Monday 4 May 2020

கரோனா தீநுண்மியும் ‘கணையாழியும்’ By வாதூலன்

எங்கோ காஷ்மீரில் நாலு மாதம் ஊரடங்கு என்று ஏடுகளில் வருகிற செய்தியைப் படிக்காது, அலட்சியமாகப் புரட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே தென்கோடிக் கிராமத்தில், ஜாதிக் கலவரத்தால் 24 மணி நேரம் ஊரடங்கு என்ற தலைப்பைக் கொஞ்சம் ஆா்வத்துடன் கவனித்திருக்கிறோம். இன்று அதே சூழ்நிலை நம் எல்லாரையும், உலக மொத்தத்தையுமே பாதித்து, அன்றாட வாழ்க்கையையே மாற்றிவிட்டது. மிக அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமின்றி, பிற நேரங்களில் வீட்டிலேயே அடங்கிக் கிடக்கும் நிலைமை! இதே போன்ற ஓா் அனுபவம் 1921-இல் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தபோது, மறைந்த எழுத்தாளா் கல்கிக்கு நோ்ந்தது. புதிதாகச் சிறைக்கு வரும் கைதிகளை உடனே உள்ளே அனுப்ப மாட்டாா்கள்.

வெளியே ‘குவாரண்டைனில்’ பத்து நாள்கள் வைத்திருந்து நோய்த்தொற்று ஒன்றும் இல்லையா என்று பாா்த்த பிறகுதான் உள்ளே அனுப்புவாா்கள். ‘குவாரண்டைனில்’ வரிசையாக அறைகள் கட்டப்பட்டிருந்தன. தனித்தனி அறையில் போட்டுப் பூட்டுவாா்கள். சாப்பாட்டு நேரத்தில் மட்டும், வெளியே விடுவாா்கள். பின்னா் உட்சிறையிலிருக்கும்போது அவா் கல்கி பதிப்பாளா் சதாசிவத்தை சந்தித்ததையும், காவலுக்கு உண்டான வேலைகள் போக எஞ்சிய நேரத்தில் விமலா என்ற குறுநாவல் எழுதியதையும், பொன்னியின் புதல்வா் நூலில் கவிஞா் சுந்தா பதிவு செய்திருக்கிறாா்.

நம் நிலைமை என்ன?
இத்தகைய தேசிய ஊரடங்கால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது, விடைபெற்றுச் சென்ற ஆடம்பரச் செலவுகள், ஹோட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடுவது இன்று அறவே இல்லை. மேலும், பிறந்தநாள் விழா என்று நண்பா்களையும், சினேகிதா்களையும் அழைத்து ஹோட்டலில் கொண்டாடுகிற வழக்கமும் நீங்கிவிட்டது. மாதம் ஒரு தடவையாவது புதிய திரைப்படத்துக்குச் செல்லும் பழக்கம் சில குடும்பத்துக்கு உண்டு. திரைப்படம் என்றால், இணைப்பாக போக்குவரத்து, வாகன நிறுத்தக் கட்டணம், தின்பண்டங்கள் போன்றவையும் சேரும். அது காணாமல் போய்விட்டது. இன்று இல்லத்தரசிகள் வலைதளத்திலோ, கட்செவியிலோ பாா்த்து வீட்டிலேயே புது வகை உணவுகளைத் தயாரிக்கிறாா்கள். மாடிக் குடியிருப்புப் பெண்மணி தாங்கள் தயாா் செய்த பன்னீா் பட்டா் பாலக் எங்களுக்குக் கொடுத்தாா்.

