Monday 16 September 2019

காவிரி நீரை கடலில் விடுவது சரியா?

காவிரி நீரை கடலில் விடுவது சரியா?

ப.மு.நடராசன்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மேட்டூர் அணையை நம்பித்தான் இருக்கிறது. பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். போதிய நீர் இருப்பு இருந்தால் மட்டுமே அந்த தேதியில் நீர் திறக்கப்படும்.

ஆனால் பல ஆண்டுகள் அந்த தேதியில் அணை திறக்கப்பட்டது இல்லை. இந்த ஆண்டும் அதே நிலைதான்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகத்தான் வலுவடைந்தது. இதனால் கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளும் தாமதமாகத்தான் நிரம்பி, அவற்றில் இருந்து உபரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது. அதன்பிறகுதான் வறண்டு கிடந்த மேட்டூர் அணை நிரம்ப தொடங்கியது. இதனால் தாமதமாக ஆகஸ்டு 12-ந் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் எப்போதாவது கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீர் பல நாட்களுக்கு திறந்து விடப்படும்போதுதான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

அப்படி அரிதாக பெருக்கெடுக்கும் வெள்ளநீரை பயன்படுத்தும் வழிகள் குறித்து விளக்குகிறார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பருவகால மாற்ற ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் முனைவர் ப.மு.நடராசன்.

அவரது கருத்துகளை காணலாம்...

தமிழகத்தில் 17 பெரிய ஆற்றுப்படுகைகள் இருக்கின்றன. இவற்றில் காவிரி ஆற்றுப்படுகை பரப்பளவிலும், நீர்வளத்திலும் பெரியது. 43,867 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காவிரி படுகையின் நீர்வளம் 311.86 டி.எம்.சி. இது தமிழக நீர்வளத்தில் 18.98 சதவீதம்.

காவிரி படுகையில் வாய்க்கால் வழியான பாசன நிலப்பரப்பு 15 லட்சத்து 98 ஆயிரத்து 774 ஏக்கர். தமிழகத்திலேயே வாய்க்கால் மூலம் அதிக பாசனம் பெறும் ஒரே படுகை காவிரி.

தமிழகத்தின் நெல் உற்பத்தியில் சுமார் 33 சதவீதம் காவிரி படுகையில்தான் உற்பத்தி ஆகிறது. இப்படி தமிழகத்தின் நெல் உற்பத்திக்கு மூல ஆதரமாக விளங்கும் காவிரி, 15 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இயற்கை வளங்களை தாண்டி சிற்பம், நாட்டியம், கர்நாடக இசை போன்ற நுண்கலைகளின் பிறப்பிடமாகவும் காவிரி டெல்டா திகழ்கிறது.

அடிக்கடி ஏற்படும் வறட்சியினால் காவிரி ஆற்றுப்படுகையின் இயற்கை வளம் மற்றும் நுண்கலைகளை காப்பாற்றுவதற்கு உரிய வழிகளில், காவிரியின் வெள்ள நீரை பயன்படுத்துவதும் ஒன்று ஆகும்.

தமிழகத்தில் வெள்ள நீர் வளமுள்ள ஆறுகளில் காவிரி முதல் இடத்திலும், தாமிரபரணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கு காரணம் இந்த இரு ஆறுகளும் தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவமழை காலங்களிலும் நீர்வளத்தை பெறுகின்றன.

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பி வழியும் நிலையில் உபரி நீர் திறந்து விடப்படும் ஆண்டுகளில், தமிழகத்துக்கு காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இந்த வெள்ளநீர் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது.

காவிரியில் அதிக அளவில் வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆண்டுகளில், அது கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது. இப்படி 1971-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரையிலான 48 ஆண்டுகளில் 27 ஆண்டுகள் 1198.76 டி.எம்.சி. வெள்ள நீர் வீணாக கடலில் விடப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 44 டி.எம்.சி. நீர் கடலில் போய்ச் சேர்ந்து இருக்கிறது. இப்படி 27 ஆண்டுகளில் கடலில் கலந்த வெள்ள நீரின் அளவு மேட்டூர் அணையின் கொள்ளளவில் 12 மடங்குக்கும் அதிகம் ஆகும்.

காவிரி டெல்டாவில் கல்லணை கால்வாய் பகுதியை தவிர, வெண்ணாற்றுப் படுகையில் விவசாய ஏரிகள் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் சராசரி மழை ஆண்டில் பெய்யும் மழை நீரான 55 டி.எம்.சி. தண்ணீரும் கடலுக்குத்தான் செல்கிறது.

ஒரு டி.எம்.சி. நீர் என்பது 28,317 மில்லியன் லிட்டர். இதை தமிழகத்தில் வசிக்கும் சுமார் 8 கோடி மக்களுக்கு நபருக்கு 100 லிட்டர் வீதம் நான்கு நாட்களுக்கு வழங்கமுடியும். அப்படி பார்த்தால் கடலில் வீணாக விடப்பட்ட நீரை தமிழகத்தில் தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் வீதம் சுமார் 12 ஆண்டுகளுக்கு வழங்க முடியும்.

ஒரு டி.எம்.சி. நீரில் உற்பத்தி செய்யப்படும் நெல்லின் விலை மதிப்பு ரூ.53 கோடி. எனவே 27 ஆண்டுகளில் காவிரி ஆற்றின் மூலம் வீணாக கடலில் கலந்த நீரின் நெல் உற்பத்தி மதிப்பு ரூ.63 ஆயிரத்து 534 கோடி ஆகும். அந்த வகையில் பார்த்தால் சராசரியாக ஒரு ஆண்டில் கடலில் கலந்த வெள்ள நீரின் நெல் உற்பத்தி மதிப்பு ரூ.2,353 கோடி.

2005-2006-ம் ஆண்டில் மட்டும் கொள்ளிடம் ஆற்றின் மூலம் கடலில் கலந்த 268.44 டி.எம்.சி. நீரின் நெல் உற்பத்தி மதிப்பு ரூ.14,227 கோடி.

2013-ம் ஆண்டில் தமிழகத்தில் வறட்சி நிலவியது. ஆனால் அந்த ஆண்டில் கூட ஆகஸ்டு மாதம் 8 நாட்கள் கொள்ளிடம் ஆற்றின் வழியாக 12 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்து உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டில் இதே ஆற்றின் வழியாக 141 டி.எம்.சி. வெள்ள நீர் கடலில் கலந்தது. இந்த நீரை தேக்கி வைக்க வாய்ப்பு இருந்தால் இந்த ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையை தவிர்த்து இருக்கலாம்.

காவிரி டெல்டாவில் குறுவை, தாளடி, சம்பா என்று முப்போக விவசாயம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக குறுவை விவசாயம் செய்ய முடியவில்லை. வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாமல் போனதே இதற்கு காரணம் ஆகும்.

நெற்களஞ்சியமே தண்ணீர் பற்றாக்குறையால் இப்படி தடுமாறும் போது தமிழகத்தின் மற்ற பகுதிகளின் நிலைமை குறித்து கேட்கவே வேண்டாம்.

வறட்சியினால் விவசாயமும், அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் போது, மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை தேக்கி வைக்க வழிவகை செய்யாமல் கடலில் கலக்க விடுவது சரிதானா? என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

மேட்டூர் அணை தொடர்ந்து 2-வது ஆண்டாக இப்போது நிரம்பி வழிகிறது. இதனால் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள போதிலும் கடைமடை பகுதிகளுக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. ஆனால் கொள்ளிடம் ஆற்றின் மூலம் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இப்படி ஒருநாள் கடலில் போய்ச் சேரும் 1.79 டி.எம்.சி. நீரை பயன்படுத்தினால் 95 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் உள்ள சுமார் 8 கோடி மக்களுக்கு தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் வீதம் 8 நாட்களுக்கு தண்ணீர் வழங்கலாம்.

கடந்த ஆண்டில் 141 டி.எம்.சி. வெள்ளநீர் கடலில் விடப்பட்டது. இதன் தானிய உற்பத்தி மதிப்பு 7,473 கோடி ரூபாய்.

வறட்சி இல்லாத நீர்வளம் மிகுந்த நாட்டில் வெள்ளநீரை கடலில் விடுவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் சராசரி மழை ஆண்டுகளில் 64 சதவீதத்துக்கும் கூடுதலான நிலப்பரப்பில் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. சராசரி மழை ஆண்டுகளில் தமிழகத்தில் தனிநபரின் ஆண்டு நீர்வளம் 65 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளநீரை பயனின்றி கடலில் கலக்க விடுவது சரிஅல்ல.

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வெள்ள நீர் வருகிறது. இந்த வெள்ள நீரை கடலில் கலக்காமல் வேளாண்மை, குடிநீருக்கு பயன்படுத்தும் வழிவகையை தமிழக அரசு கண்டறிய வேண்டும்.

மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரூரை அடுத்த மாயனூர், திருச்சி முக்கொம்பு, கல்லணை ஆகிய மூன்று தடுப்பணைகளில் வெள்ள நீரை தேக்கி வைக்க வாய்ப்பு இருக்கிறது.

மாயனூர் அணையில் தேக்கப்படும் வெள்ள நீரை கீழ்க்கண்ட வழிகளில் பயன்படுத்தலாம்.

1. மாயனூர் அணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கவிநாடு பெரிய ஏரி வரை கால்வாய் அமைத்து அதன் வழியாக தண்ணீரை கொண்டு சென்று ஏரியில் நிரப்பவேண்டும். பின்னர் அந்த ஏரியில் இருந்து மற்ற ஏரிகளுக்கு நீரை கொண்டு சென்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வடபகுதி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.

2. மாயனூர் அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் வெள்ள நீர் வந்தால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கால்வாய் அமைத்து அங்குள்ள ஏரி, கண்மாய்களை நிரப்பி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.

இப்படி கால்வாய்கள் அமைக்க ரூ.6,000 கோடி வரை செலவாகும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

ஆனால் வறட்சி மாவட்டங்களான புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங் களுக்கு மாயனூர் வெள்ள நீரை பயன்படுத்துவது இன்னும் அந்த பகுதி மக்களின் கனவாகவே உள்ளது.

கல்லணைக்கு வரும் வெள்ள நீரை கீழ்க்கண்ட வழிகளில் பயன்படுத்தலாம்.

1. கல்லணை கால்வாய் வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ள மணல்மேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதி ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்று நிரப்பி விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும். இதற்கு அதிக செலவு ஆகாது.

2. வீராணம் ஏரிக்கு கொண்டு வந்து நிரப்பி அப்பகுதி விவசாயத்துக்கும், சென்னை நகரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும் பயன்படுத்தலாம்.

மேலும் வெண்ணாற்று படுகையில் விவசாய ஏரிகள் இல்லை. எனவே அந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பண்ணை குட்டைகளை அமைத்து குட்டை ஒன்றுக்கு 1,500 கனமீட்டர் அளவுக்கு சுமார் 55 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கலாம். இதற்கு சுமார் ரூ.6 லட்சம் கோடி செலவாகும்.

காவிரி டெல்டா பாசன பரப்பான 11 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் 70 சதவீத பரப்பளவில் அதாவது 8.33 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் நெல், தமிழகத்தின் மொத்த நெல் உற்பத்தியில் 32 சதவீதத்துக்கும் அதிகம் ஆகும்.

2013-2014-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த நெல் உற்பத்தி 71.15 லட்சம் டன். இதில் காவிரி டெல்டாவில் உற்பத்தியான நெல்லின் அளவு மட்டும் 34.719 டன் ஆகும். அதாவது 48.79 சதவீத நெல் காவிரி டெல்டாவில் உற்பத்தியாகி இருக்கிறது.

இதேபோல் 2015-2016-ம் ஆண்டில் தமிழகத்தில் 73.75 லட்சம் டன் நெல் உற்பத்தியானது. இதில் காவிரி டெல்டாவின் பங்களிப்பு 24.71 லட்சம் டன். இது மொத்த உற்பத்தியில் 32.77 சதவீதம்.

காவிரி டெல்டாவில் சராசரியாக 25 லட்சம் முதல் 35 லட்சம் டன் நெல் உற்பத்தியாகிறது.

உணவு உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து தன்னிறைவு அடைய வேண்டுமானால் காவிரி ஆற்றின் வெள்ள நீரை தேக்கி பயன்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். ஏற்கனவே வறட்சியில் வாடும் தமிழகத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் பயன்படுத்துவது அவசியம்.

சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கூறி இருக்கிறது. ஆனால் கர்நாடகம் அதன்படி திறந்துவிடுவது இல்லை. பெரும்பாலும் வெள்ளம் ஏற்படும் போது உபரி நீரை மட்டுமே திறந்துவிடுகிறது.

இதனால் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகமும் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே கர்நாடக அணைகளில் போதிய நீர் இருக்கும் நிலையில், பெருக்கெடுக்கும் வெள்ளத்தை மேலும் தேக்கி வைக்க முடியாமல் திறந்து விடுவதால் அந்த மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் வெள்ள நீரை திடீரென்று தமிழகத்துக்கு திறந்து விடுவதால் உடனடியாக அதை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. மேட்டூர் அணையின் கொள்ளளவை மிஞ்சிய நீரை வீணாக கடலில் விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரை அந்தந்த மாதமே வழங்கினால் விவசாயிகள் உரிய நேரத்தில் பயிர் செய்யமுடியும். கர்நாடகத்திலும் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் இனியாவது ஒவ்வொரு மாதமும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரை அந்தந்த மாதமே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்டி அதில் 55 டி.எம்.சி.க்கும் அதிகமான வெள்ள நீரை தேக்க முயற்சி செய்து வருகிறது. அந்த அணை கட்டப்பட்டால், எதிர்காலத்தில் வெள்ளத்தின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரும் தமிழகத்துக்கு கிடைக்காமல் போய்விடும். ஏனெனில் அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் மேகதாது அணையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு தேக்கி வைக்கப்படும்.

எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசும் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.

No comments:

Popular Posts