Thursday 17 January 2019

சிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு!

சிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு! | சோனால்டி தேசாய் | கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சாதிகள், சமூக-பொருளாதார அந்தஸ்துள்ள சமூகங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் நிலவும்போது, இடஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ள நடவடிக்கைதான். அதேசமயம், நாடு குடியரசான புதிதில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை, இன்றைய நவீன யுகத்தில் மறுபரிசீலனை செய்வது அவசியம். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், இதைத் தவிர்த்து மேற்கொள்ளக்கூடிய மாற்று ஏற்பாடுகளையும் ஆராய்வோம். எல்லோருக்கும் இடஒதுக்கீடு? பொருளாதாரரீதியாகப் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு 10% ஒதுக்கீட்டை அரசியல் சட்ட (124-வது திருத்த) மசோதா-2019 உறுதியளிக்கிறது. நாடாளுமன்ற விவாதத்தில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் விவாதிக்கப்பட்டாலும் இந்த மசோதா இது பற்றி மவுனம் சாதிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ (கிரீமி லேயர்) என்று அடையாளம் காண அடிப்படையாகக் கருதப்படும் ‘ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்’ என்ற அடிப்படையே இதற்கும் கொள்ளப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ என்று நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம், வசதியானவர்களை ஒதுக்குவதற்காக. தேசிய கணக்கெடுப்பு சர்வே (என்எஸ்எஸ்) 2011-12 தரவுகளின்படி குடும்பங்களின் ஆண்டு நபர்வாரிச் செலவு 99% அளவுக்கு இந்தத் தொகைக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்திய மனிதவள வளர்ச்சி சர்வே (ஐஎச்டிஎஸ்) கணக்கெடுப்பின்படி 98% குடும்பங்களின் வருடாந்திர வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவு. மசோதாவில் கூறியுள்ள சொந்த வீட்டின் பரப்பளவு, சொந்த நில அளவு ஆகியவற்றையும் சேர்த்துப் பரிசீலித்தால்கூட 95%-க்கும் அதிகமான மொத்த குடும்பங்கள் இந்த வருமான வரம்புக்குள்தான் இருக்கின்றன. அப்படியென்றால் நாம் யாரை ஒதுக்குகிறோம்? யாரையும் அல்ல. பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டால் கிடைக்கும் பலன்கள் மிகக் குறைந்தபட்சமாகவும், அதற்கான விலை அரசு எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவும் இருக்கும். முதல் அம்சம், இடஒதுக்கீடுகளுக்கான இடங்கள் போக எஞ்சிய இடங்கள் அனைத்துப் பிரிவினரும் போட்டியிடுவதற்கானது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடிகள் ஆகியோரும் பொதுப் பிரிவினருக்குமானது அந்த இடம். அதிலிருந்து 10% குறைக்கப்பட்டால், இப்போது இடஒதுக்கீடு பெறும் சமூகத்தவருக்கு மேலும் 10% குறைக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் நன்மை இல்லை. இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். காரணம் மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கும் மேல். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27%தான் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். அரசியல் சட்டப்படி இடஒதுக்கீட்டின்கீழ் வரும் இடங்களின் எண்ணிக்கை 50%-லிருந்து 60% ஆக உயர்த்தப்படும்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கானருக்குப் பொதுப் பிரிவில் இடங்கள் குறைந்துவிடும். எனவே, அவர்கள் தங்களுக்கான இடங்களை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கே வாய்ப்புகள் அதிகம். சாதிச் சான்றிதழ்கள் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் மிகவும் சவாலானது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் பெறுவது ஏற்கெனவே சிரமமான வேலையாக இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் தன்னைப் பின்தங்கியவராக ஒருவர் எப்படி எளிதாகக் கோர முடியும்? அடுத்ததாக, வேலை தேடுவோரின் எண்ணிக்கை எப்படியாக இருந்தாலும் தனித்திறன் உள்ளோரின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொருளாதார அடிப்படையில் 10% ஒதுக்கீட்டால் இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும். சமூக முன்னேற்றத்துக்கு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் என்ன லாபம்? மறுவடிவமைப்பு தேவை இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவ்வப்போது ஆராய்ந்து, அதை வலுப்படுத்தி, தீவிரப்படுத்தியிருந்தால் பலன் தந்திருக்கும். சமூக-பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோரின் நிலையைத் துல்லியமாக ஆராய்ந்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கு அவசியம் இல்லை என்ற அளவுக்கு அரசு செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது என்றால், அதற்கு ஆதரவான கொள்கை என்னவாக இருக்க முடியும்? அதிகபட்சம் பேருக்கு நன்மைகளை வழங்க வேண்டும் என்று விரும்பினால் அது சவால் நிறைந்ததாகிவிடும். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கை மூலம் 50% பேருக்கு சமூக நீதி வழங்குவது எளிதல்ல. இப்போதைய இடஒதுக்கீட்டு நடைமுறை பயனற்றதாகவும் முனை மழுங்கியதாகவும் இருக்கிறது. மத்திய பொதுப்பணித் தேர்வாணையம் தந்த தரவுகள் இதை நிரூபிக்கின்றன. 2014-ல் விண்ணப்பித்தவர்களில் 0.14% மனுதாரர்களே தேர்வாகினர். பொதுப் பிரிவு மாணவர்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும்தான் அதிகம் தேர்ச்சி பெற்றனர், தேர்ச்சி விகிதம் 0.17%, இதில் பட்டியலினத்தவர்கள் 0.08%. ஆனால், பட்டியலினத்தவர்கள் நிறையப் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களுக்கான பிரிவில் எளிதாக வேலை பெற்றுவிடுகின்றனர் என்பதே பொதுவான கண்ணோட்டமாக இருக்கிறது. முதன்மைத் தேர்வு எழுதுவோரில் 8% தான் தேர்ச்சி பெறுகின்றனர். பட்டியலினத்தவர்கள் பிரிவில் இத்தேர்ச்சி 8.2% முதல் 8.3% ஆகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 9.9% ஆகவும் பொதுப் பிரிவில் 7.8% ஆகவும் இருக்கிறது. இடஒதுக்கீட்டு முறை மீது பொதுப் பிரிவினருக்கு மன ஆதங்கம் இருந்தாலும் உண்மையில் இந்த ஒதுக்கீடு பட்டியலினத்தவர்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அதிகப் பலன்களைத் தந்துவிடவில்லை. பலன்களை விரிவாக்குங்கள் எனவே, மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். இப்போதுள்ள கட்டமைப்பிலேயே இடஒதுக்கீட்டின் பலன்கள் ஏராளமானோருக்குக் கிடைப்பது அவசியம். இடஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேரும் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வேலைக்கான வாய்ப்பை, அதே பிரிவைச் சேர்ந்த அரசின் இடஒதுக்கீட்டின் பயனை அதுவரை பெறாத இன்னொருவருக்கு அளிக்கலாம். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கல்லூரியில் சேர்க்கை, வேலையில் ஒதுக்கீடு ஆகியவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி தனியார் துறை, தனியார் தொழில் முகவாண்மையிலிருந்துதான் வரும் என்பதை அங்கீகரித்து செய்யப்பட வேண்டும். சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அடிப்படையான திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புகழ்பெற்ற கல்லூரிகள், நிறுவனங்களில் படிக்கச் சேருவதிலும், அரசு வேலைவாய்ப்பு பெறுவதிலும்தான் இப்போது அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே தொடங்கிவிடும் கல்வித்தர சமமின்மை குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. நம் அனைவரின் முன்னால் உள்ள சவால் இடஒதுக்கீடு பற்றிய நமது கண்ணோட்டமே. இது எப்படிச் செயல்படுகிறது, எப்படித் திறன்களை வளர்க்கிறது அல்லது எதிர்பார்த்த பலன்களை அளிக்கிறது என்றெல்லாம் ஆராய்ந்து சரி செய்யத் தவறிவிட்டோம். பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு இதை வெற்றிகரமாக்க உள்ள வழிமுறைகளை ஆராயவிடாமல் திசை திருப்புகிறது என்பதுதான் பெரிய சோகம்!

No comments:

Popular Posts