Wednesday 23 October 2019

பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இருபெரும் நாடுகளான இந்தியா, சீனா ஆகிய இந்த இரண்டு நாடுகளில்தான் மிகப்பெரும் வணிகச் சந்தைகள் உள்ளன. சீன எல்லையில் பதற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் ஏற்படுகிற அமைதி இரண்டு நாடுகளுக்கும் மிகப்பெரிய முன்னேற்றத்தை வழங்கும்.

அதன் அடிப்படையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்கிற வேண்டுகோளை முன்வைத்தார். அதனடிப்படையில், சீன அதிபர், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவிற்கு வருகை தந்தார். இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மாமல்லபுரத்தை தேர்வு செய்தது தமிழகத்துக்கான பெருமையே.

2,000 ஆண்டு பழைமையான வணிக கலாசாரத்தைக் கொண்ட நகரம்தான் மாமல்லபுரம். இந்தியா, சீனா கடல்சார் வணிகத்திற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாமல்லபுரம் கடற்கரை என்பது மிகப்பெரிய துறைமுகமாக இருந்திருக்கிறது. சீன யாத்திரிகர்கள் உள்ளிட்ட வணிகர்கள் வந்து சென்றுள்ள இடத்தில்தான், இன்று இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். சமீபத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்புரிமையை மத்திய அரசு நீக்கியது. சீனா, இந்த விவகாரத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஐ.நா சபையில் பிரச்சனையை கிளப்பியது.

பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீனா சர்வதேச அரங்கில் நடந்து கொண்ட இந்தக் காலகட்டத்தில் சீன அதிபரின் இந்திய வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவிற்கான வருகை உறுதியானவுடன் சீனா, காஷ்மீர் விவகாரத்தில் கொஞ்சம் சுருதிமாறிப் பேசியது. 'இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். பரஸ்பர நம்பிக்கைகளை உண்டாக்கும் வண்ணம் இரண்டு நாடுகளும் செயல்படுவதுதான் உலகத்தின் விருப்பம்' என்று சீனா கருத்து தெரிவித்தது.

சமீபத்தில் சீனாவிற்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தார். இச்சந்திப்பிற்குப் பிறகு நடுநிலைமை என்கிற முடிவிற்கு சீனா வந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது. சீனாவின் இந்த நடுநிலைமை என்பது கிட்டத்தட்ட இந்தியாவிற்குச் சாதகமானதாகவே சர்வதேச சமூகம் கவனிக்கிறது. ஏனென்றால், 2017-ல் சீனா-பூடான் எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீன ராணுவம் ஈடுபட்ட போது இந்தியா கடுமையாக எதிர்த்தது.

சீனா இந்தப் பகுதியில் சாலை வசதிகள் செய்து கொண்டால், சீன ராணுவம் ஆயுதங்களுடன் வந்து கூடாரம் அமைப்பதற்கு வசதியாகிவிடும் என்றாலும், அதைவிட இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்கான பாதைகளும் இந்தப் பகுதிகளில் இருந்துதான் தொடங்குகின்றன என்ற நிலையில், அதன்பிறகான தொடர் பேச்சுவார்த்தை மூலம் டோக்லாம் பகுதி அமைதி மண்டலமாக மாறியது என்பது அண்மை வரலாறு இந்தநிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 8 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

சீன அதிபரை நம் பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வரவேற்றது தமிழக மக்களை உற்று நோக்க வைத்தது. மேலும் இரண்டு நாட்டு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் பேசியதும், அதேபோல தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன் என தமிழில் பதிவு செய்ததும் ஒருபுறம் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

இந்த சந்திப்புக்காக, சுற்றுலா நகரங்களின் ஒன்றான மல்லையின் புதுப்பொலிவு அனைவரின் மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. ஆனாலும், இந்தப் பொலிவு குறையாமல் இருக்கவும் நகரெங்கும் சுத்தமாக இருந்த இருநாள் நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். இவ்வாறே மாமல்லபுரத்தை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் முழு கவனத்தோடு செயலாற்றி பராமரித்தல் வேண்டும். இந்தப் பராமரிப்பு தொடரும் பட்சத்தில் நாடெங்கிலும் இருந்து மட்டுமின்றி உலகின் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வருகை தருவர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால், அரசுக்கும் அங்குள்ள வியாபாரிகளுக்கும் பயன் விளைவிக்கும். எனவே, தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள தமிழகத்தின் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தை அக்கறையுடன் நோக்கி, சீன அதிபரின் வருகையை ஒட்டி உருவாக்கிய சாலை சீரமைப்பு, செயற்கை புல் தளம் போன்ற அம்சங்களை தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இதனால் அனைத்துப் பகுதி சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தரும் வாய்ப்புகள் பெருகும் என்பது திண்ணம்.

No comments:

Popular Posts