Sunday, 20 January 2019

ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒழித்துக் கட்டுங்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒழித்துக் கட்டுங்கள். மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கு என்ன தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே தேர்வு நடைமுறையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ பின்பற்றி சிரத்தையான ஆட்களை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையத்தை பணிக்கவும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டங்களையும் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் ஒப்பிட்டு பார்க்கலாம் நீங்கள் கூற வருவது போல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டு பார்ப்போமானால் சில முரண்பாடுகள் தோன்றத்தான் செய்யும் எதுவாயினும் தற்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரிய பொறுத்தளவில் பல்வகை திறமைகளை வளர்த்துக்கொண்டு பாடம் நடத்துவது அவசியம் ஆகிறது. குறிப்பாக தற்போது நடத்தப்பட்ட பாடத்திட்டங்கள் interdisciplinary approach எனப்படும் வகையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.எனவே பல்வேறு துறைகளைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது. அதற்கு ஏற்ப திறமையான ஆசிரியர்கள் நாம் பணியமர்த்த வேண்டியது அவசியமாகியுள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள் தற்காலங்களில் தகுதிபெற்ற ஆசிரியர்கள் தானா பணியாற்றி வருகிறார்கள் என்ற கேள்வி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஏனென்றால் ஆசிரியர் நினைத்தால் 10 மணி நேரம்கூட பணி செய்யலாம்.சேவை அடிப்படையில் கல்வி கற்பிப்பது ஆசிரியர்தான் என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் குறிப்பாக அவர்கள் நீட் மற்றும் பள்ளிக் கல்வித் துறை நடத்தும் திறனாய்வுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கலாம். குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் தேர்வுகள் இயக்குனரகம் பல்வேறு வகையான திறனறி தேர்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எட்டாவது மாணவர்களுக்காக என் எம் எம் எஸ் எனப்பதும்' ஒன்பதாவது மாணவர்கள் trust எனப்படும் தேர்வும், 10ம் வகுப்பு மாணவர்களுக்காக ntse எனப்படும் தேர்வும் எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்ப அத்தேர்வு ஆரம்பகாலம் முதலே பயிற்சியைக் கொடுத்து வந்து மற்றும் மாணவர்களை தயார் செய்து வந்தால் அவர்கள் எதிர்காலத்தில் நடத்தக்கூடிய பள்ளிக் கல்வித் தேர்வு துறை மூலம் நடத்தப்பட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளின் நீட் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளையும் எழுதி எதிர்கொள்ளலாம். குறிப்பாக 11 மற்றும் 12ம் அவர்களுக்கு ஏதேனும் ஒரு திறனாய்வு தேர்வு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.ஏனென்றால் 11 12-ம் வகுப்பு மாணவனுக்கு திறனறிவுத் தேர்வு அறிமுகப்படுத்தும் போது அவர்கள் 11 வகுப்பு பாடத்தை ஒரு பார்வையில் எளிதில் அணுகுவார்கள் அவ்வாறு அணுகும் அணுகும்போது நீட் போன்ற போட்டித் தேர்வை எழிதில் எழுதி எதிர்கொள்வார்கள்.தற்போது சோம்பேறி ஆசிரியர்கள் எனப்படும் முட்டாள்தனமான பல ஆசிரியர்கள் உள்ளனர். அவ்வாறு உள்ளார்கள் என்பதால் பல ஆசிரியர்கள் இன்று நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு இளநிலை உதவியாளர் செய்யும் வேலையை விட குறைவாகத்தான் ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள் ஆனால் அறிவுகெட்ட ஆசிரியர்களால் கேவலமாகத்தான் பாடத்தை நடத்த முடிகிறது.நன்னெறியை கூட கற்பிப்பதில்லை.ஒழுக்கமாக வேலை செய்வதில்லை.அதிகமாக விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள்.இவ்வாறு பல்வேறு வகையான ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள் எந்தவித தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.எனவே இவர்களை ஒரு நன்றாக திறனைத் தெளிவுப்படுத்தும் திறமையான ஆசிரியர்களை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே இந்த குப்பை தேர்வு வாரியத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறோம் எந்தவித பகுதிக்கும் தகுதியற்ற கேடுகெட்ட ஊழலில் ஈடுபட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தயவுசெய்து இழுத்து மூடி விடுங்கள். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஆசிரியர் தேர்வு நடைமுறைகளை ஒதுக்குங்கள் அவர்களிடம் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி நன்றாக தேர்வு செய்யச் சொல்லி தாருங்கள் அவர்கள் நன்றாக தேர்வு செய்து தருவார்கள். ஒரு திறனாய்வு தேர்வு ஆசிரியர்களுக்கான பாடப்பிரிவு மதியம் நடத்தப்படும் தேர்வில் 100 வினாக்கள் அடங்கிய பொது அறிவு தாள்களை எழுதினால் மட்டும் தான் சிறப்பான உண்மையான சோம்பேறிகளுக்கு மாற்றான ஆசிரியர்களைத் தயார் படுத்த முடியும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஒரு இளநிலை உதவியாளர் தேர்வு 200 வினாக்கள் பல்வேறு துறைகள் சார்ந்த ஆனால் அதை விட அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய ஒரே ஒரு பாடம் படித்தால் மட்டும் போதும் அல்லது இரண்டு பாடங்களை படித்தால் போதும் அவ்வாறுதான் உள்ளது அதுவும் வினாக்கள் 150 நாட்கள் மட்டுமே ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 200 வினாக்கள் பல்வேறு துறை சார்ந்த மிகவும் கடுமையான தேர்வு முறை அவ்வாறு இருக்க வேண்டும் ஆசிரியர் தேர்வு செய்யும் நடைமுறை இவ்வாறு குப்பை தனமாக இருக்கப்போய்த்தான் கேடு கெட்ட தனமாக தமிழக கல்வித் துறையும் தமிழக கல்வியும் சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் என்ன பணிகள் செய்தது என்று நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம். நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் மூன்று வேளை உணவை உண்டு வருகிறீர்கள். நீங்கள் இந்த வருடம் மூன்று வேளை உணவை உண்ணும் போது நாம் இந்த வருடம் மற்ற தேர்வு வாரிய காட்டிலும் என்ன பணிகள் செய்தோம் என்று ஒரு முறை யோசித்து விட்டு உங்கள் தட்டில் உணவை சாப்பிடுங்கள் நீங்கள் கண்டிப்பாக ஒருவேளை உணவை உண்ணுவதற்கு வெட்கப்பட வேண்டும்.ஏனென்றால் நீங்கள் என்னென்ன செலவு செய்கிறீர்கள் எத்தனை தேர்வுகளை நடத்தி உள்ளீர்கள் எதையுமே எந்த வருடம் நீங்கள் வெளியிடவில்லை ஒரு முறையாக உத்தேச விடைகள் இறுதி விடைகள் எதையும் வெளியிடவில்லை முழுக்க முழுக்க கைக்கூலிகளாக கெட்டவர்களாக இந்த தேர்வு வாரியம் கெட்டுப்போய் நாசமாய் போய் விட்டது.நீங்கள் ஏன் சும்மா உட்கார்ந்து நாற்காலியைத் தேய்த்து விட்டு சம்பளம் வாங்கி சாப்பிடுகிறார்கள் அதை தயவு செய்து நீங்கள் யோசிக்க மாட்டீர்களா?? இங்குள்ள பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் போய் பயிற்சி எடுங்கள் இல்லாவிடில் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு எங்காவது போய் விடுங்கள் நீங்கள் சும்மா உட்கார்ந்து வேலை செய்வதற்கு வெட்கப்பட வேண்டும். மக்கள் பணத்தை எவ்வளவு பணத்தை நீங்கள் வீணடித்து வருகிறது தெரியுமா? | Southern Part of Proud Dravidian <ganeshkumarscience@gmail.com>

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கொக்கென்று நினைத்தாயோ...!

கொக்கென்று நினைத்தாயோ...! சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (விளையாட்டு விமர்சகர்) உள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் போது, “இந்த ஆட்டம் போடுகிறீர்களே, வாருங்கள் வெளிநாட்டுக்கு உங்களை குப்புறத்தள்ளும் உதை காத்திருக்கிறது” என்று நையாண்டி செய்தவர்கள் முகத்தில் சாதாரண கரியை அல்ல நிலக்கரியை அரைத்துக் குழைத்து முகத்தில் பூசி இருக்கிறது இந்திய அணி. இந்திய அணி வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் இரண்டு தொடரில் வெற்றி ஒரு தொடரில் சமம் என்கிற வெற்றிக் கொடியை ஆழமாக நாட்டி இருப்பது வெறும் விந்திய சாதனை அல்ல. இமயத்தையே தொட்ட சாதனை. விமர்சனக் கணைகளை எதிர் கொண்டு மவுனம் சாதித்த இந்திய அணி தன் செயலால், சாதனையால் விமர்சகர்களுக்கு சுடச்சுட பதில் அளித்து இருக்கிறது. குல்தீப் யாதவ் இல்லை என்றால் என்ன கேதர் ஜாதவ் உள்ளே வருகிறார். வெற்றிக்கு தன் பங்கையும் சிறப்பாகச் செய்கிறார். ராகுல் இல்லாவிட்டால் என்ன உடனே தமிழ்நாட்டிலிருந்து விஜய்சங்கர் வரவழைக்கப்படுகிறார். இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஆடாத சாஹல் வாய்ப்பு வந்த போது தன் இருப்பை சக்தியுடன் வெளிப்படுத்துகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆறு விக்கெட்டுகள் என்பது எளிதான காரியமல்ல. டோனிக்கு வயதாகி விட்டது ‘ஹெலிகாப்டர் அடிகளை மறந்துவிட்டார்’, ‘தடாலடியாக’ ஆடக்கூடியவர் இப்போது வட்டார வழக்கில் சொல்வதென்றால் ‘தடவுகிறார்’. ஐந்து தடவைகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்து இறுதியில் 87 ரன்கள் சேர்த்து அவர்தான் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். குல்தீப்புக்கு பதிலாக உள்ளே வந்த கேதர் ஜாதவ், டோனிக்கு துணை நின்றுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 1000 ரன்கள் சேர்த்த நான்காவது வீரர் டோனி. இந்தத் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்களில் டோனிக்கு இரண்டாவது இடம். ஆடும் இடத்தைவிட்டு பல தப்படிகள் முன்வந்து எதிரணியின் வேகப் பந்துவீச்சை பிஞ்ச் லாவகமாக சமாளித்து ஆடுவதை கவனித்த டோனி, புவனேஷ்வர்குமாரிடம் ஏதோ ஒரு சூத்திரத்தை சொல்லிவிட்டு வருகிறார். அடுத்த பந்தில் பிஞ்ச் ‘அவுட்’. இதை அனுபவத்தின் அனுகூலம் என்கிறார்கள். அது டோனியிடம் நிறைய இருக்கிறது. அணியில் கோலி உள்பட இன்னார்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. மரம் சாய்ந்தால் யாராவது ஒருவர் வலுவாக முளைத்து வந்துவிடுகிறார். சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன், கங்குலி, யுவராஜ் சிங் இன்னும் இது போன்ற ஜாம்பவான்கள் உரிய வயதை அடைந்தபின் ஒருவரை அடுத்து ஒருவர் ஓய்வு பெற்று வெளியேற கருமேகங்கள் அணியைச் சூழ்ந்தன. இன்றைய நிலை என்ன?. கோலி, புஜாரா, ரோகித், தவான், ரஹானே, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று தந்த பிரித்வி ஷா, ஹனுமான் விஹாரி, மயங்க், சுப்மான் உள்பட எத்தனை எத்தனை இளம் வீரர்கள் இந்திய அணியின் கதவை ஓங்கித் தட்டிய வண்ணம் காத்திருக்கிறார்கள். ஒரு டட்டு பட்கரைத் தவிர வேறு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்கிற நிலை இருந்தது. இன்று ஏகப் பட்ட வேகப்பந்து வீச்சாளர்களை கையில் வைத்துக் கொண்டு யாரை களமிறக்குவது என்பது ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். போட்டி ஆட்டங்களில் இந்திய அணியை எதிர்கொள்ளும் அணிகள் தாங்கள் வெற்றி பெற என்ன வழி என்பதைப்பற்றி சிந்திப்பது இல்லை. இந்திய அணியை எப்படி தோற்கடிக்கலாம் என்பது பற்றி திட்டமிடுவதிலேயே காலத்தை வீணடிக்கிறார்கள். எந்தச்சூழ்நிலை என்றாலும் கடைசிப் பந்து வீசப்படும் வரை இந்தியஅணியை எழுதித் தள்ளி விட முடியாது. இப்போது நடந்து முடிந்த ஆட்டமும் அதற்கு ஒரு சாட்சி. ஓர் அனுபவஸ்தர் சொன்னார், “இந்திய அணியில் பளபளக்கும் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பதை விட துணிச்சலுடன் எந்தச் சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் திறமை வாய்ந்த செயல் வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை”. முன்பெல்லாம் அணியில் தானாகவே இடம் பெற்று விடக்கூடிய ஆட்டக்காரர்கள் இருந்தார்கள் ஆனால் இப்போது கோலி நீங்கலாக அத்தனை வீரர்களும் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடும் நிலையிலேயே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரோக்கியமான போட்டி இருக்கிறது. இத்தகைய வலுவான அணியின் உலகக் கோப்பை வெற்றிவாய்ப்புகள் எப்படி? சற்று எட்டிப்பார்க்கலாமே !!!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ரிசர்வ் வங்கி சேவை ஒரு பார்வை...!

ரிசர்வ் வங்கி சேவை ஒரு பார்வை...! எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொதுமேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி. பொ துமக்கள் பலரும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து முழுமையாக அறியாமல் இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் செயல்பாடும் மற்ற வங்கிகளைப்போலத்தான் இருக்கும் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மத்திய வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் மும்பையில் செயல்படுகிறது. மேலும், வெவ்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன. ரிசர்வ் வங்கியின் தலைமைப்பொறுப்பில் அதன் கவர்னர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். பொதுவாக மத்திய அரசில் பணி புரியும் மூத்த இந்திய ஆட்சி பணியாளர்களே நியமிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் சில பொருளாதார நிபுணர்களும் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக முன்னாள் கவர்னர்கள் சி.ரங்கராஜன், ரகுராம் ராஜன், சமீபத்தில் பதவி விலகிய உர்ஜித் படேல் போன்றவர்கள் பொருளாதார நிபுணர்களே ஆவார்கள். மற்ற வங்கிகளைப்போல் பொது மக்கள் ரிசர்வ் வங்கியில் கணக்கு தொடங்க முடியாது. ஏனென்றால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்க அனுமதி இல்லை. எனவே வங்கிகளும் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் மட்டுமே தங்கள் கணக்குகளை ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் மற்றும் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன்கள் பெறுவதற்கும் இந்த கணக்குகள் அவசியமாகின்றன. மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் விநியோகிக்க முன்பு இம்பீரியல் பேங்க் என்ற வங்கி செயல்பட்டு வந்தது. இந்த இம்பீரியல் பேங்க்தான் பின்னால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக மாறியது. ஆனால் இந்தியாவுக்கு ஒரு மத்திய வங்கி தேவை என்ற ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரையின் பேரில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டம், 1934-ல் கொண்டு வரப்பட்டு ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியது. ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு எல்லாம் வங்கி ஆகும். அன்று முதல் மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் மற்ற வங்கிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டது. ரிசர்வ் வங்கியின் கடமை என்ன? புதியதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் மற்ற வங்கிகளுக்கு விநியோகிப்பது மட்டுமல்லாமல், பழையதான புழக்கத்தில் உபயோகிக்க முடியாத அல்லது கிழிந்த நோட்டுகளையும் வங்கிகள் மூலம் சேகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கும் பணியையும் செய்கிறது. இதற்காக ரிசர்வ் வங்கியின் பெட்டகங்கள் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கையில் எப்போதும் நல்ல நிலைமையில் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமாறு பார்த்து கொள்கிறது. எனவே, பொதுமக்கள் தான் தங்களிடம் உள்ள உபயோகப்படுத்த முடியாத நிலைமையில் உள்ள நோட்டுகளை அருகில் உள்ள வங்கி கிளைகளில் மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்களை அகற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது என்ற விழிப்புணர்வை நேரடியாகவும் மற்ற வங்கிகள் மூலமாகவும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளில் பணம் செலுத்தும் போது கள்ள நோட்டுகளை கண்டு பிடிப்பதற்கு பிரத்தியேகமான மெஷின்களை நிறுவ வங்கிகளுக்கு அறிவுறுத்தி அவைகள் வங்கி கிளைகளில் செயல் பட்டு வருகின்றன. காகிதத்தில் அச்சடிப்பட்ட ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் அவைகளில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பின் அளவிலான அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் உள்ளன. அவை தங்கமாகவோ மத்திய அரசின் கடன் பத்திரங்களாகவோ அந்நிய செலாவணி முதலீட்டு பத்திரங்களாகவோ அல்லது அயல் நாட்டு வங்கி இருப்புகளாகவோ அல்லது நாணயங்களாகவோ இருக்கும். உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தால் அதே ஒரு கோடி ரூபாய் அளவினாளான மேற்கூறப்பட்ட அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் இருக்கும். இது மக்களுக்கு காகித நோட்டுகள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் மற்றொரு தலையாய கடமை பணவியல் கொள்கையை உருவாக்குவது, அதை வங்கிகள் மூலம் செயல்படுத்துவது. இதன் முக்கியமான அம்சம் நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பொருட்களின் விலைகளின் ஸ்திர தன்மையை உண்டாக்குவது. பணப்புழக்கம் என்பது அனைவரிடமும் உள்ள பணம் (ரூபாய் நோட்டுகள்), வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்பு தொகைகள், சேமிப்பு கணக்கில் உள்ள தொகைகள், அஞ்சல் அலுவலக சேமிப்பு மற்றும் வைப்பு தொகைகள் இவை யாவும் அடங்கும். இந்த பண புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது மற்ற வங்கிகள் மூலம். வங்கிகள் தங்கள் வசம் உள்ள பொதுமக்களின் கணக்கில் உள்ள வைப்புகளில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கியில் தங்கள் கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளை பணிக்கிறது. இதன் மூலம் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்துள்ள வைப்புகளின் அளவு தற்போது 4 சதவீதம் ஆகும். இதனால் பண வீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. பண வீக்கத்தின் ஏற்றம் இறக்கம் குறியீடுகள் மூலம் கணிக்கப்பட்டு அதற்கான அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கும் மற்ற நிறுவன ஊழியர்களுக்கும் அவ்வப்போது வழங்கப்படுகிறது. ஒரு கூலி தொழிலாளிக்கோ ஒரு விவசாயிக்கோ இதுபோன்ற இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றைக்கும் ஒரு நூறு ரூபாய் அவர்கள் வயிற்று பசியை ஆற்ற முடியும் என்றால் ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதே காரணம் ஆகும். அடுத்தபடியாக இந்த பணவியல் கொள்கைகள் மூலம் வங்கிகளின் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி முறைப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டில் புதிய பணவியல் கொள்கையை உருவாக்குவதன் மூலமும் காலாண்டு பணவியல் கொள்கை ஆய்வின் போதும் வட்டி விகிதங்கள் மாற்றங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இதற்காக ரிசர்வ் வங்கியில் நூற்றுக்கணக்கான பொருளாதார நிபுணர்களும் புள்ளியியலாளர்களும் உள்ளனர். மேலும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு அங்கம் வகிக்கும் ஒரு ஆலோசனை குழுவும் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கூறப்பட்ட இரண்டு கடமைகளையும் ரிசர்வ் வங்கி மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுத்தி வருகிறது. இது போக வங்கிகளுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை வழங்குதல், வங்கிகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆராய்ந்து அறிக்கை தயாரித்தல், அந்த அறிக்கையை அந்தந்த வங்கிகளிடம் விவாதித்து வங்கிகளின் செயல்பாடுகளை நெறிப்படுத்துதல், புதிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்தல் அல்லது தற்போது செயல்பட்டு வரும் வங்கிகள் புதிய கிளைகள் தொடங்க அனுமதி அளித்தல், மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை விற்பது, பெரிய அளவிலான வங்கி சாரா நிதி நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை அமல்படுத்துதல் போன்ற பல பணிகளையும் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகள் மும்பை மத்திய அலுவலகத்திலும் மற்ற கிளை அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 6955 அதிகாரிகளும், 3831 உதவியாளர்களும், 3999 கடைநிலை ஊழியர்களும் பணி செய்கிறார்கள் (ரிசர்வ் வங்கியின் 2017-18 ஆண்டறிக்கை படி) ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பணவியல் கொள்கைகள், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், ஆண்டறிக்கை, வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கை போன்ற பல்வேறு விவரங்களை ரிசர்வ் வங்கியின் வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 19 January 2019

நம்மிடையே நடமாடும் ‘மிருகங்கள்’

நம்மிடையே நடமாடும் ‘மிருகங்கள்’எல்லா மக்களும் நல்லவர்களும் அல்ல, எல்லோரும் கெட்டவர்களும் அல்ல. பெரும்பாலான மக்கள் நல்லவர்கள்தான். ஆனால் உங்களைப் பொறுத்தவரை யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு கெட்டவனால் கூட அடுத்தவர் வாழ்க்கையை முற்றிலுமாகச் சீரழிக்க முடியும். நல்லவன் யார், கெட்டவன் யார் என்று பகுத்தறிவதே ஒரு வாழ்க்கைப் போர்வீரனின் பெரிய சவாலாகும்.உலகில் நீங்கள் காணும் மோசமான மனிதர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்...

1. கொசு மனிதர்கள்:
நாம் எங்கு இருந்தாலும் இவர்களும் எப்படியோ வந்து சேர்ந்துவிடுவார்கள். இவர்களுக்குத் தேவை நமது ரத்தம். அதை உறிஞ்சிவிட்டுப் பறந்துவிடுவார்கள். ஜேப்படித் திருடர்கள், செயின் அறுப்பவர்களை உதாரணமாகக் கூறலாம். ஓங்கி அறைந்தால் மடிந்து போகும் கொசு போலத்தான் இவர்கள். திருப்பி அடித்தால் ஓடிப் போவார்கள்.

2. அட்டை மனிதர்கள்:
சதுப்பு நிலத்தில் சென்றால் நம்மை அறியாமல் நம் உடல் மீது தொற்றிக்கொண்டு ரத்தம் உறிஞ்சும் அட்டை போன்றவர்கள் இவர்கள். நிதானமாக அதிக ரத்தத்தை உறிஞ்சிய பிறகு நம்மை விட்டு விடுவார்கள். கந்துவட்டிக்காரர்கள், கடன் வாங்கித் திருப்பித் தராதவர்களை அட்டை மனிதர்கள் என்று சொல்லலாம்.

3. முதலை மனிதர்கள்:
இவர்கள் தங்களது இடத்துக்கு வரும் பலசாலிகளையும் பலவீனமாக்கி விடுவார்கள். முழுவதுமாக விழுங்கியும் விடுவார்கள். சிலரைச் சேர்த்துக்கொண்டு ஒரு தொழில் தொடங்கி, அதில் அவர்கள் அனைவரையும் முதலீடு செய்ய வைத்துப் பின்னர் வருமானத்தை அபகரித்து, மற்றவர்களை அந்த நிறுவனத்தில் இருந்து கழற்றிவிடும் பணமோசடி முதலைகள் இவர்கள்.

4. விஷப்பாம்பு மனிதர்கள்:
இவர்கள் கொடிய விஷம் பொருந்திய கட்டுவிரியன்கள். இவர்களை தெரியாமல் சீண்டிவிட்டாலும் நம்மைக் கடித்து கொடிய விஷத்தைப் பாய்ச்சி சாகடித்துவிடுவார்கள். சிலரை நாம் ஏதோ காரணத்துக்காக கண்டித்திருப்போம் அல்லது தண்டித்திருப்போம். அதனால் நம்மைப் பழிக்குப் பழி வாங்க நம் மீது பொய்ப்புகார் கூறுவார்கள். நம்மை நம் நிலையில் இருந்து இறக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எதிரியாகிவிட்ட நண்பனை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

5. குள்ளநரி மனிதர்கள்:
இவர்கள் மிகவும் தந்திரமானவர்கள். நல்லவர்கள் போலப் பழகுவார்கள். பின்னர் தருணம் பார்த்து, நமது சொத்தையும் நற்பெயரையும் அபகரித்துக் கொள்வார்கள். கும்பலாகக் கூடி மிரட்டுவார்கள். ஜாதி அல்லது மத அடிப்படையில் இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கும். திட்டமிட்டு, வலையில் சிக்கவைத்து நம்மைத் திவாலாக்கி தெருவில் விட்டுவிடுவார்கள். சுயலாபத்துக்காக எந்த இழிசெயலையும் செய்வார்கள். சிறைக்குச் செல்லவும் அஞ்சமாட்டார்கள். வாடகைக்குக் குடியேறி பின்னர் வீட்டை அபகரிக்கும் கும்பல்கள், மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருகிறேன் என்று பல லட்சம் கொள்ளை அடிக்கும் கும்பல்கள் குள்ளநரிக் கூட்ட மனிதர்கள் ஆவார்கள்.வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் என்னிடம் இதைச் சொன்னார். தனக்கு இதயநோய் இருந்ததாகவும், திருப்பதியில் உள்ள தனது குடும்பச் சொத்தை விற்று பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டி ஓர் உறவுப்பெண்ணிடம் அதை ஒப்படைத்ததாகவும், பின்னர் அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சிலருடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டு அந்தச் சொத்தை விற்பனை செய்து, அந்தப் பணத்தை வேறு ஒரு நிறுவனத்தில் அவரையே முதலீடு செய்ய வைத்தனர் என்றும், ஆனால் அந்த நிறுவனம் ஒரு போலி நிறுவனம் என்றும், 7 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டார்கள் என்றும் புலம்பினார். இதய நோயாளி ஊர் திரும்பமாட்டார் என்ற தைரியத்தில், நெருங்கிய உறவினரே குள்ளநரி மனிதராக மாறிவிட்டார். சொத்து என்று வந்துவிட்டால் உறவினர் என்றாலும் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.

6. மதயானை மனிதர்கள்:
மிகப் பெரிய தோற்றத்துடன் காட்சியளிப்பார்கள். தோற்றத்துக்கு ஏற்ற தைரியம் இருக்காது. ஆனால் உடல் பலம், தோற்றம் மற்றும் தோரணையில் நம்மை மிரட்டுவார்கள். அவர்களுக்கு மதம் பிடித்துவிட்டால் உணவளித்தவனையே காலால் மிதித்துக் கொன்றுவிடுவார்கள். பண பலம், அதிகார பலம் அல்லது சமுதாய பலம் மிக்கவர்கள் என்பதால், நம்மை நசுக்கிவிடுவது இவர்களுக்கு எளிது. இம்மனிதர்களுக்கு சாதாரண மக்களைப் பிடிக்காது. இவன் பெரிய செல்வந்தன் ஆயிற்றே, அதிகாரத்தில் இருக்கிறானே, நம்முடனான நட்புக்கு நன்றிக்கடனாக ஏதாவது நமக்குச் செய்வான் என்று காத்திருந்தால் ஏமாந்துபோவீர்கள். இவர்களோடு உறவாடாமல் இருப்பதே நல்லது.

7. காட்டுப்பன்றி மனிதர்கள்:
இவர்களை யாராவது காயப்படுத்தினால் மூர்க்கமாகிவிடுவார்கள். கோபமுற்ற காட்டுப்பன்றி பயமறியாது. அது தன்னைத் தாக்கியவன் யார் என்று உற்றுநோக்கும். அதன் பார்வையில் பட்டவன் அப்பாவியாகக் கூட இருக்கலாம். அவனை நோக்கி அது பாயும். அந்நபரைக் கொல்லாமல் விடாது. சண்டை என்று வந்தால் சற்றும் அஞ்சாத காட்டு விலங்கு இதுதான். திமிர் பிடித்த நபரை நாம் பகைத்துக்கொண்டால் அவன் வாழ்நாள் முழுவதும் பழிவாங்கும் வெறியுடன் இருப்பான். பன்றி மனிதர்கள் பெண் பிள்ளைகள் பின்னால் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தீராத தொல்லைகளைத் தருகிறார்கள். காட்டுப்பன்றி மனிதன் தனது மனைவியைத் தன்னுடைய கொடூர கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துத் துன்புறுத்துவான். இப்படிப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் இவர்களோடு அசிங்கமான போரைச் செய்துகொண்டிருக்க நேரிடும்.

8. சிறுத்தை மனிதர்கள்:
காட்டிலேயே மிகவும் கவர்ச்சிகரமான மிருகம் சிறுத்தைப்புலிதான். பெரிய மான் ஒன்றைக் கவ்விக்கொண்டு சாதாரணமாக மரத்தில் ஏறிவிடும். வழக்கமாக அவை நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் சில வேளைகளில் அவை மனிதனைத் தின்னும் சிறுத்தைகளாக மாறிவிடுகின்றன. விலங்குகள் உணவு இல்லாதபோது மனிதனை வேட்டையாடிப் புசிக்கின்றன. அப்பாவி மனிதர்களை பிடித்துத் தின்பது இதற்கு மிகவும் எளிய காரியம். சொத்துக்காக தனது உறவினரையே கொல்லத் துணியும் கயவர்களை இவ்வகையினர் என்று கூறலாம். குழந்தைகளைக் குறிவைத்து பாலியல் தாக்குதல் நடத்தும் கொடியவர்களும் இந்த வகை சார்ந்தவர்கள்தான்.

9. கழுகு மனிதர்கள்:
நாம் பலமாக இருக்கும்வரை பிணந்தின்னிக் கழுகுகள் நம்மை நெருங்குவதில்லை. ஆனால் நாம் பலவீனமடைந்து தடுமாறி விழுந்து கிடக்கும்போது அவை நம்மை நோட்டமிடும். அவை நமது உடனடி மரணத்தையே விரும்பும். நாம் மரிக்கும் நாளன்று அவை ஊர் கூடி கொண்டாடி மகிழும். அப்பன் இறக்கமாட்டானா, சொத்துகளை கைப்பற்றிக்கொள்ளலாமே என நினைக்கும் பிள்ளைகளை கழுகு மனிதர்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் பெற்ற தகப்பனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவிவிடும் மகனைவிட இவன் மோசமானவன் இல்லை. இவன் பொறுமையுடன் காத்திருக்கிறான். ஒரு நிறுவனத்தில் நாம் பொறுப்பில் இருக்கிறபோது, ‘இவன் எப்போது ஓய்வு பெறுவான்? அந்த நாற்காலியில் நாம் உட்காரலாமே?’ என்று பேராசை கொள்பவனும், அதிகார ஆவலில் நம்மை மேலிடத்தில் சொல்லி எப்படியாவது பதவியில் இருந்து நீக்க முயல்பவனும் பிணந்தின்னிக் கழுகு வகைதான்.மேலே குறிப்பிட்ட வகைகளிலான கயவர்களைத் தவிர, வேறுவித தீயவர்களையும் நீங்கள் சந்திக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களை முன்கூட்டி அடையாளம் காண்பதும், எச்சரிக்கையாக இருப்பதும் ஒரு போர்த்தளபதிக்கு மிகவும் முக்கியம்.குறிப்பு: ஓர் ஒப்பீட்டுக்காகவே வனவிலங்குகளை மனிதர்களுடன் பொருத்திக் காட்டியிருக்கிறோம். மற்றபடி, தீய மனிதர்களின் குணங்களை வனவிலங்குகளோடு ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவை மனித இனத்துக்கு முன்பாக பூமியில் தோன்றியவை, நம்மால் அழிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டவை. அவற்றை நாம் மதிக்கிறோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மணி ஓசைக்குரலால் மனம் கவர்ந்த இசைமணி...!

மணி ஓசைக்குரலால் மனம் கவர்ந்த இசைமணி...! தந்தை சீர்காழி கோவிந்தராஜனுடன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம். டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் (சீர்காழி கோவிந்தராஜன் மகன்) இ ன்று (ஜனவரி 19-ந் தேதி) பின்னணிபாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த தினம். தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி தான் எனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனுக்கும் சொந்த ஊராகும். எளிய மிட்டாய்க் கடைக்காரர் குடும்பத்தில் சிவசிதம்பரம்-அவயாம்பாள்தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாடகத் துறையின் மீது கொண்ட நாட்டமும் இசையின் மீது கொண்ட ஈடுபாடும் அவரை கலைத்துறைக்கு ஈர்த்தது. தேவி நாடக சபாவில் இசைநாடக நடிகராகப் பாடி நடித்து, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் துணை நடிகராக மாதச்சம்பளத்தில் பணி புரிந்து, முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் போராடி படிப்படியாக முன்னேறினார். தமிழ் இசைக்கல்லூரியின் “இசைமணி” பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, சென்னை மத்திய அரசு இசைக் கல்லூரியில் “சங்கீத வித்வான்” பட்டம் பயின்று தனது தகுதியை உறுதிப்படுத்திக்கொண்டார். வந்தார்! தமிழால் வளர்ந்தார்! உழைப்பால் உயர்ந்தார்! இசைமணியாய் இசையால் நிறைந்தார்! கர்நாடக சங்கீதம், இசை நாடக சங்கீதம், பக்தி இசை, மெல்லிசை, சினிமா இசை, திரை நடிப்பு, கிராமிய இசை என அனைத்திலும் தனது தனி முத்திரையைப் பதித்து சிறப்புப் பெற்றார். சினிமாவில் பின்னணிப் பாடகராக பதினாராயிரம் பாடல்களுக்குமேல் பாடினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி முதல் ரஜினிகாந்த், பாண்டியன் வரை குரல் கொடுத்த நான்கு தலைமுறைப் பணி செய்த பெருமை இவரைச் சாரும். திரையில் நல்ல தரமான பாடல்களை மட்டுமே தேர்வு செய்து பாடும் மரியாதையை திரையுலகம் இவருக்கு அளித்தது. திரைஇசை மேதைகள் ஜி. ராமனாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், எஸ்.வி.வெங்கடராமன், டி.ஜி.லிங்கப்பா, கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி முதல் தேவா வரை அனைத்து இசை அமைப்பாளர்களும் இவருக்கென பிரத்தியேகமாக மெட்டமைப்பது தனிச் சிறப்பாகும். ‘அமுதும் தேனும் எதற்கு’ (தைபிறந்தால் வழிபிறக்கும்), ‘என்னை விட்டு ஓடிப்போக முடியுமா’ (குமுதம்) போன்ற காதல் பாடல்களாகட்டும் , ‘சங்கே முழங்கு’ (கலங்கரை விளக்கம்), ‘புதியதோர் உலகம் செய்வோம்’ (சந்திரோதயம்) , ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ (உலகம் சுற்றும் வாலிபன்) , ‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே’ (முத்துச்சிப்பி) போன்ற தமிழ் முழக்கங்களாகட்டும் , ‘அறுபடை வீடு கொண்ட திருமுருகா’ (கந்தன் கருணை) , ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா’ (திருமலை தென்குமரி) போன்ற பக்தி சுவைப் பாடல்களாகட்டும், ‘தேவன் கோவில் மணியோசை’ (மணிஓசை), ‘ஓடம் நதியினிலே’ (காத்திருந்த கண்கள்) போன்ற தத்துவ இசையாகட்டும், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ (கர்ணன்) போன்ற சோக ரசப் பாடல்களாகட்டும், ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்’ (எதிர்நீச்சல்), ‘நாளைபொழுது உந்தன் நல்ல பொழுதாகும்’ (பொற்சிலை)போன்ற நம்பிக்கைப் பாடல்களாகட்டும், இப்படி ஆயிரக்கணக்கான வெற்றிப் பாடல்கள் இன்றும் நிலைபெற்று நிற்க, திரை இசைப் பாடல்களின் தன்மை உணர்ந்து பாடியதே முக்கிய காரணம். சினிமாவில் நடிகர்களுக்கேற்ப பாவங்களை பாடலில் கொடுக்கலாமே தவிர, குரலை மாற்றி இசை நயத்தை மாற்றிவிடக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர். ‘உள்ளத்தில் கள்ளம் இல்லாமல், தூய வெள்ளை மனதுடன் உன்னிடம் உள்ள நல்ல தொண்டையில் பாடினாலே போதும். உன் இசைத் திறன் மென்மேலும் பரிமளிக்கும்’ என்று தனது சுயமரியாதைக் கொள்கையை இளம் பாடகர்களுக்கு அறிவுரையாக வழங்குவார். ‘தமிழ்க் கடவுள் முருகனை நம்பினோர் கைவிடப்படார்’ எனும் நம்பிக்கை வாசகம் உள்ளதைப் போல, சீர்காழியை நம்பிய தமிழ்க் கவிஞர்கள் பலர் சினிமா பாடலுக்கு நிகரான புகழை, இவருக்கு பக்திப் பாடல்கள் எழுதித் தந்ததன் மூலம் பெற்றிருக்கிறார்கள். கவிஞர்கள் டாக்டர் உளுந்தூர்பேட்டை சண்முகம், கலைமாமணி திருச்சி பாரதன், நெமிலி எழில்மணி, பூவை செங்குட்டுவன், கீதப்பிரியன், இணுவில் வீரமணி ஐயர், பழனி இளங்கம்பன் போன்றோர் இவ்வாறு தனிப் பாடல்கள் தந்து சிறந்தவர்கள். கவிவேந்தர் வாலி கூட இவ்வாறு பல பாடல்களைத் தந்ததுடன், தனது முதல் திரையுலகப் பிரவேசம் சீர்காழியாரின் குரலில் டி.ஆர்.பாப்பாவின் இசையில் ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்’ பாடல் மூலம் எம்.ஜி.ஆரின் ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் கைராசியாக நிகழ்ந்ததைச் சொல்வார். நல்ல தமிழ் எங்கிருந்தாலும் அதை தேடிச் சென்று ஆதரிக்கின்ற தமிழ் உள்ளம் சீர்காழியாருடையது. தன் ஆலய மணிக்குரலால் ஆலயங்கள்தோறும் இசை நிகழ்த்தி, சீர்காழியால் பாடல் பெற்ற தலங்களாக்கி, கர்நாடக சங்கீதத் திறத்தால் மத்திய அரசின் “பத்மஸ்ரீசங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது, “கலைமாமணி” விருது, ‘இசை ஞான பூபதி’, மொரிஷியஸ் இசைத் தூதர், வெளிநாட்டு விருதுகள் பல என நூறுக்கணக்கான மதிப்புயர் விருதுகளைப் பெற்றவர். தருமபுர ஆதீனம், காஞ்சி காமகோடி பீடம், குன்றக்குடி ஆதீனம் போன்ற ஆன்மீக பீடங்களின் இசைப் புலவராகப் பட்டங்கள் சூட்டப் பெற்றவர். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் தயாரிப்பின் போது பிரபல பின்னணி பாடகர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அப்பா மிகவும் கவலையுடன் எம்.ஜி.ஆர். நம்மை மறக்க மாட்டாரே என்று வருத்தப்பட்டு கூறிக்கொண்டு இருந்த போது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது, அதில் பேசியவர்கள் உடனே புறப்பட்டு வரும்படி கூற அப்பா அங்கு சென்றார். எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாவிடம் படத்தின் டைட்டில் பாடலை நீங்கள் தான் பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூறி இருக்கிறார் என்றார். அதை ஏற்று எனது தந்தையும் பாடினார். அந்த பாடல் தான் “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்” என்ற பாடல். கடைசியாக இந்த பாடலை பாடியுள்ளோம் படத்தின் டைட்டிலில் நமது பெயர் வருமா என்ற சந்தேகம் அப்பாவுக்கு. ஆனால் பட டைட்டிலில் பின்னணி பாடகர்களில் இரண்டாவது பெயர் அப்பாவின் பெயரே இடம் பெற்றதைப் பார்த்து மிக்கமகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி கூறினார். எம்.ஜி.ஆர் பாட்டு பிரமாதமாக வந்து இருக்கிறது என்று கூறி அப்பாவின் கன்னத்தை தட்டி பாராட்டு தெரிவித்து குளிர்பானம் கொடுத்து உபசரித்தார். அப்பா, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தங்களின் காவல்துறை மாநாடு, உலகத் தமிழ் மாநாடு போன்றவற்றில் முக்கிய நிகழ்ச்சிகளில் பாடச் சொன்னதையும், அண்ணா இவர் பாடிய திருக்குறள் இசைத் தட்டினை வெளியிட்டு மகிழ்ந்ததையும் பெருமையாகக் கருதுவார். டாக்டர் கலைஞர் இவரது இசையில் பேரன்பும் பற்றும் கொண்டவர். முதல்வராக எம்.ஜி.ஆர் பொறுப்பில் இருந்தபோது தான் தமிழக அரசவைக் கலைஞராக சீர்காழி நியமிக்கப்பட்டார். நான் மருத்துவராக இருப்பதால் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கியவுடன் அப்பாவிடம் கொடுத்து ஆசி வாங்குவேன். அப்பாவின் மணி விழா நெருங்குவதை ஒட்டி அதை பிரமாதமாக நடத்த ஆசைப்பட்டேன். அதற்காக பணத்தை சேர்த்து வந்தேன். ஆனால் அந்த வைபவத்தை நடத்த கொடுத்து வைக்காமல் அப்பா காலமாகி விட்டார். அந்த ஏக்கம் இன்றும் என் மனதில் நீங்காத வடுவாக இருந்து கொண்டே இருக்கிறது. அரசியல் சார்பற்று, அனைத்து மக்களின் உள்ளத்திலும் நிலையான இசைப் புகழைக் கொண்டு, தன் பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் அன்பர்களைக் கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 24-3-88 அன்று காலமானார். தனது இறுதி மூச்சிலும் ‘உலகம் வாழ்க, உலகம் வாழ்க’ என்று பிரார்த்தித்தவாறு கண் மூடியதைக் கண்டு உலகமே நெகிழ்ந்து அழுதது. இசையிலும் குணத்திலும் உயர்ந்து சிறந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அந்த உன்னதக் கலைஞனைப் போல், இனிமையாகப் பாடவும் பழகவும் ‘அவருக்கு முன்னரும் யாருமில்லை. அவருக்குப் பின்னரும் யாரும் பிறக்கவில்லை’ என்று உலகம் இன்றளவும் போற்றுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 18 January 2019

பிளாஸ்டிக் தடை பயனளிக்கிறதா?

பிளாஸ்டிக் தடை பயனளிக்கிறதா? முனைவர் ஜெ.வீ.அருண், கல்லூரி உதவி பேராசிரியர். இ ந்தியாவில் மட்டும் தற்போதைய நிலவரப்படி சராசரியாக வருடத்திற்கு 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அதில் மக்கா கழிவாக தங்கி விடும் பிளாஸ்டிக்கின் அளவு மட்டும் 9 டன் மில்லியனாக இருக்கிறது. மேலும் 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் மட்டும் 20 மில்லியன் டன்னாக உயர வாய்ப்புள்ளது என்றும் கணிப்புகள் கூறுகின்றன. நம் நாட்டில் மராட்டியம், தெலுங்கானா மற்றும் இமாசலபிரதேசத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. இந்த புத்தாண்டின் முதல் தேதியில் (ஜனவரி 1) இருந்து தமிழகமும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கடைகள், பல்பொருள் அங்காடிகள் என பெருமளவில் துணி பைகள் புழக்கத்தில் வர தொடங்கிவிட்டன. ஜனவரிக்கு சற்று முன்னதாகவே இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்தது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இருப்பினும் வீடுகளிலும், கடைகளிலும் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தவது குறித்தோ அதனை இனி வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை பற்றியோ ஒரு தடையோ? சட்டமோ? இன்னும் வந்ததாக தெரியவில்லை. பிளாஸ்டிக்கின் துணையை சிலரால் ஒரேடியாக ஒதுக்கிவிடவும் முடியவில்லை. பலசரக்கு கடைகளில் இன்றும் பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே சீராக பேக்கிங் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு தான் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றப்பட்ட பொருட்களை தான் இறுதியில் நாமும் துணி பைகளில் வாங்கி செல்கிறோம். பிளாஸ்டிக் தடையினால் ஏற்பட்டுள்ள சிரமங்களும் ஏராளம் தான். பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவது எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்பதும் பெரும் கேள்விக்குறிதான். பத்து வருடத்துக்கு முன்பெல்லாம் குப்பை கொட்டுவது ஒரு சாதாரண செயல். வீடுகள் அருகில் சிமெண்டினால் ஆன நிரந்தர குப்பை தொட்டிகள் நகரங்களின் வீதிகளில் பல இடங்களில் காணப்படும். வீட்டில் உள்ள திடக்கழிவுகளை பிளாஸ்டிக் பையின் துணையின்றி குப்பை டப்பாக்களில் எடுத்து கொட்டிவிடுவோம். இன்றோ குப்பைகள் போடுவதற்கு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் தள்ளிக்கொண்டு வரும் சக்கர ஊர்திகளுக்காக காத்து இருக்க வேண்டியது உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளின் துணையில்லாமல் குப்பைகளை தேக்கவும் முடியாது. அதுவும் கணவன், மனைவி இருவரும் வேலைக்கும் செல்லும் குடும்பத்தில் குப்பை கொட்ட கூட வீட்டில் யாருமில்லாமலும், நேரமில்லாமலும் போகும் சமயம் அருகில் உள்ள ஏதாவது இடத்தில் குப்பையை கொட்ட தொடங்கி விடுகிறார்கள். இதனாலேயே பல இடங்கள் சிறு, சிறு குப்பை கிடங்குகளாக மாறி வருகின்றன. இதுபோல் வீசி எறியும் பிளாஸ்டிக் பைகள் காணும் இடமெல்லாம் மக்குவதற்கு வழியில்லாமல் ஒன்று மண்ணில் புதைந்தோ அல்லது திட குப்பையாகவோ மாறி விடுகிறது. முன்பெல்லாம் எவர்சில்வர் டிபன் பாக்சுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. இன்றோ ஒழுகாதென்ற உத்திரவாதத்துடன் பல வண்ணங்களில் பிளாஸ்டிக் உணவு டப்பாக்களே உபயோகிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் ஓர் திட பொருள். அது ஓர் திட கழிவு அல்ல. அதை அத்தனை சுலபமாக அழித்து விடவும் முடியாது. வளரும் மற்றும் வளர்ந்த மேலை நாடுகள் கூட இன்றும் திணறுவது இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தான். சுலபமாக உருவாக்கி விட கூடிய பிளாஸ்டிக் பாலிமர்களின் ஒரு சிறு இழை மக்குவதற்கு குறைந்தது ஆயிரம் வருடங்கள் எடுக்கும். உணவுடன் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மை கலக்கும் போது புற்றுநோய் போன்ற பல வியாதிகள் வருவதாக ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. இந்த நிலையில் வீடுகளில் திரும்பிய இடமெல்லாம் பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களே காணப்படுகிறது. இவையெல்லாம் மக்குவதற்குள் உலகமே அழிந்து கூட போகலாம். முன்பெல்லாம் பெட்டிகடைகளில் கிடைத்த கடலை மிட்டாய், தேன் மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் கூட இன்று அதற்கே உரிய ஸ்மார்ட் கோடுகளுடன் பிளாஸ்டிக் உறைகளில் உலா வர தொடங்கிவிட்டது. நவீனமயமாக்கல் என்ற பின்னணியில் எந்த ஒரு பொருளும் சுத்தமாக அழகாக சுற்றப்பட்டு பிளாஸ்டிக் கவர்களின் உதவியுடன்தான் விற்பனையும் செய்யப்படுகிறது. பெட்டிக்கடைகளில் கடைக்காரர் கையால் எடுத்து தரும் திண்பண்டங்களை சுகாதார சீர்கேடு என தவிர்க்கும் நாம், பல மாதங்கள் பிளாஸ்டிக் தாள்களுடன் இறுக்கமாக இணைந்து பயணித்து பின் நம் உடலில் நச்சாக சேர போகும் உணவுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கி மகிழ்ச்சி அடைகிறோம். பிளாஸ்டிக் உபயோகம் புலி வாலை பிடித்த கதையாக போய்விட மனிதர்களுக்கு அதில் இருந்து மீள தேவையெல்லாம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வும், தெளிவும்தான். மனிதன் அவசர வாழ்க்கையை விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ தொடங்கிய பின்விளைவுதான் இந்த பிளாஸ்டிக்கால் மனிதனும், விலங்குகளும் படும் பாடு. சுழல மட்டுமே தெரிந்த பூமிக்கு தன்னை மனிதன் சுத்தமாக வைத்திருக்கிறானா? என்ற கேள்வி எழுந்து பல நாட்களாகி விட்டது. தன் மண் வளத்தையும், இயற்கை வளத்தையும் அழித்து வரும் மனித குலத்திற்கு நிதான அழிவை பூமி உணர்த்த தொடங்கி விட்டது என்பதே உண்மை. பிளாஸ்டிக் தடை பயனளிக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த முயற்சி சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான சிறு தொடக்கமாக இருந்தால் நிச்சயம் மகிழ்ச்சிதானே.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசியல் தெரிவோம்... தெளிவோம்!

அரசியல் தெரிவோம்... தெளிவோம்! மு.முத்து மீனா, எழுத்தாளர். உ லக நாடுகளில் இரண்டாவது பெரும் ஜனநாயக நாடாக உள்ளது நம் இந்தியா. 18 வயது நிறைவடைந்த இந்திய குடிமகனும், குடிமகளும் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர். மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் பள்ளிப் பாடத்திலேயே நாம் கற்ற ஒன்று. இன்றைய சூழ்நிலையில் முதல் முறை வாக்காளர்கள் பொதுவான கருத்துகளாலும், வீட்டில் உள்ளவர்களாலும் உந்தப்பட்டும் தங்களுடைய முதல் வாக்கினை செலுத்துகிறார்கள். அதற்கு அடுத்து வரும் தேர்தல்களில் அவர்களாகவே ஆங்காங்கு நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்து தங்கள் ஓட்டைச் செலுத்தத் தொடங்குகிறார்கள். மக்களாகிய நம்மால் தான் பெரும் மாற்றத்தை கொண்டுவர இயலும் என்று அரசியல் தலைவர்கள் மேடையில் கூக்குரலிட்டாலும், ஓட்டுரிமையைப் பற்றி வருடம்தோறும் திரைப்படங்கள் வந்தாலும், தொலைக்காட்சி மற்றும் வானொலியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கினாலும் இறுதியில் கருத்துகள் என்னவோ சென்றடைவதில்லை என்பதே உண்மை. ஏறக்குறைய அனைத்து குடும்பங்களிலும் கட்டாயம் ஒரு நபராவது படித்திருக்கும் சூழ்நிலை வந்தாகிவிட்டது. நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளத் தேவையான அனைத்துத் தொழில்நுட்பங்களும் கையிலே உள்ளது. ஓட்டுரிமை பற்றி வரும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டையும் பெறுகிறது. இருப்பினும் ஒவ்வொரு தேர்தலின் பிறகும் ஆட்சி மாற்றம் தேவை என்ற கருத்து கணிப்பு வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது. ஆட்சியைப் பற்றி மக்கள் மனதில் குழப்பங்கள் பெருகிக்கொண்டுதான் போகிறது. காலம் காலமாக நம்மிடையே ஒரு பெரும் தவறு நடந்து கொண்டு இருக்கிறது. எதையும் முழுமையாக சென்று பார்க்காமலும், எதற்காக இந்த விஷயத்தை செய்கிறோம்? இதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாமலும், மேம்போக்காக இருந்து வரும் குணம் உள்ளது. முக்கியமாக எந்த இடத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டுமோ, அங்கே கண்டுகொள்ளாமல் விட்டு, பின்னால் சமுதாயத்தையும், ஆட்சியையும் குறை கூறிக்கொண்டிருப்பது தவறான செயலாகும். தேர்தல் வருகிறது என்றால் இது எந்த பதவிக்கான தேர்தல் என்பதை முதலில் அறிய வேண்டும். வாக்களிக்கும் பதவியின் பொறுப்புகள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுதல் வேண்டும். தொகுதியில் போட்டியிடும் கட்சிகளைப் பற்றி அறிதல் அவசியம். அக்கட்சியின் கொள்கை முடிவுகள் என்ன? என விசாரித்தல் முக்கியம். இவை அனைத்தும் அறிந்த பின், தங்களுடைய வாக்கை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அளிக்கலாம் என்ற ஒரு முடிவு கிடைக்கும். அப்போது அந்த கட்சி இதற்கு முன் வகித்த பொறுப்புகள் பற்றியும், கொண்டு வந்த திட்டங்களைப் பற்றியும் ஆராய வேண்டும். தங்கள் தொகுதி வேட்பாளர் குறித்து முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும். முதலில் மற்றவர்களின் கருத்துகளால் உந்தப்படுவதை தவிர்த்தல் வேண்டும். வாக்களிக்கும் உரிமையைச் சொந்தமாக தேர்வு செய்தல் அவசியம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களின் பின்புலத்தை ஆராய்ந்து விரல் நுனியில் வைத்திருக்கும் நம்மவர்களால் நாட்டை ஆளப்போகும் கட்சிகளையும், கொள்கைகளையும் பற்றி அறிய ஆர்வமில்லை. சட்டமன்றத்தில் அன்றாடம் என்ன நடக்கிறது? கூட்டத்தொடர் என்றால் என்ன? நாம் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களின் வேலை என்ன? என்று கேட்டால், பெரும்பாலானோருக்கு விடை தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பப்படவும் முயலவில்லை. அரசியல் பிரசாரத்திற்கு கட்சிக்காரர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்று பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். தான் வாக்களிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார கூட்டத்திற்கு அனைவரும் செல்லத் தொடங்கவேண்டும். நேரில் செல்ல முடியவில்லை என்றாலும், அவர்களின் கொள்கைகளை கேட்டறிவது மிகவும் அவசியமான ஒன்று. பிரபல டி.வி நிகழ்ச்சிகள் பற்றியும், கிரிக்கெட் தொடரைப் பற்றியும் அன்றாடம் நண்பர்களிடத்தில் பேசிக்கொள்ளும் நாம், எப்போது தேர்தலின் மீதும், கட்சிகளின் மீதும் மட்டுமே குறைபட்டுக்கொள்ளாமல் கட்சி திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் ஆரோக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளப்போகிறோம். நாமும் வாக்களிக்காமல் நம் நண்பர்களிடத்திலும் “வாக்களித்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை” என்றுதானே கூறிக்கொண்டு வருகிறோம். ஆரம்பமே பிழையாக உள்ள சமூகத்தில் முடிவைப்பற்றி குறைப்படுவதில் எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை. மாற்றங்கள் நிகழ பெரிய புரட்சி வரும் என்று எண்ணிக்கொண்டே காலங்கள் கடத்திவரும் நாம் அதற்கான முயற்சியை மேற்கொள்ளப் பழக வேண்டும். பொழுதுபோக்கிற்கு அளிக்கும் 100 சதவீத ஆர்வத்தில் பாதியாவது, தேர்தல் நேரங்களில் ஓட்டுரிமை மீதும், வாக்களிக்கப்போகும் தேர்விற்காகவும் அளித்திடல் வேண்டும். மேற்கூறிய அடிப்படை விஷயங்களை இன்றுள்ள தொலைக்காட்சிகள் மக்களிடம் கொண்டு சேர்க்க முன்வர வேண்டும். அரைகுறை அறிவினால் குழப்பங்கள் பெருகி, பக்கச்சார்பான முடிவுகளைத் தேர்ந்தெடுத்து வரும் நாம், இனியாவது விழித்தெழ வேண்டும். தனக்கும், தன் நாட்டிற்கும் எவ்வித பயனும் இல்லாத செயல்களில் உயிர்மூச்சாய் ஆர்வம் காட்டுவதை உணர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அதில் இருந்து வெளிவர வேண்டும். ஆட்சியாளர்களையே என்றும் குறை கூறி வரும் வாக்காளர்களாகிய நாம், நம்முடைய குறையை முதலில் சரி செய்ய வேண்டும். கட்சிகளையும், ஆட்சிகளையும் விமர்சிப்பதில் மட்டுமல்ல உரிமை. அவற்றை முழுமையாக புரிந்துகொள்வதில் தான் ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் வெளிப்படுகிறது. இன்றைய சூழலில் பல இளைஞர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். அதற்கு முன்னதாக அரசியல் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளவும், தான் புரிந்து கொண்ட அரசியலை மக்களிடத்தில் பகிர வேண்டும் என்பதையும் கடமையாக கொண்டு ஒவ்வொரு இளைஞனும் செயல்பட வேண்டும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 17 January 2019

சிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு!

சிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு! | சோனால்டி தேசாய் | கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சாதிகள், சமூக-பொருளாதார அந்தஸ்துள்ள சமூகங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் நிலவும்போது, இடஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ள நடவடிக்கைதான். அதேசமயம், நாடு குடியரசான புதிதில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை, இன்றைய நவீன யுகத்தில் மறுபரிசீலனை செய்வது அவசியம். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், இதைத் தவிர்த்து மேற்கொள்ளக்கூடிய மாற்று ஏற்பாடுகளையும் ஆராய்வோம். எல்லோருக்கும் இடஒதுக்கீடு? பொருளாதாரரீதியாகப் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு 10% ஒதுக்கீட்டை அரசியல் சட்ட (124-வது திருத்த) மசோதா-2019 உறுதியளிக்கிறது. நாடாளுமன்ற விவாதத்தில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் விவாதிக்கப்பட்டாலும் இந்த மசோதா இது பற்றி மவுனம் சாதிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ (கிரீமி லேயர்) என்று அடையாளம் காண அடிப்படையாகக் கருதப்படும் ‘ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்’ என்ற அடிப்படையே இதற்கும் கொள்ளப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ என்று நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம், வசதியானவர்களை ஒதுக்குவதற்காக. தேசிய கணக்கெடுப்பு சர்வே (என்எஸ்எஸ்) 2011-12 தரவுகளின்படி குடும்பங்களின் ஆண்டு நபர்வாரிச் செலவு 99% அளவுக்கு இந்தத் தொகைக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்திய மனிதவள வளர்ச்சி சர்வே (ஐஎச்டிஎஸ்) கணக்கெடுப்பின்படி 98% குடும்பங்களின் வருடாந்திர வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவு. மசோதாவில் கூறியுள்ள சொந்த வீட்டின் பரப்பளவு, சொந்த நில அளவு ஆகியவற்றையும் சேர்த்துப் பரிசீலித்தால்கூட 95%-க்கும் அதிகமான மொத்த குடும்பங்கள் இந்த வருமான வரம்புக்குள்தான் இருக்கின்றன. அப்படியென்றால் நாம் யாரை ஒதுக்குகிறோம்? யாரையும் அல்ல. பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டால் கிடைக்கும் பலன்கள் மிகக் குறைந்தபட்சமாகவும், அதற்கான விலை அரசு எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவும் இருக்கும். முதல் அம்சம், இடஒதுக்கீடுகளுக்கான இடங்கள் போக எஞ்சிய இடங்கள் அனைத்துப் பிரிவினரும் போட்டியிடுவதற்கானது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடிகள் ஆகியோரும் பொதுப் பிரிவினருக்குமானது அந்த இடம். அதிலிருந்து 10% குறைக்கப்பட்டால், இப்போது இடஒதுக்கீடு பெறும் சமூகத்தவருக்கு மேலும் 10% குறைக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் நன்மை இல்லை. இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். காரணம் மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கும் மேல். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27%தான் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். அரசியல் சட்டப்படி இடஒதுக்கீட்டின்கீழ் வரும் இடங்களின் எண்ணிக்கை 50%-லிருந்து 60% ஆக உயர்த்தப்படும்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கானருக்குப் பொதுப் பிரிவில் இடங்கள் குறைந்துவிடும். எனவே, அவர்கள் தங்களுக்கான இடங்களை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கே வாய்ப்புகள் அதிகம். சாதிச் சான்றிதழ்கள் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் மிகவும் சவாலானது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் பெறுவது ஏற்கெனவே சிரமமான வேலையாக இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் தன்னைப் பின்தங்கியவராக ஒருவர் எப்படி எளிதாகக் கோர முடியும்? அடுத்ததாக, வேலை தேடுவோரின் எண்ணிக்கை எப்படியாக இருந்தாலும் தனித்திறன் உள்ளோரின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொருளாதார அடிப்படையில் 10% ஒதுக்கீட்டால் இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும். சமூக முன்னேற்றத்துக்கு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் என்ன லாபம்? மறுவடிவமைப்பு தேவை இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவ்வப்போது ஆராய்ந்து, அதை வலுப்படுத்தி, தீவிரப்படுத்தியிருந்தால் பலன் தந்திருக்கும். சமூக-பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோரின் நிலையைத் துல்லியமாக ஆராய்ந்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கு அவசியம் இல்லை என்ற அளவுக்கு அரசு செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது என்றால், அதற்கு ஆதரவான கொள்கை என்னவாக இருக்க முடியும்? அதிகபட்சம் பேருக்கு நன்மைகளை வழங்க வேண்டும் என்று விரும்பினால் அது சவால் நிறைந்ததாகிவிடும். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கை மூலம் 50% பேருக்கு சமூக நீதி வழங்குவது எளிதல்ல. இப்போதைய இடஒதுக்கீட்டு நடைமுறை பயனற்றதாகவும் முனை மழுங்கியதாகவும் இருக்கிறது. மத்திய பொதுப்பணித் தேர்வாணையம் தந்த தரவுகள் இதை நிரூபிக்கின்றன. 2014-ல் விண்ணப்பித்தவர்களில் 0.14% மனுதாரர்களே தேர்வாகினர். பொதுப் பிரிவு மாணவர்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும்தான் அதிகம் தேர்ச்சி பெற்றனர், தேர்ச்சி விகிதம் 0.17%, இதில் பட்டியலினத்தவர்கள் 0.08%. ஆனால், பட்டியலினத்தவர்கள் நிறையப் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களுக்கான பிரிவில் எளிதாக வேலை பெற்றுவிடுகின்றனர் என்பதே பொதுவான கண்ணோட்டமாக இருக்கிறது. முதன்மைத் தேர்வு எழுதுவோரில் 8% தான் தேர்ச்சி பெறுகின்றனர். பட்டியலினத்தவர்கள் பிரிவில் இத்தேர்ச்சி 8.2% முதல் 8.3% ஆகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 9.9% ஆகவும் பொதுப் பிரிவில் 7.8% ஆகவும் இருக்கிறது. இடஒதுக்கீட்டு முறை மீது பொதுப் பிரிவினருக்கு மன ஆதங்கம் இருந்தாலும் உண்மையில் இந்த ஒதுக்கீடு பட்டியலினத்தவர்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அதிகப் பலன்களைத் தந்துவிடவில்லை. பலன்களை விரிவாக்குங்கள் எனவே, மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். இப்போதுள்ள கட்டமைப்பிலேயே இடஒதுக்கீட்டின் பலன்கள் ஏராளமானோருக்குக் கிடைப்பது அவசியம். இடஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேரும் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வேலைக்கான வாய்ப்பை, அதே பிரிவைச் சேர்ந்த அரசின் இடஒதுக்கீட்டின் பயனை அதுவரை பெறாத இன்னொருவருக்கு அளிக்கலாம். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கல்லூரியில் சேர்க்கை, வேலையில் ஒதுக்கீடு ஆகியவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி தனியார் துறை, தனியார் தொழில் முகவாண்மையிலிருந்துதான் வரும் என்பதை அங்கீகரித்து செய்யப்பட வேண்டும். சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அடிப்படையான திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புகழ்பெற்ற கல்லூரிகள், நிறுவனங்களில் படிக்கச் சேருவதிலும், அரசு வேலைவாய்ப்பு பெறுவதிலும்தான் இப்போது அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே தொடங்கிவிடும் கல்வித்தர சமமின்மை குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. நம் அனைவரின் முன்னால் உள்ள சவால் இடஒதுக்கீடு பற்றிய நமது கண்ணோட்டமே. இது எப்படிச் செயல்படுகிறது, எப்படித் திறன்களை வளர்க்கிறது அல்லது எதிர்பார்த்த பலன்களை அளிக்கிறது என்றெல்லாம் ஆராய்ந்து சரி செய்யத் தவறிவிட்டோம். பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு இதை வெற்றிகரமாக்க உள்ள வழிமுறைகளை ஆராயவிடாமல் திசை திருப்புகிறது என்பதுதான் பெரிய சோகம்!

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்வி என்பது நல்ல ஒழுக்கமே...!

கல்வி என்பது நல்ல ஒழுக்கமே...! ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர். த லைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவனாக இருக்கிறோம் என்ற உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்க கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும். எது சிறந்த கல்வி, எது உண்மையான அழகு என்பதை நாலடியார் அழகாகச், சிறப்பாகச் சொல்கிறது. நல்ல ஒழுக்கங்களை, கற்றுத் தரும் கல்வி அறிவே இன்று மிக முக்கியத் தேவை. முன்பு மாணவர்கள் குருகுலத்தில் தங்கி குருவிடம் நல்ல பண்புகள், ஒழுக்கங்கள் என்று கற்றுக்கொண்டார்கள். படிப்பு முடிந்து அவர்கள் வரும்போது வாழ்வை எதிர்கொள்ளும், தீரம், தைரியம், நம்பிக்கை மனம் முழுதும் நிரம்பி இருக்கும். ஆனால் இன்றைய கல்வி முறை மாணவர்களை, அடிப்படை மனித குணங்கள் இல்லாதவர்களாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பொறுமை, நல்ல எண்ணங்கள், நம்பிக்கை போன்றவற்றை கல்வி அழித்துவிட்டதோ என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அதற்கு சாட்சியாக எத்தனை விதமான செய்திகள். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை. பெற்றோர் திட்டியதால் மாணவர் விஷம் குடித்து சாவு, தந்தையைக் கொன்ற மகன், ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவன் என்ற செய்திகளை படிக்கும்போது மனம் பதறுகிறது. படிக்கும் காலத்தில் பாதை மாறுவது, பெரியவர்கள், ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடப்பது, கண்டித்தால் உடனே விபரீத முடிவு எடுப்பது என்று இன்றைய இளைய சமுதாயம் பயமுறுத்துகிறது. தான் தவறு செய்தாலும் திட்டுவது, மனம் நோகப் பேசக் கூடாது, கண்டிக்கக் கூடாது என்றால் அவர்களை எப்படிதான் திருத்துவது, ஆசிரியர் எப்படி திட்டுவது. எந்தச் சுயநலமும் இல்லாமல் நம் குழந்தைகள் இவர்கள். இவர்கள் நன்றாகப் படித்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறைதான் ஆசிரியரின் கண்டிப்பில் இருக்கும். இதேபோல்தான் பெற்றோர்களும். நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தவர்கள். நமக்காக பாடுபட்டு, தன் சுக துக்கங்களை மறந்து பெற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கு, ஒரு தவறை சுட்டிக் காட்டித் திட்டவோ, கண்டிக்கவோ உரிமை இல்லையா? கல்வியும் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கடினமாக இருக்கிறது. தேர்ச்சி என்ற ஒரு இலக்கை மட்டுமே வைத்து கல்வி நிறுவனங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சிறிது கூட ஓய்வு என்றில்லாமல் எப்போதும் எதோ ஒரு தேர்வு வந்து கொண்டிருக்கிறது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதாவது வகுப்புகள் வைத்து மாணவர்களுக்கு பொழுதுபோக்குக்கு தடை ஏற்படுத்தி விடுகின்றனர். சிறிது கவனம் பிசகினாலும் தேர்ச்சி அடைய முடியாது என்று பயம். தொழில்நுட்ப உலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாழ்வில் ஸ்திரமாக்கி நிற்க வேண்டும் என்ற பயம் மாணவர்கள் மனதில். போட்டிகளைச் சமாளித்து முதலிடத்தை தக்க வைக்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என்ற பதற்றம் கல்வி வியாபார நிறுவனங்களிடம். மனம் ஒரு மாற்றத்திற்கு ஏங்குகிறது. அப்போது ஒரு சினிமா, பாடல், மனசை குறுகுறுக்க வைக்கும் விஷயத்தில் கவனம் போய் விடுகிறது. பல மாணவிகள் படிக்கும் காலத்தில் பாதை மாறிப் போவது இதனால்தான். இந்த நேரத்தில் ஒரு சின்ன வழிகாட்டலை ஆசிரியரும், பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் திட்டினால் பெற்றோர்களும் உடனே அது குறித்து புகார் தருவது, அரசியல் பிரமுகரை அழைத்துக்கொண்டு வந்து பள்ளியில் ஆசிரியரை தரக் குறைவாகப் பேசுவது என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த ஆசிரியரும் ஆசைப்பட்டு மாணவர்களை திட்டுவதில்லை. அவர்கள் தவறு செய்தால் கண்டிக்க வேண்டியது ஒரு ஆசிரியராக அவர்களது கடமை. ஆசிரியர் கண்டிப்பது நல்ல பண்புகளுடன் நடக்கத்தான் என்ற உணர்வும், ஆசிரியையும் பள்ளியில் அவளுக்கு ஒரு தாய் என்ற உணர்வும் மாணவர்களுக்கு வர வேண்டும். “கல்வி கரையில், கற்பவை நாள் சில” என்கிறது அதே நாலடியார். “நல்ல ஒழுக்கமுள்ள பெற்றோர்களும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களே இன்று நம் தேவை” என்கிறார் மகாத்மா. கல்வியின் முழுப் பயன் எது? என்பதை உணர்ந்து அதை கற்க வேண்டும். “கற்க கசடற, நிற்க அதற்குத் தக” என்கிறது குறள். இன்று பயங்கரவாதம், ஊழல், லஞ்சம், பாலியல் வன்முறை என்று பல சம்பவம் நடப்பதை காண்கிறோம். அதில் ஈடுபட்டவர்களைப் பார்த்தால் அதிகம் பேர் மெத்தப் படித்தவர்கள். மதிப்பான பதவியில் இருப்பவர்கள். கல்வி இவர்களுக்கு கற்றுத் தந்தது என்ன? ஒழுக்கக் கல்வி என்பது பிறக்கும்போதே ஆரம்பித்து விட வேண்டும். மனிதப் பண்புகள், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் பள்ளிகளும், வீடுகளும். ஒழுக்கம் என்பது யாரும் இல்லாத போதும் நம் செயல்கள், சிந்தனைகள், பேச்சுகள் நேர்மையாக இருப்பதே. அது மனசாட்சியின் வடிவம். அதை மீறி நடந்தால் பின் வாழும் நாள் வரை உறுத்தலோடுதான் வாழ வேண்டும். கல்வியின் முழு வடிவம் என்ன என்று ஆசிரியர்கள் தெளிவாக உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். சமூகத்தின் அடித்தளம் அவர்கள். சம்பளம் வாங்குவதும், தேர்ச்சி சதவீதம் காட்டுவதும் மட்டுமே வேலை அல்ல. ஒரு சமூகமே அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்படும். அதை உணர்ந்து கனிவோடும், அன்போடும், நல்ல எண்ணங்களுடன் மாணவ சமுதாயத்தை அணுக வேண்டும். பாடத்துடன் நல்ல ஒழுக்க நெறிகளையும் கற்பிக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. இந்தப் பருவத்தில் கவனம் சிதறாமல் இருந்தால் வாழ்நாள் முழுதும் மதிப்பும், கவுரவமாக வாழலாம். சந்தோஷம் என்பது கோடீஸ்வரனாக வாழ்வதில் இல்லை. மற்றவர்களால் வணங்கத் தக்க விதத்தில் நல்ல சான்றோர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி அடங்கி உள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மக்கள் போற்றும் மன்னாதி மன்னன்

மக்கள் போற்றும் மன்னாதி மன்னன் சைதை சா.துரைசாமி, முன்னாள் மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி. இ ன்று (ஜனவரி 17-ந் தேதி) எம்.ஜி.ஆர். பிறந்தநாள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி புரிந்த முப்பெரும் தலைவர்களான பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரில் நீண்ட காலம் முதல்-அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். தன்னுடைய திரைப்படப் புகழை தி.மு.க..வின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தியவர். 26 படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னரே எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் 1952-ம் ஆண்டு இணைந்தார். எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்கள் பட்டிதொட்டியெங்கும் உள்ள கிராம மக்களிடம் தி.மு.க. என்ற கட்சியையும், கொடியையும் கொண்டுபோய் சேர்த்தன. உலகில் வேறு எந்த நடிகரும் செய்திராத வகையில் தன்னுடைய படங்களின் பாடல், வசனம், காட்சியமைப்புகளில் கட்சிக் கொள்கைகளைப் புகுத்தினார். “நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் சட்டம், நாடு நலம் பெறும் திட்டம்”, “தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன்... தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்” போன்ற பாடல் வரிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்தன. அதனால்தான், “உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட, எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துகளை பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றன” என்று அண்ணா கடிதம் எழுதி எம்.ஜி.ஆரை பாராட்டினார். 1967-ம் ஆண்டு தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் புரட்சி தலைவர்தான். எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. அதைப் பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.வுக்கு பெருவாரியாக வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். தி.மு.க. வெற்றி அடைந்ததும் அண்ணாவைப் பாராட்ட வந்த கட்சிப் பிரமுகர்களிடம் அவர் “மாலைக்குச் சொந்தக்காரர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார்” என்று வெற்றிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்பதை ஒப்புக்கொண்டு முதல் மரியாதையை செலுத்தச் சொன்னார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தியதும் புரட்சிதலைவர் தான். இதனை, தி.மு.க.வில் தான் எம்.ஜி.ஆரால் எப்படி உயர்வு பெற்றேன் என்பதை கருணாநிதியும் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார். வென்றாரும் வெல்வாரும் இல்லாத வகையில் ஒளிவீசும் தலைவா.. குன்றணைய புகழ்கொண்ட குணக்குன்றே முடியரசர்க்கில்லாத செல்வாக்கெல்லாம் முழுமையுடன் பெற்று விளங்கும் முழுமதியே! தென்னாடும் தென்னவரும் உள்ள வரை மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும் உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும் இந்தக் கவிதை மூலம் கருணாநிதியின் அரசியல் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் உதவினார் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன்பிறகு தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டதும், மக்களின் பேராதரவுடன் 1972-ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதும் வரலாறு. கட்சி தொடங்கிய பிறகு நடைபெற்ற 1977-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். களம் இறங்கினார். அந்த முதல் தேர்தலிலே அ.தி.மு.க.வுக்கு 130 இடங்கள் கிடைத்தன. அ.தி.மு.க. வெற்றி அடைந்ததும், அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி புதுமை செய்தார். தன் ஆட்சி லஞ்ச லாவண்யமற்ற ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனை 1987-ம் ஆண்டு மரணம் அடையும்வரை காப்பாற்றவும் செய்தார். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் எல்லா மதத்தினரும் அவரவர் ஆலயங்களில் எம்.ஜி.ஆருக்காக பிரார்த்தனை செய்தனர். அது, ஆன்மிக மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. ஆன்மிகத்தையும், அறத்தையும் தமிழகத்தில் தழைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். அறம் சார்ந்த அரசியல் நடத்திய புரட்சித்தலைவர் அடித்தட்டு மக்களின் நன்மைக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலங்கள் செய்த மகத்தான சாதனைகள், தமிழக வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதநேய அறக்கட்டளை, விரைவில் அவரது 10 ஆண்டு சாதனை மலர் வெளியிட இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் மகத்தான ஒருசில சாதனைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ‘கல்விக்கண்’ திறந்தவர் காமராஜர் என்றால், அனைவரையும் படிக்கத்தூண்டிய சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். 365 நாட்களும் சத்துணவு, 2 வயது முதலான குழந்தைகளுக்கும் உணவு, சத்துணவு ஆயாக்கள் நியமனம் போன்றவை ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றின. மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பல்பொடி, இலவச பாடநூல் என்று அக்கறை காட்டினார். பிளஸ்-2 பாடத்திட்டம், தொழில்கல்வி, மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு போன்றவையும் எம்.ஜி.ஆர். காலத்தில்தான் கொண்டுவரப்பட்டன. 49 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 68 சதவீதமாக உயர்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவீதம் மட்டுமே இருந்ததை, புரட்சித்தலைவர்தான் 50 சதவீதமாக உயர்த்தினார். இன்று உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் ஏராளமான தமிழர்கள் இருப்பதற்குக் காரணம், தனியாருக்கு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் அனுமதியைக் கொடுத்த எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வைதான். சென்னை நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தை, தன்னுடைய சொந்த செல்வாக்கால் நிறைவேற்றிக் காட்டியவர் எம்.ஜி.ஆர். அரசு மானியப் பொருட்கள் மக்களுக்கு சரியானபடி சேரவேண்டும் என்பதற்காக அரசு கட்டுப்பாட்டில் 22 ஆயிரம் ரேஷன் கடைகள் திறந்தவர் புரட்சித்தலைவர். அதுவரை ரேஷன் கடைகள் தனியார் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் துறையில் முதன்முறையாக பெண் காவலர்கள் நியமனம், கிராமங்கள் தோறும் தாய் சேய் நல விடுதிகள், மகளிருக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. குடிசைகளுக்கு ஒரு விளக்குத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்ததும் புரட்சித்தலைவர்தான். முதியோர் உதவித்தொகை, இளைஞர் உதவித்தொகை, வேலை வாய்ப்புக்காக ஏராளமான தொழிற்பேட்டைகள் உருவாக்கம், கிராமங்களுக்கும் பஸ் வசதி போன்றவைகளைக் கொண்டுவந்ததும் எம்.ஜி.ஆர்.தான். ஏழை, எளிய மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்த சைக்கிளில் டபுள்ஸ், சந்தேக கேஸ் போன்றவற்றை ரத்து செய்தார். இந்தியாவில் முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் சேவையைக் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர்.தான். எந்தக் காலத்துக்கும் பொருத்தமான அண்ணாயிசம் தந்ததும் புரட்சித்தலைவர்தான். கடல் போன்ற எம்.ஜி.ஆர். சாதனைகளில் சில துளிகள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் செய்த அளவுக்கு பிரமிப்பூட்டும் சாதனைகளை அவருக்கு முன்பு இருந்தவர்களும், அவருக்குப் பின்னே இருந்தவர்களும் செய்ததில்லை. மேலும், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், எம்.ஜி.ஆர். லஞ்சம் வாங்கினார், முறைகேடாக சொத்து சேர்த்தார் என்று ஒரு குற்றச்சாட்டுகூட எழுந்ததில்லை. தன்னுடைய உறவினர்களை ஆட்சி, அதிகாரங்களில் இருந்து விலக்கியே வைத்தார். ஊழலற்ற ஆட்சி நடத்தியதால்தான், மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஜெயித்தார். திரைத்துறையில் கதாநாயகனாக கடைசிவரை ஜொலித்தது போலவே, அரசியலில் முதல்வராக ஆட்சியேற்று, முதல்-அமைச்சராகவே மறைந்தார். மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் என்பதால்தான் அவர் மக்கள்போற்றும் மன்னாதி மன்னனாக, திலகமாக, ஏழைப்பங்காளனாக, இதயக்கனியாக போற்றப்படுகிறார். இந்த உலகில் கடைசி மனிதன் வாழும் வரையிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 15 January 2019

பசி ஏப்பமா? புளி ஏப்பமா?

பசி ஏப்பமா? புளி ஏப்பமா? கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடாலடியாக ஒரே நாளில் விவாதம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ள, 10 சதவீத இட ஒதுக்கீடு (பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொண்டு) முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 103-வது திருத்தத்தை ஏன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதை இட ஒதுக்கீடு ஏன், எதற்காக, எப்படி எப்போது ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இளைய தலைமுறையும், மேலெழுந்தவாரியாக ஏழைகளுக்கும் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்ப்பது என்ன நியாயம் என்று குழம்பியுள்ளவர்களுக்கும் தெளிவுபடுத்துவது மிக அவசியமாகும். இந்த சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நமது நாட்டில் (இந்தியாவில்) ஏன் தேவைப்படுகிறது? உலகில் எங்குமில்லாத சாதி வர்ண தர்மமுறை, தீண்டாமை என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு. மனுதர்மத்தில் முதலாம் அத்தியாயம் 87 ஆவது சுலோகத்தில் “பிரம்மாவானவர் பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார். “இதன்படி, பிராமணர்களுக்கே கல்வி ஏகபோகம். இதனால், கீழ்சாதிக்காரர்கள் காலங்காலமாய், கல்வியறிவுபெற முடியாதவர்களாகவும், அதன் விளைவாக அரசு வேலைவாய்ப்புகளை நினைத்துப் பார்க்க முடியாத மன ஊனம் உற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்! சர்.பி.டி. தியாகராயர், டாக்டர் நடேசன், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய திராவிடர் இயக்க முன்னோடிகள் இதனைச் சுட்டிக்காட்டி, (வகுப்புவாரி உரிமை) சமூக நீதி வேண்டும் என்று கேட்டனர். தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது 1920 முதல் 1925 வரை ஒவ்வொரு மாகாண மாநாட்டிலும் முயன்று வெற்றி பெறாத நிலையில், சமூகநீதிக்காகவே இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காகவே காங்கிரசை விட்டு 1925 -ல் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து வெளியேறினார். இவர்களுக்காகத்தான் 1920-ல் பதவியேற்ற நீதிக்கட்சி திராவிடர் இயக்கம் அதன் ஆட்சியின் போது வெள்ளைக்காரர்களிடம் ஆட்சியின் அதிகாரம் இருந்த இரட்டை ஆட்சி முறையிலும் முயற்சித்து, 1921, 1922 என்று இரண்டு வகுப்புவாரி ஆணைகளைப் பிறப்பித்தனர். அது சரியாக செயல்படாததால், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் ஊக்கத்தினால், நீதிக்கட்சித் துணையுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் இடம் பெற்ற எஸ்.முத்தய்யா (முதலியார்) ஒரு புது வகுப்புவாரி உரிமை ஆணை (ஜி.ஓ.) அனைவருக்கும் இட ஒதுக்கீடு தரும் வகையில் மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள பிராமணர்களுக்கு 17 சதவீதம் இட ஒதுக்கீடு 1928 முதல் அமலுக்கு வந்தது. அதனால், வகுப்புவாரி உரிமையில், பிராமணரல்லாதவர்களில் ஆதிதிராவிடர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று பலருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டு இட ஒதுக்கீடு ஒரு சமூகநீதியைத் தந்தது. 100 சதவீத ஏகபோகம் அனுபவித்தவர்களுக்கு 17 சதவீதத்தை ஏற்க மனமில்லை. 1950-ல் அமலான இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் “இது சமத்துவத்திற்கு விரோதம்” என்று அடிப்படை உரிமை கோரி, செண்பகம் துரைராசன் என்பவர் போட்ட வழக்கு, கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறியதனால், 1928 முதல் 1950 வரை அமலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணை செல்லாததானது. இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் திரட்டி, ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமராக இருந்த நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கருடன் கலந்து, முதல்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தினார். அப்போது கல்வி உத்தியோகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்’ என்ற சொற்றொடரையே பயன்படுத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த சிலரும், பொருளாதார ரீதியாக என்பதையும் இணைக்க வேண்டுமென்று விவாதம் எழுந்தது. பிரதமர் நேரு சொன்னார், சாதியால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டது பாரம்பரியமானது; தெளிவானது. பொருளாதார அளவுகோல் ஆண்டுக்காண்டு மாறக்கூடியது. இன்றைய பணக்காரன் நாளைய ஏழையாகவும், இன்றைய ஏழை மறுநாள் பணக்காரனாகவும் ஆகலாம். ஆனால், கீழ் சாதிக்காரன் ஒருபோதும் மேல்சாதிக்காரன் ஆக முடியாது; சுடுகாடு கூட தனித்தனிதான். பிறவி அடிப்படை என்பது மாறாத, மாற்ற முடியாத சமூக அடிப்படை. எனவே, நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் அந்த இரு சொற்களைப் போட்டார்கள் என்று கருத்தை உள்ளடக்கிய விளக்கம் தந்ததை ஏற்றார்கள். எனவே, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல, பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம் ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே. பசி ஏப்பக்காரனுக்குப் பந்தியில் முன்னுரிமை தரவேண்டிய அவசியம் போல, புளி ஏப்பக்காரனுக்குப் பந்தியில் இடம் தருதல் தேவையற்றது. வறுமை ஒழிப்புத்திட்டங்களை அரசு வகுப்பதையும், அனைவருக்கும் அனைத்தும் தருவதையும் நாம் எதிர்ப்பதில்லை. ஆனால், “இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல” என்பதை உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார அடிப்படையை அளவுகோலாக்கும்போது அதில் ஏன் முன்னேறிய சாதி ஏழைகள் மட்டும் என்ற பாகுபாடு. ஏன் எல்லா சாதிகளிலும் ஏழைகள் இல்லையா? பிரதமர் மோடி அரசின் அவசர கோலமாக அள்ளித் தெளிக்கும் இந்த ஏற்பாட்டின் முக்கிய நோக்கம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டினை ஒழிப்பதற்கு முதல் முயற்சியே இது. ‘ஒட்டகம் கூடாரத்திற்குள் தலை நீட்டுவது’ போன்ற ஆபத்தான தொடக்கம் இது அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆட்சிகளை இழந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதற்கு முக்கிய காரணம். அந்த (இந்தி மாநிலங்களில்) உள்ள உயர் சாதியினரின் கோபம் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து தடுத்ததால் தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி அரசுக்கு ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளதால், வரவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது வாக்கு வங்கியை மீண்டும் இழக்கக் கூடாது என்பதற்காக ஒரு தந்திர வியூகமே இது! அது மட்டுமல்ல, மோடி தலைமையிலான பா.ஜ.க., 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்ற வாக்குறுதியும், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்பதும் காற்றில் பறந்த வாக்குறுதியாகி விட்டதை எங்கும் கேட்பதை மாற்றிட இப்படி “ஒரு கல்லில் பல மாங்காய்” அடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இந்த ‘மாயமான் வேட்டை’ மாதத்திற்கு 68 ஆயிரம் சம்பளம் வாங்குவோர் ஏழைகளா? 5 ஏக்கர் பூமி வைத்திருப்போர் ஏழைகளா? இது ஒரு நிரந்தர அளவுகோல் ஆக முடியுமா? ஆண்டுக்கு ஆண்டு மாறாதா? இப்படி ஆண்டுக்கு ஆண்டு இட ஒதுக்கீடு மாறிக் கொண்டிருக்கமுடியுமா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ‘கிரிமீலேயர்’ என்பதற்கும், இந்த அளவுகோலுக்கும் மோதல் ஏற்பட்டு குழப்பம் வராதா?’ இந்திய அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவின்படிதான் நாங்கள் பொருளாதாரத்தில் பலவீனமான பிரிவினருக்கு இந்த கல்வி, வேலை வாய்ப்புக்கான ஒதுக்கீட்டை செய்துள்ளோம்” என்று கூறியிருப்பது, அச்சட்டப் பிரிவுகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதற்கான மிகப்பெரிய திரிபு வாதமாகும். அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவு ஏன் சேர்க்கப்பட்டது என்றால், மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பலவீனமான பிரிவினர்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றமடையச் செய்யவும், காலங்காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, சுரண்டல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றி முன்னேற்றுவதற்கான பிரிவு ஆகும். பசியுள்ள பஞ்சைப் பராரிகளுக்கான உணவை கொழுத்தவனுக்குப் போடுவது போன்ற அக்கிரமம் இது! மரணத்தோடு போராடும் நோயாளிகளுக்குத்தான் தீவிர சிகிச்சைப் பிரிவு. சும்மா உடம்பு ‘செக்அப்’ செய்பவருக்கு அல்ல என்பதைப் புரிந்தாலே, இந்த விஷமம் எவருக்கும் புரியும். அரசியல் சட்டத்தின் பீடிகையில் உள்ள சமூகநீதி வேறு பொருளாதார நீதி வேறு, அரசியல் நீதி வேறு என்று பிரித்துக் காட்டியுள்ளபோது, சமூகநீதியை பொருளாதார நீதியோடு போட்டுக் குழப்பலாமா? ஏற்கனவே மண்டல் வழக்கில், இந்த பொருளாதார அளவுகோல் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு 9 நீதிபதிகள் அமர்வில் தரப்பட்டது என்பதால், இது அரசியல் சட்ட விரோதம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதம். சமூக அநீதியாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சமூக புரட்சியாளர் மார்ட்டின் லூதர்கிங்

சமூக புரட்சியாளர் மார்ட்டின் லூதர்கிங் நல்லினி, வழக்கறிஞர். இன்று (ஜனவரி 15-ந் தேதி) மார்ட்டின் லூதர்கிங் பிறந்த தினம் சென்ற நூற்றாண்டில், அமெரிக்க மக்களை பிளவுபடுத்தும் நிற வேற்றுமை கொள்கையினை எதிர்த்தும் கறுப்பின மக்களை விலங்கினும் இழிவாக நடத்தும் வெள்ளையின மக்களின் போக் கினை கண்டித்தும் பல்வேறு காலக்கட்டத்தில் பலர் போராடியிருந்தாலும் மார்ட்டின் லூதர்கிங் பணி மகத்தானது. காந்தியடிகளின் வன்முறையற்ற அறவழிப் போராட்டத்தில் பெரிதும் நம்பிக்கைக் கொண்டிருந்தார். காந்தியின் கொள்கைகளை உள்வாங்கிய இவர் கறுப்பின மக்களின் சமூக (சிவில்) உரிமைக்காக, வன்முறையற்ற, ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். வேதனை என்னவென்றால், காந்தியைப் போன்றே கொடியவன் ஒருவனின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். ஆனால், தம்மின மக்களின் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் அவர் போராடியது வீண் போகவில்லை. 2009-ம் ஆண்டு கறுப்பினத்தினை சேர்ந்த பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் அதிபராய் பதவியேற்றது மார்ட்டின் லூதர் கிங் அன்று கண்ட கனவு, விதைத்த விதை.. மார்ட்டின் லூதர்கிங் (இளையவர்) 1929-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி ஆல்பெர்ட்டா மற்றும் மார்ட்டின்லூதர்கிங் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். முதலில் இவருக்கு மைக்கேல் லூதர்கிங் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், பிறகு, தந்தையின் பெயரையே தனதாக்கிக் கொண்டார். இளையவர் மார்ட்டின் லூதர்கிங்குக்கு ஆல்ப்ரெட் வில்லியம் ஸ்கிங் என்ற சகோதரரும், வில்லிகிறிஸ்டின்கிங் என்ற சகோதரியும் உடன்பிறந்தவர்கள். தந்தை மார்ட்டின் லூதர்கிங் எபினேஸிர் பாப்டிஸ்ட் சர்ச்சில் தலைமை பாதிரியாராக பணியாற்றினாலும், கறுப்பின மக்களின் பொது உரிமைக்காக இயக்கமொன்றின் தலைவராகவும் செயல்பட்டார். மார்ட்டின் லூதர்கிங்க்கு, அவரது தந்தை முன்மாதிரியாகவும், வாழ்வில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார். ‘இவ்வுலகத்தில் தீயவர்களால் இழைக்கப்படும் தீங்குகளைவிட அதை பார்த்துக் கொண்டு அமைதியாக கடந்து போகும் நல்லவர்களின் மவுனமே அதிக தீங்கானது’ என்று கருதினார். கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்காக அமெரிக்காவின் மூலைமுடுக்கெல்லாம் பல லட்சம் மைல்கள் பயணித்து பல்லாயிரம் கூட்டங்களில் லட்சக்கணக்கானோரிடம் பேசி பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். 1962-ம் ஆண்டு ஆல்பெனி இயக்கத்தில் கைது செய்யப்பட்ட போது தண்டனையாக பணம் கட்டவேண்டும் அல்லது சிறைசெல்லவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, புரட்சி கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எம்மை மாட்டிட நினைக்கும் சிறைச்சாலை’ என்று சிறைக்கு சென்றார். வாழ்வில் 25 முறைக்கு மேல் சிறைக்கு சென்றவர். நான்கு முறை வன்முறையாளரால் தாக்கப்பட்டவர். 1963-ல் வாஷிங்டன் நகரில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் முன்பு மார்ட்டின் லூதர்கிங் ‘எனக்கொரு கனவு உண்டு’ என்கிற வரலாற்று சிறப்பு மிக்க உரை மனிதகுல வரலாற்றில் உன்னதமான ஒன்றாக கருதப்படுகிறது. இப்போராட்டத்தின் வெற்றியாக அரசு பணிந்து, 1965-ல் கறுப்பின மக்களுக்கும் வாக்குரிமை அளித்தது. 1964-ம் ஆண்டு தன்னுடைய 35-வது வயதில் உலக அமைதிக்கான நோபல் பரிசுபெற்றார். பரிசு பணமான, 45 ஆயிரம் அமெரிக்க டாலரை தனக்கென வேண்டாம் என்று கறுப்பின மக்களின் விடுதலை போராட்டத்திற்கு அளித்துவிட்டார். 1968-ம் ஆண்டு டென்னஸி மாநிலத்தில் மெம்பிஸ் என்ற ஊரில் கறுப்பின துப்புரவு தொழிலாளர்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு அன்று மாலை தனது விடுதியில் உப்பரிகையில் நின்றுக் கொண்டிருக்கும் போது வெள்ளைக்காரன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மார்ட்டின் லூதர்கிங்குக்கு 39 வயது. உலகம் ஒரு மாபெரும் போராளியை இழந்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 14 January 2019

2018-ல் இந்தியாவின் விஞ்ஞான சாதனைகள் என்ன?

இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டில் செய்த விஞ்ஞான சாதனைகளை பார்த்து வருகிறோம். விவசாயிகளை ரசாயன மருந்துகளின் தாக்குதலில் இருந்து காக்கும் ஜெல் கண்டுபிடிப்பு, வாழையில் செய்யப்பட்ட மரபணு மாற்றம், உலகிலேயே மிகச்சிறிய நானோ பொருள் கண்டுபிடிப்பு உள்ளிட்டவற்றை கடந்த வாரம் பார்த்தோம். மருத்துவம் உள்ளிட்ட இன்னும் பல துறைகளில் இந்திய விஞ்ஞானிகள் செய்த சாதனைகளை இந்த வாரம் பார்க்கலாம்...

காசநோயை எளிதில் அறியும் பரிசோதனை

புதுடெல்லியில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவ மைய மருத்துவர்கள் குழு, காசநோயை எளிதில் கண்டறியும் புதிய முறையை உருவாக்கி உள்ளது. சளியில் காசநோயை உருவாக்கும் பாக்டீரிய புரதப்பொருட்கள் இருப்பதைக் கொண்டே தற்போதைய காசநோய் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கு நிறைய நேரம் பிடிக்கும். எய்ம்ஸ் மைய ஆய்வாளர்கள் அலிசா பரிசோதனை மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் சென்சார் எனும் முறைகளில் சளியில் காசநோய் கிருமிகள் இருப்பதை வெகுவிரைவில் கண்டுபிடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

சூரியப் புள்ளி சுழற்சிகள்

கொல்கத்தாவில் இயங்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (IISER) விஞ்ஞானிகள் குழு, சூரியனைப் பற்றிய ஆய்வில் முக்கிய மாற்றங்களை கண்டறிந்து கூறி உள்ளனர். கடந்த 25 ஆண்டு காலத்தில் சூரிய சுழற்சியில் அதன் புள்ளிகள் இடம் மாறுவது உள்ளிட்ட நேரங்களில் பூமி மற்றும் இதர உட்கோள்களில் குறிப்பிடத்தக்க கதிர்வீச்சு மாற்றங்கள் நிகழ்வதை வரைபடமாக தயாரித்து, அடுத்து எத்தகைய சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதனால் எத்தகைய காலநிலை மாற்றங்கள் பூமியில் நிகழும் என்பதை வரையறுத்து கூறி உள்ளனர். இவர்களது கணிப்பின்படி அடுத்த பத்தாண்டுகளில் சூரியப்புள்ளிகளின் சுழற்சி எப்படி இருக்கும் என்பதை ஏறத்தாழ சரியாக சொல்லிவிட முடியும் என்று தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் பல்வேறு காலநிலைகளை அறிந்து கொண்டு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆட்டிசம் பாதிப்பை அறியும் கருவி

சண்டிகாரைச் சேர்ந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழு, குழந்தைகளின் ஆட்டிசம் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிய புதிய கருவியை வடிவமைத்துள்ளனர். இது ‘சண்டிகார் ஆட்டிசம் ஸ்கிரீனிங் இன்ஸ்ட்ருமென்ட்’ (CASI) எனப்படுகிறது. துணை மருத்துவ ஊழியர்களே எளிய பரிசோதனைகள் மூலம் இதன் அறிகுறிகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கருவி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நினைவுத் தடுமாற்ற பாதிப்புகளான அல்சீமர் மற்றும் ஹண்டிங்டன் நோய்களின் முக்கிய காரணியை பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் மைய (IISc) கண்டுபிடித்துள்ளனர். பிப்ரில்லர் ஆக்டின் (F-actin) எனும் புரத மூலக்கூறுகளின் சிதைவே, நினைவுத் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதை இந்த மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் அல்சீமர் மற்றும் ஹண்டிங்டன் வியாதியை கண்டுபிடிக்கும் முக்கிய பரிசோதனை முறையாக இந்த கண்டுபிடிப்பு திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகரிகத்தை மாற்றியமைத்த கண்டுபிடிப்பு

மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்க வேண்டும் என்றும் அங்கிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழைய கற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் சென்னைக்கு அருகே கிடைத்துள்ள பழைய கற்கால கருவிகளை மரபணு ஆய்வுக்கு உட்படுத்திய தொல்லியல் நிபுணர்கள் இந்திய நாகரிகம் அதனினும் பழையது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இங்கு 3 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் பழைய கற்கால கருவிகளை பயன்படுத்தி வாழ்ந்துள்ளனர் என்று தெரியவந்திருக்கிறது. இதனால் ஆப்பிரிக்க, ஐரோப்பிய பகுதிகளின் பழைய கற்கால நாகரி கத்தை முந்தையது தென்னிந்திய பழைய கற்கால மனித நாகரிகம் என்ற புதிய கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ள ஆதிரம்பாக்கம் என்ற கிராமத்தில் இந்த கற்கால கருவிகளை சர்மா தொல்லியியல் கல்வி மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சாந்தி பப்பு மற்றும் அகிலேஷ் ஆகியோர் கண்டுபிடித்து, ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.

பட்டு முதுகெலும்பு

கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வு மைய விஞ்ஞானிகள் பட்டு மற்றும் பாலிமர் இழை களைக் கொண்டு செயற்கை முதுகெலும்பு துண்டுகளை தயாரிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இதை எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் தயாரிக்க முடிவதுடன், இவை இயற்கை முதுகெலும்புடன் இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணுமாற்ற நெல்

குறிப்பிட்ட வடமாநிலங்களின் மண்வளத்தில் ஆர்செனிக் நஞ்சு மிகுந்திருப்பதாக பார்த்தோம். இந்த வகை நஞ்சு, நெல் தானியத்துடன் கலந்து உணவில் காணப்படுவதை தவிர்க்க, மரபணு மாற்றத்துடன் கூடிய நெல் வகையை உருவாக்கி உள்ளது லக்னோவில் செயல்படும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம். இவர்கள் ஒருவகை பூஞ்சையின் மரபணுக்களை நெல் மரபணுவுடன் கலந்து ஆர்செனிக் நஞ்சை எதிர்க்கும் வலிமையை புதிய நெல் ரகத்திற்கு வழங்கி உள்ளனர்.

ரோபோ தொலைநோக்கி

பெங்களூருவில் செயல்படும் இந்திய வான் இயற்பியல் மையம் இந்தியாவின் முதல் ரோபோ தொலைநோக்கியை உருவாக்கி உள்ளது. இது பிரபஞ்சத்தை மனிதனைவிட துல்லியமாக பலவிதங்களில் கண்காணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலச்சரிவு எச்சரிக்கை கருவி

வடகிழக்கு இமயமலைப்பகுதிகளான சிக்கிம் முதல் டார்ஜிலிங் வரையிலான இடங்களில் திடீர் நிலச்சரிவுகள் ஏற்படுவது உண்டு. இதனால் உயிர்ப்பலிகளும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலச்சரிவுகளை 24 மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிப்பதற்காக 200 இடங்களில் உணர் கருவிகள் பொருத்தப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் சமிக்ஞை களைக் கொண்டு எச்சரிக்கை செய்யும் நிலச் சரிவு எச்சரிக்கை சாதனத்தை கேரளாவைச் சேர்ந்த அம்ரிதா பல்கலைக்கழகம் மற்றும் சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன.

உலகின் 4-வது சிறந்த வானிலை கண் காணிப்பு மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மேம்பாடு கண்டுள்ளது. மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த மையத்தின் சூப்பர் கம்ப்யூட்டர்கள் 6.8 பீடாபிளாப் அளவுடைய தகவல் பரிமாற்றங்களை ஒரு நொடியில் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அதிசிறந்த வானிலை கண்காணிப்பு மையமாக திகழ இந்த நவீன கணினித் தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ கழிவில் மறுசுழற்சி

பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மருத்துவத் துறையில் மருந்துக் கட்டுகள் போடுவதற்கும், கட்டுமானத் துறையில் அழகிய கட்டுமான பொருளாகவும் பயன்படக்கூடியதாகும். புனேவில் செயல்படும் தேசிய வேதி ஆய்வக விஞ்ஞானிகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கழிவுகளை, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் புதிய உத்தியை கண்டுபிடித்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் அப்ளிகேசன்கள்

கணினிகளை மிஞ்சியதாக செல்போன்கள் அவதரித்துவிட்டபிறகு, மென்பொருட்களைவிட அப்ளிகேசன்களின் ஆட்சி அதிகமாகிவிட்டது. உணவு ஆர்டர் கொடுப்பதில் இருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெறுவதுவரை அப்ளிகேசன்களின் பயன்பாடு அதிகம். கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்...

புராஜெக்ட்கள் தயாரிக்க...

பள்ளிப் பருவத்தில் இருந்தே கட்டுரைகள் படைப்பது பலருக்கு கஷ்டமான விஷயம். கல்லூரியில் கட்டுரைகள் மற்றும் அசைன்மென்டுகள் விரிவாகவும் தெளிவாகவும் தயாரிக்கப்பட வேண்டும். பல நேரங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள்போல பாடப்புத்தகத்தில் இல்லாத நிறைய தகவல்களை சேகரித்தும், புதிய நோக்கில் ஆராய்ந்தும் கட்டுரைகள் படைக்க வேண்டியதிருக்கும். இதற்கு மிகுந்த புத்திசாலித்தனமும், சாதுர்யமும் அவசியமாகும்.

இப்படி கல்லூரியில் தரப்படும் புராஜெக்ட்களால் தடுமாறும் மாணவர் கூட்டம் நிறைய. அவர்கள் வெளியே தனிநபரிடம் உதவி பெற்று தங்கள் பிராஜெக்ட்டை செய்து தரக் கேட்பதும் அல்லது பிறர் செய்ததை காப்பி அடித்து எழுதுவதும் உண்டு. இதற்காக உதவியாளரை தேடித்திரி வதும் உண்டு.

இப்படி சிரமப்படாமல் கல்லூரி கட்டுரைகளுக்கும், புராஜெக்ட் திட்டங்களுக்கும் கைகொடுக்க இணைய தளங்களில் பல்வேறு அப்ளிகேசன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் நிஞ்சா எஸ்ஸேஸ்(NinjaEssays). 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்களின் நலன்கருதி எழுதிய ஏராளமான கட்டுரைகள் இங்கே கிடைக்கின்றன, பல கட்டுரைகளை இலவசமாக படிக்க முடியும், சில கட்டுரைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. தேவையெனில் விருப்பப்படும் பேராசிரியரை உதவியாளராக நியமித்துக் கொண்டு புராஜெக்ட் செய்யலாம்.

மேற்கூறியது போன்ற அப்ளிகேசன்தான் help.plagtracker. ஆனால் உங்கள் கட்டுரைகள் மற்றும் புராஜெக்ட்டுகளுக்கு ரெடிமேடு தயாரிப்புகளை வழங்குவதற்குப்பதிலாக உங்கள் தயாரிப்புகளை சரிபார்க்கவும், தேவையான, சரியான மாற்றங்களை செய்துகொடுக்கும் எடிட்டிங் வேலைகளுக்கு பேராசிரியர்களின் உதவியை பெற்றுத் தருகிறது இந்த அப்ளிகேசன். உங்களுடைய படைப்பை கொடுத்து எடிட் செய்து தர கேட்கலாம் அல்லது தனிநபர் உதவியாளராக ஒரு பேராசிரியரை நியமித்துக் கொள்ளவும் வழி உண்டு.

குழுவாக படிக்க...

சிலருக்கு சேர்ந்து படித்தால்தான் நன்கு படித்த மாதிரி இருக்கும். எளிதில் புரியும். அப்படி குழு படிப்பிற்கு கைகொடுக்கும் அப்ளிகேசன்தான் ஓபன்ஸ்டடி (open study) அப்ளிகேசன். வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல் என எல்லா பாடங்களுக்கும் இங்கே குழுக்கள் உண்டு. அவர்களுடன் பாடம் சம்பந்தமான விஷயங்களை கலந்துரையாடலாம், சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.

புத்தகங்களைப் பார்த்துப் படித்து புரிந்துகொள்வதைவிட, மற்றொருவர் வாசித்துக் காட்ட அதில் இருந்து தேவையான விஷயங்களைப் புரிந்து கொள்வது பலருக்கு எளிதாக இருக்கும். இதற்காக கல்லூரி புத்தகங்கள் பெரும்பாலானவற்றை ஆடியோவாக குரல் வடிவில் தருகிறது audible அப்ளிகேசன். வகுப்பறையில் மீண்டும் மீண்டும் ஒன்றை நடத்தச் சொல்லிக் கேட்பது இயலாத காரியம். ஆனால் ஆடியோ புத்தகத்தில் உங்களுக்கு புரியும் வரை ரீவைண்ட் செய்து கேட்டு பாடத்தை மனதில் ஏற்றிக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த அப்ளிகேசன் ஒரு மாதத்திற்கு இலவசமாகவும், பின்பு சலுகை கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

ஆராய்ச்சி தலைப்புகளுக்கு...

புதிதாக என்ன தலைப்பில் ஆராய்ச்சி செய்யலாம், அதற்கு என்ன விவரங்கள் தேவைப்படும் என்பது மாணவர்களுக்கு தலைவலியை உருவாக்கும் பிரச்சினையாக இருக்கும். அதுபோன்ற நேரத்தில் உதவக்கூடிய இணையதளங்களும் இன்று நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் InstaGrok. இதில் நீங்கள் விரும்பிய தலைப்பை உள்ளீடு செய்து அது பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளையும், சில ஆராய்ச்சி தலைப்புகளையும் அறிய முடியும். ஆய்வுக்கு வழிகாட்டும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடவும் முடியும். ஆய்வுக்கு உதவும் பல்வேறு தகவல் தொகுப்புகளும் இதில் காணப்படும்.

கட்டுப்பாடுகளுக்கு...

வகுப்பறைக்குள், செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சிலர் மறதியிலோ, ரகசியமாகவோ வகுப்பறைக்கு செல்போன்களை கொண்டு சென்றுவிட்டு, அழைப்பு வந்ததும் செல்போன் சிணுங்கி மாட்டிக் கொள்வதும், பேராசிரியர்களின் கண்டிப்புக்கும், தண்டனைக்கும் ஆளாவது உண்டு. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது ஸ்டடியஸ் (Studious) அப்ளிகேசன். இதில் நீங்கள் எந்த நேரத்தில் எங்கிருப்பீர்கள், எந்த நேரத்தில் உங்கள் மொபைல் சைலன்ட்மோடுக்கு மாற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கலாம். அப்படிச் செய்துவிட்டால் நீங்கள் மறந்தாலும் அந்த நேரத்திற்கு தானாக சைலன்ட் மோடுக்கு மாறி, வகுப்பறையிலும், செமினாரிலும் நீங்கள் அவமானப்படுவதை தடுத்துவிடும்.

வகுப்பறையில் கண்டிப்புக்கு பயந்து சைலன்ட் மோடுக்கு மாறலாம். ஆனால் வகுப்பைவிட்டு வெளியே வந்துவிட்டால் படிக்கும் நேரத்திலும் சமூக வலைத்தளங்களில் உலவ மனம் துடிக்குமே. அப்படி மனம் அலைபாயும் நேரத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத் தளங்களின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது SelfControl அப்ளிகேசன். இதை இலவசமாக பயன்படுத்த முடியும்.

இன்னும் சில அவசிய தேவைகள்...

* பாடத்திட்டங்கள், வகுப்பு நேரங்கள் மற்றும் உங்கள் கல்வித்திட்டங்களை குறிப்பிட்டு சீராக வழி நடத்த உதவுகிறது ஐ-ஸ்டிஸ் புரோ (iStudiez Pro) அப்ளிகேசன். இது ஐபோன், ஐபேடு கருவிகளில் மட்டுமே செயல்படும்.

* தேவையான புத்தகங்களை வாங்கவும், தேவையற்ற புத்தகங்களை விற்கவும் உதவும் ஹால்ப்.காம் (Half.com) இணையப் பக்கம் வசதியாக இருக்கும்.

* மாணவர்களின் செலவை மேற்பார்வையிட உதவும் அப்ளிகேசன் மின்ட் (Mint). செலவுகள், தேவைகள் எல்லாவற்றையும் பதிவிடும்போது பயனுள்ள சேமிப்பு வழிகளை நினைவூட்டக்கூடியது மின்ட் அப்ளிகேசன், இது இலவச அப்ளிகேசனாகும்.

* எழுதாமல், தட்டச்சு செய்யாமல் குறிப்பெடுக்க உதவுகிறது Dragon Dictation அப்ளிகேசன். இது, நாம் உச்சரித்தாலே எழுத்துகளாக குறிப்பெடுத்துக் கொள்ளும். இது பலவகையில் உதவியாக இருக்கும்.

* உங்கள் பயிற்சிகள் அழிந்துவிடாமல் பாதுகாக்க சுகர் சிங் (SugarSync) அப்ளிகேசன் உதவுகிறது. இது பல கருவிகளில் உங்கள் தயாரிப்புகளை சேமிப்பதுடன், பாதுகாப்பை வழங்குகிறது.

* மாணவர்களுக்கான மின்னணு நூலகமாக விளங்கும் அப்ளிகேசன் BenchPrep. நூல்கள் மட்டுமல்லாது பிளாஸ்கார்டு, வினாத்தாள்கள், பாடங்களும் உள்ளன.

* கல்லூரி பாடங்களின் சொற்களுக்கு பொருளும், எளிய விளக்கமும் தரும் அகராதி அப்ளிகேசன் Dictionary.com/Mobile.

மாணவர்களான நீங்கள், செல்போனில் பொழுதுபோக்கு தளங்களில் சென்று நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள அப்ளிகேசன்களை பயன்படுத்தி கல்வியை வளப்படுத்திக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காணாமல் போன வாழ்த்து அட்டைகள்

காணாமல் போன வாழ்த்து அட்டைகள் அ.சேசுராஜ், சின்னாளபட்டி ஜ னவரி மாதத்தில் இருந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ரம்ஜான், ஈஸ்டர், பக்ரீத், விநாயகர் சதுர்த்தி, முகரம், ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய செய்யும் விதமாக வருடந்தோறும் வந்து கொண்டே இருக்கிறது. பண்டிகை காலங்களில் புத்தாடை அணியலாம், வேண்டிய பரிசு பொருட்கள் கிடைக்கும், பாட்டி வீட்டுக்கு போகலாம், அதற்கெல்லாம் மேலாக பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என்ற இரட்டை சந்தோஷம் குழந்தைகளுக்கு கிடைக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்களை பொறுத்தமட்டில் புத்தாடை, உறவினர்களுடனான சந்திப்பு என்பதையெல்லாம் தாண்டி, தன் வயதை ஒத்த பால்ய சிநேகிதர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள், பணித்தளங்களில் சக பணியாளர்கள், அதிகாரிகள் அல்லது வேலை வழங்கிய முதலாளிகள் ஆகியோர்களுடனான தொடர்புக்கான ஒரு பாலமாக பார்ப்பதோடு, தன் மனதிற்கு பிடித்த நபருடனான அன்பை பரிமாறவும், நட்பை விரிவுபடுத்தும் ஒரு களமாக இந்த பண்டிகைகளை பெரிதும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். எதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தளமாக பண்டிகைகள் பார்க்கப்பட்டாலும், அன்பை, நட்பை, உறவை, சகோதரத்துவத்தை புதுப்பிக்க அல்லது வலுப்படுத்த ஒரு கிரியா ஊக்கியாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவிப்பதில் தான் இருக்கிறது பண்டிகைகளின் சூட்சுமம். அன்பை பரிமாறிக்கொள்வதில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது முக்கிய இடம் பிடிக்கிறது. அதுவும் பொங்கல் பண்டிகை என்றால் கேட்கவே வேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பொங்கல் வாழ்த்து தவறாமல் வந்து விடும். அது அளப்பரிய சந்தோஷத்தை அளிக்கும். 1846-ம் ஆண்டு ஹென்றி என்பவர் முதன் முதலாக வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை தொடங்கிவைத்தார். சாமி படங்கள், இயற்கை வளங்கள், நீரோடைகள், மயில், மான் உள்ளிட்ட உயிரினங்கள் அடங்கிய படங்கள், அன்பை, நட்பை, பரிமாறும் வாசகங்கள் உள்ளடங்கிய எண்ணற்ற வடிவங்களில் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் தான் அதிகளவு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டு வந்ததாகவும், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை இது போன்ற பண்டிகை நாட்களில் தபால் நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்து அட்டைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது என்றும் தபால் துறை கூறுகிறது. மேலும், பெரிய, பெரிய நிறுவனங்கள் தாங்களே தங்களது நிறுவனத்தின் பெயரை வாழ்த்து அட்டையில் அச்சடித்து தபால் துறை மூலம் அனுப்பினர். இதற்கெல்லாம் மேலாக தபால் துறையே 2001 முதல் 2005 வரை தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைக்கு ஏற்றவாறு இன்லன்ட் லட்டர் தபாலில் வாழ்த்து அட்டைகளை அச்சடித்து விற்பனை செய்தது. இதன் மூலம் இந்தியாவில் வாழ்த்து அட்டைகளின் தேவை எந்த அளவிற்கு இருந்தது என்பதை அரிய முடிகிறது. ஒட்டுமொத்தத்தில் சுமார் 45 சதவீத மக்கள் வாழ்த்து அட்டைகள் மூலம் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டிருந்தனர். 2010 வரை வாழ்த்து அட்டைகளை தபால் மூலம் அனுப்புவது, நேரடியாக கொடுப்பது என ஏதாவது ஒரு வகையில் வாழ்த்து அட்டைகளின் தேவை அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் தான் வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்றைய நிலையில், தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் 2008-க்கு பின் இணையதளத்தை பயன்படுத்திய 5 சதவீத மக்கள் இமெயில் மூலம் வாழ்த்துகளை அனுப்பி மகிழ்ந்தனர். தொடர்ந்து வந்த வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பரிமாறும் பழக்கம் வந்தது. இன்றைய நிலையில் சுமார் 35 சதவீதத்தினருக்கும் மேல், அதாவது குடும்பத்தில் ஒருவர் செல்போனை பயன்படுத்தும் நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் இணையதள வசதியுடன் கூடிய சமூக வலைதள பயன்பாடு தான் அனைத்து வாழ்த்துகளையும் ஆக்கிரமித்து கொண்டது. சமூக வலைதளத்தின் வரவால் இன்றைய இளையதலைமுறையினர் வாழ்த்து அட்டைகள் ஒன்று இருந்ததா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை வந்து விட்டது. வாட்ஸ்-அப் என்ற ஒரு சமூக வலைதளத்தில் தனித்தனியாக வாழ்த்தை பரிமாறுவதும், ஒரு குழுவை ஆரம்பித்து 256 நபரை இணைத்து ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாழ்த்தை பரிமாறுவதும், முகநூலில் முகம் தெரியாத ஆயிரம் நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் வாழ்த்துகளை பரிமாறுவதும் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், இதுபோன்ற சமூக வலைதளங்களில் நாம் ஒரு வாழ்த்தை வடிவமைக்கவோ, தேடி அலையவோ தேவையில்லை. யாரோ ஒரு நபர் வடிவமைத்த வாழ்த்தை லாவகமாக பதிவிறக்கம் செய்து நமது பெயரில் மாற்றி அல்லது அப்படியே பரிமாறவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், இன்றைய நிலையில் சமூக வலைதளங்களே நமது பெயரை உள்ளடு செய்தால் தேவைக்கேற்ற பண்டிகையை கண்கவர் கலரில் வடிவமைத்து வாழ்த்தை நமக்கு கொடுக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சரி இது போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சி தேவை என்றாலும், காலம் காலமாக வாழ்த்து அட்டைகளை வடிவமைத்து விற்பனை செய்து வந்த தொழிற்கூடங்களும், அதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணியாற்றிய பணியாளர்களும் வேலை இழந்துள்ளனர். வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்த கடைகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டு விட்டது. இதற்கெல்லாம் மேலாக வாழ்த்து அட்டைகளை அனுப்புவதன் மூலம் வருமானம் ஈட்டி வந்த தபால் துறை அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழந்துள்ளது. மொத்தத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பாரம்பரிய வாழ்த்து பழக்கங் களை தொலைத்து விட்டு நிற்கதியாய் இருக்கிறோம் என்பதே உண்மை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பூக்கட்டும் புதுமாவட்டம்; பொங்கட்டும் வளர்ச்சி

பூக்கட்டும் புதுமாவட்டம்; பொங்கட்டும் வளர்ச்சி டாக்டர் மா.பா.குருசாமி த மிழகம் வளர்ந்து வருகின்றது. மக்கள் தொகை பெருகி வருகிறது. மக்களின் வாழ்க்கை நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காணப்பெறுகின்றன. பெரிய கிராமங்கள் நகரங்களின் இயல்பை பெறுகின்றன. இந்தநிலையில் மிகப்பெரிய மாவட்டங்களை பிரிப்பதும், நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகின்றது. இப்போது, 8-1-2019 அன்று சட்டப்பேரவையில், முதல்-அமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கப்போவதாக அறிவித்திருக்கின்றார். இது தமிழகத்தின் 33-வது மாவட்டமாக விளங்கும். மாவட்டங்களின் தோற்ற வரலாறு நினைக்கத்தக்கது. 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் நாள் விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்கினர். இதன் பரப்பளவு 7,217 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 34.58 லட்சம். இதில் 9 தாலுகாக்கள், 3 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1,099 ஊராட்சிகள் அடங்கியிருந்தன. 2001-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கினர். 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டத்தை இணைத்தனர். 2007-ம் ஆண்டு மறுபடியும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. மேலும் 2009-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உதயமானது. அதன்பிறகு 9 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாவட்ட பிரிவினை நடைபெறுகின்றது. இப்போது விழுப்புரம் மாவட்டத்தை பிரிப்பதற்கு முதன்மையாக கூறப்படுவதற்கு காரணம் அது மிகப்பெரிய மாவட்டம் என்பது தான். அதனால் நிர்வாக அடிப்படையில் பல சிக்கல்கள் தோன்றுகின்றது. இந்த மாவட்டத்தில் கல்வராயன் மலைப்பகுதி கிராமங்கள் விழுப்புரத்தில் இருந்து ஏறத்தாழ 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. சரியான போக்குவரத்து இல்லை. இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்வதில் சிக்கல்கள் உள்ளன. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சரியாகவும், முறையாகவும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என்ற மனக்குறை இருக்கின்றது. கள்ளக்குறிச்சி பகுதியில் கிராமங்கள் மிகுதியாக இருப்பதால் வேண்டிய அகக்கட்டுமானங்கள் வளர்ச்சியடையவில்லை. சாலை போக்குவரத்துகள் செம்மையாக இல்லை. கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் போன்றவை சரியான அளவிற்கு இல்லை. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக மாறுகின்ற பொழுது அங்கு வளர்ச்சி பணிகள் நிறைய நடைபெறுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். கல்வி நிறுவனங்கள், மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள் போதுமான அளவு தோன்றலாம். அரசு அலுவலர்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்புமென மக்கள் கருதுகின்றனர். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட உருவாக்குதலை பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வரவேற்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்ததாக கூறுகின்றனர். இது ஒரு பக்கம். நாம் எண்ணி பார்க்க வேண்டிய இதன் மறுபக்கமும் இருக்கின்றது. இந்த மாவட்ட ஆட்சி அமைப்பு முறை ஆங்கிலேயர்கள் வரி வசூலுக்காக ஏற்படுத்திய முறை. அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை வசூலிப்பவராக கருதினர். அவர்கள் வரி வசூலிப்பதோடு நின்றுவிடாமல் ஆங்கிலேய ஆட்சி வேரூன்ற என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார். நாம், நாடு விடுதலை பெற்ற பொழுது அந்த பதவியின் பெயரை அப்படியே வைத்துகொண்டோம். தமிழில் ‘ஆட்சியாளர்’ என்று குறிப்பிடுகின்றோம். விடுதலை பெற்ற இந்தியாவில் கிராம வளர்ச்சிக்காக சமுதாய வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்தார்கள். வட்டார வளர்ச்சி அலுவலகங்களை உருவாக்கினார்கள். இந்த நிலையில்தான் ஜனநாயக பரவல் முறையாக பஞ்சாயத்து ஆட்சி முறையை கொண்டு வந்தார்கள். ஊராட்சி முறையின் மூலம் மக்கள் பங்கு பெறுகின்ற நிலையை கொண்டு வர சட்டமியற்றினார்கள். கட்டாயமாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டுமென சட்டமிருக்கின்றது. ஆனால் நடப்பது என்ன? புதிய மாவட்டம் உருவாக்க சட்டம் கொண்டு வந்த அதே பேரவையில் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருக்கின்றார்கள். இது ஒரு நகைமுரண். இதற்கு முன்பும் பல பெரிய மாவட்டங்களை இரண்டாக, மூன்றாக பிரித்திருக்கின்றோம். எடுத்துக்காட்டாக முன்பிருந்த பெரிய மாவட்டமான மதுரையை, மதுரை, திண்டுக்கல், தேனி என 3 மாவட்டங்களாக பிரித்திருக்கின்றோம். 3 மாவட்ட ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இந்த மாவட்ட பணிகளில் எவ்வளவு திறமை கூடியிருக்கின்றது. என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வளர்ச்சி எந்த வேகத்தில் நடைபெறுகின்றது என்பது போன்ற ஆய்வுகள் எதுவும் நடைபெற்றிருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இதுவரை மாவட்டங்களை பிரித்ததின் பயன்களை ஆராய்ந்து, மாவட்ட பகுப்பு பற்றிய கொள்கையை அரசு ஆக்கப்பூர்வமாக உருவாக்கலாம். பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தயம், திருக்கோவிலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் வரலாம். இந்த சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்களின் பங்களிப்பினை சார்ந்தே இந்த மாவட்ட வளர்ச்சி பணிகள் அமையும். ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையில் புதிய மாவட்ட உருவாக்க பணி நடைபெற உள்ளது. உரிய காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி புதிய மாவட்டம் உருவாதலால் மட்டுமே வந்துவிடாது. அதன் வளர்ச்சி பல்வேறு காரணிகளை சார்ந்தது. நிர்வாகம் என்பது ஓர் எந்திரம். அதனை இயக்குபவர்கள் அரசு அலுவலர்கள். அவர்களை இயக்குபவர்களாக தலைவர்களும், மக்களும், உள்ளாட்சி மன்றங்களும் இருக்க வேண்டும். ஊழலற்ற, நல்ல நிர்வாகம் அமைந்து கள்ளக்குறிச்சி ஒரு சிறப்பான, செழிப்பான மாவட்டமாக திகழ வாழ்த்துவோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 13 January 2019

‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா?

‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா? விஷ்வசாந்தி சரவணகுமார், எழுத்தாளர். புகைப்படம் என்பது நமது ஞாபகங்களை உறைய வைக்கும் ஒரு அற்புதமான அதிசயம். பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதில் மூழ்கி கடந்த காலத்திற்கு சென்று விடுவதுண்டு. அந்த காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக தொங்க விடப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் பல கதைகளைச் சொல்லும். பின்னாட்களில், போட்டோ ஸ்டுடியோவிற்கு குடும்ப சகிதமாக சென்று விறைப்பாக நின்று போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனேகமாக எல்லோருடைய வீட்டிலும் ஞாபக சின்னங்களாய் வீற்றிருக்கும். அதன் பின்னர் கேமராக்கள் மூலம் நாமே புகைப்படம் எடுத்து பிரிண்டு போட்டு ஆல்பங்களாக சேகரித்து வைக்கும் பழக்கமும் வெகு காலமாக இருந்து வருகிறது. வீட்டிற்கு விருந்தினர் என்று யார் வந்தாலும் அந்த ஆல்பங்களை காட்டி பரவசப்பட்டு கொள்வதும் நம்மிடையே பொதுவாக காணப்படும் குணமாகும். இன்றைக்கு செல்போனிலேயே புகைப்படம் எடுத்து கொள்ளும் வசதி வந்தாலும் வந்தது. நிற்பது, நடப்பது, சாப்பிடுவது, கொட்டாவி விடுவது என்று நம்முடைய ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டோம். போட்டோ எடுப்பதால் ஆயுசு குறையும் என்ற அந்த கால நம்பிக்கை மறைந்து பிறவி எடுத்ததே புகைப்படம் எடுப்பதற்குத் தான் என்றாகிவிட்டது இந்த காலத்தில். இளசுகள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருமே இந்த புகைப்பட மோகத்தில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். வித்தியாசமாக செல்பி எடுத்து நண்பர்களிடையே பாராட்டு பெறவேண்டும் என்று மலை உச்சியில் தலைகீழாய் தொங்குவது, உயரமான நீர்வீழ்ச்சியின் மேலே ஒற்றைக்காலில் நிற்பது, ஓடுகிற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு சவாரி செய்து போஸ் கொடுப்பது, மிக உயரமான கட்டிடங்களின் மேல்தளத்தின் விளிம்பில் அமர்ந்து போட்டோ எடுப்பது என்று ஆபத்தை உணராமல் விபரீத சாகசம் செய்ய ஆரம்பித்து விட்டனர் இன்றைய இளைஞர்கள். இதனால் பல்வேறு உயிர் இழப்புகளும், விபத்துகளும் நிகழ்ந்த போதும் இம்மாதிரி செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது. தங்களை விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு எத்தனை லைக்குகள் வந்திருக்கின்றன, என்னென்ன கமெண்டுகள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். இளைஞர்களின் இந்த மோகத்திற்கு தீனி போடுவதற்காகவே புகைப்படம் பதிவிடுவதற்கெனவே சில சமூக வலைத்தளங்களும் இயங்குகின்றன. இதில் காலவரையறை இன்றி நாளும் பொழுதும் போக்குவதால் படிப்பில் கவனம் சிதறுகிறது. மேலும் ஓவியம் வரைவது, பாடுவது, நடனம் ஆடுவது, பேச்சுப் போட்டி போன்ற அவர்களுக்கு உரித்தான தனித்திறமைகளையும் மறந்து தங்கள் சுயத்தையும் இழந்து மந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நல்ல அதிகமான பிக்சல் கொண்ட கேமராக்கள் உள்ள செல்போன்களை வாங்குவதும் அதிகரித்து வருகிறது. இவ்விதமான போன்களை கொண்டோ அல்லது நமது முகத்தை மாசு மருவின்றி காட்டக்கூடிய மொபைல் செயலிகள் கொண்டோ போட்டோ எடுத்து தனக்கென ஒரு போலியான பிம்பத்தை தோற்றுவித்துக் கொள்கின்றனர். கருப்பான முகத்தை வெண்மையாக்கி, சிறிய கண்களை பெரிதாக்கி, பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்கி, முகத்தையும் உடலையும் மெலியச் செய்து காட்டுவது என தங்கள் அடையாளத்தையே முழுவதுமாக மாற்றி வழுவழுப்பான முகத்துடன் பேரழகாக காட்டிக் கொண்டு போலியான உலகத்தில் வாழுகிறார்கள். திருமணத்திற்கு வரன் தேடும் வலைத்தளங்களில் இது போன்ற புகைப்படங்களை பதிவிடுகின்றனர். இதனால் நேரில் பார்ப்பதற்கும் நிழற்படத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் பெண்ணையோ, ஆணையோ நிராகரிப்பதும் நடந்து வருகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் மனஉளைச்சலும் வேதனையும் மிக அதிகம். பெண்கள் தங்கள் புகைப்படங்களை எல்லோரும் பார்க்கும்படி பகிருவதால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி எண்ணிப் பார்க்கவேண்டும். அந்த புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் தங்களுடைய போனில் தரவிறக்கம் செய்யலாம். அதை எப்படி வேண்டுமானாலும் ‘மார்ப்பிங்’ மூலம் மாற்றம் செய்து தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இது போன்ற பல விஷயங்களை செய்திகளில் கேள்விப்பட்டாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கும் அலட்சியப் போக்கே காணப்படுகிறது. ஆபத்து வருமுன் தற்காத்து கொள்வதே புத்திசாலித்தனம். இது மட்டுமின்றி, பள்ளிக் குழந்தைகளை சீருடையுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடுவது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது, என்ன பெயர் என்று எல்லா தகவல்களையும் நாமே வலிய வந்து கொடுக்கிறோம். இதனால் குழந்தைக் கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாதது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தவறில்லை. புகைப்படம் எடுப்பது, ரசிப்பது என்பதெல்லாம் நம் வாழ்வோடு ஒன்றி விட்ட விஷயங்கள். தேவையான அளவு எடுத்துக் கொள்வதில் தவறில்லை. நமது புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர விரும்பினால் அதை நம் நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பகிரக் கூடிய பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்று தெரிந்த எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பதே நல்லது. சுற்றி இருக்கும் நிஜ உலகத்தை மறந்து இந்த நிழல்திரைக்குள் சிக்கிக் கொண்டால் நமது பொன்னான நேரமும் வீணாகி, விபரீதமும் விளைகிறது. அழகியல் சார்ந்த உணர்வுகள் இருப்பது அவசியம் தான். வாழ்க்கையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதும் ரசனைகளே. ஆயினும் எதிலும் எல்லை மீறாமல் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். அது புகைப்பட போதைக்கும் பொருந்தும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts