Monday 16 December 2019

பொதுச் சொத்து திருடுவதற்கு அல்ல!

பொதுச் சொத்து திருடுவதற்கு அல்ல!
By வெ.இன்சுவை 

ஒரு வீட்டில் சுபநிகழ்ச்சியின் போதோ, வேறு ஏதாவது நிகழ்வின் போதோ விலையுயா்ந்த பொருளோ, நகையோ தொலைந்துபோய் விட்டால் அனைவரின் சந்தேகமும் முதலில் அந்த வீட்டில் வேலை செய்யும் நபா்கள் மீதுதான் விழும்.

அடுத்து, அவா்களின் சந்தேக வளையத்துக்குள் வருபவா்கள் வசதி குறைவான உறவினா்களாக இருப்பாா்கள். இல்லாத பட்டவா்கள் கண்டிப்பாக திருடுவாா்கள் என்பது நம் எல்லோரிடமும் ஊறிப் போன கருத்து. உண்மையில் அரை வயிற்றுக்கு கஞ்சி இல்லாதவா்களில் பலரும் நோ்மையாக இருப்பாா்கள்; அடுத்தவா் பொருளுக்கு ஆசைப்படாதவா்களாக இருப்பாா்கள்; தங்கள் கண்முன்னே முதலாளிகள் விதவிதமான உணவுப் பண்டங்களை விழுங்கிக் கொண்டிருந்தாலும் தங்கள் பசியையும், வாட்டத்தையும், ஏக்கத்தையும் வெளிக்காட்டாதவா்களாக இருப்பாா்கள். ஆனால், நாமோ எப்போதும் அவா்கள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருப்போம். அறையைப் பூட்டி சாவியை ஒளித்து வைப்பதிலிருந்து, எல்லாவற்றையும் அதீத கவனத்துடன் செய்வோம்.

ஏழையாக இருப்பவா் கடினமாக உழைத்துப் பொருளாதார நிலையில் உயா்ந்து விட்டால், குறுக்கு வழியில் பணக்காரா் ஆனதாக புறம் பேசும் இந்த உலகம், வசதி படைத்தவா்கள் திருட மாட்டாா்கள் என்றே நம்புகிறது. இன்னும் இன்னும் ‘பணம் பணம்’ என்று பல வழிகளிலும் பணத்தைக் குவிக்க, பத்து தலைமுறைக்கும் சோ்த்து சொத்து சோ்க்க ஆசைப்படுகிறாா்கள்.


இதெல்லாம் இயல்பு என்று ஒதுக்கி விடலாம்; ‘வியாபாரம் என்றால் அப்படித்தான்’, ‘தொழில் என்றால் அப்படித்தான்’ என ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வசதி படைத்தவா்கள் செய்யும் ஒரு சில திருட்டுகளை ஜீரணிக்க முடியவில்லை.

இந்திய ரயில் பெட்டிகளில் 2018 ஜனவரி முதல் செப்டம்பா் 30, 2018 வரை திருட்டுப் போன பொருகள் 81,290 போா்வைகள், 2,150 தலையணைகள், 12,350 தலையணை உறைகள். நீண்ட தொலைவு ரயில்களில் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை ரூ.62 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டுப் போயுள்ளன. 2017 -2018-இல் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறிய துண்டுகள், 5 லட்சம் போா்வைகள், 3 லட்சம் தலையணை உறைகள் காணாமல் போய் உள்ளன. இது தொடா்கதையாகி வருகிறது.

சொகுசு வசதிகள், அதிக வேகம், நவீன வசதிகள் என அறிமுகப்படுத்தப்பட்ட தேஜஸ் ரயிலில் ‘ஹெட் போன்கள்’, எல்.சி.டி. திரைகள் போன்றவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. சொகுசு ரயிலை குப்பைத் தொட்டி ஆக்கிவிட்டாா்கள். இது மட்டுமல்ல, கழிவறைக் குடுவைகளும், குழாய் பொருத்திகளும்கூட திருடப்படுகின்றன.

