Saturday 1 December 2018

17. வலியைத் தாங்கியவன் வலிமையான தலைவன்

புகழ்பெற்ற தலைவர்களை சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள். அவர்கள் கடந்து வந்த பாதை கடினமானதாக இருக்கும். கற்களையும் முட்களையும் மிதித்து நடந்து முன்னேறி இந்த இடத்துக்கு வந்திருப்பார்கள். உடல் வலியையும், உள்ள வலியையும் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்னேறியிருப்பார்கள். இலக்குதான் அவர்களுக்கு மூச்சு என்பதால், மூச்சு வாங்கினாலும் அவர்கள் தொடர்ந்து நடந்திருக்கின்றனர்.

வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்தவர்கள் தலைவர்கள் ஆனார்கள் என்பதை அறிந்துகொள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆராய்ந்தால் போதும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து இங்கிலாந்தில் படித்த நேரு, 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார். வெயிலிலும், மழையிலும், குளிரிலும், கொசுக்கடியிலும், மூட்டைப்பூச்சித் தொல்லையிலும் சிறையில் தூங்கக்கூட முடியாது.

அதிலும் வ.உ. சிதம்பரனார் தேசியக் கப்பலை ஓட்டிய தேசபக்த செயலுக்காக செக்கிழுத்தார். மாடுகள் இழுக்க வேண்டிய செக்கை மனிதன் இழுப்பது எவ்வளவு கொடுமையானது என எண்ணிப் பாருங்கள். இந்தக் கஷ்டங்களை அனுபவித்தவர்கள் மட்டுமே தலைவர்கள் ஆனார்கள். வேதனையான சூழ்நிலைகள் வீரமுள்ள தலைவர்களை உருவாக்கும்.

விளையாட்டுகளில் மிகவும் கடினமானது தடகளம். உலகில் 204 நாடுகளில் தடகளம் விளையாடப்படுகிறது. ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில், ஹெப்டத்லான் என்ற ஏழு போட்டிகள் கொண்ட விளையாட்டில் தங்கம் வென்றவர், மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மன். இவர் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். வீட்டில் படும் கஷ்டத்தைவிட ஓடுவதும், நீளம் தாண்டுவதும், குண்டு எறிவதும் அவருக்குப் பெரிய கஷ்டமாக இருந்திருக்காது. ஒரு பணக்கார வீட்டு சொகுசு இளைஞனுக்கு இது முடியாத காரியமாக இருந்திருக்கும். எனவேதான், ஏழையாக இருப்பது கூட ஒரு சாதகமான சூழ்நிலை என்றும், அதைப் பயன்படுத்தி ஒரு ராக்கெட் போல மேகத்தைக் கிழித்து மேலே செல்ல வேண்டும் என்றும் நான் வலியுறுத்தி வருகிறேன். உங்களது இளமைப் பருவத்தில் உணவு கூட இல்லாமல் சிரமப்பட்டீர்களாமே என்று ஸ்வப்னாவிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அது உண்மைதான். ஆனால் அதைப் பற்றி எல்லாம் இப்போது பேசி பின்னோக்கிப் போக விரும்பவில்லை. முன்னோக்கி ஓட விரும்புகிறேன்’ என்றாராம். நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது பெரிதல்ல, எங்கே போகிறோம் என்பதுதான் பெரிது.

பசி, பட்டினி, அவமானம், வன்கொடுமை போன்ற துயரச் சூழ்நிலை ஏழைகளுக்கு இயற்கையாகவே அமைகிறது. அதை அனுபவித்தவர்களுக்கு இந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில், நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தால் பெருமுயற்சி எடுக்கத் துணிய மாட்டார்கள். இன்றைய நிலைமையை மாற்றிக்காட்டுவது சாத்தியம்தான் என நம்புகிறவர்கள் மட்டும் அதற்கான முயற்சி எடுப்பார்கள். துன்பத்தில் துவண்டு போகும்போது ஒருவருக்குத் தேவையானது, தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. அதோடு, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை. இந்த இரண்டு தன்னம்பிக்கைகளை உருவாக்குவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இதைப் படித்தபிறகு உங்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும். ஏழையாகப் பிறப்பதில் தவறில்லை, ஏழையாக இறப்பது குற்றம் என்றார், உலகின் பெரிய செல்வந்தர் பில் கேட்ஸ்.

வாழ்வில் பெருந்தொல்லைகளை அனுபவித்தவர்கள் பெரும் தலைவராக இருப்பதற்குக் காரணம் அவர்களுக்கு உடல்வலியும், மனவலியும், மானவலியும் தெரியும் என்பதுதான். அவர் களால், மற்றவர்களுக்கு அதுபோன்ற அடி விழும்போது எப்படி வலிக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியும். இதை ஆங்கிலத்தில் ‘எம்பதி’ என்கிறார்கள்.

பூமியில் பதிந்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகள் வைரங்களாக மாறும். பட்டை தீட்டப்பட்டபின் அவை பிரகாசிக்கும். அதுபோல அழுத்தத்தையும், தாக்குதல்களையும் தாங்கிக்கொண்ட மனிதர்கள் மட்டும்தான் உறுதியானவர்களாகவும், ஒளிவீசுபவர்களாகவும் திகழ முடியும்.

