Monday, 31 December 2018

புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்!

புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்! முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ். காவல்துறை கூடுதல் இயக்குனர். டி சம்பர் 31 நள்ளிரவு ஒரு ஆண்டு நமது வயதுடன் சேர்ந்து விடுகிறது. ஒரு வயது அதிகமாகி விட்டது என்ற கவலை ஏற்பட்டாலும், இன்றைய நாள் நாம் உயிரோடு இருக்கும் மீதி காலத்தின் மிக இளமையான நாள். புத்தாண்டின் முதல் நாளன்று புது சபதங்கள் எடுப்பதும், அதன்படி சில நாட்கள் மட்டும் நடந்துகொள்வதும் வாடிக்கையானது. அதுபோல இந்த ஆண்டு முடியும் தருவாயில், வருகிற புத்தாண்டில் புதிதாக என்ன செய்யலாம்? எந்தெந்த பழக்கங்களை கைவிடலாம்? என்ற சிந்தனையில் இருக்கிறோம். புத்தாண்டு தினத்தில் செய்ய நினைத்தவற்றை தவறாமல் செய்து முடிக்க வேண்டும். இப்படியாக 365 நாட்களும் கடைபிடித்தால் அவை பழக்கம் ஆகிவிடும். அதுவே நற்குணமும் ஆகிவிடும். அதுவே வாழ்க்கையும் ஆகிவிடும். செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை என்றாலும் கூட காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுங்கள். மிகக்கடினம் என்று நீங்கள் நினைத்த ஒரு செயலை காலை 5 மணி முதல் மாலை 7 மணிக்குள் செய்து முடியுங்கள். மாணவர்களே, பிடிக்காத ஒரு பாடத்தை ஒரு முறையாவது வாசியுங்கள். ஒன்றும் புரியவில்லை என்றாலும் வாசித்துவிடுங்கள். தினமும் காலையில் செய்தித்தாள் படியுங்கள். மாணவர் என்றால், ஒரு ஆங்கில பத்திரிகையையும் படியுங்கள். தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளுங்கள். செய்திகளை படித்து உணர்ந்து சிந்தியுங்கள், சிரியுங்கள், அழுங்கள், கோபப்படுங்கள். எடுத்துக்காட்டாக ஊழல் புரிபவர்கள் மீதும், மக்களை ஏமாற்றுபவர்கள் மீதும் சினம் கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரமாவது ஓடுங்கள் அல்லது சைக்கிள் ஓட்டுங்கள். வரும் ஆண்டில் ஒரு மாரத்தான் ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள். இது உங்கள் ஆளுமையை முற்றிலுமாக மாற்றும். டாக்டரிடம் சென்று உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏதேனும் பெரிய நோய் இருப்பது தெரிந்து விடுமோ என்ற கவலையை விடுங்கள். ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தால் எந்த நோயையும் குணப்படுத்தலாம். அலட்சியமாக இருந்து நோய் முற்றினால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது. நம்மிடம் என்ன திறமை இருக்கிறது? என்ன குறைபாடு இருக்கிறது? என்பதை சுயபரிசோதனை செய்து பாருங்கள். பாட முடியும் என்றால் பாடகராகவும், பேச முடியும் என்றால் பேச்சாளராகவும், எழுத முடியும் என்றால் எழுத்தாளராகவும் பயிற்சி எடுங்கள். இல்லாத திறமைகளை எண்ணி வருந்தாதீர்கள். அதை விட்டு விடுங்கள். ஒரு இளைஞன் பல துறைகளில் சாதனை படைக்க வேண்டும். எனவே உடல்நலம், மனநலம், கல்வி, பணி, வருமானம், மனித உறவு, எதிர்கால நம்பிக்கை, வாழ்நாள் சாதனை என்று எட்டு துறையிலும் இலக்கை நிர்ணயியுங்கள், புத்தாண்டில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் எழுதுங்கள். சிகரெட், மதுபோதை பழக்கத்தை உடனே விட்டு விடுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக விடுகிறேன் என்று சமாதானம் செய்து கொள்ளக்கூடாது. கைப்பேசியை அடிக்கடி திறந்து பார்ப்பதை முற்றிலும் நிறுத்த முடியவில்லை என்றால் பெருமளவு குறைத்து கொள்ளுங்கள். நம்மிடம் பேசுபவர்களிடம் அன்பாக பேசவும், நம்மை பார்க்க வருபவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளவும் முயற்சி செய்யுங்கள். கோபப்படுவது, எரிச்சல் அடைவது, மனச்சோர்வடைவது, மற்றவர்களை இழிவுபடுத்துவது போன்ற பழக்கங்களை கைவிடுங்கள். தன்னார்வ தொண்டு செய்ய முற்படுங்கள், அதனால் சிலருக்கு உதவ முடியும். வேலையில் மும்முரமாக இருப்பவர்கள் வீட்டில் இன்னும் அதிக நேரத்தை செலவு செய்யலாம். வீட்டை நாமாக சுத்தம் செய்யலாம். தேவையற்ற பொருட்களை வெளியேற்றி விடலாம். புத்தகங்களை அடுக்கி வைக்கலாம். ஒவ்வொரு பொருளையும் அதற்கான இடத்தில் கொண்டு போய் வைக்கலாம். சமையல் கற்றுக்கொள்ளலாம். பிற்காலத்தில் நமக்கான உணவை நாமே தயாரித்து கொள்ள அது உதவும். இதுவரை போகாத ஒரு ஊருக்கு இந்த புத்தாண்டில் சென்று வாருங்கள். ஓரளவுக்கு பொருளாதார வசதி உண்டு என்றால் ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காக், நார்வே, ஸ்வீடன் போன்ற ஒரு வளர்ந்த நாட்டிற்கு சென்று வாருங்கள். இதனால் உங்கள் உலகம் விரிவடையும். ரோல்மாடல் என்றும், புனிதமானவர் என்றும், ஞானி என்றும், யோகி என்றும் யாரும் இங்கு இல்லை. எல்லோருமே உங்களை போன்ற மனிதர்கள்தான். எனவே வரும் ஆண்டு எவர் காலிலும் போய் விழாதீர்கள். எந்த சூழ்நிலையிலும் சுயகவுரவமும், தன்மானமும் உள்ள மனிதனாக தலை நிமிர்ந்து நில்லுங்கள். நீங்கள் உங்களுக்காக வாழ்வது மட்டுமின்றி சமூகத்திற்காகவும், பிறரின் நலனுக்காகவும் வாழ முற்படுங்கள். நேர்மையாக வாழ ஆர்வம் காட்டுங்கள். லஞ்சம் வாங்காதீர்கள். உடல் தூய்மை, வீட்டில் தூய்மை, தெருவில் தூய்மை என்று தூய்மையை கடைபிடியுங்கள். நாம் அனைவரும் தூய்மையானால் நாடே தூய்மையாகும். நீங்கள் செய்யும் பணியை உலக தரத்துடன் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் வேலையின் தரத்தை உயர்த்த உங்களால் மட்டுமே முடியும். ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை போதும். இந்தியாவில் தான் அதிக குழந்தைகள் இருக்கின்றன. இன்னும் அதிக குழந்தைகளை பராமரிக்க தேவையான பொருளாதார வளம் இந்த நாட்டில் நிச்சயமாக இல்லை. ஓரளவுக்கு பொருளாதார வசதி வந்த பிறகு ஒரு ஏழை குழந்தையையாவது படிக்க வையுங்கள். வரும் ஆண்டில் புதியதாய் பிறந்து வாருங்கள். இந்த புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் நல்வாழ்க்கையை கொண்டு வரட்டும்.

No comments:

Popular Posts