உலகம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், வெட்டுக்கிளிகளின் திரள் உலக உணவுப் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கி வருகிறது. கரோனா அச்சம் நீங்குவதற்குள், விவசாய நிலங்களை அழிக்கும் நோக்கத்துடன் வெட்டுக்கிளிகள் பெரும் படையெனப் பறந்து வருகின்றன. விவசாயிகளின் நண்பனாக மண்புழுக்கள் கருதப்படுவது போல, வெட்டுக்கிளிகள் விவசாயிகளின் மோசமான எதிரியாகப் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகின்றன. கென்யா, சோமாலியா, உகாண்டா, தென் சூடான், ஏமன் போன்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் கடந்த டிசம்பர் முதல் இவற்றின் தாக்குதலால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் தாக்கம்
ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வெட்டுக்கிளிகள் விரைவிலேயே இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சேதத்தை ஏற்படுத்துமென ஐ.நா.வின் உணவு - பாதுகாப்பு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்திருந்தது. ஐ.நா.வின் எச்சரிக்கையைப் போலவே, இந்த ஆண்டு இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது.
வெட்டுக்கிளிகள் பற்றிய தகவல்கள்
வெட்டுக்கிளிகள் கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். இவற்றில் பல இனங்கள் உள்ளன. இளம் வெட்டுக்கிளிகள் இயற்கையைப் போன்ற பச்சை, பழுப்பு நிறத்தில் இருக்கும். வளர்ந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பயணிக்கும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் எட்டு கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். பொதுவாக ஆசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சஹாராவின் எல்லைகள், இந்திய - மலாய் தீவு, நியூசிலாந்து, கஜகஸ்தான், சைபீரியா, மடகாஸ்கர் ஆகிய பகுதிகளில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் வடமாநிலங்களில் இவற்றின் பெருக்கம் அதிகம். வறட்சி, வெப்பமான பகுதிகளை விரும்புவதால், பாலைவனங்கள் மற்றும் உலர்ந்த படிவங்களில் வசிக்கின்றன என்று பூச்சியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சில வெட்டுக்கிளி வகைகள் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் திறன் கொண்டவை.
வெட்டுக்கிளிகளின் இயல்பு மற்றும் அழிக்கும் திறன்
பூச்சியினங்களின் பழக்கவழக்கங்கள் அவற்றின் மரபுரிமை சார்ந்த இயல்புணர்ச்சியைப் பொருத்தே அமைகின்றன. இது இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய ஒரு வகை அறிவுத் திறன். வெட்டுக்கிளிகள், தேனீக்கள், எறும்புகள் போன்ற பூச்சியினங்களில் இந்த இயல்புணர்ச்சி அதிகமாகக் காணப்படுவதாக உலக பூச்சியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சாந்தமான பூச்சியாகக் கருதப்பட்டாலும், வெட்டுக்கிளி தினமும் தனது எடையளவு உணவைச் சாப்பிடும் திறன் கொண்டது. உணவு தானியங்களை அழித்து, மக்களுக்கு மரண தண்டனையை வழங்கும் என விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று நிகழ்வுகளாக, 1880-ஆம் ஆண்டு ரஷ்யாவின் தெற்குப் பிரதேச மக்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு அஞ்சிப் பல நாட்கள் பொது முடக்கத்தில் இருந்தனர். 1955-ஆம் ஆண்டில் மொராக்கோவில் வந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தின் அகலம் 20 கி.மீ. வரை பரவி, போர்க்கால அடிப்படையில் 1,000 சதுர கி.மீ. பரப்பில் இருந்த பயிர்களை அழித்ததாகக் கூறப்படுகிறது.
வெட்டுக்கிளிகள் நாள் ஒன்றுக்கு நூறு கி.மீ.-க்கு மேல் பயணம் செய்யும் திறன் கொண்டவை. உணவு கிடைக்காதபோது, வீட்டின் ஓலைக் கூரைகளைக்கூட அரித்துச் சாப்பிடும் அளவுக்கு அகோரப் பசி கொண்டவை. இவற்றின் ஆயுட்காலம் 6 முதல் 8 வாரங்கள் மட்டுமே. இந்தச் சிறு காலத்திற்குள் மூன்று முறை முட்டையிட்டுப் பல்லாயிரம் மடங்காகத் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ளும். அறுவடைக்குத் தயாராக உள்ள விளைநிலங்களை காற்றின் மூலம் கண்டறிந்து அந்தத் திசையில் படையெடுக்கின்றன. 'லோகஸ்ட்' எனப்படும் வெட்டுக்கிளிகள்தான் பெரும் கூட்டமாகப் பறந்து, ஒரு வயலையோ, ஒரு பெரிய பசுமைப் பரப்பையோ ஒரே நேரத்தில் முழுவதுமாக அழிக்கும் ஆற்றல் கொண்டவை. உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்த இந்த வகையான வெட்டுக்கிளிகளே போதும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
தற்போது இந்தியாவிலும் முகாமிட்டுள்ள இந்த வகையான வெட்டுக்கிளிகள், விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி, உணவுப் பஞ்சம் ஏற்படுமோ என்ற அச்சத்தை உருவாக்கி வருகின்றன. பாலைவனப் பகுதியை ஒட்டிய ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெருமளவில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பின்போது ஒரு சதுர கி.மீ. பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களைச் சாப்பிடும் என்றும், இது 35,000 மனிதர்கள் ஒரு நாளில் சாப்பிடும் உணவுக்குச் சமம் என்றும் பூச்சியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இப்போது மோசமாக உள்ளது. பாகிஸ்தானில் இருந்து படையெடுத்து வந்த இவற்றின் தாக்கம் இதுவரை பெரும்பாலும் வடமேற்கு மாநிலங்களில்தான் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 2019 மே மாதம் ராஜஸ்தானில் தொடங்கிய இந்த வெட்டுக்கிளி படையெடுப்பு, பிப்ரவரி வரை தொடர்ந்தது. அங்கு 6,70,000 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்ததால், ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்திலும் அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், குஜராத்தில் 2 மாவட்டங்கள், பஞ்சாபில் ஒரு மாவட்டம் எனப் பல இடங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்துக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றைப் போன்று மாநில அரசை பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் உதகமண்டலத்தில் வெட்டுக்கிளிகள் காணப்பட்டதாக விவசாயிகள் புகாா் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நீலகிரி மாவட்டத்துக்குச் செல்ல உள்ளனர். வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று வேளாண் துறை முதலில் கூறியிருந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு பகுதி வழியாக வந்த வெட்டுக்கிளி உதகமண்டலத்தில் காணப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இது குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
இந்த இயற்கைப் பேரழிவைச் சமாளிப்பதற்கான தடுப்பு முறைகள் இதுவரை முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். பயிர்களின் மீதான தாக்குதலைச் சமாளிக்க, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும், மாலத்தியான் மருந்தை மிக பெரிய தெளிப்பான்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்கலாம் என்றும் வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். விரைவில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து ரசாயனம் தூவி வெட்டுக்கிளிகளை அழிக்க மத்திய அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
வெட்டுக்கிளிகளின் பெருக்கத்திற்குக் காரணம்
இப்போது இந்த வெட்டுக்கிளிகளை அழிக்கவில்லையென்றால், அவை 400 மடங்கு அளவில் பெருகி உலக நாடுகளின் பயிர்களைத் தாக்கும் என உலக பூச்சியியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தப் பெருக்கத்துக்கும் தாக்குதலுக்கும் புவிவெப்பமும், பருவநிலை மாற்றமும்தான் காரணம் என புவியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையோடு இயைந்து வாழாமல், இயற்கையோடு மனிதன் போரிடத் துணிந்ததால் இந்த வெட்டுக்கிளியின் பெருக்கம் அதிகரித்து, அதன் படையெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


0 Comments