Wednesday 25 December 2019

கீழ்வெண்மணி கொடுமைக்கு அரை நூற்றாண்டு

கீழ்வெண்மணி | ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் | 1969 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்பதற்காக குடிசையோடு வைத்து 44 ஆதிதிராவிட மக்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்த அந்தக் கோர நிகழ்வு நடந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சியிலும் நிர்வாக முறையிலும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் கீழ்வெண்மணி கொடுமைக்கு அடிப்படையாக இருந்த நிலவுரிமையிலோ, கிராமப்புற சாதிய அமைப்பிலோ பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

இந்தியாவில் 15 கோடியே 71 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் உள்ளது. அது 14 கோடியே 60 லட்சம் பேருக்குச் சொந்தமாக இருக்கிறது. 2015-2016-ம் ஆண்டு அரசு வெளியிட்டிருக்கும் விவசாயப் புள்ளிவிவரப்படி மொத்தமுள்ள நிலத்தில் தலித்துகளுக்குச் சொந்தமாக இருப்பது 9 சதவீத நிலம் மட்டும் தான். ஆதிவாசிகளிடம் 11 சதவீத நிலம் இருக்கிறது. மீதமுள்ள 80 சதவீத நிலம் பிற சாதியினருக்குச் சொந்தமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் சாதிய இறுக்கம் தளராமல் இருப்பதற்கும் நில உடைமைக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. அதை முன்னுணர்ந்துதான், ‘கூட்டுப் பண்ணை முறையை’ அம்பேத்கர் பரிந்துரைத்தார்.

அதுமட்டுமின்றி விவசாயத்தை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், ‘சாதி, மத பாகுபாடின்றி நிலங்களைப் பங்கிட்டுத் தரவேண்டும்’ எனவும் வலியுறுத்தினார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பை போலவே இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவையும், அதை சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கையையும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசு கணக்கெடுப்பு செய்துவருகிறது. அது விவசாயக் கணக்கெடுப்பு என அழைக்கப்படுகிறது. 2010-2011-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின் விவரங்கள் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டன.

2010-2011-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் மாநில வாரியாக நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவும் கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்சி/எஸ்டி பிரிவினரில் நிலம் உள்ளவர்கள் எத்தனைபேர் அவர்களால் பயிர்செய்யப்படும் நிலத்தின் பரப்பு என்ன என்பதைத் தனியே கொடுத்திருக்கிறார்கள்.

தென்னிந்திய மாநிலங்களில் மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் நிலம் வைத்துள்ள தலித்துகளின் என்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் நிலத்தின் பரப்பளவும் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாக உள்ளது. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 2005, 2006 மற்றும் 2010 2011 ஆகிய இரண்டு கணக்கெடுப்புகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தலித்துகளிடம் உள்ள நிலத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

2005-2006-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 84 ஆயிரம் தலித்துகளிடம் மொத்தமாக 5 லட்சத்து 3ஆயிரம் ஹெக்டேர் நிலம் இருந்தது. 2010-2011-ம் ஆண்டில் நிலம் வைத்திருக்கும் தலித்துகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 73 ஆயிரமாக குறைந்தது. அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவும் 4 லட்சத்து 92 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. அதாவது 2005-2006-க்கும் மற்றும் 2010-2011-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 11 ஆயிரம் தலித்துகள் நிலமற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 11 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பறிபோயிருக்கிறது.

ஆதிதிராவிட மக்கள் எப்போதுமே நிலமற்றவர்களாக இருந்ததைப்போன்ற ஒரு எண்ணம் பதிய வைக்கப்பட்டுள்ளது. அது உண்மையன்று. 1772-ம் ஆண்டில் பெர்னார்டு என்பவர் செங்கல்பட்டு பகுதியில் நிலம், விவசாயம், மக்கள்தொகை உள்ளிட்ட விவரங்களைக் கணக்கெடுப்புச் செய்து அவற்றை ஓலைச் சுவடிகளில் எழுதிப் பாதுகாத்து வைத்தார். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பில் இருக்கும் அந்தச் சுவடிகளிலிருந்து திருப்போரூர் மற்றும் வடக்குப்பட்டு ஆகிய இரண்டு பகுதிகளைச் சேர்ந்த விவரங்கள் மட்டும் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

சர்வே செய்யப்பட்ட 1910 கிராமங்களில் 1550 கிராமங்களில்தான் மக்கள் வசித்தனர். அவற்றில் 65 ஆயிரம் குடும்பங்கள் இருந்தன. அவற்றுள் சுமார் 33 ஆயிரம் குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தன. விவசாயத்தில் ஈடுபட்டிருந்த குடும்பங்களை சாதிவாரியாகவும் பெர்னார்டு கணக்கெடுப்புச் செய்திருக்கிறார். 7400 வேளாளர் குடும்பங்கள், 9700 வன்னியர் குடும்பங்கள், 11,000 ஆதிதிராவிடர் குடும்பங்கள், 2400 ரெட்டி கம்மாவார் குடும்பங்கள், 2600 இடையர் குடும்பங்கள். தலித் மக்களே எண்ணிக்கை அடிப்படையிலும், விவசாயத்தில் ஈடுபட்டிருந்ததிலும் அதிகமாக இருந்தனர் என்பது இந்தக் கணக்கெடுப்பிலிருந்து தெரிகிறது.

விவசாயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியமென்பதை அம்பேத்கர் மட்டுமின்றி கார்ல் மார்க்ஸும் வலியுறுத்தியிருக்கிறார். கிராமப்புறங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரமிது. ஆனால் இந்தத் தேர்தல் மட்டுமே கிராமங்களில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிடாது. கீழ்வெண்மணியில் நடந்ததுபோன்ற கொடுமை மீண்டும் நிகழாமல் தடுக்கவேண்டுமென்றால் அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

விவசாயத் துறைக்கு வழங்கப்படும் சலுகைகள் யாவும் நிலம் உள்ளவர்களுக்கே அளிக்கப்படுகின்றன. நிலமில்லாத ஆனால் நிலத்தையே சார்ந்து வாழும் கூலி விவசாயிகளை அரசாங்கங்கள் பொருட்படுத்துவதில்லை. தற்போதுகூட மத்திய அரசு நிலம் உள்ள விவசாயிகளுக்கே ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தத் திட்டத்தை நிலம் இல்லாத விவசாயக் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தவேண்டும். நிலச் சீர்திருத்தச் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆதிதிராவிட மக்களுக்குப் பாதுகாப்பான சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீண்டும் ஒரு கீழ்வெண்மணி நடக்காமல் தடுக்கமுடியும்.

No comments:

Popular Posts