கரோனா காலத்தில் மனிதநேயமும் தன்னம்பிக்கையும் : சில நெகிழ்ச்சியான நிகழ்வுகள்
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து மரண ஓலம் கேட்கும் சூழலில், அசாதாரணமான காலங்களிலும் மனிதநேயம் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதற்குச் சில நிகழ்வுகள் சான்று.
தனிமைப்படுத்தல், கிருமிநாசினி - ஒரு தாயின் தன்னம்பிக்கை
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த ஒரு தாய், தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ‘குவாரண்டைன்’, ‘சானிடைசர்’ என்று பெயரிட்டுள்ளார். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்த்து மனிதர்களைப் பாதுகாக்கும் காவலர்களாக தனிமைப்படுத்தலும், கிருமிநாசினியும் விளங்குவதால், அந்தப் பெயர்களைச் சூட்டியதாக அவர் கூறுகிறார். இது, பேரிடர் காலங்களில் மனிதர்கள் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
சிறுமி அபியின் ஈகை
பொது முடக்க காலத்தில், அரசியல் இயக்கத்தினரையும் கடந்து, சாதாரணமானோர் தெருவோரத்தில் வசிப்போருக்கும், புலம்பெயர்ந்தோருக்கும், வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர். இதில், அரியலூர் கீழக்காவட்டாங்குறிச்சிக்கு அருகே உள்ள குந்தபுரத்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் அபி (11) என்ற சிறுமியின் உதவி குறிப்பிடத்தக்கது. விபத்தொன்றில் தந்தையை இழந்த சிரமமான நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3,000-ஐக் கொண்டு, தன் கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெருக மூலிகைச் சாறு செய்து கொடுத்துள்ளார்.
ஓட்டுநரின் மனிதநேயம்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் லால்டா பிரசாத்தின் கார் ஓட்டுநரான அனில், பொது முடக்க காலத்தில் தெருவில் வசிப்போருக்கு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்து வந்துள்ளார். ஒரு பாலத்தின் அருகே தினமும் உணவுக்காகக் காத்திருந்த நீலம் என்ற பெண்ணிடம் பேசியபோது, அவர் அண்ணன், அண்ணியால் விரட்டப்பட்டு, தாய் பக்கவாதத்தால் முடங்கியுள்ள துயரக் கதை அனிலுக்குத் தெரியவந்தது. மனம் வருந்திய அனில், அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் அவரைத் திருமணம் செய்துகொண்டார். சொந்த வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டாலும், கரோனா காலத்தில் மனிதநேயம் அவருக்கு ஒரு புதிய கதவைத் திறந்துள்ளது.
தன்னம்பிக்கை அளிக்கும் இரு நிகழ்வுகள்
கரோனா பாதிப்பிலிருந்து 80 வயதைக் கடந்தவர்கள் மீண்டு வருவது நம்பிக்கை அளிப்பது போன்றே, மனிதர்கள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை அளிக்கும் மேலும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் உள்ளன.
- மகளின் மாபெரும் பயணம்:பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதிகுமாரி. ஹரியானா மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஓட்டி விபத்துக்குள்ளான தன் தந்தை மோகன் பாஸ்வானைக் கவனித்து வந்துள்ளார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், கையில் இருந்த பணம் தீர்ந்த நிலையில், ரூ.500-க்கு பழைய சைக்கிளை வாங்கி, தந்தையைப் பின்னால் கேரியரில் அமரவைத்து, சுமார் 1,200 கி.மீ. தூரத்தை 7 நாள்களில் கடந்து சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளார். இச்சாதனையை அறிந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், இது 'அன்பும், துன்பத்தைத் தாங்கும் மனதைரியமும் கொண்ட அழகான சாதனை' என்று பாராட்டினார்.
- தாயின் அசாத்தியப் பயணம்:இரண்டு மகன்களின் தாயும், ஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமையாசிரியையுமான 48 வயது ரஸியா பேகம், பொது முடக்கம் காரணமாக நெல்லூரில் நண்பன் வீட்டில் சிக்கிக்கொண்ட தன் இரண்டாவது மகன் நிஜாமுதீனை அழைத்து வரத் துணிந்தார். காவல் துறை அச்சத்தால் மூத்த மகனை அனுப்பாமல், தானே ஸ்கூட்டரில் புறப்பட்டு, இரவு பகல் பாராமல் மூன்று நாள்கள் தொடர்ந்து 1,400 கி.மீ. பயணித்து மகனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.


0 Comments