Monday 14 January 2019

பூக்கட்டும் புதுமாவட்டம்; பொங்கட்டும் வளர்ச்சி

பூக்கட்டும் புதுமாவட்டம்; பொங்கட்டும் வளர்ச்சி டாக்டர் மா.பா.குருசாமி த மிழகம் வளர்ந்து வருகின்றது. மக்கள் தொகை பெருகி வருகிறது. மக்களின் வாழ்க்கை நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காணப்பெறுகின்றன. பெரிய கிராமங்கள் நகரங்களின் இயல்பை பெறுகின்றன. இந்தநிலையில் மிகப்பெரிய மாவட்டங்களை பிரிப்பதும், நிர்வாகத்தை செம்மைப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகின்றது. இப்போது, 8-1-2019 அன்று சட்டப்பேரவையில், முதல்-அமைச்சர் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கப்போவதாக அறிவித்திருக்கின்றார். இது தமிழகத்தின் 33-வது மாவட்டமாக விளங்கும். மாவட்டங்களின் தோற்ற வரலாறு நினைக்கத்தக்கது. 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் நாள் விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்கினர். இதன் பரப்பளவு 7,217 சதுர கிலோ மீட்டர். மக்கள் தொகை 34.58 லட்சம். இதில் 9 தாலுகாக்கள், 3 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1,099 ஊராட்சிகள் அடங்கியிருந்தன. 2001-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கினர். 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டத்தை இணைத்தனர். 2007-ம் ஆண்டு மறுபடியும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது. மேலும் 2009-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உதயமானது. அதன்பிறகு 9 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மாவட்ட பிரிவினை நடைபெறுகின்றது. இப்போது விழுப்புரம் மாவட்டத்தை பிரிப்பதற்கு முதன்மையாக கூறப்படுவதற்கு காரணம் அது மிகப்பெரிய மாவட்டம் என்பது தான். அதனால் நிர்வாக அடிப்படையில் பல சிக்கல்கள் தோன்றுகின்றது. இந்த மாவட்டத்தில் கல்வராயன் மலைப்பகுதி கிராமங்கள் விழுப்புரத்தில் இருந்து ஏறத்தாழ 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. சரியான போக்குவரத்து இல்லை. இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்வதில் சிக்கல்கள் உள்ளன. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சரியாகவும், முறையாகவும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என்ற மனக்குறை இருக்கின்றது. கள்ளக்குறிச்சி பகுதியில் கிராமங்கள் மிகுதியாக இருப்பதால் வேண்டிய அகக்கட்டுமானங்கள் வளர்ச்சியடையவில்லை. சாலை போக்குவரத்துகள் செம்மையாக இல்லை. கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் போன்றவை சரியான அளவிற்கு இல்லை. கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக மாறுகின்ற பொழுது அங்கு வளர்ச்சி பணிகள் நிறைய நடைபெறுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். கல்வி நிறுவனங்கள், மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள் போதுமான அளவு தோன்றலாம். அரசு அலுவலர்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்புமென மக்கள் கருதுகின்றனர். இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட உருவாக்குதலை பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வரவேற்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்ததாக கூறுகின்றனர். இது ஒரு பக்கம். நாம் எண்ணி பார்க்க வேண்டிய இதன் மறுபக்கமும் இருக்கின்றது. இந்த மாவட்ட ஆட்சி அமைப்பு முறை ஆங்கிலேயர்கள் வரி வசூலுக்காக ஏற்படுத்திய முறை. அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை வசூலிப்பவராக கருதினர். அவர்கள் வரி வசூலிப்பதோடு நின்றுவிடாமல் ஆங்கிலேய ஆட்சி வேரூன்ற என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார். நாம், நாடு விடுதலை பெற்ற பொழுது அந்த பதவியின் பெயரை அப்படியே வைத்துகொண்டோம். தமிழில் ‘ஆட்சியாளர்’ என்று குறிப்பிடுகின்றோம். விடுதலை பெற்ற இந்தியாவில் கிராம வளர்ச்சிக்காக சமுதாய வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்தார்கள். வட்டார வளர்ச்சி அலுவலகங்களை உருவாக்கினார்கள். இந்த நிலையில்தான் ஜனநாயக பரவல் முறையாக பஞ்சாயத்து ஆட்சி முறையை கொண்டு வந்தார்கள். ஊராட்சி முறையின் மூலம் மக்கள் பங்கு பெறுகின்ற நிலையை கொண்டு வர சட்டமியற்றினார்கள். கட்டாயமாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டுமென சட்டமிருக்கின்றது. ஆனால் நடப்பது என்ன? புதிய மாவட்டம் உருவாக்க சட்டம் கொண்டு வந்த அதே பேரவையில் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திருக்கின்றார்கள். இது ஒரு நகைமுரண். இதற்கு முன்பும் பல பெரிய மாவட்டங்களை இரண்டாக, மூன்றாக பிரித்திருக்கின்றோம். எடுத்துக்காட்டாக முன்பிருந்த பெரிய மாவட்டமான மதுரையை, மதுரை, திண்டுக்கல், தேனி என 3 மாவட்டங்களாக பிரித்திருக்கின்றோம். 3 மாவட்ட ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இந்த மாவட்ட பணிகளில் எவ்வளவு திறமை கூடியிருக்கின்றது. என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வளர்ச்சி எந்த வேகத்தில் நடைபெறுகின்றது என்பது போன்ற ஆய்வுகள் எதுவும் நடைபெற்றிருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இதுவரை மாவட்டங்களை பிரித்ததின் பயன்களை ஆராய்ந்து, மாவட்ட பகுப்பு பற்றிய கொள்கையை அரசு ஆக்கப்பூர்வமாக உருவாக்கலாம். பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகளும், 2 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தயம், திருக்கோவிலூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் வரலாம். இந்த சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்களின் பங்களிப்பினை சார்ந்தே இந்த மாவட்ட வளர்ச்சி பணிகள் அமையும். ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையில் புதிய மாவட்ட உருவாக்க பணி நடைபெற உள்ளது. உரிய காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி புதிய மாவட்டம் உருவாதலால் மட்டுமே வந்துவிடாது. அதன் வளர்ச்சி பல்வேறு காரணிகளை சார்ந்தது. நிர்வாகம் என்பது ஓர் எந்திரம். அதனை இயக்குபவர்கள் அரசு அலுவலர்கள். அவர்களை இயக்குபவர்களாக தலைவர்களும், மக்களும், உள்ளாட்சி மன்றங்களும் இருக்க வேண்டும். ஊழலற்ற, நல்ல நிர்வாகம் அமைந்து கள்ளக்குறிச்சி ஒரு சிறப்பான, செழிப்பான மாவட்டமாக திகழ வாழ்த்துவோம்.

No comments:

Popular Posts