Friday, 30 November 2018

16 தரணிக்குத் தலைமை தாங்கு!

வரலாற்றில் சில இந்தியர்கள் உலகுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார்கள். புத்தர் ஆன்மிகத்திலும், அசோகர் அரசாட்சியிலும், சாணக்கியர் ராஜதந்திரத்திலும், காந்தி அகிம்சையிலும் உலகத் தலைமை வகித்திருக்கிறார்கள்.

இன்றும் இந்தியர் சிலர் உலக நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குகிறார்கள். உதாரணமாக...

சுந்தர் பிச்சை- முதன்மை நிர்வாக அதிகாரி, கூகுள்.

சத்ய நாதெள்ளா- தலைமை நிர்வாக அதிகாரி, மைக்ரோசாப்ட்.

சஞ்சய் ஜா- முதன்மை நிர்வாக அதிகாரி, குளோபல் பவுண்டரீஸ்.

இந்திரா நூயி- தலைமை நிர்வாக அதிகாரி, பெப்சி.

உலகளாவிய நிறுவனத்தை நடத்திச் செல்லும் தகுதியும், திறனும், மனநிலையும் கொண்ட இவர்கள், பிரச்சினைகளை பெரிதாகப் பார்க்கமாட்டார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே முயல்வார்கள். உச்சத் தலைமைப் பொறுப்புக்கு உலகச் சந்தையில் அதிக மதிப்புண்டு. எனவேதான் இவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் சம்பளமாகத் தரப்படுகிறது.

இவர்களிடம் மட்டுமல்ல, ராணுவத் தளபதி, கார்ப்பரேட் மருத்துவமனை நிறுவனர், கலெக்டர், கிரிக்கெட் அணி கேப்டன், தலைமையாசிரியர் என்று தலைமை தாங்குவோர் அனைவரிடமும் நல்ல தலைமைப் பண்பு இருக்கிறது.

ராணுவத் தளபதிக்கு தலைமைப் பண்பு வேண்டும் என்றால், ராணுவ வீரனுக்கு அது வேண்டுமா? வேண்டாமா? மாணவ தலைவனுக்கு தலைமைப் பண்பு வேண்டும் என்றால், மற்ற மாணவர்களுக்கு தலைமைப் பண்பு வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இந்தக் கேள்விகளுக்கான விடைகளில், ‘தலைமை’ என்ற வார்த்தைக்கான உண்மையான பொருளைக் காண முடியும். இதைப் புரியவைக்க ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

அந்த விமானப் படைத் தளபதிக்கு ஒரு விமானப் படை வீரர் புன்னகையுடன் சல்யூட் அடிப்பது வழக்கம். ‘‘உங்களுக்கு என்னை முன்னதாகத் தெரியுமா?’’ என்று கேட்டார் தளபதி. உடனே அவ்வீரர், ‘‘ஆமாம் அய்யா. 20 ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் போர் விமானி, நான் உங்கள் உதவியாளர். அப்போதுகூட ஒரு விமான விபத்து நடந்தது’’ என்றார்.

‘‘ஆமாம்... நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் பாராசூட்டில் குதித்து உயிர் பிழைத்தேன்’’ என்றார் தளபதி.

‘‘அப்போது நீங்கள் பயன்படுத்திய பாராசூட்டை கவனமாகத் தயார் செய்து விமானத்தில் சரியாகப் பொருத்தியது நான்தான் அய்யா’’ என்றார் அந்த வீரர்.

அதைக் கேட்ட விமான தளபதி ஒரு நிமிடம் அங்கேயே நின்று யோசித்தார். ‘இந்த வீரர் அன்று ஒரு சிறிய தவறு செய்திருந்தாலும் அந்த பாராசூட் விரிந்திருக்காது, என் உயிர் போயிருக்கும்’ என்று நினைத்து அந்த வீரரைக் கட்டியணைத்து, ‘‘நன்றி, மிக்க நன்றி. அந்த உதவியை மறக்கமாட்டேன்’’ என்று சொன்னார் தளபதி.

பாராசூட்டை தயார் செய்யும் பணியை அவ்வீரர் சிரத்தையோடு செய்ததால் தளபதி தப்பித்தார். இதற்குப் பெயர்தான் தலைமை. தலைமை என்பது பதவி அல்ல. அது செயல். அந்த செயலைச் செய்ய தலைமைப்பதவி தேவையில்லை.

தொண்டர்களை ஒன்றிணைத்து வழிநடத்துவதும், வழிகாட்டுவதும், வழியை உருவாக்குவதும், மற்றவர்களுக்கு வழிவிடுவதும் மட்டும் தலைமை அல்ல, தனது பாதையை தானே உருவாக்கி அதில் தனியே பயணிப்பவனும் தலைவன்தான். தனக்கு தனிப்படை இல்லை என்றாலும், படைக்கலன் இல்லை என்றாலும் அவன் தலைவன்தான்.

சாதாரணப் பதவியிலும் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியவர்கள் சாதனைகளைப் புரிந்துள்ளனர். பூமியில் இருந்து சூரியனுக்கு உள்ள தூரம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வெள்ளிக்கிரகம் சூரியனைச் சுற்றிப் பயணிக்கும் பாதையை பூமியின் பல இடங்களில் இருந்து பதிவு செய்ய வேண்டும். அதற்கு, கோணவியல் என்ற கணிதம் கையாளப்பட்டது.

தென் பசிபிக் கடல் பகுதியில் அதைப் பதிவு செய்ய 1769-ம் ஆண்டு கேப்டன் தாமஸ் குக் என்பவரை தஹிதி என்ற குட்டித்தீவுக்கு அனுப்பி வைத்தனர். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஜேம்ஸ் லிண்ட் என்ற டாக்டர் ஒன்றைக் கவனித்தார். கடல் வீரர்களுக்கு பல் விழுவது, ஊனில் ரத்தம், தோல் தடிப்பு, பசியின்மை போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டன.

இது எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய லிண்ட் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். ஒரு சிலருக்கு மட்டும் எலுமிச்சம்பழச் சாறு வழங்கினார். அதைப் பருகிய கடல் வீரர்களுக்கு நோய் அறிகுறிகள் நீங்கிவிட்டன. ஆக, எலுமிச்சையில் இருக்கும் ஒரு சத்தின் பற்றாக்குறையால்தான் அந்த ‘ஸ்கர்வி’ நோய் ஏற்படுகிறது என்று ஜேம்ஸ் லிண்ட் கண்டுபிடித்தார். ஸ்கர்வி நோயால் பல லட்சம் கடல் வீரர்கள் இறந்த அக்காலத்தில் இது பயனுள்ள கண்டுபிடிப்பாகத் திகழ்ந்தது. லிண்ட் கப்பலின் தளபதி அல்ல, ஆராய்ச்சியாளரும் அல்ல. சாதாரண மருத்துவர்.

அவரைப் போல, தமது பணிகளை ஈடுபாட்டுடன் செய்து முடிப்பதுதான் தலைமைப் பண்பு. ‘நம்மால் பிரமாதமான செயல்களைச் செய்ய முடியாது. ஆனால் சிறிய செயல்களை பிரமாதமாகச் செய்ய முடியும்’ என்றார், அன்னை தெரசா அம்மையார்.

ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி இது... ‘உங்களது பேச்சைக் கேட்டபின் எனக்கு பதவி ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. உலகிலேயே மிகப் பெரிய பதவி எது? அந்தப் பதவிதான் எனக்கு வேண்டும்’ என்றார். அவரிடம், ‘நீங்கள் தற்போது என்ன படிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்’ என்றார். ‘அந்தப் பதவிதான் உங்களைப் பொறுத்தவரை இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பதவி’ என்றேன். ஒட்டுமொத்த மாணவ, மாணவியரும் ஆரவாரித்தார்கள்.

மாணவராக இருக்கும் உங்களுக்கு ஐந்து பாடங்கள் உண்டு. அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஐந்து ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் மேலாண்மை செய்ய வேண்டும். ஐந்து நண்பர்கள், ஐந்து எதிராளிகள், ஐந்து உறவினர்கள் என்று அனைவரையும் நிர்வாகம் செய்ய வேண்டும். ஆக, உங்கள் வாழ்க்கை என்பதும் ஒரு நிறுவனம்தான், அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நீங்கள்தான்.

முந்தைய தலைமுறையை விட வாய்ப்புகள் அதிகம் நமக்கு. நமது தந்தையின் தலைமையை விட அடுத்தகட்ட தலைமையை நாம் தருதல் வேண்டும். தந்தை படும் துயரத்தைக் கண்டு தனிமுயற்சி எடுத்து ஐ.பி.எஸ். அதிகாரியானார், அனூப்குமார் சிங் என்ற இளைஞர். இன்று மேற்கு உத்தரபிரதேசத்தின் லக்னோ மாவட்ட எஸ்.பி.யாக இருக்கிறார். அதே மாவட்டத்தில் அதே எஸ்.பி. அலுவலகத்தில் காவலராக வேலை செய்யும் அனூப்குமாரின் தந்தை ஜனார்த்தன் சிங், மகனுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்கிறார். இது தினமும் பலரின் கண் முன் நடக்கிறது.

‘பணியில் அவர் எனக்கு உயர் அதிகாரி. எனவே நான் அவருக்கு சல்யூட் அடிக்கிறேன்!’ என்று ஆனந்தக் கண்ணீர் மல்க அந்தத் தந்தை கூறுகிறார். தன் தந்தையின் தலைமுறையைவிட ஒரு படி மேலே சென்ற தலைமகன்தான் சாதனைத் தலைவன்.

தலைமையும், தலைமைப் பண்புகளும் நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும். இரு வேறு சமுதாயங்களுக்கு இடையில் வெறுப்பை வளர்க்கவும் சிலர் தங்களது தலைமையைப் பயன்படுத்துகிறார்கள். இது தீய தலைமை. அறிவியல் யுகத்தில் இதுபோன்ற நச்சுத் தலைமைகள் நமக்குத் தேவையில்லை.

வீட்டிலும், கல்வியிலும், சமுதாய அக்கறையிலும், தொழிலிலும், இயற்கைப் பாதுகாப்பிலும், சிந்தனையிலும், வாழ்க்கையிலும் நீங்கள் தலைமை தாங்கிப் பழக வேண்டும்.

தலைவனாக இருப்பது மட்டும் அல்ல தலைமை. எடுத்துக்காட்டாக இருப்பதுமே தலைமை.

தலைவர்கள் பிறப்பது இல்லை. உருவாக்கப்படுகிறார்கள். உங்களை தலைமைப் பதவியில் நீங்களே உட்கார வைக்க வேண்டும். அதற்கு...

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts