Sunday, 28 January 2018

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கண்கள் தேவையில்லை - டிபானி

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கண்கள் தேவையில்லை டிபானி "கண் பார்வையில்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழமுடியும்" என்று சந்தோஷமாக சொல்கிறார், டிபானி. இவர் பார்வைத்திறனோடுதான் பிறந்திருக்கிறார். பிறந்த சில மாதங்களில் பெற்றோரின் முகம் பார்த்தும் சிரித்திருக்கிறார். ஐந்தாறு மாத பருவத்தில் காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். பின்பு காய்ச்சல் குணமாகியுள்ளது. பார்வைத்திறனை இழந்திருக்கிறார். "எனக்கு பார்வையில்லாமல் போனதால் அம்மா ஒருபோதும் அனுதாபம் காட்டியதில்லை. என்னை நினைத்து அவர் கவலைப்பட்டதுமில்லை. எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் வசித்திருக்கிறோம். இரண்டாம் வகுப்பு படிக்கும்போது கேரளா வந்தோம். பின்பு சண்டிகார், டெல்லி என்று இடம்மாறிக்கொண்டே இருந்தோம். பார்வையில்லாததால் பள்ளியில் ஆசிரியர்கள் என்னை அதிகம் கவனித்ததில்லை. கடைசி பெஞ்சில் உட்காரவைத்துவிடுவார்கள். பாடம் தொடர்புடைய கேள்விகள் எதையும் என்னிடம் கேட்டதில்லை. ஹோம் ஒர்க்கும் எனக்கு கிடையாது. சில நேரங்களில் ஆசிரியர்களின் கேள்விக்கு நான் பதில் அளிக்க முயற்சிப்பேன். அப்போது அவர்கள், 'நீ கண் தெரியாத பெண். கஷ்டப்படவேண்டாம். உட்கார்ந்து விடு..' என்பார்கள். என்னிடம் பேசுவதற்கு யாரும் கிடையாது. விளையாடுவதற்கும் தோழிகள் வரமாட்டார்கள். அதனால் தனிமைப்படுத்தப்பட்டு, தன்னம்பிக்கை இல்லாமல் போனேன். அம்மா மட்டுமே எனக்கு ஆறுதல். அவர் போகும் இடங்களுக்கெல்லாம் என்னையும் கைப்பிடித்து அழைத்துசென்றார். என் தந்தைக்கு டார்ஜிலிங்கிற்கு இடமாற்றம் கிடைத்தபோது அங்கு சென்றேன். அங்குள்ள மேரி ஸ்காட் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு எனக்கு வாழ்க்கையை கற்றுத்தந்தார்கள். நான் வெளியே சென்றேன். கிணற்றில் தண்ணீர் இறைத்தேன். என் வேலைகளை நானே சுயமாக செய்துகொள்ளத் தொடங்கினேன்.." என்று கூறும் டிபானிக்கு 13 வயதில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று அவரது அம்மா இறந்து போனார். "அம்மாதான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அம்மா உயிரோடு இருந்தது வரை, கண் தெரியாதது எனக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை. அம்மா இறந்தும் நான் நடுக்கடலில் சிக்கிக்கொண்டதுபோல் உணர்ந்தேன். அடுத்தும் என் தந்தைக்கு இடமாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அப்போது ஒருமுறை நான், என்னை திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் பள்ளியில் சேர்க்கும்படி கூறினேன். தந்தை என்னை அங்கு சேர்த்துவிட்டு, ஷில்லாங் போய்விட்டார். நான் விடுதியில் தங்கிப்படித்தேன். எனக்கு அங்கு நிறைய தோழிகள் கிடைத்தார்கள். என் கல்வி வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்தது" என்கிறார். பிளஸ்-டூ முடித்துவிட்டு, திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளநிலை பட்டம் பெற் றார், டிபானி. "படித்து முடித்துவிட்டு காந்தாரி என்ற நிறுவனத்தில் சேர்ந்தேன். அவர்கள் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித்தருகிறார்கள். அங்கு ஒவ் வொருவரும் சுயமாக வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு தயார் செய்கிறார்கள். நான் அங்கு டெலிபோன் ஆபரேட்டர் வேலைபார்த்துக்கொண்டே கம்ப்யூட்டர் கற்றேன். அப்போது எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரித்தது. தனியாக சாலைகளில் நடந்து சென்றேன்.."என்கிறார். ஒருமுறை இவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றிருக்கிறார். அறிமுகமற்ற பெண் ஒருவர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார். இவர் 3 ஆயிரம் ரூபாய் பெறும்படி சொல்ல, அவர் 6 ஆயிரம் ரூபாய் எடுத்துவிட்டு, பாதியை மட்டும் இவரிடம் கொடுத்துவிட்டு மீதியை எடுத்துச் சென்றுவிட்டார். இப்படி ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் டிபானி மனந்தளரவில்லை. இவருக்கு பார்வையற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதனால் கோவையில் ராமகிருஷ்ணாமிஷனில் சிறப்பு கல்வியில் பி.எட். முடித்திருக்கிறார். முதலில் பார்வையற்ற குழந்தைகளை தேடிப்பிடித்து, அவர்களது வீடுகளுக்கே சென்று சிறப்பு உபகரணங்களோடு கல்வி கற்றுக்கொடுத்திருக்கிறார். பின்பு அவர்களுக்காக ஒரு மையத்தை தொடங்கி நடத்துகிறார். அதன் மூலம் பார்வையற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வருகிறார். அது தனக்கு ஆத்மதிருப்தி அளிப்பதாக சொல்கிறார்.

No comments:

Popular Posts