இன்றைய தினம் வறுமையிலும், வேதனை யிலும், ஏமாற்றத்திலும் உழல்பவர் நீங்கள் என்றால், இந்த நிலை கண்டு கலங்காதீர்கள். இவைதான் உறுதியான தலைவர்கள் உருவாவதற்கான உலைக்களம். தலைவன் உருவாவதற்கான பயிற்சிகள் இவை. அதைவிட்டு, இப்படி ஏமாற்றிவிட்டார்களே, எனது வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே, நல்ல நேரத்தை வீணடித்துவிட்டேனே என்றெல்லாம் புலம்பாதீர்கள். சோதனைக் காலம் வந்துவிட்டதே என்று அழாமல், சாதனைக் காலம் வரப்போகிறது என்று எண்ணிப் புன்னகை செய்யுங்கள்.

மனித இனமே போராட்டங்களுக்குப் பிறகுதான் புத்துயிர் பெற்றது என்றும், தகுதியானவர்களையே இயற்கை வாழவிட்டது என்றும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு தெளிவாக்குகிறது. அந்தப் போராட்டத்தில் சிங்கத்துக்கு இரையானவர் பலர். நோய்க்கிருமிகளால் வீழ்த்தப்பட்டவர் பலர். அப்படியும் மீறி உயிர் வாழ்ந்தவர்களின் வாரிசுகள்தான் நாம் அனைவரும். எனவே இன்று நாம் உயிர் வாழ்கிறோம் என்றால், நாம் தலைமுறை தலைமுறைகளாகப் போராடியவர்கள், போராட்ட குணம் நம் மரபணுவில் உள்ளது என்றுதான் பொருள். இதை மனதில் வைத்துக்கொண்டால், தன்னம்பிக்கை தானாகப் பிறக்கும்.

எவரெஸ்ட் சிகரத்தின் மீது நின்றவர்கள் மலை ஏறி வந்தவர்களின்றி, வானத்தில் இருந்து மலை உச்சிக்குக் குதித்தவர்கள் அல்ல. அவர்களும் தடுமாறியிருப்பார்கள், விழுந்திருப்பார்கள், ஆனால் எழுந்திருந்திருப்பார்கள். இறுதி 100 அடி உயரத்தை ஏற 10 மணி நேரம் ஆனது என்கிறார் ஓர் எவரெஸ்ட் மலையேற்ற வீரர். தோல்வி அடையாமல் வெற்றிகளை மட்டும் குவித்து வாகைசூடியவர்கள் என்று எவருமே இல்லை.

சிறுவனாக பல களத்தோல்விகளைக் கண்டு, உடல் முழுவதும் விழுப்புண்களுடன் ஹைபர் கணவாய் கடந்து சிந்து நதியில் நீந்தி ஆயிரம் மைல் கடந்துவந்து இப்ராகிம் லோடியுடன் போரிட்டு வெற்றி பெற்றவர்தான் ஜாகிருதீன் முகமது பாபர். அவரைப் பொறுத்தவரை தோல்விகள் என்பது வெற்றியின் மாற்று அல்ல, அது வெற்றிக்கான முன்னோட்டம். தோல்விகள் கற்றுத்தந்த பாடம் பயின்றதால்தான் வெறும் பத்தாயிரம் குதிரை வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு இப்ராகிம் லோடியின் ஒரு லட்சம் வீரர்களை பாபர் விரட்டியடித்தார். தோல்விகளே வெற்றியின் படிக்கட்டுகள் என்று சொல்லிக் கேள்விப்பட்டதில்லையா நாமெல்லாம்? தோல்விகளை சந்திக்கத் தயார் என்றால் தலைமைப்பதவிகள் உங்களுக்குத் தயாராக இருக்கும்.

அமைதியற்ற காலங்கள் வலிமையான தலைமையை உருவாக்கும். அப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு இருக்கிறது என்றால், இந்தக் காலத்தில் உறுதியாக நிலைத்து நில்லுங்கள். வியர்வையும், ரத்தமும், கண்ணீரும் சிந்தியபிறகுதான், போற்றுதலுக்கு உரிய தலைமை நமக்கு வந்து சேரும்.

உலகை மூன்று முறை சுற்றிவந்து பசிபிக் கடலின் அகலத்தைக் கணக்கிட்டார் கேப்டன் தாமஸ் குக். முதன்முதலில் நியூசிலாந்தைச் சுற்றி வந்தவரும் இவரே. ஹவாய் தீவுகளில் 1778, ஜனவரி மாதம் 18-ம் நாள் முதலில் கால் வைத்தவரும் இவரே. தனது மூன்றாவது பயணத்தில் ஹவாயில் தாமஸ் குக் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இன்னும் வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். சரித்திரம் போற்றும் தலைமைக்குச் சொந்தக்காரராகத் திகழ உயிரைக்கூட தியாகம் செய்ய வேண்டும்.

உயிரையும் துச்சமாக நினைத்த மாவீரர் களுக்கு மட்டுமே உலகத் தலைமை சாத்தியமாகி இருக்கிறது என்பதை உணர்வோம்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts