கரோனா தீநுண்மி நோய்த்தொற்று, அவிழ்த்துவிட்ட பாசிமணிகள் போல உலகெங்கும் பரவிவிட்டது. சென்னை உட்பட சில இடங்களில் நோய்த்தொற்று அதிகரித்தாலும், பெரும்பாலான இடங்களில் நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். இச்சூழலில், நமது அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த தொலைநோக்குப் பார்வை அவசியம்.
முக்கியப் பிரச்னைகள்:
கரோனா பாதிப்பால் பூதாகரமாக உருவெடுத்துள்ள பிரச்னைகள் பின்வருமாறு:
- வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோர்.
- மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
- அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்.
எந்தப் பேரிடர் நிகழ்ந்தாலும் இவர்களே அதிகமாகப் பாதிக்கப்படுவோர்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சீர்திருத்தம்:
வெளிநாடுகளுக்கு நமது இளைஞர்கள் ஏன் செல்கிறார்கள்?
- நம் கல்வி, அறிவுத் தேடலை, ஆராய்ச்சிக்கு வாய்ப்பளித்து, திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இல்லை.
- கல்வி கற்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை.
- வசதி படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே கல்வித் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.
அரசின் கடமை:
- மாணவர்கள் நம் நாட்டிலேயே படிக்குமாறு ஈர்க்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
- கல்வி வெறும் ஏட்டளவில் இல்லாமல், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
- உயர்கல்விப் படிப்பிலிருந்து வெளியேறும் எந்தக் கட்டத்திலும், அவர்களின் படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
- அதிக அளவில் படித்தவர்கள் இடம்பெயரும் துறைகளில் அரசு கவனம் செலுத்தி, வேலைவாய்ப்புடன் கூடிய பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.
இந்த மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்வது அல்ல. இதற்குத் தொலைநோக்குப் பார்வை, தெளிவான திட்டமிடல், போதுமான பொருட்செலவு, விரிவான கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி நிறுவனங்கள், திறமையான ஆசிரியர்கள் மற்றும் அறிவார்ந்த சுவாரசியமான நூல்கள் அவசியம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அந்நியச் செலாவணி:
- திறன்சார் தொழிலாளர்களான கொத்தனார், எலெக்ட்ரீஷியன் போன்றோர் அரபு நாடுகளுக்கும், கணினி மென்பொறியாளர்கள், மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்கள் போன்றோர் மேலைநாடுகளுக்கும் செல்கின்றனர்.
- இவர்கள் அங்கிருந்து அனுப்பும் அந்நியச் செலாவணி, நமது இருப்பை அதிகரிக்கிறது.
- சீனாவைப் போல, வெளிநாடுகளில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அடையாளம் கண்டு, அவர்களை அனுப்புவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
உள்நாட்டுப் புலம்பெயர்வு கட்டுப்பாடு:
- சீனர்கள் வெளிநாடுகளில் குடியேறினாலும் தாய்மொழியையும், தாய்நாட்டுத் தொடர்பையும் விடுவதில்லை. சீன அரசு இதில் கவனமாக இருக்கிறது.
- ஒவ்வொரு ஊரிலும், மாநிலத்திலும், அந்த மண்ணின் சூழலுக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவுக்குள் புலம்பெயர்வதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கான திட்டமிடுதலை அரசு இப்போதே தொடங்க வேண்டும்.
அமைப்புசாராத் தொழிலாளர்கள் மேலாண்மை:
- வீட்டு வேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், தினக்கூலி வாங்குபவர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்கள் பொது முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
- அரசு நிவாரணம் வழங்கியபோது, சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. நிவாரணப் பணிகளை அரசு இயந்திரம் மட்டுமே முறைப்படுத்திச் செய்திருக்க வேண்டும்.
- இதற்கு, மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தோர், அமைப்புசாராத் தொழிலாளர்கள் அனைவரின் துல்லியமான விவரங்கள் ஒவ்வொரு மாநில அரசிடமும் இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு இதைச் சாத்தியப்படுத்தலாம்.
பொது முடக்கத்தின்போது ஏற்பட்ட குழப்பங்கள்:
- பொது முடக்கம் அறிவித்தவுடன் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுத்த புலம்பெயர்ந்தோரின் விவரங்கள் இருந்திருந்தால், நிலைமையை எளிதில் கையாண்டிருக்கலாம்.
- அவர்களை அங்கேயே திருமண மண்டபங்களில் தங்க வைத்து, உணவு மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்திருக்கலாம்.
- மாறாக, மக்களை இடம் மாற அனுமதித்துவிட்டு, பிறகு தேடிப் பிடித்தது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்ற செயலானது.
வேளாண் துறையில் சீர்திருத்தம் அவசியம்:
- வேளாண் துறையின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்த முடியாது.
- கடும் பாதுகாப்பு விதிகளுடன் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி, முன்னுரிமையின் அடிப்படையில் வேலைகளைச் செய்திருக்க வேண்டும்.
- விளைபொருள்கள் வீணாகாமல் இருக்க, அரசு அவற்றை உடனடியாகக் கொள்முதல் செய்து பாதுகாப்பாகக் கிடங்குகளில் வைத்திருக்க வேண்டும்.
- இதற்குப் போதுமான கிடங்குகள், பதப்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் பின்தங்கியுள்ளது.
- குறைந்த நபர்கள் பலத்துடன், அதிக இயந்திரங்களின் உதவியோடு வேலைகள் நடந்தால் விவசாயிகளைப் பொது முடக்கம் பாதித்திருக்காது.
நாட்டின் வாழ்வாதாரம்:
- மற்ற துறைகளில் உற்பத்தி குறைந்தால் மெதுவாக முன்னேறலாம். ஆனால், உணவு உற்பத்தி குறைவதும், பகிர்மானம் தடைபடுவதும் வரும் ஆண்டுகளில் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
- அரசும் மக்களும் இணைந்து செயல்பட்டால் எத்தகைய பேரிடரையும் சமாளிக்கலாம்.
அரசு இயந்திரத்தின் செயல்பாடு:
- நம் நாட்டின் பலவீனமான மக்கள் தொகையை, சீனாவைப் போல நாமும் பலமாக மாற்றி நாட்டு நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
- கரோனா காலத்தில் அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டன. மற்ற நாள்களில் இந்தப் பணியாளர்கள் ஏன் இவ்வளவு நேர்மையாகவும் திறமையாகவும் செயல்படவில்லை?
- அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம்.
- தகுந்த அங்கீகாரமின்மை, அரசியல் தலையீடு.
- புரையோடிய ஊழல்.
- இவற்றைச் சரிசெய்ய மத்திய, மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.
பொது முடக்கம் தளர்த்தப்பட்டாலும், கரோனாவுடன் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையோடு புதியதொரு சகாப்தத்தைத் தொடங்குவோம்.


0 Comments