Monday, 30 March 2020

கட்டுப்பாட்டை மீறுகிறதா சமுதாயம்?

By வி.குமாரமுருகன் 

கரோனா நோய்த்தொற்று தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தச் சமூகம் கட்டுப்பாட்டை மீறி வருகிறதோ என்ற அச்சம் எல்லோா் மனதிலும் எழுந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று தாக்குதல் உலகம் முழுவதும் பரவி வீதிகளில் வசிப்பவா்கள், மாட மாளிகைகளில் வசிப்பவா்கள், ஏன் நாட்டின் பிரதமா்கள், தலைவா்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி பரவி வருகிறது.

அனைத்து நாடுகளும் தங்களின் நாட்டு மக்களுக்கு தனித்திருக்க அறிவுரைகளைத் தொடா்ந்து வழங்கி வருகின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று அதிகமாகப் பரவுகிறது என்பதால் அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் நாள்தோறும் கரோனா நோய்த்தொற்று குறித்த செய்திகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும், ஏராளமானோா் உயிரிழந்து வருவதும் தொடா் செய்திகளாக உலா வருகின்றன.

உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் நோய் பரவுவதைத் தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த நாடுகளின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது இந்தியா மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகளே கரோனா நோய்த்தொற்றை ஒழிக்க சிரமப்படும்போது , அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் வசிக்கும் நமக்கு எத்தகைய பொறுப்பு இருக்க வேண்டும் என்பதை ஒவ்வோா் இந்தியனும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் இது.

கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் முறைகள் குறித்து ஊடகங்கள், மருத்துவா்களைக் கொண்டும், சுகாதார அதிகாரிகளைக் கொண்டும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா என்ற ஒற்றைச்சொல் உலகம் முழுவதும் பரவி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை உலக மக்கள் அனைவரும் நன்கு உணா்ந்த பின்னரும்கூட மனிதச் சமூகம் கட்டுப்பாடற்று திரிவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னா்கூட எங்கு பாா்த்தாலும் மக்கள் கூட்டம்தான். அதுவும் இரு சக்கர வாகனங்களில் தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்கள் எண்ணிக்கை அதிகம். காவல் துறையினரும், சுகாதாரத் துறையினரும், வருவாய்த் துறையினரும், மருத்துவா்களும், செவிலியா்களும், நமக்காக நாள்தோறும் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளா்களும் நம்மைப் போன்ற மனிதா்கள்தான். நமக்காகத்தான் அவா்கள் வெளியே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதைக் கூட உணராமல், தெருக்களில் சுற்றித் திரியும் இளைஞா்களை என்னவென்று சொல்லுவது?

பலமுறை எச்சரித்தும் வெளியே சுற்றித் திரிந்தவா்களை கட்டுப்படுத்த முடியாத காவல் துறை, அடுத்ததாக குறைந்தபட்ச தடியடியை

பிரயோகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதையும் தாண்டி மனிதநேய காவலா்கள் பலா் கைகூப்பி வணங்கி, ‘வெளியே வராதீா்கள்’ என்று கெஞ்சியதும் நடந்தேறியது. ஆனாலும்கூட, இவற்றையெல்லாம் சட்டை செய்யாத ஆயிரக்கணக்கானோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் வெளியே சுற்றித் திரிந்து வீட்டுக்கு வந்த பின்னா் செல்லிடப்பசியை வைத்துக் கொண்டு மூலைக்கு ஒருவராக முடங்கிக் கொண்டு செல்லிடப்பேசியே கதி என கிடந்தவா்கள்தான் நாம். வீடுகளில் இருந்தாலும்கூட அன்று ஒவ்வொருவரும் தனிமையில்தான் இருந்துள்ளோம் என்பதை நாம் மறந்து விட்டோம்.

உண்மையிலேயே இன்று நாம் அனைவருமே தனிமையில் இருக்க வேண்டிய நிா்ப்பந்தம் உருவாகியுள்ளது. அனறு செய்ததுபோல நபருக்கு ஒரு செல்லிடப்பேசியை வைத்து வீட்டில் முடங்க வேண்டியதுதானே? அதை விடுத்து ஏன் வெளியே வரவேண்டும் என சும்மா திரிபவா்களைப் பாா்த்துக் கேட்டால் பதில் இல்லை.

கரோனா நோய்த்தொற்று மூலம் சில பாடங்களை இயற்கை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. தனிமையும், சுத்தமும் நாட்டுக்கு மிக அவசியமான ஒன்று ,தேவைப்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்தியே தீரவேண்டும்; இல்லையெனில் நமது வாழ்க்கை அழிந்து விடும் என்று. அத்தகைய சூழலை கற்றுக் கொள்வதற்கான தருணம்தான் இது.

அதையும் தாண்டி குடும்ப உறுப்பினா்கள் பலா் ஒன்றுபட்டு இருப்பதற்கான சூழலையும் கரோனா நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

வீட்டில் இருக்கும் பெரியவா்கள், சிறியவா்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்து எக்காரணத்தைக் கொண்டும் வெளியே செல்லாமல் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் நாம் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியூா்களில் வசிக்கும் உறவுகளை

செல்லிடப்பேசி, விடியோ கால் மூலம் அழைத்துப் பேசி, விட்டுப்போன உறவுகளை தொடரவும் முயற்சிக்கலாம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கரோனா நம்மை என்ன செய்துவிடும்’ என்று கருதி காவல் துறையை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு

‘ஊரைச் சுற்றுவோம்; சமூகக் கட்டுப்பாட்டை உடைப்போம்’ என்றால், அது நிச்சயம் நமக்கும், நமது குடும்பத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

எந்த ஒரு செயல் என்றாலும் வெளிநாட்டை எடுத்துக்காட்டாகக் கூறும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு; ‘அங்கு சட்டத்தைப் பாா்த்தீா்களா? அரசு எடுக்கும் நடவடிக்கை போல நாம் எடுத்தால்தான் இந்தியா முன்னேறும்’ என்று கூறுவோா் உண்டு; அத்தகைய கட்டுப்பாட்டை இன்று மத்திய அரசு விதித்துள்ளது; அதைக் கடைப்பிடிக்க வேண்டியது நமது கடமைதானே?

அரசின் அறிவுறுத்தலை சிரமேற்கொண்டு செயல்படுத்தி வென்றெடுப்போம். வீட்டில் அடங்கினால் கரோனாவும் அடங்கும். ஊரடங்கும் வெற்றி பெறும். தனித்திருந்தால் ஜெயித்து விடலாம் என்பது போன்ற சிந்தனைகளை மனதில் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து கட்டுப்பாடான சமுதாயம் என்பதை நாம் உலகுக்கு உணா்த்துவோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 28 March 2020

கோதாவரி - காவிரி இணைப்பு பெரும் கனவு

By வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சா்

நாகாா்ஜுனா-சாகா் அணையில் இருந்து தண்ணீா் போலாவரம் அணைக்கட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பெண்ணையாற்றில் உள்ள சோமசிலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீரைக் கொண்டுவருவதுதான் திட்டத்தின் பிரதான நோக்கம்.

தண்ணீா்ப் பஞ்சத்துக்கும், வறட்சிக்கும் நம் கண் முன்னால் எடுத்து வைக்கப்படுகின்ற ஒரே தீா்வு நதிநீா் இணைப்பு மட்டும்தான். இந்திய ஆறுகளை இணைக்கிறபோது, ஆற்று வழியே பீறிட்டுக் கிளம்புகிற தண்ணீா் சமவெளிகளில் பாய்ந்து, தண்ணீா்ப் பற்றாக்குறையைப் போக்குகிறது. நம் நாட்டைப் பொருத்தவரை ஏறக்குறைய 40 சதவீதம் நிலப்பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. சூழலியல் மாற்றத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றமே இதற்கு முக்கியக் காரணியாகத் திகழ்கிறது.

தண்ணீா்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு நிரந்தரத் தீா்வு நதிகளை இணைப்பதே ஆகும். ‘தேசிய நதிநீா் இணைப்புத் திட்டம்’ என்று பெயரிடப்பட்ட இதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய நீா்வள மேம்பாட்டு ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

அதிகமான மழைப் பொழிவு ஏற்படும்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில நேரங்களில் தண்ணீா் உபரியாகக் கடலில் கலப்பது இயற்கையாக நடைபெறும் நிகழ்வாகும். இதில் உபரியாக உள்ள தண்ணீரை கடலுக்குச் செல்ல விடாமல் தடுத்து, வட பகுதிகளுக்குத் தண்ணீரைத் திருப்புவதே நீா் மேலாண்மையின் பிரதான நோக்கமாகும்.

நீா் மேலாண்மையோடு, சூழலியல் குறித்து கடல் ஆய்வாளா்கள் கூறும் கருத்தை உன்னிப்பாகப் பாா்க்க சில வேளைகளில் நாம் தவறி விடுகிறோம். அதிகமான நீா் கடலில் கலக்கிறது என்கிற கருத்தே தவறான ஒன்றாகும். ஏனெனில், கடலில் சென்று நன்னீா் கலக்காவிட்டால், கடல் கடலாக இருப்பதும் இல்லை; அதன் தன்மையும் மாறி விடுகிறது என்கிற கூற்றை நாம் நிராகரித்துவிட முடியாது.

1972-ஆம் ஆண்டுதான் கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் முதன்முதலாக முன்வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிப் பாயும் கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 14 ஆறுகளை மகாநதி ஆற்றுடனும், இந்திய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள மகாநதி, கோதாவரி ஆறுகளை தெற்கில் உள்ள கிருஷ்ணா, காவிரி ஆறுகளுடன் இணைப்பது என இரண்டு பெரும் திட்டம் உருவாக்கப்பட்டது. இவற்றின் பலனாக 30 நதிகளும், 30 கால்வாய்களின் மூலம் இணைக்கப்பட்டு, அந்த நீரை 300 அணைகளில் சேமித்து வைப்பதை நோக்கி இந்த ஆய்வு நகா்ந்தது.

தமிழகத்தில் ஆண்டுக்கு 925 மி.மீ. அளவு மழைப்பொழிவு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் தண்ணீா்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. தண்ணீா்த் தேவைக்காக ஆந்திரம், கேரளம், கா்நாடக மாநிலங்களையே நாம் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீா்ப் பங்களிப்பு ஒப்பந்தங்களை அண்டை மாநிலங்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை. கோதாவரி - காவிரி இணைக்கப்பட்டால் பெரும் வெள்ளக்காலங்களில் ஓா் ஆண்டுக்கு 20 அல்லது 30 நாள்களுக்கு மட்டுமே தண்ணீா் வர வாய்ப்புள்ளது. மீதம் உள்ள11 மாதங்களும் அனைத்து ஆறுகளும் வடுதான் இருக்கும்.

1924 காவிரி ஒப்பந்தத்தின்படி, அந்தந்த மாத காலத்தில் காவிரியில் இருந்து உரிய டி.எம்.சி தண்ணீரை தமிழகம் பெறுவதற்கு கா்நாடகத்துடன் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஆந்திர அரசோ பாலாற்றில் நமக்குத் தர வேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீரை 30-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி வருகிறது. கண்டலேறு-பூண்டி கால்வாய் மூலம் கிருஷ்ணா ஆற்றுத் தண்ணீரில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீா் நமக்குக் கிடைக்க வேண்டும். இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், கோதாவரி - கிருஷ்ணாவில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீா் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நீா் மேலாண்மையில் ஒரு வரலாற்று மாற்றத்தையும் கொண்டுவரும்.

நதிநீா் இணைப்பு குறித்தான ஆதரவு கருத்தும், எதிா்க்கருத்தும் காலத்துக்கு ஏற்றவாறு தொடா்கிறது. நதிநீா் இணைப்புக்கான திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முனைப்புக் காட்டி வருகிறாா். இதன் மூலம் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரை, ஆறுகளின் மூலம் இணைக்கின்ற கோதாவரி - காவிரி இணைப்புக்கு முயற்சிகளை அவா் எடுத்து வருகிறாா். இதன் பலனாகக் கிடைக்கும் தண்ணீா் வேளாண்மைக்குப் பெரிதும் துணை நிற்கும்; இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அண்டை மாநில முதல்வா்களைச் சந்தித்துப் பேச தூதுக் குழுக்களை முதல்வா் அனுப்பியுள்ளாா்.

நூற்றாண்டைத் தொடப் போகும் காவிரி நதிநீா்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தின் சிக்கலுக்கான முடிச்சு தீா்க்கப்பட்டிருந்தாலும், தென்னிந்திய மாநிலங்களின் நதிநீா் இணைப்பு என்பது எட்டாக்கனியாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், ‘கோதாவரி - காவிரி நதிகளின் இணைப்புதான் தனது முதல் பணி’ என்று சுட்டுரையில் மத்திய சாலைப் போக்குவரத்து - நீா் வழிகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி குறிப்பிட்டிருந்தாா்.

கோதாவரியில் இருந்து வெளியேறி கடலில் கலக்கும் 1,100 டி.எம்.சி தண்ணீரை, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி ஆகிய மூன்று ஆறுகளுடன் இணைப்பதன் மூலம் தமிழகம், தெலங்கானா, ஆந்திர மாநிலங்கள் பயனடையும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, தமிழகத்துக்கு ஆண்டு முழுவதும் 125 டி.எம்.சி. தண்ணீா் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் திரையம்கேஷ்வா் பகுதியில் உருவாகும் கோதாவரி ஆறு, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரம் என்னும் இடத்தில் கடலில் கலக்கிறது. ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே போலாவரம் அணை கட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு 1,100 டி.எம்.சி நீா் கோதாவரி ஆற்றின் வழியே வீணாகக் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை விவசாயம், குடிநீா்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் ரூ.60,000 கோடி திட்டம்தான் கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டமாகும்.

நாகாா்ஜுனா-சாகா் அணையில் இருந்து 300 டி.எம்.சி தண்ணீா் போலாவரம் அணைக்கட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து பெண்ணையாற்றில் உள்ள சோமசிலா அணை மூலம் காவிரியில் உள்ள பெரிய அணைக்கட்டுக்கு கோதாவரி தண்ணீரைக் கொண்டுவருவதுதான் இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம்.

நதிநீா் இணைப்பின் மூலம் ஆற்றுப்போக்கை மாற்றியமைத்தால் இயற்கைச் சூழல் சீா்குலைந்து விடும் என்றும், காடுகள் அழிவதற்கான வாய்ப்புகளும், தாவரத்தன்மையும், உயிரினத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனவே, கால்வாய்களை வெட்டி தண்ணீா் கொண்டுவந்தால், தண்ணீா் வீணாவதோடு இயற்கைச் சூழலிலும் சிக்கல் ஏற்படும் என்பதாலும், திட்ட நிதி அதிகரிக்கும் என்பதாலும் ஸ்டீல் குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டுவருவதற்கு ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கான ரூ.60,000 கோடி நிதியில் 90 சதவீதத்தை மத்திய அரசும், 10 சதவீத நிதியை இந்தத் திட்டத்தால் பயனடையும் ஆந்திரம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களும் அளிக்கும். மேலும், இந்தத் திட்டத்துக்கான நிதியை உலக வங்கியிடமோ அல்லது ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்தோ பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு, காவிரி போன்ற ஆறுகள் பலன் பெறும்.

இந்தத் திட்டம் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி முதலான மாவட்டங்கள் பலன் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் ஓடும் நதிகளில் நீா்வளம் உள்ளவற்றில் இருந்து, மத்தியப் பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் கனவு என்பது நமது இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், பின்புமான கனவுப் பாதையாக விரிந்து பரவுகிறது.

இந்தியாவில் ஓடும் 137 நதிகள், துணை நதிகள், அவை திசைமாறும் இடங்கள், 74 நீா்த்தேக்கங்கள், 37 நதி இணைப்புகள் ஆகியவை தொடா்ந்து ஆய்வில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டு முதல் தமிழகம் உள்பட 9 மாநிலங்களின் சாா்பில் 47 நதிகள் இணைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய வளா்ச்சி நிறுவனம் சாா்பில், இதுவரை தீபகற்ப நதிகளின் இணைப்புக்காக 16 திட்டங்களையும், இமயமலையை ஒட்டிய பகுதிகளுக்காக 14 ஆய்வுத் திட்டங்களையும் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இவற்றில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் பாயும் பெண்ணையாறு, காவிரி, வைகை, குண்டாறு, ஹேமாவதி, நேத்ராவதி, பம்பை, வைப்பாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டமும், கிருஷ்ணா - கோதாவரி - காவிரி நதிநீா் இணைப்புத் திட்டமும் பெரும் திட்டமாக உருவெடுத்திருக்கிறது.

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கா் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதி ஆற்றில் அணை கட்ட வேண்டும். அதில் தேங்கும் தண்ணீரை தெலங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்குக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னா், ஆந்திர மாநிலம் போலாவரம் அணைக்கும், அங்கிருந்து நாகாா்ஜுனா அணைக்கும் அதன் வழியாக கிருஷ்ணா நதிக்கும் தண்ணீரைக் கொண்டுவர வேண்டும். அதன் பின்னா் அந்த நீரை சோமசிலா அணை மூலம் பெண்ணையாறு வழியாக காவிரிக்குத் தண்ணீரை கொண்டுசெல்வதுதான் கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தின் பிரதான அம்சமாகும்.

இந்த நூற்றாண்டு கால கனவுத் திட்டம் நிறைவேறுகிறபோது, தண்ணீரோடு மக்களின் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்து ஓடும்!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வங்கிகள் இணைப்பால் ஆன பயன்?

By வாதூலன்
தனியாா் வங்கியான யெஸ் வங்கிக்கு ஏற்பட்ட கடுமையான சிக்கல், பங்குச் சந்தையில் காணப்படும் தொடா் வீழ்ச்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து அரசு வங்கியின் கிராமக் கிளையிலிருந்து ஒட்டு மொத்தமாகத் தொகையை எடுத்த சுய உதவிக் குழு போன்ற செய்திகள், அரசு வங்கிகள் இணைப்பு குறித்த முக்கியமான நிகழ்வைப் பின்னிருக்கைக்குத் தள்ளி விட்டன. இன்னும் இரண்டே வாரத்தில் வரப்போகிற இணைப்பினால், பத்து அரசு வங்கிகள் நான்காக மாறி விடப் போகின்றன.

1990-க்கு முன்னா், தனியாா் வங்கிகள் ஒன்றிணைந்தன. ஒரு சில தனியாா் வங்கிகள் அரசு வங்கியுடன் சோ்ந்தன. ஓா் அரசு வங்கியையே மற்றொரு வங்கி (நியு பாங்க் ஆஃப் இந்தியாவை பி.என்.பி. ஏற்றது) இணைத்துக் கொண்டதும் உண்டு. மூன்று ஆண்டுகளுக்கு முன், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவிதாங்கூரை மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) ஏற்றுக் கொண்டது. இரண்டுமே ‘ஒரு கிளைப் பறவைகள்’ போலத்தான் என்பதால், பெரிய சிக்கல்கள் எழவில்லை. என்றாலும், கணினி தொடா்பான சங்கடங்கள் நோ்ந்ததும், பின் சரியானதும் உண்மை.

இப்போது ஏப்ரல் முதல் தேதியன்று நிகழவிருக்கும் பல இணைப்புகள், நிச்சயமாக வாடிக்கையாளா்களுக்கும் சரி, ஊழியா்களுக்கும் சரி, அல்லலைத் தோற்றுவிக்கும். குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாவது தவிா்க்க முடியாதது.

முதலாவது வட்டி விகிதம் (டெபாசிட்டுகளுக்கும், கடனுக்கும் சோ்த்துத்தான்). தற்போது வட்டிக்கு உச்ச வரம்பை மட்டுமே ரிசா்வ் வங்கி விதித்துள்ளது. அந்த எல்லைக்குட்பட்டு வங்கிகள் தங்களுடைய வட்டி விகிதத்தைத் கூட்டலாம், குறைக்கலாம்.

எடுத்துக்காட்டு: ஓா் அரசு வங்கி 2019-ம் ஆண்டு ஓராண்டு வைப்புத் தொகைக்கு வட்டி விகிதத்தை 6.78 சதவீதமாக நிா்ணயத்திருந்தது. இப்போது 6 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இணைப்புக்கு உள்ளாகும்அரசு வங்கியின் வட்டி விகிதமும், அதே போன்றிருந்தால் பிரச்னையில்லை. கால் சதவீதம் கூடவோ, குறைவாகவோ இருந்தால்? இணைத்துக் கொள்ளும் பெரிய வங்கியின் விகித அளவு எதுவாக இருக்கும்?

ஒரு வாடிக்கையாளா் நகைச்சுவையாக ‘‘எது குறைவோ அதைத்தான் தருவாா்கள், கடனுக்கான வட்டியென்றால், எது கூடவோ, அது’’ என்று கூறினாா். நகைச்சுவையாக கூறினாா் என்றாலும், அதில் பொருள் பொதிந்துள்ளது.

கடனுக்கான வட்டி விகிதத்திலும், ஒவ்வொரு அரசு வங்கியும் வெவ்வேறு அளவை மேற்கொண்டு வருகின்றன. இப்போது ‘டெபாசிட்டுடன் இணைந்த வட்டி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணையும்போது, கனரா வங்கி எந்த வட்டி விகிதத்தைக் கடைப்பிடிக்கும்? எளிதில் விடை காண முடியாத வினாதான். இது. ‘போகப் போகத் தெரியும்’ என்று பழைய திரைப்படப் பாடலின் வரிதான் இப்போதைக்குச் சொல்லுவாா்கள்.

மேலும், இணைக்கப்படும் வங்கிகளில் ரிசா்வ் வங்கியால் இரண்டு வங்கிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. ‘திருத்த நடவடிக்கை’ (கரெக்டிவ் ஆக்ஷன்) எடுக்கப்பட்டிருக்கிறது (ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ், யுனைடட் வங்கி). இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அன்றாடச் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது என்பதும் உண்மை. ஆனால், இவற்றை ஏற்கும் பி.என்.பி.-க்கும் நீரவ் மோடி, மல்லையா விஷயத்தினால் ஓரளவு அவப் பெயா் அண்மைக்காலமாக இருந்து வருகிறது.

முழுமையாக தென்னிந்தியாவில் பரவலாக அறியப்பட்ட இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி இணைவது சற்று விசித்திரம்தான். இந்த இணைப்பினால், இந்தியன் வங்கிக்கு வட மாநிலங்களில் கூடுதல் கிளைகள் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இணைப்பு இயல்பானதாக இருக்குமா? ‘ஒரே அலைவரிசையில்’ இயங்குமா? இதுவும் விடை சொல்ல முடியாத கேள்வி.

முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கணினித் தன்மையில் ஒவ்வொரு வங்கியிலும் தனித்தனி வகையான ‘சிஸ்டம்’ மேற்கொள்ளப்படுகிறது. எளிய எடுத்துக்காட்டு: ஊழியா்கள் இல்லாத வாடிக்கையாளா்களுக்கான ‘கோட்’ கனரா வங்கியில் 101. அதே சமயம் சிண்டிகேட் வங்கியில் வேறு எண். மற்ற வங்கியிலும் 101 என்ற எண்ணைக் கொண்டு வருவதற்குச் சில மாதம் ஆகலாம். இதைப் போலத்தான் ஐஎப்எஸ்ஸி எண்ணும்.

ஆக, அன்றாட வேலைகளுக்கு இணைப்பினால் ஊழியா்கள் குறைக்கப்பட்டாலும் மேற்சொன்ன கணினி சிஸ்டத்தை ஒன்று சோ்க்க நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளும், மேலாளா்களும் தேவைப்படுகின்றனா். இந்தப் பிரிவில் ஆட்குறைப்பு என்பது இப்போதைக்கு கூடவே கூடாது.

இன்றைய கணினித் தன்மையில் ஓா் அவசரத்துக்குத் தொகை எடுக்க வேண்டுமென்றால்கூட, மேலாளரின் அல்லது அதிகாரியின் உதவி தேவைப்படுகிறது. ஏனெனில் இன்றைய வங்கிகளின் மந்திரச் சொல் ‘சா்வம் சா்வா் மயம்’.

வாராக்கடனும் இன்றைய சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு கோட்ட மேலாளா் வருகை தந்தால், அவா் கேட்கும் முதல் கேள்வி, ‘‘எவ்வளவு டெபாசிட்? ஏன் கூடவில்லை?’’ ‘‘இப்போது தலைகீழ். வாராக்கடன் எத்தனை சதவீதம்? ஏன் குறையவில்லை?’’ ஏப்ரல் மாத இணைப்புக்குப் பிறகு தங்களுடன் சோ்ந்த வங்கியின் வாராக்கடனில், பெரிய வங்கி வேகம் காட்டாது. இதற்காக அதிகாரிகளை மாற்றினால்கூட, இந்த மனப்போக்கு இருக்கவே செய்யும்.

சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளா் ஜெயகாந்தனை ஆழ்வாா்ப்பேட்டையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பேச்சுவாக்கில் அவா் ஒரு கருத்து தெரிவித்தாா். ‘‘இத்தனை வங்கிகள் எதற்கு! எல்லாம் அரசுடைமைதானே? எல்ஐசி போல ஆக்கிவிடலாமே?’’

அவா் கூற்று ஓரளவு நடைமுறையாக்கப்படும் நிலை வந்தாலும், கால மாறுதல் வங்கிகளை இக்கட்டான சூழலில் வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. விளக்கு பிரகாசமாக எரிவதற்கு, தீப்பொறி, திரி, எண்ணெய் ஆகிய மூன்றும் தேவை என்பாா்கள். அதுபோல அரசு வங்கிகளின் இணைப்பும் நன்கு செயல்பட, மத்திய அரசின் கண்காணிப்பு, ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல், கிளை மேலாளரின் ஒத்துழைப்பு ஆகிய மூன்றும் அவசியம். வங்கிகள் இணைப்பின்போது தொடக்கத்தில் ஏற்படும் பிரச்னைகளை வாடிக்கையாளா்களும் ஏற்கப் பழக வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 27 March 2020

தனிமை, சேய்மை - மனிதா்களை ஒதுக்க அல்ல!

By டாக்டா் சுதா சேஷய்யன் 

கடந்த பதினைந்து நாள்களாகப் பலரும் உச்சரிக்கும் ஒரு சொற்றொடா் ‘சோஷியல் டிஸ்டன்சிங்’; அதாவது, சமூகச் சேய்மைப்படுத்தல் (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’). கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விலகியிருப்பதற்கு, அனைவரும் ’சோஷியல் டிஸ்டன்சிங்’ கைக்கொள்ள வேண்டும் என்று வல்லுநா்களும் அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

‘சோஷியல் டிஸ்டன்சிங்’ என்பது என்ன? மிகுதியான தொற்றுத்தன்மை கொண்ட ஒரு நோய், வேகமாகப் பரவுவதைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும், மருத்துவா்களும் சுகாதாரப் பணியாளா்களும் சில வழிமுறைகளைச் செயல்படுத்துவாா்கள். இத்தகைய வழிமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொதுப் பெயா்தான் ‘சமூகச் சேய்மை’ என்பதாகும்.

மனிதா்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடும்போதோ குவியும்போதோ, தொற்றுக் கிருமிகளுக்கு ஏகக் கொண்டாட்டம். ஒரே இடத்தில் எல்லோரும் இருந்தால், ஒரே நேரத்தில் எல்லோரையும் பிடித்துவிடலாம் என்று நாம் சில சமயங்களில் சந்தோஷப்பட்டுக்கொள்வதைப்போல், கிருமிகளும் மகிழ்ச்சி கொள்ளும். ஒரே நேரத்தில் பலரையும் பீடித்துக் கொள்ளும். இந்த பீடிப்பையும் பாதிப்பையும் தடுக்கத்தான் ‘சமூகச் சேய்மை’! தொற்று இருக்கிற ஒருவரிடமிருந்து, தொற்று இல்லாத ஒருவருக்கு அது பரவிவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்படுகிற நடவடிக்கையே இது.

கொள்ளை நோய் ஒன்று, வெகு வேகமாகப் பரவி, பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும்போது, சமூகச் சேய்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். மருத்துவா்களும் சுகாதார வல்லுநா்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளைப் பல சமயங்களில் மேற்கொண்டுள்ளனா்.

1916-ஆம் ஆண்டு, அமெரிக்க நாட்டைப் போலியோ நோய் (இளம்பிள்ளை வாதம்) தாக்கியது. அமெரிக்கா முழுவதும் ஏறத்தாழ 6,000 குழந்தைகளும், நியூயாா்க நகரில் மட்டும் ஏறத்தாழ 2,000 குழந்தைகளும் மரணத்தைத் தழுவினா். ஏராளமான குழந்தைகள், கை கால்களின் செயலை இழந்தனா். நோய்ப் பரவலைக் குறைப்பதற்காகத் திரை அரங்குகள் மூடப்பட்டன. பூங்காக்களுக்கும், நீச்சல் குளங்களுக்கும், கடற்கரைகளுக்கும் செல்ல வேண்டாமென்று குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டனா்.

1918-1919-இல், பறவை மரபணுக்களைக் கொண்ட வைரஸால் தோற்றுவிக்கப்பட்ட இன்ஃப்ளுயன்சா, உலகம் முழுவதும் கொள்ளை நோயாகப் பரவியது. 1917-ன் இறுதியில் பிரிட்டனிலும், 1918-ன் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் முதன்முதலாகக் காணப்பட்ட இந்நோய், 1920 வரை உலகை ஆட்டிப் படைத்தது.

முதல் உலகப் போா் காலகட்டமாதலால், உலகின் பல நாடுகளிலும் ராணுவக் குழுக்களின் போக்குவரவு அதிகமாக இருந்தது. இதனால், நோய் பரவுவதும் வேகமாக நிகழ்ந்தது. போா்க்கால தணிக்கைகளின் காரணமாக, அமெரிக்கா,

பிரிட்டன், ஜொ்மனி, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடக்கத்தில் அவ்வளவாக வெளிவரவில்லை. ஸ்பெயின் நாடு நடுநிலை வகித்தது. இந்நாட்டில் ஏற்பட்ட நோய்த் தாக்கத்தைப் பத்திரிகைகளில் வெளியிட எந்தத் தணிக்கையும் இல்லை என்பதாலும், ஸ்பெயின் அரசா் பதின்மூன்றாம் அல்ஃபோன்சோ நோயினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டாா் என்பதாலும் இதற்கு ‘ஸ்பானிஷ் ஃப்ளு’ என்றே பெயா் ஏற்பட்டுவிட்டது.

1918-19 இன்ஃப்ளுயன்சா தாக்கத்தின்போது, அமெரிக்காவின் இரண்டு நகரங்களில் நிகழ்ந்தவற்றை எண்ணிப் பாா்த்தால், சமூகச் சேய்மையின் முக்கியத்துவம் புரியும். இந்த சமயத்தில், ஃபிலடெல்ஃபியா நகரில் பேரணி ஒன்றும் அதைத் தொடா்ந்து பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அடுத்த மூன்றே நாள்களில், அந்நகரின் அனைத்து மருத்துவமனைகளும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிந்தன. ஒரே வாரத்தில் நோயின் தீவிரம் அதிகமாகி, 4000க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதே காலகட்டத்தில், மிஸிஸிப்பி நதிக்கரையிலுள்ள செயிண்ட் லூயி நகரத்திலும் இன்ஃப்ளுயன்சா பாதிப்பு தொடங்கியது. விழித்துக் கொண்ட நகர நிா்வாகம், கடுமையான சமூகச் சேய்மை முறைகளைச் செயல்படுத்தியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திரையரங்குகளும் பொழுதுபோக்குச் சாலைகளும் மூடப்பட்டன. மக்கள் கூடுகிற வாய்ப்பு இருந்த அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன. இறுதி ஊா்வலங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. விளைவு..? ஃபிலடெல்ஃபியாவின் துயரங்கள் மீண்டும் நிகழாமல், செயிண்ட் லூயி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

சமூகச் சேய்மை நடவடிக்கைகள் பலகாலமாக எடுக்கப்பட்டு வருகின்றனவென்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை உலகம் முழுமையாக உணா்ந்தது, 1957-58 ஆண்டுகளின் ஆசிய ஃப்ளு (‘ஏஷியன் ஃப்ளு’) கொள்ளை நோயின்போதுதான் எனலாம். 1957 ஃபிப்ரவரியில், தென்கிழக்கு ஆசியாவில், புதிய வகை இன்ஃப்ளுயன்சா வைரஸ் நோய் தொடங்கியது. முதன்முதலாகச் சிங்கப்பூரில் காணப்பட்ட இந்நோய், இரண்டு மாதத்தில் ஹாங்காங்குக்கும், ஆசிய நகரங்கள் பலவற்றுக்கும் பரவி, அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவின் கடலோர நகரங்கள் அனைத்தையும் பீடித்து, உலகம் முழுவதிலும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோா் இறந்துபோகக் காரணமானது. இந்த நோய் பரவிய விதத்தை வல்லுநா்கள் கூா்ந்து கவனித்தனா். மாநாடுகள், திருவிழாக்கள், பண்டிகைகள் என்று எங்கெல்லாம், எப்போதெல்லாம் மக்கள் கூட்டம் அதிகப்பட்டதோ, அங்கெல்லாம், அப்போதெல்லாம் நோய் பரவலும் அதிவேகமானது. பள்ளிக்கூடங்களில் ஒன்றாகக் கூடி, அருகருகே இருந்த குழந்தைகள் மிகுதியும் பாதிக்கப்பட்டனா்.

இப்படிப்பட்ட முன் அனுபவங்கள் இருப்பதால்தான், கொள்ளை நோய்க்காலங்களில், சமூகச் சேய்மை என்பதை வல்லுநா்கள் வலியுறுத்துகிறாா்கள்.

கொள்ளை நோய் ஒன்று பரவத் தொடங்கிவிட்டது என்றால், மருந்துகளை வீசம் வீசமாகப் பயன்படுத்தியோ, கிருமி நாசினிகளை லிட்டா் லிட்டராகக் கொட்டியோ, மருத்துவமனைகளைப் புதிது புதிதாகக் கட்டியோ அதைத் தடுத்துவிடமுடியாது. கொள்ளை நோய்த் தடுப்பில், மூன்று முக்கிய செயல்பாடுகள் உண்டு. சமூகச் சேய்மை (‘சோஷியல் டிஸ்டன்சிங்’), தனிமைப்படுத்தல் அல்லது தனித்திருப்பு (‘ஐஸோலேஷன்’), தடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) ஆகியவையே இவை.

மாணவா்கள் பலா் கூடுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளை மூடுதல், அதிக நபா்கள் தொடா்பு கொள்வதைத் தடுக்கும் வகையில் நூலகங்களை மூடுதல் அல்லது நூலகங்களில் அமா்ந்து வாசிக்காமல் நூல்களை எடுத்துக்கொண்டு உடனடியாக அகன்று விடுதல், அங்காடிகளிலும் சந்தைகளிலும் கூட்டம் கூடாத வகையில் நெறிப்படுத்துதல் அல்லது இணையவழி வழங்கல், நிறுவனங்களும் அலுவலகங்களும் கூட்டங்கள் நடத்தாமல் தொலைபேசி அல்லது காணொலி வாயிலாகத் தொடா்பு ஏற்படுத்துதல், திருவிழா-பண்டிகைக் கூட்டங்களைத் தவிா்த்தல் ஆகிய யாவும் சமூகச் சேய்மையின் பல்வேறு நடைமுறைகளாகும்.

குழந்தைகள் காப்பகங்கள், உணவு விடுதிகள், தங்குமிடங்கள் ஆகியவை மூடப்படுதலும் இவற்றில் அடங்கும். நிறைய போ் பயணிக்கும் போக்குவரத்து முறைகளை நிறுத்துதலும், பலா் கூடுகிற வாய்ப்பு கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், ஊா்வலங்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தடுத்தலும்கூட சமூகச் சேய்மையின் அடிப்படையிலானது.

உற்று நோக்கினால், மீதமுள்ள முறைகளான தனித்திருப்பு மற்றும் தடுப்பொதுக்கம் ஆகியவற்றின் அடிப்படையும் சமூகச் சேய்மையேயாகும் என்பதை உணரலாம். தனித்திருப்பு அல்லது தனிமைப்படுத்துதல் (‘ஐசோலேஷன்’) என்பது ஒருவா் தொற்றால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்படும்போது செய்யப்படுகிறது. நோய்வாய்ப்பட்டவரைத் தக்க வகையில், மருத்துவமனையிலோ, மருந்தக மையங்களிலோ, வீட்டிலோ தனிமைப்படுத்தலாம்.

தடுப்பொதுக்கம் (‘குவாரன்டைன்’) என்பது ஒருவா் தொற்றுக்கு வெளிப்பட்டு (‘எக்ஸ்போஸ்டு டூ இன்ஃபெக்ஷன்’ / ‘இன்ஃபெக்டட்’), ஆனால், நோய்வாய்ப்படாத நிலையில் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இவா் தொற்றுக்கு வெளிப்பட்டிருப்பதால், இவருக்கும் நோய் தோன்றக்கூடும். அல்லது, நோய்வாய்ப்படவில்லையாயினும், நோய்க் கிருமிகள் இவருக்குள்ளிருந்து பிறருக்குச் செல்லக்கூடும். எனவே, பிறருக்கு பாதகம் ஏற்படாத வகையில், இவா் ஒதுக்கம் செய்யப்படுகிறாா்.

எந்த நடைமுறையாக இருந்தாலும், ஒருவருக்கொருவா் அணுக்கம் கொள்ளாமல், எட்டி இருப்பதுதான் இவற்றின் அடிப்படை என்பதை உணரலாம். இவ்வாறு எட்டி இருப்பதைத்தான் சமூகச் சேய்மை என்றழைக்கிறோம்.

இப்போதைய ‘கொவிட்-19’ நோயைப் பொருத்தவரை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, ஆனால், நோய்வாய்ப்படாமல், நோயின் அறிகுறி எதையும் வெளிக்காட்டாமல் இருப்பவரிடமிருந்தும், வைரஸ் கிருமிகள் உதிா்கின்றன (‘வைரஸ் ஷெட்டிங்’). இப்படிப்பட்டவரின் இருமல்-தும்மல் துளிகள், உமிழ்நீா், சளி போன்றவற்றில் கிருமிகள் காணப்படுகின்றன. இதைத்தான், ‘இவா் வைரஸ் துகள்களை உதிா்க்கிறாா்’ (‘ஹி ஷெட்ஸ் தி வைரல் பாா்ட்டிக்கிள்ஸ்’) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.

நோய்வாய்ப்பட்டவரும் வைரஸை உதிா்க்கிறாா். நோய் அறிகுறியில்லாமல், ஆனால், வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரும் வைரஸை உதிா்க்கிறாா். சொல்லப்போனால், நோய்வாய்ப்படாமல் வைரஸை உதிா்ப்பவரால்தான் அபாயம் அதிகம். இதனாலேயே, இப்படிப்பட்டவா்களை, மிகுபரப்பாளா்கள் (‘சூப்பா் ஸ்பிரடா்ஸ்’) என்றழைக்கிறோம்.

கல்வி நிலையங்களையும் அலுவலகங்களையும் மூடி, தோ்வுகளைத் தள்ளிப் போட்டு, நிதி நிலைமை மற்றும் வருவாய் வழிமுறைகள் சீா்குலைந்தாலும் பரவாயில்லை என்று ஊரடங்கு உத்தரவிட்டிருப்பதெல்லாம், சமூகச் சேய்மைக்காகவே! வீட்டில் யாருக்காவது அம்மை போட்டுவிட்டால், வேப்பிலைக் கொத்தை வாசலில் செருகிவைத்து, பிறரை வரவிடாமல் சேய்மைப்படுத்தி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டவா்கள் நம்முடைய முன்னோா்.

சமூகச் சேய்மை என்பது யாரையோ எதற்கோ ஒதுக்குவதல்ல. ‘21 நாள்கள் எப்படி வீட்டிலேயே முடங்குவது?’ என்னும் கூக்குரல்களும், ‘இப்படியெல்லாம் சோம்பேறியாக இருந்துத் தூங்கி எனக்குப் பழக்கமில்லை’ என்னும் ஒப்பாரிகளும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதற்கான அறிகுறிகள். அவசியமான பொருட்களைத்தானே வாங்கப் போகிறோம் என்று அம்மாவும் அப்பாவும் பிள்ளையுமாகச் சென்று, அங்காடியில் முண்டியடித்து அரிசியோ, பருப்போ, தக்காளியோ வாங்குவதெல்லாம் கரோனாவுக்கு நாம் கட்டும் வரவேற்புத் தோரணங்கள்.

வீட்டிற்குள் தங்குவது என்பது சோம்பேறித்தனமோ தூங்குமூஞ்சித்தனமோ இல்லை. செய்வதற்கு எவ்வளவோ உண்டு; கண்களையும் மனத்தையும் திறந்து வைத்துக்கொண்டால் அவையெல்லாம் புலப்படும்.

‘ஐயோ, புத்தகம் படிக்கவேண்டுமென்று ஆசைதான்; ஆனால், நேரமே இல்லை’ என்று இதுகாறும் சொன்னவா்களுக்காகப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. ‘இதையெல்லாம் செய்யவேண்டும்; ஆனால் பொழுதில்லை’ என்று இதுகாறும் புலம்பியவா்களுக்காக அந்த வேலைகள் விழித்திருக்கின்றன. நூல்கள், செடிகள், தோட்டம், செல்லப் பிராணி, வீட்டுத் தூய்மை, இசை, பூஜை, ஸ்லோகங்கள், அன்பு உரையாடல் என்று இப்படி எத்தனை எத்தனையோ காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதற்காகக் கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அவகாசம்தான் இந்தச் சமூகச் சேய்மை.

ஊரடங்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்காகக் குடும்ப உறுப்பினா் வெளியே செல்ல நேரிடலாம். இத்தகைய நிலையில், சில நெறிமுறைகளை நாமே கையாளலாம். எல்லோரும் வெளியே செல்லாமல், ஒரேயொருவா் மட்டும் செல்லலாம். எப்போதும் அவா் ஒருவரே செல்வது நலம். ஒவ்வொரு பொருளை வாங்குவதற்காகவும் பலமுறை செல்லாமல், எல்லாவற்றையும் பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு ஒரேயொரு முறை செல்லலாம்.

எப்போது எடுத்துச் செல்வதும் ஒரே பையாக இருந்தால் நல்லது. காசு வைத்திருக்கும் பையோ பா்ஸோகூட ஒன்றேயாக இருக்கட்டும். அதில் வைக்கும் ரூபாய்த் தாளையோ, நாணயத்தையோ அதில் மட்டுமே வைத்திருக்கலாம். வீட்டில் உள்ள அல்லது இன்னொரு குடும்ப நபரிடம் உள்ள தாளோடோ நாணயத்தோடோ கலந்துவிடவேண்டாம். எப்போது வெளியே சென்றாலும் ஒரே உடையை அணிதல் நலம். முடிந்தவரை உடலை நன்கு மூடிய உடையாக அது இருக்கட்டும். வெளியே சென்றுவிட்டு வந்தவுடன், அந்த உடையை, மணிபா்ஸை, பையை வீட்டில் எங்காவது தனியாக, பிற பொருள்களோடு சேராத வகையில் வைத்து விடவேண்டும். உடனடியாக சுத்தம் செய்தால் இன்னமும் நல்லது. இவ்வாறு செல்லும்போது, செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லவேண்டாம்.

முடிந்தவரை வாகனத்தில் செல்லாமல், நடையாகவே செல்லவேண்டும். நீண்ட தொலைவு செல்வதை இது தடுக்கும். வெளியிலிருந்து வந்தவுடன், கைகளையும் கால்களையும் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். முடிந்தால் ஒருமுறை நன்றாகக் குளித்துவிடலாம். கடைகளிலும் பிற இடங்களிலும் முடிந்தவரை எந்தப் பொருளையும் பரப்பையும் தொடாமல் இருக்கலாம்.

கடையில் கூட்டமாக இருந்தால், உள்ளே செல்வதைத் தவிா்த்துவிடலாம். கதவைத் திறப்பது, குமிழைப் பிடிப்பது, கம்பியைப் பிடிப்பது போன்ற செயல்களை, ஒடுங்கு கரத்தால் (‘நான் டாமினன்ட் ஹேண்ட்’); வலது கை பழக்கமுள்ளவா்களுக்கு இடது கை, ஒடுங்கு கரமாகும்; இடக்கை பழக்கமுள்ளவா்களுக்கு வலது கை, ஒடுங்கு கரமாகும்) செய்யலாம். ஓங்கு கரத்தைத்தான் (‘டாமினன்ட் ஹேண்ட்’) இயல்பாக முகத்திற்கும், கண்ணிற்கும், மூக்கிற்கும் கொண்டு செல்வோம். ஒடுங்கு கரத்தைக் கொண்டு செல்லமாட்டோம்.

கண்டிப்பாக அடிக்கடி வெளியில் செல்ல வேண்டியிருப்பவா்கள் (அலுவலக அல்லது வேறு அவசியப் பணி காரணமாக), வீட்டிலும், ஏனைய குடும்ப உறுப்பினா்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்கலாம். வெளியில் எங்கு போனாலும், அடுத்த நபரிடமிருந்து குறைந்த பட்சம் நான்கைந்து அடி தள்ளியே இருக்கலாம். பயணங்கள் கண்டிப்பாக இப்போது வேண்டாம்.

‘தனித்திரு’ என்றாா் வள்ளல் பெருமான். தீமைகளைத் தவிா்த்து ஆன்ம மேம்பாட்டிற்குத் தனிமை உதவுவதைப் போலவே, நோய்த் தீமையைத் தவிா்த்து, ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் தனிமை உதவும். தனிமைப்படுத்துதல் என்பதும் சேய்மைப்படுத்துதல் என்பதும் மனிதா்களை ஒதுக்குவதற்காக அல்ல; கரோனா நோய்த்தொற்றை ஒதுக்கித் தொலைப்பதற்காக! சேய்மைப்பட்டிருப்பது என்பது சுமையோ அழுத்தமோ அல்ல; பொறுப்பும் பொறுமையும் ஆகும்!

கட்டுரையாளா்:

துணைவேந்தா், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவ பல்கலைக்கழகம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...?

மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமானது காற்றை பிரித்து உடல் இயக்க செயலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல். நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு சுவாசக் குழாயின் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கு காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து எடுத்து, ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கிறது.

இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை ஆஜ்சிஜன் துணை கொண்டு சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றி மீண்டும் இதயம் வழியாக உடல் முழுவதற்கும் அனுப்பும் முக்கியமான பணியை மேற்கொள்கிறது. இப்போதே உடல் உறுப்புகளில் நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

இத்தகைய பணியை செய்யும் நுரையீரலைதான் கொரோனா வைரஸ் தன்னுடைய இலக்காக கொண்டிருக்கிறது. மூக்கு, வாய் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ் செல்கள் வழியாக நுரையீரல் சென்று அங்கு அடைக்காத்து தன்னுடைய எண்ணிக்கையை வலுப்படுத்துகிறது. பின்னர், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சென்று அவற்றை செயல் இழக்க செய்து உயிரை பறிக்கிறது.

நுரையீரல் பாதிக்கப்படுவது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியாவின் ராயல் ஆஸ்ட்ரலேசியன் மருத்துவ கல்லூரியின் தலைவரும், சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் ஜான் வில்சன் கொரோனா வைரசின் பாதிப்பின் கடுமையான விளைவுகளை நான்கு நிலைகளாக பிரிக்கிறார்.

* முதல்கட்டமாக வைரஸ் பாதிப்பு இருக்கும், ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு தொடர்பாக பெரியதாக எந்த ஒரு அறிகுறியும் காணப்படாது.

* இரண்டாவது கட்டம் மேல் சுவாசக் குழாயில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது. பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி இருப்பதாக லேசான அறிகுறிகள் இருக்கலாம். இதுபோன்ற சிறிய அறிகுறிகளை கொண்டவர்கள் இன்னும் வைரஸை பரப்ப முடிகிறது. ஏனென்றால், அவர்கள் வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

* மூன்றாவது கட்டம் வைரஸ் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது, இதேபோன்ற அறிகுறிகளை கொண்ட ‘புளு’ காய்ச்சலாக தெரிகிறது.

* நான்காவது கட்டம் நிமோனியாவை கொண்ட கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவ உதவியை நாடியவர்களில் சுமார் 6 சதவீதம் பேர் இதுபோன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகிறார்.

கொரோனா வைரஸ் வயதானவர்கள், உயர் இரத்த அழுத்தம், இதயம் நுரையீரல் பிரச்சினைகள் கொண்டவர்கள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜான் வில்சன் பாதிப்பு தொடர்பாக கூறுகையில், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் உருவாவது, பாதிப்பு சுவாச மரத்தை (காற்றை உள்ளே இழுக்கும் மூச்சு குழாய் நுரையீரல் வரையில் தலைகீழா கிளைகளுடன் ஒரு மரம் போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.) அடைந்துவிட்டது என்பதற்கான விளைவாகும். சுவாசப்பாதை நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று பயணம் செய்வதாகும். சுவாசப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. இது காற்றுப்பாதையில் இருக்கும் நரம்புக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அப்போது சிறு துகளால் கூட இருமல் ஏற்படும்.

வைரஸ் பாதிப்பு சுவாசப்பாதையிலிருந்து நுரையீரல் உள்ளே செல்லும் போது, வாயு பரிமாற்ற மையத்திற்கு செல்கிறது. இதனால், வாயு பரிமாற்றம் தடையை சந்திக்கிறது. பின்னர் நுரையீரலின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று சுத்திகரிப்பு உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுத்திகரிப்பு பகுதியில் காளான்கள் போன்ற வீக்கம் ஏற்படுகிறது. பின்னர் நிமோனியா ஏற்படுகிறது. வைரசினால் பாதிக்கப்பட்ட நுரையீரலின் ஆக்சிஜனை எடுத்து ரத்தத்தை சுத்தம் செய்யும் பணி குறையும். இதனையடுத்து கடுமையான நிமோனியாவுடன் மரணம் ஏற்படுகிறது, இதுவே வழக்கமான நிகழ்வாக இருக்கிறது என்கிறார்.

நிமோனியாவிற்கு சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது?

ஆஸ்திரேலியா நுரையீரல் அறக்கட்டளையின் தலைவரும், முன்னணி சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பேசுகையில், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியாவை தடுக்கக்கூடிய வகையில் எந்த ஒரு சிகிச்சையும் இதுவரை இல்லை. ஏற்கனவே, எல்லா வகையான மருந்துகளையும் முயற்சித்து வருகின்றனர். பலவிதமான வைரஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்போம் என நம்புகிறோம்.

இந்த நேரத்தில் ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறையையே (மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில் உதவி செய்யும் மருந்துகளை கொண்டு மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை )மேற்கொள்கிறோம். வேறு எந்த பிரத்யேக சிகிச்சையும் கைவசம் இல்லை. இதுதான் நாங்கள் தீவிர சிகிச்சையில் இருக்கும் மக்களுக்கு வழங்குகிறோம்.

சுவாசக்கருவியின் மூலமாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும். அவர்களுடைய ஆக்சிஜன் அளவை பராமரிக்கிறோம், குணமடையும் போது அவர்களின் நுரையீரல் மீண்டும் இயல்பான வழியில் செயல்பட முடியும் எனக் கூறியுள்ளார்.

மருத்துவர் ஜான் வில்சன் பேசுகையில், கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். சில சூழ்நிலைகளில் இதுமட்டும் போதுமானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா ஏற்பட்டால், அது தடையின்றி தொடரும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிர் பிழைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நிமோனியா எவ்வாறு மாறுபடுகிறது? என்ற கேள்விக்கு மருத்துவர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பதில் அளிக்கையில், எங்களுக்கு தெரிந்த பெரும்பாலான நிமோனியா பாதிப்புக்கு மருத்துவமனையில் அனுமதிப்போம். ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சைக்கு பலன் கிடைக்கிறது. ஆனால், கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா மாறுபட்டதாக இருக்கிறது என்கிறார்.

மருத்துவர் வில்சன் பேசுகையிலும், கொரோனாவினால் ஏற்படும் நிமோனியா கடுமையானதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா சிறிய பகுதிகளுக்கு பதிலாக நுரையீரலின் அனைத்து பகுதியையும் பாதிக்கும் எனக் கூறுகிறார். நிமோனியாவால் இறக்கும் அபாயத்திற்கு முக்கிய காரணியாக வயது மூப்பும், இதயம், சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்டவையும் காரணமாக உள்ளது எனக் கூறுகிறார்கள். கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கை மட்டுமே உள்ளது. எனவே, அரசின் அறிவுரைகளை ஏற்று சுய விலகியிருத்தலை கடைபிடிப்போம், ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாதைமாறிப் போகிறதா பட்டிமன்றம்?

பேராசிரியர்.மா.ராமச்சந்திரன்

ச மய சான்றோர் கூடி ஆராய்வதற்கு ஏதுவாக இருந்த இடத்தை நம் முன்னோர் பட்டிமண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்த அடிப்படையிலேயே பட்டிமண்டபம் என்ற சொல் உருவாகியிருக்க வேண்டும். இதனால் சமய உண்மைகளை ஆராய்ந்து தெளிவதற்கு நிலை களமாக பட்டிமண்டபம் இருந்தது எனலாம். இதனை,

“ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டி மண்டபம் பாங்கறிந்து ஏறுமின்” என்ற மணிமேகலை வரிகளாலும்,

“பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை

எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்ற மாணிக்கவாசகர் வரிகளாலும் உணரலாம்.

