பொருநைக் கரையில் அரேபியக் குதிரை
அ.பாஸ்கர பால்பாண்டியன், தொல்லியல் அறிஞர்
பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த புகழ் மிக்க காலத்தில் புண்ணிய நதியான பொருநைக்கரையில் பண்பாட்டிலும், செல்வச் செழிப்பிலும் சிறந்தோங்கிய நகரங்கள் இருந்தன. முத்து விளைந்த கொற்கை, குதிரை வணிகத்தால் சிறப்புற்ற காயல் போன்ற நகரங்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டுமே துறைமுக நகரங்கள். பாண்டிய மன்னர்கள் காயல் துறைமுகம் வழியாக அரேபிய நாட்டுக் குதிரைகளை இறக்குமதி செய்தனர்.
அரேபிய நாட்டுக் குதிரைகள் அழகானவை. எடுப்பான தோற்றம் கொண்டவை. வேகமாக ஓடுவதில் வல்லவை. மன்னர்கள் தாங்கள் ஏறிச்செல்லவும், படைகளிலும் இவற்றைப் பயன்படுத்தினர். பாண்டிய நாட்டு குதிரைப்படை பலம் மிக்கவை.
கி.பி. 12-ம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கடல் பயணி மார்கோபோலோ காயல் துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு வந்தார். இங்கு நடைபெற்ற குதிரை இறக்குமதியை விவரித்துள்ளார். சேர நாட்டு மிளகும், பாண்டிய நாட்டு முத்தும் இங்கிருந்து ஏற்றுமதியாயின என்று குறிப்பிட்டுள்ளார். காயல் இந்திய நாட்டின் திறவுகோல் போல் அமைந்துள்ளது என்கிறார்.
காயலில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் குதிரைகள் வந்து இறங்கின என்கிறார் மார்கோபோலோ. பாண்டிய மன்னர்களுக்கு குதிரையை வளர்க்கவும், பராமரிக்கவும் தெரியாது. நெய் கலந்த சோற்றை உணவாக வைக்கின்றனர். இதனால் குதிரைகள் கொழுத்துப்போய் ஓட முடியாமல் இறந்து விடுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மீண்டும் குதிரைகளை இறக்குமதி செய்கின்றனர். இதற்காக மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காயலை ‘அஸ்தியய்’ என்னும் மன்னர் ஆண்டார் என்பார் மார்கோபோலோ. ‘கலஸ்தியர்’ என்னும் மன்னர் ஆண்டார் என்பார் வாசப் அலி என்னும் கடல் பயணி.மார்கோபோலோவும், வாசப் அலியும் குறிப்பிடும் மன்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பது பல சான்றுகளால் தெளிவாகிறது. மன்னர் அணிகலன்கள் பல அணிந்திருந்தார் என்றும், இவருடைய காலம் அமைதியாக இருந்தது என்றும் இவர்கள் குறித்துள்ளனர். இதே காலகட்டத்தில் தமிழகம் வந்த யுவான் சுவாங் என்னும் சீன நாட்டுப் பயணி மன்னர் சிறப்பாக ஆட்சி செய்ததால் மக்கள் பயமின்றி வாழ்ந்தனர். வீடுகள், கோவில்கள் போன்றவை கதவுகளே இல்லாமல் திறந்தே இருந்தன என்று கூறுவது எண்ணத்தக்கது.
மன்னரும், அவருடைய தம்பிகள் நால்வரும் அடிக்கடி சண்டையிடுவர் என்று மார்கோபோலோ குறிப்பிடுவார். கல்வெட்டுகள் இதை உறுதி செய்கின்றன. பதவிச்சண்டை பற்பல நேரங்களில் நடந்துள்ளன. குலசேகரபாண்டியன் பல இடங்களை வென்றான். அங்கெல்லாம் தனது தம்பியரையும், மகன்களையும் ஆளும் பிரதிநிதிகளாக நியமித்தான். இவர்களுக்குள் போட்டி பொறாமை உருவானது. குலசேகரபாண்டியனின் பட்டத்து அரசி மகன் சுந்தரபாண்டியன் இன்னொரு அரசியின் மகன் வீரபாண்டியன். வீரபாண்டியன் வீரன் என்பதால் அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.
சுந்தரபாண்டியன் கோபம் கொண்டான். குலசேகரபாண்டியனைக் கொன்றான். யார் அரசன் ஆவது என்று சண்டை நடந்தது. மாலிக்கபூர் படையெடுத்து வந்தபோது அவனைத் துணைக்கு அழைத்தான் சுந்தரபாண்டியன். இருவர் படைகளும் இணைந்து வீரபாண்டியனை கொன்றது. பின்னர் சுந்தரபாண்டியனையும் மாலிக்கபூர் வீழ்த்தி பொருட்களைக் கொள்ளை அடித்தான். அரபு நாடுகளில் இருந்து பாண்டியன் இறக்குமதி செய்திருந்த குதிரைகளின் மீது மூட்டை மூட்டையாக பொருட்களை ஏற்றிச்சென்றான் மாலிக்கபூர்.
பாண்டிய பேரரசு வீழ்ந்தது. துறைமுகம் சிறப்பினை இழந்தது. கடல் பின்வாங்கிச் சென்றது. காயலின் கடைசி அரசன் சூரபன்மராஜா என்பார்கள். புகழ் மிக்க பாண்டியரின் இந்தக் காயல் ‘பழைய காயல்’ என்ற பெயரில் தூத்துக்குடிக்கும், திருச்செந்தூருக்கும் இடையில் அமைந்துள்ளது. மார்கோபோலோ, வாசப் அலி போன்றோர் குறிப்பிடும் காயல் இதுவே என்று டாக்டர் கால்டுவெல், பக்கிள்துரை போன்றோர் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். ‘காயல்’ என்றால் உப்பளங்கள் இருக்கும் பகுதி என்பது அகநானூற்றுப் பாடலால் தெரிகிறது.
பழைய காயல் பகுதியில் இன்றும் உப்பளங்கள் உள்ளன. பழைய காயல், மஞ்சள் நீர்க்காயல், புன்னைக்காயல், காயல்பட்டினம் போன்ற ஊர்களும் அருகில் உள்ளன. காயல்பட்டினம் அரேபியக்குதிரை வணிகர்கள் தங்கியிருந்த இடம். இப்போதும் அந்த மரபினர் அங்கு வாழ்ந்து வருகின்றனர். புன்னைக்காயல் கத்தோலிக்க பாதிரியார்கள் வெளிநாட்டில் இருந்து வந்து தங்கிய இடம் தமிழகத்தில் முதன் முதலில் அச்சுக்கூடம், அச்சுப்பொறிகள் அமைக்கப்பட்ட இடம் இது. கத்தோலிக்க பாதிரியார்கள்தான் இதனை நிறுவினர்.
குதிரை வணிகத்தில் ஈடுபட்ட குதிரைச் செட்டிகள் பற்றிப் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குதிரைச்செட்டி கோவிந்தன், குதிரைச்செட்டி நாவாயன் போன்ற பெயர்கள் கல்வெட்டில் உண்டு. திருச்செந்தூருக்கு அருகில் இருக்கும் சோனகன்விளை என்ற ஊரிலும் அரேபிய வணிகர்கள் ஒரு காலத்தில் தங்கியிருந்தனர் என்பர். ‘சோனகர்’ என்ற சொல் அரேபியர்களைக் குறிக்கும்.
திருநெல்வேலிக் கலெக்டராக இருந்த பக்கிள்துரை காயலில் காசுகள் பல கிடைத்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். “சுல்தான் சாலடின்” காசு கிடைத்துள்ளது. ‘பிட்டர்’ என்று பொறிக்கப்பட்ட காசு ஒன்றும் கிடைத்துள்ளது. அரேபியப் பானை ஓடுகள், சீனப்பானை ஓடுகள், அரண்மனையின் அடிப்பகுதி ஒன்று, உறை கிணறுகள் ஆகியன அகழாய்வில் கிடைத்துள்ளன. கட்டபொம்மன் கட்டிய மண்டபத்தின் இடிபாடுகள் காணப்படுவதாகவும் குறித்துள்ளனர்.
ஐநூற்றுவர், அறுநூற்றுவர், எழுநூற்றுவர், நானாதேசிகன், திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமம், அஞ்சுவண்ணத்தார் போன்ற வணிகக்குழுக்கள் குதிரை வணிகத்தில் ஈடுபட்டனர் என்பது கல்வெட்டால் தெரியவருகிறது.
“பாடிப்பாடி தண்ணீர் எடுக்கும் பாண்டி நகர் காயல்; ஊரைச்சுற்றி புளியமரம் உலுப்பி விட்டால் கலகலக்கும்; பேரைச் சுற்றிக் கூப்பிடுங்கள் பேரான காயலூரை கூப்பிடுங்கள்; பேரான காயலூரை சண்டை பிடிக்கும் முக்காணி சாட்சி சொல்லும் மாறமங்கலம் வழக்கு தீர்க்கும் மகராசன் காயலூர்!” என்பது போன்ற நாட்டுப்பாடல்கள் இன்றும் இப்பகுதியில் வழக்கில் உள்ளன.
மாலிக்கபூர் கொள்ளை அடித்த செய்தியை, மனித உடலுக்குள் ரத்தம் குடிக்கும் அட்டை புகுந்து விட்டால் ரத்தம் முழுவதையும் குடிக்கும். அதுபோல் மாலிக்கபூர் பாண்டிய நாட்டின் செல்வம் முழுவதையும் உறிஞ்சினான் என்று வரலாற்றுப் பேரறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிட்டுள்ளார். அன்னியர் படையெடுப்பும், தமிழ் மன்னர் ஒற்றுமையின்மையும், தமிழகத்தின் பல பொக்கிஷங்களையும், ஊர்களையும் இழப்பதற்குக் காரணமாகி விட்டன.
தமிழர்கள் போட்டி பொறாமைகளையும், வேற்றுமைகளையும் கைவிட்டு ஒன்றுபட வேண்டும். பழம் பெருமைகளை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். அந்நாளே பொன்னாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
உலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கு...
-
பேசப் பழகணும்... பேசிப் பழகணும்... ஒரு மொழியைக் கற்கவும், நமது கருத்துகளை எடுத்துச் சொல்லவும் பேச வேண்டும். தேவைக்குப் பேச வேண்டும், வ...
-
தொலைந்து போன கதை சொல்லிகள்...! ஆர்.ஜெயசீலன், துணை தாசில்தார், வேதாரண்யம். “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவன் மகளை ஒரு மந்திரவாதி தூக்கிட...
-
செங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...
-
அக்பர் தன்னுடைய தாயிடம் பேரன்பும், பெருமதிப்பும் கொண்டவர். அவர் சொல்லை எப்போதும் தட்டாதவர். ஒரு முறை ஆக்ராவுக்கும் லாகூருக்கும் இடையே உள்ள...
-
பொருநைக் கரையில் அரேபியக் குதிரை அ.பாஸ்கர பால்பாண்டியன், தொல்லியல் அறிஞர் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த புகழ் மிக்க காலத்தில் புண்ணிய...
No comments:
Post a Comment