Thursday, 17 January 2019

கல்வி என்பது நல்ல ஒழுக்கமே...!

கல்வி என்பது நல்ல ஒழுக்கமே...! ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர். த லைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவனாக இருக்கிறோம் என்ற உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்க கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும். எது சிறந்த கல்வி, எது உண்மையான அழகு என்பதை நாலடியார் அழகாகச், சிறப்பாகச் சொல்கிறது. நல்ல ஒழுக்கங்களை, கற்றுத் தரும் கல்வி அறிவே இன்று மிக முக்கியத் தேவை. முன்பு மாணவர்கள் குருகுலத்தில் தங்கி குருவிடம் நல்ல பண்புகள், ஒழுக்கங்கள் என்று கற்றுக்கொண்டார்கள். படிப்பு முடிந்து அவர்கள் வரும்போது வாழ்வை எதிர்கொள்ளும், தீரம், தைரியம், நம்பிக்கை மனம் முழுதும் நிரம்பி இருக்கும். ஆனால் இன்றைய கல்வி முறை மாணவர்களை, அடிப்படை மனித குணங்கள் இல்லாதவர்களாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பொறுமை, நல்ல எண்ணங்கள், நம்பிக்கை போன்றவற்றை கல்வி அழித்துவிட்டதோ என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அதற்கு சாட்சியாக எத்தனை விதமான செய்திகள். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை. பெற்றோர் திட்டியதால் மாணவர் விஷம் குடித்து சாவு, தந்தையைக் கொன்ற மகன், ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவன் என்ற செய்திகளை படிக்கும்போது மனம் பதறுகிறது. படிக்கும் காலத்தில் பாதை மாறுவது, பெரியவர்கள், ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடப்பது, கண்டித்தால் உடனே விபரீத முடிவு எடுப்பது என்று இன்றைய இளைய சமுதாயம் பயமுறுத்துகிறது. தான் தவறு செய்தாலும் திட்டுவது, மனம் நோகப் பேசக் கூடாது, கண்டிக்கக் கூடாது என்றால் அவர்களை எப்படிதான் திருத்துவது, ஆசிரியர் எப்படி திட்டுவது. எந்தச் சுயநலமும் இல்லாமல் நம் குழந்தைகள் இவர்கள். இவர்கள் நன்றாகப் படித்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறைதான் ஆசிரியரின் கண்டிப்பில் இருக்கும். இதேபோல்தான் பெற்றோர்களும். நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தவர்கள். நமக்காக பாடுபட்டு, தன் சுக துக்கங்களை மறந்து பெற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கு, ஒரு தவறை சுட்டிக் காட்டித் திட்டவோ, கண்டிக்கவோ உரிமை இல்லையா? கல்வியும் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கடினமாக இருக்கிறது. தேர்ச்சி என்ற ஒரு இலக்கை மட்டுமே வைத்து கல்வி நிறுவனங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சிறிது கூட ஓய்வு என்றில்லாமல் எப்போதும் எதோ ஒரு தேர்வு வந்து கொண்டிருக்கிறது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதாவது வகுப்புகள் வைத்து மாணவர்களுக்கு பொழுதுபோக்குக்கு தடை ஏற்படுத்தி விடுகின்றனர். சிறிது கவனம் பிசகினாலும் தேர்ச்சி அடைய முடியாது என்று பயம். தொழில்நுட்ப உலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாழ்வில் ஸ்திரமாக்கி நிற்க வேண்டும் என்ற பயம் மாணவர்கள் மனதில். போட்டிகளைச் சமாளித்து முதலிடத்தை தக்க வைக்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என்ற பதற்றம் கல்வி வியாபார நிறுவனங்களிடம். மனம் ஒரு மாற்றத்திற்கு ஏங்குகிறது. அப்போது ஒரு சினிமா, பாடல், மனசை குறுகுறுக்க வைக்கும் விஷயத்தில் கவனம் போய் விடுகிறது. பல மாணவிகள் படிக்கும் காலத்தில் பாதை மாறிப் போவது இதனால்தான். இந்த நேரத்தில் ஒரு சின்ன வழிகாட்டலை ஆசிரியரும், பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் திட்டினால் பெற்றோர்களும் உடனே அது குறித்து புகார் தருவது, அரசியல் பிரமுகரை அழைத்துக்கொண்டு வந்து பள்ளியில் ஆசிரியரை தரக் குறைவாகப் பேசுவது என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும். எந்த ஆசிரியரும் ஆசைப்பட்டு மாணவர்களை திட்டுவதில்லை. அவர்கள் தவறு செய்தால் கண்டிக்க வேண்டியது ஒரு ஆசிரியராக அவர்களது கடமை. ஆசிரியர் கண்டிப்பது நல்ல பண்புகளுடன் நடக்கத்தான் என்ற உணர்வும், ஆசிரியையும் பள்ளியில் அவளுக்கு ஒரு தாய் என்ற உணர்வும் மாணவர்களுக்கு வர வேண்டும். “கல்வி கரையில், கற்பவை நாள் சில” என்கிறது அதே நாலடியார். “நல்ல ஒழுக்கமுள்ள பெற்றோர்களும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களே இன்று நம் தேவை” என்கிறார் மகாத்மா. கல்வியின் முழுப் பயன் எது? என்பதை உணர்ந்து அதை கற்க வேண்டும். “கற்க கசடற, நிற்க அதற்குத் தக” என்கிறது குறள். இன்று பயங்கரவாதம், ஊழல், லஞ்சம், பாலியல் வன்முறை என்று பல சம்பவம் நடப்பதை காண்கிறோம். அதில் ஈடுபட்டவர்களைப் பார்த்தால் அதிகம் பேர் மெத்தப் படித்தவர்கள். மதிப்பான பதவியில் இருப்பவர்கள். கல்வி இவர்களுக்கு கற்றுத் தந்தது என்ன? ஒழுக்கக் கல்வி என்பது பிறக்கும்போதே ஆரம்பித்து விட வேண்டும். மனிதப் பண்புகள், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் பள்ளிகளும், வீடுகளும். ஒழுக்கம் என்பது யாரும் இல்லாத போதும் நம் செயல்கள், சிந்தனைகள், பேச்சுகள் நேர்மையாக இருப்பதே. அது மனசாட்சியின் வடிவம். அதை மீறி நடந்தால் பின் வாழும் நாள் வரை உறுத்தலோடுதான் வாழ வேண்டும். கல்வியின் முழு வடிவம் என்ன என்று ஆசிரியர்கள் தெளிவாக உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். சமூகத்தின் அடித்தளம் அவர்கள். சம்பளம் வாங்குவதும், தேர்ச்சி சதவீதம் காட்டுவதும் மட்டுமே வேலை அல்ல. ஒரு சமூகமே அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்படும். அதை உணர்ந்து கனிவோடும், அன்போடும், நல்ல எண்ணங்களுடன் மாணவ சமுதாயத்தை அணுக வேண்டும். பாடத்துடன் நல்ல ஒழுக்க நெறிகளையும் கற்பிக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. இந்தப் பருவத்தில் கவனம் சிதறாமல் இருந்தால் வாழ்நாள் முழுதும் மதிப்பும், கவுரவமாக வாழலாம். சந்தோஷம் என்பது கோடீஸ்வரனாக வாழ்வதில் இல்லை. மற்றவர்களால் வணங்கத் தக்க விதத்தில் நல்ல சான்றோர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி அடங்கி உள்ளது.

No comments:

Popular Posts