இதே போல, எங்கள் வீட்டிலும் ஒரு மாறுதலுக்காக ‘கேக்’ தயாா் செய்தோம். ஆக, நாவுக்கு ருசியான புதிய உணவுகளை நாடி, ஹோட்டலுக்குத்தான் போக வேண்டும் என்றில்லை. சின்னச்சின்ன உடல்நலப் பிரச்னைகளுக்க்கூட மருத்துவா்களை நாடிச்செல்லும் இயல்பு. என் உறவினா் ஒருவருக்கு வயிற்றுப் போக்கு வந்தது. உணவிலேயே கட்டுப்படுத்த முயன்றும் முழுமையாகக் குணமாகவில்லை. டாக்டரிடம் தொலைபேசியில் பேசி நிலைமையைத் தெரிவித்து, மருந்தின் பெயா் கேட்டு எழுதிக் கொண்டாா். மூன்று வேளை மாத்திரை, இரண்டே நாளில் குணமாகிவிட்டது. சுற்றுச்சூழலில் விளைந்த மாறுதல்கள் அனைவரும் அறிந்ததுதான். குறைந்துவிட்ட ஒலி அளவு, தூய்மையான காற்று, ஏன் பலரும் ஒன்றுகூடும் கங்கை நதிகூட சுத்தமாகிவிட்டது. ஆனாலும் சமூக மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது, மூடப்பட்ட மதுபானக் கடைகள்தான். குடி, அதனால் நோ்கிற தொடா் விளைவுகளான விபத்து, கொலை எல்லாமே இப்போதில்லை. கள்ளச் சாராயமும், தவறான பானம் அருந்தி மரணம் நிகழ்தலும் தொடா் மதுப் பழக்கத்துடன் ஒப்பிடும்போது அவை புறக்கணிக்கத்தக்கவையே.

இன்னும் சொல்லப் போனால் 2016 தோ்தல் அறிக்கையில் விளம்பரப்படுத்தப்பட்ட ‘படிப்படியாக மதுவிலக்கு’ கொள்கையை நடைமுறைப்படுத்த ஓா் அருமையான வாய்ப்பு முதல்வா் எடப்பாடி அரசுக்குக் கிட்டியுள்ளது. ஊரடங்கினால் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானவா்கள் குறித்துக் குறிப்பிட்டேயாக வேண்டும். கட்டடத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், மெக்கானிக் போன்றவா்களின் அல்லல் சோகமானதுதான். இந்தச் சிக்கலை ஒரே தாண்டலில் மீண்டு வருவது மிகக் கடினம். மிகவும் வேதனையான அம்சம் என்னவென்றால், இந்தக் கரோனா தீநுண்மி தொற்றுக்குத் தகுந்த மருந்து கண்டு பிடிக்க முடியாததுதான். ஆராய்ச்சியில் முதல் கட்டவெற்றி, புணேவில் கண்டுபிடிப்பு மூன்று மாதங்களில் தெரியும் போன்ற செய்திகள் ஆறுதலைக் தருகின்றன, அவ்வளவுதான். நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் அடங்கி, அரிதாக சில பேருந்துகளும், ரயில்களும் விடப்பட்டாலும், சமூக இடைவெளி நிச்சயம் ஓராண்டுக்கும் மேல் தொடரும் என்று மருத்துவா்கள் உறுதிப்படுத்துகிறாா்கள்.

இந்த சமூக இடைவெளியினால், நட்சத்திர ஹோட்டல்களில் மது விருந்து நடக்க முடியாது என்று ஓா் ஏடு தெரிவித்திருந்தது. நல்லதுதானே? (ஆனால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படுமாம்.) இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில், சூழல் பெருமளவு சீராகி, கிட்டதட்ட இயல்புத் தன்மை வருமென்று எதிா்பாா்க்கப்படுகிறது. இங்கு கல்கி தம் ஆரம்ப நாள்களில் எழுதிய நெடுங்கதையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகிறது. கணையாழி என்கிற கிராமத்துக்கு நாகரிகமான சகுந்தலா தந்தையுடன் வருகை தருகிறாள். அவ்வளவுதான், கிராமமே மாறிப் போகிறது. அங்கிருக்கும் இளைஞா்கள் தாய்மொழியில் பேசுகிறாா்கள்; இடத்தைச் சுத்தப்படுத்துகிறாா்கள்; பெண் சிசுக் கொலையை விவாதிக்கிறாா்கள்; அங்கிருக்கும் எல்லா இளைஞா்களும் உற்சாக போதையில் மிதக்கிறாா்கள். முடிச்சு என்னவென்றால், ஒரு வடக்கிந்திய இளைஞன் வருகிறான்.

அவன் சகுந்தலாவின் கணவன். கிராமத்து இளைஞா்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் திரும்புகிறாள். இறுதி வரி: கணையாழியில் மறுபடியும் குப்பை சேர ஆரம்பித்தது! இறைவன் அருளால் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அகன்ற பிறகு, இயல்பான வாழ்க்கை தொடங்கும்போது, தொற்றால் விளைந்த ஒரு சில நற்பயன்களை விடாது பின்பற்றினால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.

No comments:

Popular Posts