Thursday 17 January 2019

மக்கள் போற்றும் மன்னாதி மன்னன்

மக்கள் போற்றும் மன்னாதி மன்னன் சைதை சா.துரைசாமி, முன்னாள் மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி. இ ன்று (ஜனவரி 17-ந் தேதி) எம்.ஜி.ஆர். பிறந்தநாள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி புரிந்த முப்பெரும் தலைவர்களான பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரில் நீண்ட காலம் முதல்-அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். தன்னுடைய திரைப்படப் புகழை தி.மு.க..வின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தியவர். 26 படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னரே எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் 1952-ம் ஆண்டு இணைந்தார். எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்கள் பட்டிதொட்டியெங்கும் உள்ள கிராம மக்களிடம் தி.மு.க. என்ற கட்சியையும், கொடியையும் கொண்டுபோய் சேர்த்தன. உலகில் வேறு எந்த நடிகரும் செய்திராத வகையில் தன்னுடைய படங்களின் பாடல், வசனம், காட்சியமைப்புகளில் கட்சிக் கொள்கைகளைப் புகுத்தினார். “நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் சட்டம், நாடு நலம் பெறும் திட்டம்”, “தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன்... தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்” போன்ற பாடல் வரிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்தன. அதனால்தான், “உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட, எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துகளை பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றன” என்று அண்ணா கடிதம் எழுதி எம்.ஜி.ஆரை பாராட்டினார். 1967-ம் ஆண்டு தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் புரட்சி தலைவர்தான். எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. அதைப் பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.வுக்கு பெருவாரியாக வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். தி.மு.க. வெற்றி அடைந்ததும் அண்ணாவைப் பாராட்ட வந்த கட்சிப் பிரமுகர்களிடம் அவர் “மாலைக்குச் சொந்தக்காரர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார்” என்று வெற்றிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்பதை ஒப்புக்கொண்டு முதல் மரியாதையை செலுத்தச் சொன்னார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தியதும் புரட்சிதலைவர் தான். இதனை, தி.மு.க.வில் தான் எம்.ஜி.ஆரால் எப்படி உயர்வு பெற்றேன் என்பதை கருணாநிதியும் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார். வென்றாரும் வெல்வாரும் இல்லாத வகையில் ஒளிவீசும் தலைவா.. குன்றணைய புகழ்கொண்ட குணக்குன்றே முடியரசர்க்கில்லாத செல்வாக்கெல்லாம் முழுமையுடன் பெற்று விளங்கும் முழுமதியே! தென்னாடும் தென்னவரும் உள்ள வரை மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும் உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும் இந்தக் கவிதை மூலம் கருணாநிதியின் அரசியல் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் உதவினார் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன்பிறகு தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டதும், மக்களின் பேராதரவுடன் 1972-ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதும் வரலாறு. கட்சி தொடங்கிய பிறகு நடைபெற்ற 1977-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். களம் இறங்கினார். அந்த முதல் தேர்தலிலே அ.தி.மு.க.வுக்கு 130 இடங்கள் கிடைத்தன. அ.தி.மு.க. வெற்றி அடைந்ததும், அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி புதுமை செய்தார். தன் ஆட்சி லஞ்ச லாவண்யமற்ற ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனை 1987-ம் ஆண்டு மரணம் அடையும்வரை காப்பாற்றவும் செய்தார். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் எல்லா மதத்தினரும் அவரவர் ஆலயங்களில் எம்.ஜி.ஆருக்காக பிரார்த்தனை செய்தனர். அது, ஆன்மிக மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. ஆன்மிகத்தையும், அறத்தையும் தமிழகத்தில் தழைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். அறம் சார்ந்த அரசியல் நடத்திய புரட்சித்தலைவர் அடித்தட்டு மக்களின் நன்மைக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலங்கள் செய்த மகத்தான சாதனைகள், தமிழக வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதநேய அறக்கட்டளை, விரைவில் அவரது 10 ஆண்டு சாதனை மலர் வெளியிட இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் மகத்தான ஒருசில சாதனைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ‘கல்விக்கண்’ திறந்தவர் காமராஜர் என்றால், அனைவரையும் படிக்கத்தூண்டிய சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். 365 நாட்களும் சத்துணவு, 2 வயது முதலான குழந்தைகளுக்கும் உணவு, சத்துணவு ஆயாக்கள் நியமனம் போன்றவை ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றின. மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பல்பொடி, இலவச பாடநூல் என்று அக்கறை காட்டினார். பிளஸ்-2 பாடத்திட்டம், தொழில்கல்வி, மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு போன்றவையும் எம்.ஜி.ஆர். காலத்தில்தான் கொண்டுவரப்பட்டன. 49 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 68 சதவீதமாக உயர்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவீதம் மட்டுமே இருந்ததை, புரட்சித்தலைவர்தான் 50 சதவீதமாக உயர்த்தினார். இன்று உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் ஏராளமான தமிழர்கள் இருப்பதற்குக் காரணம், தனியாருக்கு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் அனுமதியைக் கொடுத்த எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வைதான். சென்னை நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தை, தன்னுடைய சொந்த செல்வாக்கால் நிறைவேற்றிக் காட்டியவர் எம்.ஜி.ஆர். அரசு மானியப் பொருட்கள் மக்களுக்கு சரியானபடி சேரவேண்டும் என்பதற்காக அரசு கட்டுப்பாட்டில் 22 ஆயிரம் ரேஷன் கடைகள் திறந்தவர் புரட்சித்தலைவர். அதுவரை ரேஷன் கடைகள் தனியார் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் துறையில் முதன்முறையாக பெண் காவலர்கள் நியமனம், கிராமங்கள் தோறும் தாய் சேய் நல விடுதிகள், மகளிருக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. குடிசைகளுக்கு ஒரு விளக்குத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்ததும் புரட்சித்தலைவர்தான். முதியோர் உதவித்தொகை, இளைஞர் உதவித்தொகை, வேலை வாய்ப்புக்காக ஏராளமான தொழிற்பேட்டைகள் உருவாக்கம், கிராமங்களுக்கும் பஸ் வசதி போன்றவைகளைக் கொண்டுவந்ததும் எம்.ஜி.ஆர்.தான். ஏழை, எளிய மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்த சைக்கிளில் டபுள்ஸ், சந்தேக கேஸ் போன்றவற்றை ரத்து செய்தார். இந்தியாவில் முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் சேவையைக் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர்.தான். எந்தக் காலத்துக்கும் பொருத்தமான அண்ணாயிசம் தந்ததும் புரட்சித்தலைவர்தான். கடல் போன்ற எம்.ஜி.ஆர். சாதனைகளில் சில துளிகள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் செய்த அளவுக்கு பிரமிப்பூட்டும் சாதனைகளை அவருக்கு முன்பு இருந்தவர்களும், அவருக்குப் பின்னே இருந்தவர்களும் செய்ததில்லை. மேலும், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், எம்.ஜி.ஆர். லஞ்சம் வாங்கினார், முறைகேடாக சொத்து சேர்த்தார் என்று ஒரு குற்றச்சாட்டுகூட எழுந்ததில்லை. தன்னுடைய உறவினர்களை ஆட்சி, அதிகாரங்களில் இருந்து விலக்கியே வைத்தார். ஊழலற்ற ஆட்சி நடத்தியதால்தான், மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஜெயித்தார். திரைத்துறையில் கதாநாயகனாக கடைசிவரை ஜொலித்தது போலவே, அரசியலில் முதல்வராக ஆட்சியேற்று, முதல்-அமைச்சராகவே மறைந்தார். மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் என்பதால்தான் அவர் மக்கள்போற்றும் மன்னாதி மன்னனாக, திலகமாக, ஏழைப்பங்காளனாக, இதயக்கனியாக போற்றப்படுகிறார். இந்த உலகில் கடைசி மனிதன் வாழும் வரையிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

No comments:

Popular Posts