Wednesday, 30 October 2019

மரணங்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள்

மனிதனின் பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும் எத்தனையோ சம்பவங்கள் இடையில் வந்துபோகின்றன. சில சம்பவங்கள் மட்டும் வரலாற்றில் இடம் பிடிக்கிறது. அது போன்ற ஒரு வரலாற்றுச் சம்பவம் தான் குழந்தை சுஜித்தின் மரணம்.

ஒரு விஷயத்தை முன்கூட்டியே முடிவு செய்ய முடியாமல் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு தான் விழித்துக்கொள்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு உயிர்களை பலி வாங்கி இருக்கிறது இந்த ஆழ்துளை கிணறுகள். ஆனாலும் ஏன் இந்த சமூகம் விழித்துக்கொள்ளவில்லை. அறியாமையா? விழிப்புணர்வு பெறவில்லையா? அரசின் கெடுபிடிகள் இல்லையா? இவற்றை எல்லாம் யோசிக்க வேண்டிய தருணத்தில் சுஜித்தின் மரணம் கேள்வி எழுப்பிச் சென்று இருக்கிறது.

நாடு நவீனமாக்கப்படுகிறது, இணையம் உள்ளங்கையில் இணைக்கப்பட்டு விட்டது. சந்திரனிலும், செவ்வாயிலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகள் போற்றி வளர்த்த ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற இந்த அறிவியலுக்கும், விஞ்ஞானத்திற்கும் முடியாமல் போய்விட்டதே. முப்பது அடியில் இருந்தவனை நூறடிக்கு இழுத்துச் சென்ற இயற்கையிடம் இந்த அறிவியலும், விஞ்ஞானமும் தோற்றுப்போய்விட்டதே. இதற்காகவா நாம் இத்தனை ஆராய்ச்சிகளை செய்து சாதனை படைத்தோம். நாகரிக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டோம் என்று மெச்சிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சமூகத்தில் நடக்கும் பல மரணங்கள் நமக்கு இன்னும் பாடம் கற்பித்துக்கொண்டு இருக்கிறது என்பதனை மட்டும் யாராலும் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.

ஆம் நாவரசு என்ற மருத்துவ மாணவர், தான் மருத்துவம் படித்து மிகப்பெரிய மருத்துவர் ஆக வேண்டும் என்ற பெரிய கனவோடு கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தார். அங்கே அவருக்கு நடந்தது என்ன? ராக்கிங்கால் கொலை செய்யப்பட்டு கோணிப்பையில் அள்ளிச்சென்ற அவலம் நடந்தது. நாவரசுவின் மரணம் இந்த சமூகத்திற்கு விட்டுச்சென்ற பாடம் தான் பல லட்சம் மாணவர்களை ராக்கிங் என்ற எமனிடமிருந்து காப்பாற்றியது. அந்த மாணவரது மரணம் வரைக்கும் ராக்கிங் என்பதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது வெளி உலகிற்கும் தெரியவில்லை. மரணத்திற்கு பின்பு தான் நாம் விழித்துக்கொண்டோம்.

சுவாதி என்ற இளம்பெண் பட்டப்பகலில் ரெயில் நிலையத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாள். படித்து முடித்து கைநிறைய சம்பாதிக்கும் வயதில் கயவனுக்கு தன் உயிரை பலி கொடுத்துச் சென்றாள். அவளது மரணம் விட்டுச்சென்ற பாடம் என்ன? அதன் பிறகு தான் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. லட்சம் பேர் வந்து செல்லும் ரெயில் நிலையத்தில் அதுவரை கண்காணிப்பு கேமராக்கள் கூட பொருத்தப்படவில்லை. சுவாதியின் மரணத்திற்கு பின்பே நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீக்கிரையாயினர். அதுவரை பள்ளிக்கூடங்கள் கூரைக்கொட்டகையில் இயங்கி வருகிறதா என்பது கூட யாருக்கும் தெரியாது. அகரம் படிக்கச்சென்ற அக்குழந்தைகளின் மரணம் தான் கூரையில்லாத பள்ளிக்கூடங்களுக்கு பாதை போட்டது. அந்த பச்சிளம் குழந்தைகளின் மரணம் இந்த சமூகத்திற்கு விட்டுச்சென்ற பாடம் தான் இன்றைக்கு பாதுகாப்பான கட்டிடங்களின் பல லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடிகிறது.

