Sunday 20 January 2019

ரிசர்வ் வங்கி சேவை ஒரு பார்வை...!

ரிசர்வ் வங்கி சேவை ஒரு பார்வை...! எஸ்.ஹரிகிருஷ்ணன், முன்னாள் பொதுமேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி. பொ துமக்கள் பலரும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு குறித்து முழுமையாக அறியாமல் இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் செயல்பாடும் மற்ற வங்கிகளைப்போலத்தான் இருக்கும் என்ற எண்ணமே பலரிடம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மத்திய வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் மும்பையில் செயல்படுகிறது. மேலும், வெவ்வேறு மாநிலங்களில் கிளைகள் உள்ளன. ரிசர்வ் வங்கியின் தலைமைப்பொறுப்பில் அதன் கவர்னர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். பொதுவாக மத்திய அரசில் பணி புரியும் மூத்த இந்திய ஆட்சி பணியாளர்களே நியமிக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் சில பொருளாதார நிபுணர்களும் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக முன்னாள் கவர்னர்கள் சி.ரங்கராஜன், ரகுராம் ராஜன், சமீபத்தில் பதவி விலகிய உர்ஜித் படேல் போன்றவர்கள் பொருளாதார நிபுணர்களே ஆவார்கள். மற்ற வங்கிகளைப்போல் பொது மக்கள் ரிசர்வ் வங்கியில் கணக்கு தொடங்க முடியாது. ஏனென்றால் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் டெபாசிட்டுகளுக்கு வட்டி வழங்க அனுமதி இல்லை. எனவே வங்கிகளும் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் மட்டுமே தங்கள் கணக்குகளை ரிசர்வ் வங்கியில் வைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளை அமல்படுத்துவதற்கும் மற்றும் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன்கள் பெறுவதற்கும் இந்த கணக்குகள் அவசியமாகின்றன. மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மூலம் விநியோகிக்க முன்பு இம்பீரியல் பேங்க் என்ற வங்கி செயல்பட்டு வந்தது. இந்த இம்பீரியல் பேங்க்தான் பின்னால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக மாறியது. ஆனால் இந்தியாவுக்கு ஒரு மத்திய வங்கி தேவை என்ற ஹில்டன் யங் கமிஷனின் பரிந்துரையின் பேரில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டம், 1934-ல் கொண்டு வரப்பட்டு ரிசர்வ் வங்கி 1935 ஏப்ரல் 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியது. ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு எல்லாம் வங்கி ஆகும். அன்று முதல் மத்திய அரசு அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் மற்ற வங்கிகளுக்கு விநியோகிக்கும் பொறுப்பை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டது. ரிசர்வ் வங்கியின் கடமை என்ன? புதியதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் மற்ற வங்கிகளுக்கு விநியோகிப்பது மட்டுமல்லாமல், பழையதான புழக்கத்தில் உபயோகிக்க முடியாத அல்லது கிழிந்த நோட்டுகளையும் வங்கிகள் மூலம் சேகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கும் பணியையும் செய்கிறது. இதற்காக ரிசர்வ் வங்கியின் பெட்டகங்கள் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் நிறுவப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கையில் எப்போதும் நல்ல நிலைமையில் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்குமாறு பார்த்து கொள்கிறது. எனவே, பொதுமக்கள் தான் தங்களிடம் உள்ள உபயோகப்படுத்த முடியாத நிலைமையில் உள்ள நோட்டுகளை அருகில் உள்ள வங்கி கிளைகளில் மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும், புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்களை அகற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. மக்களுக்கு கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது என்ற விழிப்புணர்வை நேரடியாகவும் மற்ற வங்கிகள் மூலமாகவும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளில் பணம் செலுத்தும் போது கள்ள நோட்டுகளை கண்டு பிடிப்பதற்கு பிரத்தியேகமான மெஷின்களை நிறுவ வங்கிகளுக்கு அறிவுறுத்தி அவைகள் வங்கி கிளைகளில் செயல் பட்டு வருகின்றன. காகிதத்தில் அச்சடிப்பட்ட ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் அவைகளில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பின் அளவிலான அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் உள்ளன. அவை தங்கமாகவோ மத்திய அரசின் கடன் பத்திரங்களாகவோ அந்நிய செலாவணி முதலீட்டு பத்திரங்களாகவோ அல்லது அயல் நாட்டு வங்கி இருப்புகளாகவோ அல்லது நாணயங்களாகவோ இருக்கும். உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தால் அதே ஒரு கோடி ரூபாய் அளவினாளான மேற்கூறப்பட்ட அசையும் சொத்துக்கள் ரிசர்வ் வங்கியில் இருக்கும். இது மக்களுக்கு காகித நோட்டுகள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் மற்றொரு தலையாய கடமை பணவியல் கொள்கையை உருவாக்குவது, அதை வங்கிகள் மூலம் செயல்படுத்துவது. இதன் முக்கியமான அம்சம் நாட்டில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பொருட்களின் விலைகளின் ஸ்திர தன்மையை உண்டாக்குவது. பணப்புழக்கம் என்பது அனைவரிடமும் உள்ள பணம் (ரூபாய் நோட்டுகள்), வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்பு தொகைகள், சேமிப்பு கணக்கில் உள்ள தொகைகள், அஞ்சல் அலுவலக சேமிப்பு மற்றும் வைப்பு தொகைகள் இவை யாவும் அடங்கும். இந்த பண புழக்கத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது மற்ற வங்கிகள் மூலம். வங்கிகள் தங்கள் வசம் உள்ள பொதுமக்களின் கணக்கில் உள்ள வைப்புகளில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கியில் தங்கள் கணக்கில் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளை பணிக்கிறது. இதன் மூலம் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்துள்ள வைப்புகளின் அளவு தற்போது 4 சதவீதம் ஆகும். இதனால் பண வீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. பண வீக்கத்தின் ஏற்றம் இறக்கம் குறியீடுகள் மூலம் கணிக்கப்பட்டு அதற்கான அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கும் மற்ற நிறுவன ஊழியர்களுக்கும் அவ்வப்போது வழங்கப்படுகிறது. ஒரு கூலி தொழிலாளிக்கோ ஒரு விவசாயிக்கோ இதுபோன்ற இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றைக்கும் ஒரு நூறு ரூபாய் அவர்கள் வயிற்று பசியை ஆற்ற முடியும் என்றால் ரிசர்வ் வங்கி பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதே காரணம் ஆகும். அடுத்தபடியாக இந்த பணவியல் கொள்கைகள் மூலம் வங்கிகளின் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி முறைப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டில் புதிய பணவியல் கொள்கையை உருவாக்குவதன் மூலமும் காலாண்டு பணவியல் கொள்கை ஆய்வின் போதும் வட்டி விகிதங்கள் மாற்றங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இதற்காக ரிசர்வ் வங்கியில் நூற்றுக்கணக்கான பொருளாதார நிபுணர்களும் புள்ளியியலாளர்களும் உள்ளனர். மேலும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு அங்கம் வகிக்கும் ஒரு ஆலோசனை குழுவும் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கூறப்பட்ட இரண்டு கடமைகளையும் ரிசர்வ் வங்கி மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுத்தி வருகிறது. இது போக வங்கிகளுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை வழங்குதல், வங்கிகளின் செயல்பாடுகளை நேரடியாக ஆராய்ந்து அறிக்கை தயாரித்தல், அந்த அறிக்கையை அந்தந்த வங்கிகளிடம் விவாதித்து வங்கிகளின் செயல்பாடுகளை நெறிப்படுத்துதல், புதிய வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்தல் அல்லது தற்போது செயல்பட்டு வரும் வங்கிகள் புதிய கிளைகள் தொடங்க அனுமதி அளித்தல், மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை விற்பது, பெரிய அளவிலான வங்கி சாரா நிதி நிறுவனங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை அமல்படுத்துதல் போன்ற பல பணிகளையும் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகள் மும்பை மத்திய அலுவலகத்திலும் மற்ற கிளை அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 6955 அதிகாரிகளும், 3831 உதவியாளர்களும், 3999 கடைநிலை ஊழியர்களும் பணி செய்கிறார்கள் (ரிசர்வ் வங்கியின் 2017-18 ஆண்டறிக்கை படி) ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பணவியல் கொள்கைகள், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள், ஆண்டறிக்கை, வங்கிகளின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கை போன்ற பல்வேறு விவரங்களை ரிசர்வ் வங்கியின் வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Popular Posts