Tuesday 17 December 2019

பெண் புலி, நூர்ஜகான்

பெண் புலி, நூர்ஜகான்

இரா.பிறையா அஸ்வத், உதவிப் பேராசிரியை, வரலாற்றுத் துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை .

இ ன்று(டிசம்பர்17-ந்தேதி) நூர்ஜகான் நினைவு தினம்.

நூர்ஜகான், முகலாய பேரரசர் ஜகாங்கீரின் இருபதாவது மனைவி. அழகிய தோற்றம் கொண்டவர். ஜகாங்கீருக்கு பிடித்த மனைவி. நூர்ஜகானின் உண்மையான பெயர் மெகருனிஷா. இவரின் அழகை சிறப்பிக்கும் வகையில் அவளுக்கு நூர்ஜகான் (அழகின் ஒளி) என பெயரிட்டு அழைத்தார்.

ஜகாங்கீர் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்கு இணையான அதிகாரம் பெற்று முகலாய பேரரசை வழிநடத்தியவர் நூர்ஜகான். அதிக திறமைகள் பொதிந்த நூர்ஜகானின் பெற்றோர் பெர்சிய நாட்டை தாயகமாக கொண்டவர்கள்.

1577-ம் ஆண்டு பெர்சிய நாடு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியையும், அரசியல் மாற்றத்தையும் பெற்றது. வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட நூர்ஜகானின் தந்தை தனது நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அப்போது அவர் கண்ணில் சொர்க்க பூமியாக பட்ட நாடு இந்தியா. மெகருனிஷாவை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்த தனது மனைவியையும், மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்தியா செல்லும் வழியில் 1577-ம் ஆண்டு மே 31-ந் தேதி பிறந்தார் மெகருனிஷா. ஜகாங்கீரை 1611-ம் ஆண்டு கரம்பிடித்தார். பின்னர் 1627-ம் ஆண்டு வரை ஜகாங்கீருடன், மன்னருக்கு இணையான ஆட்சி அதிகாரத்தை பெற்றார் நூர்ஜகான்.

நூர்ஜகான் பல கலைகளை கற்றவர் துப்பாக்கி சுடுதல், அவருக்கு கை வந்த கலை. ஒரு முறை ஜகாங்கீருடன், நூர்ஜகான் இமயமலை அடிவாரத்திற்க்கு சென்றார். செல்லும் வழியில் மதுரா நகர மக்கள் ஆர்வத்துடன் இவர்களின் வருகையை எதிர்நோக்கி காத்து இருந்தனர். இருப்பினும், மதுரா மக்களின் கண்களில் ஒரு இனம் புரியாத சோகம் அவர்கள் சொல்லாமலே மவுனமாய் வழிந்தோடியது. “உங்களின் துன்பத்திற்கு காரணம் என்ன?” என கேட்டார் ஜகாங்கீர்.

கூட்டத்தில் இருந்த ஒருவர் “மன்னா, புலி ஒன்று எங்களை தாக்குகிறது வழிப்போக்கர்களையும் விடுவதில்லை. வேடன் கண்ணில் மாயவித்தை காட்டி மறைந்து விடுகிறது. புலியின் நடமாட்டத்தால் மக்களின் நிம்மதியான உறக்கம் காணாமல் போய்விட்டது. நீங்கள் புலியை கொன்று எங்களின் அச்சத்தை போக்க வேண்டும்” என்றார்.

மக்களைக் காக்க புலியை கொல்ல வேண்டும். அது தவறு அல்ல. ஆனால் ஜகாங்கீர் தனது ஐம்பதாவது வயதில், இனி உயிர்களை கொல்வதில்லை, என அல்லாவின் மீது சத்தியம் செய்திருந்தார். இதனை அறிந்த நூர்ஜகான், புலியை கொல்லும் பொறுப்பை ஏற்றார். நாட்கள் சென்றன. நான்கு புலிகள் மதுரா நகருக்குள் உலா வந்தன. நூர்ஜகானின் துப்பாக்கி குறிக்கு புலிகள் ஒவ்வொன்றாய் மடிந்தன. ஜகாங்கீருடன் மக்களும் பெருமகிழ்ச்சி கொண்டனர்.

பெண்ணின் பெருமை அவரின் திறமையின்கண் வெளிப்படும். மனதின் உள்ளே இருக்கும் கலைகளை, உலகம் அறிய வாய்ப்பு என்றாவது கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவோரே அவரவர் எண்ணும் நிலையை அடைவர்.

ஒரு முறை ஜகாங்கீருடன் யானையில் ஏறி பயணம் மேற்கொண்டார் நூர்ஜகான். யானை அடர்ந்த காட்டை அடைந்தது. விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள காடு அது. நூர்ஜகான் பயணம் செய்த யானை, புலியின் வருகையை உணர்ந்து கொண்டது. அங்கும் இங்கும் அலைந்தது. நூர்ஜகான் தனது துப்பாக்கியை எடுத்து தயாராக இருந்தார். ஒரு மரத்தின் கிளையிலிருந்து புலி ஒன்று வேகமாக வெளிப்பட்டது. புலியின் இரு கண்களுக்கு இடையில் குறிவைத்தார் நூர்ஜகான். ஒரே குண்டில் தரையில் விழுந்தது புலி. ஆச்சரியத்தில் மூழ்கினார் ஜகாங்கீர்.

நூர்ஜகானின் நிர்வாக பொறுப்பை அந்த நிகழ்வு மேலும் அதிகப்படுத்தியது. ஆட்சிக் கட்டிலில் மன்னனுக்கு இணையாக அமர வாசல் கதவுகள் திறந்தன. நூர்ஜகான் சிறந்த பேச்சாற்றலுடன் விளங்கியதால் அவரது உரையை கேட்க, மக்கள் ஆர்வம் காட்டினர்.

வாழ்வில் முன்னேற்றம் அடைய சொல்லும் சொல் அவசியம். நற்சொற்களே அனைவரின் உள்ளத்திலும் என்றும் நீங்கா இடம்பிடிக்கும். பிறரை வீழ்த்த சொல்லும் சொல், சொல்பவரை, ஒரு நாள் வீழ்த்திவிடும். வாழ்வின் ஏற்றமும் இறக்கமும் சொல்லாட்சியில் உள்ளதை நூர்ஜகானின் வாழ்வும் விளக்கும். நூர்ஜகான் தன் பெயரில் அரசாணைகளை வெளியிட்டார். தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் ஜகாங்கீர் பெயருடன் நூர்ஜகான் பெயரை உலகிற்கு அறிமுகம் செய்தன. நூர்ஜகானின் ஒவ்வொரு செயல்களும் அவரது ஆட்சி திறத்தினை பறைசாற்றின.

அழகிய தோட்டங்கள் அமைப்பதிலும் ஆடை வடிவமைப்பதிலும் நேர்த்தி கண்டவர், நூர்ஜகான். பெர்சிய கலையை தனது தந்தையின் கல்லறையில் அறிமுகம் செய்தார். ஜகாங்கீர் நூர்ஜகானின் தந்தைக்கு சூட்டிய பெயரிலே அமைந்த கல்லறையே, பின்னாளில் உலகம் அதிசயக்கும் தாஜ்மகாலுக்கு முன்மாதிரியாய் திகழ்ந்தது.

பெண்கள் நினைத்தால் சாதனை புரிந்து சரித்திரமாக்க முடியும் என்பதை உணர்த்த, அந்தப்புரத்திலிருந்து அரசாட்சி செய்யும் அரசனுக்கு இணையான அரசியாக தன்னை உயர்த்தியவர் நூர்ஜகான்.

இவ்வுலகில் திறமை இருப்போரை யாராலும் அடிமைப்படுத்திவிட முடியாது. காரணங்கள் சொல்ல நினைப்பவர்கள் சாதிப்பதில்லை. சாதிப்பவர்களுக்கு தடைகள் என்றும் ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஓவ்வொரு நிமிடமும் தன் குறிக்கோளை மட்டும் இலக்காய் கொண்டவர்கள், நற்குணத்தால் வரலாற்றில் இடம் பதிப்பர்.

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும். பெண்மையின் பெருமையை பேசும் இத்திருநாட்டில் பெண்கள் வெளிவர பயப்படும் நிலை சில இடங்களில் நீடிப்பது வேதனையே. பலம் பொருந்திய பெண்ணாக இந்நாட்டில் வலம் வந்தால் மட்டுமே நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். இன்பம் எங்கும் நிறைந்திருக்கிறது. அதை சுவைக்க நம் எண்ணம் தெளிந்த நீரோடையாக இருக்க வேண்டும். கலைகள் பல கற்று அதனை நன்முறையில் பயன்படுத்தினால், நாட்டை ஆள்வதும் பெண்வசமாகும்.

அழகின் மொழி, கட்டிடக்கலையின் புதுமை என பன்முகம் கொண்ட நூர்ஜகான் 1645-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி மறைந்தாலும், அவரின் கலைகளும் ஆட்சித்திறனும் நம்மில் அழியா புகழென வீற்றிருக்கும்.

No comments:

Popular Posts