Monday, 16 September 2019

தமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன்!

தமிழ்நாட்டைச் செதுக்க வந்த தலைவன்!

பழ.கருப்பையா,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

தமிழ்நாட்டை வழி நடத்திய தலைவர்கள் நால்வர் ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா! முன்னிருவர் தேசிய இயக்கத்தினர்; பின்னிருவர் திராவிட இயக்கத்தினர்!

தமிழனுக்குப் படிப்பில்லை; அரசு அலுவல் இல்லை; சமூக ரீதியில் அவன் அடிமைப்பட்டுக் கிடந்தான்; அரையே அரைக்கால்வாசித் தமிழர்கள் மேனியில் சட்டை அணியாதவர்கள்; மேல்தட்டினர் அதை அனுமதிப்பதில்லை; அதைவிடக் கொடுமை குமரி பகுதியில் பெண்கள் சேலையை மார்பை மறைக்கும் வண்ணம் தோள் மீது போட்டுக்கொள்ள கூட உரிமையற்றிருந்தனர்! “தோள்சேலைப் போராட்டம்” என்றொரு போராட்டத்தை திருவாங்கூர் சமஸ்தான ஆட்சிக்கு எதிராக நடத்தி அந்த உரிமையை கடும்பாடுகளுக்கிடையே மீட்க வேண்டிய நிலையிலேயே தமிழ்க்குலம் இருந்தது!

வெள்ளைக்காரனுக்கு நாடு அடிமைப்பட்டு கிடந்தது. அடிமைப்பட்ட நாட்டில், மேல் சமூகத்தினருக்கு வேறு சமூகத்தை சேர்ந்த தமிழர்கள் முழுவதும் கீழ்மைப்பட்டு கிடந்தனர். இது அடிமை மேல் அடிமை நிலை!

தமிழனுக்கு இரட்டை மூக்கணாங் கயிறு! ஆங்கிலேயனின் ஆட்சி பறிப்பால் ஏற்பட்ட பாதிப்பு பெரிதெனினும், சமூக மட்டத்தில் சொந்த நாட்டினுள் இழிவுபடுத்தப்பட்டது, நாளாசரி வாழ்க்கையில் அதனினுங் கொடிதாய் இருந்தது!

இதற்காக தியாகராஜ செட்டியாரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்களுக்கான இயக்கம், பெரியாரிடம் வந்து சேர்ந்து வீறு பெற்றது!

பெரியாரோடு அண்ணாவும் வந்து இணைந்ததும், தமிழர்களுக்கான இயக்கம் இரட்டைக் காளை பூட்டிய வண்டியாயிற்று!

1940-க்கு பிறகு சேலம் மாநாட்டில் பெரியார் தலைமையில், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், பிராமணர் அல்லாதோர் இயக்கம் போன்ற அடையாளங்களை எல்லாம் கைவிட்டு, ‘திராவிடர் கழகமாக’ புதிய அடையாளப் படுத்தி, அண்ணா முன்மொழிந்து பேசிய தீர்மானம் இயக்கத்திற்கு புதிய பாய்ச்சலைத் தந்தது! நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கம் என்பதில் ஏற்படாத வீறு, ‘திராவிடன்’ என்பதில் ஏற்பட்டது.

அது இனத்தின் அடிவேரைத் தேடும் புதிய முயற்சியைக் கிளறி விட்டது! ஆரியனின் ‘வேதகால நாகரிகத்திற்கு’ மாற்று, அந்நாகரிகத்திற்கும் மிக முந்திய திராவிடர்களின் ‘சிந்து சமவெளி நாகரிகம்’ என்பது தொல்லியல் அறிஞர்களால் ஆய்ந்து வெளிப்படுத்தப்பட்டது. திராவிட இன உணர்வுக்கு வலிமை சேர்ந்தது.

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெல்லாம்; வான்தான் என் புகழ்

என்னும் முழக்கம் விண்ணைப் பிளந்தது!

ஆரிய நாகரிகத்திற்கு எதிராகத் திராவிட நாகரிகம் முன்னிறுத்தப்பட்டது. வடமொழிக்கு எதிராக தென்தமிழ் முன்னிறுத்தப்பட்டது; பகவத் கீதைக்கு எதிராகத் திருக்குறள் முன்னிறுத்தப்பட்டது. ஆயுர்வேதத்திற்கு எதிராக சித்த மருத்துவம் முன்னிறுத்தப்பட்டது! ஒரு பழம் பெரும் இனம்; வந்த இனமல்ல இந்த மண்ணுக்குச் சொந்த இனம்; இந்த மண்ணை ஆண்ட இனம் எழுச்சியுற்றது! அண்ணாவின் பேச்சு அதுவரை பொதுமேடை அறியாதது! பெரியார் வரை கொச்சை வழக்கில் பேசிய தமிழை, அழகு தமிழாக, அடுக்குத் தமிழாக மாற்றினார் அண்ணா!

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் இல்லை என்று பேசுகின்ற பேதைகள் அல்லர் நாங்கள்!”

“நேரு கட்டி முடித்த கோபுரம்;

நாங்கள் கொட்டிக் கிடக்கும் செங்கல்”

இவைதான் அண்ணா பேசும் பாணி; தேனுண்ட வண்டாக மயங்கிப் பின்தொடர்ந்தது தமிழ் இளையோர் கூட்டம்!

பெரும்பான்மையோர் பேசுவதால், இந்தியே தேசிய மொழியாக இருக்க முடியும் என்பது அண்ணாதுரைக்குத் தெரியாதா” என்று ஏகடியம் பேசிய போது, “அந்த அடிப்படையில் காக்கைதானே தேசியப் பறவையாக இருக்க வேண்டும்; மயிலை ஏன் தேசியப் பறவையாக அறிவித்தீர்கள்?” என்று அண்ணா சொடுக்கிய சாட்டை துரைத்தனத்தாரை வாயடைக்கச் செய்தது!

சத்தியமூர்த்தி காலத்தில் பேசப்பட்ட ‘அக்கிராசனபதி’ அண்ணாவின் தாக்கத்தால் ‘தலைவர்’ ஆகி விட்டார்! ‘பிரசங்கிகள்’ ‘சொற்பொழிவாளர்களாகி’ விட்டனர்; ‘மகாஜனங்கள்’ ‘பொதுமக்களாகி’ விட்டனர்; ‘அபேட்சகர்’ ‘வேட்பாளராகி’ விட்டார்! நாராயணசாமி நெடுஞ்செழியனாகி விட்டார்; ராமையா அன்பழகனாகி விட்டார்; சின்னராசு சிற்றரசு ஆகி விட்டார்!

நாடு முழுவதும் தமிழ் மணங் கமழ்ந்தது.

வதனமே சந்திர பிம்பமோ என்று பாடிக் கொண்டிருந்த தமிழ்த்திரை, ‘அச்சம் என்பது மடைமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா’ என இன எழுச்சி பாடியது தமிழனின் புதையலான சங்க இலக்கியம் மீட்டெடுக்கப்பட்டது; சிலப்பதிகாரம் இன உணர்வுக் காப்பியமானது; திருக்குறள் தமிழர்களின் முகமானது!

இவ்வளவும் அண்ணாவின் அறிவாலும் பேச்சாலும் எழுத்தாலும் சாதிக்கப்பட்டன. பெரியார் தமிழைத் தலையில் வைத்து கூத்தாடுவதை உடன்படுவதில்லை. அதைத் ‘தாய்ப்பால் பைத்தியம்’ என நகையாடுவார்!

ஆனால் அண்ணா மொழியை விழிக்கு நிகராகக் கருதினார். தனித்தமிழ் இயக்கத்தை ஆதரித்தார். புலவர்கள் மட்டத்திலிருந்த தமிழை, மக்கள் மட்டத்திற்குக் கொண்டு வந்தவர் அண்ணாதான்!

பெரியாரும் தமிழர்களைப் பற்றியே பேசினார்! ஆனால் மொழி இல்லாமல் இனத்தை எப்படி அடையாளப்படுத்துவது என்பதற்கான விடை பெரியார் எழுத்துகளில் காணப்படவில்லை. மொழிச் சிதைவு இனச்சிதைவாகி விடும்; மொழியின் காப்பே இனத்தின் காப்பு!

தமிழ் ‘காட்டுமிராண்டி மொழி’ எனப் பெரியார் சொன்னதற்கு, ‘அவ்வளவு தொன்மையான மொழி’ எனப் பகன்று, மொழியையும் பெரியாரையும் ஒருசேரக் காத்த அறிஞர் அவர்!

தமிழ் மொழிப்பற்றுக்கும் தமிழின எழுச்சிக்கும் காரணமாக இருந்தவர் அண்ணாதான்; அண்ணாவேதான்!

அரசியல் புலத்தில் இந்தியை ஒழித்தார்! தமிழை நாசப்படுத்திய சமஸ்கிருதத்தை ஒழித்தார்!

1949-ல் கட்சி தொடங்கி பதினெட்டு ஆண்டுகள் பிற்பட்டோர் நலன், இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத ஒழிப்பு, வடபுல எதிர்ப்பு, மொழி, இன விழிப்பு, மெல்லிய சமதருமம் ஆகியவற்றை முன் வைத்து, ஏற்கனவே மாற்றுக்கட்சியாக இருந்த பொதுவுடைமைக் கட்சியை ஒடுங்கச் செய்து, 1967-ல் அதைத் தன் வாலாக ஆக்கிக்கொள்கிற அளவுக்கு ஓங்கி உலகளந்து, அரியணையில் அமர்ந்தவர் அண்ணா! ஆட்சிக்கு வந்து அளப்பரியன செய்திருப்பார்! நோய் விடவில்லை! ஒன்றரை ஆண்டுகளே ஆண்டார்!

அண்ணா காலத்திலும் சாதி இருந்தது. சாதி ஒரு மடங்கு சமூகத் தீமை என்றால், நூறு மடங்கு அரசியல் தீமை! இன்றைய அரசியலில் சாதியும், பணமும்தான் முன்னிற்கின்றன. இதை உணர்ந்தவர் என்பதால், தன்னுடைய அமைச்சரவையைக் காமராஜரைப் போல், வெறும் எட்டுப் பேரைக் கொண்டதாக உருவாக்கிக் கொள்கிறார்! கொள்கை சார்ந்து வளர்ந்த முன்னணித் தலைவர்கள் எட்டுப் பேரை அமைச்சர்களாக்குகிறார்!

சென்னை ராசதானியாக இருந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினார்.

சிலப்பதிகாரம்தான் அந்தப் பெயரை முன்மொழிந்தது. தமிழ் மண் மூவேந்தர்களால் மூவகையாக வகுக்கப்பட்டிருந்தாலும், அதை மொத்தத் தமிழ்நாடாக்கச் சோழநாட்டில் பிறந்த கண்ணகியைத் தன் வெறுங்காலால் பாண்டிய நாட்டுக்கு நடக்கச் செய்து, பின்னர் சேர நாட்டை அடையச் செய்து அங்கு தெய்வமாக்கினார் இளங்கோ!

கண்ணகிப் பெரியோள் நடந்து அளந்த இந்த மண்ணுக்கு, இளங்கோ விரும்பிய வண்ணம் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வரவிருந்த காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரையைப் பெற தமிழ்த்தாய்க்கு 1,500 ஆண்டுகள் தேவைப்பட்டது.

அண்ணா தூய்மையின் வடிவம்: அறிவின் விளக்கம்: தமிழ்நாட்டை செதுக்க வந்த தலைவன்.

No comments:

Popular Posts