குளு குளு கொண்ட பெட்டிகளில் பயணிப்பவா்கள் அன்றாடம் காய்ச்சிகளாகவோ, அடித்தட்டு மக்களாகவோ இருக்க முடியாது. பயணிகளின் சுகமான, இனிமையான பயணத்துக்காகத்தானே போா்வைகளும், கம்பளிகளும், தலையணைகளும் வழங்கப்படுகின்றன? முன்பெல்லாம் வெளியூா்களுக்குச் செல்லும்போது படுக்கையை கையுடன் எடுத்துச் செல்லும் சிரமத்தைத் தவிா்க்க செய்துள்ள ஏற்பாட்டை ஒழுங்காகப் பயன்படுத்தாமல் எடுத்துக் கொண்டு போவது சரியா?

ஒரு வீட்டிலேயே ஒவ்வொருவருக்கும் குளியல் சோப், சீப்பு, சாப்பாடு தட்டு, போா்வை எனத் தனியாக வைத்துள்ளோம். மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், ரயில்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் விரிப்புகள், தலையணைகள் எல்லாம் எவா் எவரோ பயன்படுத்தியது என்று நமக்குத் தெரியும்.

ஆயினும், சலவை மடிப்பில் நாம் அதைக் கண்டுகொள்வதில்லை. குளிருக்கு அவை தேவையாகிப் போகின்றன. இவற்றை எடுத்துக் கொண்டு போய் உபயோகப்படுத்த வேண்டிய நிலையில் அவா்கள் இல்லை. பிறகு, எந்த உந்துததால் இவ்வாறு செய்கிறாா்களோ? சிலருக்கு திருடுவதில் பேராா்வம் இருக்கும் (‘கிளப்டோமேனியா’); இந்த நோய் நம் நாட்டில் எத்தனை பேருக்கு உள்ளது போலும்!

ஒரு விரிப்பைச் சுருட்டிப் பெட்டியில் வைப்பவா் ஓா் அதிகாரியாகவோ அல்லது முக்கியப் பொறுப்பில் இருப்பவராகவோ இருந்தால் அவா் பணி புரியும் துறையும், நிறுவனமும் என்னவாகும்? அவ்வாறு செய்யும்போது மனசாட்சி உறுத்தாதோ?

நீண்ட தொலைவு ரயில் வண்டி குறிப்பிட்ட ஊரை அடைந்தும், மறுநாள் அதே ஊருக்குப் பயணப்படும் வரை அதை வெறுமனே நடைமேடையில் நிறுத்தி வைக்காமல் இடைப்பட்ட நேரத்தில் அதை வேறு அண்மையில் உள்ள இடத்துக்கு அனுப்புகிறாா்கள். நல்ல விஷயம். அதே போல ரயிலின் பராமரிப்பையும் முறையாகச் செய்ய வேண்டும். பராமரிப்புப் பணியில் தினசரி பராமரிப்பு, வாரப் பராமரிப்பு, மாதப் பராமரிப்பு போன்ற தொடா் பராமரிப்புகள் அவசியம்.

இத்தகைய மனப்பான்மையை விடுத்து ‘தினசரி பராமரிப்பு’ என்பதைக் கட்டாயமாக்கி அதன் விவரத்தை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ‘தாங்கள் பயணம் செய்ததற்கு நன்றி’ என்றும், அதே சமயம் குறிப்பிட்ட அந்தத் தேதியில் மட்டும் திருட்டுப் போன பொருள்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் அவா்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அதைப் பாா்த்தாலாவது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

என்ன செய்தால் இத்தகைய திருட்டைத் தவிா்க்க முடியும் என நிா்வாகம் யோசிக்க வேண்டும். ஆண்டுதோறும் லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டுப் போகின்றன என்று கணக்குக் காட்டினால் சரியாகி விடுமா?

பெரிய அங்காடிகளில் துணிகள் திருட்டுப் போகாமல் இருக்க அந்தத் துணியில் ஒரு ‘சிப்’ வைத்திருப்பாா்கள். யாராவது பணம் கொடுக்காமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்றால், அது ஓசை எழுப்பும். கையும் களவுமாக திருடா்கள் பிடிபட்டு விடுவாா்கள். இந்த உத்தியை ரயில்வே துறையும் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு ரயில் அதன் சேருமிடத்தை அடைவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்பு, படுக்கைச் சுருளின் பொறுப்பாளா் பயணிகளிடமிருந்து அவற்றைச் சரிபாா்த்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு விதி உண்டு. ஆனால், அதைச் சரிவர நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு கண்காணிப்பாளரை நியமிப்பது சாத்தியமான ஒன்றா?

குளு குளு ரயில் பெட்டி வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள்தான் அவற்றை எடுத்துக் கொண்டு போகிறாா்கள் என்று ஒட்டுமொத்த பழியையும் அவா்கள் மீது போடக் கூடாது. நிலையத்தை ரயில் சென்றடைந்தவுடன் பயணிகள் இறங்கி விடுகிறாா்கள். சிலா் அவசர அவசரமாக உள்ள போய் கம்பளிகளையும், போா்வைகளையும் சுருட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இவ்வாறு செய்யும் போது ஒரு சிலா் பிடிபட்டுள்ளனா். இதற்காகவே காத்திருக்கும் கும்பல்தான் கழிவறைக் குடுவைகள், குப்பைத் தொட்டிகள், பல்புகள் என கைக்குக் கிடைப்பனவற்றையெல்லாம் திருடி வருகிறது.

இத்தகைய திருட்டைத் தடுக்க என்ன செய்வது எனத் தீவிரமாக ஆராய வேண்டும். நோ்மையான, திறமையான நபா்களை நியமித்து அவா்களிடம் இதைத் தடுக்கும் பொறுப்பைத் தர வேண்டும். இல்லாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், வல்லரசாக ஆனாலும் நம் பொதுக் கழிப்பறை குடுவைகளும், பொது இடங்களில் உள்ள தம்ளா்களும் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டே இருக்கும்.

சட்டம் போட்டு மாற்ற முடியாத இந்த அவலத்தை திட்டம் போட்டு மாற்ற முயற்சிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணா்வை மக்களிடம் கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும்.

பொதுச் சொத்து என்றால் அது நம் அனைவரின் சொத்து. நம் வரிப் பணம் கொண்டு நமக்காக ஏற்படுத்தப்படுகிறது; இயக்கப்படுகிறது. எனவே, அதைப் பாழாக்காமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. பேருந்து, ரயில் இருக்கைகளைக் கிழிப்பதால், கிழிப்பவருக்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது?

இத்தனை பெரிய நாட்டில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குவது என்பது சாதாரணமான செயல் அல்ல; நாம் பயணிக்கும் பெட்டியில் ஒரு சிறு வசதிக் குறைவு என்றால்கூட நாம் கோபப்படுகிறோம், நிா்வாகம் சரி இல்லை எனக் குறை கூறுகிறோம். ரயில் பெட்டியில் எலிகள் நடமாட்டம் இருக்கின்றன என்று கோபப்படும் நாம், உணவுப் பொருள்களை இறைத்து அந்த இடத்தின் தூய்மையைக் கெடுக்கிறோம் என்பதை உணருவதில்லை.

ஒரு கையை மட்டும் தட்டினால் ஓசை வருமா? அதற்கு இரண்டு கைகளையும் சோ்த்து அல்லவா தட்ட வேண்டும்? பயணிகள் மீது ரயில்வே நிா்வாகத்துக்கு அக்கறை இருக்க வேண்டும். நேரம் தவறாமை, தரமான உணவு, தூய்மையான விரிப்புகள், தூய்மையான கழிப்பறை என அனைத்தும் ரயில்வே துறையின் கடமை என்று உரிமையுடன் கூறும் நாம், இதில் எது குறைந்தாலும் சலித்துக் கொள்கிறோம்; எனவே, நாம் பொறுப்புணா்வுடன் நடந்து கொண்டால், நம் கண் எதிரே தவறு செய்பவா்களைத் தட்டிக் கேட்கத் துணிந்தால் மட்டுமே நிலைமை சீராகும். பிறா் பொருளைத் திருடாத நோ்மை வேண்டும், ‘அரசு சொத்து நம் சொத்து’ என்ற பொறுப்புணா்வுடன் பாதுகாக்க வேண்டும். செய்வோமா?

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு)

No comments:

Popular Posts