயல்படும் நாட்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. எப்போது திறக்கும் என்று காத்திருந்த அசைவப் பிரியர்கள், கடை திறந்தவுடன் மீண்டும் சமூக இடைவெளியைப் பற்றி கவலைப்படாமல் அலைமோதத் தொடங்கினர்.

இதுமட்டுமின்றி, கொரோனா பரவ ஆரம்பித்த உடனேயே, கோழி இறைச்சி மூலம் கொரோனா வேகமாகப் பரவும் என்ற வதந்தி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடையே பரவியது. இது ஆதாரமற்ற செய்தி என கோழிப் பண்ணையாளர்களும் அரசுத் துறையினரும் விளக்கமளித்தபோதிலும், பலர் இதை நம்பினர். இதன் விளைவாக, கோழி இறைச்சிக்குப் பதிலாக ஆட்டிறைச்சியை வாங்க அதிக அளவில் மக்கள் ஆர்வம் காட்ட, ஆட்டிறைச்சிக் கடைகளின் முன்பு கூட்டம் இன்னும் அதிகரித்தது.

கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூஹான் நகரில் உள்ள ஓர் இறைச்சிச் சந்தையிலிருந்து பரவியது என்ற கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டுப் பரப்பப்பட்டது என்ற குற்றச்சாட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சீனாவின் மீது கூறப்பட்டாலும், அது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகளை விடவும், இறைச்சிக் கடைகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் தூய்மை என்பது பொதுவாக நமது நாட்டில் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இறைச்சிக் கழிவுகள் ஏற்படுத்தும் துர்நாற்றம் முகம் சுளிக்க வைப்பதுடன், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் கழிவுகளை உண்ண வரும் நாய்கள், பறவைகளால் ஏற்படும் சூழல் கேடும் பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையைப் போலவே, ஒவ்வொரு ஊரிலும் உள்ள இறைச்சிச் சந்தையும் கொரோனா வைரஸின் இருப்பிடம்தானா என்பதை வரும் நாட்கள் தெளிவாக்கும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, நடந்த ஒரு விஷயம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு வருந்துகிறோம் என்றோ, கொரோனாவைக் கொண்டாடுகிறோம் என்றோ கூறிக்கொண்டு ஆங்காங்கே பலர் ஒன்றுகூடி கறி விருந்து நடத்தியுள்ளனர். இந்த விருந்துகளின்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது மட்டுமன்றி, ஒரே இலையின் இரண்டு புறங்களிலும் அமர்ந்து அசைவ உணவைச் சுவைத்துள்ளனர். அதாவது, ஒருவர் எச்சில் செய்து உண்டதை இன்னொருவரும் உட்கொண்டிருக்கிறார். இது மிகவும் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகும்.

இவ்விதம் ஒன்றாக அமர்ந்து அசைவம் உண்டவர்களில் ஒருவருக்கேனும் தொற்று இருந்தால், அது விருந்துண்ட அனைவருக்கும் பரவிவிடும் என்பதை யாரும் உணராதது ஏன்? இத்தகைய ஒழுக்கக் கேடான விருந்தினை உலக சாதனை செய்தவர்கள் போலக் கருதி, காணொலியாக்கி வாட்ஸ்அப், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். ஒருசில விநாடிகளுக்கு ஊடகச் செய்திகளில் ஒளிபரப்பாகி, பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உள்ளானதைத் தவிர வேறு எதையும் அவர்கள் சாதிக்கவில்லை.

இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. சைவ உணவு உண்பவர்கள், அசைவப் பிரியர்கள் என இரு பிரிவினருக்கும் அவரவர் விரும்பியதை உண்ணும் உரிமை உண்டு. எனினும், திருவள்ளுவர், வள்ளலார் ஆகியோரின் அறிவுரைப்படி அசைவ உணவைத் தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement