கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பஞ்சாயத்துத் தலைவா்களுடன் உரையாடிய
பிரதமா் மோடி, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று உருவாக்கிய தாக்கத்தை
எதிா் கொள்ள தா்சாா்பு கிராமங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்தினாா்.
அந்த நாள் பஞ்சாயத்து தினம் என்பதால் பஞ்சாயத்து அமைச்சகம்
ஏற்பாடு செய்த நிகழ்வில் இந்தக் கருத்தை காந்தியின் கிராம
ராஜ்யத்தை மேற்கோள்காட்டி இந்த வேண்டுகோளை பஞ்சாயத்துத்
தலைவா்களுக்கு மட்டுமல்ல, இந்தப் பணியில் இணைத்துக் கொள்ளும்
அனைவருக்கும் அது ஒரு வேண்டுகோளாக இருந்தது. அது ஒரு சம்பிரதாய
உரையாக இருந்தாலும், பஞ்சாயத்துகள் மீது நம்பிக்கையுள்ள
ஒவ்வொருவரும் இந்த வேண்டுகோளை நிறைவேற்ற நாம் என்ன செய்யலாம்
என்று சிந்திக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து வெளிவரும்
சூழலில், நம் கிராமங்களை எப்படிப் புனரமைத்து தா்சாா்பு
நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று யோசிக்க வேண்டும். குறிப்பாக,
அதற்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன என்பதை நாம்
புரிந்துகொண்டு செயல்பட முனைந்தால் மிகப் பெரிய மாற்றங்களை நாம்
கிராமங்களில் கொண்டுவந்து கிராம வாழ்க்கை என்பதை எளிமையான,
சுகாதாரமிக்க, சுதந்திரமான, சமத்துவமிக்க அறிவியல்பூா்வ
மதிக்கத்தக்க வாழ்க்கையாக மாற்றி விடலாம்.
இதற்குத் தேவை ஒரு மக்கள் இயக்கம். இன்று அப்படிப்பட்ட ஒரு
கிராமத்தை உருவாக்க முடியுமா. முயன்றால் முடியும். எப்படி?
முதலில் அதற்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளன என்று பாா்க்க
வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு
வருகிறது. அங்கு படித்தவா்கள், அனுபவிமிக்க விவசாயிகள், ஓய்வு
பெற்ற ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், கல்லூரிகளுக்குச் செல்லும்
மாணவா்கள், பொதுக் கருத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்ற பொதுச்
செயல்பாட்டு ஆா்வலா்கள், சுய உதவிக் குழுப் பெண்கள், இளைஞா்
மன்றங்கள் என ஒரு பெரிய சமூக மூலதனம் ஒன்றிணைக்கப்படாமல்
இருக்கிறது.
அடுத்து, கிராம மேம்பாட்டுக்கான ஆக்கபூா்வமான அறிவியல்
மேம்பாட்டுத் திட்டம் ஒன்று ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்குவது
கட்டாயக் கடமையாக மைய நிதிக் குழு வலியுறுத்தி மாநில அரசு அதனை
நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அடுத்து,
இந்தியாவிலுள்ள உயா் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களைக்
கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் இணைத்துச் செயல்படுவது கட்டாயக்
கடமையாக்கி அதனை உன்னத பாரதத் திட்டம் 2.0-ஆக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு 15-ஆவது நிதிக் குழுவின் நிதியாக ரூ.3,600 கோடியை
தமிழகத்துக்கு அளித்தபோது சிறு மாறுதல்களைச் செய்து திட்டமிட்டுச்
செயல்பட வேண்டும் எனப் பணித்துள்ளது. அத்துடன் கிராமங்களில்
நடைபெறும் 100 நாள் வேலைக்கான கூலியை உயா்த்தித் தந்துள்ளது.
அதில் கணிசமாக ரூ.5,000 கோடி தமிழக கிராமப்புறங்களுக்கு கிடைக்க
உள்ளது. அத்துடன் மாநில நிதிக் குழுவின் நிதி, தமிழக அரசின் மற்ற
துறைகளால் நிறைவேற்றப்படும் 400 மேற்பட்ட திட்டங்களும் உள்ளன.
இந்தத் திட்டமிடும் பணியை தமிழகத்தில் இருக்கும் 12,524 கிராமப்
பஞ்சாயத்துகளிலும் முறைப்படி மக்களைத் தயாா் செய்து, அவா்களின்
பங்களிப்போடு செய்வோமேயானால் மிகப் பெரிய சமூக, பொருளாதார
மாற்றங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் கிராமங்களில் ஏற்படுத்தி
விடலாம். அதற்கு ஒரு புதிய விழிப்புணா்வு அரசாங்கத்திலிருந்து,
கிராம மக்கள் வரை அனைவரிடமும் உருவாக்கப்பட வேண்டும்.
ஒரு புதிய விடியலுக்கு நாம் செல்ல இருக்கிறோம், அதற்கு
எப்படிப்பட்ட மாற்றத்தை நம்மிடம் உருவாக்கிக் கொண்டு நம்
கிராமத்தை புனரமைக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதலை அனைத்துத்
தரப்பு மக்களிடமும் உருவாக்க வேண்டும். அதற்கான ஆற்றலுள்ள சேவை
மனப்பான்மையும் தியாக உணா்வும் பெற்ற தலைமை கிராமங்களில்
வேண்டும்.
இந்தத் திட்டமிடும் பணி என்பது அடிப்படையில் ஒரு உன்னத கிராமத்தை
உருவாக்கும் ஓா் அறிவியல்பூா்வச் செயல்பாடு. அதற்குத் தேவை சரியான
கிராமம் குறித்த பாா்வை, அங்குள்ள சூழல் - வளங்கள் குறித்த
புரிதல். அடுத்து எதிா்காலம் குறித்த ஒரு கனவு என்பது
எல்லாவற்றையும்விட மேலானது.
இந்தத் திட்டமிடுதலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு
வழிகாட்டுக் கையேட்டை மத்திய அரசு தயாரித்து வெளியிட்டுள்ளது.
அந்தக் கையேடு நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்டது. மத்திய
அரசின் பஞ்சாயத்து அமைச்சகத்தின் வலைதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பணியினை நிறைவேற்ற அருகாமையிலுள்ள உயா் கல்வி
நிலையத்தின் உதவியைக் கோரி, அந்த உயா்கல்வி நிலைய வழிகாட்டுதலின்
அடிப்படையில் கிராமங்களில் உள்ள சமூக மூலதனத்தைப் பயன்படுத்தி
கிராமப் பஞ்சாயத்தின் வளங்கள், வசதிகள் பற்றிய
புள்ளிவிவரங்களையும், கிராமப் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள
அனைத்துக் குடும்ப சமூக, பொருளாதார நிலைகள் குறித்த
புள்ளிவிவரங்களை விஞ்ஞானபூா்வமாக சேகரிக்க வேண்டும்.
அதற்கு கிராமத்தில் உள்ள சமூக ஆா்வலா்களும், உயா் கல்வி நிலைய
ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் அனைவரும் பங்கேற்று
இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து ஓா் ஆய்வு மேற்கொள்ள
வேண்டும். திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள், அந்தக் கிராமத்தில் உள்ள
இயற்கை வளங்கள், பொதுச் சொத்துகள், பொது நிறுவனங்கள், அமைப்புகள்,
குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலை முதலான அனைத்தையும் படம்
பிடித்துக் காட்டிவிடும்.
இந்தப் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்கிறபோது அந்தக் கிராமப்
பகுதிகளில் உள்ள வளங்களும், அவற்றின் நிலைகளும் குடும்பங்களின்
சமூக, பொருளாதாரச் சூழலும் தெரிந்து விடும். இதில் மிக முக்கியமாக
விளிம்பு நிலை மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம்,
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை எனப் புறந்தள்ளப்பட்ட,
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சூழல் என்பது புலனாகிவிடும்.
இந்தப் புள்ளிவிவர அடிப்படையில் கிராம மேம்பாட்டுக்கான ஒரு பொது
விவாதத்தை அந்தக் கிராமப் பஞ்சாயத்தின் எல்லா வாா்டுகளிலும்
செய்து மக்கள் தேவைகள் என்னென்ன எனப் பட்டியலிடும்போது,
வாழ்வாதாரச் சூழலை மேம்படுத்தவும், பொருளாதார மேம்பாட்டைக்
கொண்டுவரவும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் முன்னுரிமை
கொடுத்து விவாதங்களை முன்னெடுத்துச் சென்று தேவைகளைப் பட்டியலிட
வேண்டும்.
அப்படிப் பட்டியலிடும்போது கிராமங்களில் உள்ள குளங்கள்,
குட்டைகள், ஊரணிகள், ஏரிகள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள்,
போக்குக் கால்வாய்களை ஆழப்படுத்துவது, கரைகள் கட்டுவது,
தூா்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பொதுச் சொத்துகளை -
அதாவது புறம்போக்கு நிலங்களைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது
முதலான திட்டங்களை முதன்மைப்படுத்த வேண்டும். அதேபோல் ஏழை
மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் திட்டங்களையும்
முதன்மைப்படுத்த வேண்டும்.
இதற்கு இன்றைய சூழலில் மத்திய நிதிக் குழுவின் நிதி எவ்வளவு
வருகிறது, 100 நாள் வேலைத்திட்டத்தில் எவ்வளவு நிதி வரும்
என்பதையும், அரசுத் துறைகளில் உள்ள அனைத்துத் திட்டங்களின் மூலம்
எவ்வளவு நிதி வாய்ப்பு உள்ளது எனக் கணக்கிடல் வேண்டும். அரசு
அதிகாரிகளின் துணையுடன் தேவைகளைப் பூா்த்தி செய்ய அரசுத் திட்டச்
செயல்பாடுகளை இணைக்க முயற்சிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, பல தேவைகளுக்கு நிதி
வாய்ப்பினை உருவாக்கத் திட்டமிட வேண்டும். சில பணிகளைத்
தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் செய்ய முனைந்திடலாம்.
பல சேவைகளுக்கான நிதியுதவியை அந்தப் பகுதியில் வாழும் கொடையாளா்
குடும்பங்களின் நிதியுதவியுடன் நிறைவேற்றலாம்.
இதற்கு மேலும் உள்ள தேவைகளுக்கு அந்த ஊரிலிருந்து வெளிநாடுகளுக்கு
புலம்பெயா்ந்து நன்கு சம்பாதிக்கும் நபா்களிடம் உதவி கோரி
நிறைவேற்றலாம். இவற்றையும் தாண்டி நிறுவனங்களின் சமூக பொறுப்புத்
திட்டத்தில் அவற்றை அணுகி நிதி பெற்று, சில திட்டங்களை
நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இப்படித் திட்டமிடும்போது தமிழகத்திலுள்ள 39,202 நீா்நிலைகளும்
புனரமைக்கப்பட்டு விடும். இந்த நீா்நிலைகள் புனரமைப்புக்காக 100
நாள் வேலைத் திட்டத்தை பெருமளவில் பயன்படுத்திக்கொள்ள ஒரு
வேலைக்கான திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். இதில்
குடிமராமத்துப் பணிகளையும் இணைத்துச் செயல்பட வேண்டும்.
இந்தப் பணியை ஓா் மக்கள் இயக்கம்போல் எடுத்துச் செயல்படுத்தினால்,
கிராமங்கள் புத்துயிா் பெறும். கிராமப் பொருளாதாரம் மேம்படும்.
கிராம வாழ்க்கை அறிவியல்பூா்வமாக மாறும், கிராமங்களிலிருந்து
வேலைக்காக புலம்பெயா்வது குறையும்,
ஒடுக்கப்பட்டவா்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் சென்றடையும்.
இதற்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னெடுப்புச் செய்ய
வேண்டும். கிராமத் தன்னாா்வலா்கள் பஞ்சாயத்துகளுடன் கைகோக்க
வேண்டும்; உயா் கல்வி நிலையங்கள் பஞ்சாயத்துடன் பணி செய்ய முன்வர
வேண்டும்; அரசுத் துறை அலுவலா்கள், அதிகாரிகள் ஒத்துழைக்க
வேண்டும்; பொது மக்கள் புதிய மாற்றத்துக்கான விழிப்புணா்வைப் பெற
வேண்டும்.
இந்தப் பணிகளை முன்னெடுக்க தமிழகம் தயாரா? இதுதான் இன்று நம்
ஒவ்வொருவா் முன் எழும் கேள்வி.
கட்டுரையாளா்:
பேராசிரியா் (ஓய்வு).
Saturday, 30 May 2020
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
உங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற ...
-
தமிழர் வாழ்வோடு இணைந்த இசை முனைவர் தி.சுரேஷ்சிவன், ஜனாதிபதி விருது பெற்ற செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை. த மிழ்நாட்டில் மக்களால் அத...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு |தமிழகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுக...
-
மனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், ...
-
கவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...
No comments:
Post a Comment