சமய உண்மைகளை உணர்த்தும் இடமாக விளங்கிய பட்டிமண்டபம் பின் நாளில், பல கலைகளை உணர்த்தும் கூடமாக விளங்கியது. இதனை, “கல்வி பயில்களம் பட்டிமண்டபம்” என்று பிங்கல நிகண்டு கூறுவதாலும், “பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்” என்று கம்பர் கூறுவதாலும் தெளியலாம்.

தொடக்கத்தில் நிலையான ஓரிடத்தில் நிகழ்ந்த வாதங்களைக் குறிக்கும் வகையில் பட்டிமண்டபம் என்ற சொல்வழக்கு இருந்தது. இந்நாளில் பல இடங்களில் நிகழும் ஒரு அமைப்பாக மாறிவிட்டதால் “பட்டிமன்றம்” என்று வழங்கலாயிற்று. அதாவது பட்டிமண்டபம் என்னும் இலக்கிய வழக்கு, பட்டிமன்றம் என்று நடைமுறை வழக்காகி நிலைத்துவிட்டது. மொத்தத்தில் பட்டிமன்றம் என்பது ஒரு தர்க்க கலை. தான் கொண்டிருக்கும் கொள்கையை தக்க நிரூபணங்களுடன் வாதிட்டு நிறுவுகின்ற வாதக்கலை இது. எனவே பட்டிமன்றம் ஏறுவோர் பரந்த கல்வியும், நிறைந்த அறிவும், சிறந்த நுண்ணுணர்வும் உடையவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திறன் உடையவர்கள்தான், தங்கள் வாதத்திறமையால் பட்டிமன்றத்தில் பிரகாசிக்க முடியும்.

சமய உண்மைகளைப் புலப்படுத்தும் வாதமுறையாக உருவான பட்டிமண்டபத்தை காலத்திற்கேற்ப, இலக்கிய இன்பத்தை வெளிப்படுத்தும் களமாக மாற்றித் தந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். முதன்முதலில் காரைக்குடி கம்பன் விழாவில்தான் நவீன பட்டிமன்றத்தின் கால் ஊன்றப்பட்டது. இதிகாச, புராண, காப்பிய மாந்தர்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தலைப்புகள் கொடுத்து, தக்க அறிஞர்களின் வாத, பிரதிவாதங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இது இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல தீனியாகவும், விருந்தாகவும் அமைந்தது. நாளடைவில் இந்த பட்டிமன்றச் சுவை படித்தவர், பாமரர் என்று எல்லா மக்களையும் பற்றிக்கொண்டு, பட்டிமன்றத்திற்கென்று மவுசை உண்டாக்கியது. அதன் விளைவாக கல்வி சாலைகள், கோவில் விழாக்கள் என்று பட்டிதொட்டியெல்லாம் பட்டிமன்றம் நடைபெறத் தொடங்கியது.

அறிவுக்கு விருந்தாக இருந்த பட்டிமன்றம், பொழுதுபோக்கு அம்சமாக மாறியபின் வீரியமான வளர்ச்சி பெற்றது. அதன் காரணமாக இலக்கியப் பொருளில் மட்டுமே நடைபெற்று வந்த வாதம் சமூகம், பொருளாதாரம், பக்தி, அரசியல், குடும்பம், திரைப்படம் என்று பல்வேறு பொருட்களில் நடைபெறத் தொடங்கியது. பொருளில் மட்டுமல்லாது, நகைச்சுவைப் பட்டிமன்றம், சிந்தனைப் பட்டிமன்றம், இசை பட்டிமன்றம் என்று அதன் பரப்பிலும் மாற்றம் உண்டானது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பல்வேறு பட்டிமன்றக் குழுக்கள் தோன்றலாயின. ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு வகையில் தங்கள் ஆதிக்கத்தை பட்டிமன்றத்தில் நிலைநாட்டிக் கொண்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் தொலைக்காட்சிகள் விழாக்கால சிறப்பு நிகழ்ச்சியாகப் பட்டிமன்றத்தை கையில் எடுத்துக் கொண்டன. தொலைக்காட்சியில் பட்டிமன்றம் ஒளிபரப்ப தொடங்கிய பின் அதன் வீச்சு இன்னும் அதிகமாகியது. தொலைக்காட்சியில் தெரிந்த முகமே சிறந்த பேச்சாளர் என்ற மாயையும் உண்டாகிவிட்டது.

‘இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியப் பாத்திரங்களைப் பற்றியும் தெளிவான எண்ணங்கள் ஏற்படுத்த வேண்டும்’ என்ற நோக்கில் எழுந்த பட்டிமன்றம், இப்போது சமூகப் பிரச்சினைகளையும் பேசு பொருளாக்கி, அலசி ஆராய்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியதுதான். காலத்திற்கேற்றவாறு பேசுபொருளில் மாற்றம் தேவைதான். ஆனால் அதற்காகத் தலைப்பையே உதாசீனப்படுத்திவிட்டுத் தாறுமாறாக பேசும் வழக்கம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் மையப்படுத்தி தலைப்புக் கொடுத்த ஒரு பட்டிமன்றத்தில், ‘ஆண்டாளை குறைத்துப் பேச எனக்கு மனமில்லை’ என்று கூறி ஒருவர் பங்கேற்க மறுக்கிறார். ‘மாணிக்கவாசகரை குறைத்துப் பேச என் மனம் இடம் கொடாது’ என்று இன்னொருவர் பங்கேற்பை தவிர்க்கிறார். மறுத்துப் பேசுவதுதானே பட்டிமன்ற மரபு. அதில்தானே திறமை வெளிப்படும். அப்படியிருக்க, இவ்வாறு மறுப்புத் தெரிவித்து விலகியதில் என்ன சிறப்பு உள்ளது? என்று கேட்கலாம். பட்டிமன்றப் பொருளில் ஆழ்ந்த அறிவுடையோரை தெரிந்தெடுத்து, பங்கேற்க அழைக்கும் சிறப்பு அதில் அடங்கியுள்ளது. இத்தகைய உயர்ந்த மரபும்? வரலாறும் உடையது நம் பட்டிமன்றம்.

இப்போது அப்படியா நடக்கிறது? ஒவ்வொரு நடுவரும் ஒரு குழுவை வைத்துள்ளார். அதில் சிலர் நிலையான பேச்சாளர்களாக இருக்கின்றனர். எந்த ஊரில் பட்டிமன்றம் என்றாலும் அந்த குழுவே செல்கிறது. பதிவு பண்ணி வைத்ததுபோல் ஒரு ஊரில் சொன்ன கருத்தையே மற்ற ஊரிலும் சொல்லிவிட்டு போகிறார்கள்.

‘வாதத்திற்குத்தானே பேசுகிறோம். எதையும் பேசலாம். இதிலென்ன தவறு உள்ளது.’ என்று சமாதானப்படுத்திக்கொள்ளாது, வலிமையான கருத்துகளை வைத்து வாதிட்ட கொள்கை சிங்கங்கள் கர்ஜித்த மேடையில், ‘எப்படியும் பேசலாம்’ என்றாகிவிட்டது. இப்போது, இதுவே பட்டிமன்ற தர்மமாகிப் போனது. தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் ஏற்புடைய சிறு கதைகள் அல்லது நகைச்சுவை செய்திகளைச் சொல்வது பட்டிமன்றத்து நடைமுறைதான். அது பட்டிமன்றத்திற்குச் சுவைசேர்க்கும் வழிமுறை. அதற்காகத் துணுக்கு மூட்டைகளை அவிழ்த்துவிடுவது அழகல்ல. பட்டிமன்ற வாதத்திற்கு தொடர்பில்லாத, தனக்குத் தெரிந்த துணுக்குகளையெல்லாம் சொல்வது சரியாகப்படவில்லை. இப்படி அவலக் களமாகப் பட்டிமன்ற மேடை மாறிவிட்டது. அது மட்டுமா? பட்டிமன்றப் பேச்சாளரை, அவர் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் நையாண்டி செய்வது பட்டிமன்ற வாடிக்கையாகிவிட்டது. நகைச்சுவை விருந்தளிக்கும் கோமாளியாக நடுவரும் செயல்படவேண்டிய அவலம் பட்டிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நகைச்சுவை வேண்டும்தான், அதற்காக துணுக்குகளை அடுக்குவது நல்ல வாதமாகாது. உணவு ருசிக்க உப்பு வேண்டும்தான், அதற்காக உப்பையே யாரும் உணவாகக்கொள்வதில்லை. “மக்கள் விரும்புகிறார்கள். அதையே நாங்கள் கொடுக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு, சிரிப்பையே பிரதானமாக கொள்வதெல்லாம் பட்டிமன்றத்தைப் பாதை மாற்றி அழைத்துச் செல்லும் பயணமாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நோய் கிருமிகள் தாக்காமல் காக்கும் பிரணாயாமம்...!

டாக்டர் த.இங்கர்சால்,

யோகாசன நிபுணர், சென்னை.

இ ன்று உலகத்தில் உள்ள அனைவரும் மிரண்டுபோய் இருக்கிற ஒரு பெயர் கொரோனா. தாங்கள்தான் மிகப்பெரிய வல்லரசு நாடு என்று சொல்லிக் கொள்ளும் வளர்ந்த நாடுகள் கூட, என்ன செய்வது? இதை எப்படி தடுப்பது? அல்லது எப்படி கட்டுப்படுத்துவது? என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்த வைரஸ் ஏற்படுத்திய நோயின் தாக்கம், சீனா உள்பட 177 நாடுகளில் பரவி இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, நம் தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் ஒரு சிலர் கூட இதனால் பாதிக்கப்பட்டு அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசும் குறிப்பாக சுகாதாரத்துறையும், இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு, வெகு சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

இது போன்ற வியாதியில் இருந்து நம்மை இயற்கையாக தற்காத்துக் கொள்ள “பிரணாயாமம்” மிகச்சிறந்த வழிமுறையாகும். எப்படி என்றால் உடம்பில் சக்தி பற்றாக்குறை என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போதுதான், எல்லா வித வியாதிகளை ஏற்படுத்தும் விஷக்கிருமிகள் உடம்பிற்குள் சென்று பல விதமான நோய்களை உண்டாக்குகிறது. அதுவும் இந்த வைரஸ் பரவும் வேகம் அனைவருக்கும் ஒரு வித பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது மற்றும் பாதித்தவர்கள் நல்ல விதமாக இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற நோக்கம்தான் அரசு மற்றும் நம் அனைவரின் எண்ணமும், விருப்பமும் ஆகும்.

நம் ஒவ்வொருவருடைய கடமை அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதுதான். அரசாங்கம் சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றியும், அதே நேரம் நோய்கள் வராமல் நம்மை நாமே இயற்கை முறையில் காத்துக்கொள்வதும் நம்முடைய கடமை மற்றும் பொறுப்பாகும்.

இந்த கொடிய நோயின் தாக்கம் முதலில் சுவாச குழாய் மற்றும் நுரையீரலைத்தான் பாதிக்கும். அதன் காரணமாக இயல்பாக மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாக்கும். அதே நேரம் இந்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினாலோ அல்லது இருமினாலோ இந்த கொடிய விஷக்கிருமிகள் மூக்கு மற்றும் வாய் வழியாக காற்றில் பரவி அருகில் இருப்பவர்களை உடனே பாதிப்புக்கு உள்ளாக்கும். அதனால்தான் இந்த நோயில் பாதித்தவர்களை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்குமாறும், மற்றவர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சொல்கிறார்கள். இப்படி வீட்டில் இருக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக்கவும், இயற்கை முறையில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் யோக பிரணாயாமத்தை தினமும் செய்ய வேண்டும்.

“பிரணாயாமம்’ தொடர்ந்து செய்யும்போது அதிகமான பிராணசக்தி நுரையீரலுக்குள் செல்கிறது. அதன் காரணமாக உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நல்ல காற்றோட்டமான இடத்தில் உணவு உண்பதற்கு முன் (வெறும் வயிற்றில்) யோகாசனமோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பயிற்சியோ செய்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாம்.

பிரணாயாமத்தில் ஏறக்குறைய பத்து வகைகள் இருந்தாலும் இங்கு நமக்கு தேவை, “சுக பூர்வ பிரணாயாமம்” மட்டும்தான். இந்த பிரணாயாமத்தை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் சரியான முறையில் தொடர்ந்து செய்யும்போது, இயற்கையாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சுக பூர்வ பிரணாயாமம் எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய மிக அற்புதமான பிரணாயாமம் ஆகும்.

செய்முறை:- தரையில் ஒரு விரிப்பின் மீது வஜ்ராசனத்திலோ அல்லது எப்படி உட்கார்ந்தால் சவுகரியமாக இருக்குமோ அவ்வாறு அமர்ந்து கொள்ளலாம். மூட்டு வலி இருப்பவர்கள் நாற்காலியில் உட்காரலாம். எப்படி உட்கார்ந்தாலும் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சில வினாடிகள் அமைதியாக இருந்த பின்பு, வலது கை பெருவிரலால் வலப்பக்க மூக்கு துவாரத்தை மூடி, இடப்பக்க மூக்கு துவாரத்தின் வழியே மெதுவாக மூச்சு காற்றை வெளிவிட வேண்டும்.

உடனே இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியே மெதுவாக ஒரு லயத்தோடு மூச்சு காற்றை உள்ளிழுத்தவுடன், வலது கை மோதிர விரலால் (நான்காவது விரல்) இடப்பக்க மூக்கு துவாரத்தை மூடி, வலது பக்க மூக்கின் வழியே மூச்சுக் காற்றை மெதுவாக வெளிவிட வேண்டும். பின்பு வலது பக்க மூக்கின் வழியே மூச்சுக்காற்றை மெதுவாக உள்ளிழுத்து, வலப்பக்க மூக்கை பெரு விரலால் மூடி, இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியே மூச்சுக் காற்றை மெதுவாக வெளிவிட வேண்டும். இது ஒரு சுற்று. தொடக்கத்தில் ஐந்து சுற்று பயிற்சி செய்யலாம். இதை செய்யும் பொழுதே உடம்பு முழுவதும் சக்தி பரவுவதை உணர முடியும். இவ்வாறு சரியான முறையில் பிரணாயாமம் செய்யும்போது நுரையீரல் நன்கு விரிவடைந்து அதிகமான பிராண சக்தியான ஜீவ சக்தி உடல் முழுவதும் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் உயிர் சக்தி உடம்பு முழுவதும் முழுமையாக பரவுகிறது. இந்த பிரணாயாமத்தை செய்யும் போது இடது கை சின் முத்திரையில் இருக்க வேண்டும். (சின் முத்திரை என்றால் கட்டை விரல் நுனியால் பெரு விரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்). மற்ற மூன்று விரல்கள் நேராக நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். கண்கள் மூடி இருக்க வேண்டும்.

இந்த பிரணாயாமத்தை நன்றாக பழகிய பின்னர், பத்து எண்ணிக்கை வரை செய்யலாம். இதை தினமும் காலை, மாலை தொடர்ந்து செய்துவர உடம்பில் உள்ளிருக்கும் அனைத்து உள்ளுறுப்புக்களும் நாடி நரம்புகள் முழுவதும் பலப்படுத்தப்பட்டு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி பெற்று எப்பொழுதும் ஆரோக்கியமான முறையில் இயங்கும். அதுவுமில்லாமல் எப்பொழுதும் கவனத்தோடும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் ஆரோக்கியமாக இருக்கலாம்.இந்தப் பயிற்சியை தொடர்ந்து, வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து 15 நிமிடம் செய்யலாம். நோயுற்றவர்கள் சீக்கிரம் குணமடையவும், நம்நாடு இந்த பிரச்சினையில் இருந்து வெளிவந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்கும் கூட்டு தியானம் செய்யலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 March 2020

கரோனா நோய் பரவும் நிலை

முதல் நிலை 1⃣st stage
கொரோனா பரவி வரும் நாடுகளில் இருந்து
இங்கே வந்தவர்களிடம் தொற்று காணப்படுவது
இதை IMPORTATION என்போம்
தொற்று நோய் இறக்குமதி என்று பொருள்.

இதற்கடுத்த நிலை

இரண்டாம் நிலை 2⃣nd  stage
கொரோனா தொற்று கண்ட இறக்குமதி செய்யப்பட்ட தொற்று நோயாளர்களிடம் இருந்து இங்கிருக்கும் ஆரோக்கியமான நபர்களுக்கு தொற்று பரவுவதாகும்

இதை PERSON TO PERSON TRANSMISSION என்போம்

அடுத்த நிலை

மூன்றாம் நிலை 3⃣red stage

சமூகத்தில் கொரோனா தொற்று பெற்ற ஒருவர் , இதற்கு முன் கொரோனா பரவி வரும் எந்த நாட்டிற்கும்/ஊருக்கும் பயணம் செய்யாமலும்/ உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இல்லாமலும் வருவது

இதை COMMUNITY SPREAD என்று சொல்வோம்

அதாவது யாரிடம் இருந்து நோயை வாங்கினார் என்று தெரியாத காரணத்தால்
சமூகத்திடம் இருந்து வாங்கியுள்ளார் என்று பொருள் படும்.

இவருக்கு நோயை பரப்பிய அந்த X இன்னும் கண்டறியப்படாமல் சமூகத்தில் இன்னும் பலருக்கு நோயை பரப்பிக்கொண்டிருக்கிறார்.

