Saturday, 19 January 2019

நம்மிடையே நடமாடும் ‘மிருகங்கள்’

நம்மிடையே நடமாடும் ‘மிருகங்கள்’எல்லா மக்களும் நல்லவர்களும் அல்ல, எல்லோரும் கெட்டவர்களும் அல்ல. பெரும்பாலான மக்கள் நல்லவர்கள்தான். ஆனால் உங்களைப் பொறுத்தவரை யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதுதான் முக்கியம். ஒரே ஒரு கெட்டவனால் கூட அடுத்தவர் வாழ்க்கையை முற்றிலுமாகச் சீரழிக்க முடியும். நல்லவன் யார், கெட்டவன் யார் என்று பகுத்தறிவதே ஒரு வாழ்க்கைப் போர்வீரனின் பெரிய சவாலாகும்.உலகில் நீங்கள் காணும் மோசமான மனிதர்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்...

1. கொசு மனிதர்கள்:
நாம் எங்கு இருந்தாலும் இவர்களும் எப்படியோ வந்து சேர்ந்துவிடுவார்கள். இவர்களுக்குத் தேவை நமது ரத்தம். அதை உறிஞ்சிவிட்டுப் பறந்துவிடுவார்கள். ஜேப்படித் திருடர்கள், செயின் அறுப்பவர்களை உதாரணமாகக் கூறலாம். ஓங்கி அறைந்தால் மடிந்து போகும் கொசு போலத்தான் இவர்கள். திருப்பி அடித்தால் ஓடிப் போவார்கள்.

2. அட்டை மனிதர்கள்:
சதுப்பு நிலத்தில் சென்றால் நம்மை அறியாமல் நம் உடல் மீது தொற்றிக்கொண்டு ரத்தம் உறிஞ்சும் அட்டை போன்றவர்கள் இவர்கள். நிதானமாக அதிக ரத்தத்தை உறிஞ்சிய பிறகு நம்மை விட்டு விடுவார்கள். கந்துவட்டிக்காரர்கள், கடன் வாங்கித் திருப்பித் தராதவர்களை அட்டை மனிதர்கள் என்று சொல்லலாம்.

3. முதலை மனிதர்கள்:
இவர்கள் தங்களது இடத்துக்கு வரும் பலசாலிகளையும் பலவீனமாக்கி விடுவார்கள். முழுவதுமாக விழுங்கியும் விடுவார்கள். சிலரைச் சேர்த்துக்கொண்டு ஒரு தொழில் தொடங்கி, அதில் அவர்கள் அனைவரையும் முதலீடு செய்ய வைத்துப் பின்னர் வருமானத்தை அபகரித்து, மற்றவர்களை அந்த நிறுவனத்தில் இருந்து கழற்றிவிடும் பணமோசடி முதலைகள் இவர்கள்.

4. விஷப்பாம்பு மனிதர்கள்:
இவர்கள் கொடிய விஷம் பொருந்திய கட்டுவிரியன்கள். இவர்களை தெரியாமல் சீண்டிவிட்டாலும் நம்மைக் கடித்து கொடிய விஷத்தைப் பாய்ச்சி சாகடித்துவிடுவார்கள். சிலரை நாம் ஏதோ காரணத்துக்காக கண்டித்திருப்போம் அல்லது தண்டித்திருப்போம். அதனால் நம்மைப் பழிக்குப் பழி வாங்க நம் மீது பொய்ப்புகார் கூறுவார்கள். நம்மை நம் நிலையில் இருந்து இறக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எதிரியாகிவிட்ட நண்பனை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

5. குள்ளநரி மனிதர்கள்:
இவர்கள் மிகவும் தந்திரமானவர்கள். நல்லவர்கள் போலப் பழகுவார்கள். பின்னர் தருணம் பார்த்து, நமது சொத்தையும் நற்பெயரையும் அபகரித்துக் கொள்வார்கள். கும்பலாகக் கூடி மிரட்டுவார்கள். ஜாதி அல்லது மத அடிப்படையில் இவர்களுக்குள் ஒற்றுமை இருக்கும். திட்டமிட்டு, வலையில் சிக்கவைத்து நம்மைத் திவாலாக்கி தெருவில் விட்டுவிடுவார்கள். சுயலாபத்துக்காக எந்த இழிசெயலையும் செய்வார்கள். சிறைக்குச் செல்லவும் அஞ்சமாட்டார்கள். வாடகைக்குக் குடியேறி பின்னர் வீட்டை அபகரிக்கும் கும்பல்கள், மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருகிறேன் என்று பல லட்சம் கொள்ளை அடிக்கும் கும்பல்கள் குள்ளநரிக் கூட்ட மனிதர்கள் ஆவார்கள்.வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் என்னிடம் இதைச் சொன்னார். தனக்கு இதயநோய் இருந்ததாகவும், திருப்பதியில் உள்ள தனது குடும்பச் சொத்தை விற்று பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டி ஓர் உறவுப்பெண்ணிடம் அதை ஒப்படைத்ததாகவும், பின்னர் அந்தப் பெண்ணும் அவரது கணவரும் சிலருடன் கூட்டுச்சதியில் ஈடுபட்டு அந்தச் சொத்தை விற்பனை செய்து, அந்தப் பணத்தை வேறு ஒரு நிறுவனத்தில் அவரையே முதலீடு செய்ய வைத்தனர் என்றும், ஆனால் அந்த நிறுவனம் ஒரு போலி நிறுவனம் என்றும், 7 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டார்கள் என்றும் புலம்பினார். இதய நோயாளி ஊர் திரும்பமாட்டார் என்ற தைரியத்தில், நெருங்கிய உறவினரே குள்ளநரி மனிதராக மாறிவிட்டார். சொத்து என்று வந்துவிட்டால் உறவினர் என்றாலும் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.

6. மதயானை மனிதர்கள்:
மிகப் பெரிய தோற்றத்துடன் காட்சியளிப்பார்கள். தோற்றத்துக்கு ஏற்ற தைரியம் இருக்காது. ஆனால் உடல் பலம், தோற்றம் மற்றும் தோரணையில் நம்மை மிரட்டுவார்கள். அவர்களுக்கு மதம் பிடித்துவிட்டால் உணவளித்தவனையே காலால் மிதித்துக் கொன்றுவிடுவார்கள். பண பலம், அதிகார பலம் அல்லது சமுதாய பலம் மிக்கவர்கள் என்பதால், நம்மை நசுக்கிவிடுவது இவர்களுக்கு எளிது. இம்மனிதர்களுக்கு சாதாரண மக்களைப் பிடிக்காது. இவன் பெரிய செல்வந்தன் ஆயிற்றே, அதிகாரத்தில் இருக்கிறானே, நம்முடனான நட்புக்கு நன்றிக்கடனாக ஏதாவது நமக்குச் செய்வான் என்று காத்திருந்தால் ஏமாந்துபோவீர்கள். இவர்களோடு உறவாடாமல் இருப்பதே நல்லது.

7. காட்டுப்பன்றி மனிதர்கள்:
இவர்களை யாராவது காயப்படுத்தினால் மூர்க்கமாகிவிடுவார்கள். கோபமுற்ற காட்டுப்பன்றி பயமறியாது. அது தன்னைத் தாக்கியவன் யார் என்று உற்றுநோக்கும். அதன் பார்வையில் பட்டவன் அப்பாவியாகக் கூட இருக்கலாம். அவனை நோக்கி அது பாயும். அந்நபரைக் கொல்லாமல் விடாது. சண்டை என்று வந்தால் சற்றும் அஞ்சாத காட்டு விலங்கு இதுதான். திமிர் பிடித்த நபரை நாம் பகைத்துக்கொண்டால் அவன் வாழ்நாள் முழுவதும் பழிவாங்கும் வெறியுடன் இருப்பான். பன்றி மனிதர்கள் பெண் பிள்ளைகள் பின்னால் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தீராத தொல்லைகளைத் தருகிறார்கள். காட்டுப்பன்றி மனிதன் தனது மனைவியைத் தன்னுடைய கொடூர கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துத் துன்புறுத்துவான். இப்படிப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் இவர்களோடு அசிங்கமான போரைச் செய்துகொண்டிருக்க நேரிடும்.

8. சிறுத்தை மனிதர்கள்:
காட்டிலேயே மிகவும் கவர்ச்சிகரமான மிருகம் சிறுத்தைப்புலிதான். பெரிய மான் ஒன்றைக் கவ்விக்கொண்டு சாதாரணமாக மரத்தில் ஏறிவிடும். வழக்கமாக அவை நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் சில வேளைகளில் அவை மனிதனைத் தின்னும் சிறுத்தைகளாக மாறிவிடுகின்றன. விலங்குகள் உணவு இல்லாதபோது மனிதனை வேட்டையாடிப் புசிக்கின்றன. அப்பாவி மனிதர்களை பிடித்துத் தின்பது இதற்கு மிகவும் எளிய காரியம். சொத்துக்காக தனது உறவினரையே கொல்லத் துணியும் கயவர்களை இவ்வகையினர் என்று கூறலாம். குழந்தைகளைக் குறிவைத்து பாலியல் தாக்குதல் நடத்தும் கொடியவர்களும் இந்த வகை சார்ந்தவர்கள்தான்.

9. கழுகு மனிதர்கள்:
நாம் பலமாக இருக்கும்வரை பிணந்தின்னிக் கழுகுகள் நம்மை நெருங்குவதில்லை. ஆனால் நாம் பலவீனமடைந்து தடுமாறி விழுந்து கிடக்கும்போது அவை நம்மை நோட்டமிடும். அவை நமது உடனடி மரணத்தையே விரும்பும். நாம் மரிக்கும் நாளன்று அவை ஊர் கூடி கொண்டாடி மகிழும். அப்பன் இறக்கமாட்டானா, சொத்துகளை கைப்பற்றிக்கொள்ளலாமே என நினைக்கும் பிள்ளைகளை கழுகு மனிதர்களுக்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் பெற்ற தகப்பனைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவிவிடும் மகனைவிட இவன் மோசமானவன் இல்லை. இவன் பொறுமையுடன் காத்திருக்கிறான். ஒரு நிறுவனத்தில் நாம் பொறுப்பில் இருக்கிறபோது, ‘இவன் எப்போது ஓய்வு பெறுவான்? அந்த நாற்காலியில் நாம் உட்காரலாமே?’ என்று பேராசை கொள்பவனும், அதிகார ஆவலில் நம்மை மேலிடத்தில் சொல்லி எப்படியாவது பதவியில் இருந்து நீக்க முயல்பவனும் பிணந்தின்னிக் கழுகு வகைதான்.மேலே குறிப்பிட்ட வகைகளிலான கயவர்களைத் தவிர, வேறுவித தீயவர்களையும் நீங்கள் சந்திக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களை முன்கூட்டி அடையாளம் காண்பதும், எச்சரிக்கையாக இருப்பதும் ஒரு போர்த்தளபதிக்கு மிகவும் முக்கியம்.குறிப்பு: ஓர் ஒப்பீட்டுக்காகவே வனவிலங்குகளை மனிதர்களுடன் பொருத்திக் காட்டியிருக்கிறோம். மற்றபடி, தீய மனிதர்களின் குணங்களை வனவிலங்குகளோடு ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவை மனித இனத்துக்கு முன்பாக பூமியில் தோன்றியவை, நம்மால் அழிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டவை. அவற்றை நாம் மதிக்கிறோம்.

No comments:

Popular Posts