Tuesday 13 February 2018

மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா?

மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைகள் முடிவுக்கு வருமா? | டெல்லியில் உள்ள ஒரு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் எம்.டி. படித்துவந்த திருப்பூர் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரத்பிரபு, கடந்த மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி குடிகாட்டை சேர்ந்த சுந்தரவேல் என்ற மருத்துவ மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதே போல கடந்த 2016-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சரவணன் என்ற மாணவரும், 2017-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துகிருஷ்ணன் என்ற மாணவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவ்வாறு, மருத்துவ மாணவர்கள் மர்ம மரணம் அடைவதும், தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவ மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு காரணம் என்ன? அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 8 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. கல்லூரிகள் இருந்த மாவட்டத்தை சுற்றி இருந்த பகுதி மாணவர்கள் அங்கேயே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து சென்றனர். இது மாணவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. உறவுகள் மேம்பட்டன. இன்று 23 அரசு மருத்துவ கல்லூரிகள் வந்துவிட்டன. தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் சென்னையிலோ, பிற இடங்களிலோ சேரக்கூடிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவன் குடும்பத்தை விட்டு, பெற்றோரை பிரிந்து புதிய சூழ்நிலையில் கல்லூரியில் சென்று சேருகிறான். கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவன் கல்லூரி பேராசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நகர்ப்புற மாணவர்களை போல ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மனஉளைச் சலுக்கு ஆளாகிறான். 2-வது ஆண்டு படிக்கும்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்போது 10 மாணவர்கள் செல்வர். இவர்களில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். அவர்களின் நாகரிக மோகத்தில் மூழ்கி, சினிமா நடன கிளப் போன்றவற்றுக்கு செல்வதுண்டு. சிலர் மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பர். இது ஒருபுறமிருக்க படிப்பின் சுமையும் அதிகமாகிறது. பெற்றோரை பிரிந்து இருக்கும்போது சூழ்நிலைக்கேற்ப தங்களை வசப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் மனஉளைச்சல் ஏற்படுகிறது. தற்கொலை செய்யும் விபரீத எண்ணத்தை தூண்டிவிடுகிறது. பெண்கள் ஆடைகள் அணியும் முறையில் ஏற்பட்ட மாற்றம் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்துவிடுகிறது. இதனால் காதல் மோகத்தில் சிக்கி, அது கைகூடாத பட்சத்தில் தற்கொலை முடிவுக்கு வந்துவிடுகின்றனர். நொடிப்பொழுதில் செய்தியை கொண்டு சேர்க்கும் வாட்ஸ்அப் யுகத்தில் காதலும், காதல் முறிவும் இயல்பானதுதான். இதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில், ஏன் இந்தியா முழுவதும் பல இடங்களிலும் நிலவும் சாதி பாகுபாடும் நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. இதுவும் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. இதன் பாதிப்பு சற்று குறைந்துவிட்டது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் ஏழ்மையால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை மனஉளைச்சலை கொண்டு வரத்தான் செய்கிறது. இதனால் மனம் நொந்து மடிந்தவர்களும் உண்டு. ஆனால் எதிலும் எதிர்த்து நின்றால் வெற்றியே. அதே போல, ஆசிரியர், ஆசிரியைகளின் பாரபட்சமான போக்கும் நிச்சயம் மாணவ, மாணவிகளுக்கு மன உளைச்சலை கொடுக்கும் வாய்ப்பு அதிகம். முறையாக கல்வி பயின்று சிறப்பாக சொல்லிக்கொடுக்கும் பல ஆசிரியர்களுக்கு நடுவில் ஒட்டி இருக்கும் அரை வேக்காடுகளும் அதிகம். அதனால் மாணவ, மாணவியர் புத்தகம் ஒன்றையே துணையாகக் கொண்டு புரிந்தும், புரியாமலும் பாடத்தை படித்து காலத்தை கடத்துகிறார்கள். தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் போதுமான அளவுக்கு பணியமர்த்தப்பட வேண்டும். அரசு கல்லூரிகள், ஒரு சில தனியார் கல்லூரிகள் நிலைமை மோசமாக இருக்கிறது. மாணவர்கள், மாணவியர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவ ஆசிரியருக்கும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். பணியில் அர்ப்பணிப்பு இல்லாத மருத்துவ ஆசிரியர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். வகுப்பு எடுக்காமல் டிமிக்கி கொடுப்பவர்கள், மாணவர்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கல்லூரியில் முதல்வராக வருபவர்கள் அவசியமாக அரசு உதவிப்பணத்தை விரைவில் தாமதமின்றி மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். விடுதிகளுக்கு அடிக்கடி திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு இருக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்துகொடுக்க வேண்டும். மாணவ, மாணவியரின் திறமைகளை வெளிக்கொணர்வது போன்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், பட்டி மன்றங்கள் நடத்த வேண்டும். உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் அதிக எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டு, மாணவ-மாணவிகளை குழுக்களாக சந்திக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை மன ரீதியாக பலப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதா? அல்லது மேலும் பணம் கேட்டு துன்புறுத்துகிறார்களா? என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், இது நாள் வரை நடந்த மருத்து மாணவ, மாணவியரின் தற்கொலைகள், மர்ம மரணங்களை விஞ்ஞானப்பூர்வமாக அணுக வேண்டும். மாணவர்களின் தற்கொலைகளுக்கான உண்மையான காரணங்களை பட்டியலிட்டு, மீண்டும் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். | டாக்டர் ஏ.ஜேசுதாஸ்

No comments:

Popular Posts