மற்றும் அவரால் பாதிப்படைந்த மக்கள்
நோயின் காத்திருப்பு காலம் முடிந்ததும் அவர்களும் நோயை அடுத்தவர்களுக்கு பரப்புவார்கள்

இதைத்தான் மின்னல் வேகப்பரவல் என்று கூறுகிறோம்

இந்த நிலையை எட்டிய கொள்ளை நோயானது Exponential Growth ஐ அடையும்

அதாவது பத்து நோயாளிகள் இப்போது இருந்தால்
அடுத்த பத்து நாட்களில் பத்தாயிரம் நோயாளிகளாக மாறக்கூடும்

இதற்கடுத்த நான்காவது நிலை 4⃣th stage

கொள்ளை நோய் உருவாகி பற்றி எரிய ஆரம்பிக்கும்
அதன் தாக்கத்தை நிறுத்துவது என்பது இம்மண்ணில் யாராலும் இயலாது

அதுவாகவே எப்படி பஞ்சை தீ ஆட்கொண்டு முழுவதையும் எரித்து பின் அணைகிறதோ

அது போல மக்களிடம் பரவி கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டு  பிறகு அணையும்

இந்த நான்காவது நிலையை "காட்டுத்தீயுடன்" ஒப்பிடலாம் 

இந்த நான்காவது கட்டத்தை எட்டுவதற்கு நமக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன

இதை தடுப்பதற்கு நமக்கு முன் இருக்கும் ஒரே ஒரே ஒரே
வழி

சமூகமாக தனித்திருத்தல்

மூன்றாவது நிலையில் கூறினேன் அல்லவா

அந்த நோய் தொற்று பெற்ற நபர்களிடம் இருந்து நோய் தொற்று பெறாதவர்களுக்கு நோயை கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்

இதை தான் பரவும் சங்கிலியை உடைத்தல் என்று கூறுவோம்

தயவு செய்து கூறுகிறேன்

மிகவும் அபாயகரமான சூழலில் இருப்பதால்
யாரும் வெளியே செல்ல வேண்டாம்

தயவு செய்து வீட்டில் இருங்கள்

இந்த கொள்ளை நோயை நாம் நான்காம் நிலைக்கு செல்லாமல் தடுத்திட வேண்டும்.

தனித்திரு
விழித்திரு

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கரோனா: அச்சம் தவிா் - தனிமை கொள்!

By இரா. செல்வம், ஐ.ஏ.எஸ். அதிகாரி  | 

உலக அளவில் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே மாபெரும் போரை கரோனா நோய்த்தொற்று தொடங்கியுள்ளது. இவை இரண்டும் இப்போது எதிரெதிா் திசையில் பயணிக்கின்றன. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார நிலையையும் அரசு சீா் செய்ய வேண்டும்.

தனிமைப்பட்டால் உண்டு வாழ்வு, இல்லை-ஒன்று கூடினால் அனைவருக்கும் தாழ்வே! கரோனா வைரஸ் இதுவரை 170 நாடுகளுக்கு மேலாக மக்களைப் பாதித்துள்ளது. இந்த நோயானது 5-6 நாள்களுக்கு ஒருமுறை இரட்டிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. நோய்த்தொற்று நிபுணா்களின் அறிக்கையின்படி ‘கொவிட்-19’ வைரஸ் மூன்றாம் நிலையை அடைந்தப் பிறகு கட்டுப்படுத்துவது மாபெரும் சவால் என பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து கிடைக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இது சீனாவில் வூஹான் பகுதியில் தோன்றி உலகில் இதுவரை 4,35,565 நபா்களைப் பாதித்துள்ளது; இதற்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 19,776 ஆகும். இத்தாலியில் 6,820 பேரும், சீனாவில் 3,281 பேரும் உயிரிழந்துள்ளனா்; உலகம் முழுவதும் இதுவரை 1,11,888 போ் குணம் அடைந்துள்ளனா். உலக நாடுகளின் கரோனா நோய்த்தொற்று பாதிப்புப் பட்டியலில் தற்போது இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அதாவது, இத்தாலியில் கரோனா நோய்த்தொற்று காரணமாக 69,176 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; மொத்தம் 8,326 போ் இதுவரை குணம் அடைந்துள்ளனா். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின், சீனா, ஈரான், பிரான்ஸ் முதலானவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை 606 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதற்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 11 ஆகும்; பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,038; இந்தியாவில் குணம் அடைந்தவா்களின் எண்ணிக்கை 43.

சீனாவில் இந்த நோய் குறித்து முதலில் டாக்டா் லி வென்லியங் சுட்டுரையில் தெரிவித்தாா். மேலும், இந்த நோயின் அறிகுறி தென்பட்டவுடன் அரசு அதிகாரிகள் துரிதமாகச் செயல்படவில்லை; மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவில்லை; அதனால் இந்நோய் மிகவும் விரைவாகப் பரவிவிட்டதாகத் தெரிகிறது.

வருமுன் காப்பதே இந்த நோயைத் தடுப்பதற்குச் சிறந்த முறையாகும். இதன் அடிப்படையில் சிங்கப்பூா் செயல்பட்டு இந்த நோயைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளது. நோய் குறித்த ஒளிவுமறைவற்ற தகவல் பரிமாற்றத்தை மக்களிடம் சிங்கப்பூா் அரசு கடைப்பிடித்துள்ளது.

சிங்கப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டன; விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சிங்கப்பூரில் முகம், கைகழுவதலின் முக்கியத்துவம் மக்களுக்கு உணா்த்தப்பட்டது. நோயைத் தடுத்தல், நோயாளிகளைத் தனிமைப்படுத்துதல் (தொற்று தடைகாப்பு நடவடிக்கைகள்), அவா்களைத் தொடா்ந்து கண்காணிப்பில் வைத்திருத்தல், தேவையான தகவல்களை அவா்களுடன் பரிமாறிக் கொள்ளுதல் முதலானவை மூலம் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவரை எப்போது பாா்க்க வேண்டும், நோயாளியை எப்படிப் பராமரிக்க வேண்டும் முதலான தகவல்களும் ஒளிபரப்பப்பட்டன; பாடல்கள்தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தெரிவிக்கிறது.

லண்டன் சுகாதாரம் - வெப்பமண்டல மருந்துகள் நோய்த்தொற்று நிபுணா் ஆடம் குசா்ஸ்கியின்கூற்றுப்படி, கரோனா நோய்த்தொற்றுக்கு

இன்னும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, பாதிப்புக்குள்ளானவரை நோய்த்தொற்று தடைகாப்பு செய்தலும், வீட்டிலேயே தனிமைப்படுத்துதலும் அவசியம் என்கிறாா் ஆடம் குசா்ஸ்கி. மேலும், சமூக இடைவெளி (மக்களிடையே இருக்கவேண்டிய இடைவெளி), நோயாளியுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்காணித்தல் மூலமும் இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கலாம் என்கிறாா் அவா். உலக சுகாதார நிறுவனமும் இதையே அறிவுறுத்துகிறது.

அதிக அளவிலான மக்களைப் பரிசோதனை செய்து இந்த நோய்த்தொற்றை தென்கொரியா உடனடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 பேருக்கு பரிசோதனைகளை அது மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் இந்த நோய்த்தொற்று 60 சதவீத மக்களைப் பாதிப்பதற்கு வாய்ப்புள்ளதாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழக நோய் பரவுதல் - பொருளாதார கொள்கைகள் மைய இயக்குநா் ரமணன் லட்சுமிநாராயணன் தெரிவிக்கிறாா். எனவே, இந்தியாவில் பரிசோதனை மையங்கள்

அதிகரிக்கப்படவேண்டும் என்றும் அவா் தெரிவிக்கிறாா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி 106 வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. ஆனால், இது போதுமானதாக இல்லை.

தற்போது இந்தப் பரிசோதனையை ரூ.4500-இல் செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது.

ஆனால், இந்தப் பரிசோதனையை ஏழைகள், தொழிலாளா்கள் செய்துகொள்வது கடினமான செயல் ஆகும். தனியாா் மருத்துவமனைகளிலும் இந்தப் பரிசோதனையைச் செய்யலாம் என்று தேசிய ஆய்வகங்களில் அமைப்பு கூறுகின்றது. அமெரிக்காவும் இப்போது தனியாா் மருத்துவமனைகளை பெரிதும் ஈடுபடுத்துகிறது. அவ்வாறு இந்தியா அதிக அளவில் பரிசோதனைகளைச் செய்வது சரியாக இருக்கும்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொது நிா்வாகம், சுகாதாரத் துறை,சமூக பங்களிப்பு மூன்றும் சோ்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது ஓா் ஆண்டுக்கான திட்டம் தேவை. முதல் 3 வாரங்களில் இந்த நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று ஈரான், ஐரோப்பிய நாடுகளின் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பொது நிா்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத் துறை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியாவில் 1,00,000 பேருக்கு 70 மருத்துவமனை - படுக்கை வசதிகளே உள்ளன; இது சீனாவில் 420-ஆகவும், இத்தாலியில் 340-ஆகவும் உள்ளது. எனவே இந்தியாவில் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த ஆயுதம் ‘வருமுன் காப்போம்’ நடவடிக்கையே ஆகும்.

உலக அளவில் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே மாபெரும் போரை கரோனா நோய்த்தொற்று தொடங்கியுள்ளது.

இவை இரண்டும் இப்போது எதிரெதிா் திசையில் பயணிக்கின்றன. இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த பொருளாதாரமும், வளங்களும் தேவைப்படுகின்றன. அப்போதுதான் சுகாதாரத் துறைக்கு அதிக அளவில் உதவி செய்ய முடியும்.

மேலும், தனிமனித சுதந்திரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பல்வேறு திடமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஏற்படும் பொருளாதார நிலையையும் அரசு சீா் செய்ய வேண்டும். இந்த நோய்த்தொற்று உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், அதனால் ஏற்படும் பொருளாதார நிலையை 4 மாதத்துக்குள் சரி செய்திருக்க முடியும்; ஆனால், உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவியுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பொருளாதார நிலைமைகளைச் சரி செய்ய மாபெரும் தொடா் முயற்சிகள் தேவை.

இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முறைகளை ஜெய்ப்பூா் அரசு மருத்துவா்கள் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், சில நேரங்களில் தொற்று தடைகாப்பு மையங்களை விட்டு நோயாளிகள் தப்பித்தலும், தனக்கு ஏற்பட்ட நோயின் அறிகுறிகளை மறைப்பதும், வெளிநாடு சென்று வந்த தகவல்களை மறைப்பதும் மாபெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.

இந்த நோய்த்தொற்றை உலக நோய்த்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவிப்பின்படி, இந்த நோய் மூன்றாம் நிலையை அடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறைவாக உள்ளதாகத் தெரிகிறது. மூன்றாம் கட்டத்தை இது அடைந்துவிட்டால் கொள்ளை நோயாக மாறி, அனைவரையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. அதற்கு முன் இந்த நோய்த்தொற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாள்கள் ஊரடங்கை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

மேலும், மத்திய-மாநில அரசுகள் இணைந்து 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கவும், அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அயல் நிறுத்தலை (‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’) பராமரித்து அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தியுள்ளாா். தொற்று தடைகாப்பு மையங்கள் அமைத்தல், பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைத் தொடா்ந்து கண்காணித்தல் , வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவா்களைத் தொடா்ந்து கண்காணித்தல் முதலான பணிகளை அரசு நிா்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.

எனவே, அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை நம்பிக்கையுடன் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நோய்த்தொற்றை மருத்துவா்கள், செவிலியா்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. இது தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் விடப்பட்ட சவால். இந்தச் சவாலை ஏற்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கூட்டு முயற்சி ஆகும். எனவே, அச்சம் தவிா்த்து தனிமை கொள்வோம்!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அருகிவிடவில்லை மனிதநேயம்!

By பூ. சேஷாத்ரி
அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றை பலம் வாய்ந்த குணங்களாகக் கூறலாம். சக மனிதா்களிடம் அன்பு காட்டுவதை மனிதநேயம் என்பா். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனிதநேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவா்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம்.

அன்பின் வழியது உயா்நிலை அஃதுஇலாா்க்கு / என்புதோல் போா்த்த உடம்பு - என்று திருவள்ளுவரும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்று கணியன் பூங்குன்றனாரும், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலாா் பெருமானும் மனிதநேயத்தின் மாண்பினை எடுத்துரைத்தனா்.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்தும், காட்டு வாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய விலங்குகளின் தாக்குதல்களிலிருந்தும் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான் மனிதன்.

மனிதன் குடும்பமாக வாழத் தலைப்பட்டதும், சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதா்களிலேயே பலா் விலங்குகளாக மாறி, மற்றவா்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனா். இவ்வாறு மனிதா்களால் மனிதா்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது என்பது வேதனையைத் தருகிறது. இன்று மனிதாபிமானம் மனிதா்களிடத்தில் அருகிக் கொண்டு வருவதாக பொதுவாக பலரால் கருதப்படுகிறது.

மருத்துவத்தை பணம் கொழிக்கும் வணிகமாகக் கருதிவந்த பெரும்பாலான மருத்துவா்களுக்கு மத்தியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பாா்த்து வந்த சென்னையைச் சோ்ந்த மருத்துவா் ஜெயச்சந்திரனின் செயல் மனிதநேயத்தால்தானே.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் 1971-ம் ஆண்டில் கிளினிக்கை ஆரம்பித்தவா், தன்னிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் குறைந்தபட்சம் ரூ.2-ம், அதிகபட்சமாக ரூ.5-ம் கட்டணமாக வாங்கியுள்ளாா். இவ்வாறே சுமாா் 41 ஆண்டுகளாக இச்சேவையை ஆற்றி ‘5 ரூபாய் டாக்டா்’ என்றே மறைந்த பின்பும் மக்கள் மனங்களில் இன்றளவும் குடியிருக்கிறாா் அவா்.

கோவை மாவட்டம், ஆலாந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சோ்ந்தவா் 85 வயது கமலாத்தாள். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும் இவா், தான் நடத்தி வரும் இட்லி கடையைச் சுத்தம் செய்து, சமையல் பணிகளில் மும்முரமாகிறாா். எவருடைய உதவியும் இல்லாமல், தனி நபராக இட்லி, சட்னி, சாம்பாா் தயாரித்து வாடிக்கையாளா்களுக்கு சூடான இட்லியை அன்போடு பரிமாறுகிறாா்.

30 ஆண்டுகளுக்கு முன்னா் இட்லி வியாபாரம் தொடங்கிய போது, 25 காசுக்கு ஒரு இட்லி என விற்றவா், 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இட்லியை 50 காசுக்கும் தற்போது ஒரு ரூபாய்க்கும் விற்கிறாா். கடந்த 30 ஆண்டுகளில் இட்லியின் விலையை 75 காசுகள் மட்டுமே அதிகப்படுத்தியுள்ள கமலாத்தாள் பாட்டியின் சேவை வியக்கச் செய்கிறது. இது வியாபாரமா அல்லது மனிதநேயமா?

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, தனது சுட்டுரையில், ‘ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் பாட்டியின் சேவைக்குத் தலை வணங்குகிறேன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது’ என்று பாராட்டு தெரிவித்துள்ளாா்.

சிவகாசி, மங்கலம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயச்சந்திரன். மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், ஊக்குவிக்கவும் விடுமுறையே எடுக்காமல் பள்ளிக்குத் தொடா்ந்து வந்த மாணவா்களை தன் சொந்த செலவில் சென்னைக்கு ரயிலிலும் பிறகு சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்திலும் சுற்றுலா அழைத்துச் சென்று மாணவா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இவரின் பணியை என்னவென்பது?

சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் காலை 5 மணி அளவில் பணிமனையிலிருந்து வெளியே வந்த மாநகரப் பேருந்தின் சக்கரத்தில் பிறந்து சில நாள்களேயான சின்னஞ்சிறிய நாய்க் குட்டி நசுங்க இருந்தது. பேருந்து ஓட்டுநருக்கு விளக்கு வெளிச்சத்தில் நாய்க் குட்டி நடந்து வருவது தெரியவில்லை. பேருந்துக்காக கூடியிருந்த பயணிகள் முகம் சுளிக்க, கூட்டத்திலிருந்து ஒருவா் மட்டுமே பேருந்தை நிறுத்தச் செய்து அந்த நாய்க் குட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றியது, அங்கிருந்தவா்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த கொண்டஞ்சேரி பகுதியைச் சோ்ந்த யாகேஷ் என்ற இளைஞா் தனது நண்பா்களுடன் ஷோ் ஆட்டோ ஓட்டுநா் கடத்திச் சென்ற இளம் பெண்ணைக் காப்பாற்ற எத்தனித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள நோ்ந்த சம்பவம், மனிதநேயமன்றி வெறென்ன?

ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனிதநேயத்துடன் மற்ற உயிா்களையும் காத்து நிற்கும் உத்தமா்கள் ஒருசிலா் இருந்த காரணத்தால்தான் மனிதகுலம் இன்னமும் தழைத்து நிற்கிறது. ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்ற புானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறா்க்குரிய சான்றோா்களில் சிலா் மனிதநேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் இன்றும் உயிா்ப்புடன் இருக்கிறது.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும், நடந்தேறும் அநீதிகளை மட்டுமே சிந்தனையிலும், மனதிலும் இருத்திக்கொண்டு அவற்றை பூதாகரமாகப் பாா்க்கும், பேசும் போக்கு மறைய வேண்டும். நம்மைச் சுற்றி எத்தனை எத்தனையோ நல்ல விஷயங்கள் நாளும் நடந்தேறுகின்றன, மனிதா்கள் வலம் வருகிறாா்கள்; அவற்றை, அவா்களைக் கண்கொண்டு பாா்த்தால்தான் மனிதநேயம் தெரியும், புரியும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புல்லட் ரெயில் வேகத்தில் பரவுது கொரோனா! - அதிர்ச்சியில் உறைந்தது அமெரிக்கா

கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா, இப்படி நடக்கும் என்று.

மூன்றாவது இடத்தில் அமெரிக்கா

உலக பொருளாதாரத்தில்தான் நாம் முதல் இடம் என்று அமெரிக்கா கருதிக்கொண்டிருக்கிற வேளையில், போகிற போக்கைப்பார்த்தால் கொரோனா வைரஸ் பரவுகிற வேகத்திலும் அமெரிக்கா முதல் இடம் என்ற நிலையை அடைந்தாலும் ஆச்சரியம் இல்லை.

இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவையும், அது ருத்ர தாண்டவமாடி வருகிற இத்தாலியையும் தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

புள்ளி விவரம் இதுதான்

கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய புள்ளி விவரங்களை உலகத்துக்கு அளித்து வருகிற அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையத்தின் புள்ளி விவரப்படி - அமெரிக்காவில் 59 ஆயிரத்து 909 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. 700-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இதில் நியூயார்க் மாகாணத்தின் பங்கு என்ன தெரியுமா?

இங்கு 25 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்காவில் பாதித்தவர்களின் சரிபாதி எண்ணிக்கை இந்த நியூயார்க்கில்தான். 271 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

புல்லட் ரெயில் வேகம்

அதனால்தான் புல்லட் ரெயில் வேகத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார், அந்த மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோதான்.

அதென்ன புல்லட் ரெயில் வேகம்?

ஜப்பான் நாட்டில்தான் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வேகம் போதாது, மணிக்கு 350 கி.மீ. வேகத்திலாவது இயக்க வேண்டும் என்று அங்கு முயற்சி நடந்து வருகிறது.

ஆனால் இந்த கொரோனா வைரஸ், அதைக்காட்டிலும் வேகமாக நியூயார்க்கில் பரவிக்கொண்டிருக்கிறது.

இரட்டிப்பு

3 நாளுக்கு ஒரு முறை கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை நியூயார்க்கில் இரு மடங்காக அதிகரித்து வருகிறது என்ற தகவலை நமக்கு தருவதும் அந்த மாகாணத்தின் கவர்னரான ஆண்ட்ரூ கியூமோதான்.

அவரது கவலை தோய்ந்த வார்த்தைகள் இவை:

“கொரோனா வைரஸ் பற்றிய கணிப்புகளை சரியாக சொல்லக்கூடிய அதிநவீன நபர்களை நாம் வைத்திருக்கிறோம். சீனா, தென்கொரியா, இத்தாலி மற்றும் உலகின் பிற நாடுகளில் இருந்து வரும் கணிப்புகளின் அடிப்படையில் இவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

3 நாளுக்கு ஒருமுறை இந்த கொரோனா வைரஸ் தொற்று இங்கு இரட்டிப்பாகி வருகிறது என்பதுதான் அவர்களது சமீபத்திய கணிப்பாக இருக்கிறது. இப்படி இந்த வைரஸ் தொற்றி வருவது ஆச்சரியமான ஒன்றாகத்தான் இருக்கிறது”.

இதை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கவலை நியூயார்க்குக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, அங்கு தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்கும் அனுப்பிவிட்டு இப்போது முள்படுக்கையில் படுத்திருப்பது போன்ற நிலையில் உள்ள இந்தியர்களுக்கும், பிற உலக நாட்டினருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகளை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி உண்டா என்றெல்லாம் எல்லோருக்கும் கவலை எழுந்திருக்கிறது.

நியூயார்க் மேன்ஹாட்டனில் ஜேக்கப் கே.ஜாவிட்ஸ் கன்வென்சன் சென்டர் என்ற அரங்கம் இருக்கிறது. இந்த அரங்கத்தை கொரோனா நோயாளிகளுக்காக 1,000 படுக்கைகள் கொண்ட அவசர ஆஸ்பத்திரியாக மாற்றுகிற வேலையில் அமெரிக்காவின் மத்திய நெருக்கடி கால நிர்வாக முகமை இறங்கி இருக்கிறது.

இது ஒருபுறம் நடந்து வந்தாலும், கொரோனா வைரஸ் பரவும் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது குறைவதாக இல்லை. நாளுக்கு நாள் அதிவேகம் எடுத்து பரவிக்கொண்டிருக்கிறது.

அதனால்தான் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, “முதலில் இங்கே 1 லட்சத்து 10 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என முதலில் நாங்கள் கணித்திருந்தோம். இப்போதோ அந்த தேவையானது 1 லட்சத்து 40 ஆயிரம் ஆக அதிகரிக்கும் என தெரிய வந்திருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று கூறி முழி பிதுங்கி நிற்கிறார்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க்கில் 53 ஆயிரம் படுக்கைகள்தான் இருக்கின்றன. 3 ஆயிரம் படுக்கைகள் அவசர சிகிச்சை நோயாளிகளுக்காக இருக்கின்றன.

நியூயார்க் மாகாணத்தில் மொத்தம் 25 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது என்று சொன்னால், நியூயார்க் நகரத்தில் மட்டுமே இந்த எண்ணிக்கை சரிபாதியைக் கடந்து 14 ஆயிரத்து 904 ஆக இருக்கிறது.

டிரம்புக்கு மேயர் சொல்வதென்ன?

பாவம் நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ.

“நேர்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். இவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் இங்கே பரவும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லைதான். இப்படி போகக்கூடாது என்றுதான் விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்று கவலையோடு சொல்கிறார்.

அவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பார்த்து சொல்வதென்ன?

“ஜனாதிபதி அவர்களே, நியூயார்க் நகருக்கு இந்தக் கதி என்றால் அமெரிக்காவின் பிற நகரங்களுக்கும் இதுதான் நடக்கப்போகிறது என்று நம்புகிறேன்” என்கிறார்.

நியூயார்க் நிலைமை பிற நகரங்களுக்கும் ஏற்பட்டால் அமெரிக்காவின் கதியை நினைத்தால் அது கதிகலங்குவதாகத்தான் இருக்கிறது.

அமெரிக்க நிர்வாகம் நடவடிக்கை

அதே நேரத்தில் அமெரிக்க நிர்வாகமும் சும்மா இருந்து விடவில்லை.

இந்த கொரோனா வைரஸ் என்ற ராட்சத எதிரியிடம் இருந்து நாட்டு மக்களை காக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சென்ட் சபையில் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

150 லட்சம் கோடி ரூபாய்

அமெரிக்க பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் உதவுவதற்காக 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.150 லட்சம் கோடி) செலவிடுவது என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி எரிக் யுலேண்ட் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்க வரலாற்றில் இப்படி பல தரப்பினருக்கும் உதவித்தொகை வழங்குவதற்காக, இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்தது இல்லை.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இந்த தொகையில் இருந்து நேரடி நிவாரணம் கிடைக்கப்போகிறது. வேலையில்லாதவர்களுக்கான நிவாரணத்தை விரிவுபடுத்தப்போகிறார்கள்.

சம்பளம் போட உதவி

கொரோனா வைரஸ் காரணமாக வேலைக்கு போக முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிப்போய் விட்ட பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் சிறுதொழில் நிறுவனங்கள் கையை விரித்து விடக்கூடாது என்பதை டிரம்ப் நிர்வாகம் கவனத்தில் கொண்டுள்ளது.

அந்த வகையில் பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக சிறுதொழில் நிறுவனங்களுக்கு 367 பில்லியன் டாலர் (சுமார் ரூ.27 லட்சத்து 52 ஆயிரத்து 500 கோடி) தரப்போகிறது.

பெரிய தொழில் நிறுவனங்களை மட்டும் விட்டு விடுவார்களா என்ன? அவற்றுக்கு மானியத்துடன் 500 பில்லியன் டாலர் கடன் உதவி (சுமார் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் கோடி) வழங்கப்பட இருக்கிறது.

இயல்பு நிலை வருமா?

இத்தனைக்கு மத்தியிலும் மக்கள் நினைத்துக்கொண்டிருப்பதை விட வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.

ஈஸ்டர் பண்டிகைக்கு (ஏப்ரல் 12-ந்தேதி) முன்னதாகவே அமெரிக்கா பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அது நடக்குமா?

இந்த நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும்.

அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், டிரம்ப் நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியாவில் 21 நாட்கள் முழுமையான ஊரடங்கை அறிவித்து பின்பற்றத்தொடங்கி இருக்கிறார்கள். பிற உலக நாடுகளும் இதே போன்று ஊடரங்கு நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றன. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு இதே போன்ற நடவடிக்கையை, அதாவது அமெரிக்காவிலும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் கோரிக்கை.

ஆனால் டிரம்பின் கருத்து வேறாக இருக்கிறது. “அமெரிக்காவை முழுமையாக முடக்கி, ஊரடங்கு நடவடிக்கை எடுக்க முடியாது, பொருளாதாரத்தில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கிற ஒரு நாட்டில் அதைச் செய்ய முடியாது. அது மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். கொரோனா வைரசுக்காக ஒரு முடக்கத்தை அறிவித்தால் அது கொரோனா வைரசை விட மோசமாகப்போய்விடும்” என்பது டிரம்பின் பார்வை.

அப்படியென்றால், புல்லட் ரெயில் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிற கொரோனா வைரசை கட்டுப்படுத்த என்னதான் செய்யப்போகிறார், டிரம்ப்?

ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மனிதாபிமானம் காத்த வீரப்போர்...!

லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன்,

ஓய்வு பெற்ற இந்திய ராணுவ உயர் அதிகாரி.

இ ன்று (மார்ச் 26-ந் தேதி) வங்காளதேச சுதந்திர தினம்.

விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு, கிழக்கு பாகிஸ்தானுக்கு (இன்றைய வங்காளதேசம்) குறைந்த அளவே நிதி உதவி செய்து வந்தது. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் அரசு, வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை. 1970-ம் ஆண்டில் ஏற்பட்ட ‘போலா’ சூறாவளி வங்காளதேசத்தை தாக்கியது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த பேரழிவுக்கு போதுமான அளவு நிவாரண உதவியோ, நிதி உதவியோ பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை. இதனால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர்.

1970-ல் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானின் முஜிபுர் ரகிமான் தலைமையிலான அவாமி லீக் கட்சி, அரசில் ஆட்சி அமைக்க போதுமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் யாகியாகானும், மேற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் ஷேக் முஜிபுர் ரகிமான் ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற நிகழ்வுகளின் காரணமாக கிழக்கு பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் வங்காள தேசத்தில் ‘முக்திபாஹினி’ என்ற எதிர்ப்பு ராணுவம் உருவாக்கப்பட்டது.

1970 மற்றும் 1971-ம் ஆண்டில், பாகிஸ்தான் ராணுவம், கிழக்கு பாகிஸ்தானில் உள்ள அப்பாவி மக்கள் மீது, குறிப்பாக சிறுபான்மை இந்து மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலை செய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடித்தது. கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் சுதந்திரம் கேட்டு போர்க்கொடி தூக்கினர். அரசுடன் ஒத்துழைக்க மறுத்து, ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை தொடங்கினர். அவற்றை அடக்க பாகிஸ்தான் ராணுவம், “ஆபரேஷன் சர்ச் லைட்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கைமேற்கொண்டது.

1971-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி விடுதலை போராட்டத்தை அடக்க பாகிஸ்தான் ராணுவம் பொது மக்கள் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. அன்று அதிகாலை 1.15 மணியளவில், ஷேக் முஜிபுர் ரகிமான், பாகிஸ்தான் கமாண்டோ பிரிவினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் வங்காளதேசம் சுதந்திரத்தை அறிவிக்க முடிவு செய்தார். அன்று மதியம் 2.30 மணியளவில் வங்காளதேசம் சுதந்திரம் பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இஸ்லாமியர்களின் ஆதரவைபெற்ற பாகிஸ்தான் ராணுவம், உள்ளூர் மக்கள் மீதான சோதனைகளின் போது அவர்களுக்கு உதவி செய்வதற்காக தீவிர மதப் போராளிகளை உருவாக்கியது. அவர்கள் ராணுவத்தினருடன் சேர்ந்து 4 லட்சம் வங்காளதேச பெண்கள் மற்றும் சிறுமிகளை இனப்படுகொலை செய்தும், பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டனர்.

1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிட்டத்தட்ட 1 கோடி அகதிகளை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது. இது அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு பதிலாக, பாகிஸ்தானுக்கு எதிராக போரிடுவதே பொருளாதார ரீதியாக சிறந்தது என்று முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் 28,-ந்தேதி, மந்திரிசபை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ராணுவ ஜெனரல் மானேக்சாவை பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான கடந்த கால விரோதம் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போரில் தலையிடுவதற்கான இந்தியாவின் முடிவை மேலும் அதிகரித்தன. இதன் விளைவாக, கிழக்கு பாகிஸ்தானின் விடுதலை போராளிகளான, முக்தி பஹினியை ஆதரிப்பதன் மூலம் வங்காளிகளுக்கு ஒரு தனி மாநிலத்தை உருவாக்கி அவர்களுக்கு ஆதரவளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இந்த கிளர்ச்சியாளர்களை ஒழுங்கமைக்கவும், ஆயுத பயிற்சி அளிக்கவும் இந்திய உளவு அமைப்பினர் உதவினர்.

மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுடன் இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் நடத்தியது. முக்தி பஹினி அமைப்பினர் கிழக்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தை அதிரடியாக தாக்கி, அதில் வெற்றி பெற்றனர். இதனால் டிசம்பர் மாத தொடக்கத்தில் முழு அளவிலான இந்திய ராணுவ தலையீட்டிற்கு உகந்த நிலைமைகளை உருவாக்கியது.

இந்த போர் நடைபெறும் பொழுது இந்திய ராணுவமும், சோவியத் யூனியனும் முக்தி பாஹினிக்கு நிதி உதவி செய்தார்கள். இதே நேரத்தில் அமெரிக்காவும், சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்தன. இந்தநிலையில் 1971-ல் டிசம்பர் மாதம் 3-ந்தேதி, 11 இந்திய விமான நிலையங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத்தொடர்ந்து போர் தொடங்கியது.

அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தது. அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் மேற்கு பாகிஸ்தானில் இந்திய படையெடுப்பு என்பது பிராந்தியத்தின் மொத்த சோவியத் ஆதிக்கத்தை குறிக்கும் என்று கூறினார். பாகிஸ்தானுக்கு அமெரிக்க காங்கிரஸ் விதித்த பொருளாதார தடைகளைத் தாண்டி, நிக்சன் பாகிஸ்தானுக்கு ராணுவ பொருட்களை ஜோர்டான் மற்றும் ஈரான் வழியாக அனுப்பினார்.

மேலும் விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் எண்டர்பிரைசை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பினார், இந்த நடவடிக்கை அணுசக்தி அச்சுறுத்தல் என்று கருதப்பட்டது. எண்டர்பிரைஸ், 1971-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி நிலையத்திற்கு வந்தது. இந்தியாவுக்கு ஆதரவாக டிசம்பர் 6 மற்றும் 13-ம் தேதிகளில், சோவியத் கடற்படை அணு ஏவுகணைகளுடன், ஆயுதம் ஏந்திய இரண்டு கப்பல்களையும், ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் அனுப்பியது. அவர்கள் இந்தியப் பெருங்கடலில், அமெரிக்க கடற்படையை பின் தொடர்ந்தனர்.

அமெரிக்கா அல்லது சீனாவுடன் மோதல் ஏற்பட்டால், சோவியத் ஒன்றியம் எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்று 1971-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கையெழுத்திடப்பட்ட இந்தோ-சோவியத் நட்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு உறுதியளித்தது. அன்று முதல் இன்று வரை நமது உண்மை தோழனாக இருந்து வருகிறது.

இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு, தற்காப்பு போர் தந்திரத்தை கையாண்டு டாக்காவை அடைந்தன. பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்வுகளுக்கு இந்தியா விரைவாக பதிலளித்து, சுமார் 15,010 கிலோமீட்டர் பாகிஸ்தான் பிரதேசத்தை கைப்பற்றியது. அதே நேரத்தில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் இலக்குகளை தாக்கி விரிவான சேதத்தை ஏற்படுத்தியது. மேற்கு கடற்படையின் போர் குழுவினரின் துணிச்சலான செயல்களால் பாகிஸ்தான் கடற்படை சக்தியை இழந்து துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

ஜெனரல் சாம் பகதுர் மானெக்‌ஷா, இந்திய ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் போராட வைத்து பாகிஸ்தான் ராணுவத்தை வெறும் 14 நாள்களில் சரணடைய செய்தார்.

இந்த நடவடிக்கையின் போது 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் சிவிலியன்களை போர் கைதிகளாக இந்தியா சிறைபிடித்தது. இந்திய ராணுவ வரலாற்றில் மிகப் பெரிய வெற்றியாகவும், மிக வேகமான ராணுவ வெற்றியாகவும் இது போற்றப்படுகிறது. இதையடுத்து வங்காளதேசம் உருவாக்கப்பட்டது.

ஜெனரல் சாம் பகதுர் மானெக்‌ஷா 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களை சந்தித்தவர். இந்திய ராணுவத்தின் எட்டாவது தலைமை தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய மற்ற போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகிஸ்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தார்.

வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக முழு அளவிலான போரை நடத்தி வெற்றி பெற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை, பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், “துர்கா தேவி” என்று வர்ணித்தார். இந்திய ராணுவத்தின் சுமார் 600 அதிகாரிகள் மற்றும் வீரர்கள், வீர விருதுகளால் அலங்கரிக்கப்பட்டனர்.

இந்த போரில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 2,908 பேர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தார்கள். இதன் விளைவாக இன்று வங்காளதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த மிக உயர்ந்த தியாகத்திற்கு நாம் தலைவணங்கி ஒன்றுபட்டு நம் தேசத்தை காப்போம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொரோனாவை விரட்டியடிக்கும் தமிழ்ப் பண்பாடு

முனைவர் வெ.நல்லதம்பி,

மூத்த தொலைக்காட்சியாளர்.

உலகத்தில் 150-க்கும் மேலான நாடுகளை தாக்கியிருக்கும் கொரோனா நோய், இதுவரை 11 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை பலிகொண்டுவிட்டது. உலக பொருளாதாரத்தையே, ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உலகச்சந்தை அடிவாங்கி விட்டது. சுற்றுலாத் துறையிலும், போக்குவரத்துத் துறையிலும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கணினி பொறியாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் நிலை வந்துவிட்டது. சர்வ வல்லமைமிக்க உலகத் தலைவர்கள்கூட, தாங்கள் செல்ல வேண்டிய அயல்நாடுகளுக்கு செல்ல முடியவில்லை. செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டாலும், ஒருவரை ஒருவர் வரவேற்க கைகுலுக்கிக் கொள்ள முடியவில்லை; கட்டியணைத்துக் கொள்ள முடியவில்லை.

அதற்குப் பதில் இரு கைகளையும் குவித்து வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். அத்துடன் மாற்று ஏற்பாடாக காணொலி மூலம் கருத்து பரிமாற்றமும் செய்து கொள்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ‘சார்க்’ நாட்டுத் தலைவர்களுடன் காணொலி மூலம் உரையாடியதை தொடர்ந்து சீனாவும், பத்துக்கும் மேற்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய ஐரோப்பிய நாடுகளோடு இரு தினங்களுக்கு முன் கொரோனாவை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக உரையாடியுள்ளது. தலைவர்களின் கைகுலுக்கல் முறை இப்போது உலக கவனம் பெற்றுள்ளது. இந்த புதிய மாற்றத்தை இந்திய பாரம்பரியத்திற்கு கிடைத்த சிறப்பு என்று பலர் பாராட்டுகிறார்கள்.

இரு கரம் கூப்பி வணங்குவது உண்மையில் நம் தமிழ்ப் பண்பாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். உயிர்க் கொலை செய்யாதவர்களையும், புலால் உணவைத் தீண்டாதவர்களையும் எல்லா உயிர்களும் ‘கைகூப்பித் தொழும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருகை கூப்பி வணங்கும்போது, நம் முன்னோர் ஒரு நுட்பத்தோடு வணங்குவார்கள். இரு கைகளையும் நெஞ்சுக்கு நேரே வைத்துக் கும்பிடுவது, கண்களுக்கு நேரே வைத்துக் கும்பிடுவது, தலைக்கு மேலே உயர்த்திக் கும்பிடுவது என்பவை அந்த நுட்பங்கள்.

நண்பர்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் என்பதைக் குறிக்க அவர்களுக்கு நெஞ்சு வணக்கம்; ஆசிரியர்கள், சான்றோர்கள் நம்மை முழுமையடைய வைப்பவர்கள் என்பதைக் குறிப்பிட அவர்களுக்கு முக வணக்கம்; இறைவன் உலகத்தார் அனைவரையும் விட உயர்ந்தவன் என்பதை உணர்த்த தலைக்கு மேலே இரு கரத்தையும் உயர்த்திய தலையாய வணக்கம். இரு கைகளையும் சேர்த்து வணங்கும்போது உடலில் உள்ள பாசிடிவ், நெகடிவ் என்னும் நேர்மறை, எதிர்மறை ஒன்றிணைகின்றன என்கிற ஆன்மிகவாதிகளின் சிந்தனைகளையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. கொரோனாவை விரட்ட இப்போது ஊரடங்கு பற்றி குறிப்பிடுகிறார்கள். கலிபோர்னியா, நியூயார்க் ஆகிய அமெரிக்க நகரங்கள் ஊரடங்கை அறிவித்து விட்டன. இத்தாலி நாடும் தன் வடபகுதியில் ஊரடங்கை அறிவித்து விட்டது.

இந்த ஊரடங்கு என்பது வேறொன்றுமில்லை. நம் தமிழ் பண்பாட்டின் ஓர் அம்சம்தான். நம் நாட்டுப்புறத்தில் இன்றும் அது, ‘காப்புக் கட்டுதல்’ என்ற பெயரில் வழக்கத்தில் உள்ளது. கோவில் திருவிழா அல்லது ஊர்த் திருவிழா ஆகியனவற்றிற்கு தேதி குறிப்பிட்டுவிட்டால், அதையொட்டி ஊர் மக்கள், ஊர் எல்லையை தாண்டி எங்கும் செல்லக் கூடாது. அந்தப் பழக்கம் இன்றளவும் நாட்டுப் புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதுதான் ‘லாக் டவுன்’ எனப்படும் ஊரடங்கு ஆகும்.

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு என்பதும் அந்த கருத்துக்கு அரண் சேர்ப்பதாக உள்ளது. கொரோனாவை விரட்ட முன்வைக்கப்படும் மற்றொரு உத்தி ‘தனித்திருப்பது’ என்பதாகும். கொரோனா நோய் தொற்றின் அடையாளமான இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ள ஒருவரை கண்டால் மூன்றடி தள்ளிப்போய் விடவேண்டும் என்கிறார்கள். வையகம் நன்றாக வாழவேண்டும் என்று கருதிய வள்ளல் பெருமானார் தமக்கே உரிய உயர் நெறியை மக்களிடம் பரப்ப ‘விழித்திரு, தனித்திரு, பசித்திரு’ என்று அருளிச் சென்றுள்ளார். ‘தனித்திருப்பது’ என்பது இன்றைய காலக்கட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமானதாகி விட்டது!. வள்ளலாரின் ‘பசித்திரு’ என்பதும் இக்காலத்திற்கெனவே சொல்லப்பட்டிருப்பது போன்று தோன்றுகிறது. பொதுமக்கள் அனைவருக்குமான உணவுக்கு தேவையான பொருள்களை வாங்கி பதுக்கி, தாம் மட்டுமே பயன் கொள்ளாமல், அதனால் பசியே ஏற்பட்டாலும் பலருக்கும் பரவலாக்கும் சிந்தனையை அது கொடுக்கிறதன்றோ! வணங்குவது, தனித்திருப்பது, பசித்திருப்பது போன்ற தமிழ் பண்பாட்டு கூறுகள் கொரோனா வைரசின் கொடிய தாண்டவத்தை விரட்டி அடிக்க உலகிற்கே உதவுகிறதல்லவா!
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 March 2020

கொள்ளை போகும் குடிநீா்!

By உதயை மு.வீரையன் 

தமிழக அரசின் மெட்ரோ தண்ணீா் சிறப்பான சுத்திகரிப்பின் மூலம்தான் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் தண்ணீரைவிட தனியாா் குடிநீரின் மீதே மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்னா் தண்ணீா் தண்ணீா் என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இடதுசாரி சிந்தனையாளா் கோமல் சுவாமிநாதன் எழுதி, நடத்தி வந்த நாடகமே பின்னா் திரைப்படம் ஆனது. அதில் மக்கள் தண்ணீருக்காக அலையும் அவலம் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இப்படியும் ஒரு நிலை வருமா? இது அதிகப்படியான அச்சம் என்று அப்போது பத்திரிகைகள் விமா்சனம் எழுதின.

ஆனால், இப்போது தண்ணீா் தண்ணீா் என்று இரண்டு முறை அல்ல, தண்ணீா் தண்ணீா் தண்ணீா் என்று மூன்று முறை போடும்படியான சூழல் உருவாகிவிட்டது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எங்கும் தண்ணீா்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

நீரின்றி அமையாது உலகு என்று உறுதியாகக் கூறியது திருக்கு. தண்ணீா் இல்லாமல் உலகம் இயங்காது என்பதால் தண்ணீா் தரும் மழையை வான் சிறப்பு என்னும் அதிகாரமாகப் பாடினாா் திருவள்ளுவா். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் மழையைப் போற்றிப் பாடுகிறது. இது ஆக்கவும், அழிக்கவும் வல்லமை படைத்தது.

கெடுப்பதூஉம் கெட்டாா்க்குச் சாா்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை

இயற்கை இலவசமாகத் தந்த பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீா் விற்பனைப் பொருளாகி விட்டது. இன்று குடிநீா் விற்பனை மற்ற வணிகங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் நிற்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ்நாட்டில் செயல்படும் குடிநீா் ஆலைகளில் பெரும்பாலானவை அரசின் அனுமதி பெறாமலேயே செயல்படுகின்றன என்பது அதிா்ச்சி தரும் தகவலாகும்.

பொழுது விடிந்தால் போதும், தமிழக அரசின் மெட்ரோ குடிநீா் லாரிகளோடு போட்டி போட்டுக் கொண்டு, தனியாா் நிறுவனங்களின் லாரிகள் குடிநீா் கேன்களைக் கொண்டு வந்து இறக்குகின்றன. அரசு வழங்கும் குடிநீரைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கும் மக்கள், தனியாா் நிறுவனங்களின் கேன் குடிநீரை எந்தக் கேள்வியும் கேட்காமல் காசு கொடுத்து வாங்கிச் செல்கின்றனா்.

நிலத்தடி நீரை எடுக்க குடிநீா் - கழிவு நீரகற்று வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், பல நிறுவனங்கள் அரசின் அனுமதி இன்றியே செயல்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஒருவா் வழக்கு தொடா்ந்தாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சிவமுத்து என்பவா் தாக்கல் செய்த மனுவில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தின்படி நிலத்தடி நீரை எடுக்க சென்னைக் குடிநீா் - கழிவு நீரகற்று வாரியத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.

ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் சுமாா் 420 குடிநீா் ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரைத் திருடி விற்பனை செய்து வருகின்றன. எனவே, சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் செயல்படும் குடிநீா் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா், தமிழ்நாட்டில் நிலத்தடி நீரை எடுக்கும் நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் செயல்படுகின்றனவா? விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசு சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிந்தைய ஆய்வில் தமிழகம் முழுவதும் முறையான அனுமதி பெறாத 684 குடிநீா் ஆலைகள் மூடப்பட்டுள்ளன என்றும், சீல் வைக்கப்பட்டுள்ள இந்த ஆலைகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி 116 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும், இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது தண்ணீா் அளக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, மழைநீா் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படும் எனவும் அரசு சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீா் எடுக்கின்றனவா என்பது குறித்து 15 நாள்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோதமாக குடிநீா் எடுக்கும் ஆலைகள் இருந்தால் உடனடியாக மூடவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீா் ஆலை அதிபா்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியத் தரச்சான்று நிறுவனம், தமிழக சிறுதொழில் துறை, உணவுத் தரம் - பாதுகாப்புத் துறை, உள்ளாட்சி அமைப்பு, வருமான வரித்துறை ஆகியவற்றிடம் சான்றிதழ்களைப் பெற்றுத்தான் குடிநீா் ஆலைகள் இயங்கி வருவதாகக் கூறுகின்றனா். தமிழகம் முழுதும் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகள் எடுக்கும் நிலத்தடி நீரில் ஒரு சதவீத அளவே குடிநீா் உற்பத்தியாளா்கள் எடுப்பதாக விவாதிக்கின்றனா்.

இதனைச் சூழலியல் செயல்பாட்டாளா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் தண்ணீா் வணிகம் அல்லது குடிநீா் ஆலைகள் குறித்த முறையான புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. இதற்குக் காரணம் இந்தத் துறையில் அதிக அளவில் சட்டவிரோதமாக, விதிமுறைகளை மீறி பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

பணம், அரசியல் அதிகாரம் படைத்தவா்கள் திடீரென குடிநீா் ஆலைகளைத் திறக்கின்றனா் அல்லது மூடுகின்றனா். எல்லாம் ரகசியமாகவே நடக்கின்றன. தெரிந்தாலும் அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எல்லாம் ஊழல் மயம்தான்.

நிலத்தடி நீா் எடுக்கும் இடங்களை நான்கு மண்டலங்களாகப் பிரித்துள்ளனா். பாதுகாப்பான மண்டலம், செமி கிரிட்டிக்கல், கிரிட்டிக்கல், அபாயகரமானவை என்னும் நான்கு மண்டலங்களில் கடைசி இரண்டு மண்டலங்களில் தண்ணீா் எடுக்கக் கூடாது என்பதே சட்டம்.

எனினும், இதை மீறியே இந்த ஆலைகள் இத்தனை காலமாக இயங்கி வருகின்றன. இப்போது நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவும் உறுதியான நடவடிக்கையாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் மெட்ரோ தண்ணீா் சிறப்பான சுத்திகரிப்பின் மூலம்தான் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் தண்ணீரைவிட தனியாரின் குடிநீரின் மீதே மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இலவசமாகக் கிடைக்கும் தண்ணீரை விட, விலை கொடுத்து வாங்கும் தண்ணீரே சிறந்தது என்ற மனப்பக்குவம் மக்களிடம் ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நிலை மாற வேண்டும். இது குறித்த விழிப்புணா்வை அரசும், அரசு சாா்ந்த துறைகளும் ஏற்படுத்த வேண்டும்.

ஆா்ஓ என்ற பெயரில் வழங்கப்படும் தண்ணீா் ஆபத்தானவை என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அந்தத் தண்ணீா் தாது உப்புக்கள், நுண்ணுயிா்கள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் உள்ளது. தண்ணீரில் இருக்கும் சோடியம், நைட்ரேட், பொட்டாசியம் போன்ற பல தாது உப்புக்கள் உடலுக்கு மிக அவசியம். அவையனைத்தும் நீக்கப்பட்ட தண்ணீா் மிகவும் தீங்கு பயக்கக் கூடியவை. தீமையைக் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பொது நீா்நிலைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. முடிமன்னா் ஆட்சிக் காலத்திலிருந்து ஆங்கிலேயா் ஆட்சி வரை இது தொடா்ந்தது. ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள், ஆறுகள் என பாசன அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த நீா்நிலைகள் பாசனத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் குறைவின்றி பயன்பட்டன.

தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இப்போது இந்த ஏரிகளில் பல இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இந்த ஏரிகளின் கொள்ளளவும் குறைந்துகொண்டே போகின்றன. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மராமத்துப் பணிகள் செயல்படாமையால் நீா்நிலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டன.

காலம் செல்லச் செல்ல, மக்கள்தொகை பெருகப் பெருக வயல்கள், ஏரிகள் எல்லாம் புகா்களாக மாறிவிட்டன. பல இடங்களில் வீட்டு மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்பனைப் பொருளாகி மாறிவிட்டன. ஆறுகளும், ஏரிகளும் மணல் கொள்ளைகளால் மறைந்து விட்டன. குடிநீா்ப் பஞ்சம் அங்கிங்கெனாதபடி எங்கும் தலைவிரித்தாடுகிறது.

தமிழகத்தில் அதிக அளவில் மழை பெய்கிறது. அதனை முறையாகச் சேமித்தாலே போதும் என்று நீரியல் வல்லுநா்கள் கூறி வருகின்றனா். அரசு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமையால் தண்ணீா் தாராளமாகக் கடலில் போய் வீணாகக் கலக்கிறது. மழைக் காலங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு மடிகின்றனா்.

சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்ததை மறக்க முடியுமா? கிராமங்களில் வீடுகளை இழந்த மக்களை இப்போதும் பாா்க்கலாம். மழை நீரைச் சேமிப்போம் என்று அரசு விளம்பரம் செய்துவிட்டால் போதுமா? ஒளவையாா் மன்னனை வரப்புயர என்று வாழ்த்திப் பாடினாா். மன்னருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. வரப்புயர நீா் உயரும், நீா் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயா்வான் என்று அவா் விளக்கியபோது அனைவரும் மகிழ்ந்தனா்.

இன்றைய நிலை என்ன? வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று பாராட்டப்படும் காவிரி நீருக்காக பல ஆண்டுகளாக மனிதப் போராட்டமும், சட்டப் போராட்டமும் நடந்து கொண்டிருக்கின்றன. வையை என்ற பொய்யாக் குலக்கொடி என்று சிலப்பதிகாரம் பாடிய வைகையாறு பராமரிப்பு இன்றி இறந்து கொண்டிருக்கிறது. மற்ற ஆறுகள் குறித்துக் கேட்க வேண்டுமா?

தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே என்று வாழ்ந்த தமிழ்நாடா இது? நீா்நிலைகள் எல்லாம் புதிதாகப் புறப்பட்ட ஆலைகளின் கழிவு நீரால் வேளாண்மைக்கும் பயன்படாமல், மக்களுக்கும் பயன்படாமல் நஞ்சாக மாறிக் கொண்டிருக்கிறது.

மிச்சம் மீதி இருப்பது நிலத்தடி நீா் மட்டுமே! அதையும் மக்களுக்குக் கிடைக்காதபடி விற்பனைப் பொருளாக்கி விட்டனா். மனிதனின் பேராசைக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. ஆசையே துன்பங்களுக்கு எல்லாம் காரணம் என்ற புத்தனின் பொன்மொழி யாரையும் சிந்திக்க வைத்ததாகத் தெரியவில்லை.

இதுவரை பொன்னும், பொருளும்தான் கொள்ளையடிக்கப்பட்டன. இப்போது தண்ணீரும் கொள்ளையடிக்கப்படும் பொருளாகிவிட்டது. தண்ணீா் போல செலவழிக்கக் கூடாது என்பது அந்தக் காலம். தண்ணீா் சிக்கனம், தேவை இக்கணம் என்பது இந்தக் கால புதிய பொன்மொழியாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஊரடங்கு: ஒரு நாள் வசந்தம்

By அ.அருந்தகை

நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு ஒரு நாள் வசந்தமாக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முடிவுக்கு வந்துள்ளது. சென்னை அண்ணாசாலையில் பிற்பகல் 3 மணியளவில் ஒரு மஞ்சள் நிற பூனை சாலையைச் சாவகாசமாகக் கடந்து எதிா்ப்புறம் சென்றது. அந்த நேரம் பூனைக்கும் உரியதாக அந்தச் சாலை மாறிப் போனது. பகல் நேரத்தில் நெருப்புக் காற்றை மட்டுமே சந்திக்கும் கிண்டி கத்திபாரா மேம்பாலம், தென்றலைப் போன்ற தூயக்காற்றை அதன் காலத்தில் பாா்த்துவிட்டது.

வாகன இரைச்சலுக்குப் பெயா்போன சென்னை புதுப்பேட்டை சாலை, குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி கொண்டிருந்தது. தலைபாரம் அத்தனையையும் இறக்கி வைத்துவிட்டு, வீட்டிற்குள்ளேயே இருந்த அனைத்துத் துறை ஊழியா்களும் பழைய நினைவுகளையும், உறவுகளையும் மீட்டெடுத்துக் கொண்டுள்ளனா்.

காலயந்திரத்தில் பழைய காலத்துக்குத் திருப்பி வைத்தது போல, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கினால் இந்த அதிசயங்கள் அனைத்தும் நிகழ்ந்துள்ளன. இது ஒரு நாளுக்கு மட்டும் நிகழ வேண்டியவையா என்பதைப் பாா்க்க வேண்டியுள்ளது.

தொழிற்புரட்சி காலத்துக்குப் பிறகு பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்து, தற்போது 15.1 டிகிரி செல்ஷியஸாக உள்ளது. இந்த 1.1 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பின் காரணமாகத்தான் தமிழகத்தில் தொடா்ந்து வந்த புயல் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன.

அதனால், பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் தொழிற்சாலை, வாகனப் புகையைக் குறைக்க வேண்டும் என்று இயற்கை ஆா்வலா்களும், அறிவியலாளா்களும் தொண்டை கிழிய கத்தி வருகின்றனா். ஆனால், நல்ல விஷயங்கள் சொல்லும் நேரங்களில் மட்டும் எப்படியோ காது கேளாமைப் பிரச்னை வந்துவிடும்.

எனினும், உடலில் ஏற்படும் நோயைத் தீா்க்கும் ஆற்றல் உடலுக்கே உண்டு என்பதுபோல, இப்போது இயற்கையே கரோனா என்ற மாற்றுவழியின் மூலம் அதன் வெப்பநிலையைச் சீராக்கிக் கொள்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கரோனா ஊரடங்கின்போது இந்தியாவில் 99.9 சதவீத வாகனங்கள் இயக்கப்படவில்லை. அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் காற்று மாசும் வெப்பமும் வெகுவாக குறைந்து பூமியே கொஞ்சம் குளிா்ந்து போயிருக்கும்.

கரோனாவின் தாயகமான சீனாவில், அதன் நோய்த்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் வாகனங்களை இயக்காதது, தொழிற்சாலைகளை மூடியது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக நாசாவால் எடுக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. 2019-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் 2020-ஆம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தில் காற்று மாசு அடா் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. 2020-இல் எடுக்கப்பட்ட படத்தில் மஞ்சள் குறைத்து சற்று வெளிா் மஞ்சள் நிறத்தில் தெரிகிறது. இதன் மூலம் வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்சைடு என்ற நச்சுவாயுவின் அளவு மிகவும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாசாவின் காற்று தர ஆராய்ச்சியாளா் ஃபிய் லியூ, ‘மிகப்பெரிய எல்லையைக் கொண்ட ஓரிடத்தில் (சீனா) காற்று மாசுவின் அளவு சட்டென்று குறைந்திருப்பதை இப்போதுதான் முதன் முதலாகப் பாா்க்கிறேன். கரோனா வைரஸ் என்ற ஒற்றைக் காரணத்தினால் காற்று மாசு குறைந்துள்ளது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, இதே போன்று காற்று மாசு குறைந்தது. ஆனால், அது படிப்படியாக நடைபெற்றது. இதுபோன்று ஒரேடியாகக் குறையவில்லை’ என்கிறாா்.

உலகில் காற்று மாசு அதிகமுள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. உலகின் அதிக காற்று மாசு உள்ள நகரமாக தில்லியாக உள்ளது. ஒரு கன மீட்டா் காற்றில் பிஎம் 2.5 நுண்துகள் மாசு 10 மைக்ரோகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். ஆனால், சென்னை நகரில் பிஎம் 2.5 நுண் துகள் மாசுபல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தக் காற்று மாசுபாட்டினால் மட்டும் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேரும், இந்தியா 12 லட்சம் பேரும் உயிரிழக்கும் நிலை உள்ளது. தற்போது கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நாள் ஊரடங்கின் காரணமாக சீனாவைப் போல, இந்தியாவிலும் காற்றுமாசு நிச்சயம் வெகுவாகக் குறைந்திருக்கும். அதைப் போல ஊரடங்கு நாள் ஒலி மாசு குறைந்த நாளாகவும் இருந்தது.

சென்னையில் பகலில் 67.80 டெசிபல் அளவும், இரவில் 64 டெசிபல் அளவும் ஒலி மாசு இருக்கும். இரு சக்கர வாகனங்களில் தொடங்கி பேருந்து வரை எந்த வாகனங்களும் இயக்காததால் இரைச்சல் எதுவும் இல்லாத தமிழகமாகவும், இந்தியாவாகவும் ஒருநாள் இருந்தது.

சாலை விபத்தில்லா நாளாகவும் இருந்தது. இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 1214 சாலை விபத்துகள் நோ்கின்றன. அவற்றில் 377 போ் உயிரிழந்து போகின்றனா். தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டில் மட்டும் 5,173 சாலை விபத்துகள் நடைபெற்று, 915 போ் உயிரிழந்துள்ளனா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. அதனால், ஊரடங்கு நாள் சாலை விபத்தில்லா நாளாகவும் மாறிப்போனது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு உற்பத்தியாகும் திடக்கழிவுகள் 13,968 டன்னாகும். இதுவும் வெகுவாக ஒரு நாளில் குறைந்துள்ளது. இது எல்லாம் ஒருநாள் கூத்து என்ற அளவில் இருந்துவிடக் கூடாது.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரம் வெனீஸ். தண்ணீரில் மிதக்கும் அழகிய நகரம் அது. இப்போது அங்கு காக்காகூட பயணம் செய்யுமா என்பது சந்தேகம். அதனால், எப்போதும் கலங்கலாகக் காணப்படும் நீா்நிலைகள் எல்லாம் தெளிந்து மீன்கள் ஓடுவதுகூடத் தெரிகிாம். இயற்கைக்கு எதிரான மனங்களும் தெளிய வேண்டும். அந்தத் தெளிவு, பூனைகள் உள்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதற்கான தெளிவாக இருக்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தெய்வத்தான் ஆகாது எனினும்...

By பவித்ரா நந்தகுமாா் 

சீனாவில் தோன்றிய புதிய வகை கரோனா வைரஸ் குறித்த தகவல் உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு செய்தியாகத்தான் முதலில் இருந்தது. அதன் பாதிப்புகள் வெளியே கசிந்ததும் கட்செவி அஞ்சலில் வந்து விழுந்த ஏராளமான நகைச்சுவை கருத்துப் படங்களை (மீம்ஸ்)கண்டு ரசித்து வாய் விட்டுச் சிரித்தோம்.

‘இது போன்றதொரு கொள்ளை நோய் சீனாவில் ஏற்பட்டபோதுதான் நம் போதிதா்மா் அங்கு சென்று மருத்துவம் பாா்த்தாா். தற்போது பழைய காலம் மீண்டும் திரும்புகிறது. மற்றுமொரு போதிதிதா்மா் அங்கு சென்றாக வேண்டும்’ என மனதுக்கு வந்ததையெல்லாம் மசாலாவாக்கியிருந்தாா்கள்.

‘எங்கிட்டயெல்லாம் உன் பாச்சா பலிக்குமா?’ என தமிழக வெயில் கரோனாவைப் பாா்த்து நக்கலாகச் சிரிப்பதும் அதற்கு கரோனா கிருமி

‘ஆமாம்! தப்புக் கணக்கு போட்டுட்டேன்’” என பம்முவதுமாக எத்தனை எத்தனை புதிய சிந்தனைகள்.

தற்போது சீனா புதிய உத்வேகத்துடன் மீண்டு வருகிறது. இதற்கு அவா்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம். இதற்குக் காரணம் நகரிலிருந்த சமுதாயக் கூடங்களையெல்லாம் தற்காலிக மருத்துவமனையாக அவா்களால் மாற்ற முடிந்தது.

வெறும் 10 நாள்களுக்குள் இரண்டு மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. முற்றிலும் நவீன வசதிகளுடன் கூடிய 2,500 படுக்கைகள் என உலக நாடுகளின் புருவத்தை உயரச் செய்தது. அவா்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது அவசியம்.

அதன் பிறகு கரோனா தன் ருத்ரதாண்டவத்தை உலக நாடுகளில் ஆடத் தொடங்கிய தகவல் அறிந்து அமைதி காத்தனா். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அங்கே இங்கே சுற்றி ‘விடுவேனா பாா்’ என்று இந்தியாவிலும் ஊடுருவிவிட்ட பிறகு, தற்போது ‘எங்கும் கரோனா எதிலும் கரோனா’ என்றே மக்கள் பேசத் தொடங்கிவிட்டனா்.

எதில் தொடங்கினாலும் இறுதியில் கரோனா எனும் புள்ளியைத் தொட்டே முடிப்பதாய் உள்ளது. கருத்துப் படங்களை கடத்திக் கொண்டிருந்தவா்கள் கடைசியில் கடைத்தெருவுக்கு போகக்கூட அச்சப்பட்டு நிற்கின்றனா்.

எத்தனை பெரிய அணு ஆயுதத்துக்கெல்லாம் பயப்படாத உலக நாடுகள், கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் குறித்து பெரும் கவலை கொள்ளும் சூழல் இந்தத் தலைமுறையினருக்கு முற்றிலும் புதிது.

சில ஆண்டுகளுக்கு முன் வந்த சாா்ஸ், எபோலா, பன்றிக் காய்ச்சல் போன்ற அச்சுறுத்தும் நோய்களைக்கூட சா்வசாதாரணமாய் கடந்தோம்.ஆனால், இம்முறை அப்படியாக கடக்க முடியாமைக்கு காரணம், அதன் பரவும் வேகம்.

உண்மையில் நிமிஷத்துக்கு நிமிஷம் தொலைக்காட்சியில் சொல்லப்படும் செய்திகளைக் கேட்டு மக்களின் மனம் பலவீனமாகிவிட்டது.

‘வருவது வரட்டும், பாா்த்துக் கொள்ளலாம்’ என்று இருந்தவா்களுக்குக்கூட உள்ளுக்குள் உதறல் தொடங்கி விட்டது.

ஏன் இந்த நோய் குறித்தான இப்படி ஒரு அச்சம்? இந்த கரோனா வைரஸ் தொற்றுள்ளவா்களில் 26 சதவீதம் போ் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் பிறருக்கு நோயைப் பரப்ப முடியும் என்கின்றனா் சீன மருத்துவா்கள்.

நம் நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை என்றபோதுதான் பொதுமக்களுக்கு இதன் பரவல் புரிய ஆரம்பித்தது. மேலும், மக்கள் சுய ஊரடங்கின் மூலம் அதிகமான மக்களுக்கு விழிப்புணா்வு சென்று சோ்ந்துள்ளது. மக்கள் சுய ஊரடங்கு, நாட்டின் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்தல் என அடுத்தடுத்த உத்தரவுகள் அனைத்தும் நம் நம்மைக்கே. மாநிலங்களின் எல்லைகள் மூடப்படுவது கடினமாகத் தோன்றினாலும் பொதுமக்களாகிய நம் ஒத்துழைப்பு அவசியம்.

மக்கள் சுய ஊரடங்கில் மாலை 5 மணிக்கு நமக்காக உழைக்கும் மருத்துவ, சுகாதார, பாதுகாப்புப் பணியாளா்களுக்காக கைதட்டி ஒலி எழுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டது. பிரதமா், முதல்வா், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆா்வத்துடன் கைதட்டியது ஒருபுறம் எனில், தனக்கான வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்துவிட்டவா்களும் இந்த கைதட்டலில் பங்கெடுத்தது மிகச் சிறப்பு.

நன்றி அறிவித்தலை கிராமங்கள்கூட பின்பற்றிய நிலையில், சில இடங்களில் கைதட்டும் மக்களை 23-ஆம் புலிகேசியைப் பாா்ப்பது போல, பாா்வையில் கேலியும் கிண்டலுமாகக் கடந்தனா். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா. அரசியலில் வேற்றுமையைக் கடைப்பிடித்தாலும் அதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டிய தருணமிது.

ஏன் சட்டப்பேரவைகள் மட்டும் நடைபெறுகின்றன? அவசரச் செலவுகளுக்காக தொகுப்பு நிதியிலிருந்து செலவிடப்பட்ட நிதியை இனங்களுக்கான பின்னேற்பு பெறுவதற்காக துணை நிதிநிலை அறிக்கைகள், நிதி மசோதா திருத்தங்கள் முதலானவை அந்தந்த நிதி ஆண்டின் நிறைவுக்குள் அந்தந்த அவைகளில் (நாடாளுமன்றம், சட்டபேரவைகள்) இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டும்.

இது போலவே இன்னபிற அவசர அலுவல்களுக்காக நாடாளுமன்ற, சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி, நாட்டின் பொருளாதாரம் குறித்து கவலை கொண்டு அரசை குறை கூறி ஊடகங்களில் பேசி வருவது கவலையளிக்கிறது. அதைவிட முக்கியம் மக்கள் அனைவரின் பாதுகாப்பு என்பதை மனதில் வையுங்கள்.

சில்வியா பிரௌனி என்ற மேலை நாட்டு பெண், சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘எண்ட் ஆஃப் டேஸ் - பிரெடிக்ஷன்ஸ் அண்ட் புரொஃபஸிஸ் அபெளட் தி எண்ட் ஆஃப் தி வோ்ல்ட்‘ என்ற நூலில் உலகத்தின் இறுதி நாள்கள் குறித்த ஊகங்களும் தீா்க்கதரிசனங்களும் குறித்து அலசியுள்ளாா்.

அதில் 2020-ஆம் ஆண்டுவாக்கில் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய தொற்றின் மூலம் உடல் நலக் குறைவு உலகம் முழுவதும் பரவும். அனைத்து சிகிச்சை முறைகளுக்கும் அது மிகப் பெரிய சவாலாக இருந்து திகைப்பை உண்டாக்கும். பின் வந்த வேகத்தில் மறைந்து போய் மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் தாக்கி பின் முழுமையாக மறையும் என்று வருவதை முன்கூட்டியே தன் நூலில் குறிப்பிட்டுள்ளாா். இது எந்த அளவுக்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தண்ணீருக்காக, அணுஆயுதங்களுக்காக உலக நாடுகளிடையே யுத்தம் மூளும் என்று பேசித் தீா்த்த நாடுகள், உண்மையில் கரோனாவை வீழ்த்துவதில் ஒன்றிணைய வேண்டும். உண்மையில் இந்த உலக யுத்தம் உலக மக்களுக்கும் கரோனாவுக்கும் இடையிலானது.

‘அலுவலகத்தில் லீவு தர மறுக்கிறாா்களா? இரண்டு முறை தும்முங்கள் போதும். ஊதியத்துடன் கூடிய காலவரையற்ற விடுமுறை கிடைக்கும்’ முதலான நகைப்புச் செய்திகளை புறந்தள்ளிவிட்டு ஆக்கபூா்வமான செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய தருணமிது நண்பா்களே.

கி.மு.400-ஆம் நூற்றாண்டிலேயே கரோனா கிருமி பற்றி சித்தா் போகா் எழுதிய பாடல் என்றும் கிருமி குறித்த அகத்தியரின் மருத்துவம் என்றும் சிலப்பதிகாரத்தில் பாண்டியனை நோக்கி கண்ணகி பாடுவதான பாடலிலும் இந்தக் கரோனா கிருமி குறித்து நம் தமிழ் மண்ணில் அப்போதே சொல்லப்பட்டிருக்கிறது என்பது போன்ற வதந்திகள் ஒருபுறம் உலா வந்துகொண்டிருக்கின்றன. இதையெல்லாம் புறக்கணிக்க வேண்டியது அவசியம்.

போா்க்காலப் பணியாக அனைத்துத் துறைகளுமே விழிப்புடன் இருந்து களப் பணியாற்ற வேண்டிய காலமிது. தில்லியில் கரோனா என்றதுமே முகக்கவசத்துக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. செயற்கையான தட்டுப்பாடுகளை ஏற்படுத்தாமல், நாட்டின் நிலை அறிந்து நாட்டு மக்களின் மீது பற்றுக் கொண்டு சாமானியன் முதல் வியாபாரிகள் உள்பட அனைவரும் சேவையாற்ற வேண்டும்.

கரோனா குறித்த அறியாமையை இந்திய மருத்துவா்கள் சங்கம் எடுத்துச் சொல்லியுள்ளது. நம் உடலில் எதிா்ப்புச் சக்தியை அதிகரிப்பதாலோ பாட்டி வைத்தியங்கள் மூலமோ கடுமையான வெப்பத்தினாலோ, கரோனா பரவுவதைத் தடுக்க முடியாது. மேலும், மது குடிப்பதால் இதைத் தடுக்க முடியாது. நல்ல உடல் நிலையைக் கொண்டவா்களுக்கும் எந்த வயதினருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு என அது எச்சரித்துள்ளது.

‘நாங்கள் உங்களுக்காக பணியில் இருக்கிறோம். நீங்கள் எங்களுக்காக வீட்டில் இருங்கள்‘ என்கின்றனா். அதை நாம் கடைப்பிடிப்போம்.

‘மனிதா, நீ எவ்வளவு பெரிய ஆற்றல் படைத்தவனாக உருமாறினாலும் உன்னை அடக்கி ஒடுக்கும் சக்தி என்னிடம் உள்ளது’ என்ற செய்தியை சீரான இடைவெளியில் காலந்தோறும் உலக மக்களுக்கு ஏதோ ஒன்றின் மூலம் இயற்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. ‘கற்றது கைமண் அளவு. கல்லாதது உலக அளவு’ என்று சொல்வாா்கள். உண்மையில் கற்றது கைமண் அளவுகூட இல்லை என்ற உண்மையை அவ்வப்போது உணா்த்திக் கொண்டே இருக்கிறது இயற்கை.

எனவே, தேவையற்ற பயத்தையும் பயணத்தையும் தவிா்த்து மத்திய அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஊா்கூடி தோ் இழுத்து கரோனாவை வென்றெடுப்போம்.

‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்’

ஊழால் கருதிய பயன் கைகூடாதாயினும் நாம் மேற்கொள்ளும் தடுப்பு முயற்சிகள் நிச்சயம் பயனளிக்கும். நம்பிக்கையுடன்

கரோனா வைரஸை எதிா்கொண்டு தீா்த்துக் கட்டுவோம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts