Monday, 14 January 2019

கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் அப்ளிகேசன்கள்

கணினிகளை மிஞ்சியதாக செல்போன்கள் அவதரித்துவிட்டபிறகு, மென்பொருட்களைவிட அப்ளிகேசன்களின் ஆட்சி அதிகமாகிவிட்டது. உணவு ஆர்டர் கொடுப்பதில் இருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெறுவதுவரை அப்ளிகேசன்களின் பயன்பாடு அதிகம். கல்விச் சேவைக்கும் எண்ணற்ற அப்ளிகேசன்கள் உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் சில அப்ளிகேசன்களை இங்கே அறிவோம்...

புராஜெக்ட்கள் தயாரிக்க...

பள்ளிப் பருவத்தில் இருந்தே கட்டுரைகள் படைப்பது பலருக்கு கஷ்டமான விஷயம். கல்லூரியில் கட்டுரைகள் மற்றும் அசைன்மென்டுகள் விரிவாகவும் தெளிவாகவும் தயாரிக்கப்பட வேண்டும். பல நேரங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள்போல பாடப்புத்தகத்தில் இல்லாத நிறைய தகவல்களை சேகரித்தும், புதிய நோக்கில் ஆராய்ந்தும் கட்டுரைகள் படைக்க வேண்டியதிருக்கும். இதற்கு மிகுந்த புத்திசாலித்தனமும், சாதுர்யமும் அவசியமாகும்.

இப்படி கல்லூரியில் தரப்படும் புராஜெக்ட்களால் தடுமாறும் மாணவர் கூட்டம் நிறைய. அவர்கள் வெளியே தனிநபரிடம் உதவி பெற்று தங்கள் பிராஜெக்ட்டை செய்து தரக் கேட்பதும் அல்லது பிறர் செய்ததை காப்பி அடித்து எழுதுவதும் உண்டு. இதற்காக உதவியாளரை தேடித்திரி வதும் உண்டு.

இப்படி சிரமப்படாமல் கல்லூரி கட்டுரைகளுக்கும், புராஜெக்ட் திட்டங்களுக்கும் கைகொடுக்க இணைய தளங்களில் பல்வேறு அப்ளிகேசன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் நிஞ்சா எஸ்ஸேஸ்(NinjaEssays). 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்களின் நலன்கருதி எழுதிய ஏராளமான கட்டுரைகள் இங்கே கிடைக்கின்றன, பல கட்டுரைகளை இலவசமாக படிக்க முடியும், சில கட்டுரைகளுக்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. தேவையெனில் விருப்பப்படும் பேராசிரியரை உதவியாளராக நியமித்துக் கொண்டு புராஜெக்ட் செய்யலாம்.

மேற்கூறியது போன்ற அப்ளிகேசன்தான் help.plagtracker. ஆனால் உங்கள் கட்டுரைகள் மற்றும் புராஜெக்ட்டுகளுக்கு ரெடிமேடு தயாரிப்புகளை வழங்குவதற்குப்பதிலாக உங்கள் தயாரிப்புகளை சரிபார்க்கவும், தேவையான, சரியான மாற்றங்களை செய்துகொடுக்கும் எடிட்டிங் வேலைகளுக்கு பேராசிரியர்களின் உதவியை பெற்றுத் தருகிறது இந்த அப்ளிகேசன். உங்களுடைய படைப்பை கொடுத்து எடிட் செய்து தர கேட்கலாம் அல்லது தனிநபர் உதவியாளராக ஒரு பேராசிரியரை நியமித்துக் கொள்ளவும் வழி உண்டு.

குழுவாக படிக்க...

சிலருக்கு சேர்ந்து படித்தால்தான் நன்கு படித்த மாதிரி இருக்கும். எளிதில் புரியும். அப்படி குழு படிப்பிற்கு கைகொடுக்கும் அப்ளிகேசன்தான் ஓபன்ஸ்டடி (open study) அப்ளிகேசன். வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல் என எல்லா பாடங்களுக்கும் இங்கே குழுக்கள் உண்டு. அவர்களுடன் பாடம் சம்பந்தமான விஷயங்களை கலந்துரையாடலாம், சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்.

புத்தகங்களைப் பார்த்துப் படித்து புரிந்துகொள்வதைவிட, மற்றொருவர் வாசித்துக் காட்ட அதில் இருந்து தேவையான விஷயங்களைப் புரிந்து கொள்வது பலருக்கு எளிதாக இருக்கும். இதற்காக கல்லூரி புத்தகங்கள் பெரும்பாலானவற்றை ஆடியோவாக குரல் வடிவில் தருகிறது audible அப்ளிகேசன். வகுப்பறையில் மீண்டும் மீண்டும் ஒன்றை நடத்தச் சொல்லிக் கேட்பது இயலாத காரியம். ஆனால் ஆடியோ புத்தகத்தில் உங்களுக்கு புரியும் வரை ரீவைண்ட் செய்து கேட்டு பாடத்தை மனதில் ஏற்றிக்கொள்ளலாம். ஆரம்பத்தில் இந்த அப்ளிகேசன் ஒரு மாதத்திற்கு இலவசமாகவும், பின்பு சலுகை கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.

ஆராய்ச்சி தலைப்புகளுக்கு...

புதிதாக என்ன தலைப்பில் ஆராய்ச்சி செய்யலாம், அதற்கு என்ன விவரங்கள் தேவைப்படும் என்பது மாணவர்களுக்கு தலைவலியை உருவாக்கும் பிரச்சினையாக இருக்கும். அதுபோன்ற நேரத்தில் உதவக்கூடிய இணையதளங்களும் இன்று நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் InstaGrok. இதில் நீங்கள் விரும்பிய தலைப்பை உள்ளீடு செய்து அது பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளையும், சில ஆராய்ச்சி தலைப்புகளையும் அறிய முடியும். ஆய்வுக்கு வழிகாட்டும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடவும் முடியும். ஆய்வுக்கு உதவும் பல்வேறு தகவல் தொகுப்புகளும் இதில் காணப்படும்.

கட்டுப்பாடுகளுக்கு...

வகுப்பறைக்குள், செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சிலர் மறதியிலோ, ரகசியமாகவோ வகுப்பறைக்கு செல்போன்களை கொண்டு சென்றுவிட்டு, அழைப்பு வந்ததும் செல்போன் சிணுங்கி மாட்டிக் கொள்வதும், பேராசிரியர்களின் கண்டிப்புக்கும், தண்டனைக்கும் ஆளாவது உண்டு. இது போன்ற சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது ஸ்டடியஸ் (Studious) அப்ளிகேசன். இதில் நீங்கள் எந்த நேரத்தில் எங்கிருப்பீர்கள், எந்த நேரத்தில் உங்கள் மொபைல் சைலன்ட்மோடுக்கு மாற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கலாம். அப்படிச் செய்துவிட்டால் நீங்கள் மறந்தாலும் அந்த நேரத்திற்கு தானாக சைலன்ட் மோடுக்கு மாறி, வகுப்பறையிலும், செமினாரிலும் நீங்கள் அவமானப்படுவதை தடுத்துவிடும்.

வகுப்பறையில் கண்டிப்புக்கு பயந்து சைலன்ட் மோடுக்கு மாறலாம். ஆனால் வகுப்பைவிட்டு வெளியே வந்துவிட்டால் படிக்கும் நேரத்திலும் சமூக வலைத்தளங்களில் உலவ மனம் துடிக்குமே. அப்படி மனம் அலைபாயும் நேரத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத் தளங்களின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது SelfControl அப்ளிகேசன். இதை இலவசமாக பயன்படுத்த முடியும்.

இன்னும் சில அவசிய தேவைகள்...

* பாடத்திட்டங்கள், வகுப்பு நேரங்கள் மற்றும் உங்கள் கல்வித்திட்டங்களை குறிப்பிட்டு சீராக வழி நடத்த உதவுகிறது ஐ-ஸ்டிஸ் புரோ (iStudiez Pro) அப்ளிகேசன். இது ஐபோன், ஐபேடு கருவிகளில் மட்டுமே செயல்படும்.

* தேவையான புத்தகங்களை வாங்கவும், தேவையற்ற புத்தகங்களை விற்கவும் உதவும் ஹால்ப்.காம் (Half.com) இணையப் பக்கம் வசதியாக இருக்கும்.

* மாணவர்களின் செலவை மேற்பார்வையிட உதவும் அப்ளிகேசன் மின்ட் (Mint). செலவுகள், தேவைகள் எல்லாவற்றையும் பதிவிடும்போது பயனுள்ள சேமிப்பு வழிகளை நினைவூட்டக்கூடியது மின்ட் அப்ளிகேசன், இது இலவச அப்ளிகேசனாகும்.

* எழுதாமல், தட்டச்சு செய்யாமல் குறிப்பெடுக்க உதவுகிறது Dragon Dictation அப்ளிகேசன். இது, நாம் உச்சரித்தாலே எழுத்துகளாக குறிப்பெடுத்துக் கொள்ளும். இது பலவகையில் உதவியாக இருக்கும்.

* உங்கள் பயிற்சிகள் அழிந்துவிடாமல் பாதுகாக்க சுகர் சிங் (SugarSync) அப்ளிகேசன் உதவுகிறது. இது பல கருவிகளில் உங்கள் தயாரிப்புகளை சேமிப்பதுடன், பாதுகாப்பை வழங்குகிறது.

* மாணவர்களுக்கான மின்னணு நூலகமாக விளங்கும் அப்ளிகேசன் BenchPrep. நூல்கள் மட்டுமல்லாது பிளாஸ்கார்டு, வினாத்தாள்கள், பாடங்களும் உள்ளன.

* கல்லூரி பாடங்களின் சொற்களுக்கு பொருளும், எளிய விளக்கமும் தரும் அகராதி அப்ளிகேசன் Dictionary.com/Mobile.

மாணவர்களான நீங்கள், செல்போனில் பொழுதுபோக்கு தளங்களில் சென்று நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள அப்ளிகேசன்களை பயன்படுத்தி கல்வியை வளப்படுத்திக் கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

No comments:

Popular Posts