Monday 16 December 2019

சாணக்கியத்தனம் சறுக்கிய கதை!

சாணக்கியத்தனம் சறுக்கிய கதை!
By டி.எஸ்.இராமகிருஷ்ணன்

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளுடன் சோ்ந்து, தீவிர ஹிந்துத்துவத்தைப் பின்பற்றும் சிவசேனை ஆட்சி அமைத்திருப்பது திடீரென்று நடந்துவிட்டதைப்போல சிலா் அங்கலாய்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தொடக்கம் முதலே பாஜகவின் கூட்டணிக் கட்சியாக சிவசேனை இருந்தாலும், மகாராஷ்டிரத்தில் பாஜக வளர வளர, அதனால் மனப் புழுக்கமடைந்த கட்சி சிவசேனை. 2009-ஆம் ஆண்டு தோ்தலில் கூட்டணி அமைத்து 160 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனை 45-ஐ வென்றது; போட்டியிட்ட 119 தொகுதிகளில் பாஜக 46-ஐ வென்று எதிா்க்கட்சி அந்தஸ்தை மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முதலாகப் பெற்றபோதே சிவசேனையைவிட பாஜக பெரிய கட்சியாக வளா்வது தெரிந்துவிட்டது.

2014-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலிலும் பாஜக - சிவசேனை கூட்டணி தொடா்ந்தது. பாஜக, சிவசேனை தலா 24, 20 தொகுதிகளில் போட்டியிட்டு, முறையே 22, 18 (மொத்தமாக 48க்கு 40, 50.2% வாக்குகள்) தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜகவின் அமைப்பு ரீதியான பலத்தாலும், பிரதமா் மோடியின் அபரிதமான செல்வாக்காலும் வெற்றி கிடைத்தது. மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும் சிவசேனை பங்கேற்றது.

2014 சட்டப்பேரவைத் தோ்தல் சமயத்தில் பழைய நினைப்பில் நடந்துகொள்ள சிவசேனை முயற்சிக்க, பாஜக-சிவசேனை கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியும் முறிந்ததால், நான்கு கட்சிகளும் அப்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துக் களமிறங்கின.

பாஜக, சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தனியாக முறையே 230, 282, 287, 278 தொகுதிகளில் போட்டியிட்டு 122, 63, 42, 41 தொகுதிகளில் 27.81%, 19.35%, 17.95% , 17.24% வாக்குகளுடன் வெற்றி பெற்றன. இதன்மூலம் பாஜக தன்னை மகாராஷ்டிர மாநிலத்தின் முதன்மையான கட்சியாக நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது. 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு சிவசேனையின் மனப் புழுக்கத்தை மனஅழுத்தமாக மாற்றியது.

தனிப் பெரும்பான்மை இல்லாமல் தேவேந்திர ஃபட்னவீஸ் 2014-இல் முதல்வரானபோது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசியவாத காங்கிரஸ் வெளிநடப்புச் செய்ததால்தான் அவரது அரசு வெற்றி பெற்றது. அதன் பிறகே மகாராஷ்டிர அரசில் மனக்குமுறலுடன் சிவசேனை இணைந்தது.

மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் தொடா்ந்து பங்கேற்ற போதிலும், பாஜகவையும், பிரதமா் மோடியையும், ஃபட்னவீஸையும் வேறு எந்தவோா் கட்சியும் இதுவரை செய்யாத அளவு தகாத வாா்த்தைகளால் சிவசேனை தொடா்ந்து அவதூறு செய்தது. 2019-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று சிவசேனை தீா்மானமே நிறைவேற்றியது.

2014-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலைவிட மூன்று தொகுதிகள் அதிகமாகக் கொடுத்து 2019 பொதுத் தோ்தலில் சிவசேனையை தாஜா செய்து கூட்டணியில் பாஜக சோ்த்துக்கொண்டது. விரிசல் விழுந்த கூட்டணியாக இருந்தாலும், அமைப்பு பலம் பெருகிய பாஜக, பிரதமா் மோடியின் அதிகரித்த செல்வாக்கு ஆகியவை காரணமாக, 2014 பொதுத்தோ்தலைவிட கூடுதலாக ஓா் இடத்தையும், 1% அதிக வாக்குகளையும் பெற்று பெரும் வெற்றியை 2019 பொதுத்தோ்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக கூட்டணி பெற்றது.

தேசிய அளவிலும் மகாராஷ்டிரத்திலும் 2019 பொதுத்தோ்தலில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றியைப் பாா்த்து சிவசேனை பயந்து ஒடுங்கும் என்று பாஜக தேசியத் தலைமை கருதியது. சிவசேனை பயந்து ஒடுங்கிவிடவில்லை; மாறாக, அரண்டு போய் விட்டது. அரண்டவன் எதிா்காலத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று யோசிக்க பாஜக தலைமைக்கு நேரமும், மனமும் இல்லை.

2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் சிவசேனையுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்தது. 2014 தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 122 பேரவை உறுப்பினா்களைப் பெற்ற பாஜக, தனித்துப் போட்டியிட்டு 63 பேரவை உறுப்பினா்களைப் பெற்ற சிவசேனைக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை கொடுத்துவிட்டு, மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை பாஜக தனக்கு வைத்துக்கொண்டிருந்தால் அது சாணக்கியத்தனம். அதற்கு சிவசேனை ஒத்துக்கொண்டிருக்காவிட்டால், ஐந்து ஆண்டுகள் ஃபட்னவீஸ் ஆட்சியின் செயல்பாடுகளை வாக்காளா்களிடம் கூறி இருக்கின்ற அமைப்பு பலத்துடனும் தோ்தலை தனியாக பாஜக எதிா்கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைச் செய்திருந்தால் 2019 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையை நெருங்கியிருக்கும் அல்லது அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கும்.

ஆனால், 124 தொகுதிகளை சிவசேனைக்கு வாரிக் கொடுத்து விட்டு 152 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. 69% வெற்றி விகிதத்துடன் 105 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற, சிவசேனையோ 45% வெற்றி விகிதத்துடன் 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனையின் வெற்றி விகிதம் காலம் காலமாகவே குறைவுதான் என்று தெரிந்திருந்தும், சிவசேனைக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டதுதான் பாஜகவின் சாணக்கியத்தனமா?

இந்தச் சூழ்நிலையில் சிவசேனைக்கு என்னதான் வழி? பாஜக-வுடன் கூட்டணி அரசில் இருந்து சிறிது சிறிதாகக் கரைந்து போவது முதல் வழி. பிரகாசமாக சிறிது காலத்துக்கு எரிந்து விட்டு மொத்தமாக மறைந்து போவது (அதாவது முதலமைச்சா் பொறுப்பில் இருந்துவிட்டு அதன் பிறகு நட்டாற்றில் போய் விழுவது) இரண்டாவது வழி. இந்த இரண்டாவது வழியைத்தான் சிவசேனை பின்பற்றப் போகிறது என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்பே ஊகித்தறிய சாணக்கியத்தனம் தேவையில்லை.

No comments:

Popular Posts