பள்ளி பேருந்தின் ஓட்டை வழியே பள்ளிக்குழந்தை விழுந்து இறந்து போனது. இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. பேருந்தில் இவ்வளவு பெரிய ஓட்டையா என்று அது வரைக்கும் சோதனை செய்யப்படாத பேருந்துகள் அந்த குழந்தையின் மரணத்திற்கு பின்புதான் பள்ளிப்பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன. அக்குழந்தையின் மரணம் விட்டுச்சென்ற பாடத்தால் தான் இன்றைக்கு பல லட்சம் குழந்தைகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கின்றனர். மரணத்திற்கு பின்பே விழித்துக்கொண்டோம்.

தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா தேவாலயத்தில் கொலை செய்யப்பட்டார். சேலத்தில் மாணவி தேசாஸ்ரீ வகுப்பறையில் கொலை செய்யப்பட்டார். கோவையில் தண்யா என்ற இளம் பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டார். இவை எல்லாம் ஒருதலை காதலால் ஏற்பட்ட மரணங்கள் இம்மரணங்களுக்கு பிறகே சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. சென்னையில் விளம்பர பதாகை விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்துக்கு பிறகு தான் வீதிகளில் விளம்பர பதாகைகள், கட்-அவுட், பேனர் வைக்கக்கூடாது என்று சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. அனைத்துக் கட்சி தலைவர்களும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். இம் மரணங்கள் விட்டுச்சென்ற பாடங்கள்தான் பெண்களின் பாதுகாப்பிற்கு வேலிபோட்டது. பாதுகாப்பை பலப்படுத்தியது.

மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த அனிதாவின் மரணம் கனவாகவே போய்விட்டது. அனிதாவின் மரணத்திற்கு பிறகு இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறோம். இப்படி நமது சமகாலத்தில் பல்வேறு மரணங்களை நாம் சந்தித்து போராடி வந்திருக்கிறோம். ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு பாடத்தை இந்த சமூகத்திற்கு கற்றுக்கொடுத்துப்போகிறது. ஆனால் மரணங்களை தடுக்க முடியாமல் நம்மால் பாடம் கற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த வரிசையில் தான் குழந்தை சுஜித்தின் மரணம் இன்று இடம்பிடித்து இருக்கிறது. ஆழ்துளை மரணங்கள் பல இம்மண்ணில் இடம் பெற்று இருந்தாலும் சுஜித்தின் மரணம் மிகப்பெரிய பாடத்தை இச்சமூகத்திற்கு விட்டுச்சென்று இருக்கிறது. உன்னுடைய அறிவியலும், ஆராய்ச்சியும், விஞ்ஞானமும் இயற்கை என்னும் என்னிடம் தோற்றுப்போகும் என்று சவால்விட்டுச் சென்று இருக்கிறது. நான்கு நாள் போராட்டம், பல மணி நேர காத்திருப்பு, பகைவன் கூட மனம் இளகிப்போகும் பரிதாபம், கை நீட்டிய குழந்தைக்கு கை கொடுக்க முடியாமல் போன இயலாமை, இவை எல்லாம் நம் எல்லோருடைய மனதையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மீண்டு வா என்ற பிரார்த்தனை உலகம் எங்கும் ஒலித்தது. ஆனால் மீளாமலேயே போய்விட்டான். பல்வேறு மரணங்கள் பாடம் கற்றுக்கொடுத்ததைப்போல குழந்தை சுஜித் மரணம் இந்த சமூகத்திற்கு பாடம் கற்பித்துச் சென்று இருக்கிறது.

மு.ஜெயமணி, உதவி பேராசிரியர், ராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி,

No comments:

Popular Posts