‘டிரை கிளீனிங்’ பற்றி தெரியுமா?

உங்கள் பள்ளிச் சீருடையில் பேனா மை கறை, குழம்பு கறை படிந்திருந்தால் அம்மா துவைத்துத் தரும்போது அவை நீங்கிவிடும். ஆனால் சோப்பு கொண்டு அகற்ற முடியாத பல்வேறு கறைகளை நீக்குவதற்கு வெவ்வேறு சலவை முறை இருக்கிறது. அவற்றில் ஒன்று ‘டிரை கிளீனிங்’. இதை தமிழில் ‘உலர் சலவை’ என்று கூறலாம். இதை ‘பெட்ரோல் வாஷ்’ என்றும் அழைப்பார்கள். இது பற்றி அறிய வேண்டுமானால், நாம் சலவை முறையைப் பற்றிய பழைய வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் இன்றளவும் ஆறு, ஏரி, குளங்களுக்குச் சென்று துணியை சலவை செய்வது வழக்கமாக உள்ளது. சிறிது காலத்திற்கு முன்புவரை வெள்ளாவியில் வெளுப்பது ஒரு சலவை முறையாக இருந்தது. உப்புகலந்த உவர் மண்ணில், ஈரத்துணியைப் புரட்டி, அதை வெள்ளாவி எனப்படும் ஒருவகை அடுப்பில் வைத்து வேகவைப்பார்கள். அப்போது உவர்மண்ணில் உள்ள ரசாயனங்கள் துணியில் உள்ள கறைகள், எண்ணெய்ப் பிசுக்கை நீக்கிவிடும். பின்னர் இதை நீரில் அமிழ்த்தி கசக்கிப்பிழிந்து காய வைத்து தருவார்கள். சோப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பின், கடினமான இந்த வெள்ளாவிமுறை மறைந்துபோனது. சோப்பைத் தொடர்ந்து டிடர்ஜெண்ட் எனப்படும் சலவைப் பொடிகள் பயன்பாட்டிற்கு வந்தன. இவையும் நீருடன் சேர்ந்து துணியில் உள்ள கறைகளை நீக்கின. இவற்றைப் பயன்படுத்தி எளிதாக துணிகளை வெளுத்துத் தரும் லாண்டரி கடைகள், சலவை தொழிற்சாலைகள் தோன்றின. பட்டுத்துணி மற்றும் சில செயற்கை இழை துணிகள் இந்த சலவை முறைகளில் பாதிப்படைந்தன. இதற்கு மாற்றுவழிகளை ஆராய்ந்த விஞ்ஞனிகள் உருவாக்கியதுதான் ‘டிரை வாஷிங்’ எனும் உலர் சலவை முறை. இதை கண்டுபிடித்தவர் பிரெஞ்சு நாட்டைச்சேர்ந்த ஜீன் பாப்டிஸ்ட் ஜாலி என்பவராவார். சாயப் பட்டறை தொழிலாளியான இவர் எதிர்பாராத நிகழ்வால் இந்த சலவை முறையை உருவாக்கினார். சொல்லப்போனால், அவரது வீட்டு வேலைக்காரிதான் இந்த கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரி. 1825-ம் ஆண்டில் ஒருநாள், இவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரி, தவறுதலாக எண்ணெய் விளக்கை கவிழ்த்துவிட்டார். அதில் இருந்த டர்பண்டைன் எண்ணெய் மேஜைவிரிப்பில் கொட்டிவிட அவள் பயந்துபோனாளாம். அதை எஜமானருக்குத் தெரியாமல் மூடி மறைக்க எண்ணெயை துடைத்தபோது மேஜைவிரிப்பு கறைகள் நீங்கி சுத்தமாகியிருக்கிறது. இதை அறிந்த ஜாலி, டர்பண்டைன் எண்ணை மூலம் புதிய சலவை முறையை உருவாக்கலாம் என முயற்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். கடினமான கறைகளை அது நீக்கியதால் அக்கம்பக்கத்தில் இவரது சலவை முறை பரவியது. விரைவில் நாடு கடந்து இங்கிலாந்திலும் இந்த முறை பரவத் தொடங்கியது. நகர வீதிகளில் ‘டிரை கிளீனிங்’ முறையில் சலவை செய்பவர்கள் பெருகி இருந்தார்கள். டிரைகிளீனிங் முறையில் தண்ணீர் பயன்படுத்துவதில்லை. டர்பண்டைன் எண்ணெயில் சலவை செய்தபோது கறைகள் நீங்கினாலும் ஒருவித வாசனை துணியில் வீசியது ஒரு குறைபாடாக இருந்தது. இது எளிதில் தீப்பிடிக்கக்கூடியது என்பதும் மற்றொரு பின்னடைவாக இருந்தது. எனவே இதற்கு மாற்றுப் பொருள் பற்றிய ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அவர்கள் நாப்தலின், பென்சைன் போன்றவற்றை பயன்படுத்தினார்கள். இவையும் கறைகளை நீக்கினாலும், ஒருவித நெடியை பரப்பின. மண்ணெண்ணெய் (கிருஷ்ணாயில்) பயன்படுத்தியும் இதே நிலைதான் நீடித்தது. வாசனை வராமல், தீப்பிடிக்காமல் சலவை செய்யும் பெட்ராக்ளோரைடு வேதிப்பொருளை ஜெர்மனியைச் சேர்ந்த லுட்விக் ஆந்தலின் கண்டுபிடித்தார். ஆனால் இதை முகர்ந்தால் உயிரை பறிக்கக்கூடியது என்பது அதன்குறைபாடாக இருந்தது. 1918-ல் கடின முயற்சிகளுக்குப்பின் டிரைகுளோரோதலின் என்ற ரசாயனப்பொருள் உலர் சலவைக்குப் பயன்படுத்தப்பட்டது. இது நீண்டகாலம் பயன்பாட்டில் இருந்தது. இப்போது டிரைகிளீனிங் செய்ய பரவலாக பயன்படுத்தப்படும் ரசாயனப்பொருள் பெர்குளோரோதலீன் என்பதாகும். இது வாசனை தருவதில்லை, தீப்பிடிப்பதில்லை, உடலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. கறைகளை நன்றாக நீக்கித்தந்துவிடும். இதுஒரு பெட்ரோலிய உபரிப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இதற்கு ‘பெட்ரோல் வாஷ்’ என்ற பெயரும் ஏற்பட்டது!

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments