Monday 14 January 2019

2018-ல் இந்தியாவின் விஞ்ஞான சாதனைகள் என்ன?

இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டில் செய்த விஞ்ஞான சாதனைகளை பார்த்து வருகிறோம். விவசாயிகளை ரசாயன மருந்துகளின் தாக்குதலில் இருந்து காக்கும் ஜெல் கண்டுபிடிப்பு, வாழையில் செய்யப்பட்ட மரபணு மாற்றம், உலகிலேயே மிகச்சிறிய நானோ பொருள் கண்டுபிடிப்பு உள்ளிட்டவற்றை கடந்த வாரம் பார்த்தோம். மருத்துவம் உள்ளிட்ட இன்னும் பல துறைகளில் இந்திய விஞ்ஞானிகள் செய்த சாதனைகளை இந்த வாரம் பார்க்கலாம்...

காசநோயை எளிதில் அறியும் பரிசோதனை

புதுடெல்லியில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவ மைய மருத்துவர்கள் குழு, காசநோயை எளிதில் கண்டறியும் புதிய முறையை உருவாக்கி உள்ளது. சளியில் காசநோயை உருவாக்கும் பாக்டீரிய புரதப்பொருட்கள் இருப்பதைக் கொண்டே தற்போதைய காசநோய் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கு நிறைய நேரம் பிடிக்கும். எய்ம்ஸ் மைய ஆய்வாளர்கள் அலிசா பரிசோதனை மற்றும் எலக்ட்ரோ கெமிக்கல் சென்சார் எனும் முறைகளில் சளியில் காசநோய் கிருமிகள் இருப்பதை வெகுவிரைவில் கண்டுபிடிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

சூரியப் புள்ளி சுழற்சிகள்

கொல்கத்தாவில் இயங்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (IISER) விஞ்ஞானிகள் குழு, சூரியனைப் பற்றிய ஆய்வில் முக்கிய மாற்றங்களை கண்டறிந்து கூறி உள்ளனர். கடந்த 25 ஆண்டு காலத்தில் சூரிய சுழற்சியில் அதன் புள்ளிகள் இடம் மாறுவது உள்ளிட்ட நேரங்களில் பூமி மற்றும் இதர உட்கோள்களில் குறிப்பிடத்தக்க கதிர்வீச்சு மாற்றங்கள் நிகழ்வதை வரைபடமாக தயாரித்து, அடுத்து எத்தகைய சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது, அதனால் எத்தகைய காலநிலை மாற்றங்கள் பூமியில் நிகழும் என்பதை வரையறுத்து கூறி உள்ளனர். இவர்களது கணிப்பின்படி அடுத்த பத்தாண்டுகளில் சூரியப்புள்ளிகளின் சுழற்சி எப்படி இருக்கும் என்பதை ஏறத்தாழ சரியாக சொல்லிவிட முடியும் என்று தெரியவந்திருக்கிறது. இதன் மூலம் பல்வேறு காலநிலைகளை அறிந்து கொண்டு எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆட்டிசம் பாதிப்பை அறியும் கருவி

சண்டிகாரைச் சேர்ந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழு, குழந்தைகளின் ஆட்டிசம் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிய புதிய கருவியை வடிவமைத்துள்ளனர். இது ‘சண்டிகார் ஆட்டிசம் ஸ்கிரீனிங் இன்ஸ்ட்ருமென்ட்’ (CASI) எனப்படுகிறது. துணை மருத்துவ ஊழியர்களே எளிய பரிசோதனைகள் மூலம் இதன் அறிகுறிகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கருவி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நினைவுத் தடுமாற்ற பாதிப்புகளான அல்சீமர் மற்றும் ஹண்டிங்டன் நோய்களின் முக்கிய காரணியை பெங்களூருவை சேர்ந்த இந்திய அறிவியல் மைய (IISc) கண்டுபிடித்துள்ளனர். பிப்ரில்லர் ஆக்டின் (F-actin) எனும் புரத மூலக்கூறுகளின் சிதைவே, நினைவுத் தடுமாற்றத்தை ஏற்படுத்துவதை இந்த மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் அல்சீமர் மற்றும் ஹண்டிங்டன் வியாதியை கண்டுபிடிக்கும் முக்கிய பரிசோதனை முறையாக இந்த கண்டுபிடிப்பு திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாகரிகத்தை மாற்றியமைத்த கண்டுபிடிப்பு

மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்க வேண்டும் என்றும் அங்கிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழைய கற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் சென்னைக்கு அருகே கிடைத்துள்ள பழைய கற்கால கருவிகளை மரபணு ஆய்வுக்கு உட்படுத்திய தொல்லியல் நிபுணர்கள் இந்திய நாகரிகம் அதனினும் பழையது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இங்கு 3 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் பழைய கற்கால கருவிகளை பயன்படுத்தி வாழ்ந்துள்ளனர் என்று தெரியவந்திருக்கிறது. இதனால் ஆப்பிரிக்க, ஐரோப்பிய பகுதிகளின் பழைய கற்கால நாகரி கத்தை முந்தையது தென்னிந்திய பழைய கற்கால மனித நாகரிகம் என்ற புதிய கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 62 கி.மீ. தொலைவில் உள்ள ஆதிரம்பாக்கம் என்ற கிராமத்தில் இந்த கற்கால கருவிகளை சர்மா தொல்லியியல் கல்வி மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சாந்தி பப்பு மற்றும் அகிலேஷ் ஆகியோர் கண்டுபிடித்து, ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.

பட்டு முதுகெலும்பு

கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வு மைய விஞ்ஞானிகள் பட்டு மற்றும் பாலிமர் இழை களைக் கொண்டு செயற்கை முதுகெலும்பு துண்டுகளை தயாரிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இதை எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் தயாரிக்க முடிவதுடன், இவை இயற்கை முதுகெலும்புடன் இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணுமாற்ற நெல்

குறிப்பிட்ட வடமாநிலங்களின் மண்வளத்தில் ஆர்செனிக் நஞ்சு மிகுந்திருப்பதாக பார்த்தோம். இந்த வகை நஞ்சு, நெல் தானியத்துடன் கலந்து உணவில் காணப்படுவதை தவிர்க்க, மரபணு மாற்றத்துடன் கூடிய நெல் வகையை உருவாக்கி உள்ளது லக்னோவில் செயல்படும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி மையம். இவர்கள் ஒருவகை பூஞ்சையின் மரபணுக்களை நெல் மரபணுவுடன் கலந்து ஆர்செனிக் நஞ்சை எதிர்க்கும் வலிமையை புதிய நெல் ரகத்திற்கு வழங்கி உள்ளனர்.

ரோபோ தொலைநோக்கி

பெங்களூருவில் செயல்படும் இந்திய வான் இயற்பியல் மையம் இந்தியாவின் முதல் ரோபோ தொலைநோக்கியை உருவாக்கி உள்ளது. இது பிரபஞ்சத்தை மனிதனைவிட துல்லியமாக பலவிதங்களில் கண்காணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலச்சரிவு எச்சரிக்கை கருவி

வடகிழக்கு இமயமலைப்பகுதிகளான சிக்கிம் முதல் டார்ஜிலிங் வரையிலான இடங்களில் திடீர் நிலச்சரிவுகள் ஏற்படுவது உண்டு. இதனால் உயிர்ப்பலிகளும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலச்சரிவுகளை 24 மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிப்பதற்காக 200 இடங்களில் உணர் கருவிகள் பொருத்தப்பட்டு, அதில் இருந்து கிடைக்கும் சமிக்ஞை களைக் கொண்டு எச்சரிக்கை செய்யும் நிலச் சரிவு எச்சரிக்கை சாதனத்தை கேரளாவைச் சேர்ந்த அம்ரிதா பல்கலைக்கழகம் மற்றும் சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன.

உலகின் 4-வது சிறந்த வானிலை கண் காணிப்பு மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மேம்பாடு கண்டுள்ளது. மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த மையத்தின் சூப்பர் கம்ப்யூட்டர்கள் 6.8 பீடாபிளாப் அளவுடைய தகவல் பரிமாற்றங்களை ஒரு நொடியில் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அதிசிறந்த வானிலை கண்காணிப்பு மையமாக திகழ இந்த நவீன கணினித் தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ கழிவில் மறுசுழற்சி

பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மருத்துவத் துறையில் மருந்துக் கட்டுகள் போடுவதற்கும், கட்டுமானத் துறையில் அழகிய கட்டுமான பொருளாகவும் பயன்படக்கூடியதாகும். புனேவில் செயல்படும் தேசிய வேதி ஆய்வக விஞ்ஞானிகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கழிவுகளை, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் புதிய உத்தியை கண்டுபிடித்துள்ளது.

No comments:

Popular Posts