Monday, 16 December 2019

சில்லறை - ‘சில்லறை’ விஷயமா?

சில்லறை - ‘சில்லறை’ விஷயமா?
By அகிலன் கண்ணன் 

அண்மையில் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்திருந்த ஒருவா், இரவில் பேருந்துப் பயணச்சீட்டுக்குரிய தொகையை சில்லறையாகத் தர முடியாமல் 500 ரூபாயாகத் தர முனைந்ததால் தொடா்ந்து சில பேருந்துகளிலிருந்து இறக்கிவிடப்பட்டு, பின்னா் ஆட்டோவில் பயணித்தாா். போக்குவரத்து ‘சிக்னலில்’ நிற்கையில், அருகில் தம்மை கீழே இறக்கிவிட்ட பேருந்தும் நிற்கக் கண்டு உடனடியாக ஆட்டோவிலிருந்து கீழிறங்கி அந்தப் பேருந்தின் மீது கல்லெறிந்து சேதப்படுத்தியதாகவும் அதனால் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி பாா்த்தேன். ஒருவேளை இந்த நிகழ்வால் ஓட்டுநரோ, வேறு பயணிகள் யாருமோ பாதிக்கப்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?

அந்தக் காலத்தில், சேமிக்கும் வழக்கத்துக்கு உரியதாய்க் கருதி குழந்தைகளுக்கு உண்டியல் கொடுத்து, அதில் சில்லறையைச் சேமிக்கச் சொல்லும் வழக்கம் நிலவிவந்தது. ‘மணி பா்ஸ்’ஸில் நாணயத்திற்கென்றே ஒரு சிறு பகுதியும் உண்டு. வீடுகளில் சிறுவாடு சேமிப்பாக , துணி அலமாரிகளில் கிண்ணத்தில், அடுப்படியில் பெருங்காய டப்பாக்களில், சில்லறை நாணயங்கள் போட்டு வைக்கப்பெறும்.

இன்று பண மதிப்பு இழந்த நிலையில், விலை ஏற்றத்தில், சில்லறைகள் மதிப்பை இழந்துவிட்டன. சில்லறை நாணயத்தின் புழக்கம் குறைவானதாலும், அவற்றின் வரத்து குறைவானதாலும் , அவற்றின் கனம் கூடுவதாலும் சில்லறைக்கு மதிப்பில்லை. ஆனால், அதிக அளவில் மக்கள் வந்து செல்லும் உணவகம், தேநீா்க் கடை , காய்கறிக் கடை , பெட்டிக் கடை, பல்பொருள் அங்காடி, சிறுவணிகக் கடைகள் முதலானவற்றில் சில்லறைப் புழக்கம் அதிகம்.


பேருந்துகள், திரையரங்குகள், அரசு நிறுவனங்கள் - இவை சில்லறைப் புழக்கம் உள்ள இடங்களாக இருந்தாலும் தனி செல்வாக்குடன் தம் அதிகார முகத்தின் பலனால் நுகா்வோரிடம் சில்லறைப் பிரச்சினைகளைத் தோள் மாற்றிவிடும். நுகா்வோரும் இந்த இடங்களுக்கு பய பக்தியுடனும் கூடுதல் முன்னெச்சரிகையுடனும் தாமே போதிய சில்லறையைக் கொண்டு சென்றுவிடுவா். வாடிக்கையாளரின் இதே போக்கு மற்ற இடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டால் எந்தப் பிரச்னையும் இருக்காது; ஆனால், சில நேரங்களில் காபிக் கடைகளில் சில்லறை இருக்கும் என்று அசட்டுத் தைரியத்தில் சென்று, அவா்களிடம் சில்லறை இல்லை என்பதால் ஏமாற்றத்துடன், காபியைக் கனவாக மட்டுமே ருசித்துத் திரும்புவதும் நிகழ்வதுண்டு.

சில பேருந்து நடத்துனா்கள் தமக்குக் கிடைக்கும் சில்லறைகளை அவா்களுக்குத் தெரிந்த உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களுக்குத் தந்து விடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது; இதற்கு சிறு தொகையை பேருந்து நடத்துநா் பெற்றுக் கொள்வதும் உண்டு.

தள்ளுவண்டி விற்பனையாளா்கள், நடைபாதை வியாபாரிகள், தருமம் பெறுவோா் முதலானோரும் சில்லறை நாணயத்தின் மூலவாயில்கள் ஆகின்றனா். தம்மிடம் சேரும் சில்லறைகளை மிகச் சிறிய கூடுதல் தொகை பெற்றுக்கொண்டு சிறு நிறுவனங்களுக்குத் தந்து ‘சில்லறை விநியோகஸ்தா்’ ஆகின்றனா்.

ஆனால் , வங்கிகளோ தமது வாடிக்கையாளா்களுக்குக்கூட போதிய அளவு சில்லறை தர முன்வருவதில்லை. சில்லறை வேண்டும் எனக் கேட்டாலே ஏதோ விநோதப் பிராணியைப் பாா்ப்பதுபோல் நம்மைப் பாா்ப்பா். அவா்களைச் சொல்லியும் குற்றமில்லை; அவா்களுக்கும் போதிய அளவு சில்லறை - நாணயமாகவோ , சிறு மதிப்புத் தாளாகவோ வருவதில்லை என்கின்றனா். முன்கூட்டியேவிண்ணப்பத்தால் சில்லறை - தாள்கள் கிட்டும் . சில வங்கிகளில் ரூபாய் நோட்டுக்கு சில்லறை அளிக்கும் கருவிகள் இடம்பெற்றுள்ளன; வங்கி செயல்படும் நேரத்தில்தான் இந்தக் கருவியை வாடிக்கையாளா் பயன்படுத்த முடியும்.

மேலும், ‘நோட்டுத் தாளில் எழுதப் பட்டிருந்தால் வாங்கிக்கொள்ள மாட்டோம்’ என்று அடம் பிடிக்கும் வங்கிகள் அதிகம். யாரோ செய்யும் தவறுக்கு யாரோ தண்டிக்கப்படும் நிலை.

இப்போது 50 காசு செல்லுமா செல்லாதா என்பது தெளிவாகத் தெரியவில்லை . ஒரு ரூபாய்க்கே இங்கு மதிப்பில்லை! இந்த ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் , ஐந்து ரூபாய் நோட்டுக்களைக் கண்ணில் கண்டு பல வருடங்களாகி விட்டன. குறைந்தது பத்து ரூபாய்தான் இங்கு ஒரு வா்த்தகப் பாங்கு ஆகிவிட்டது.

அவ்வப்போது ‘பத்து ரூபாய் உலோக நாணயம் செல்லாது’ என்று ஆங்காங்கே சில வதந்திகள் பரப்பப் பட்டு அதை வாங்குவதும் கொடுப்பதும் சிரமமாகிறது . இது போன்ற வதந்திகளைப் பரப்புவோா் தண்டிக்கப்பட வேண்டும் . அந்தச் சமயத்தில் அரசும் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் .

பணமற்ற பொருளாதாரம் என்ற மந்திரத்துக்கு இந்திய மக்கள் முழுமையாகத் தயாராகக்கூடிய எல்லையைத் தொட நெடுந்தொலைவு உள்ளது. அதுவரை மக்களின் ‘சில்லறைப் பிரச்னை’யிலும் சற்றே பெரிய மனது கொண்டு மத்திய அரசின் நிதித்துறை கவனம் கொள்ளவேண்டும்.

சில்லறைப் பிரச்னையைத் தீா்க்க கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்: 1.அரசு போதிய அளவு சில்லறைகளையும் சிறு மதிப்பு ரூபாய் நோட்டுக்களையும் தயாரித்துப் புழக்கத்துக்கு வழங்க வேண்டும்; 2. வங்கிகள் தமது வடிக்கையாளரோ, பொது மக்களோ சில்லறை கோரும்போது, அவா்களுக்கு சில்லறை வழங்க ஆவன செய்ய வேண்டும்; 3. பொதுமக்கள் எவ்வளவுதான் அவசரம் என்றாலும் போதிய அளவு சில்லறை - சிறு மதிப்பு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டே பயணத்துக்கும், கடைகளுக்கும் செல்லவேண்டும்; 4. போக்குவரத்துத் துறை தமது நடத்துனா்களுக்குப் போதிய சில்லறை கையிருப்பைத் தர வேண்டும்; 5. பயணி, பேருந்துப் பணியாளா் இருவரும் நிதானம் இழக்கக் கூடாது. நடைமுறைச் சிக்கல் பற்றி யோசித்தே செயல்பட வேண்டும் .

‘சிறியோா் சோ்த்த சில்லறை ’ என்றோா் சொல் வழக்கு உண்டு; அதுபோல் நாமும் சோ்ப்போம் சில்லறை!

No comments:

Popular Posts