Friday, 30 November 2018

16 தரணிக்குத் தலைமை தாங்கு!

வரலாற்றில் சில இந்தியர்கள் உலகுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்கள். புத்தர் ஆன்மிகத்திலும், அசோகர் அரசாட்சியிலும், சாணக்கியர் ராஜதந்திரத்திலும், காந்தி அகிம்சையிலும் உலகத் தலைமை வகித்திருக்கிறார்கள்.

இன்றும் இந்தியர் சிலர் உலக நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள். உதாரணமாக...

சுந்தர் பிச்சை- முதன்மை நிர்வாக அதிகாரி, கூகுள்.

சத்ய நாதெள்ளா- தலைமை நிர்வாக அதிகாரி, மைக்ரோசாப்ட்.

சஞ்சய் ஜா- முதன்மை நிர்வாக அதிகாரி, குளோபல் பவுண்டரீஸ்.

இந்திரா நூயி- தலைமை நிர்வாக அதிகாரி, பெப்சி.

உலகளாவிய நிறுவனத்தை நடத்திச் செல்லும் தகுதியும், திறனும், மனநிலையும் கொண்ட இவர்கள், பிரச்சினைகளை பெரிதாகப் பார்க்கமாட்டார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே முயல்வார்கள். உச்சத் தலைமைப் பொறுப்புக்கு உலகச் சந்தையில் அதிக மதிப்புண்டு. எனவேதான் இவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் சம்பளமாகத் தரப்படுகிறது.

இவர்களிடம் மட்டுமல்ல, ராணுவத் தளபதி, கார்ப்பரேட் மருத்துவமனை நிறுவனர், கலெக்டர், கிரிக்கெட் அணி கேப்டன், தலைமையாசிரியர் என்று தலைமை தாங்குவோர் அனைவரிடமும் நல்ல தலைமைப் பண்பு இருக்கிறது.

ராணுவத் தளபதிக்கு தலைமைப் பண்பு வேண்டும் என்றால், ராணுவ வீரனுக்கு அது வேண்டுமா? வேண்டாமா? மாணவ தலைவனுக்கு தலைமைப் பண்பு வேண்டும் என்றால், மற்ற மாணவர்களுக்கு தலைமைப் பண்பு வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளில், ‘தலைமை’ என்ற வார்த்தைக்கான உண்மையான பொருளைக் காண முடியும். இதைப் புரியவைக்க ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

அந்த விமானப் படைத் தளபதிக்கு ஒரு விமானப் படை வீரர் புன்னகையுடன் சல்யூட் அடிப்பது வழக்கம். ‘‘உங்களுக்கு என்னை முன்னதாகத் தெரியுமா?’’ என்று கேட்டார் தளபதி. உடனே அவ்வீரர், ‘‘ஆமாம் அய்யா. 20 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் போர் விமானி, நான் உங்கள் உதவியாளர். அப்போதுகூட ஒரு விமான விபத்து நடந்தது’’ என்றார்.

‘‘ஆமாம்... நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் பாராசூட்டில் குதித்து உயிர் பிழைத்தேன்’’ என்றார் தளபதி.

‘‘அப்போது நீங்கள் பயன்படுத்திய பாராசூட்டை கவனமாகத் தயார் செய்து விமானத்தில் சரியாகப் பொருத்தியது நான்தான் அய்யா’’ என்றார் அந்த வீரர்.

அதைக் கேட்ட விமான தளபதி ஒரு நிமிடம் அங்கேயே நின்று யோசித்தார். ‘இந்த வீரர் அன்று ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும் அந்த பாராசூட் விரிந்திருக்காது, என் உயிர் போயிருக்கும்’ என்று நினைத்து அந்த வீரரைக் கட்டியணைத்து, ‘‘நன்றி, மிக்க நன்றி. அந்த உதவியை மறக்கமாட்டேன்’’ என்று சொன்னார் தளபதி.

பாராசூட்டை தயார் செய்யும் பணியை அவ்வீரர் சிரத்தையோடு செய்ததால் தளபதி தப்பித்தார். இதற்குப் பெயர்தான் தலைமை. தலைமை என்பது பதவி அல்ல. அது செயல். அந்த செயலைச் செய்ய தலைமைப்பதவி தேவையில்லை.

தொண்டர்களை ஒன்றிணைத்து வழிநடத்துவதும், வழிகாட்டுவதும், வழியை உருவாக்குவதும், மற்றவர்களுக்கு வழிவிடுவதும் மட்டும் தலைமை அல்ல, தனது பாதையை தானே உருவாக்கி அதில் தனியே பயணிப்பவனும் தலைவன்தான். தனக்கு தனிப்படை இல்லை என்றாலும், படைக்கலன் இல்லை என்றாலும் அவன் தலைவன்தான்.

சாதாரணப் பதவியிலும் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியவர்கள் சாதனைகளைப் புரிந்துள்ளனர். பூமியில் இருந்து சூரியனுக்கு உள்ள தூரம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வெள்ளிக்கிரகம் சூரியனைச் சுற்றிப் பயணிக்கும் பாதையை பூமியின் பல இடங்களில் இருந்து பதிவு செய்ய வேண்டும். அதற்கு, கோணவியல் என்ற கணிதம் கையாளப்பட்டது.

தென் பசிபிக் கடல் பகுதியில் அதைப் பதிவு செய்ய 1769-ம் ஆண்டு கேப்டன் தாமஸ் குக் என்பவரை தஹிதி என்ற குட்டித்தீவுக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஜேம்ஸ் லிண்ட் என்ற டாக்டர் ஒன்றைக் கவனித்தார். கடல் வீரர்களுக்கு பல் விழுவது, ஊனில் ரத்தம், தோல் தடிப்பு, பசியின்மை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டன.

இது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய லிண்ட் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். ஒரு சிலருக்கு மட்டும் எலுமிச்சம்பழச் சாறு வழங்கினார். அதைப் பருகிய கடல் வீரர்களுக்கு நோய் அறிகுறிகள் நீங்கிவிட்டன. ஆக, எலுமிச்சையில் இருக்கும் ஒரு சத்தின் பற்றாக்குறையால்தான் அந்த ‘ஸ்கர்வி’ நோய் ஏற்படுகிறது என்று ஜேம்ஸ் லிண்ட் கண்டுபிடித்தார். ஸ்கர்வி நோயால் பல லட்சம் கடல் வீரர்கள் இறந்த அக்காலத்தில் இது பயனுள்ள கண்டுபிடிப்பாகத் திகழ்ந்தது. லிண்ட் கப்பலின் தளபதி அல்ல, ஆராய்ச்சியாளரும் அல்ல. சாதாரண மருத்துவர்.

அவரைப் போல, தமது பணிகளை ஈடுபாட்டுடன் செய்து முடிப்பதுதான் தலைமைப் பண்பு. ‘நம்மால் பிரமாதமான செயல்களைச் செய்ய முடியாது. ஆனால் சிறிய செயல்களை பிரமாதமாகச் செய்ய முடியும்’ என்றார், அன்னை தெரசா அம்மையார்.

ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி இது... ‘உங்களது பேச்சைக் கேட்டபின் எனக்கு பதவி ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. உலகிலேயே மிகப் பெரிய பதவி எது? அந்தப் பதவிதான் எனக்கு வேண்டும்’ என்றார். அவரிடம், ‘நீங்கள் தற்போது என்ன படிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்’ என்றார். ‘அந்தப் பதவிதான் உங்களைப் பொறுத்தவரை இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பதவி’ என்றேன். ஒட்டுமொத்த மாணவ, மாணவியரும் ஆரவாரித்தார்கள்.

மாணவராக இருக்கும் உங்களுக்கு ஐந்து பாடங்கள் உண்டு. அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஐந்து ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். ஐந்து நண்பர்கள், ஐந்து எதிராளிகள், ஐந்து உறவினர்கள் என்று அனைவரையும் நிர்வாகம் செய்ய வேண்டும். ஆக, உங்கள் வாழ்க்கை என்பதும் ஒரு நிறுவனம்தான், அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நீங்கள்தான்.

முந்தைய தலைமுறையை விட வாய்ப்புகள் அதிகம் நமக்கு. நமது தந்தையின் தலைமையை விட அடுத்தகட்ட தலைமையை நாம் தருதல் வேண்டும். தந்தை படும் துயரத்தைக் கண்டு தனிமுயற்சி எடுத்து ஐ.பி.எஸ். அதிகாரியானார், அனூப்குமார் சிங் என்ற இளைஞர். இன்று மேற்கு உத்தரபிரதேசத்தின் லக்னோ மாவட்ட எஸ்.பி.யாக இருக்கிறார். அதே மாவட்டத்தில் அதே எஸ்.பி. அலுவலகத்தில் காவலராக வேலை செய்யும் அனூப்குமாரின் தந்தை ஜனார்த்தன் சிங், மகனுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்கிறார். இது தினமும் பலரின் கண் முன் நடக்கிறது.

‘பணியில் அவர் எனக்கு உயர் அதிகாரி. எனவே நான் அவருக்கு சல்யூட் அடிக்கிறேன்!’ என்று ஆனந்தக் கண்ணீர் மல்க அந்தத் தந்தை கூறுகிறார். தன் தந்தையின் தலைமுறையைவிட ஒரு படி மேலே சென்ற தலைமகன்தான் சாதனைத் தலைவன்.

தலைமையும், தலைமைப் பண்புகளும் நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும். இரு வேறு சமுதாயங்களுக்கு இடையில் வெறுப்பை வளர்க்கவும் சிலர் தங்களது தலைமையைப் பயன்படுத்துகிறார்கள். இது தீய தலைமை. அறிவியல் யுகத்தில் இதுபோன்ற நச்சுத் தலைமைகள் நமக்குத் தேவையில்லை.

வீட்டிலும், கல்வியிலும், சமுதாய அக்கறையிலும், தொழிலிலும், இயற்கைப் பாதுகாப்பிலும், சிந்தனையிலும், வாழ்க்கையிலும் நீங்கள் தலைமை தாங்கிப் பழக வேண்டும்.

தலைவனாக இருப்பது மட்டும் அல்ல தலைமை. எடுத்துக்காட்டாக இருப்பதுமே தலைமை.

தலைவர்கள் பிறப்பது இல்லை. உருவாக்கப்படுகிறார்கள். உங்களை தலைமைப் பதவியில் நீங்களே உட்கார வைக்க வேண்டும். அதற்கு...

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 26 November 2018

உங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்!

கணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடும். அறிவியலின் அடிப்படைகளில் கணிதமும் ஒன்று. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் கணிதத்தை விளையாட்டுடன் விறுவிறுப்பாக கற்றுத்தரும் பல அப்ளிகேசன்கள் வந்துவிட்டன. உங்களுக்கு கணிதம் பிடிக்காவிட்டால்கூட கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அவை தூண்டிவிடும். அதே நேரத்தில் கணிதத்தை விரும்புபவர்களை மேலும் `ஜீனியஸ்' ஆக மாற்றக்கூடிவை. சில பயனுள்ள கணித அப்ளிகேசன்களை பார்ப்போமா?

கவுன்டிங் கேட்டர்பில்லர் (counting caterpillar):

தொடக்க கல்வியில் அடியெடுத்து வைக்க இருக்கும் மழலைகளுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எண்களை வரிசைப் படுத்தி கூறுவதற்கும், சிறிய கணக்குகளை செய்வற்கும் உதவியாக இருக்கும். இது பல வண்ணங்களுடன் கண்ணை கவரும் விதத்தில் இருப்பதால் குழந்தைகள் ஆர்வமுடன் கணிதம் கற்பார்கள்.

மேத் லேர்னிங் சென்டர் (math learning center):

கல்வியில் நுழையும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘மேத் லேர்னிங் சென்டர்’ செயலி அமைந்துள்ளது. இதனுடன் 10 இலவச செயலிகள் இணைப்பாக கிடைப்பது சிறப்பு. இதில் உள்ள கணித மாதிரிகள் கற்பித்தலில் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் உள்ளது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை எளிய விதத்தில் மாணவர்கள் கற்க உதவும்.

ஸ்பிளாஷ் மேத் (splash math) :

கணிதத்தின் பல பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான செயலி. இது கற்பித்தலில் எளிமையினையும், இனிமையினையும் கொண்டது. கணிதங்களை செயல்முறை பயிற்சி பெறும் வசதியும் கொண்டது. இது அடிப்படை கணக்குகள் மட்டுமின்றி வடிவியல், காலம், பணம் போன்றவற்றை பற்றி கணக்குகளையும் உள்ளடக்கியது. இந்த செயலியும் தொடக்க கல்வி பயிலும் மாணவர்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேத் ஸ்லைட் (math slide):

மற்ற செயலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது மேத் ஸ்லைட். இது மற்ற செயலிகளை போல் வெறும் கணக்குகளாக அல்லாமல், 10 வகையான இலவச விளையாட்டுகளை வழங்குகிறது. ஒவ்வொரு விளையாட்டும் பிரத்யேகமாக கணித கற்பித்தலுக்கென்றே வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ரெப்ளெக்ஸ் மேத் (reflex math):

குழந்தைகளுக்கு கணிதம் கற்பிக்கும் செயலிகளில் இது ஒரு சிறந்த செயலி. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை மாணவர்கள் இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் கற்கும் எளிமையான வழிகளை கற்றுத் தருகிறது. மாணவர்கள் எளிதில் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளையும், வழிகளையும் சொல்லித் தருகிறது. சில கணித விளையாட்டுகளையும் இணைப்பாக வழங்குகிறது. இந்த வழிமுறைகள் குழந்தைகள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

டிவிஷன் வித் இப்பிள்ஓப்பிள்

கணித வினா-விடை புதிராக அமைந்த அப்ளிகேசன் இது. கொள்குறி விடைகளைக் கொடுத்து ஏராளமான கணிதப் புதிர்களை கொண்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பயனுள்ள அப்ளிகேசன்.

மேத் பேக்கரி

புதிர் விளையாட்டாக கணித அறிவை வளர்க்கும் அப்ளிகேசன் இது. சின்னச் சின்ன புதிர் விளையாட்டாக ஒவ்வொரு ‘லெவல்’களையும் கடந்து செல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்களும் விளையாடலாம். கணித அறிவு மிகுந்தவர்களை இந்த அப்ளிகேசன் ரொம்பவே கவர்ந்துவிடும்.

இதேபோல அமைந்த மற்றொரு அப்ளிகேசன் ‘கேசுவல் குயிக் மேத்ஸ்’ (Casual Quick Maths) இதிலும் நீங்கள் வெற்றிகளை குவித்து அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

எலிபன்ட் லேர்னிங் (Elephant Learning)

மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கணித அப்ளிகேசன் இது. 21 வகை விளையாட்டுகளை உள்ளடக்கிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உயிரினங்களின் கதாபாத்திரம் வழியே எளிமையாக கணிதம் போதிக்கிறது.

ராக்கெட் மேத்

வித்தியாசமான கணிதப் புதிர்களை கொண்டிருப்பதுடன், சீக்கிரமாக அதற்கு விடை கண்டுபிடிக்க வழிகளையும் சொல்லித் தருகிறது இந்த அப்ளிகேசன்.

கான் அகாடமி

வீடியோ டுட்டோரியலாக அமைந்த அப்ளிகேசன் இது. கணிதத்தின் அனைத்துப் பகுதிகளையும் எளிமையாக விளக்கி இருக்கிறார்கள். வேறு பாடங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

மேத்ஸ் பார்முலாஸ் பிரீ ( Maths Formulas Free)

பள்ளி முதல், பல்கலைக்கழகம் வரையிலான கணிதப் பாடங்களைக் கொண்டது. கணித விதிகளின்படி எப்படி ஒவ்வொரு கணக்கையும் விடை காண்பது என்பது தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நிறுவனத்தால் வடிவமைக்கபட்ட இந்த அப்ளிகேசனில் மற்ற பாடங்களையும் படிக்க முடியும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 23 November 2018

‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா?

உங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற முடியாத பல்வேறு கறைகளை நீக்குவதற்கு வெவ்வேறு சலவை முறை இருக்கிறது. அவற்றில் ஒன்று ‘டிரை கிளீனிங்’. இதை தமிழில் ‘உலர் சலவை’ என்று கூறலாம். இதை ‘பெட்ரோல் வாஷ்’ என்றும் அழைப்பார்கள். இது பற்றி அறிய வேண்டுமானால், நாம் சலவை முறையைப் பற்றிய பழைய வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் இன்றளவும் ஆறு, ஏரி, குளங்களுக்குச் சென்று துணியை சலவை செய்வது வழக்கமாக உள்ளது. சிறிது காலத்திற்கு முன்புவரை வெள்ளாவியில் வெளுப்பது ஒரு சலவை முறையாக இருந்தது. உப்புகலந்த உவர் மண்ணில், ஈரத்துணியைப் புரட்டி, அதை வெள்ளாவி எனப்படும் ஒருவகை அடுப்பில் வைத்து வேகவைப்பார்கள். அப்போது உவர்மண்ணில் உள்ள ரசாயனங்கள் துணியில் உள்ள கறைகள், எண்ணெய்ப் பிசுக்கை நீக்கிவிடும். பின்னர் இதை நீரில் அமிழ்த்தி கசக்கிப்பிழிந்து காய வைத்து தருவார்கள். சோப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பின், கடினமான இந்த வெள்ளாவிமுறை மறைந்துபோனது. சோப்பைத் தொடர்ந்து டிடர்ஜெண்ட் எனப்படும் சலவைப் பொடிகள் பயன்பாட்டிற்கு வந்தன. இவையும் நீருடன் சேர்ந்து துணியில் உள்ள கறைகளை நீக்கின. இவற்றைப் பயன்படுத்தி எளிதாக துணிகளை வெளுத்துத் தரும் லாண்டரி கடைகள், சலவை தொழிற்சாலைகள் தோன்றின. பட்டுத்துணி மற்றும் சில செயற்கை இழை துணிகள் இந்த சலவை முறைகளில் பாதிப்படைந்தன. இதற்கு மாற்றுவழிகளை ஆராய்ந்த விஞ்ஞனிகள் உருவாக்கியதுதான் ‘டிரை வாஷிங்’ எனும் உலர் சலவை முறை. இதை கண்டுபிடித்தவர் பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்த ஜீன் பாப்டிஸ்ட் ஜாலி என்பவராவார். சாயப் பட்டறை தொழிலாளியான இவர் எதிர்பாராத நிகழ்வால் இந்த சலவை முறையை உருவாக்கினார். சொல்லப்போனால், அவரது வீட்டு வேலைக்காரிதான் இந்த கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரி. 1825-ம் ஆண்டில் ஒருநாள், இவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரி, தவறுதலாக எண்ணெய் விளக்கை கவிழ்த்துவிட்டார். அதில் இருந்த டர்பண்டைன் எண்ணெய் மேஜைவிரிப்பில் கொட்டிவிட அவள் பயந்துபோனாளாம். அதை எஜமானருக்குத் தெரியாமல் மூடி மறைக்க எண்ணெயை துடைத்தபோது மேஜைவிரிப்பு கறைகள் நீங்கி சுத்தமாகியிருக்கிறது. இதை அறிந்த ஜாலி, டர்பண்டைன் எண்ணை மூலம் புதிய சலவை முறையை உருவாக்கலாம் என முயற்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். கடினமான கறைகளை அது நீக்கியதால் அக்கம்பக்கத்தில் இவரது சலவை முறை பரவியது. விரைவில் நாடு கடந்து இங்கிலாந்திலும் இந்த முறை பரவத் தொடங்கியது. நகர வீதிகளில் ‘டிரை கிளீனிங்’ முறையில் சலவை செய்பவர்கள் பெருகி இருந்தார்கள். டிரைகிளீனிங் முறையில் தண்ணீர் பயன்படுத்துவதில்லை. டர்பண்டைன் எண்ணெயில் சலவை செய்தபோது கறைகள் நீங்கினாலும் ஒருவித வாசனை துணியில் வீசியது ஒரு குறைபாடாக இருந்தது. இது எளிதில் தீப்பிடிக்கக்கூடியது என்பதும் மற்றொரு பின்னடைவாக இருந்தது. எனவே இதற்கு மாற்றுப் பொருள் பற்றிய ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அவர்கள் நாப்தலின், பென்சைன் போன்றவற்றை பயன்படுத்தினார்கள். இவையும் கறைகளை நீக்கினாலும், ஒருவித நெடியை பரப்பின. மண்ணெண்ணெய் (கிருஷ்ணாயில்) பயன்படுத்தியும் இதே நிலைதான் நீடித்தது. வாசனை வராமல், தீப்பிடிக்காமல் சலவை செய்யும் பெட்ராக்ளோரைடு வேதிப்பொருளை ஜெர்மனியைச் சேர்ந்த லுட்விக் ஆந்தலின் கண்டுபிடித்தார். ஆனால் இதை முகர்ந்தால் உயிரை பறிக்கக்கூடியது என்பது அதன்குறைபாடாக இருந்தது. 1918-ல் கடின முயற்சிகளுக்குப்பின் டிரைகுளோரோதலின் என்ற ரசாயனப்பொருள் உலர் சலவைக்குப் பயன்படுத்தப்பட்டது. இது நீண்டகாலம் பயன்பாட்டில் இருந்தது. இப்போது டிரைகிளீனிங் செய்ய பரவலாக பயன்படுத்தப்படும் ரசாயனப்பொருள் பெர்குளோரோதலீன் என்பதாகும். இது வாசனை தருவதில்லை, தீப்பிடிப்பதில்லை, உடலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. கறைகளை நன்றாக நீக்கித்தந்துவிடும். இதுஒரு பெட்ரோலிய உபரிப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இதற்கு ‘பெட்ரோல் வாஷ்’ என்ற பெயரும் ஏற்பட்டது!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 21 November 2018

80 சி பிரிவின் வருமானவரி விலக்கு பெற எந்தெந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?

வேலைக்கு சேர்ந்தவுடன் ஒருவர் திட்டமிட்டு சேமித்தால், நம்முடைய வருமான வரியை ஓரளவிற்கு குறைக்க முடியும். இன்றைக்கு பணம் சம்பாதிக்கும் பலருக்கும் 80 சி பிரிவு பற்றி தெரிந்திருக்கும். அதே நேரத்தில் எந்தெந்த திட்டங்களின் கீழ் சேமித்தால் வருமான வரி விலக்கு பெற முடியும் என்று தெரிவதில்லை. வருமான வரிப்பிரிவில் 80 சி பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒன்றரை ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரையாகும். நம்முடைய அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பதற்காகவே சில ரசீதுகளைக் கேட்பார்கள். குழந்தைகளின் கல்விக்கட்டணம், எல்ஐசி முதலீடுகள், மியூட்சுவல் பண்ட், கட்டுவதற்கான ரசீதுகளை அனுப்பினால் வரி பிடித்தம் குறைவாக இருக்கும். இல்லையெனில் நாம் வாங்கும் சம்பளத்தில் வரி இவ்வளவு கட்ட வேண்டுமா என்று யோசித்தே மண்டை குழம்பிவிடும். வரி சேமிப்புக்கான திட்டங்களை படித்து அதில் முதலீடு செய்யுங்கள். நாம் சேமிக்கக்கூடிய திட்டங்களில் அதனுடைய கால அவகாசம், அதற்கு கிடைக்கும் வருமானம் பார்த்து நாம் வருட ஆரம்பத்திலேயே திட்டமிட்டால், வருமான வரி கட்டுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும். சிறிது சிறிதாக சேமிக்கக்கூடிய தொகை நாளடைவில் நல்ல பலன் தரும். நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் செலவே நமது சேமிப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தேசிய ஓய்வூதிய சிஸ்டம் ( என்பிஎஸ்) தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தது 500 ரூபாய் பங்களிக்க வேண்டும், ஆண்டுக்கு குறைந்தது 6000 ரூபாய் பங்களிக்க வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய குடியுரிமை இல்லாதவர்களும் பதிவு செய்யலாம். தேசிய ஓய்வூதிய திட்டத்தில், கணக்கு வைத்திருப்போரின் வசதிக்கேற்ப, சேர்த்து வைத்த பணத்தை நிறுவன கடனாக, சமபங்காக, அரச பத்திரங்களாக மாற்றிக்கொள்ளலாம். ஓய்வூதிய திட்டத்தில் பணம் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டம் 80 சியின் படி ஆண்டிற்கு 1.5 லட்சம் வரை உள்ள முதலீட்டிற்கு வரி விலக்கு பெற முடியும். மியூட்சுவல் பண்ட் ( இஎல்எஸ்எஸ்) மியூட்சுவல் பண்ட் எனப்படும் இதிலும் ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். 3 வருட காலம் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது லாக் இன் காலமாகும். இது பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்யலாம். ஒரு வேளை 3 வருடத்திற்கு பிறகு, நாம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கட்டாயம் தொடர வேண்டிய முதலீட்டு காலம் குறைவு தேசிய சேமிப்பு பத்திரம் ( என்எஸ்சி) தேசிய சேமிப்பு பத்திரம் எனப்படும் இதில் முதலீடு செய்தால் ஐந்து வருடம் கழித்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதில் கிடைக்கும் வட்டி 8.5%. குறைந்தது 100 ரூபாய் முதல், ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். இதை தபால் நிலையத்தில் வாங்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப்) பொது வருங்கால வைப்பு நிதியில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை சேமிக்கமுடியும். ஒவ்வொரு வருடமும் வட்டியை புதிதாக நிர்ணயம் செய்வார்கள். இதில் 3 வருடத்துக்கு பிறகு, 5 வருடத்திற்குள் கடன் வாங்க முடியும். அதே மாதிரி 6 வருடத்திற்கு பிறகு சிறிது பணம் எடுத்துக்கொள்ளலாம், நிபந்தனைக்குட்பட்டது. சுகன்யா சம்ரிதி யோஜனா ( எஸ்எஸ்ஒய்) பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இது. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தபால் நிலையங்களில் தொடங்கலாம். 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மாதம் சேமிக்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 21 வயதுவரை சேமிக்க வேண்டும். ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். பணம் முதிர்வடைந்த பின்னர் வட்டிக்கு வரி கிடையாது. வங்கி, போஸ்ட் ஆபிஸ் வைப்பு நிதி பணத்திற்கு பாதுகாப்பு வேண்டும் என்பவர்கள் வங்கிகளில் ஐந்து வருடம் முதலீடு செய்யலாம், இதற்கு வருமான வரி விலக்கு ஒன்றரை லட்சம் வரை உண்டு. இதில் குறைந்தது ஐந்து வருடம் இணைந்திருக்க வேண்டும். இதுவும் அஞ்சலக டெர்ம் டிபாசிட்டும் ஒரே மாதிரியானவை. யூலிப் (யுனிட் லிங்க் இன்சூரன்ஸ் திட்டம்) ஆயுள் காப்பீடு திட்டங்களில் ஒன்றரை லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் எண்டோவ்மென்ட் பாலிசி மற்றும் யூலிப் திட்டங்கள் பிரசித்தி பெற்றவை. முறையே 6% முதல் 10% வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. 5ஆண்டு காலம் லாக் இன் செய்ய வேண்டும். நடுவில் பாலிசியை சரண்டர் செய்யும்போது பெரிய அளவு இழப்பு நேரிடும். நாம் கட்டிய தொகையைவிட குறைவாக கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 19 November 2018

பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்

பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இலக்கிய வளமுள்ள பழைய மொழிகளில் உள்ள பழமொழிகள் அம்மொழிகளின் பண்பாட்டு மேம்பாட்டை தெளிவாகக் காட்டுகின்றன. தொன்மைக் காலம் முதல் வழங்கி வரும் தமிழ்ப் பழமொழிச் செல்வம் தமிழனின் பண்பாட்டு உயர்வைக் கணக்கிட்டுக் காட்டும் அளவு மானியாக விளங்குகிறது.

நெடுங்காலமாக ஒரு இனம் பண்பாட்டில் மேம்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், அம்மொழியிலுள்ள பழமொழிகளே எனலாம். மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் வாழவைப்பதற்கு இக்காலத்தில் அற நூல்களும், அரசியல் சட்டங்களும், நீதி மன்றங்களும் உள்ளன. இவற்றில் எதுவுமே இல்லாத தொன் முது காலத்தில் ஒரு கட்டுக்கோப்பான நன்னெறியில் மக்களை வாழவைப்பதற்கு பழமொழிகளின் பங்களிப்பே அடிப்படை காரணமாக அமைந்தது. அவைகளே அக்காலத்தில் அரசியல் சட்டங்களாயின. அதனால் பழமொழிகளில் பயனில்லாதவை ஒன்று கூட இல்லை என்பது தெளிவாயிற்று. இதனை, ‘பழஞ்சொல் பதர் இல்ல’ என்னும் மலையாளப் பழமொழியும் உறுதிப்படுத்துகிறது.

உண்பதற்கு முன் இலையில் உப்பு அல்லது ஊறுகாய் வைப்பது வழக்கம். உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கக்கூடாது என்பதை ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்னும் பழமொழியால் உணர்த்தினர். மேலும் ‘சோற்றுக்கு முன் உப்பு, பேச்சுக்கு முன் பழமொழி’ என்பது ஒரு பழங்கால வழக்கம். ஊர் மன்றம் என்னும் பஞ்சாயத்துகளில் ஊர்த்தலைவர் முதலில் ஒரு பழமொழியைச் சொல்லி விட்டுத்தான், வழக்கை விசாரிக்க தொடங்குவார். அண்ணன் தம்பி தகராறுகளை விசாரிப்பதற்கு முன், ஊர்த்தலைவர் அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, கரும்பு கட்டோடு இருந்தால், எறும்பு ஒன்றும் செய்யாது என்னும் பழமொழியை எல்லோருடைய முன்னிலையிலும் உரத்துச் சொல்லச் செய்வார். இந்த பழமொழியே சண்டையிட்டுக்கொள்ளும் அவர்களைத் தமக்குள் சமாதானம் செய்துகொண்டு ஒற்றுமையாக இருக்க தூண்டிவிடும். ஊர்த்தலைவரின் வேலையை, ஒரு பழமொழியே செய்துவிடும்.

பயிர் நெருக்கமாக இருந்தால் விளைச்சல் எடுக்க முடியாது. பேச்சு அதிகமான வீட்டில் அமைதி காண முடியாது என்னும் துளுவ மொழிப் பழமொழியும் குறிப்பிடத்தக்கது. கோணி கோணிக் கோடி கொடுப்பதை விட, கோணாமல் காணி கொடுப்பது நல்லது என்னும் தமிழ்ப் பழமொழி எதைக் கொடுத்தாலும், இன்முகத்தோடும் இனிய சொல்லோடும் கொடுக்க வேண்டும் என்னும் நல்ல குணத்தை கற்பிக்கிறது. தமிழனைப் பண்பாட்டில் உயர்ந்த வனாகச் செய்வதற்கு பழமொழிகள் பெரும் பங்காற்றி உள்ளன. காப்பியங்களும், அறநூல் களும் தோன்றுவதற்கு அடிப்படை கருத்துகளை வாரி வழங்கியவை பழமொழிகளே.

உலக மொழியினர் பழமொழியை இலக்கிய வகைகளில் ஒன்றாக சேர்க்கவில்லை. ஆனால் பழமொழிகளைத் தொல்காப்பியர் இலக்கிய வகைகளில் முதலாவதாக சேர்த்திருக்கிறார். சென்ற தலைமுறை வரை பாட்டிமார்கள் அடிக்கடி அருமையான பழமொழிகளைப் பொறுமையாகச் சொல்லி சொல்லி நற்பண்புகளை வளர்த்தார்கள். இப்பொழுது பேச்சின் இடையில் பழமொழிகளைச் சொல்லிக் காட்டும் வழக்கம் குறைந்துவிட்டது.

பொன்மொழிக்கும், பழமொழிக்கும் வேறுபாடு உள்ளது. சிறந்த கருத்தைச் சொல்வது பொன்மொழி. உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது பழமொழி. பழமொழியில் எதுகை மோனை அமைந்து, செய்யுள் போல் இலக்கிய நயம் மிகுந்திருக்கும். பொன்மொழியைக் கேட்போர் மறந்துவிடுவது உண்டு. ஆனால் பழமொழி கேட்போர் மனதில் ஆழப் பதிந்துவிடும். அதனால்தான் பழமொழி இலக்கியத் தகுதி பெற்றது.

“வீட்டில் கலம்பணம் இருப்பதை விட ஒரு கிழப்பிணம் இருப்பது மேல்” என்னும் பழமொழி முதியோர்களைக் கண்போல் போற்றிக் காக்க வேண்டும் என்றும் நல்ல பண்பாட்டை வலியுறுத்துகிறது. முதியோர்கள் இருக்கும் வீட்டில் கலகம் இருக்காது. அமைதியும், இன்பமும் நிலவும். பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவும், பாட்டியும் கண்கண்ட தெய்வமாக தெரிவார்கள். முதியோர்கள் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்துவார்கள். அதனை மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி என்னும் பழமொழி மெய்ப்பிக்கிறது. முதியோர் உள்ள கூட்டுக்குடும்பமே சிறந்த குடும்பம். முதியோர் கண்களில் அன்பு பொழியும் அவர்களுடைய சொற்களில் அருள் என்னும் தேன்கனியும். இந்திய வரலாற்றில் மாவேந்தன் ராசராச சோழன் தஞ்சைக் கோவிலைக் கட்டி உலகச் சிறப்பு பெறுவதற்கு காரணமாக இருந்த முதியவர் அவரை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவி மூதாட்டிதான்.

தமிழைத் திருத்தமாக உச்சரித்து, இனிமையாக பேச வேண்டும் என்பதற்குக் கூட தமிழில் பழமொழிகள் உள்ளன. உலக மொழிகளில் தாய்மொழியைத் திருத்தமாக பேச வேண்டும் என்பதற்கு பழமொழி உள்ள ஒரே மொழி தமிழ்மொழியாகும். தமிழ் மொழியைத் திருத்தமாகப் பேசாவிட்டால், அது பலவாறாக திரிந்து வட்டார வழக்குகளாகவும், கிளை மொழிகளாகவும், தனிமொழிகளாகவும் சிதறிப்போய்விடும். மூலத் தாய்மொழி பேசுவோர் எண்ணிக்கையில் குறைந்து விடுவார்கள். தென்நாட்டில் யாரேனும் ஒரு சொல்லைத் தவறாக உச்சரித்தால், அதனைச் சுட்டிக் காட்டும்போது, “நீ என்ன திருத்தக்கல்லுக்குச் தெற்கிட்டுப் பிறந்தவனா?” என்னும் முதுமொழியை எடுத்துக் காட்டிப் பேசுவார்கள். குடும்ப வாழ்க்கையின் செம்மைக்கும், பழமொழிகள் பாதுகாவலாயின “கரும்பிருக்க இரும்பைக் கடித்தது போல், கட்டினவள் இருக்க, கண்டவளைத் தொடலாமா?” என்னும் பழமொழி ஆண்களின் ஒழுக்கத்தையும் “ஊமத்தம் பூ மணமாகுமா? இன்னொருத்தி கணவன் சதமாகுமா?” என்னும் பழமொழி பெண்களின் ஒழுக்கத்தையும் கட்டிக்காத்தன.

மொழி என்பதை வெறும் கருத்தை வெளிப்படுத்தும் கருவியாக தமிழர்கள் கருதவில்லை. தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை நாகரிகத்தை பாதுகாத்து வைக்கும் கருவூலமென்றே கருதினர். அதனால் தான் மூவேந்தர்கள் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ் வளர்த்தனர். அந்த காலத்தில் தமிழன் தமிழைக் காப்பாற்றினான். அந்த தமிழே தமிழனைக் காப்பாற்றியது. அதனை இந்த காலத்து தமிழர்கள் நன்குணர வேண்டும். திரைப்படத்தில் நறுக்கான பேச்சை ‘பஞ்ச் டயலாக்’ என்கிறார்கள். அதனோடு பொருத்தமான பழமொழிகளையும் சேர்த்தால் திரையுலகமும் தமிழுக்கும், தமிழர்க்கும் பெருமை சேர்க்க முடியும்.

பெரிய விருந்து என்றால், அதில் இனிப்பு முதலிடம் பெற வேண்டும். யாரோடு பேசினாலும் பழமொழி முதலிடம் பெறவேண்டும். உலகத் தமிழ் மக்கள் அனைவரும் தம் பேச்சில் பழமொழிகளை அடிக்கடி ஆளும் வழக்கம் பெருக வேண்டும். உலகத் தமிழர் வீடுகள் அனைத்திலும் தமிழ்ப் பழமொழிகளின் தொகுப்பு நூல் கட்டாயம் இருக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அதிகாரமின்றி தவிக்கும் தேசத்தின் உயர் அமைப்பு

அதிகாரமின்றி தவிக்கும் தேசத்தின் உயர் அமைப்பு.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர். ‘விதிமீறல்களை உங்களால் தடுக்க முடியலைன்னா இந்த வேலை பார்ப்பதற்குப் பதிலா மாடு மேய்க்க போங்க..’ தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக நரேஷ்குப்தா இருந்தபோது ஒரு கட்சித்தலைவர் அவரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இவை. இத்தனைக்கும் நரேஷ்குப்தா நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெயரெடுத்தவர். இருந்தும் அவரால் தேர்தல் முறைகேடுகளை முற்றிலுமாக தடுத்திட முடியவில்லை. ஏனெனில் இது நம்முடைய அமைப்பில் இருக்கும் சிக்கல். மேலோட்டமாக பார்த்தால் இந்திய தேர்தல் ஆணையம் சக்தி வாய்ந்த அமைப்பாக தெரிந்தாலும் உண்மை அதுவல்ல என்பதை சமீபத்திய ஆண்டுகளில் உணரத்தொடங்கி இருக்கிறோம்.

சொல்லப்போனால் இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து இந்த தேசம் குடியரசாவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமளிக்கும் 324-வது சட்டப்பிரிவு, 1949-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய அதிகாரங்கள் இன்றைய அதி நவீன யுக தேர்தல் நடைமுறைகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. இத்தனைக்கும் இடையிடையே உச்சநீதிமன்றம் சில அதிகாரங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியபடிதான் இருக்கிறது. ஆனாலும் எல்லா தர்ம நியாயங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு எப்படியாவது பதவியைப் பிடித்து விட வேண்டும் என்கிற அளவுக்கு மாறிவிட்ட அரசியல் சூழலில் தேர்தல் ஆணையம் பழைய விதிகளோடு தாக்குப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை.

அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை நிறுத்திய போது ‘வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடப்பதைத் தடுக்க முடியாததால்’ என்ற வார்த்தைகளைத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக பயன்படுத்தியது. அந்தப் பெருமையை(!) கட்டிக் கொண்டது தமிழ்நாடு. ஜனநாயகம்தான் தேசத்தின் உயிர் எனும் போது அதனைச் செயல்படுத்துகிற உடல் போன்ற அமைப்பு இத்தனை பலவீனமாகவா இருப்பது?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்பது ஒன்றிரண்டு ஆணையர்களோ, அதிகாரிகளோ மட்டும் அல்ல. இந்திய தேர்தல் ஆணையம் வேண்டுமானால் சுயாட்சி பெற்ற அமைப்பாக இருக்கலாம். தேர்தல் நேரத்தில் அதற்குப் பணி புரிபவர்கள் அந்தந்த மாநிலத்தில் இருக்கிற ஆட்சி மற்றும் காவல் பணி அதிகாரிகளும், அரசு ஊழியர்களும்தான். மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் அந்தந்த ஆட்சியர்களே தேர்தல் அதிகாரிகள். அண்மைக்காலமாக ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்களைப் போல ஆட்சியர்கள் சிலர் மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இந்த லட்சணத்தில் இருந்தால் கீழே இருப்பவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? ‘தேர்தல் முடியும் வரைதான் ஆணையத்தின் அதிகாரம் எல்லாம்; அதன் பிறகு இந்த அரசியல்வாதிகளைத்தானே நம்பி இருக்க வேண்டும்’ என்று அதிகாரிகள் சிலர் நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் தேர்தல் நடைமுறைகள் முடிந்த அடுத்த நாளே பழைய பதவி இடத்திற்கு அரசியல்வாதிகளால் கொண்டு வரப்படுகிறார்கள். குறைந்தபட்ச தார்மீகம் கூட இல்லை. அவர்கள் மீது ஒரு விசாரணை கிடையாது. நடவடிக்கை இல்லை. பிறகெப்படி தேர்தல் ஆணையம் அதிகாரமிக்க அமைப்பாக இருக்க முடியும்? அதிகாரிகள் ஆணையத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்?

மாநிலங்களில் இருக்கிற அதிகாரிகளை விடுங்கள். சில நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையமே தடுமாறுகிறதே. வளைந்து, குழைந்து அரசியல் அதிகாரத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறதே! சமீபத்திய சில நிகழ்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இருந்தாலும் தேர்தல் ஆணையத்தை இன்னும் கொஞ்சம் அதிகாரமுள்ளதாக ஆக்குவதுதான் நம் முன்னே இருக்கிற வழி. வேறென்ன செய்ய?

பண்டமாற்று வணிகம் போல நம்முடைய ஜனநாயகம் அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் ஆணையத்தை வலுப்படுத்தி, தேர்தல் நடைமுறைகளில் சீர்த்திருத்தம் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இங்கே ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு எதுவுமே மிச்சமிருக்காது. தேர்தல் என்பதே மொத்தமும் முறைகேடுகளில் முக்கி எடுக்கப்படுவதாகிவிடும். அப்படி ஆகிடக் கூடாது என்பதற்காகவே தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் தில்லு முல்லுகளில் ஈடுபடும் அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டும் என்பது அதில் முக்கியமானது. இப்போது அரசியல் கட்சியைப் பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. தேர்தல்களில் கிரிமினல்கள் ஆதிக்கம் செலுத்துவதையும், கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதையும் தடுக்க அதன் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டுமென்று 1998-ம் ஆண்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. அதோடு சேர்த்து காலத்திற்கேற்ப தேர்தலில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக 22 பரிந்துரைகளை 2004-ம் ஆண்டில் அரசுக்கு கொடுத்தது ஆணையம். ஓராண்டுக்கு கழித்து அவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.

ஆணையத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கத் தகுந்தவைதான் என்று 2010-ம் ஆண்டில் சொன்னது மத்திய சட்ட அமைச்சகம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அது குறித்த அறிக்கை ஒன்றையும் ஆற, அமர அளித்தது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிற அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கலாம் என்றது அந்த அறிக்கை. மத்திய சட்ட ஆணையமும் இதனை வழிமொழிந்தது. எல்லாம் நடந்த பிறகும் தேர்தல் சீர்திருத்தங்கள் இதுவரை சட்டமாகவில்லை. ‘உங்களில் யோக்கியர் யாரோ, அவர் முதலில் கல் எடுத்து வீசுங்கள்’ என்பது போலத்தான். எந்தக் கட்சியும் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் சில முக்கியமான கோரிக்கைகளை அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையரைப் போல மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் சட்டப்பாதுகாப்பு வேண்டும். அதாவது தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நினைத்தப்படி பதவி நீக்கம் செய்து விட முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான பதவி அது. நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மெண்ட் தீர்மானம்’ கொண்டு வந்தே பதவி நீக்க முடியும். இந்த பாதுகாப்பை மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் வழங்க கேட்கிறார்கள். மேலும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தனிச் செயலகங்கள் இருப்பது போல தேர்தல் ஆணையத்திற்கும் தனிச் செயலகம் வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை. அதன் மூலம் அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படாமல் ஆணையம் செயல்பட முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமானது தேர்தல் ஆணைய அதிகாரத்திற்குட்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்களை செய்யும் அதிகாரத்தை கேட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் உச்சநீதிமன்றத்தின் முன் இருக்கின்றன.

தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமளித்தல் என்பதைத் தாண்டி, இந்த நாடு தொடர்ந்து நஞ்சு இல்லாத ஜனநாயக காற்றைச் சுவாசிப்பதற்காகவது தேர்தல் சீர்திருத்தங்களை காலம் தாழ்த்தாமல் செய்திட வேண்டிய இடத்தில் நிற்கிறோம். விட்டுவிட்டால் ஜனநாயகத்தோடு தேசமும் மூச்சுத்திணற வேண்டியிருக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாறிவரும் மாணவர் மனநிலையும், கற்பித்தலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களும்...

இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...

காட்சி உலகம்...

இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க முடியும். ஆகையால் பாடங்களைத் தாண்டிய விஷயங்களில் கருத்துப் பகிர்வு செய்ய சில நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.

பெற்றோரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்கள் குழந்தைகளை ஈர்க்கவும் வழி நடத்தவும் வேண்டும். மல்டிமீடியா மூலமாக குறுவீடியோக்கள், காட்சிப ்பகிர்வு மூலம் அவசியமான அறிவு வளர்ச்சி விஷயங்களை மாணவர்களின் மனதில் பதிக்க வேண்டும். இது அவசியமற்ற முறையில் அவர்கள் பொழுதுபோக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும். புரிதலை வளர்க்கும். மல்டிமீடியா நுட்ப அறிவையும் அவர்களுக்கு வளர்க்கும்.

இணையக் கல்வி அவசியம்

பயிற்சி வகுப்புகளையும், தகவல் தொடர்பையும் தற்காலத்திற்கு ஏற்றபடி இணைய வழிக்கு மாற்றினால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றலில் கவனம் செலுத்துவார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைத்து தகவல்களையும் இணைய தரவுகளாக மாற்றவும், பாடங்கள் மற்றும் பயிற்சிமுறைகளை கணினி- இணைய நுட்பத்திற்கு எளிதாக மாற்றவும் முடியும். மாணவர்களுக்கு தகவல்களை கடத்தவும், கருத்துகளை பகிரவும் இது ஏற்றது. வீட்டுப்பாடப் பயிற்சிக்கான தகவல்களையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் இணையத்தில் பதிவேற்றினால் எந்த மாணவரும் குழப்பமடையாமல் தெரிந்து கொள்வார்கள். கூச்சம் தவிர்த்து தங்கள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கவும் இணைய தகவல் தொடர்பு வசதியாக இருக்கவும், இதன் வழியே ஒவ்வொரு மாணவரின் திறமையை பாராட்டவும், குறைநிறைகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து அவர்களை வழிநடத்தவும் முடியும். இதனால் சராசரி மாணவர்கள் மற்றவர் முன்னிலையில் அவமானம் அடைவதையும், கூச்சம் கொண்டு ஒதுங்கிச் செல்வதையும் தவிர்க்கலாம். தங்களுக்கென எளிமையான இணையப்பக்கத்தை உருவாக்குவது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச்சுலபமானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

வகுப்பறை நிர்வாகம்

ஆசிரியர்களின் வகுப்பறை நிர்வாகத் திறமை, மாணவர்களின் கற்றல் முறையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்கிறது கற்றல் தொடர்பான ஆய்வுகள். சிறந்த மாணவர்கள் மற்றும் சவால் நிறைந்த சராசரி மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்களை கொண்டதுதான் வகுப்பறை. அனைவர் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.

நீங்கள் தனித்துவம் நிறைந்த ஆசிரியர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். புதுமையும், எளிமையும் கொண்ட ஆசிரியர்களாக வலம் வருபவர்களின் பாடங்களில் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல நேரங்களில் போதிப்பதைவிட மென்மையான வழிநடத்தல்கள் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.

வகுப்புகள் பாடம் நடத்த மட்டுமல்ல, பண்பு வளர்க்கவும், மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பழகும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பாட விளக்கங்களை நவீன மாற்றத்திற்கு ‘அப்டேட்’ செய்ய வேண்டும். காட்சிமுறை பாடங்களுக்கு உங்கள் வகுப்பை தயார் படுத்தியிருந்தால் நீங்கள் முன்மாதிரி ஆசிரியர்தான்.

தேவை சுயபரிசோதனை

மாணவர்களை மதிப்பிடுவதைப்போல தங்களையும் ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். மாணவர்கள் உங்கள் வகுப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு, நீங்கள் பாடம் நடத்தும் முறையில் உள்ள குறைநிறைகள் உள்ளதா? என அறிய முற்பட வேண்டும்.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாங்களாக சுய பரிசோதனை செய்யலாம். வேகமாக பாடம் நடத்துகிறீர்களா, போதிய விளக்கம் அளிக்கவில்லையா, கண்டிப்பு மிகுந்திருக்கிறதா? கனிவு குறைந்திருக்கிறதா? அதிகமாக பாடச்சுமை கொடுக்கிறீர்களா? கடினமான பகுதியை சுலபமாக கற்பிக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுகிறீர்கள், சிறந்த மாணவர்களையும், சராசரி மாணவர்களையும், பின்தங்கிய மாணவர்களையும் சரிசமமாக நடத்துகிறீர்களா? பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற கவனம் செலுத்துகிறீர்களா? இதர நடை, உடை, பாவனைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது இன்றைய மாணவர்களை வழிநடத்த அவசியமான மாற்றமாகும்.

வகுப்பைத் தாண்டிய ஆசிரியர்கள்...

ஆசிரியர்கள் வகுப்பறை தாண்டியவர்களாக வலம் வர வேண்டியது அவசியம். பாடங்களைக் கடந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்வது முக்கியத் தேவையாக இருக்கிறது. அரசியல் அறிவு, சமூக அறிவு கொண்டவர்களாக ஆசிரியர்கள் வலம் வர வேண்டியது உள்ளது. அரசுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் தகவல்தொடர்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாலமாக இருக்க வேண்டும். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், நிதிகள் தாமதமின்றி பெற்றுத்தர ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புறவெளி கல்வியாக சுற்றுலா கல்வி மற்றும் நேரடி பயிற்சி கல்வியை அதிகப்படுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை பெரிதும் வளர்க்கும்.

கற்பித்தலும், கற்றலும்...

கற்பித்தல் எளிதான பணியல்ல. அதை மாணவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதே நேரத்தில் கற்றலும் சாதாரணமான விஷயமல்ல. விருப்பமற்ற பாடங்களையும், அதிகப்படியான பாடங்களையும் அவர்கள் படித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தியானம், யோகா, விருப்ப வாசிப்பு, ரசனையானதை ரசித்தல், வெளியே சென்று பொழுதுபோக்குதல் ஆகியவற்றின் மூலம் மனதை இலகுவாக்கி கற்றலில், கற்பித்தலில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

கல்விச்சூழலானது ஆசிரியர் - மாணவர் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்போது கற்றல் மேம்படுகிறது. ஆற்றலும், ஆளுமையும் வளர்கிறது. வளரட்டும்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வளமான வாய்ப்புகள் கொண்ட வேளாண் வணிகவியல் துறை

உலகின் மிகப்பழமையான தொழில் வேளாண்மை. அதனால்தான் உழவின்றி உலகம் இல்லை என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். பயிர் விளைச்சல் பற்றி படிப்பது மட்டும் வேளாண் கல்வியல்ல. வேளாண் துறையில் பல்வேறு வாய்ப்புமிக்க படிப்புகள் உள்ளன. அவற்றில் வேளாண் வணிகவியல் படிப்பும் ஒன்று. இதில் குறுகியகால டிப்ளமோ பயிற்சிகள் முதல் முதுநிலை படிப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் அடங்கும். இதைப் படிப்பதால் பிரகாசமான வேலைவாய்ப்புகளும் உண்டு. அது பற்றி சிறிது அறிவோம்...

வேளாண்மை என்பது பயிர்விளைச்சல் மட்டும் ஆகாது. வேளாண் பொருட்கள் எல்லா இடத்திலும் விளைவதில்லை. குறிப்பிட்ட இடத்தில் விளையும் பொருட்களை பதப்படுத்தி சேமித்தல், மதிப்புகூட்டி மாற்றுதல், வேறு இடங்களுக்கு வினியோகித்தல், விற்பனை செய்தல் என வேளாண் வணிகம் விவசாயத்தைப்போல பரந்து விரிந்த துறையாக விளங்குகிறது. அதுவே வணிக உலகின் மையமாகவும் திகழ்கிறது. வேளாண் பொருட்களை மூலதனமாக வைத்து செய்யப்படும் வேளாண் தொழில்கள் ஏராளம்.

விவசாயம் செய்தல் தொடங்கி, வேளாண்மைக்கு அவசியமான இடுபொருட்களான விதைகள், உரங்கள் உற்பத்தி செய்தல், விளைபொருட்களை சேகரித்து பதப்படுத்துதல், பொட்டலமிடுதல், இடம் பெயர்த்து அனுப்புதல், விற்பனை செய்தல் என பல நிலைகளைக் கொண்டது வேளாண் வணிகம்.

இதில் ஒவ்வொரு நிலையும் தனித்தனி தொழில்களாக விளங்குகிறது. விதைகளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உரங்களை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தனியே செயல்படுகின்றன. அவற்றை வாங்கி விற்கும் சிறுவணிகர்கள், வியாபாரிகள் உள்ளனர். அவற்றை பயன்படுத்தி பயிர்விளைச்சல் செய்யும் விவசாயிகள், விவாசய தொழிலாளர்கள் உள்ளனர். பயிர் விளைச்சல் முதல் அறுவடை வரை பல நிலைகளும், பல்வேறு சிறுதொழில்களும் உள்ளன. நிலங்களை சீர்திருத்தி வழங்குபவர்கள், பண்ணை பராமரிப்பதும் தனித் தொழிலாக விளங்குகிறது.

உரம் தயாரிப்புத் தொழிலானது முக்கியமானதாகவும், அவசியமானதாகவும், அதிகதேவை கொண்டதாகவும் வளர்ந்திருக்கிறது. உரங்கள் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதோடு, விளைச்சலைப் பெருக்கி, மனிதகுலத்துக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியதாகவும், உணவுத் தேவையை ஈடு செய்வதாகவும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் இயற்கை உரங்களின் தேவையும் பெருகி உள்ளது. இது அதிகமான உர உற்பத்தியாளர்களை, தொழில்முனைவோர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. எனவே இதை தொழிலாக செய்ய முன் வருபவர்களுக்கும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

அதுபோல விளை பொருட்களை மதிப்பு கூட்டி வேறு பொருட்களாக மாற்றி விற்பது காலம்காலமாக மிகச்சிறந்த தொழிலாக உள்ளது. அதிலும் உணவுப் பொருட்களுக்கு அதிக தேவையும், எதிர்பார்ப்பும் உள்ளது. அரிசியை ‘ஹாப் பாயில்டு’ அரிசியாக மாற்றுவது, மாவாக திரிப்பது, கோதுமையை ரவையாக மாற்றுவது, பழங்களை உலர வைத்து பொட்டலமிடுவது, விளை பொருட்களை உணவுப்பொருட்களாக தயாரித்து விற்பது என மதிப்புக்கூட்டுத் துறையின் எல்லை நீண்டு கொண்டே செல்லும்.

எல்லா காலத்திலும் தேவை மிக்க, அதே நேரத்தில் எல்லா நேரத்திலும் விளையாத வேளாண் பொருட்களை பதப்படுத்தி, விற்பனை செய்வதும் மிகப்பெரிய தொழில்துறையாக விளங்குகிறது. குறிப்பாக பழங்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் மிகச்சிறந்த தொழிலாக விளங்குகிறது. இதுபோல அன்றாட காய்கறிகளின் தேவையும் அதிகமாகவே உள்ளது. ஏற்றுமதி வாய்ப்பையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மாறுபட்ட தட்பவெப்பநிலை, அதிகமான மக்கள் தொகை, அவர்களின் தேவை வேளாண் தொழில்களுக்கு ஏற்ற சூழலைத் தருகிறது. இந்தியர்கள் தங்கள் வருவாயில் சுமார் 50 சதவீதத்தை உணவுப் பொருட்களுக்கு செலவிடுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே வருவாய் மிக்க தொழிலாகவும் வேளாண் வணிகம் அமையும்.

இவை பற்றிய விரிவான புரிதலை ஏற்படுத்தக்கூடியது வேளாண் வணிகவியல் படிப்பு. பிளஸ்-2 படிப்பில் அறிவியல் பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றவர்கள் வேளாண் வணிகவியல் படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம். இது 4 ஆண்டு கால படிப்பாகும். முதுநிலை படிப்பும், முதுநிலை டிப்ளமோ படிப்பும், ஆராய்ச்சி படிப்பும் மேற்கொள்ளலாம். உரம் தயாரிப்பு மற்றும் மதிப்பு கூட்டல் தொழிற்பயிற்சிகள் குறுகிய கால பயிற்சியாகவும் வழங்கப்படுகிறது.

படித்து முடிப்பவர்கள் அலுவலக உதவியாளர், வணிக மேலாளர், சந்தை ஒருங்கிணைப்பாளர், பண்ணை மேலாண்மை, பயிர் உற்பத்தியாளர், சந்தை ஆய்வாளர், தரக்கட்டுப்பாட்டாளர் என பல நிலைகளில் வேலைவாய்ப்பை பெறலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், சில்லறை வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சுயமாக தொழில்வாய்ப்பும் கொண்டது.

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்த படிப்பை பயிலலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை கோவை வேளாண் பல் கலைக்கழகத்தில் (agritech.tnau.ac.in) கேட்டுப் பெறலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 17 November 2018

15. பணமா? குணமா?

‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். பண வசதி இல்லாதவர் மிகவும் சிரமப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பணம் ஒரு மனிதரின் வாழ்க்கையை உடனடியாக மாற்றிவிடும். பணம் ஒரு குடும்பத்தைக் கட்டி யெழுப்பும், காணாமல் போக்கவும் செய்யும். மக்கள் மனதில் மகிழ்ச்சி, திருப்தி போன்ற நல்லுணர்வுகளையும், பொறாமை, திருட்டு போன்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுப்பக்கூடியது பணம். பணம் சந்தேகமில்லாமல் ஒரு சக்திவாய்ந்த செல்வம். எனவேதான் திருவள்ளுவர், ‘பொருள்’ என்ற தலைப்பை ‘அரண்’ (பாதுகாப்பு) என்ற தலைப்புக்கு அடுத்தபடியாக வைத்தார். பொருள் பற்றி வள்ளுவரின் கருத்தைப் பார்ப்போம்... ‘பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.’ ஒரு சிறப்பும் இல்லாதவன் என்றால்கூட அவனுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பணத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பணத்தின் தாக்கம் இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்கின்றனர் முன்னோர். பண்டைக் காலத்திலும், செல்வ வலிமை மிக்க அரசர் களால்தானே தம் நாட்டை வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்தும், உள்நாட்டு எதிரிகளிடம் இருந்தும் காப்பாற்ற முடிந்தது? ‘பொருளல்லாமல் பொருளும் உண்டோ?’ என்று கலித்தொகை குறிப்பிடுவதையும் கவனத்தில் கொள்வோம். செல்வம் ஒரு சிலரின் கைகளில் பல தலைமுறைகளாகக் குவிந்துகிடக்கும் சூழ்நிலையில், சாமானியர் நேர்மையாக பணம் ஈட்டுவது கடினமான காரியமாகிவிட்டது. எனவேதான், செல்வ வளமை, வறுமை வேறுபாடு அதிகம் உள்ள நாடுகளில் நேர்மைத்தன்மை கொஞ்சம் அரிய விஷயமாக இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் பணக்காரர்கள் தம் வீட்டைச் சுற்றி வலுவான இரும்பு வேலிகளை அமைத்திருக்கின்றனர். நம் நாட்டில் அந்த அளவு மோசமான நிலை இல்லை என்றாலும், வீடுகளில் கதவுக்கு வெளியே இன்னொரு இரும்பு கிரில் கதவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பது கள்வர்களிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளத்தானே? நமக்குத் தேவையான பணம் நம்மிடம் இருக்கும் நிலையைத்தான் பொருளாதார சுதந்திரம் என்கிறோம். நிரந்தர வருமானம் தரும் வேலை ஒன்று நிச்சயம் வேண்டும். அதோடு, ஒவ்வொரு மாதமும் தானாக வரும் நிலையான வருமானம் ஒன்றையும் ஏற் படுத்திக்கொள்ளுதல் வேண்டும். இதைத்தான் பொருளாதார பாதுகாப்பு என்கிறோம். பணத்தின் மீது போதுமான மரியாதை ஏற்படவில்லை என்றால் உங்களிடம் பணம் தங்காது. கைவிரல்கள் வழியே நழுவிப் போகும் பணம் மீண்டும் அதே கைகளுக்கு வராது. ஊதாரித்தனம் கொண்டவர்கள் வெகு விரைவில் பணத்தையெல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பதைப் பார்க்கிறோம். சேமிக்கும் மனப்பான்மை உங்களுக்கு வர வேண்டும். செலவழிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்து போக வேண்டும். பணத்தைச் சம்பாதிப்பது கடினம் என்றால், அதைப் பாதுகாப்பது இன்னும் கடினம். சிரமப்பட்டுச் சேர்த்த சொத்தை பராமரிப்பதற்கு படாத பாடுபட வேண்டியிருக்கும். அப்படி சொத்துகளை இழந்து துன்பப்பட்ட நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். நகைகள் வீட்டில் வைத்தாலும் திருடப்படலாம், அணிந்து வெளியே சென்றாலும் அபகரிக்கப்படலாம். அதிக வட்டி தருகிறோம் என்று பணத்தை மொத்தமாக கொள்ளை அடிக்கும் மோசடிகளும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. ‘பணம் மனிதனைக் கெடுத்துவிடும்’, ‘பணம் பெரிதல்ல’ என்று சிலர் வேதாந்தம் பேசுவார்கள். பாமரர்களும் அதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உண்டு. கொழுத்த பணக்காரர்கள் கூறும் அர்த்தமில்லா வெற்று வார்த்தைகள் இவை என்று அந்தப் பரிதாப மக் களுக்குத் தெரியாது. பணத்தை வெறுப்பது போல பேசுபவர்கள்தான், மலையடிவாரங்களில் மாளிகை கட்டி, குளிரூட்டம் செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டு ஆடம்பரக் கார்களில் பயணிக்கிறார்கள். ஆக, அந்த மனிதர்களின் வாயிலிருந்து வரும், ‘பணம் முக்கியமல்ல’ என்ற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பணம் வேண்டாம், குணம்தான் வேண்டும் என்ற முறையிலும் ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் இதுவும் அடிப்படையில் தவறானது. ஏனென்றால், பணமும் குணமும் சமமாக முக்கியமானவை. இரண்டும் வேண்டும் என்பதே சரியானது. பணமுள்ளவர்களிடம் கெட்ட குணம் இருக்கலாம். ஆனால் வறுமையில் வாடுபவரிடம் மட்டும் உயர்ந்த குணங்கள் அனைத்தும் குடிகொண்டிருக்கும் என்று கூற முடியுமா? வறுமையிலும் செம்மையாக, நேர்மையாக வாழும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில், கொடுமையான வறுமையே தவறுக்குத் தூண்டும். பொதுவாக, வறுமை என்பதே மோசமான சூழ்நிலை. அது ஒழிக்கப்பட வேண்டும். ஆக, பணமும் வேண்டும், குணமும் வேண்டும் என்றுதான் நாம் நம் இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும். பணத்தின் மீது ஆசை கூடாது என்று சிலர் அறிவுரை வழங்கும்போது, தெருக்களிலும், ரெயில்வே நிலையங்களிலும், குடிசைகளிலும் வாழும் ஏழை மக்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இவர்களைப் பற்றி செல்வந்தர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உலகத்தில் அதிக ஏழை மக்கள் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள். உணவின்றி, மருந்தின்றி, சுகாதாரம் இன்றி ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட 20 லட்சம் குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள். லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி எட்டாக்கனியாக இருக்கிறது. இவர்களுக்கு கொஞ்சம் பணமிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இது பணக்காரர்கள் உலகம். இங்கு ஏழைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள். பணக்காரர்களுக்குப் பணம் பெரிய விஷயமில்லை. ஆனால் ஏழைகளுக்கு அதுவே உயிராதாரம். அவர்கள் பொருளீட்ட ஊக்குவிக்க வேண்டும். மனிதன் பணத்தை விரும்புகிறான். வாழ்க்கைக்குப் போதுமான வருவாய் வந்தாலும் மேலும் மேலும் பணத்தைக் குவிக்க நினைக்கிறான், குவிக் கிறான், எண்ணற்ற பொருட்களை வாங்கிச் சேர்க்கிறான். உயிருள்ள மனிதர்களைவிட உயிரற்ற ஜடப்பொருள்களை பெரிதாக மதிக்கிறான். இப்படிப்பட்ட மனிதர்கள், தாங்கள் குவித்திருக்கும் செல்வத்தில் சிறு பகுதியையாவது வறியோருக்குத் தந்து மகிழ்ந்தால் எப்படி இருக்கும்? பணம், புகழ், அழகு, அதிகாரம் ஆகியவற்றையே அனைவரும் விரும்புகின்றனர். இவை, அனை வருக்கும் கிடைக்கட்டும் என்றே நாமும் வாழ்த்துவோம். ஏனென்றால், இவை அனைத்தும் இல்லாமல் இருப்பதைவிட, இருப்பதே சிறந்தது எனத் தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் கிடைத்து விட்டால் மகிழ்ச்சி வந்துவிடும் என்று நம்புவது அபத்தமானது. ஏனென்றால், மகிழ்ச்சி என்பது முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அதை விவரிப்பது கடினமானது. ஆனாலும் இப்படி விளக்க முயல் கிறேன்... 1. பெரும் பணம் மகிழ்ச்சியைத் தரும் என்றால், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் கவலை தோய்ந்த முகங்களுடன் காத்திருப்போர் யார்? 2. அதிகாரம் பாதுகாப்புத் தரும் என்றால், அதிகாரம் உள்ளவர்களுக்கு ஏன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது? 3. அழகும், புகழும், பணமும் மிக்க பலர், சொந்த வாழ்க்கையில் தடுமாறுவது ஏன்? ஆக, பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்று சொல்ல முடியாது. நல்ல நாயை பணம் கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் அதை வாலாட்ட வைக்க அன்பும் நேசமும் வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் அன்பைக் கொடுத்தால்தான் அவர்கள் அதைத் திருப்பித் தருவர். பணம் இல்லாத மனிதன் அம்பு இல்லாத வில்லுக்குச் சமமானவன் என்று சொல்வார்கள். பணம் வேண்டும்தான். அது முக்கியமானதுதான். பணம் பெரிதல்ல என்று சொல்வதில் உண்மைத் தன்மை இல்லை. இளைஞர்கள் அவசியம் பொருளீட்ட வேண்டும். ஆனால் அது அறவழியில் வந்ததாக இருப்பதும் அதிமுக்கியம்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 10 November 2018

14. மனித உறவுகளை மதிப்போம்!

இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம். நமக்கான மிகப் பெரிய உதவியும், மிகப் பெரிய ஆபத்தும் சக மனிதர்களிடம் இருந்துதான் வரும். அது நீங்கள் சந்திக்கும் மனிதர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவைப் பொறுத்தது. நல்ல மனிதர்களிடம் ஏற்படுத்திய இனிய உறவுகள் பயன் தரும் வகையில் அமைந்துவிடும். தீய உறவுகள் நம் வாழ்வைப் படுகுழியில் தள்ளிவிடும். உறவுகள் இல்லாத நிலையில் நாம் செல்வம் அற்றவர் ஆகிவிடுகிறோம், பணம் இருந்தும் ஏழையாகி நிற்போம். உறவுகள் சூழ வாழாதவருக்கு மனமகிழ்ச்சி இருக்காது. மேலே தூக்கிப்போடும்போது அந்தரத்தில் குழந்தை சிரிக்கிறது, தந்தை பிடித்துவிடுவார், அவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு. உறவுக்கு அடிப்படையானது, நம்பிக்கை. மகனுக்கும் தந்தைக்கும் உள்ள உறவு, தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவு, ஆசிரியருக்கும் மாணவனுக்கும் உள்ள உறவு, நண்பர்களுக்கு இடையிலான உறவு ஆகிய அனைத்துக்கும் சில பொதுவான குணாதிசயங்கள் உண்டு. அவை... பரஸ்பர அன்பு. ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதை. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. மன்னிக்கும் குணம். உதவி செய்தல். இழிவுபடுத்தாமல் இருத்தல். நல்லெண்ணம். செல்வங்களைப் பகிரும் மனம். வெளிப்படைத்தன்மை. இந்தப் பண்புகளை மனதில்கொண்டு, நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள இளைஞர்கள் முயல வேண்டும். உறவுகளில் எதிர்பார்ப்புகள் இருக்கும், அவற்றை நிறைவேற்றினால் உறவு தொடரும், இல்லையென்றால் உறவு விட்டுப்போகும். நட்பு என்பது இருவழிச் சாலை. நண்பரிடம் உதவியை எதிர்பார்ப்பது போல, நாமும் நண்பருக்கு உதவ வேண்டும். அதைத்தான் வள்ளுவர், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று இலக்கணம் வகுக்கிறார். உடலை விட்டு ஆடை நழுவினால் எவ்வளவு வேகமாக கை அங்கு செல்கிறதோ அவ்வளவு வேகத்தில் நண்பனுக்கு உதவ வேண்டும் என்கிறது குறள். ஒரு நல்ல உறவின் மூலம் ஒரு மாணவன் எந்த உயர்ந்த நிலையையும் அடைய முடியும். அதற்கு ஹெலன் கெல்லர்- ஆனி சல்லிவன் உறவு சான்றாக உள்ளது. இரண்டு கண்களும் தெரியாத, காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தை ஹெலன் கெல்லர். ஆனால் அந்தக் குழந்தை தனது ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆசிரியர் மூலம் கல்வி கற்றது. தன்னம்பிக்கையை வளர்த்தது. இளநிலைப் பட்டமும், முதுநிலைப் பட்டமும் பெற்றது. பல நூல்களை எழுதியது, சமூக சேவைகளில் ஈடுபட்டது. உலகில் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராகவும் மாறியது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவு எவ்வளவு சக்தி படைத்தது என்பதைக் கவனியுங்கள். இதில், ஆனி சல்லிவனுக்கும் கண் தெரியாது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். ஹெலன் கெல்லருக்கும் ஆனி சல்லிவனுக்கும் இடையிலான உறவு 49 ஆண்டுகள் நீடித்தது. தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் ஓர் ஆதரவற்றோர் பள்ளியில் வளர்ந்த ஆனி சல்லிவனுக்கு பெர்கின் பார்வையற்றோர் பள்ளியில் லாரா பிரிட்ஜ்மேன் என்ற இன்னொரு கண் பார்வை இல்லாத ஆசிரியரின் நட்பு கிடைத்தது. அந்த உறவு, ஆனி சல்லிவனை கல்வி அறிவு பெற்றவராக ஆக்கியது. சிலர் நமது ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்ப்பார்கள், சிலர் நம்முடன் சில நிமிடங்கள் செலவு செய்ய விரும்புவார்கள், சிலர் அவர்களின் சாதனைகள் நமக்குத் தெரியவேண்டும் என்று நினைப்பார்கள், சிலர் நம்முடன் ஒரு சில மனப்பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று துடிப்பார்கள். இப்படியாக உறவினர்களும் நண்பர்களும் கேட்பதை நாம் கொடுத்தாக வேண்டும். அப்படிச் செய்தால் பிற்காலத்தில் நாம் கேட்பதை அவர்கள் நமக்குத் தருவார்கள். பணத்தால் வாங்க முடியாத அன்பையும் மகிழ்ச்சியையும் நண்பர்கள் நமக்குத் தருவார்கள். நல்ல நண்பர்கள், தங்கத்தை மண்ணில் கண்டுபிடிப்பது போல கண்டுபிடிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் நம்மைப் போன்ற கரித்துண்டுகள், காலப்போக்கில் தமக்குள் மலர்ந்த உறவால் அல்லது உரசலால் இருவரும் வைரத்துண்டுகளாக ஆகிவிட்டோம். படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்பட்டவர்களின் நட்பு என்கிறார் திருவள்ளுவர். தலைமை விமானி தன்னைக் கன்னத்தில் அறைந்து அவமரியாதை செய்துவிட்டார் என்று விமானிகள் அறையை விட்டு வெளியேறினார் உதவி பெண் விமானி. விமானம் பறந்துகொண்டிருந்தபோது அது நடந்தது. குறிப்பிட்ட விமான நிறுவனம் அந்த இரு விமானிகளையும் பணிநீக்கம் செய்தது. சக ஊழியரை அவமரியாதை செய்தது எவ்வளவு ஆபத்துக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதை உணருங்கள். அவமரியாதை செய்தால் நண்பன்கூட எதிரியாகக் கூடும். எனவே நாம் நம் சக மனிதர்களை, சக ஊழியர்களை கவனமாகக் கையாள வேண்டும். நமது வாழ்க்கைப் பயணம் முழுக்க உடனிருக்கக்கூடியவர்கள் நம் உறவுகள். கடினமான நேரங்களில் ஆறுதலும் உதவியும் அளிக்கக்கூடியவர்கள். எனவே, தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதரன், சகோதரி, நண்பர்கள் ஆகியோருடன் உங்கள் நடத்தை இப்படி இருக்கட்டும்... நன்றி சொல்லுங்கள். ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். ‘அது என் தவறுதான்’ என்று ஒப்புக்கொள்ளுங்கள். புன்னகை செய்யுங்கள். ‘உங்களை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள். சின்னச் சின்ன பரிசு வழங்குங்கள். அடிக்கடி பாராட்டுங்கள். துன்பத்தில் பங்கெடுங்கள். சிரித்துப் பழகுங்கள். பெயர் சொல்லி அழையுங்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதியுங்கள். மனித உறவுகள் விலை மதிப்பற்றது என்று நீங்கள் கருதினால், அதை உலகின் மிக விலையுயர்ந்த பொருளை பராமரிப்பது போல பத்திரமாக பராமரிக்க வேண்டும். மலிவான பொருளைப் போல பாவித்தால் அதை நீங்கள் இழக்க நேரிடும். உடைந்த கண்ணாடி ஜாடியை மீண்டும் ஒட்டவைக்க முடியாது. உறவும் நட்பும் அதுபோலத்தான். நட்பின் அஸ்திவாரம், தொடர்பில் இருப்பதுதான். அவ்வப்போது நட்பை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது கடிதம் எழுதும் பழக்கம் இல்லை. எனவே வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி மூலம் வாரம் ஒருமுறை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசிட வேண்டும். மனித உறவுகள் அவ்வப்போது பழுதுபார்க்கப்பட வேண்டும். எல்லோரிடமும் நட்பு பாராட்ட முடியாது. சிலருக்கு இயற்கையாகவே உங்களைப் பிடிக்காது. எனவே, எதிர்மறையாளர்களிடம் இருந்து விலகிவிடுங்கள். உங்களைப் பிடிக்காமல் பிரிந்துபோனவர்களை விட்டுவிடுங்கள். மனதைப் புண்படுத்திய வார்த்தைகளை உதாசீனப்படுத்துங்கள். இன்னொருவரின் அன்புக்காக ஏங்காதீர்கள். வீண் சண்டைக்குப் போகாதீர்கள். இளம் பருவத்தினர் ஒருவர் எதிர்பாலினத்தவரை விரும்புகிறார். பதிலாக அவரும் தன்னை நேசிக்கவில்லை என்றால் ஆத்திரப்படுகிறார். ஆண் என்றால் பெண் மீது அவதூறு பேசுவது, பிளாக்மெயில் செய்வது, ஆசிட் வீசுவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. சுயமரியாதை இல்லாத கோழைகள்தான் இதுபோன்ற கொடிய செயல்களைச் செய்வார்கள். நீங்கள் நேசித்தவரை சுதந்திரமாக முடிவெடுக்க விடுங்கள். அவர்கள் பரந்து விரிந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்கட்டும், நிதானமாகச் சிந்திக்கட்டும். அதன்பின் உங்களை விரும்பி வந்தால் அவர் உங்களுக்கு உரியவர் ஆவார். இல்லையென்றால் அவர் என்றுமே உங்களுக்கு உரியவர் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுங்கள். மன்னிப்பு பெரிய மனிதப் பண்பு. அது நட்பை வளர்க்க உதவும். ஒருவரது தவறுகளைப் புரிந்துகொண்டு, அவர்களது தவறுகளை மன்னித்துவிட்டால், நட்பு வளரும். உங்கள் தோற்றம் எப்படி இருந்தாலும், தொழில் எதுவானாலும் மரியாதையாக நடத்தப்பட தகுதியுள்ளவர் நீங்கள். அப்படி மரியாதை தருபவர்களுடன் மட்டும் வாழ்ந்து பழகுங்கள். மனிதனின் வாழ்க்கை மனித உறவுகளால் வரையறுக்கப்படுகிறது. நல்ல உறவுகள் எண்ணற்ற பரிசுகளை அள்ளித்தரும். அது உங்களின் பணியில் வெற்றிகள் பெற உதவும். நல்ல உறவினர்களும் நண்பர்களும் உள்ளவர்களே உலகில் நிறைவான, மகிழ்வான வாழ்க்கை வாழ்பவர்கள்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கண்கவரும் சுவர்களுக்கு பல வண்ண ‘வால்பேப்பர்கள்’

வீடுகளுக்கான ‘அவுட்லுக்’ என்பது, அதன் இன்டீரியர் டிசைனில் உள்ளதாக உள் அலங்கார வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, சுவர்களில் ‘வால் ஆர்ட்’, ‘தீம் வால் ஸ்டிக்கர்’, ‘வால் டெக்ஸ்டர்’ ஆகியவற்றின் மூலம் அலங்காரம் செய்வது தற்போதைய டிரெண்டாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ வால் பேப்பர் ஒட்டுவது வீட்டுக்கு கலை அழகுடன் கூடிய தோற்றத்தை அளிப்பதாக இருக்கும். அவற்றில் உள்ள சில வழிகளை இங்கே காணலாம்.

அறைகளின் தோற்றம்

விருந்தினர்கள் மற்றும் வீட்டில் வசிப்பவர்கள் ஆகியோர் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் விதத்தில் சுவர் அலங்கார அமைப்புகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, சுவருக்கு பொருந்தாத வண்ணம் கொண்ட அலங்காரங்கள் அறையின் தோற்றத்தை மங்கலாக மாற்றுவதோடு, குடியிருப்பவர் மன நிலையிலும் சோர்வை உண்டாக்குகின்றன.

வால் பேப்பர்கள்

வீட்டின் சில அறைகளுக்கு மட்டுமே வால்பேப்பர் பயன்படுத்தும்போது அழகாக இருக்கும். பொதுவாக, படுக்கையறைக்கு வெளிர் நிறம், குழந்தைகள் அறைக்கு விதவிதமான வண்ணப்படங்கள், கார்ட்டூன், விளையாட்டுப் படங்கள், வரவேற்பறை பகுதியில் கற்பனை வடிவங்கள் கொண்ட படங்கள், சமையலறைகளுக்கு மென்மையான ‘சீக்வன்ஸ் டிசைன்’ கொண்டவை வால்பேப்பர்கள் கச்சிதமாக இருக்கும்.

மேலும், குறிப்பிட்ட தீம் அடிப்படையிலும், சிங்கிள் டிசைன் போஸ்டர்கள், பல்வேறு வண்ணங்கள், வடிவங்களுடன் உள்ள கொலாஜ்கள் என்றும் வெவ்வேறு வகை வால் பேப்பர்கள் சந்தையில் இருக்கின்றன. குறிப்பாக, புளோரா, கிளாமர், லிவ் இன்ஸ், வால் டாப்ஸ் ஆகியவற்றோடு மினி பிரிண்ட்ஸ் என்ற சிறிய அளவு வடிவமைப்பு கொண்ட வால்பேப்பர்களும் அறைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

வால் ஆர்ட்

குறிப்பிட்ட இடத்தில் மியூரல் வேலைப்பாடுகள் அல்லது வித்தியாசமான உருவ பெயிண்ட்டிங் செய்யப்படும் இந்த முறைப்படி அறைகளின் குறிப்பிட்ட பகுதியை அழகாக மாற்றலாம். குட்டி பசங்களை படங்கள் வரைய சொல்லி அவர்களை குஷிப்படுத்தலாம்.

வால் ஸ்டிக்கர்ஸ்

வால் ஸ்டிக்கர்களை ரசனைக்கு ஏற்ப தேர்வு செய்ய இணைய தளங்களும் உதவுகின்றன. அறைகளின் பாரம்பரிய அழகுக்கு நான்-ஓவன், நவீன தோற்றத்துக்கு ஓவன், வித்தியாசமான அழகுக்கு ஹேண்ட்மேடு ஆகியவை பொருத்தமாக இருக்கும்.

பரிசோதனை அவசியம்

வால் பேப்பர் ஏதேனும் ஓரு இடத்தில் கிழிந்துவிட்டால், அதே அளவுக்கு வால் போஸ்டரை ஒட்டிக்கொள்ள இயலும். அறைகளின் சுவர்கள் வால்பேப்பர் வகைகளை ஒட்டுவதற்கு முன்னதாக சுவர்களில் எந்த பகுதியிலாவது நீர்க் கசிவு இல்லை என்பதையும் சீரான பரப்பையும் சோதித்து அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவது நல்லது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை


நகர்ப்புறங்களில் அல்லது புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சொந்த மனைகளில் வீடு கட்ட விரும்புபவர்கள் வீட்டு கடன் வசதி நிறுவனம் அல்லது வங்கிகளிடம் விண்ணப்பம் செய்வது நடைமுறை. அவ்வாறு கடன் பெற விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி நிதி ஆலோசகர்கள் குறிப்பிடுவதை இங்கே காணலாம்.

1) வீட்டு கடன் பெற்று வீடு வாங்குவதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது வீட்டு கடன் வசதி அளிக்கும் நிறுவனங்களிடம் தக்க கட்டணம் செலுத்தி கடனுக்கான முன் அனுமதி (PreApproval) பெற்று கொள்வது பாதுகாப்பானது.

2) அதாவது, வீட்டு கடனை நிச்சயம் பெற வேண்டிய நிலையில் மேற்கண்ட அனுமதி அவசியமானது. அதன் மூலம் அதிகபட்சம் கிடைக்கும் கடன் தொகை பற்றி முன்னதாகவே அறிந்து, செயல்பட வாய்ப்பாக உள்ளதோடு, கடன் விண்ணப்பம் நிராகரிப்பு என்ற சிக்கலும் ஏற்படுவதில்லை.

3) வீட்டுக்கான பிளான் வரையும் சமயத்தில் அதற்கு தோராயமாக செலவு எவ்வளவு ஆகலாம் என்பது பற்றி பொறியாளரிடம் கேட்டு, அதற்கேற்ப அறைகள் உள்ளிட்ட இதர பகுதிகளின் அளவுகளை தீர்மானித்துக்கொள்ளலாம்.

4) குறிப்பாக, வாடிக்கையாளர் வீடு வாங்க விரும்பும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதனால், வங்கி நடைமுறைகள் எளிதாக முடிவதுடன் போலி ஆவணம் போன்ற சிக்கல்களையும் தவிர்க்க இயலும்.

5) சி.டி.எம்.ஏ அல்லது டி.டி.சி.பி ‘பிளான் அப்ரூவல்’ பெற்றுள்ள மனைகளுக்கே வீட்டு கடன் அளிக்கப்படுகிறது. அதற்கான நடைமுறைகள் முடிவடைய மூன்று அல்லது நான்கு மாதங்கள் கால அவகாசம் ஆகலாம். அதனால், வீட்டு கடன் விண்ணப்பம் அளிப்பதற்கு நான்கு மாதங்கள் முன்னதாகவே சி.டி.எம்.ஏ அல்லது டி.டி.சி.பி ‘பிளான் அப்ரூவல்’ விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்.

6) கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆன வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதாக இருந்தால் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம் குறிப்பிடும் மதிப்பீட்டாளரின் அறிக்கையை பெற்று அளிக்கவேண்டும்.

7) ‘பிளான்’ பெரிதாக அமைந்து, கூடுதல் பட்ஜெட் அவசியம் என்ற நிலையில் பாண்டு பத்திரங்கள், பிக்ஸட் டெபாசிட் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு பாலிசிகள் ஆகியவற்றை சொத்து ஆவணங்களுடன் அளித்து கூடுதல் கடன் தொகை பெற வாய்ப்பு உண்டு.

8) கட்டுமான பொருட்களின் எதிர்பாராத திடீர் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் கூடுதல் நிதி முன்னேற்பாடுகள் பற்றி கவனத்தில் கொள்ளவேண்டும்.

9) வீட்டு கடன் பெறுவதற்கு வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் மனைக்கான பத்திரங்களை ஒப்படைப்பதற்கு முன்னர் தேவையான எண்ணிக்கைகளில் அவற்றை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 3 November 2018

13. எல்லாம் தரும் ‘நேரம்’

எல்லாம் தரும் ‘நேரம்’ | முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். | தினமும் உலக மக்கள் அனைவருக்கும் ஒரே அளவில் கிடைப்பது, நேரம் என்ற செல்வம். இந்தச் செல்வத்தை ஒருவர் பயனுள்ள வகையில் உபயோகிக்கலாம், பாழாக்கவும் செய்யலாம். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டவர் வாழ்வில் வெல்வார், பாழாக்கியவர் பின்னாளில் வருந்துவார். நம்முடைய இலக்கைச் சென்றடைய நேரம் என்ற மூலதனத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது முக்கியம். எனவே, நேரத்தை மதியாதவர்கள், இனியாவது சுதாரித்துக்கொண்டு அதை உருப்படியாக உபயோகியுங்கள். ‘நேரம்’ என்ற செல்வம் அதிகம் இருப்பவர்கள் வல்லமை படைத்தவர்கள் அல்லது பணக்காரர்கள் என்றுகூடச் சொல்லிவிடலாம். 80 வயது கோடீஸ்வரர் ஒருவர் மரணப் படுக்கையில் கிடந்தால் அவரை ஏழை என்றுதான் சொல்ல முடியும். பொன்னும், மண்ணும், பொருளும், அதிகாரமும், உறவும் இருந்தும் நேரம் இல்லை என்பதால் அவரை ஏழையாகவே கருத வேண்டும். பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தோன்றி 1370 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஓடிவிட்டன. பூமி சூரியனை ஒருமுறை சுற்றும் காலம் ஓர் ஆண்டு. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் அதிகபட்ச சராசரியாக 80 முறை சூரியனைச் சுற்றி வரலாம். ஒரு மனிதர், மறைவுக்குப் பின் அணுக்களாகவும் மூலக்கூறுகளாகவும் மாறிவிடுவார். அதற்கு மேல் மனிதப் பிறப்பை உயர்த்திப் பிடிப்பதற்கும், அவர் இன்னோர் உயிராகப் பிறப்பார் என்று கருதுவதற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை. நமது உயிர் நிரந்தரம், இந்த உலக வாழ்க்கை தற்காலிகமானது என்று நினைத்து வாழ்க்கையை வாழ்பவர்கள் நிகழ்காலத்தின் அருமையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். இது ஒரு தற்காலிகப் பயணம்தான் என்பதால் பின்னர் பெரிய வாழ்க்கை, நிரந்தர வாழ்க்கை ஒன்றைச் சிறப்பாக வாழலாம் என்று மெத்தனமாக இருப்பார்கள். இது நல்ல மனநிலை அல்ல. குழந்தை எழுந்து நிற்க 8 மாதம் தேவைப்படலாம். மழலை மொழி பேச 18 மாதம் தேவைப்படலாம். அது போலத்தான் நீட், ஐ.ஐ.டி. ஜே.இ.இ. தேர்வுகளும். அவற்றுக்கு கால அவகாசம் வேண்டும். நாம் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் நேரம் நமது வாழ்க்கையின் பொன்னான நேரம் என்பேன். உலக வாழ்க்கைக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் நேரம் சிறந்த நேரமாகும். ரிச்சர்ட் பீமென் என்ற விஞ்ஞானி, ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்ற அணுகுண்டு தயாரிக்கும் திட்டக் குழுவில் இருந்தவர். நோபல் பரிசு பெற்றவர். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சிந்தனையாளரும் கூட. அவரின் பேட்டியை யூ-டியூப்பில் பார்த்தேன். ‘உங்களுக்கு நோபல் பரிசு கிடைத்தது பெருமையாக இருந்ததா?’ என்பது கேள்வி. அதற்கு அவர், ‘நோபல் பரிசை நான் பெரிதாக நினைக்கவில்லை. நோபல் பரிசு கமிட்டியில் இருந்த ஒருவர், பெரும் விஞ்ஞானி என்று இன்னொருவரை முடிவு செய்து வழங்கப்பட்ட வெகுமதியில் சிறப்பு இல்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அதில் ஏற்பட்ட தோல்விகள், பின்னர் எடுத்த புது முயற்சிகள், அதற்குக் கிடைத்த வெற்றிகள், அணுகுண்டு தயாரித்தது, அதனால் உலகப் போர் நின்றது, இந்த அனுபவங்கள் அனைத்தும்தான் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தந்தன’ என்றார். கடினப் பயிற்சி செய்த நேரத்தின் அருமையும் பெருமையும் எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். இது நீங்கள் பயிற்சி எடுக்கும் தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த அரிய காலத்தை உங்களது திறமைகளைக் கூர்மையாக்கப் பயன்படுத்துங்கள். அறிவியலையும், மொழியையும், கணினியையும், மனிதர்களையும் ஆழமாகக் கற்றுக்கொள்ளுங்கள். இவை அனைத்தும் உங்கள் சொத்து மதிப்பை பல மடங்கு அதிகரிக்கும். பீமென் சொன்னதைப் போல, இவை பிற்காலத்தில் உங்களுக்கு பெரும் மனமகிழ்வை ஏற்படுத்தும். இன்றைய நாளை மட்டுமே சக்திவாய்ந்த நாளாகக் கருத முடியும். நேற்றைய தினம் முடிந்துவிட்டது, நாளைய தினம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. இந்த நாள் நம் கையில் உள்ளது. இதை நாம் சிறந்த செயல்களைச் செய்யப் பயன்படுத்த முடியும். நமது இன்றைய தினத்தால், நாளைய தினத்தை செம்மையாக மாற்ற முடியும். எனவேதான், இன்றைய தினத்தை நமக்குக் கிடைத்த பரிசு என்கிறோம். நாம் நம் ஒவ்வொரு நிமிடத்தையும் கவனத்தில் கொண்டால், மணியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். கடிகாரத்தைப் பார்க்க வேண்டாம். கடிகாரம் செய்வதை நாமும் செய்தால் போதும். கடிகார முட்கள் போல நகர்ந்துகொண்டே இருங்கள். சிலர் இறந்தகால தோல்விகளை நினைத்து வருந்துகிறார்கள். சிலர் எதிர்காலத்தில் நிகழப்போகும் ஆபத்தை எண்ணி அஞ்சுகிறார்கள். அப்படி எதிர்பார்த்த ஆபத்துகள் நிகழாமலே போய்விடலாம். ஆனால் அவற்றை நினைத்தே கவலைப்பட்டு நிகழ்காலத்தை வீணடிக்க வேண்டுமா? நிகழ்காலத்தில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. அது பிரகாசமான எதிர்காலத்துக்கு நம்மை இட்டுச் செல்லும், இனிமையான இறந்த காலத்தை நமக்கு விட்டுச் செல்லும். துயர காலம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நோய்வாய்ப்பட்ட காலம், தோல்வியில் துவண்ட காலம், மோசமானவர்களால் ஏமாற்றப்பட்ட காலம், வீண்பழி சுமத்தப்பட்ட காலம், முதலீடு இழப்பு ஏற்பட்ட காலம், நம்பியவர்கள் கைவிட்ட காலம் போன்றவை பொல்லாத காலம் என்பதில் ஐயமில்லை. ஆனால் நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பெரிய படிப்பினைகள் எனலாம். அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால், பொல்லாத காலமும் பொன்னான காலமாகிவிடுகிறது. பொழுதுபோக்கு தேவைதான். ஆனால் நமது முதல் பணி எதுவோ அதற்கே அதிக நேரம், பணம், மனதை செலவு செய்தல் வேண்டும். நமது சிந்தனையை அதுதான் ஆக்கிரமிக்க வேண்டும். பொழுதுபோக்கை சில காலம் புறக்கணித்தால், மூளைக்கு விடுதலை கிடைக்கும். எடுத்த வேலையிலும் கவனம் செலுத்த முடியும். ஒரு மனிதனுக்கு நீங்கள் தரும் பெரிய பரிசு, நேரம் என்பதை உணருங்கள். பணம் கொடுத்தால், அந்தப் பணம் திரும்பிவராவிட்டாலும் வேறு வழிகளில் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் ஒருவருக்குக் கொடுத்த நேரம் திரும்பி வராது. எனவே யார் யாருடன் எவ்வளவு நேரத்தை, எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள். பிறரது பொன்னான நேரத்தை நீங்களும் வீணடிக்காதீர்கள். அது அவருக்குச் செய்யும் பெரிய தீமை என்பதை உணருங்கள். நேரத்தை நிர்வகிக்கத் தெரியாதவருக்கு வேறு எதையும் நிர்வகிக்கத் தெரியாது. ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பை இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றார் சார்லஸ் டார்வின். நேரம் விமானத்தைப் போல பறக்கும். ஆனால் அந்த விமானத்தின் பைலட் நாம்தான். நமது நேரத்தை நாம்தான் நிர்வாகம் செய்ய வேண்டும். நேர நிர்வாக ரகசியங்கள்: எது அவசரமானதோ அதைச் செய்யுங்கள். அன்றன்று செய்ய வேண்டியவற்றைப் பட்டியல் இடுங்கள். பிறருக்கு முறையாகப் பணி ஒதுக்கீடு செய்யுங்கள். பயனில்லாத இடத்துக்கு போக மறுத்துவிடுங்கள். கவனச்சிதறல்களுக்கு இடம் தராதீர்கள். காரியத்தில் கவனமாயிருங்கள். நாளைக்கு முடிக்க வேண்டியதை இன்றே முடியுங்கள். முதலில் உங்களை நிர்வகியுங்கள். அதுவே உண்மையான நேர நிர்வாகம். நீங்கள் வாழ்க்கையை நேசிப்பவராக இருந்தால், உங்களது இந்த நிமிடத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் விரும்பிய வாழ்க்கையைத் துவங்க இந்த நிமிடமே சரியானது. வாழ்க்கை நிமிடங்களால் உருவாக்கப்படுகிறது என்றார், புரூஸ் லீ. நேரத்தின் மதிப்பை உணர்வோம், நிலையான வெற்றி பெறுவோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தை விளக்கும் இந்தப் பாடலில் இருந்து தோன்றிய சிறிய கற்பனைக் கதை இது. போர் இன்னும் முடியவில்லை. ஆனால் போரிட்டு வெல்வதற்கு, எதிரிகள் எவரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. பாண்டியர்களின் போர்த்திறனால் எட்டுதிசைக்கும் தெறித்து ஓடிய எதிரி களைப் பற்றி, ஒற்றறிய சென்ற வீரனும் திரும்பி வந்துவிட்டான். அவன் சொன்ன தகவலும் கூட, ‘நெடுந்தொலைவில் கூட எதிரிகளின் தடங்கள் இல்லை. அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்’ என்பதாக இருந்தது. பிஞ்சுக் கரங்களுக்கு உரியவன் என்ற எக்காளத்துடன், தன் நாட்டின் மீது போர் தொடுத்து வந்த கயவர்களை எட்டாத தூரத்திற்கு விரட்டியடித்த மன்னனுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை. பதினான்கு அகவையில் இத்தனை போர்த் திறன், பகைவர்களுக்கு அஞ்சாத நெஞ்சம், வாளும் வில்லும் வீசும் வேகம், நொடிப்பொழுதில் எதிரிகளை மடியவைக்கும் பலம்.. இவை அனைத்தும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மட்டுமே உரித்தானது. கோபம் அடங்காத நெடுஞ்செழியன், ‘மருதரே! நம் படைபலம் பார்த்து பயந்து ஓடிய பேடிகள் எவனவன்? வரிசைப்படுத்தி அழகாய் கூறுங்கள் பார்ப்போம்?’ போர்க்களமான மதுராபுரியின் வாசலில், லட்சோப லட்சம் பாண்டிய படைவீரர்களுக்கு முன்னால், முதல் வீரனாக நின்று கொண்டிருந்த படைத்தளபதி மருதரிடம் பெருமையாக விசாரித்தார், அந்த இளம் மன்னன். ‘ஏழு பேர் அரசே! சோழன் பெருநற்கிள்ளி, சேரமான் சேரல் இரும்பொறை, கொஞ்கு நாட்டை ஆளும் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான் மற்றும் வேளிர் பொருநன். இவர்கள் ஏழு பேர் தங்கள் படை திரட்டி வந்துள்ளனர்’ எதிரிகளின் பட்டியலை அடுக்கினார் படைத்தளபதி மருதர். அதைக் கேட்டதும் பலமான சிரிப்பு பாண்டியன் நெடுஞ்செழியனிடம் இருந்து வெளிப்பட்டது. ‘பேடிகள்! பாண்டியன் படைபலத்தை அறியாமல் பேராசைப்பட்டு வந்துள்ளனர். இருக்கட்டும்! அந்த பேடிகள் என்னை பற்றி ஏதேதோ கூறினார்களாமே? அதையும் கூறுங்களேன் தளபதியாரே!’ என்றார் மன்னர். ‘அய்யோ மன்னா! என்னால் ஒரு போதும் அது முடியாது! என்னை மன்னியுங்கள்! அவர்கள் பேசிய வார்த்தைகளுக்கு, அவர்கள் அனைவரும் என் கண்ணில் பட்டிருந்தால், ஏழு தலைகள் உங்கள் பாதங்களில் காணிக்கையாய் விழுந்திருக்கும். அதற்குள் பயந்து ஓடிவிட்டார்கள். அந்த பேடிகள் தங்களை இழிவாய் பேசியதை என்னால் திரும்ப கூற இயலாது மன்னா’ தளபதியார் மன்றாடினார். ‘போகட்டும். இவன் சிறுவனாக உள்ளானே! காலிலே கிண்கிணிச் சதங்கை அணிந்திருப்பேன்! மார்பிலே ஐம்படை தாலி இன்னும் புனைந் திருப்பேன்!! என் தாயிடம் அருந்திய பால் கூட இன்றே மறந்து, உணவு உண்ண ஆரம்பித்திருப்பேன்!! ஆகையால் இந்த சிறுவனை எளிதில் தூக்கி எறிந்துவிட்டு பாண்டிய நாட்டை கைப்பற்றிவிடலாம் என்றெல்லாம் தானே எண்ணம் கொண்டு வந்திருந்தனர், அந்த கோழைகள்? மதுராபுரி என் தாய்! அவளை சீண்டியவனுக்கு, பாண்டியன் தண்டனை அளிக்காமல் இருக்கலாமா?’ சொல்லுங்கள் தளபதியாரே.. மன்னனின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும், மருதரின் கண்களின் ஒளி பரவியது. அவர் மன்னை ஆதரித்து ‘ஆம்’ என்று சொல்வதற்குள், நெடுஞ்செழியனிடம் இருந்து உத்தரவுகள் பறந்தன. ‘தளபதியாரே! நம் படைகள் புறப்படட்டும்! செல்லும் வழியிலே நம்மை சீண்டிவிட்டு, புறமுதுகிட்டு ஓடிய எதிரிகள் அனைவரும், தத்தம் இடத்திலேயே வீழ்த்தப்பட வேண்டும்’ என்று ஆக்ரோஷமாய் கட்டளையிட்டார் நெடுஞ்செழியன். பின்னர் சற்றே புன்னகைத்தபடி, ‘தளபதியாரே! சற்று வித்தியாசமாய் இந்தப் போர் இருக்கச் செய்வோமா?, நம் பெரும்படை, எதிரிகள் ஒவ்வொரு வனின் இடத்தில் நுழையும்போது, நம் மருதப் பறை விண்ணைப் பிளக்க வேண்டும். உற்சாகமூட்டும் மருதப் பறையின் இசையில் மயங்கியே, நாம் போரிட வேண்டும்; எதிரிகள் மடியவேண்டும். நம் பறை கேட்டு உயிர் துறப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?’ தளபதியார் உட்பட பாண்டியப் படை முழுவதும் மன்னனின் வார்த்தை களைக் கேட்டு குதூகலித்துக் கொண்டு புறப்பட்டது. இளைஞனான, மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன், தன்னை சிறுவனென்று எண்ணி எள்ளி நகையாடியபடி போரிட வந்த சேரன், சோழன், ஐம்பெரும் வேளிர் ஆகிய ஏழு மன்னர்களையும் அவரவர் இடத்திற்கே விரட்டிச் சென்று போரிட்டான். மருத பறையின் இசை பாண்டியப் படையை வெறியேற்ற, அந்த 7 மன்னர்களின் காதல் மகளிர் வெட்கத்தால் உயிர் விடும் வகையில் அவரவர் இடமான உறையூர், வஞ்சி, மிழிலை கூற்றம் மற்றும் முத்தூர் கூற்றம் பகுதிகளுக்கே சென்று வீழ்த்தினான் பாண்டிய மன்னன். பின்னர் உழிஞை மாலை சூடி மதுராபுரி திரும்பினான். அவனே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts