தென்அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிலவும் அரசியல் அதிகாரப் போட்டி, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு அந்நாட்டு மக்களைப் பெரும் விலைகொடுக்க வைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. சுமார் 2.8 கோடி மக்கள்தொகை கொண்ட வெனிசுலாவில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500 ஆக இருந்தாலும், சர்வதேச சராசரியுடன் ஒப்பிடுகையில் இது பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், இதைக்கூட எதிர்கொள்ள முடியாமல் அரசு திணறி வருகிறது. மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் மின்சாரம், தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பல பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன.
வெனிசுலாவின் தற்போதைய நிலைக்குக் காரணங்கள்:
பொருளாதாரச் சரிவு, மருத்துவக் கட்டமைப்புச் சீர்குலைவு, வேலையின்மை, ஊழல் ஆகியவை காரணங்களாக இருந்தாலும், அங்கு செயல்படும் இரட்டை அதிகார மையங்களே மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.
- இரட்டை அதிகார மையங்கள்: 2018 அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஜுவன் குவைடோ ஆதரவாளர்கள் தேர்தல் முறைகேடு எனக் கூறி முடிவுகளை ஏற்க மறுத்தனர். குவைடோ தன்னையே அதிபராக அறிவித்தார். அவருக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு அளித்தாலும், ராணுவத்தின் ஆதரவுடன் மடூரோ ஆட்சி செய்து வருகிறார். சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்துடன் குவைடோ தலைமையிலான அரசும் செயல்படுகிறது.
- பொருளாதாரத் தடைகள்: இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளாலும், வெனிசுலாவுக்குச் சொந்தமான சொத்துகளை அமெரிக்கா முடக்கியதாலும், நாட்டின் பணவீக்கம் அதிகரித்து நிலைமை மோசமானது. பொலிவர் செல்லாக்காசாகி, உணவுப் பற்றாக்குறை, வணிக வளாகங்கள் சூறை, போராட்டங்கள் என நாடு ரணகளமானது.
இந்த மோசமான சூழ்நிலையில்தான் கரோனா நோய்த்தொற்று வந்து சேர்ந்தது. கரோனாவை எதிர்கொள்ள வெனிசுலாவுக்கு 75 கோடி டாலர் தேவைப்படும் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. தனது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 25% எண்ணெய் ஏற்றுமதியையே வெனிசுலா நம்பியுள்ளது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக எண்ணெய் மூலம் வரும் வருமானம் அடியோடு குறைந்துவிட்டதால், வெனிசுலா அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
தங்கத்தை விடுவிக்கக் கோரி வழக்கு:
இந்த இக்கட்டான நிலையில், பிரிட்டனில் உள்ள பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 100 கோடி டாலர் மதிப்புள்ள தங்கத்தை வெனிசுலா அரசு துருப்புச்சீட்டாகக் கையில் எடுத்துள்ளது.
- 2018-இல் மடூரோ மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தத் தங்கத்தை நாட்டுக்குக் கொண்டுவர அரசு முயன்றது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக இங்கிலாந்து வங்கி தங்கத்தை விடுவிக்க மறுத்து வருகிறது.
- தற்போது கரோனாவை எதிர்கொள்ளும் நிலையில், தங்கத்தை விடுவிக்க உத்தரவிடக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் வெனிசுலா அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
- வெனிசுலாவின் கோரிக்கை: வங்கியில் உள்ள தங்கத்தின் ஒரு பகுதியை விற்று, ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்புக்கு அனுப்பி, அதன் மூலம் கரோனாவுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க முடியும் என்று மனுவில் தெரிவித்துள்ளது.
- வெனிசுலாவின் குற்றச்சாட்டுகள்: "வெனிசுலா மக்களுக்குச் சொந்தமான தங்கத்தைத் தனது இருப்பில் வைத்துக் கொள்ள இங்கிலாந்து வங்கிக்கு எந்தத் தார்மிக உரிமையும் இல்லை. கரோனா காலத்திலும் தங்கத்தை விடுவிக்க மறுப்பதன் மூலம் வெனிசுலா மக்களின் உயிருடன் பிரிட்டன் விளையாடுகிறது. பிற நாடுகளின் உள்அரசியலில் மேற்கத்திய நாடுகள் தலையிடுவது இதன்மூலம் நிரூபணமாகிறது" எனக் கடுமையான குற்றச்சாட்டுகளை வெனிசுலா தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில், வெனிசுலா போன்ற பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் நாடுகளும் முடிந்த அளவு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த நாட்டின் அரசியல் தலைமைக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் நிலைப்பாடு கொண்டிருந்தாலும், அரசியல்ரீதியாக ஆதாயம் தேடுவதற்கு இது உகந்த காலமல்ல.
சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, வெனிசுலாவுக்குச் சொந்தமான தங்கத்தை விடுவிப்பதே பிரிட்டன் செய்யக்கூடிய உதவியாக இருக்கும். கரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், தங்கம் எனும் துருப்புச்சீட்டு வெனிசுலாவைக் கரை சேர்க்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி.


0 Comments