உங்களை கணித ‘ஜீனியஸ்’ ஆக்கும் அப்ளிகேசன்கள்!

கணிதம் உங்களில் சிலருக்குப் புதிர். சிலருக்கு புத்துணர்ச்சி. கணிதம் புரியாதவர்களை குழப்பிவிடும். விரும்பி படிப்பவர்களின் மூளையை தூண்டிவிடும். அறிவியலின் அடிப்படைகளில் கணிதமும் ஒன்று. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் கணிதத்தை விளையாட்டுடன் விறுவிறுப்பாக கற்றுத்தரும் பல அப்ளிகேசன்கள் வந்துவிட்டன. உங்களுக்கு கணிதம் பிடிக்காவிட்டால்கூட கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அவை தூண்டிவிடும். அதே நேரத்தில் கணிதத்தை விரும்புபவர்களை மேலும் `ஜீனியஸ்' ஆக மாற்றக்கூடிவை. சில பயனுள்ள கணித அப்ளிகேசன்களை பார்ப்போமா?

கவுன்டிங் கேட்டர்பில்லர் (counting caterpillar):

தொடக்க கல்வியில் அடியெடுத்து வைக்க இருக்கும் மழலைகளுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எண்களை வரிசைப் படுத்தி கூறுவதற்கும், சிறிய கணக்குகளை செய்வற்கும் உதவியாக இருக்கும். இது பல வண்ணங்களுடன் கண்ணை கவரும் விதத்தில் இருப்பதால் குழந்தைகள் ஆர்வமுடன் கணிதம் கற்பார்கள்.

மேத் லேர்னிங் சென்டர் (math learning center):

கல்வியில் நுழையும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘மேத் லேர்னிங் சென்டர்’ செயலி அமைந்துள்ளது. இதனுடன் 10 இலவச செயலிகள் இணைப்பாக கிடைப்பது சிறப்பு. இதில் உள்ள கணித மாதிரிகள் கற்பித்தலில் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் உள்ளது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை எளிய விதத்தில் மாணவர்கள் கற்க உதவும்.

ஸ்பிளாஷ் மேத் (splash math) :

கணிதத்தின் பல பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான செயலி. இது கற்பித்தலில் எளிமையினையும், இனிமையினையும் கொண்டது. கணிதங்களை செயல்முறை பயிற்சி பெறும் வசதியும் கொண்டது. இது அடிப்படை கணக்குகள் மட்டுமின்றி வடிவியல், காலம், பணம் போன்றவற்றை பற்றி கணக்குகளையும் உள்ளடக்கியது. இந்த செயலியும் தொடக்க கல்வி பயிலும் மாணவர்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேத் ஸ்லைட் (math slide):

மற்ற செயலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது மேத் ஸ்லைட். இது மற்ற செயலிகளை போல் வெறும் கணக்குகளாக அல்லாமல், 10 வகையான இலவச விளையாட்டுகளை வழங்குகிறது. ஒவ்வொரு விளையாட்டும் பிரத்யேகமாக கணித கற்பித்தலுக்கென்றே வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ரெப்ளெக்ஸ் மேத் (reflex math):

குழந்தைகளுக்கு கணிதம் கற்பிக்கும் செயலிகளில் இது ஒரு சிறந்த செயலி. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை மாணவர்கள் இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் கற்கும் எளிமையான வழிகளை கற்றுத் தருகிறது. மாணவர்கள் எளிதில் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளையும், வழிகளையும் சொல்லித் தருகிறது. சில கணித விளையாட்டுகளையும் இணைப்பாக வழங்குகிறது. இந்த வழிமுறைகள் குழந்தைகள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

டிவிஷன் வித் இப்பிள்ஓப்பிள்

கணித வினா-விடை புதிராக அமைந்த அப்ளிகேசன் இது. கொள்குறி விடைகளைக் கொடுத்து ஏராளமான கணிதப் புதிர்களை கொண்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பயனுள்ள அப்ளிகேசன்.

மேத் பேக்கரி

புதிர் விளையாட்டாக கணித அறிவை வளர்க்கும் அப்ளிகேசன் இது. சின்னச் சின்ன புதிர் விளையாட்டாக ஒவ்வொரு ‘லெவல்’களையும் கடந்து செல்ல வேண்டும். பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்களும் விளையாடலாம். கணித அறிவு மிகுந்தவர்களை இந்த அப்ளிகேசன் ரொம்பவே கவர்ந்துவிடும்.

இதேபோல அமைந்த மற்றொரு அப்ளிகேசன் ‘கேசுவல் குயிக் மேத்ஸ்’ (Casual Quick Maths) இதிலும் நீங்கள் வெற்றிகளை குவித்து அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

எலிபன்ட் லேர்னிங் (Elephant Learning)

மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கணித அப்ளிகேசன் இது. 21 வகை விளையாட்டுகளை உள்ளடக்கிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உயிரினங்களின் கதாபாத்திரம் வழியே எளிமையாக கணிதம் போதிக்கிறது.

ராக்கெட் மேத்

வித்தியாசமான கணிதப் புதிர்களை கொண்டிருப்பதுடன், சீக்கிரமாக அதற்கு விடை கண்டுபிடிக்க வழிகளையும் சொல்லித் தருகிறது இந்த அப்ளிகேசன்.

கான் அகாடமி

வீடியோ டுட்டோரியலாக அமைந்த அப்ளிகேசன் இது. கணிதத்தின் அனைத்துப் பகுதிகளையும் எளிமையாக விளக்கி இருக்கிறார்கள். வேறு பாடங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

மேத்ஸ் பார்முலாஸ் பிரீ ( Maths Formulas Free)

பள்ளி முதல், பல்கலைக்கழகம் வரையிலான கணிதப் பாடங்களைக் கொண்டது. கணித விதிகளின்படி எப்படி ஒவ்வொரு கணக்கையும் விடை காண்பது என்பது தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நிறுவனத்தால் வடிவமைக்கபட்ட இந்த அப்ளிகேசனில் மற்ற பாடங்களையும் படிக்க முடியும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments