கலாமின் காலடி...

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் என்று சொன்னது மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர் கலாம். கடற்கரை ஊரான ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து 2015-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27-ம் தேதி ஷிலோங் என்ற மலைப்பிரதேசத்தில், தான் மிகவும் உயர்வாக நினைத்த ஆசிரியப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்ற மாமனிதர்தான் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

ஒரு மனிதன் பிறந்தது முதல் இறுதிப் பயணம் வரை வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று கூறாமல் வாழ்ந்து காட்டிய ஓர் நல்லாசிரியர் அவர். “தூங்கும்பொழுது வருவதல்ல கனவு நம் தூக்கத்தை கலைப்பதுதான் கனவு” என கனவில்கூட காவியம் படைக்க ஊக்கமளித்த தலைவன்.

வாழ்க்கையில் லட்சியம் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பாதையில் பயணித்து தோல்வியுற்றால் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. எது கிடைக்கிறதோ அதில் தலை சிறந்து விளங்க முயற்சிக்க வேண்டும் என்று உணர்த்திக் காட்டிய உத்தமர். அவர் விமானியாக வேண்டும் என்பது தான் லட்சியம். ஆனால், அது முடியவில்லை என்றதும் சோர்ந்துவிடாமல் விமானம் செய்யும் தொழில் நுட்பத்தை கற்று பின்னர் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அறியப்பட்டவர்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் முடித்து சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் விண்வெளி படித்து 40 வருடகாலம் ஒரு விஞ்ஞானியாக விளங்கியவர்.

டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த குழந்தைகள் இவரைக் கண்ட பின்னர்தான், தான் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று கூறினர். அப்படிப்பட்ட லட்சியக் கனவுகளை இளம் பிஞ்சுகளின் மனத்தில் விதைத்தவர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் தன்னை உருவாக்கிய குருவை என்றும் அவர் மறந்ததில்லை . பிறரையும் குருவிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என அறிவுறுத்தியதோடு, குருவே வாழ்விற்கு வழிகாட்டி எனவும் கூறியவர். டிஆர்டிஓ மற்றும் ஐஎஸ்ஆர்ஓ-ல் தன் வாழ்நாளில் பெருமளவில் கழித்தவர். அதுதான் அவரை ஒரு ஏவுகணை மனிதனாக உலகிற்குக் காட்டியது.

ஒருமுறை அவரிடம் ஐஎஸ்ஆரோவில் அவருடைய மறக்க முடியாத அனுபவத்தை கேட்டபொழுது, “எப்பொழுதுமே குழுவாக திட்டமிடுதலும் அனைவரின் ஒத்துழைப்பும் வெற்றிதரும். ஆனால், ஒரு குழுவிற்கு தலைவன் என்பவர் தனக்கு பின்னே கீழே உள்ளவர்களைத் தொண்டர்களாக உருவாக்கவேண்டும் என்று எண்ணக்கூடாது. தன்னைப்போல் பிறரையும் தலைவனாக்க முயல வேண்டும். அதுவே, ஒரு தலைமைப் பண்பு, அப்படி ஒருமுறை அவர்களின் திட்டம் ஒன்று தோற்ற பொழுது இதனைப் பற்றி தெரிந்துகொள்ள பத்திரிகையாளர்கள் அரங்கத்திற்கு வெளியே காத்திருந்தனர். அப்பொழுது குழுவில் உள்ள ஒருவர் தலைவரிடம் நாங்கள் பத்திரிகையாளர்களை சமாளிக்கிறோம் என்ற பொழுது தலைவர், நீங்கள் சோர்ந்து போக வேண்டாம் நான் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் பொறுமையாக பதில் கூறினாராம். ஆனால், அடுத்த முறை வெற்றி பெற்ற பொழுது கலாமிடம் நீங்கள் சென்று பத்திரிகையாளரை சந்தியுங்கள் என்றாராம். ஏன் என்று கேட்ட பொழுது வெற்றி தன்னம்பிக்கை தரும், மேலும், உங்களை உழைக்க வைக்கும், அடுத்த தலைமுறையினரை உலகம் போற்ற வேண்டும் என்றாராம். குழுத்தலைவர் மூலம் தலைமைப்பண்பு என்ன என்றால் என்ன என்று உலகிற்கு உணர்த்தியவர்.

"கர்மயோகம் தனையே புரியும் முயற்சிக்கென்றுமே அழிவில்லை . அறத்தால் இதனால் தீதும் இல்லை சற்றே புரியினும் வீடுருவாய். தர்மம் தனிலே அதர்மம் தனையும் அதர்மத்தின் கண் வினையினையும் காண்போன் மேலோன் மேதை யோகி அவனே யாவும் துறந்தோனாம் " என்று பகவத் கீதையைப் படித்து அதன்படி வாழ்ந்தவர்.

ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியங்களை அர்ப்பணிப்பாக செய்ய வேண்டும். முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும், பலன் கிடைக்கவில்லை என்றாலும் வினையை செய்ய வேண்டும். செய்யும் செயலில் நேர்மை, தூய்மை, கடைப்பிடிக்க வேண்டும். அதில் அதர்மம் செய்தால் அதனால் ஏற்படும் விளைவை உணர வேண்டும். இதனை உணர்ந்து நேர்மையாக இருப்பவனை மேதை, மேலானவன், யோகி, முற்றும் துறந்தவன். செய்யும் வேலையில் பற்றற்று கடமை ஒன்றே கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த கீதை வரிகள் மூலம் அறிந்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வரும் இதனைப் பின்பற்ற வேண்டும் என அறிவுரை கூறியவர். தோற்றத்தில் எளியவர், பழகுவதற்கு இனியவர், சொல்லில் வல்லவர்.

இந்தியா 2020-ல் வல்லரசாகும் என்று 130 கோடி இந்தியர்களுக்குமாக கனவு கண்டவர். கனவு கண்டது மட்டுமல்லாமல் அதற்கு விஷன் 2020 என்று பெயர் வைத்து, மத்திய அரசுக்கு அதில் வெற்றி காண பல்வேறு திட்டங்களை வகுத்து அளித்தவர். தமிழ்நாட்டிலும் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவி ஏற்ற பொழுது அவர்கள் குழுவினரை அழைத்துவந்து தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய முக்கிய உடனடித் திட்டங்களை விவாதிக்குமாறு அழைக்கப்பட்டவர்.

இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டவர். அதன்பின்னர்தான் ஒரு ஜனாதிபதி இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா? என்று அனைவரையும் வியக்க வைத்தவர். தன் அண்ணன் குடும்பத்தை ராஜ் பவனுக்கு ரயிலில் வரவழைத்து சுற்றிக் காட்டிவிட்டு ஒரு வாரத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டு அவர்கள் சாப்பாட்டிற்கும் ராஜ்பவனுக்கு பணம் கொடுத்த பண்பாளர்.

ஜனாதிபதியாகும் முன்னர் கண் பார்வை குறைபாடு ஏற்பட்ட பொழுது மதுரையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் பொதுப்பிரிவில் மருத்துவ சிகிச்சை எடுத்து அங்கு தரையில் படுத்து உறங்கியவர். இரண்டு நாளில் அவரின் வீட்டிலிருந்து அவரை தேடி வந்த பின்பு அவரின் பதவியும் புகழும் தெரிந்து தலைமை மருத்துவர் ஏன் அப்படி செய்தீர்கள்? என்று கேட்டபோது இங்கு எல்லோருக்கும் ஒரே சிகிச்சை நல்ல சிகிச்சை அளிக்கப்படுவது கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நானே நேரில் உணர்ந்துவிட்டேன். சிகிச்சை சமமாக இருக்கும் பொழுது எதற்கு ஆடம்பரம்? என்று அந்த மருத்துவமனையை வாழ்த்தியவர்.

இன்று புவியின் வெப்பநிலை மாறுபாட்டை இந்தியா முன்னர் இருந்ததை விட 20% முன்னேறி இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அதற்கு கலாம் அவர்களின் ஒரு மனிதன் ஒரு மரம் என்று மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தை சொன்னதோடு மட்டுமல்லாமல் அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர்

ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பின்னர் ஓர் ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக இறுதிவரை இருந்தவர். எந்தத் துறையில் யார் சாதனைகள் செய்தாலும் அவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து அவர்களை பாராட்டி ஊக்குவிக்கத் தவறாதவர், இந்தியாவை உருவாக்க இளம் தலைமுறையினர் ஏற்றவர் என லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளை சந்தித்தவர். அதில் ஒரு குழந்தை நீங்கள் விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஆராய்ச்சியாளர், ஜனாதிபதி, ஆசிரியர் இத்தனை பதவி வகித்து உள்ளீர்கள், உங்களுக்குப் பிடித்தமான பதவி எது? என்று கேட்ட பொழுது தான் எப்பொழுதும் ஒரு ஆசிரியராக இருக்கவே ஆசைப்படுகிறேன் அது பதவி அல்ல பொறுப்பு. ஓர் ஆசிரியராக அனைத்துத் துறையிலும் வல்லுநர்களை உருவாக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறியவர்.

உங்களின் கண்டுபிடிப்புகளில் எது பிடிக்கும் என்று கேட்டபொழுது எல்லா கண்டுபிடிப்புகளும் பிடிக்கும் ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது என்பதை விட மனநிறைவு தந்தது கால்களை இழந்தவர்களுக்கு கனமான மரங்களுக்கு பதிலாக விமானம் தயாரிக்கும் இலகுரக உலோகத்தால் கால்கள் தயாரித்து அதனை உபயோகித்த பிள்ளைகள் மிகவும் எடை குறைவாகவும் நடப்பதற்கு எளிதாக இருப்பதாகவும் கூறிய தருணம்தான் என்று நிறைந்தவர்.

சில கட்சிகளால் கூட்டங்களால் அவர் மறு முறை ஜனாதிபதியாக வர முடியாவிட்டாலும் இன்று கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, ஏழைப் பங்காளி முதல் ஏவுகணை செலுத்தும் விஞ்ஞானி வரை அனைவரும் அனைவரின் நெஞ்சிலும் குடியிருக்கும் நிரந்தர முதல் இந்தியக் குடிமகன்.

இசையை ரசிப்பது, வீணை வாசிப்பதிலும் விற்பன்னர். சாதி மத பேதமின்றி சங்கராச்சாரியார் முதல் ஜக்கிவாசுதேவ் வரை அனைவரிடமும் பழகியவர். மரியாதை கொண்டவர், ஒரு விஞ்ஞானிக்கு ஒட்டுமொத்த இந்தியாவே அழுதது தொழுதது இதுவே முதல் முறை. அவருடைய வாழ்க்கை ஒரு வரலாறு, இறப்பு ஒரு சரித்திரம், செயல் ஒரு சகாப்தம் என நம் எண்ணத்தில், செயலில், என்றும் அவரை நினைவில் நிறுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.

பேரா. ஆர்.காயத்ரி
கல்வியாளர்/ஊடகவியல் ஆலோசகர்
தொடர்புக்கு: r.gayatrisuresh@yahoo.com 

Comments