Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பதிப்பு துறையின் முன்னோடி தாமோதரம் பிள்ளை..!

பதிப்பு துறையின் முன்னோடி தாமோதரம் பிள்ளை..! தாமோதரம்பிள்ளை சிங்கை கவிதா சோலையப்பன், முதுநிலை பொறியாளர், அபுதாபி. இ ன்று (ஜனவரி 1-ந் தேதி) தமிழறிஞர் சி. வை.தாமோதரம்பிள்ளை நினைவுநாள். தமிழர் வரலாற்றுக்குச் சான்றாய் திகழ்பவை தமிழ் இலக்கியங்கள். தமிழர் என்ற அடையாளம் தந்தவையும் பழந்தமிழ் இலக்கியங்களே. இத்தகைய இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாய் தான் இருந்தன. ஓலைச்சுவடிகளை முதன்முதலில் நூல்களாய் பதிப்பித்து இன்று நம் கைகளுக்கு எளிதாய் கிடைக்கச் செய்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. இன்றைய தமிழ்ச்சமூகத்தில் பெரும்பாலானோர் இப்பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. முறையாக பாதுகாக்கப்படாமல் நீர், நெருப்பு, கரையான் இவற்றால் அழிந்து வந்த தமிழ் இலக்கிய ஏடுகளைப் பதிப்பித்து புதுவாழ்வு தந்தவர் தாமோதரம்பிள்ளை. இன்று தமிழ்த்துறையில் ஆராய்ச்சி செய்வோருக்கு பெரும் துணையாக இருப்பவை இவர் பதிப்பித்த நூல்களே. தமிழ்நூல்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற நோக்கங்களால் தனது வாழ்நாள் முழுமையும் எழுதுவதிலும், பதிப்பிடுவதிலும் ஆர்வம் காட்டினார். தமிழகத்தில் இன்று பதிப்பாளர்கள் ஏராளம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக பதிப்புத்துறையில் வணிகத்திற்காக அல்லாமல் தமிழ்மீது தான் கொண்ட அன்பால் தமிழ் நூல்களைப் பதிப்பித்த முதல்வர். இவர் அப்பணியை அன்று செய்து கொடுக்கவில்லை என்றால் எத்துணையோ நூல்கள் செல்லுக்கும், பிற அழிவுக்கும் இரையாகி அழிந்திருக்கும். அதனால் இவரின் தொண்டு தமிழும், தமிழரும் இருக்கும் வரை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். சி.வை.தாமோதரம்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சிறுபட்டி என்ற ஊரில் வைரவநாத பிள்ளை, பெருந்தேவிஅம்மாள் ஆகியோருக்கு மகனாக 1832-ல் பிறந்தார். பன்னிரண்டு வயதிலேயே தமிழில் சில இலக்கண, இலக்கிய நூல்களைத் தனது தந்தையிடம் கற்றுக்கொண்டார். பின்னர் கவிராயர் முத்துகுமாரரிடம் இலக்கண, இலக்கியங்களை முறையாக படித்தார். மொழிப்பற்று இல்லாத மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன என கேள்விகணைகளைத் தொடுத்தவர். 1853-ல் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணியாற்றிய போது, தனது இருபதாம் வயதிலேயே “நீதிநெறிவிளக்கம்” என்ற நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு தமிழ் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். அதே ஆண்டு தினவர்த்தமானி என்ற தமிழ் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்க தாமோதரம்பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்பிற்கு உடன்பட்டு சென்னை வந்தார். ஆங்கிலேயர் பலருக்கு தமிழ்மொழி கற்றுக்கொடுத்தார். ஏடுகளைத் தேடி இரவு பகல் பாராமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். தேடுதலில் கிடைக்கும் ஓலைச்சுவடிகள், எடுக்கும் போதே ஓரம் ஒடிந்து விழும்; கட்டைஅவிழ்க்கும் போதே துண்டு துண்டாய் கொட்டும்; இன்னும் எழுத்துக்கள் பாதி அழிந்தும் பாடல்கள் வரிசையின்றியும் இருக்கும். தமிழ் நம்தாய் அவள் உருக்குலைந்து அழிகின்ற போது நமக்கு என்ன என்று நாம் இருக்கமுடியாது என்றார். இப்படி சிதைவுற்ற ஓலைச்சுவடிகளைப் பிரித்து எடுத்து காகிதத்தில் அச்சிடுவது அவ்வளவு எளிமையாான செயல் இல்லை. முதலில் ஏடுகளை மிக கவனத்துடன் பிரித்தெடுக்க வேண்டும்; பின் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்கும் அவற்றை முறைப்படுத்தி விளக்குவதற்கும் தனித்திறன் வேண்டும். அத்தகைய திறமையும், புலமையும் கொண்டிருந்தார் தாமோதரனார். 19-ம் நூற்றாண்டு ஐரோப்பியரின் தாக்கத்தால் உரைநடை வளர்ச்சிப் பெற்று செய்யுள் வடிவம் குறைந்திருந்த காலம். தமிழ் இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறியாமல் இருந்த காலம் அது. அக்காலத்தில் செய்யுள் வடிவிலான ஏடுகளைப் படித்து ஆய்வு செய்யும் போது தாமோதரம் பிள்ளைக்கு சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அவற்றைத் தீர்க்கத் தக்கவர் இல்லாமல் வருந்தி மனஉளைச்சலால் உணவின்றி உறக்கமின்றி இருப்பாராம். சென்னை அரசினர் மாநில கல்லூரியில் தமிழ் அறிஞராக சிலகாலம் பணியாற்றினார். பின்னர் சென்னைப்பல்கலைக்கழகம் நிறுவப்பெற்று 1858-ல் நடத்திய பி.ஏ. தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவராக பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1868-ம் ஆண்டு தனது முப்பத்தாறாம் வயதில் தொல்காப்பியச் சொல்அதிகாரத்திற்கு சேனாவரையர் உரையைப் பதிப்பித்து வெளியிட்டார். பாண்டிய மன்னன் கைகளுக்கு கிடைக்காமல் இழந்ததாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தனது கடும் உழைப்பினால் கண்டுபிடித்து, ஆராய்ந்து, பதிப்பித்து வெளியிட்டார். இவரின் இலக்கிய மீள்கண்டுபிடிப்புத் தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை உணர்வினை வழங்கியது. ஈழத்து ஆறுமுகநாவலரின் வழிகாட்டுதலால் தொடர்ந்து பதிப்புப்பணியைச் சிறப்புடன் செய்து வந்தார். வீரசோழியம் (1881), திருத்தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள், நச்சினார்க்கினியாரின் தொல்காப்பிய எழுத்து, பொருள் அதிகாரங்களுக்கான உரைகள், கலித்தொகை, இலக்கணவிளக்கம் ஆகிய பழமையான நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார். 1871-ல் சட்டம் பயின்று கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 1884-ம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தொடங்கிய இப்பதிப்பு முயற்சியால் பண்டைய இலக்கியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணரப்பட்டன. 1887-ல் உ.வே.சாமிநாதையருக்கு சீவகசிந்தாமணி ஏடுகளைக்கொடுத்து பதிப்பிட உதவினார். பதிப்புத்துறையில் நாட்டம் செலுத்தியதோடு நூல்கள் பலவும் எழுதி வெளியிட்டார். கட்டளைக்கலித்துறை, சைவமகத்துவம், சூளாமணிவசனம், நட்சத்திரமாலை ஆகிய நூல்களையும். காந்தமலர் அல்லது கற்பின்மாட்சி என்ற நாவலையும் இயற்றி வெளியிட்டார். 1896-ல் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி, சுலோசனை என்ற இரண்டு நாடகங்களின் ஒரு பகுதியைச் சென்னை பல்கலைக்கழக பாடமாக அமைத்திட சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறையில் அனுமதி பெற்றுத் தந்தார். தமிழ் நாடக நூல் ஒன்றைப் பல்கலைக்கழக பாடமாக வைத்தது அதுவே முதல்முறை. இவரின் அரும்பணியால் இலக்கியப்படைப்புகள் அழிக்கப்பட முடியாதவைகளாயின. தனது அரும் பெரும் தமிழ்த் தொண்டினால் பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களின் பாராட்டினையும் பெற்றார். தமிழுக்கும், தமிழருக்கும் நலன்கள் பல செய்து பதிப்புத்துறைச் செம்மல் எனப்புகழ் பெற்ற தாமோதரம்பிள்ளை 1-1-1901 அன்று சென்னையில் காலமானார். அவர் மறைந்தாலும் அவர் தமிழருக்கு அருளிச்சென்ற செல்வக்களஞ்சியங்களான இலக்கிய நூல்கள் என்றும் மறையாதவை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement