Tuesday 13 December 2016

உறுப்பினும் மேலானது உயிர்!

உறுப்பினும் மேலானது உயிர்! | ஜெயபாஸ்கரன் | ஒருவர் உயிரோடு இருக்கும்போது தன் குருதியையும் ஒரு சிறுநீரகத்தையும் மற்றவர்களுக்குத் கொடையாக அளிக்கமுடியும். இறப்புக்குப்பிறகு,குறிப்பாக, மூளைச்சாவுக்குப் பிறகு கண்கள், சீறுநீரகம், கல்லீரல், தோல், எலும்பு, இதயம் போன்றவற்றைக் கொடையாக அளிக்கமுடியும். மருத்துவ மாணவர்களின் உடற்கூறு ஆய்வுகளுக்காக இறந்தவர்களின் முழுஉடல்கள் கொடையளிக்கப்படுவதும் உண்டு. இன்றைய நிலையில் மருத்துவ மாணவர்களின் உடற்கூறு ஆய்வுக்கு உடல்கள் கிடைப்பதில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே அத்தகைய ஆய்வுக்கு, உரிமை கோருவார் அற்ற உடல்களையே மருத்துவக்கல்லூரிகள் நம்பியிருக்கின்றன. எனவே முழு உடற்கொடை விழிப்புணர்வுப் பரப்புரைகளையே மத்திய மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் தற்போது பயின்று வருகின்ற 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வியிலும், சிகிச்சை முறையிலும் மேன்மை பெறவேண்டுமானால் அதற்கு அடிப்படையாக அமைவது அவர்களது கல்விக் காலத்தின் உடற் கூறாய்வுக் கல்விதான். ஆனால் அதற்கான உடல்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வும் பரப்புரையுமே முதன்மையானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மரணங்கள் நேர்ந்துகொண்டிருக்கையில் மருத்துவக் கல்வி ஆய்வுகளுக்கு உடல்கள் கிடைக்காத நிலை நீடிப்பது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் நிலவுகின்ற குறைபாட்டையே காட்டுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் மூளைச்சாவு உடலுறுப்புக்கொடை குறித்த பரப்புரைகள் மட்டும் வலுப்பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. இத்தகைய போக்கு அரசின் மருத்துவத் துறைக்கும் தமிழகத்தின் நடுத்தர மற்றும் ஏழை எளிய நோயாளிகளுக்கும் நிச்சயமாகப் பயன்தராது. மூளைச்சாவு அடைந்தோரின் உடலுறுப்புக் கொடை நடவடிக்கைகளில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருக்கின்ற மகாராஷ்டிர மாநிலத்தை வேகமாகப் பின்னுக்குத் தள்ளி, அந்த மாநிலத்தைப் போல பத்து மடங்கு உடலுறுப்புகளைத் தமிழ்நாடு கொடையளித்திருப்பதாக பெருமிதமாகத் தகவல் தெரிவித்திருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர். இந்த அறிவிப்பின் மறுபக்கம் மிகவும் அபாயகரமானது என்பதும், குடிமக்களுக்கு உயிரச்சத்தையும் அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடியது என்பதும் உணரப்படவில்லை. அவரது கணக்கின்படி இதுவரை மூளைச்சாவு அடைந்த 895 பேர் தங்களது 4,992 உடல் உறுப்புகளைக் கொடையளித்திருக்கின்றனர். அதாவது ஒருவர் மூளைச்சாவு அடைந்தால் அவர் தனது உடல் உறுப்புகளால் சராசரியாக ஐந்து பேருக்கு உயிர்கொடுக்கிறார். உடலுறுப்புக் கொடைகள் குறித்து, அதிலும் குறிப்பாக மூளைச்சாவு அடைவோரின் உடலுறுப்புக் கொடைகள் குறித்து பல்வேறுவிதமான வினாக்கள் எழுகின்றன. இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 1,50,000 பேர் பல்வேறு வகையில் மூளைச்சாவு அடைகின்றனர். ஆனாலும் கூட, அவர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகளைக் கொண்டு சில லட்சம் பேர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை. விழிப்புணர்வின்மையே இதற்குக் காரணம் என்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர். அது ஒருவகையில் சரிதான். ஆனால், ஆண்டுக்கு 1,50,000 மனித உயிர்களை நமது நாடு மூளைச்சாவுக்கு பலிகொடுக்கத்தான் வேண்டுமா? இந்த நிலையைப் பெருமளவு தவிர்க்கவோ, குறைக்கவோ முடியாதா? சாலை விபத்துகள்தான் பெரும்பகுதி மூளைச்சாவுகளுக்கும், உயிரிழப்புகளும், உடலுறுப்புச் சிதைவுகளுக்குமான காரணங்களாக இருக்கின்றன. பெருகிக்கொண்டேயிருக்கின்ற விபத்துக்கள் குறித்து நீதிமன்றங்கள் கவலைப்படுகிற அளவுக்குக்கூட நமது மத்திய, மாநில அரசுகள் கவலைப்படுவதுபோல தெரியவில்லையே, ஏன்? சொற்ப அளவு நோயாளிகளுக்கு வேண்டிய உடலுறுப்புகளை இணைத்து அவர்களைக் காப்பாற்றுவதைவிட, நல்ல உடல்நிலையில் அதிக அளவில் இருப்பவர்கள் மூளைச்சாவு அடையாமல் காப்பாற்றுவது கடினமான காரியமா? இந்தியாவின் எந்த மாநிலமும் ஆண்டு வரிசைப்படி வாகன விபத்துகளும், அதன் விளைவான உயிரிழப்புகளும் குறைக்கப்பட்டிருப்பதாக ஒரு கணக்கை முன்வைக்கவில்லையே ஏன்? அதிலும் குறிப்பாக விபத்துகளில் இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வரும் தமிழக அரசுக்கு, இது குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்தித்து நிலைமையை மாற்றியாக வேண்டிய பொறுப்பு கூடுதலாக இருக்க வேண்டுமல்லவா? மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை அதிக அளவில் கொடையாகப் பெறுவதுதான் அநியாய உயிரிழப்புகளுக்கான தீர்வா? இப்படி வினாக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. விடைகளை எங்கு போய்த் தேடுவது? மூளைச்சாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்துபோனவர்களின் உடல் உறுப்புகளை எடுத்துப் பொருத்தி, நோயுற்று இருப்பவர்களை வாழவைக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கம் மிகவும் உன்னதமானது. ஆனால், மூளைச்சாவு உடலுறுப்புக்கொடை என்பது இன்றைக்கு ஒரு மருத்துவப் பெருவணிகமாக மாறிக்கொண்டிருக்கிறது. உடலுறுப்புகளைக் கொடுப்பவர்களும், எடுப்பவர்களும், பெறுபவர்களும் யார் யார் என்று ஆய்வு செய்தால் இக்கூற்று உண்மையெனப் புரியும். இன்றைய நிலையில் தங்களது உறவுகளின் உடலுறுப்புகளைக் கொடையளிப்பவர்கள் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களே. இங்கே மூளைச்சாவு அடைந்த ஓர் ஏழையின் உடலுறுப்பு தேவையின்பொருட்டு சர்வசாதாரணமாக ஹெலிக்காப்டரில் கூட எடுத்துச்சொல்லப்படுகிறது. ஆனால் இதுபோன்ற பெருமையான செய்திகளைக் கொண்டு, இன்னொரு பக்கத்தின் மோசமான மருத்துவ உண்மைகளை மூடிமறைக்கக் கூடாது. முப்பது வயதிலேயே விபத்தில் மூளைச்சாவு அடைந்துவிட்ட ஒருவர் தனது உடலுறுப்புகளைக் கொண்டு அடுத்தொருவரை அடுத்த ஒரு சில ஆண்டுகள் மட்டுமே கூடுதலாக வாழவைக்கிறார் என்பதே உண்மை. ஆனால் மூளைச்சாவு அடைந்தவரோ எழுபது ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடிய உடல் இயல்பைப் பெற்றவராக இருக்கிறார். இவ்விரு தரப்பின் உறுப்புமாற்று மருத்துவத்தில் மிக வளமாக வாழ்வதென்னவோ நட்சத்திர மருத்துவமனைகள்தான். குடிமக்களின் உணவு, உடை, கல்வி போன்றவற்றில் கூட வர்க்கத்திற்கு ஏற்ற வாழ்க்கைமுறை நிலவுவதை உண்மையான ஜனநாயகமாக ஏற்க முடியாத நிலையில், உயிர் காக்கும் மருத்துவத்தில் வர்க்க விளையாட்டு தலைவிரித்து ஆடுவதை நமது மத்திய - மாநில அரசுகள் அனுமதிக்கலாமா? அதிலும் மூளைச்சாவுகளையும், உடலுறுப்புக் கொடைகளையும் நம்பிதான் நமது மருத்துவத்துறை இருக்கிறது, நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதைப்போல இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற ஒரு தோற்றம் உலக அரங்கின் பார்வையில் நமது நாட்டிற்கு இழிவை ஏற்படுத்தக்கூடியதாகும். தற்போதைய நிலையில் இந்திய அளவில் ஒரு லட்சம் பேர் தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிக்கப் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை 2017-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இருபது லட்சமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர். இது நல்ல இலக்குதான். ஆனால் அந்த இருபது லட்சம் பேர் என்னென்ன காரணங்களால், எத்தகைய நோய்களால் மரணப்படுக்கையில் வீழ்கிறார்கள் என்பதைக் கண்டறிவதும், அவர்களைப் போன்றவர்களையும் காப்பாற்றுவதுமே உண்மையான ஆட்சி நிர்வாகமாக இருக்க முடியும். "இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சாலைவிபத்துக்களில் 400 பேர் பலியாகின்றனர். இதை அறிவிப்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எங்கள் இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் சாலைவிபத்துகளைக் குறைக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் முயற்சி போதிய பயன்களை அளிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து மேலும், மேலும் பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து சாலைவிபத்துக்களை குறைப்போம்' என்று வேதனையோடு அறிவித்திருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி. இத்தகைய குற்ற உணர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும்தான் தீவிரமான மக்கள் நல நடவடிக்கைகள் தோன்றும் என்பதால் அமைச்சரின் கூற்று வரவேற்கத்தக்கதாகும். கொள்ளை நோய்களுக்கும், கொடூர விபத்துகளுக்கும், பஞ்சத்துக்கும், பசிக்கும் பலியாகாத மக்கள் வாழும் நாட்டில் உடலுறுப்புகளைக் கொடையளிப்போரும், அவற்றைக் கொடையாகப் பெறுவோரும், மிக மிக அரிதாகவே இருப்பர். அத்தகைய அரிதான நிலையையே நமது நாடு விரைவில் எய்த வேண்டும்.

No comments:

Popular Posts