Saturday, 3 November 2018

13. எல்லாம் தரும் ‘நேரம்’

எல்லாம் தரும் ‘நேரம்’ | முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். | தினமும் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அளவில் கிடைப்பது, நேரம் என்ற செல்வம். இந்தச் செல்வத்தை ஒருவர் பயனுள்ள வகையில் உபயோகிக்கலாம், பாழாக்கவும் செய்யலாம். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டவர் வாழ்வில் வெல்வார், பாழாக்கியவர் பின்னாளில் வருந்துவார். நம்முடைய இலக்கைச் சென்றடைய நேரம் என்ற மூலதனத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது முக்கியம். எனவே, நேரத்தை மதியாதவர்கள், இனியாவது சுதாரித்துக்கொண்டு அதை உருப்படியாக உபயோகியுங்கள். ‘நேரம்’ என்ற செல்வம் அதிகம் இருப்பவர்கள் வல்லமை படைத்தவர்கள் அல்லது பணக்காரர்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம். 80 வயது கோடீஸ்வரர் ஒருவர் மரணப் படுக்கையில் கிடந்தால் அவரை ஏழை என்றுதான் சொல்ல முடியும். பொன்னும், மண்ணும், பொருளும், அதிகாரமும், உறவும் இருந்தும் நேரம் இல்லை என்பதால் அவரை ஏழையாகவே கருத வேண்டும். பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தோன்றி 1370 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஓடிவிட்டன. பூமி சூரியனை ஒருமுறை சுற்றும் காலம் ஓர் ஆண்டு. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் அதிகபட்ச சராசரியாக 80 முறை சூரியனைச் சுற்றி வரலாம். ஒரு மனிதர், மறைவுக்குப் பின் அணுக்களாகவும் மூலக்கூறுகளாகவும் மாறிவிடுவார். அதற்கு மேல் மனிதப் பிறப்பை உயர்த்திப் பிடிப்பதற்கும், அவர் இன்னோர் உயிராகப் பிறப்பார் என்று கருதுவதற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை. நமது உயிர் நிரந்தரம், இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது என்று நினைத்து வாழ்க்கையை வாழ்பவர்கள் நிகழ்காலத்தின் அருமையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இது ஒரு தற்காலிகப் பயணம்தான் என்பதால் பின்னர் பெரிய வாழ்க்கை, நிரந்தர வாழ்க்கை ஒன்றைச் சிறப்பாக வாழலாம் என்று மெத்தனமாக இருப்பார்கள். இது நல்ல மனநிலை அல்ல. குழந்தை எழுந்து நிற்க 8 மாதம் தேவைப்படலாம். மழலை மொழி பேச 18 மாதம் தேவைப்படலாம். அது போலத்தான் நீட், ஐ.ஐ.டி. ஜே.இ.இ. தேர்வுகளும். அவற்றுக்கு கால அவகாசம் வேண்டும். நாம் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் நேரம் நமது வாழ்க்கையின் பொன்னான நேரம் என்பேன். உலக வாழ்க்கைக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் நேரம் சிறந்த நேரமாகும். ரிச்சர்ட் பீமென் என்ற விஞ்ஞானி, ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற அணுகுண்டு தயாரிக்கும் திட்டக் குழுவில் இருந்தவர். நோபல் பரிசு பெற்றவர். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிந்தனையாளரும் கூட. அவரின் பேட்டியை யூ-டியூப்பில் பார்த்தேன். ‘உங்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது பெருமையாக இருந்ததா?’ என்பது கேள்வி. அதற்கு அவர், ‘நோபல் பரிசை நான் பெரிதாக நினைக்கவில்லை. நோபல் பரிசு கமிட்டியில் இருந்த ஒருவர், பெரும் விஞ்ஞானி என்று இன்னொருவரை முடிவு செய்து வழங்கப்பட்ட வெகுமதியில் சிறப்பு இல்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அதில் ஏற்பட்ட தோல்விகள், பின்னர் எடுத்த புது முயற்சிகள், அதற்குக் கிடைத்த வெற்றிகள், அணுகுண்டு தயாரித்தது, அதனால் உலகப் போர் நின்றது, இந்த அனுபவங்கள் அனைத்தும்தான் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்தன’ என்றார். கடினப் பயிற்சி செய்த நேரத்தின் அருமையும் பெருமையும் எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். இது நீங்கள் பயிற்சி எடுக்கும் தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த அரிய காலத்தை உங்களது திறமைகளைக் கூர்மையாக்கப் பயன்படுத்துங்கள். அறிவியலையும், மொழியையும், கணினியையும், மனிதர்களையும் ஆழமாகக் கற்றுக்கொள்ளுங்கள். இவை அனைத்தும் உங்கள் சொத்து மதிப்பை பல மடங்கு அதிகரிக்கும். பீமென் சொன்னதைப் போல, இவை பிற்காலத்தில் உங்களுக்கு பெரும் மனமகிழ்வை ஏற்படுத்தும். இன்றைய நாளை மட்டுமே சக்திவாய்ந்த நாளாகக் கருத முடியும். நேற்றைய தினம் முடிந்துவிட்டது, நாளைய தினம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. இந்த நாள் நம் கையில் உள்ளது. இதை நாம் சிறந்த செயல்களைச் செய்யப் பயன்படுத்த முடியும். நமது இன்றைய தினத்தால், நாளைய தினத்தை செம்மையாக மாற்ற முடியும். எனவேதான், இன்றைய தினத்தை நமக்குக் கிடைத்த பரிசு என்கிறோம். நாம் நம் ஒவ்வொரு நிமிடத்தையும் கவனத்தில் கொண்டால், மணியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கடிகாரத்தைப் பார்க்க வேண்டாம். கடிகாரம் செய்வதை நாமும் செய்தால் போதும். கடிகார முட்கள் போல நகர்ந்துகொண்டே இருங்கள். சிலர் இறந்தகால தோல்விகளை நினைத்து வருந்துகிறார்கள். சிலர் எதிர்காலத்தில் நிகழப்போகும் ஆபத்தை எண்ணி அஞ்சுகிறார்கள். அப்படி எதிர்பார்த்த ஆபத்துகள் நிகழாமலே போய்விடலாம். ஆனால் அவற்றை நினைத்தே கவலைப்பட்டு நிகழ்காலத்தை வீணடிக்க வேண்டுமா? நிகழ்காலத்தில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. அது பிரகாசமான எதிர்காலத்துக்கு நம்மை இட்டுச் செல்லும், இனிமையான இறந்த காலத்தை நமக்கு விட்டுச் செல்லும். துயர காலம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நோய்வாய்ப்பட்ட காலம், தோல்வியில் துவண்ட காலம், மோசமானவர்களால் ஏமாற்றப்பட்ட காலம், வீண்பழி சுமத்தப்பட்ட காலம், முதலீடு இழப்பு ஏற்பட்ட காலம், நம்பியவர்கள் கைவிட்ட காலம் போன்றவை பொல்லாத காலம் என்பதில் ஐயமில்லை. ஆனால் நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பெரிய படிப்பினைகள் எனலாம். அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால், பொல்லாத காலமும் பொன்னான காலமாகிவிடுகிறது. பொழுதுபோக்கு தேவைதான். ஆனால் நமது முதல் பணி எதுவோ அதற்கே அதிக நேரம், பணம், மனதை செலவு செய்தல் வேண்டும். நமது சிந்தனையை அதுதான் ஆக்கிரமிக்க வேண்டும். பொழுதுபோக்கை சில காலம் புறக்கணித்தால், மூளைக்கு விடுதலை கிடைக்கும். எடுத்த வேலையிலும் கவனம் செலுத்த முடியும். ஒரு மனிதனுக்கு நீங்கள் தரும் பெரிய பரிசு, நேரம் என்பதை உணருங்கள். பணம் கொடுத்தால், அந்தப் பணம் திரும்பிவராவிட்டாலும் வேறு வழிகளில் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் ஒருவருக்குக் கொடுத்த நேரம் திரும்பி வராது. எனவே யார் யாருடன் எவ்வளவு நேரத்தை, எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள். பிறரது பொன்னான நேரத்தை நீங்களும் வீணடிக்காதீர்கள். அது அவருக்குச் செய்யும் பெரிய தீமை என்பதை உணருங்கள். நேரத்தை நிர்வகிக்கத் தெரியாதவருக்கு வேறு எதையும் நிர்வகிக்கத் தெரியாது. ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றார் சார்லஸ் டார்வின். நேரம் விமானத்தைப் போல பறக்கும். ஆனால் அந்த விமானத்தின் பைலட் நாம்தான். நமது நேரத்தை நாம்தான் நிர்வாகம் செய்ய வேண்டும். நேர நிர்வாக ரகசியங்கள்: எது அவசரமானதோ அதைச் செய்யுங்கள். அன்றன்று செய்ய வேண்டியவற்றைப் பட்டியல் இடுங்கள். பிறருக்கு முறையாகப் பணி ஒதுக்கீடு செய்யுங்கள். பயனில்லாத இடத்துக்கு போக மறுத்துவிடுங்கள். கவனச்சிதறல்களுக்கு இடம் தராதீர்கள். காரியத்தில் கவனமாயிருங்கள். நாளைக்கு முடிக்க வேண்டியதை இன்றே முடியுங்கள். முதலில் உங்களை நிர்வகியுங்கள். அதுவே உண்மையான நேர நிர்வாகம். நீங்கள் வாழ்க்கையை நேசிப்பவராக இருந்தால், உங்களது இந்த நிமிடத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் விரும்பிய வாழ்க்கையைத் துவங்க இந்த நிமிடமே சரியானது. வாழ்க்கை நிமிடங்களால் உருவாக்கப்படுகிறது என்றார், புரூஸ் லீ. நேரத்தின் மதிப்பை உணர்வோம், நிலையான வெற்றி பெறுவோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts