Saturday, 27 October 2018

12. மனிதன் ஒரு மகத்தான அதிசயம்!

இந்தப் பூமியில் தோன்றிய உயிரினங்களில் இறுதியாக நாம் உருவாகியிருக்கிறோம். இன்னும் பல லட்சம் ஆண்டுகள் கழித்து மனிதர்களிடம் இருந்து வேறு எவரும் தோன்றுவார்களா எனத் தெரியவரும். பரிணாம வளர்ச்சியில் நாம் அனைவரும் உயிரியல் அதிசயங்கள்.

ஒருவர் பிறந்ததே ஓர் உயிரியல் அதிசயம் என்கிறது அறிவியல். ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. ஆனால் அது கருவுற ஓர் உயிரணு வேண்டும். அந்தப் பெண்ணின் கணவரிடம் ஒரே ஓர் உயிரணு மட்டும் உருவாவதில்லை, அவரிடம் ஒரே நேரத்தில் சுமார் 2 கோடி முதல் 10 கோடி வரை உயிரணுக்கள் உருவாகின்றன.

அவற்றுள் ஒன்றே ஒன்று கருமுட்டையோடு இணைந்து கருவாகிறது. பின்னர் 10 மாதத்தில் முழு வளர்ச்சி அடைந்த சிசுவாகிறது. அந்தக் குறிப்பிட்ட உயிரணுவுக்குப் பதிலாக இன்னோர் உயிரணு பெண் முட்டையுடன் சேர்ந்திருந்தால், இன்னொரு குழந்தை பிறந்திருக்கும். எனவே நாம் ஒவ்வொருவரும் 10 கோடியில் ஒருவராகப் பிறந்திருக்கிறோம் எனலாம். இதுபோலத்தான் நமது பெற்றோரும் பிறந்தனர். எனவே தலைமுறை கணக்குப் பார்த்தால் நாம் பிறக்கும் வாய்ப்பு அரிதினும் அரிதாகவே இருந்திருக்கிறது.

அப்படியிருந்தும், உயரம் குறைவாக இருக்கிறோம் என்றும், கருப்பாக இருக்கிறோம் என்றும், தலைமுடி உதிர்கிறது என்றும் கவலைப்படுகிறோம். அதுவும் வளரிளம் பருவ பிள்ளைகள் தங்கள் உடல் தோற்றம் குறித்து மிகவும் கவலைகொள்கிறார்கள். கண்ணாடியில் அடிக்கடி தங்களையே சோதித்துக் கொள்கிறார்கள். இது வளரும் பருவத்தில் வரும் வழக்கமான கவலைதான் என்றாலும், உடலின் உயர்ந்த ஆற்றல்களை அவர்கள் புரிந்துகொள்ளாதது வருத்தமளிப்பது.

குட்டையாக, கருப்பாக இருக்கும் நபருக்கு உறுதியான இதயமும், நுரையீரலும் இருக்கக்கூடும். உயரமாகவும் சிவப்பாகவும் இருப்பவருக்கு இதயக் கோளாறும் ஆஸ்துமாவும் இருக்கக்கூடும்.

பற்கள் பெரிதாக இருக்கும் பிள்ளைகள் பேசும்போது பற்களை உதடுகளால் மூடிக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, ‘பற்கள் அழகாகத்தான் இருக்கின்றன, இயற்கையாகப் பேசுங்கள்’ என்று நான் சொல்வேன். அவர்களும் புரிந்துகொண்டு தயக்கம் உதறுவார்கள்.

செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் பேர் தம் இன்னுயிரைப் போக்கிக்கொள்கிறார்கள். இதில் 1 லட்சம் பேர் இந்தியர்கள். உலகில் தற்கொலை செய்யும் பெண்களில் 37 சதவீதம் பேர் இந்தியாவைச் சார்ந்தவர்களே. இதில் சிறியவர்களும் உண்டு. தற்கொலைக்கான காரணம், மனநல பாதிப்பு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால், தற்கொலை முடிவை நாடும் நபர்களுக்கு, 350 கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டது தமது உடல் என்றும், அது எந்தத் துன்பத்தையும் தாங்கும் வல்லமை படைத்தது என்றும் தெரியாதது துயரம்.

தற்கொலை செய்பவர் தன் மீதே வெறுப்புக் கொள்கிறார், தான் ஒரு பயனற்ற மனிதன் என்று நினைக்கிறார், தாம் தோல்வியுற்றவர் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார். இது தவறானது. நாம் தற்காலிகமாக வெற்றி பெறத் தவறியதும், நமது உடல் தோற்றமும் மற்றவர்களுக்கு நம்மைப் பற்றிய குறைவான மதிப்பீட்டை உருவாக்கலாம். ஆனால் அது நம் மீது நமக்கு இருக்கும் மதிப்பீட்டைக் குறைக்கக்கூடாது.

ஏ.எல்.எஸ். எனப்படும் அமியோடிராபிக் லேட்டிரல் ஸ்கிளிரோசிஸ் நோயால் உருக்குலைந்த உடலுடன் மரணத்தை எதிர்பார்த்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், சுமார் 50 ஆண்டுகாலம் ஆராய்ச்சியிலும், நூல்கள் எழுதுவதிலும், நம்முடன் உரையாடுவதிலும் ஈடுபட்டார். உடம்பின் அனைத்துத் தசைகளும் செயலிழந்த நிலையில், கன்னத்தில் அசைந்த சில தசைகளை மட்டும் பயன்படுத்தி அறிவியல் உண்மைகளை கணினி மூலம் வெளிப்படுத்தினார். அவரது மனதிடத்தை எண்ணிப் பாருங்கள். ஹாக்கிங் தனது 75-வது வயதில், கடந்த 14.3.2018 அன்று காலமானர். ஆனால் அவர் எழுதிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ ( ‘A Brief History of Time' ) என்ற நூல் அமரத்துவம் பெற்றிருக்கிறது.

ஓர் ஆய்வில், மனித உடலில் 37.2 டிரில்லியன் செல்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு செல்லும் ஒரு ரோபோ போன்றது.

மனித செல்லுக்குள் ‘டி.என்.ஏ.’வில்தான் உடலின் தன்மை, நமது குணாதிசயங்கள் போன்றவற்றுக்கான மரபணுக் குறியீடு இருக்கிறது. அவற்றை ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆயிரம் நூல்களில் பதிவு செய்யலாம். உங்களது ஒரு செல்லில் இருக்கும் இந்தக் குறியீட்டை கணினி படிக்க 93 ஆண்டுகள் ஆகும். அவ்வளவு அதிபிரம்மாண்டக் கூட்டமைப்பு நிறுவனம் நமது உடல்.

நமது உடலும், மனமும் எல்லா வகையிலும் எல்லோரையும் விட வலுவானதாக நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நம் உடலிலும் மனதிலும் பல அரிய, உயர்ந்த குணங்கள் இருக்கும்.

எனக்கு வெகு தூரம் ஓடும் ஆற்றல் இல்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த 5 ஆண்டுகளாக அது தவறு என்பதையும், எனது உடல் உறுப்புகளுக்கு வெகு தூரம் ஓடும் ஆற்றல் உள்ளது என்பதையும் தெரிந்துகொண்டிருக்கிறேன். தொடர்ந்து 21 கி.மீ. தூரம் ஓடியுள்ளேன். 4 ஆயிரத்து 500 கி.மீ. தொடர் சைக்கிள் பயணம் செய்திருக்கிறேன். 28 கி.மீ. தொலைவு கடலில் நீந்தியிருக்கிறேன். இந்த உடல் வலிமையை நான் அறிந்தது, 50 வயதைக் கடந்தபிறகுதான். நீங்களும் உங்கள் உடல் வலிமையை சோதித்து உணருங்கள்.

நீங்கள் வாழும் இடம் இந்த உடல். இது உங்களுக்கு அனைத்தையும் தரும். சிந்தனையில் ஏற்படும் சுகம் அற்புதமானது. கற்ற அறிவு நமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், நமக்கு வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. ஆரோக்கியமான உடல் தரும் சுகத்தை விடப் பெரிய சுகம் வேறு எதுவுமில்லை.

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும். உடலை வைத்துத்தான் நற்புகழ் பெற முடியும். எனவே நீங்கள் உங்கள் உடலைப் பேணிக் காக்க வேண்டும். உடல்நலம் காக்க அறிவியல், மருத்துவத்தை மட்டும்தான் நம்ப வேண்டும்.

தங்கமுட்டை போடும் வாத்து உங்கள் உடல். அத்தகைய அற்புத எந்திரம் பழுதடைய அனுமதிக்காதீர்கள். அதற்கான செயல்களைச் செய்யவும் தவறாதீர்கள்.

உடல்நலம் பேண, இவற்றையெல்லாம் தவறாது கடைப்பிடியுங்கள்...

பசிக்காமல் சாப்பிடாதீர்கள்.

அளவுக்கு மீறி உண்ணாதீர்கள்.

பயறு, பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

புகை, மது பழகாதீர்கள்.

தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யுங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

ஏழு மணி நேரம் தூங்குங்கள்.

மகிழ்ச்சியாக இருங்கள்.

ஒரு வலுவான உடலைச் செதுக்குங்கள். அது உங்கள் கவுரவச் சின்னம் போல இருக்கட்டும். உங்கள் கடின உழைப்பு, கட்டுப்பாடு, கண்ணியம், கர்வம், சுயமரியாதை ஆகியவற்றை உடல் பறைசாற்றும்.

கட்டுக்கோப்பான உடலை காசு கொடுத்து வாங்க முடியாது. தொடர்ந்து பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் வலுவான உடலைப் பராமரிக்க முடியாது. உங்கள் புத்தியையும் கூர்மைப்படுத்துங்கள். பின்னர் அதைப் பராமரியுங்கள். தொடர்கல்வி இல்லையென்றால், சிரமப்பட்டு உருவாக்கிய மன வலிமை காலப்போக்கில் குன்றிவிடும். உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் வலுவான ஆளுமையின் ரகசியங்கள் எனலாம்.

பிறர் உங்களை நேசிக்கலாம், வெறுக்கலாம், விமர்சிக்கலாம், எதிர்க்கலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் நீங்கள் யார் என்பது தெரியவரும். எனவே உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்குங்கள். அதற்கும் நேரத்தைச் செலவிடுங்கள். உறுதியான உடலும், வலுவான மனமும் உங்களை சாதனையாளராக உயர்த்தும்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிரெடிட் கார்டை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா?

இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது, கிரெடிட் கார்டு. அதை சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும். பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அது ஒன்றும் பிரச்சினையில்லை. அவற்றை எப்படி உபயோகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். சிலர், தமது செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், கிரெடிட் கார்டை திருப்பி அளித்துவிடலாம் என்று எண்ணலாம். உண்மையாகவே அவற்றை ரத்துச் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது அப்படியே பயன்படுத்தாமல் வைத்திருக்கப் போகிறீர்களா? கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது சரியான வழியா? அது நம்மைப் பாதிக்குமா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்... கிரெடிட் கார்டை ரத்துச் செய்வது, ‘சிபில்’ எனப்படும் உங்களின் கடன் மதிப்பெண்ணைப் பாதிக்கும் என்றாலும், அது, கிரெடிட் உச்ச மதிப்பு, கார்டை பயன்படுத்திய காலம், உங்கள் மொத்த கிரெடிட் கார்டு தொகுப்பில் குறிப்பிட்ட கார்டின் விகிதம் போன்ற முக்கியக் காரணிகளைப் பொறுத்தது. உங்கள் கிரெடிட் கார்டு கணக்கை மூடும்போது, உங்களின் மொத்த கடன் வரம்பும் குறையும் என்பதால், கடன் மதிப்பெண்ணும் குறையும். குறையக்கூடிய மதிப்பெண்ணின் அளவு, உங்களின் மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ள கடனின் அளவைப் பொறுத்தது. அதாவது, அதிகக் கடன் வரம்புள்ள கார்டை ரத்து செய்யும்போது, குறைந்த வரம்புள்ள கார்டை ரத்து செய்வதைக் காட்டிலும் அதிகப் பாதிப்பு ஏற்படும். உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதால், கார்டில் எப்போதும் பாக்கி வைக்காமல் பார்த்துக்கொள்வது, கடன் மதிப்பெண்ணுக்கு உதவியாக இருக்கும். குறைந்த அளவு கடனுள்ள கிரெடிட் கார்டை ரத்து செய்யலாம் என்ற தவறான கருத்து நிலவுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டை ரத்து செய்ய விரும்புகிறீர்களோ இல்லையோ, பாக்கியுள்ள கடனை கட்டியே ஆக வேண்டும். அதன் கணக்கை மூடாமல், பாக்கி கடனை கட்டி முடித்துவிட்டு அட்டையைப் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தாலும் கடன் வரம்பு அப்படியே இருக்கும். நீங்கள் கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆகவேண்டும் என்றால், அதே அளவு அல்லது அதைவிட அதிக வரம்புள்ள கார்டை வாங்காதவரை உங்களின் ஒட்டுமொத்தக் கடன் வரம்பு குறைந்துவிடும். அதிகபட்ச கடன் வரம்பை வைத்திருப்பது எப்போதும் உதவும் என்றாலும், சில நேரங்களில் கிரெடிட் கார்டுகளை திருப்பிக் கொடுக்கலாம். அதாவது, உங்களால் செலவு செய்வதை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து, கார்டை பயன்படுத்தும் தூண்டுதலைத் தவிர்க்க. நீங்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும்போது அல்லது உங்களின் கார்டில் அதீத வட்டி விகிதம் விதிக்கும்போதும், தேவையற்ற கட்டணங்கள் வசூலிக்கும் போதும். உங்களின் தேவைக்கு ஏற்றவாறு, அதிகச் சலுகைகள் தரும் கிரெடிட் கார்டு கிடைத்தால், நீங்கள் தற்போதைய இதே அளவு வரம்புள்ள கார்டாக அதை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் செலவு செய்த அல்லது கடந்தகால வட்டி பாக்கி இருந்தால், அவற்றைச் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தவறாகக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் முறையிட்டு, கார்டு நிறுவனத்திடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற வேண்டும். சில வங்கிகள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது வழங் கும் சலுகைப்புள்ளிகள் பாக்கியிருந்தால், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின்பு அவற்றைப் பயன்படுத்த முடியாது என்பதால் முன்னரே பயன்படுத்திவிடுங்கள். அரிதாகச் சில நிறுவனங்கள், கார்டை ரத்துச் செய்ய விண்ணப்பித்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு அந்தச் சலுகை புள்ளிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன அல்லது அதே வங்கியில் வேறு கிரெடிட் கார்டு பெற்றால், சலுகைப்புள்ளிகளை அதற்கு மாற்றவும் வழிவகை செய்கின்றன. ஏதேனும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில் தானாகப் பணம் கழிக்கும் வசதியை கார்டில் தேர்வு செய்திருந்தால், அதை ரத்து செய்தபின் பிரச்சினை ஏற்படும் என்பதால் மறக்காமல் இவ்வசதியை நீக்க வேண்டும். சரி, கிரெடிட் கார்டை ரத்துச் செய்தே ஆக வேண்டும் என்றால், அதைச் செய்வது எப்படி? கிரெடிட் கார்டை ரத்துச் செய்யப் பல வழிகள் உள்ளன. அவை... வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து, கார்டை ரத்துச் செய்வது பற்றித் தெரிவிக்கலாம். மின்னஞ்சல் வாயிலாக ரத்துச் செய்யக் கோரலாம். இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்கலாம். வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பம் அளிக்கலாம். கிரெடிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்துவதும், ரத்துச் செய்வதும் நமது முடிவு. நம் சூழ்நிலைக்கு ஏற்ப இவ்விஷயத்தில் விவேகமாக முடிவெடுக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு

வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந்த எழுதுக் களோடு உங்களோடு பேசுகிறேன். அப்படி பேசுவதற்குக் காரணம் புத்தக வாசிப்புதான். புத்தகங்களும், வகுப்பறைகளும் தான் என் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன. இது சாதாரண வெளிச்சம் அல்ல. அகத்தில் எழுந்த அறிவுச் சுடர் தந்த வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் தான் வாழ்க்கையை நேசித்தேன். வாழ்க்கையை நேசிப்பவர்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் ராட்சச சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக் கொள்வதற்கும், வற்றிப்போய்க் கொண்டிருக்கின்ற அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை மெல்லுணர்வுகளாக மாற்றிக்கொள்வதற்கும், அறியப்படாத உலகை அறிவதற்கும், மனிதர்களின் வாழ்வியல் அனுபவ பகிர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பெரிதும் துணை புரிகின்றது. படிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய புதிய சிந்தனைகளைத் தரக்கூடிய ஆற்றல், புத்தகத்திற்கு உண்டு. அறிவுச் சுரங்கமாய்த் திகழும் புத்தகங்களைப் படிப்பது நல்லது தான். அதைவிட நல்லது, நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பது. ‘தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்பது விவிலிய வாக்கு. அந்தத் தேடலில் புத்தகங்களைக் கண்டடைந்து வாசிப்பதன் காரணமாக தங்களுக்குள் இருக்கும் கதவு திறக்கப்பட்டு மகான்களாகவும், மகாத்மாக்களாகவும், அறிஞர்களாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். அவர்களுள் சிலரை நினைவுபடுத்துகிறேன். * மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை, மகாத்மா காந்தியடிகளாக மாற்றியது, ஜான்ரங்கின் எழுதிய ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற புத்தகம். * வேங்கடரமணனாக இருந்தவரை, மகான் ஸ்ரீ ரமணமகரிஷியாக மாற்றியது, சேக்கிழார் எழுதிய ‘பெரிய புராணம்’ என்ற புத்தகம். * 33 ஆண்டுகள் லண்டன் நூலகத்தில் இரவும் பகலும் விழித்திருந்து காரல்மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ என்ற புத்தகம் உழைக்கும் மக்களை உயர்த்திப்பிடித்தது. * டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, ‘அன்னகரீனாவும்’ உலக சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்தன; மாற்றத்தைத் தந்தன. இப்படி மன மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் புத்தகங்களே சாட்சியங்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களைப் போலவே புத்தகங்களுக்கும் இதயம் இருக்கின்றன. ‘சில புத்தகங்கள் உழைக்கச் சொல்லும், சில புத்தகங்கள் முளைக்கச் சொல்லும், சில புத்தகங்கள் அழச் சொல்லும், சில புத்தகங்கள் சிரிக்கச் சொல்லும், சில புத்தகங்கள் காயப்படுத்தும், சில புத்தகங்கள் காயத்திற்கு மருந்து தடவும், சில புத்தகங்கள் வாழச் சொல்லும், சில புத்தகங்கள் வாழ்ந்ததைச் சொல்லும்’. இப்படி ஒவ்வொரு புத்தகமும் ஏதேனும் ஒன்றைச் சொல்லும். அதனால் புத்தகங்கள் அறிவின் சுரங்கங்கள். வெள்ளை தாள்களுக்கு இரண்டு இடங்களில் அதிக மரியாதை இருக்கின்றது. ஒன்று பணமாக மாறும் போது.. மற்றொன்று புத்தகமாக மாறும் போது.. பணத்தை விட புத்தக வாசிப்பு தான் வாழ்க்கையை மாற்றி வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. இது வரலாறு சொல்கின்ற உண்மை. புகழ்பெற்ற நாடகப் பேராசிரியர் ஷேக்ஸ்பியர். இவர் எழுதிய நாடக நூலில் ஒரு மன்னன். அவன் யாருமே இல்லாத தீவிற்கு நாடு கடத்தப்படுகிறான். அப்போது அவன் ‘என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்கிறான். எதற்கு என்றால், ‘அந்த ஒரு புத்தகம் உடனிருந்தால், பல நூறு மனிதர்கள் ஒன்றாக இருப்பதற்குச் சமம். அதனோடு பேசியபடியே வாழ்ந்துவிடுவேன். எனக்குப் புத்தகங்களோடு பேசத் தெரியும். புத்தகங்களும் என்னோடு பேசுகின்றன. புத்தகங்களை என் உடலின் இன்னொரு உறுப்பாகவே கருதுகின்றேன்’ என்கிறான். அந்த புத்தகம் தான் மன்னனது தனிமையைப் போக்கி, வாழ்வின் மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது. எப்படி என்கிறீர்களா? ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகம் திறக்கப்படுகிறது. இதுதான் புத்தக வாசிப்பின் புனிதம். இப்படி புத்தகத்தால் மாறியவர்களை, வரலாறு தன் நெடுகிலும் வரவு வைத்திருக்கின்றது. அன்னிபெசண்ட் அம்மையார்.. இவரை பலரும் அறிந் திருப்பார்கள். இதோ மாற்றத்தைத் தந்த வாழ்வியல் சம்பவம். இவர் இல்லற வாழ்வில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் பிறந்த சில மாதங்களிலேயே வலிப்பு நோய் தாக்கி குழந்தை வலியால் துடிதுடிக்கிறது. தாம் ஆசையாய் பெற்றெடுத்த குழந்தை, தன் கண்முன்னே படும் வேதனையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டுக் கதறுகிறார். கடவுளிடம் முறையிடுகிறார். அவரது கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹெச்.பிப்ளாவெட்ங்கி எழுதிய ‘இஸஸ் அன்வெயில்ட்’ (ISIS UNVEILED) என்ற புத்தகம் அவரது கைக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார். படிக்கப் படிக்க அதிலுள்ள கருத்துக்கள் அவரது இதயத்தை ஈரமாக்கி ஈர்த்தன. அவரது கேள்விக்கான பதில்கள் கிடைத்தன. உடனே ஆன்மிக பூமியான இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார். சென்னை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய வாழ்வைத் தொடங்கினார். இங்குதான் ‘தியோசா பிகல் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற அமைப்பை உருவாக்கினார். சமூக சேவையின் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்றார். அந்த அன்பின் பரிசுதான் ‘பெசண்ட் நகர்’ என்று பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் பெயர்ப்பலகை. அந்தப் பெயரை கடற்கரை அலைகளும் தாலாட்டிக் கொண்டே இருக்கின்றன. எப்படி இப்படி பெயர் வந்தது. காரணம் அவர் வாசித்த அந்தப் புத்தகம் தான். இதோ! ஒரு சிறுவனை மாற்றிய புத்தக வாசிப்பு நிகழ்வு. அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவனது கையில் கிடைத்த புத்தகம் அவனை அறிவியல் மேதையாக்கியது. ‘யார்?’ என்று அறிய உங்கள் புருவம் உயர்வதைப் பார்க்கின்றேன். அவர்தான் மைக்கேல் பாரடே. அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையைப் படிக்கப் படிக்க கண்கள் குளமாகின்றன. வறுமை.. வறுமை. கடையில் வேலை. வேலையில்லாத போது புத்தகங்களை வாசித்தான் பாரடே. ஒரு நாள் பைண்டிங் செய்வதற்காக, கலைக்களஞ்சியம் புத்தகம் கைக்குக் கிடைக்கிறது. அதில் மின்சாரம் குறித்த கண்டுபிடிப்பைப் படித்தான். அப்போது அவனுக்குள் ஒரு சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. அதனைத் தொடர்ந்து ஐசக் வாட்ஸ் எழுதிய ‘மனதை அபிவிருத்தி செய்தல்’ (Improvement of Mind) என்ற புத்தகமும் கிடைக்கிறது. அப்படி கிடைத்த புத்தகங்களையெல்லாம் விழிகள் விரிய விரிய வாசித்தான். அந்தப் புத்தகங்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை மீறி வாழ்க்கையில் உயரலாம் என்ற ஊக்கத்தைத் தந்தன. அதனடிப்படையில் தான் ஆய்வுகளை மேற்கொண்டார். ‘டைனமோ’ கண்டுபிடித்தார். அதுதான் அவரது வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது. திரும்பும் திசையெல்லாம் மைக்கேல் பாரடே பெயர் எதிரொலித்தது. காரணம் புத்தக வாசிப்புதானே. வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும். அது இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும். முடிவில்லாத அந்த நதியில் மூழ்கி சுகங்களை அனுபவிப்போம். நல்ல புத்தகங்களை நாளும் வாசிப்போம். வரலாற்றில் வாழ முயற்சிப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 22 October 2018

மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு!

இளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள், நேரடியாகவும், ரகசியமாகவும் அதில் நேரத்தை செலவிடுகிறார்கள். மாணவர்களுக்கான பயனுள்ள விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் இல்லையா? சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்... சமூக வலைத்தளம் எதற்காக? சமூக வலைத்தளங்களைப் பற்றி போதிக்க வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. முக்கியமாக அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதை அவர்கள் ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும். சமூக வலைத்தளம் சிறந்த தகவல் தொடர்பு சாதனம் என்பதை எதிர்கால தலைமுறையினரான மாணவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். அதில் உள்ள சாதக - பாதகங்களை அறிந்து பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக அது பொழுதுபோக்கு தளம் அல்ல, தகவல் தொடர்பு தளம் என்பதை உணர வேண்டும். மாணவர்கள், நவீன கற்றல் தளமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். கூட்டு திட்டமிடலுக்கும், தகவல் திரட்டுவதற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் வலைத்தளங்களை உபயோகிக்கப் பழக வேண்டும். இந்த நியாயமான பழக்கத்தை பள்ளி - கல்லூரியில் பழக்கப்படுத்தினால் அவர்களின் கற்றல் முறையில் மேம்பாடு ஏற்படும். கண்டிப்பதும், தடைபோடுவதும் சமூக வலைத்தளங்கள் தீய பாதை என்பதைப்போல புறக்கணிக்க வலியுறுத்துவதும் அவர்களின் மனதில் எதிர்மறை விளைவை உருவாக்கும் என்பதை பெற்றோரும், ஆசிரியர்களும் உணர வேண்டும். அதுவே, சமூக வலைத்தளங்களில் ஏதோ இருக்கிறது என்பதை ரகசியமாக தேடத் தூண்டுவதாக அமைந்துவிடும். சமூக வலைத்தளங்களில் மயங்கவும், வெறுக்கவும் ஒன்றுமில்லை. தேவையான விஷயங்களுக்காக சார்ந்திருப்பதும், அதை புரிந்து கொள்வதுமே அவசியம். ஆசிரியரின் பங்களிப்பு என்ன? சமூக வலைத்தளங்கள் பற்றி ஆசிரியர்கள் விளக்க வேண்டும். அது நமது கற்றல் முறைக்கு அவசியமானது என்பதை புரிய வைக்க வேண்டும். அதன் பயன்களை விளக்க வேண்டும். எந்த வலைத்தளத்தில், எந்த வகையான செய்முறை அல்லது தகவல் தொகுப்பு நமது வகுப்புக்கு ஏற்றது என்பதை விளக்க வேண்டும். அந்த வலைத்தளத்தின் அடிப்படைகளை விளக்குவதுடன், பாடம் சார்ந்து, கற்றல் சார்ந்து அதை திறம்பட எப்படி பயன்படுத்துவது என்பதை ஆசிரியர்கள் விளக்க வேண்டும். வகுப்பறையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கேற்ற வடிவமைப்பு மற்றும் வழிமுறைகளை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால் வகுப்பில் கவனச்சிதறல் ஏற்பட சமூக வலைத்தளம் காரணமாகிவிடக்கூடாது. இத்தகைய அம்சங்கள் ஆசிரியரால், பெற்றோரால் வழிகாட்டப்படும்போது, மாணவர்களின் அச்சம் விலகும். ரகசியத்தன்மை குறைந்து, தவறுகளை திருத்திப் பயன்படுத்தப் பழகுவார்கள். சமூக வலைத்தளங்களில் மாணவர் - ஆசிரியர் ஒற்றுமை வளர வேண்டும். மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பாடம் கற்க வேண்டும். மாணவர்களுக்கான பாட பயிற்சித்திட்டங்கள், வழிகாட்டி திட்டங்கள், குழு தகவல் தொடர்பு, முக்கிய விஷயங்களைப் பகிர்தல் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்த வேண்டும். எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? இன்றைய தேதிகளைப் பற்றிய வரலாறை, முக்கிய நிகழ்வுகளை சமூக வலைத்தளங்கள் வழியே அறியலாம். இதை ஆசிரியர்கள் விளக்கலாம். மாணவர்களும் தேடிப் பிடித்து கற்கலாம். பகிர்ந்து கொள்ளலாம். இன்றைய செய்திகளையும் அறிந்து கொள்ள பயன்படுத்தலாம். இதற்காக வகுப்பில் சில நிமிடங்களை ஒதுக்கலாம். உலக நடப்புகள், கலாச்சாரங்களில் இருந்து அவசியமானவற்றை குறிப்பெடுக்கவும், தனியே சேகரித்து, சேமித்து பயன்படுத்த மாணவர்கள் பழக வேண்டும். ஆசிரியர் வழிநடத்த வேண்டும். பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் மாணவர்களுக்கான குழுக்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள் பகிரப்படுகிறது. அதை அறிந்து கொள்ளலாம். ஐயங்களுக்கு, தேவைகளுக்கு தீர்வு தேடலாம். அவசியமான ஹேஸ்டேக் தகவல்களை பகிரலாம். பயனுள்ள ஹேஸ்டேக் உருவாக்கி பரப்பலாம். பாடத்திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்ய வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பாடத்திட்டங்களைத் தாண்டிய திறமைகளை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தினால், அது மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்துவதாகவும், ஆசிரியர் மாணவர் உறவை வலுப்படுத்துவதாகவும் அமையும். கதை, கட்டுரை, கவிதைகளை, ஓவியங்களை தங்களுக்கான குழுவில் பகிரவும், பாராட்டவும் செய்யலாம். பயணங்களின்போதான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தலாம். அது அனுபவத்தை அதிகரிக்கும். உதவிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும். அறிவை வளர்க்கும் கேள்விகளை கேட்பதற்கான, சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தலாம். மொழிகளை அறிதல் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய கருத்துக்களை பகிர்ந்து மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டலாம். பயனுள்ள வலைப்பக்கங்களை இணைத்து பயன்படுத்தலாம். தங்கள் பாடத்துறை சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளுடன் தகவல் தொடர்பை வளர்க்கலாம். உரையாடல்கள் நிகழ்த்தி நேரில் பயிற்சி பெறும் வாய்ப்பையும், பல்வேறு தகவல்களையும் பரிமாற்றம் செய்யலாம். இதுபோலவே பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுத் துறைகளை பின் தொடரலாம். கல்வி சார்ந்த விஷயங்களை அறிந்து பலருடனும் பகிர்ந்து கொள்ளலாம். சமூகம் பற்றிய உங்கள் பார்வையை, விமர்சனங்களை வெளியிட்டு திறமையை வளர்க்கலாம். வர்த்தகத்துறை, பொருளாதாரத்துறை, தொழில்துறை என ஒவ்வொருதுறை சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து பயன்பெறலாம். படிக்கும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க கூறலாம். உங்கள் குழுவின் இயக்கத்தையும், நல்ல தகவல்களையும் புத்தகமாக, இதழாக வெளியிடலாம். பல்வேறு வகுப்புகளையும் ஒருங்கிணைக்கும் தளமாகவும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம். தவறை குறைக்க, பயத்தை போக்க... சமூக வலைத்தளங்கள் எல்லோரையும் உலகளாவிய குடிமக்களாக மாற்றியிருக்கிறது. ஆம், நாமெல்லாம் டிஜிட்டல் குடிமக்கள். நாடு கடந்த, ஜாதி மதம் கடந்த மக்களாக நம்மை மாற்றிய பெருமை சமூக வலைத்தளங்களுக்கு உண்டு. அங்கே சிறுமைத் தனமான பொழுதுபோக்கு அம்சங்கள், வேடிக்கை விஷயங்களை மாணவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கைவிட வேண்டிய ஒன்றாகும். சமூக வலைத்தளத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர் - மாணவர்கள் இணைந்த குழுக்கள் உருவாகிவிட்டால் பெற்றோர் உள்ளிட்ட யாருக்குமே வீணான பயம் தேவையில்லை. ஒவ்வொருவரின் தனித்த இயக்கங்களே பெற்றோரை அச்சுறுத்துவதாக உள்ளது. வலைத்தளம் என்பது குழுக்களுக்கானது, ஒருங்கிணைப்புக்கானது என்பதை உணர்ந்து பயன்படுத்த ஆசிரியரின் வழிகாட்டல் அவசியமாகும். பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் குழு உருவாக்கப்பட்டுவிட்டால் அச்சங்கள் குறைந்து, கற்றல் மேம்பாடு அடையும்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 21 October 2018

சாதனை சிகரமாகும் ‘சர்தார்’ சிலை

இறைவழிபாட்டுக்காக சிலைகள் அமைப்பதோடு, தங்களோடு வாழ்ந்தவர்களில் வணங்கத்தக்கவர்களுக்கும் உருவச் சிலைகளை அமைத்துப் போற்றிப் பாராட்டும் வழக்கம் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல இடங்களிலும் நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளின் போது ஏராளமான சிலைகள் மீட்டெடுக்கப்படுவதே இதற்கு அத்தாட்சி. அதிலும் குறிப்பாக சிலைகள் அமைக்கும் வழக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் இருந்தது - இப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. கட்டிட அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், சிலைகள் அமைப்பது புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. வீதி முனைகளில் ஆங்காங்கே மார்பளவு சிலைகள் அமைக்கப்படும் அதேசமயம், முழு அளவிலான உருவச் சிலைகளும், மேலும் சில இடங்களில் 10 அடி அல்லது அதற்கும் அதிகமான அளவிலான சிலைகளும் வைப்பது அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது. என்றபோதிலும் இதில் ஒரு தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக மிகப் பிரமாண்ட சிலைகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில், கன்னியாகுமரி கடல் நடுவே, திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் மிகப் பெரிய சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல மேலும் பல சிலைகளும் அண்ணாந்து பார்க்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆங்காங்கே இருக்கின்றன. உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு இருக்கும் சிலைகளில் அமெரிக்காவில் நியூயார்க் கடலில் அமைக்கப்பட்டு இருக்கும் சுதந்திரதேவி சிலை தனிச் சிறப்பு பெற்றது ஆகும். இந்த சிலையின் உயரம் (93 மீட்டர்) 305 அடி. நியூயார்க் துறைமுகத்தில் இருந்து கப்பலில் சென்று, அந்தச் சிலை இருக்கும் இடத்தை அடையலாம். அந்தச் சிலையின் மற்றொரு சிறப்பு, சிலைக்கு உள்ளே நாம் சென்று அதன் உச்சியை அடையலாம். அந்த சிலையின் முள் கிரீடம் இருக்கும் இடம் வரை சென்று அங்கு இருந்தபடி நியூயார்க் நகரின் அழகைப் பார்க்க முடியும். இதனால் இந்தச் சிலை சுற்றுலாவாசிகளை மிகவும் கவருகிறது. சுதந்திர தேவி சிலையின் தாக்கத்தால், அதுபோன்ற சிலைகளை அமைக்கும் திட்டம் உலகின் பல பாகங்களிலும் உருக்கொண்டது. அதன் விளைவாக சீனாவில் ஸ்பிரிங் டெம்பிள் என்ற இடத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் உயரம் 419 அடி. இப்போதைக்கு உலகின் மிக உயரமான சிலை இதுதான். அந்த சாதனையை முறியடிக்க, இந்தியாவில் அதைவிட மிக உயரமான சிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த சிலைதான் சர்தார் வல்லபாய் படேல் சிலை. இந்திய சுதந்திர போராட்டத்திலும், இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு அதன் வளர்ச்சியிலும் அதிக பங்காற்றி இரும்பு மனிதர் என்று புகழப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் பற்றி இப்போதைய இளம் தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. சர்தார் வல்லபாய் படேல், 1875 அக்டோபர் 31-ந் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகரம் அருகே ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி படிப்பு முடிந்ததும், 1910-ல் லண்டன் சென்று சட்டம் பயின்றார். மூன்றாண்டுகள் கழித்து ஆமதாபாத் திரும்பினார். 1917-ல் ஆமதாபாத் நகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924 முதல் 4 ஆண்டுகள் நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார். இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1918-ல் விளைச்சல் இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலவரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, போராட்டம் நடத்தினார். அதனால் காந்தியின் கவனத்தைக் கவர்ந்தார். 1928-ல் நிலவரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தினார். “பர்தோலி சத்தியாக்கிரகம்” என்று அழைக்கப்பட்ட இந்த போராட்டத்தின் மூலம், படேலின் புகழ் நாடு முழுவதும் பரவியது. அது முதல் மகாத்மா காந்தியும், மற்றவர்களும் படேலை “சர்தார்” என்று அழைக்கத் தொடங்கினர். சுதந்திரத்துக்காக காந்தி நடத்திய போராட்டங்களில் எல்லாம் படேல் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். 1931-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், நேரு மந்திரிசபையில் துணைப் பிரதமரானார். முக்கியமான உள்துறை இலாகா அவரிடம் இருந்தது. இந்தியாவில் 562 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சில சமஸ்தான அரசர்கள் பாகிஸ்தானுடன் சேரத் திட்டமிட்டனர். சிலர் சுதந்திரப் பிரகடனம் வெளியிட முயன்றனர். படேல் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து, சுதேச சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்தியாவுடன் இணைத்தார். அதன் மூலம் “இரும்பு மனிதர்” என்ற அழியாப் புகழைப் பெற்றார். படேல் 1950 டிசம்பர் 15-ந் தேதி காலமானார். 1991-ல் “பாரத ரத்னா” விருதை படேலுக்கு ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் வழங்கினார். படேலின் பேரன் விபின் தாயாபாய் படேல், ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற்றார். இவ்வளவு புகழ்பெற்ற வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கட்டு அருகே மிக உயரமான சிலை அமைப்பது என்று 2010-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு மூல காரணமாக இருந்தவர், அப்போது குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி. வல்லபாய் படேலுக்கு உலகின் மிகப்பெரிய அளவில் சிலை அமைப்பது என்று திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் 2013 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தச் சிலை அமைப்பதற்கான செலவு ரூ.3,001 கோடியாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டது. இந்த வேலைக்கு உலக அளவில் டெண்டர் கோரப்பட்டது. லார்சன் அண்டு டூப்ரோ கம்பெனியினர் ரூ.2,989 கோடியில் சிலையை அமைத்து பராமரித்து தருவதாகக் கூறியதைத் தொடர்ந்து அந்தப் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலை அமைப்பதற்கான பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டாலும், இதில் இந்திய- குறிப்பாக குஜராத் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நரேந்திர மோடி விரும்பினார். இதற்காக ‘சர்தார் வல்லபாய் படேல் ராஷ்டிரீய எக்தா டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு தேவையான இரும்பு, பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாகப் பெற வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்தியாவில் 70 லட்சம் விவசாயிகளிடம், “நீங்கள் பயன்படுத்திவிட்டு தேவை இல்லை என்று வீசி எறிந்த விவசாய இரும்புக் கருவிகளை வல்லபாய் சிலை அமைக்கும் திட்டத்திற்கு நன்கொடையாகத் தாருங்கள்” என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று ஏராளமான கிராம மக்கள் தங்களிடம் உள்ள பழைய இரும்பு கருவிகளைக் கொண்டுவந்து குவித்தார்கள். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் டன் இரும்பு கிடைத்தது. வல்லபாய் படேல் சிலை மற்றும் அதனைச் சுற்றிலும் அமைக்கப்படும் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு இந்த இரும்புதான் பயன்படுத்தப்பட்டது. மகத்தான இந்தத் திட்டம் பலராலும் போற்றப்பட்டது என்றாலும், அது பல எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. நர்மதை ஆற்றின் குறுக்கே அணைகட்டும் போதே பிரச்சினை உருவானது. நீண்டநாட்களாக நடைபெற்ற போராட்டங்களைச் சமாளித்த பிறகே அந்த அணை கட்டிமுடிக்கப்பட்டது. பின்னர் அங்கே சிலை அமைப்பதற்கும், அதற்காக தங்களது 927 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மீண்டும் போராட்டங்களை நடத்தினார்கள். ஒருவழியாக அவர்களைச் சமாதானம் செய்த பிறகு சிலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. வல்லபாய் படேல் சிலை அமைக்கும் பணிக்கு குஜராத் அரசு நிதி ஒதுக்கீடு செய்தபோது யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஆனால், 2014-2015 பட்ஜெட்டின் போது இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்தபோது பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். சிலை அமைக்கும் பணியின் ஒரு பகுதி சீனாவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்தியாவில் தயாரிப்போம் என்று கோஷமிடும் நரேந்திர மோடி, சிலையை சீனாவில் தயாரிப்பது ஏன்” என்று அவர் கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த முழக்கமும் அமுங்கிப் போனதைத் தொடர்ந்து, இப்போது சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கும் பணி நிறைவு பெற்று இருக்கிறது. இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என போற்றப்பட இருக்கும் இந்தச் சிலையின் திறப்பு விழா வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது. அன்றுதான் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்-அமைச்சர் உள்பட அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. சிலையின் உயரம் போலவே, இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு இருக்கிறார்.
சிலையின் சிறப்புகள்
1. குஜராத் மாநிலம் வதோதரா அருகே, சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.2 கிலோ மீட்டர் தூரத்தில், 12 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் செயற்கையாக அமைக்கப்பட்ட ‘சாது பெட்’ என்ற தீவில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
2. ‘ஸ்டாச்சு ஆப் யூனிடி’ - அதாவது ஒற்றுமை சிலை என்று பெயரிடப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் 190 அடி. கால் பகுதியில் இருந்து தலை வரை உள்ள சிலையின் உயரம் மட்டும் 597 அடி.
3. சிலை தயாரிப்புக்கு 70 ஆயிரம் டன் சிமெண்ட், 18,500 டன் இரும்பு, 1,700 டன் பித்தளை பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. சிலையின் உள்பகுதி லிப்ட் செல்லக்கூடிய வகையில் காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி, பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5. இந்த பித்தளைத் தகடுகள் மட்டும் சீனாவில் தயாரிக்கப்பட்டு இங்கே கொண்டுவந்து பொருத்தப்பட்டன.
6. சிலை கட்டுமானப் பணியில் 4 ஆயிரம் ஊழியர்களும், 300 என்ஜினீயர்களும் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் பலர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
7. சிலை அமைந்துள்ள சாது பெட் தீவுக்குச் செல்வதற்காக கெவடியா என்ற நகரில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை போடப்பட்டு இருக்கிறது. 5 கிலோ மீட்டர் தூரம் படகுப் பயணம் செய்தும் சிலை இருக்கும் இடத்தை அடையலாம்.
 8. சிலையின் உள்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் உள்ளன. இந்த லிப்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் தலா 40 பேர் செல்லலாம்.
 9. சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் உள்ளது. அங்கே ஒரே சமயத்தில் 200 பேர் வரை நின்று, அங்கு இருந்தபடி இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.
 10. சிலையின் அடித்தளம் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அங்கே 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஓட்டல் உள்ளது. மற்றும் கண்காட்சி அரங்கம், நினைவுப் பூங்கா, மியூசியம், உணவுக் கூடங்கள் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. 
11. நாள்தோறும் சுமார் 15 ஆயிரம் பேர் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குச் சிலையை சுற்றிக் காண்பிக்க 100 வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
12. 220 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றையும், 6.5 ரிக்டர் அளவிலான பூமி அதிர்ச்சியையும் தாங்கும் வகையில் சிலை உறுதியாக செய்யப்பட்டுள்ளது.
 13. 31-ந் தேதி திறப்புவிழா நடைபெறுகிறது என்ற போதிலும் நவம்பர் 1-ந் தேதி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
 14. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் இல்லத்தை அங்கே அமைக்கலாம் என்று குஜராத் அரசு அழைப்புவிடுத்து இருக்கிறது.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சரித்திர சாதனையாளர் ‘ஆல்பிரட் நோபல்’

சரித்திர சாதனையாளர் ‘ஆல்பிரட் நோபல்’ ஆல்பிரட் நோபல் இ ன்று(அக்டோபர் 21-ந் தேதி) ஆல்பிரட் நோபல் பிறந்த நாள். சாதனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அடைய துடிக்கும் மைல் கல் ‘நோபல் பரிசு’. டைனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் தான் இந்த பரிசின் தந்தை ஆவார். சுவீடன் நாட்டை சேர்ந்த இமானுவேல் நோபல் என்ற பொறியியலாளருக்கு 4-வது மகனாக பிறந்தார் ஆல்பிரட் நோபல். குடும்ப வறுமையின் காரணமாக அவருடன் பிறந்த 8 பேரில் இவரும், மேலும் 3 சகோதரர்களும் மட்டுமே குழந்தை பருவத்தை கடக்க முடிந்தது. பொறியியலாளரை தந்தையாக கொண்டதாலோ என்னவோ இவருக்கு வேதியியல் துறையில் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது 18-வது வயதில் பாரீஸ் சென்று ஜான் எரிக்சன் என்பவரிடம் 4 ஆண்டுகள் பணிபுரிந்து வேதியியல் துறையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பயனாக எரிவாயு மீட்டரை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். அதன் பின்னர் அவரது எண்ணமும், செயலும் முழுக்க முழுக்க நைட்ரோகிளிசரினுக்கு மாற்றாக எளிமையாக கையாளக்கூடிய வகையில் வெடிமருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நோக்கியே இருந்தது. அதன் முடிவில் கிடைத்தது தான் எளிதில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பாதுகாப்பான வெடிபொருளான டைனமைட். 1867-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வெடிபொருளுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் காப்புரிமை வாங்கினார். இதன் மூலம் 90 ஆயுத தொழிற்சாலைகளின் அதிபராகி செல்வ செழிப்புடன் வாழ்ந்தார். 1888-ம் ஆண்டு நோபல் இறந்துவிட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில் மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் உண்மையில் இறந்தது அவருடைய சகோதரர் லுக்விட் தான். இவ்வாறு நாளிதழில் வெளியான மரண அறிக்கை ஆல்பிரட் நோபலை வேதனையடைய செய்ததுடன், அவருக்கு தாங்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது. அதனால் தான், எக்காலமும் தன்பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக நோபல் அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கினார். அதன் மூலம் இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களுக்கும், இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்க திட்டமிட்டார். மேலும் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்க முடிவு செய்தார். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுத்தொகை வழங்குவதற்காக தனது சொத்துகளின் பெரும் பங்கை அந்த அறக்கட்டளையின் பேரில் உயில் எழுதி வைத்திருந்தார். அவ்வளவு பெரிய மனம் படைத்த ஆல்பிரட் நோபலுக்கு கணிதத்துறை மீது என்னதான் கோபமோ என்று தெரியவில்லை. அறிவியலின் அரசியாக கருதப்படும் கணிதத்திற்கு இந்த பரிசு வழங்க அவர் அனுமதி வழங்கவில்லை. அவரது மறைவிற்கு பிறகு 1901-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இப்போது வரை நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. -நெல்லை கணேஷ்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஈரக் கண்களோடு ஒரு வீர வணக்கம்

ஈரக் கண்களோடு ஒரு வீர வணக்கம் ஆர்.திருநாவுக்கரசு,ஐ.பி.எஸ், துணை ஆணையர், நுண்ணறிவுப்பிரிவு இன்று (அக்டோபர் 21-ந்தேதி) வீர வணக்கநாள் 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி. இந்திய தேசத்தின் இமயமலைப் பிரதேசம். கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் வெண்பனி மலைகள். மனித சுவடுகள் ஹாட்ஸ்பிரிங் என்ற இடம் வரை மட்டுமே அதிகம் நடந்து பழகி இருந்தது. ஓர் இருபத்தி இரண்டு பேர் கொண்ட குழுவினை தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி கரம்சிங், தனது குழுவினருடன் சீன எல்லையில் உள்ள லங்காலா என்னும் பகுதிக்குச் செல்ல ஆலோசனை செய்தார். மூன்று சிறு குழுக்களை அவர்கள் செல்ல வேண்டிய வழியினை ஆராய அனுப்பினார். அந்தி வேளையில் காற்றும் கூட தனது பயணத்தினை நிறுத்திக்கொண்டது. இரண்டு குழுக்கள் திரும்பி வந்து சேர்ந்தனர். நேரத்திற்கு திரும்பி வர வேண்டிய வயதுப் பெண்ணை, எதிர்பார்த்து காத்திருக்கும் தாயைப்போல், மூன்றாம் குழுவினர் சென்ற திசை நோக்கி காத்திருந்தார் கரம்சிங்.குளிர் இரவும், ஏக்கமும் அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தை மட்டுமல்ல, அவர்கள் மனதையும் கவ்வியது. விழித்த இரவில் காலடிச் சத்தம் தேடினர். மூன்றாம் குழுவில் சென்ற இரண்டு வீரர்கள், அவர்களுடன் சென்ற வழிகாட்டி மூவரின் பெயர்களையும் சத்தமாய் உச்சரித்துப் பார்த்தனர். பதிலே இல்லை. மறுநாள் அவர்கள் சென்ற திசைநோக்கி, இருபது வீரர்களும் பயணித்தனர். பனிக்கட்டியில் கால்கள் நழுவும் அப்பயணத்தில், கரம்சிங்கும், உடன் சென்ற வீரர்களின் பார்வையில் தூரத்து மலைமேல் மனித நடமாட்டம் தென்பட்டது. நம்மவர்கள்தான் என்று இவர்கள் கையசைக்க, அந்த குளிரினும் கொடிய எண்ணமுடைய சீனாகாரனின் தோட்டாக்கள், இந்தியச் சிப்பாய்களின் இதயங்களை ஊடுருவின. இருபதில், பத்துபேர் நடுகல்லாய் ஆனார்கள். ஏழு பேர் சிந்திய ரத்தத்தோடு சீனாவின் சிறைக்கைதியாகினர். எஞ்சியவர்களின் தகவலின் பேரில், இந்தியா சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, இறந்தவர்களின் உடல் இருபத்தி நான்காம் நாளில் (நவம்பர் 13) இந்திய மண்ணிற்கு திரும்பி வந்தது. “பொருதடக்கை வாளெங்கே! மணிமார் பெங்கே! போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோள்எங்கே எங்கே என்று கலிங்கத்துப் பரணி வரிகளை பாட எந்த சொந்தமும் அங்கு இல்லை. புகழுடம்புகள் விண்ணிற்கு ஆவியாகி, மேகத்தில் கலந்து இந்திய மனிதத்தின் மூச்சானது. 1960-ம் ஆண்டு, ஜனவரியில் காவல்துறை தலைவர்களின் மாநாடு கூடியது. ஹாட்ஸ்பிரிங்கின் நிகழ்வு ஒவ்வொருவரையும் ஒரு கனத்த துயரத்தில் ஆழ்த்தியது. உலகப் போரில் போரிட்டு உயிர் நீத்தவர்களுக்கு ஒரு “இந்தியா கேட்” போல தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் தனது உயிரினை, இத்தேசத்திற்காக அர்ப்பணிக்கின்ற மத்திய மற்றும் மாநில காவல்துறையினரின் தியாகம் பறை சாற்றப்பட வேண்டும் என முடிவெடுத்தனர். நம் இந்திய வீரர்கள் உயிர் நீத்த நாளான அக்டோபர் 21-ஐ வீர வணக்க நாளாக அனுசரிக்க தீர்மானித்தனர். இன்று 59-வது வீர வணக்க நாள். இதுவரை 35ஆயிரத்துக்கும் அதிகமான காவல் வீரர்கள் இத்தேச நலனுக்காக பணியில் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை இம்மண்ணுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார்கள்.அவர்களுக்கு நம் வீர வணக்கங்கள். அவர்களது, பிரிவால் வாடும் பெற்றோர், மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர்களுக்கு நம் ஈர வணக்கங்கள். காவல் பணி புனிதமானது. காக்கிச் சட்டை வீரம் செறிந்தது. காவல் பணி தேசம் காக்கும் நேசமான பணி. தேசத்தின் மாண்பு காக்கும் மகத்தான பணி. தேச மக்களின் சுதந்திரம் காக்கும் உன்னதப் பணி. பணிவோடு துணிவு காட்டும் தீரமான பணி. அல்லல் அழித்து, நல்லதை நிலைநிறுத்தும் அறப் பணி. எதிர்பாராததை எதிர்கொள்ளும் ஓர் அசாத்தியமான பணி. துடிப்பான இப்பணியில், ஆர்ப்பரிக்கும் அலை கடலில், கலங்கரை விளக்காய் உயர்ந்து நிற்கும் கடற்படையாய், விண்ணை முட்டும் மலைமீது எதிரியின் வழித்தடம் பார்த்து எல்லைப் பாதுகாப்பாய், நள்ளிரவில் புழுக்கம் கொள்ளும் பாலைவனத்திலும் வேலிகளைத் தாண்டவிடாத பாதுகாப்பு ராணுவமாய், பதுங்கியும் ஒதுங்கியுமிருந்து மனிதத்தை வேட்டையாடும் தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய பாதுகாப்பு படையாய், நாட்டின் தலைமையைப் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு படையாய், எல்லையில் பகைவரிடமிருந்து தேசம் காப்பதுபோல், உள்நாட்டில் கயவர்களிடமிருந்து சட்டம் ஒழுங்கை காக்கும் காவலாய் என பாதுகாப்பின் பல உருவில் நம் தேசத்தை சேதமில்லாமல் காப்பதுதான் காவல். “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன் நாளை எடுத்து” என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு இலக்கணமாய் ஒவ்வொரு நாளும், நம் இந்திய தேசத்தினை வீரத்தினால் காப்பவர்கள் நம் காவல் வீரர்கள். துப்பாக்கிகளோடு வரும் எதிரியையும் எதிர்கொள்ளுதல், கலங்க வைக்கும் கலகக்காரர்களை கட்டுப்படுத்துதல், பேரிடர் காலத்தில் பேருதவி செய்தல், அரக்க குணம் கொண்ட தீவிரவாதிகளை அடியோடு அழித்தல், மிருக குணம் கொண்ட குற்றவாளிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துதல் என ஒவ்வொரு நாளிலும், கொடூரமான அபாயங்களை நித்தமும் சந்திப்பது காவலரின் கடமை. தேசத்தின் அமைதிகாக்கவும், அதன் அபார வளர்ச்சிக்காகவும், அபாயத்தையும், இறப்பையும் பரிசாக பெறுபவர்கள் காக்கி சட்டையினர். இத்தகையை தியாகப் பரிசுகளைக் காவல் வீரர்கள் பெறுவதால்தான், ஒவ்வொரு இந்தியனின் தனிமனித சுதந்திரமும் காவல் கவசத்தால் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. வீரவணக்க நாளில், வீரர்களின் நினைவுத் தூண்களுக்கு முன்னால் ஈரக் கண்களோடு நிற்கும்போது போது, “உங்களின் சிறப்பான வருங்காலத்திற்காக எங்களின் இன்றைய அழகான நிகழ்காலத்தை அர்ப்பணித்தோம்“ என்று அர்பணித்தவர்களின் வாய் மொழிகள் மனதில் ஆழமாய் விழுகிறது.உலகெங்கிலும் பரவலாக பேசப்படுகின்ற தீவிரவாதம், வீதிகளிலே பயணிக்கின்ற ஒரு தனி மனிதனை அச்சுறுத்தினால், இந்த தேசத்திற்காகவும், தனி மனித சுதந்திரத்திற்காகவும், தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை மனதில் நிறுத்துவோம். அதன் பின்னர், ஓர் உறுதி ஏற்போம். பணியில் ஓர் உத்வேகம் கொள்வோம். இந்த தேசத்தினுடைய ஒற்றுமையையும், பாதுகாப்பையும், உறுதிப்படுத்தி ஒரு வளமான, அமைதியான எதிர்காலத்தோடு இந்த தேசம் விளங்க, நாம் எத்தகைய தியாகத்தையும் மேற்கொள்ள சூளுரைப்போம். ரத்தங்களை சிந்தத் துணிவது வீரம்! ரத்தங்களை வியர்வையாக்கி உழைப்பது ஈரம்!! ஓர் ஈர மனதோடு வீரவணக்கம் செலுத்தும் இந்நாளில், ஒரு வீர மனதோடு வாழ்கின்றோம் என்ற பெருமை கொள்வோம்!!!.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 20 October 2018

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் செல்வங்கள்

நாம் நம் கையில் இருக்கும் பணத்தை வைத்தும், நகைகளை வைத்தும், சொத்துகளை வைத்தும் நமது வலிமையை மதிப்பிடுகிறோம். இது சரியல்ல. இரும்புப் பெட்டி ஒன்றின் மீது உட்கார்ந்துகொண்டு ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அங்கு வந்தவர், ‘‘இந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது?’’ என்று கேட்டார். ‘‘இது வெறும் இரும்புப்பெட்டி. இதில் ஒன்றும் இல்லை!’’ என்றார் பிச்சைக்காரர். ‘‘அப்படியா? இதில் ஒன்றும் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்றார் அவர். ‘‘இதில் ஒன்றும் இருக்காது சாமி. இதன் மீது உட்கார்ந்துகொண்டு 25 வருடமாகப் பிச்சை எடுக்கிறேன், எனக்குத் தெரியாதா?’’ என்றார் பிச்சைக்காரர். ‘‘நீங்கள் இந்த முடிவுக்கு வருவதற்கு முன் பெட்டியைத் திறந்து பார்த்ததுண்டா?’’ என்று கேட்டார் இவர். ‘‘இல்லை... இல்லை... திறந்து பார்த்தது இல்லை. ஆனால் இதில் ஒன்றும் இருக்காது’’ என்றார் அவர் அழுத்தமாக. ‘‘சரி, இதைத் திறந்துதான் பாருங்களேன்’’ என்றார் இவர். அந்தப் பிச்சைக்காரர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, பெட்டி நிறைய தங்கக் காசுகள். மூச்சடைத்துப் போன பிச்சைக்காரர், ‘‘தங்கக் குவியல் மீது அமர்ந்தா இவ்வளவு காலம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன்?’’ என்றாராம். இந்த நபரின் கதைதான், நம்மில் பலரது கதையும். நம்மிடம் மறைந்துகிடக்கும் செல்வங்களை நாம் தேடிப் பார்க்கவில்லை. எனவே இப்படியெல்லாம் செல்வங்கள் நம்மிடம் இருப்பதும் தெரியாமலே போய்விட்டது. கண்களுக்குத் தெரியாத அல்லது நாம் உணராத செல்வங்கள் என்பவை... நேர்மைத்திறன் சிந்திக்கும் திறன் ஞாபகசக்தி கருணை உணர்வு நற்பண்புகள் உறுதியான உடல் நல்ல நண்பர்கள் நன்கொடை மற்றவர்களை மதிக்கும் பண்பு செய்த நல்ல காரியங்கள் நேர்மறைச் சிந்தனை குடும்பம் நண்பர்கள் இப்படி தனிப்பட்ட செல்வங்களைக் கண்டுபிடித்த சில இளைஞர்களை எனக்குத் தெரியும். உதாரணமாக, 2009-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டில் முதல் மதிப்பெண் பெற்றவர், கரூரைச் சேர்ந்த ஓர் ஏழை மாணவர். அவரைப் பாராட்ட அவரது வீட்டுக்குச் சென்றேன். மாணவரின் தந்தையார் மறைந்துவிட்டார். அரசு கட்டித் தந்த சிறிய வீட்டில் தனது தாயாருடன் குடியிருந்தார். சித்தாள் வேலைக்குப் போகும் தாயார் தினமும் 200 ரூபாய் சம்பாதித்து மகனைக் காப்பாற்றிக்கொண்டிருந்தார். ‘‘எங்கம்மாவை நான் காப்பாற்ற வேண்டும், எனவே மருத்துவராக வேண்டும்’’ என்றார் அவர். இங்கிலாந்தில் வாழும் எனது டாக்டர் நண்பருக்கு அம்மாணவரை அறிமுகம் செய்துவைத்து, படிக்க உதவி செய்தேன். இன்று அந்த இளைஞர் ஒரு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர். முதுகலைப் பட்ட மேற்படிப்பு படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இன்று அவர் சக்திவாய்ந்த மனிதர். ஆனால் அன்று அவரிடம் பணம் இல்லை. என்றாலும் அவர் ஏழை அல்ல. அவரிடம் பணம் தவிர்ந்த பல சொத்துகள் இருந்தன. ஆர்வம், அறிவு, சிந்தனைத்திறன், விடாமுயற்சி, தன்பிக்கை, உழைக்க விருப்பம் என்ற அந்தச் செல்வங்களை அவர் பயன்படுத்தினார். இன்று சொந்தக் காலில் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். நீங்களும் உங்களது அனைத்துச் செல்வங்களையும் ஆராய வேண்டும்.
ஒருமுறை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், உலகப் பெரும் செல்வந்தர் ஹென்றி போர்டின் மிகப் பெரிய சொத்து எது என்ற விவாதம் நடந்ததாம். அவரது வங்கிக்கணக்கு, நிலம், பண்ணைவீடு போன்றவை வெறும் 5 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 95 சதவீதம் அவரது போர்டு மோட்டார் நிறுவனம் என்று தீர்மானித்தனர் மாணவர்கள். ஆனால் ஒரு மாணவர் மட்டும் வேறுவிதமாகச் சிந்தித்தார். அவர், ஹென்றி போர்டின் மோட்டார் நிறுவனம், வங்கிக் கையிருப்பு, வீடு, தோட்டம் அனைத்தும் வெறும் 5 சதவீதம்தான் என்றார். மீதம் 95 சதவீதம் என்னவென்று பேராசிரியர் வினா எழுப்பினார். ‘‘அதுதான் அந்த ஹென்றி போர்டு என்ற மனிதர்’’ என்றார் அந்த மாணவர். அதற்கு விளக்கம் கேட்டபோது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா? ‘‘இந்தச் செல்வங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து பறித்தாலும் அந்தத் தனிமனிதர் இன்னொரு போர்டு நிறுவனத்தை உருவாக்கிவிடுவார்’’ என்பதுதான். தனிப்பெருமை வாய்ந்த ஒரு சொத்து, உங்கள் புத்தி. அதற்குத் தகுந்த பயிற்சி அளித்துத் தயார்ப்படுத்திக்கொண்டால், உலகில் நீங்கள் விரும்பும் பணத்தையும் புகழையும் அதிகாரத்தையும் சம்பாதித்துக்கொள்ள முடியும். செல்வம் எது என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே உங்களது நிகர மதிப்பை மதிப்பீடு செய்யும்போது, கையிருப்புப் பணத்தையும், வீட்டையும், நகைகளையும் மட்டும் வைத்துக் கணக்கிடாதீர்கள். உங்களுடைய திறமைகளையும், ஆசைகளையும், திட்டங்களையும், கனவுகளையும், உறவுகளையும், நண்பர்களையும், உங்களுக்கு இருக்கும் நேரத்தையும் சேர்த்துக் கணக்கிடுங்கள். பொருளாதார நிலையில் தாழ்ந்த ஒருவரின் மிகப் பெரிய சொத்து, அவரது அறிவுத்திறமைகள்தான். இருக்கும் செல்வத்தை எண்ணிவிட முடியும் என்றால் அவன் பணக்காரன் இல்லை. எண்ண முடியாத அளவில் மற்ற செல்வங்கள் இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை அதிகம் சம்பாதிக்க வேண்டும். அது நவீன காலத்தின் ரூபாய் நோட்டுகள் ஆகும். பண வசதி இல்லாத தந்தை ஒருவர் இரண்டு கைகளையும் விரிக்கும்போது அவரது குழந்தைகள் ஓடிவந்து கைகளில் அடைக்கலமாகின்றனர். அவர் அளவிலா ஆனந்தம் அடைகிறார். ஏழை என்றாலும் அவர் உண்மையிலேயே பணக்காரர்தான். இருந்த பணம் அனைத்தையும் இழந்தபின் ஒருவரைப் பற்றிய மதிப்பீடு எதுவோ அதுதான் அவரின் உண்மையான சொத்து. பணம் இல்லாதவர்கள் எல்லாம் ஏழை அல்ல. பணக்காரப் பெண்மணி ஒருவர் ஜவுளிக்கடைக்குச் சென்று, ‘‘மகனுக்குத் திருமணம், ஒரு மலிவான புடவை காட்டுங்கள். வேலைக்காரிக்குக் கொடுக்க வேண்டும்’’ என்றார். அன்று மாலையில் ஓர் ஏழைப்பெண் அதே கடைக்கு வந்து, ‘‘விலை உயர்ந்த ஒரு புடவையைக் காட்டுங்கள், முதலாளி அம்மாவுக்குப் பரிசளிக்க வேண்டும், அவரின் மகனுக்குத் திருமணம்’’ என்றாராம். இதில் பணக்காரர் யார், ஏழை யார் என்று சிந்தித்துப் பாருங்கள். வருமானத்தை வைத்துப் பிழைப்பவர்கள் ‘ஏழைகள்’, கொடுத்து வாழ்பவர்கள் ‘பணக்காரர்கள்’. பணமும் மண்ணும் பொன்னும் உடல்நலமும் உறவும் நண்பர்களும் இருந்தால் போதாது. ஒருவர் இன்புற்று இருக்க வேண்டும். செல்வத்தை எந்த அளவுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்பதில் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கிறது. பகிர்ந்து வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை. அதுவே பணக்கார வாழ்க்கை எனலாம். பணமில்லை என்றாலும் பணக்காரராக வாழ வழி உண்டு. உங்கள் பெற்றோரின் பெரிய சொத்து நீங்கள். இந்த நாட்டின் சொத்தும் நீங்கள்தான். உங்களை நம்பித்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. உங்களிடம் இருக்கும் அனைத்துச் செல்வங்களையும் ஆய்வு செய்யுங்கள். சில உயர்ந்த செல்வங்களை வரும் வாரங்களில் அறிவோம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ?

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ? ஆர்.எஸ்.வேலுமணி, பாரம்பரிய எலும்பு முறிவு வைத்தியர் மருத்துவம் என்பது நோயை குணப்படுத்தவும், அந்த நோய் மீண்டும் தாக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான கலை ஆகும். தற்கால மருத்துவம் காயங்களை கண்டறிந்து உயரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அமைகிறது. மருத்துவ தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை தான், எனினும் மருத்துவத்தின் எல்லா தடங்களிலும் இதன் நீட்சி வேண்டுமா? என்பதே கேள்வி. சித்தா, ஆயுர்வேதம் என்று நம் பண்டைய மருத்துவ முறைகள் பெருமையை பறை சாற்றினாலும், எலும்பு முறிவுக்காக தமிழர் மேற்கொண்ட பாரம்பரிய சிகிச்சை உலக அளவில் புகழ்பெற்றது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எலும்புகள் மீது ஏற்படும் மோதலே எலும்பு முறிவு. மூடிய முறிவு, திறந்த முறிவு, நோய்நிலை முறிவு, அழுத்த முறிவு, பிறப்பு முறிவு என்று எலும்பு முறிவு பலவகைப்படும். இந்த பிரச்சினைக்கு கட்டு கட்டும் பாரம்பரிய சிகிச்சை முறை மிகவும் அறிவியல் பூர்வமானது. தற்காலத்தில் எலும்பு முறிவு பிரச்சினை ஏற்பட்டால்,அலோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் 5 முதல் 10 துளைகள் போட்டு, எலும்பின் மீது பிளேட் வைத்து, துளைகளில் திருகு கோர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நவீன சிகிச்சை மேற் கொள்வதற்கு தோலை அறுத்து, ரத்த நாளங்களை துண்டித்து தசைகளை சேதப்படுத்த வேண்டியதுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு எலும்பில் உள்ள பிளேட்டை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் நம் முன்னோரின் சிகிச்சை முறையே அற்புதமானது. சேதமடைந்த தசையை நேராக்கி, முறிந்த எலும்பின் இரு முனைகளும் துல்லியமாக ஒன்று சேர்த்து கட்டு கட்டப்படுகிறது. இதன்மூலம் இரு முனை பகுதிகளுக்கிடையே எலும்பின் திசு மற்றும் ரத்த அணுக்களும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுகூடி இணைப்பு பாலம் உருவாகிறது. அதன்மீது கால்சியம் படிவங்கள் தானாகவே படிந்து எலும்புகள் மீண்டும் உறுதி பெறுகின்றன. சிகிச்சை நடைபெறும் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோரை கடினமான வேலைகளை செய்யவைத்தும், மெது மெதுவாக நடக்க வைத்தும் பயிற்சி தரப்படுகிறது. இதுவே நமது பாரம்பரிய சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையில் பக்க விளைவுகளும் கிடையாது. துளியும் ரத்தம் வீணாகாது. தற்கால நவீன சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் இந்த சிகிச்சை முறையில் பலன் கிடைக்க கூடுதல் நாட்களாகும். ஆனால் பலன் பெறும்போது எலும்பு முறிவு ஏற்பட்ட அறிகுறியே இருக்காது. அறிவியல் பூர்வமான இச்சிகிச்சை முறையை பல நாட்டவரும் நம்மை பார்த்து மேற்கொண்டு வருகின்றனர். 30 நாள் கரு தரித்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சைக்கு போக முடியாது. ஏனென்றால் மயக்க மருந்து கொடுத்தாலோ, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டாலோ அந்தப்பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. பாரம்பரிய மருத்துவ சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும்.அதே போல சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த முறையே சாலச்சிறந்தது. ஆனால் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு இன்று வரை மருத்துவ அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் வேதனை. கலைகள், விளையாட்டுகள், நடன நாட்டியங்கள் என பாரம்பரியத்தை மீட்டெடுத்து வரும் இச்சூழ்நிலையில் நமது பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதும் அவசியமானதாகும். எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை பெற விரும்பாதவர்கள் விருப்பப்படி எலும்பு முறிவுக்கு கட்டு கட்டும் பாரம்பரிய சிகிச்சை முறையை அரசு மருத்துவ மனைகளில் அறிமுகப்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவத்தை உதாசீனப்படுத்தாமல் சித்த மருத்துவத்தை தனிப்பிரிவாக செயல்படுத்தியது போல எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டு கட்டும் சிகிச்சை முறையை தனிப்பிரிவாக அரசு மருத்துவமனை, அரசு கல்லூரிகளில் பயிற்றுவித்து மக்கள் பயன் பெற செய்ய வேண்டும். நவீன மருத்துவத்துக்கு நாம் எதிரி அல்ல. அதேவேளையில் பாரம்பரியத்தை இழக்கவிட கூடாது என்பதே திண்ணம். “எலும்பு கடித்து வாழ்ந்தான் எம் பாட்டன் நூறாண்டு”, என்பது தமிழ் மக்களின் முதுமொழி. பாரம்பரியமும், நவீனமும் கலந்தால் இம்முதுமொழியும் சாத்தியம் தான். காலமே அதற்கு சாட்சியம் கூறட்டுமே.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துப்பாக்கி; தற்காப்புக்கா, தற்கொலைக்கா?

துப்பாக்கி; தற்காப்புக்கா, தற்கொலைக்கா? நடராஜ் ஐ.பி.எஸ்., சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பெருமையாக பாதுகாப்பு பலப்படுத்தும் நடவடிக்கை செய்தியாக வருகிறது. ஆனால் அந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் உஷாராக நல்ல மனநிலையுடன் ஏந்திய துப்பாக்கிக்கு மரியாதை அளித்தால் தான் பாதுகாப்பு முழுமையாகும். சமீப கால நிகழ்வுகள் அச்சம் ஊட்டும் வகையாக அமைந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக நாட்டில் பல இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ், ராணுவம் அதையே சொந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் வகையில் சகட்டு மேனிக்கு துப்பாக்கி சுடும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.விழுப்புரத்தில் நடந்த கொடுமை எந்த பெண்ணுக்கும் வாய்க்கக்கூடாது. டாக்டர் ஆகணும்னு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ மேல்படிப்பு படிக்கும் சரசுவதி ஒருதலைக் காதல் கொடூரன் கதிர்வேலால் சுடப்பட்டு செத்தாள் என்பது ஒப்புக்கொள்ள முடியாத நிகழ்வு. முப்பது வயதான கதிர்வேல் ஆயுதப்படை காவலர். பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவில் பணிபுரிந்தார். அவருக்கும் அவரது மாவட்டத்தை சேர்ந்த சரசுவதிக்கும் பேஸ் புக் மூலம் நட்பு. அதுவே காதலாக மலர்ந்தது. டிஜிட்டல் உலகில் மொபைல் போன் எந்த அளவுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சரசுவதி வீட்டிலும் இருவர் நெருக்கத்திற்கு தடை சொல்லவில்லை என்கிறார்கள். நர்ஸ் படிப்பு படித்துக்கொண்டிருந்த சரசுவதிக்கு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது பிறந்த நாள் கொண்டாடுவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தன் பெற்றோர் இல்லத்தில் சரசுவதி தங்கியிருந்த போது காவலரும் பரிசுப்பொருளுடன் காதலிக்கு வாழ்த்து சொல்லி தொடர்ந்த உரையாடல் வாக்குவாதத்தில் முடிந்தது. கதிர்வேலுக்கு சரசுவதி சில ஆண் நண்பர்களோடு பழகுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதை வைத்து எழுந்த சண்டையில் ஆத்திரமுற்ற கதிர்வேல் அரசு அளித்த கைதுப்பாக்கியால் காதலியை சுட்டு அதோடு நிற்காமல் தன்னையும் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டது கொடூரமான சம்பவம். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து பதறியடித்து வந்த பெற்றோருக்கு எப்படி இருக்கும்? இப்படி பலி கொடுக்கவா ஆசை மகளை வளர்த்தார்கள்? அவளது வாழ்நாள் குறிக்கோள் டாக்டராகி ஊர் மக்களுக்கு சேவை செய்வது தவிடு பொடியாச்சே!விடுப்பில் வந்த காவலர் எவ்வாறு துப்பாக்கி கையில் வைத்திருந்தார் , அதுவும் காதலியை பார்க்க வந்த இடத்தில் என்பது முதல் விதி மீறல். உதவி ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தான் கைதுப்பாக்கி கொடுக்கப்படும். ஆயுதப்படை காவலருக்கு நீள துப்பாக்கி கொடுக்கப்படும். அதுவும் அவர்கள் காவல் பணியில் இருக்குபோது மட்டும். பணி முடிந்ததும் ஆயுதத்தை கிடங்கில் ஒப்படைத்துவிட வேண்டும் அல்லது காப்பில் உள்ள தலைமை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவேட்டில் பதிய வேண்டும். இவ்வளவு நடைமுறைகள் இருந்தும் விதிகளை மீறும் துணிவு எப்படி வந்தது? இன்னொரு வேதனையான சம்பவம். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உத்தரபிரதேச பிரிவு உயர் அதிகாரி விவேக் திவாரி தன்னுடன் பணி செய்யும் பெண் ஊழியருடன் காரில் வீடு திரும்புகையில் வாகன சோதனைக்கு காவலர்கள் நிறுத்த திவாரி காரை நிறுத்தாதலால் துப்பாக்கி சூடு நடத்தியதில் திவாரி காயமுற்று கார், தடுப்பு சுவர் மீதி மோதி நின்றது. காயமுற்ற காரில் இருந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திவாரி உயிரிழந்தார். நொடிப்பொழுதில் ஒரு காவலரின் அவசர தரமில்லா செயலால் ஒரு சாமானியன் உயிர் போயிற்று. இது செப்டம்பர் 29-ந் தேதி நடந்தது. காவலர் சவுதிரி மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் போன உயிர் திரும்பாது. அரியானா மாநிலத்தில் நீதிபதியிடம் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் நீதிபதியின் மனைவி மகனை தனது துப்பாக்கியால் சுட்டதில் நீதிபதி மனைவி உயிரிழந்தது அதிர்ச்சியூட்டும் சம்பவம். இது சில நாட்கள் முன் நடந்த சம்பவம்.துப்பாக்கி கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு வகை திமிர் வருவதற்கு காரணம் என்ன? துப்பாக்கி பயிற்சி என்பது துப்பாக்கி எப்படி சுடுவது என்பது மட்டுமல்ல எப்போது யார் மீது எவரது உத்தரவில் என்பதுதான் முக்கியம். இதைத்தான் திரும்ப திரும்ப காவலர்களுக்கு வலியுறுத்த வேண்டும். காவலர்கள் மிகுந்த மன அழுத்தம் தரும் பணியில் இருக்கிறார்கள் என்பது உண்மை. இருப்பத்தி நான்கு மணி நேர பணி எந்நேரமும் எங்கே வேண்டுமோ அங்கு உடனடி பணியில் அமர்த்துவார்கள். வேளைக்கு சாப்பாடு கிடைக்காது. சரியான கழிப்பிடம் இருக்காது. குடும்பத்தை கவனிக்க முடியாது. பண்டிகை நாட்களில் தான் வேலை பளு அதிகம். இத்தகைய சூழலில் பலரது மனநிலை பாதிக்கப்படுகிறது. இங்குதான் மேற்பார்வையிடும் அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமாகிறது. இந்திய காவல் அமைப்பு ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் உருவாக்கப்பட்டது. ஆண்டவர்கள் அவர்களுடைய வசதிக்கு காவல் பணியை வரைமுறை படுத்தினார்கள். அவர்களது ஆட்சிக்கு பாதிப்பு வராத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பு என்பது பெயரளவில் தான்! இந்த நிலை சுதந்திரம் பெற்ற பிறகு வெகுவாக மாறவில்லை என்பது வருத்தமளிக்கும் நிலை. காவல் துறை நவீனமயமாக்கலில் பல உபகரணங்கள் ,தொலை தொடர்பு சாதனங்கள் நவீன துப்பாக்கிகள் வாங்கப்படுகின்றன. ஆனால் அதை பராமரிக்கும், உபயோகிக்கும் காவலருக்கு சரியான பயிற்சி அளிப்பதில் தேவையான அளவு கவனம் செலுத்துகிறோமா என்பது கேள்விக்குறி. இந்திய காவல்துறையை சீரமைக்க 1977- ம் வருடம் தரம்வீரா போலீஸ் கமிஷன் பரிந்துரைகளை செயலாக்கவேண்டும் என்று உச்ச நீதி மன்றம் 2006- ம் வருடம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு ஓய்வு பெற்ற டிஜிபி பிராஷ் சிங்க் தாக்கல் செய்த பொது நல வழக்கு விசாரணைக்குப் பிறகு அளிக்கப்பட்டது. சுதந்திரம் பெற்று முப்பது ஆண்டுகள் கழித்து காவல்துறை சீரமைக்க கமிஷன் போடப்படுகிறது. கமிஷன் பரிந்துரைகள் அமலாக்கவில்லை. 1996- ம் வருடம் உத்தர பிரதேச ஓய்வு பெற்ற டிஜிபி பிரகாஷ் சிங் தரம்வீரா கமிஷன் பரிந்துரை அமலாக்கவேண்டும் என்ற பொதுநல வழக்கு பத்து வருட விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்ற ஆணை இடப்பட்டது. அதற்கு பிறகும் பல மாநிலங்கள் முறையாக பரிந்துரைகளை அமல் படுத்தவில்லை. பிரகாஷ் சிங்க் இன்னும் உச்ச நீதி மன்றத்தில் தனது தள்ளாத வயதில் போராடிக்கொண்டிருக்கிறார். நாட்டில் இயங்கும் காவல்துறை, இருக்கும் பிரச்சினைகளை தாங்கி கொண்டு இருந்த இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நமது நாட்டில் எல்லாம் மெதுவாகத்தான் நடக்கும் என்பதற்கு காவல் சீரமைப்பு ஒரு எடுத்துக்காட்டு. சிறப்பான வழிகாட்டுதல் 1977-ல் மத்திய போலீஸ் கமிஷன் கொடுத்தது. நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையடையவில்லை. மக்கள் சேவை ஒன்றே நேர்மையான போலீசுக்கு அழகு. அத்தகைய திறமை வாய்ந்த காவலர்களுக்கு உரிய பயிற்சி அவசியம். முதல் கட்ட பயிற்சியோடு பணியில் மன அமைதிக்கான பயிற்சி அளிக்க வேண்டும். பெங்களூருவில் உள்ள மனவள மருத்துவ சிகிச்சை மையம் நிம்ஹான்ஸ் உதவியோடு உளவியல் சார்ந்த பயிற்சி தமிழக காவல்துறையினருக்கு அளிக்கும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி ஒரு பக்கம், அதே சமயம் பணியில் காவலர்களுக்கு மன அழுத்தம் கொடுக்காத வகையில் போலீஸ் நிர்வாகம் அமைய வேண்டும். உளவியல் மருத்துவர் காவல் துறைக்கு அவசியம். மனரீதியாக பாதிக்கப்பட்ட பணியாளர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க உதவும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 18 October 2018

பாரதியார் பாராட்டைப் பெற்ற நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பேராசிரியர் க.சுபத்திரா நாளை(அக்டோபர் 19-ந்தேதி) நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள். “தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று தொடங்கும் பாடல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளெங்கும் பாடப்பட்டு வந்த பாடல் ஆகும். நாமக்கல் கவிஞர் எழுதிய கதை “மலைக்கள்ளன்” என்னும் பெயரில் திரைப்படமாக வெளி வந்த போது அந்தப் படத்தில் இடம் பெற்ற அவரது பாடலாகும். குடியரசுத் தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் என்னும் பெருமையும் இப்படத்திற்கு உரியது, நாமக்கல் கவிஞரின் கதைக்குத் திரைக்கதையும் உரையாடலும் கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ளார். மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை “மலைக்கள்ளன்” பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக் கதை படமாக்கப்பட்டது. “மலைக்கள்ளன்” அனைத்து மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றது. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை என்று பின்னாளில் உலகறிந்த இந்தக் கவிஞர் 1888-ம் வருடம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் என்ற ஊரில் பிறந்தார். அவ்வூர் போலீஸ் “ஏட்டு” ஆக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு எட்டாவது ஆண் குழந்தையாய்ப் பிறந்த ராமலிங்கம் தமது கவித்திறமையால் எட்டுத்திசையும் புகழும் பெருமை பெற்றார். தம் மகன் பெரிய படிப்பு படித்துப் பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் எனத் தந்தை ஆசைப்பட்டார். ஆனால் ராமலிங்கம் பிள்ளைக்கு நாட்டமெல்லாம் தமிழ் இலக்கியத்திலேயே இருந்தது.தமது பத்தொன்பது வயதில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஓவியக்கலையில் நாட்டம் கொண்டு அதில் திறமையை வளர்த்துக்கொண்டார். இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் தமது முடிசூட்டுவிழாவை டெல்லியில் நடத்தியபோது அந்த மன்னரை இவர் வரைந்து அனுப்பிய ஓவியத்துக்காகத் தங்கப்பதக்கம் பெற்றார். டெல்லிக்கு அழைத்து அந்த மன்னரோடு அமர்ந்து விருந்து அருந்த அழைக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றார். அரசரால் சிறப்புப் பெற்றவர் ஆங்கிலேய அரசை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொடக்கத்தில் திலகருடைய தீவிரவாதக் கட்சியில் ஈடுபட்டார்.பின்னர் காந்தியின் அணிக்கு மாறினார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் காரைக்குடிக்கு அருகில் உள்ள கானாடு காத்தான் என்னும் ஊருக்கு வந்திருந்தார். அவரைப் பார்க்க ஆசைப்பட்டு நாமக்கல் கவிஞர் சென்றிருந்தார்.அவரைப் பாரதியாருக்கு “இவர் நல்ல ஓவியர்“ என்று அறிமுகப்படுத்தினார்கள்.“பிள்ளைவாள்! நீர் நம்மை ஓவியம் தீட்டும். யாம் உம்மைப் பற்றிக் காவியம் தீட்டுவோம்” என்று பாரதியார் கூறினாராம். இவர் பாடல்கள் இயற்றுவதிலும் ஈடுபாடு உடையவர் என்றதும் “ஏதாவது நீர் இயற்றிய பாடலைக் கூறும்.“ என்று பாரதியார் கேட்டுக்கொண்டாராம். ஆனால் மகாகவியின் முன் நமது பாடலா என்று நாமக்கல் கவிஞர் முதலில் தயங்கியுள்ளார்.“கூச்சம் எதற்கு? பாடும். என்று பாரதியார் தூண்டிய போதும் எந்தப் பாடலைக் கூறுவது எனத் தயங்கிய நாமக்கல் கவிஞர் கிட்டப்பா நாடகக்குழுவினருக்குத் தாம் எழுதிக் கொடுத்த பாடல் ஒன்றைக் கூறியுள்ளார்.“லங்காதகனம்” என்னும் நாடகத்துக்காக எழுதப்பட்ட பாடல்களுள் ஒன்று ராமனுடைய சோகத்தைக் கூறுவதாக அமைந்திருந்தது. “தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத் தான் வணங்கிக் கைகட்டிநின்றபேரும்” என்று பாடலின் முதல் அடியைச் சொன்னவுடனே எழுந்துநின்று கைதட்டி“பலே பாண்டியா! பலே!பலே!” என்று ஆனந்தக்கூத்தாடினாராம் பாரதியார். அவ்வாறு பாரதியாரின் உள்ளம் கவர்ந்த நாமக்கல் கவிஞர் பாரதியாரின் வழிவந்த தேசியக்கவிஞர் என்று புகழ்பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து விடுதலை உணர்வைக் கிளர்ந்து எழச் செய்யும் பாடல்களைப் படைத்தார். பரிசுக்காகவோ, பாராட்டுக்காகவோ தமது கவிதை படைப்பில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. ‘கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.திருச்சிராப்பள்ளியில் டாக்டர் ராஜன் வீட்டிலிருந்து ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்குப் புறப்பட்ட சத்தியாக்கிரகப் போராளிகளின் ஊர்வலத்திற்கு இந்தப் பாடல் தான் வழிநடைப்பாட்டாக அமைந்தது. ராஜாஜி இந்தப் பாடலைப் பாராட்டி நாமக்கல் கவிஞருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். “இந்தச் சமயத்தில் சுப்பிரமணிய பாரதியார் இல்லையே என்று நான் எண்ணினேன். அந்தக் குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சத்தியாக்கிரகப் போர் முழக்கப் பாடலாக விளங்கிய இந்தப் பாட்டை ஒரு வாரப் பத்திரிகை லட்சக்கணக்கில் அச்சிட்டுத் தமிழ்நாடெங்கும் பரப்பியது. தமது பாடல்களாலும் நூல்களாலும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் நாட்டுப்பற்றை ஊட்டும் பணியில் அயராது ஈடுபட்டார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.மக்கள் மனங்கவர்ந்த தேசியக்கவிஞராகப் புகழ்பெற்றார். 1948-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் காந்தியடிகள் நினைவாக நினைவுத் தூண் ஒன்று நிறுவி அதனை அந்நாளைய தமிழக முதல்-அமைச்சர் குமாரசாமி ராசாவை கொண்டு திறக்கச் செய்தார். அன்று மாலை நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரைத் தலைமை வகிக்கச் செய்து அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணாவை சொற்பொழிவு ஆற்றச் செய்தார். அண்ணாவும் நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்கு நேர் சந்தித்து பேசினர். அப்போது “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று அண்ணா நாமக்கல் கவிஞருக்குப் புகழாரம் சூட்டினார். அவரது எழுத்தாற்றலையும் கவிதைச் சிறப்பையும் மனமாரப் பாராட்டி மகிழ்ந்தார். 1953-ம் ஆண்டு ‘சாகித்ய அகாடமி‘யின் நிர்வாகக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றார்.சாகித்ய அகாடமி என்னும் அமைப்பு இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனமாகும்.இந்திய மொழிகளின் இலக்கியப் படைப்பாளிகளின் சார்பாளர்கள் கலந்து செயற்படும் இந்த அமைப்புக்கு ஜவகர்லால் நேரு தலைவராக அப்போது விளங்கினார். முதல் கூட்டத்தில் நாமக்கல் கவிஞரை நேருவுக்கு அறிமுகப்படுத்தியபோது டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தமது அறிமுகவுரையில் “நாமக்கல் கவிஞர் ஓர் அரிய கலைஞர்; தலைசிறந்த தேசபக்தர்; தேசத்துக்காகத் தியாகம் பல செய்தவர்; சிறைவாசம் புரிந்தவர்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; “ஆடு ராட்டே சுழன்று ஆடு ராட்டே!“ என்று பாடித் தமிழ் நாட்டையே சுழன்று ஆடச் செய்தவர்“ என்று பாராட்டியது இங்குக் குறிப்பிடத்தக்கது. 1949-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவியை வழங்கிச் சிறப்பித்தது. தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இருமுறை இவர் நியமிக்கப்பட்டார். 1971-ல் இவருக்கு இந்திய அரசு ‘பத்மபூஷன்’ விருது வழங்கிச் சிறப்பளித்தது.திரைப்படமாக வெளிவந்து புகழ்பெற்ற மலைக்கள்ளன் என்னும் நாவலைத் தவிர இவர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார். ‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று முழங்கிய நாமக்கல் கவிஞர் 1972-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி காலமானார்.தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டி இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன நாமக்கல் கவிஞரின் வீரமுழக்கத்திற்கேற்பத் தமிழ்நாடு சிறந்துவிளங்கும் நிலையை உருவாக்குவதே அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக விளங்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மக்களால் மறக்கப்பட்ட தீவுக்கோட்டை

மக்களால் மறக்கப்பட்ட தீவுக்கோட்டை ஆறு.அண்ணல், வரலாற்று ஆய்வாளர் தமிழ்நாட்டில் கோட்டை என்றாலே செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை, திருச்சி மலைக்கோட்டை போன்றவை தான் மக்களின் நினைவுக்கு வரும். இவைகளெல்லாம் நல்ல நிலைமையில் இருக்கின்றன. ஆனால், சிதைந்து போன கோட்டைகளும், பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் தீவுக்கோட்டை. இது, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் கொடியம்பாளையம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. நாகை மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வெகு அருகிலேயே இந்த தீவு இருக்கிறது. ஒருபுறம் கொள்ளிடம் ஆறும் மற்ற புறங்களில் ஆழமான நீர் நிலையுடன் கூடிய மாங்குரோவ் காடுகளும் காணப்படுகின்றன. கடல் பகுதியில் இருந்து படகு மூலமாகவும் இத்தீவுக்கு வரமுடியும். சுமார், 10 கி.மீ. சுற்றளவு உடையதாக இத்தீவு காணப்படுகிறது. தீவு எங்கும் வேலி காத்தான் முள் செடிகள் நிறைந்துள்ளன. முள் காடுகளின் மத்தியில் கோவில்களின் சிதைவுகளை காணமுடிகிறது. தீவின் உட்பகுதியில் பழங்கால செங்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. இவை 12 முதல் 18-ம் நூற்றாண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் தயாரிக்கப்பட்டவை. உடைந்து சிதறிய பீரங்கி குண்டுகளையும் காணமுடிகிறது. கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. சுமார் , 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் இத் தீவில் வாழ்ந்துள்ளனர். குடிநீர் கிடைக்காததால் மக்கள் ஊரை காலி செய்துவிட்டனர். இருக்கும் வீடுகளும் கேட்பாரற்று கிடக்கின்றன. தீவின் ஒரு பகுதியில் காளிக் கோவில் இருக்கிறது. அதன் அருகிலேயே பழைய செங்கற்களால் கட்டப்பட்ட இரண்டு முதல் இரண்டரை அடி அகலம் கொண்ட சுவர்களின் இடிபாடுகள் உள்ளன. இவை தான் தீவுக் கோட்டையின் கோட்டைச் சுவர்கள். இங்கு, கோட்டை இருந்தது என்பதற்கு எஞ்சியிருக்கும் ஆதாரம் இந்த சுவர்கள்தான். தீவுக்கோட்டையை சுற்றி உள்ள ஊர்களுக்கு பாசன நீர் அளிக்கும் வாய்க்கால் கோட்டை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. தீவுக்கோட்டைக்கு வெகு அருகிலேயே கடலும் , சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் பிச்சாவரமும் அமைந்துள்ளன. தீவுக்கோட்டை என்ற இந்த தீவு தேவிக்கோட்டை என்றும் , தீவுப்பட்டினம் என்றும் ஜலக்கோட்டை என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி.16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தீவுக்கோட்டை விளங்கியுள்ளது. தஞ்சையை ரகுநாத நாயக்கர் ஆட்சி செய்த போது தீவுக் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு சோழகன் என்பவர் ஆட்சி செய்து வந்துள்ளார். இவர், செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கருக்கு அடங்கிய சிற்றரசர். தீவுக்கோட்டை சோழகன் போர்த்துகீசியரை ஆதரித்துள்ளான். இவனது காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த போர்த்துகீசிய பாதிரியார்களான பிமெண்டா மற்றும் டூஜெரிக் ஆகியோர் சோழகனது குணநலன், அவனது மகனைப்பற்றிய விவரங்கள் கோட்டையின் அமைப்பு அதன் பாதுகாப்புமற்றும் முக்கியத்துவம் ஆகியவை பற்றியும் எழுதியுள்ளனர். தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரின் அவைக்கள புலவரான ராமபத்திராம்பாவால் எழுதப்பட்ட ரகுநாதப்யுதயம், யக்ஞநாராயண தீட்சதரால் எழுதப்பட்ட சாகித்ய ரத்நாகரம் ஆகிய நூல்கள் தீவுக்கோட்டையையும் அதனை ஆண்ட சோழகனையும் விவரிக்கின்றன. கி.பி. 1615-ல் நடைபெற்ற போரில் தஞ்சை ரகுநாதநாயக்கர் தீவுக்கோட்டை சோழகனை வென்றார். இதனால் தஞ்சை நாயக்கர் கைகளுக்கு தீவுக்கோட்டை சென்றது. பின்னர், சுமார் 200 ஆண்டுகளில், மராட்டியர், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் கைகளில் கோட்டை இருந்தது. தீவுக்கோட்டை பறிக்கப்பட்டதால், அதனை ஆண்டு வந்த சோழகனின் வாரிசுகள் பிச்சாவரத்திற்கு இடம்பெயர்ந்தனர். பார்த்தவன மஹாத்மியம் மற்றும் ராஜேந்திரபுர மஹாத்மியம் ஆகிய நூல்கள் பிச்சாவரத்தில் இருந்து ஆட்சிசெய்த சோழகன் வம்சத்தினரைப் பற்றி கூறுகின்றன. பிச்சாவரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றின் மூலம் கி.பி.1583-ல் விட்டலேசுர சோழகனார் என்ற அரசர் வாழ்ந்ததும் அவர் முன்னிலையில் அறச்செயல்கள் நடந்ததும் தெரிய வருகிறது. இவர் மீது, விட்டலேசுர சோழ சந்தமாலை பாடப்பட்டதும் பாடிய புலவருக்கு பச்சைமணிக் கங்கணம் பரிசளிக்கப்பட்டதும் திருக்கை வளம் என்ற நூல் மூலம் தெரியவருகிறது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆட்சியின்போது தீவுக்கோட்டையும் பிச்சாவரமும் கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்கு சென்றன. இருப்பினும், சோழகனின் வாரிசுகளுக்கு பாரம்பரிய மரியாதைகள் இருந்தன. கால வெள்ளத்தால் தீவுக்கோட்டை சிதைந்து விட்டது. பிச்சாவரம் அரண்மனை மறைந்து விட்டது. சோழகர், தஞ்சை நாயக்கர், மராட்டியர், போர்ச்சுகீசியர் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட தீவுக்கோட்டை பல வரலாற்று புதையல்களை தன்னுள்ளே வைத்துள்ளது. தமிழக அரசின் தொல்லியல்துறை இந்த தீவை ஆய்வு செய்ய வேண்டும். வரலாற்று அறிஞர்களும் இத் தீவில் ஆய்வு மேற் கொண்டு, சரித்திர உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 17 October 2018

காந்தியப் பொருளியல் இன்றைக்கு ஏற்றதா?

காந்தியப் பொருளியல் இன்றைக்கு ஏற்றதா? டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய பொருளியல் அறிஞர் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றிற்கேற்ப பொருளாதார, சமுதாய, அரசியல், சமய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இன்றைய சூழலில் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியடிகள் வடிவமைத்து கொடுத்த காந்திய கருத்துகள் பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு கடந்த 71 ஆண்டுகளில் நமது நாட்டு பொருளாதாரத்தில், வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக தொலைதொடர்பு, செய்தி இணைப்புகள், போக்குவரத்துகள், நகர வளர்ச்சி, பெருந்தொழில் பெருக்கம், வாணிப விரிவாக்கம், கல்வி கூடங்களின் பரவல், மருத்துவமனைகளின் நெருக்கம், சேவை பணிகளின் ஆக்கம், பொழுதுபோக்குகளின் உச்சம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் என்றால், இதன் மறுபக்கம் நிழல் படர்ந்ததாக இருக்கிறது. இன்னும் வறுமை ஒழியவில்லை. வேலையில்லா திண்டாட்டம் தீரவில்லை. நமது வாழ்க்கை முறையில் எல்லோரும் கடன்காரர்களாக இருக்கின்றனர். மருத்துவ, கல்வி வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. லஞ்சம், ஊழல் நாளும் வளர்கின்றன. கருப்பு பணம் பேயாட்சி செய்கிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் நடுங்க செய்கிறது. இந்த இரண்டுங்கெட்டான் சூழலில் நாம் முட்டு சந்தில் நிற்பவர்களை போல் இருக்கிறோம். மேற்கத்திய வளர்ச்சி முறை, வாழ்க்கை வழி நமக்கு கை கொடுக்கவில்லை. காந்தியத்தை திரும்பி பார்க்கும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். காந்தியடிகள் இந்திய பொருளாதாரம் அடிப்படையில் கிராம பொருளாதாரமாக இருப்பதனை சுட்டிக்காட்டினார். “கிராமங்கள் வாழ்ந்தால் தான் இந்தியா வாழும். இந்திய வளர்ச்சி கிராமங்களில் இருக்கிறது” என்றார்.ஒரு சமயம் நமது நாட்டில் 85 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். இப்போது சுமார் 70 சதவீதமாக குறைந்துள்ளது. கிராம பொருளாதாரம், வேளாண்மை, கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, பழத்தோட்டங்கள், தோப்புகள் என இயற்கை சார்ந்தது. கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ததோடு நகரங்களுக்கு வேண்டியவற்றையும் உற்பத்தி செய்து அளித்தனர். இன்று நகரங்கள், பெருந் தொழில்கள் பெருக்கத்தில் கிராமங்கள் சீர்குலைந்து விட்டன. பரவல் முறை, தற்சார்பு, தன்னிறைவு என்று அமைந்திருந்த பொருளாதார வாழ்க்கை முறை தொலைந்துவிட்டது. நகரங்கள் நரகங்களாகி கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் கிராம பொருளாதாரத்தை மறுபடியும் கட்டமைக்க வேண்டும். இன்று நிலம், உழுபவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கைமாறி விட்டது. உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். உழவு, கால்நடை வளர்ச்சி, பால் பண்ணைகள் அமைத்தல், பழத்தோட்டங்கள் அமைத்தல், சிறு தொழில்களை வளர்த்தல் என திட்டமிட்டு கிராம பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். விவசாயிகளை கடன் தொல்லையில் இருந்து மீட்டு அரசு நிதி வசதியை வழங்க வேண்டும். மழைநீரை சேமித்து, பெரிய ஆறுகளை இணைத்தால் நீர் வளம் பெருகும், வேளாண்மை செழிக்கும், கிராமங்கள் வாழும். நாம் இன்று உடல் உழைப்பை புறக்கணிக்கும் ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதன் விளைவை வீட்டிலே தொடங்கி வெளியில் எங்கெங்கும் காண்கின்றோம்.காந்தியம் உடல் உழைப்பிற்கு முதலிடம் தருகிறது. காந்திய பொருளியலறிஞரான டாக்டர் ஜே.சி.குமரப்பா, உழைப்பை மனிதனின் தனிச்சிறப்பாக கூறினார். மனிதனின் ஆளுமை வளர்ச்சிக்கும், பட்டறிவின் சிறப்புக்கும், உயிரோட்டமாக இருப்பது உழைப்புதான். எடுத்துக்காட்டு அம்மாவின் உழைப்பு, வீட்டில் பெண்கள் உழைப்பு, பெற்றோர் உழைப்பு.உழைப்பு உடல்நலனை காக்கும், பொருளாதாரத்தை வளர்க்கும். இன்று உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஊதியம் தேட முயற்சிக்கின்றோம். நடப்பதை கூட குறைத்து கொண்டோம். சைக்கிள் ஓட்ட விரும்புவதில்லை. பெட்ரோலில் ஓடும் இருசக்கர வாகனம், கார் வேண்டும். கூப்பிடும் தூரத்திற்கு கூட வண்டியில் தான் போக வேண்டும். டீசல், பெட்ரோல் வேண்டும். நமது நாட்டில் குறைவாகவே எரிசக்தி உற்பத்தி உள்ளது. எண்ணெயில் முற்றுரிமை பெற்ற நாடுகள் உலக பொருளாதாரத்தை ஆட்டி படைக்கிறது. எண்ணெய் விலை உச்சம் தொடுகிறது. போக்குவரத்தில் கால்நடைகளை பயன்படுத்துவது ஒரு நிலை. நமது பொருளாதாரத்தில் கட்டை வண்டிகளுக்கும் இடமுண்டு. நம்மிடம் இருக்கும் ஏராளமான மனித சக்தியை மறந்துவிடக்கூடாது. எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்ற வாழ்வியல் முறையை காந்தியம் கற்பிக்கிறது. எளிய வாழ்க்கை என்பது ஏழ்மை வாழ்க்கை அல்ல. எல்லோருக்கும் வாழ்வதற்கு தேவையானவை கிடைக்க வேண்டும். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். அவரவர் நிலைக்கு ஏற்ப அறிவு வளர்ச்சிக்கும், திறமை மேம்பாட்டுக்கும் வேண்டியவற்றை பெற வேண்டும். எச்சமாக வைத்திருப்பது திருட்டு போன்றது. ‘இயற்கை மனிதனின் தேவைக்கு வழங்கும், பேராசைக்கு கொடுக்காது’ என்று காந்தியடிகள் கூறியதை எண்ணி பார்க்க வேண்டும். இன்று இயற்கையை அழித்து வாழ்கிறோம். அதனை கட்டி காக்க வேண்டும். காந்தியம் வலியுறுத்தும் ஒரு தலையாய கருத்து, பகிர்வு பொருளாதாரம். இதனை அறங்காவலர் தத்துவமாக உருவாக்கினார். நம்மிடம் மிகுதியாக இருப்பதை அருகில் உள்ள இல்லாதவருக்கும் ஈந்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. இந்த “ஈதல்” வாழ்வினை மேன்மையான வாழ்வியல் முறையாக காந்தியடிகளின் ஆன்மிக வாரிசு வினோபா பாவே உருவாக்கி கொடுத்தார். அவர் நடத்திய பூமிதான புரட்சி வெற்றி பெற்றிருந்தால், உலகிற்கு வழிகாட்டுபவர்களாக உயர்ந்திருப்போம். அந்த வாய்ப்பை நாம் நழுவ விட்டுவிட்டோம். காந்தியம் தனிமனித நலனையும், சமுதாய நலனையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்க முயல்கிறது. அனைவரும் நலன்தான் அதன் நோக்கம்.காந்திய பொருளாதாரம் ஒவ்வொருவரின் உரிமையை விட கடமையை வலியுறுத்துகிறது. மதுவை ஒழித்துவிட்டால், மனிதம் பிழைக்கும், வாழும். காந்தியடிகள் கொள்கையற்ற அரசியல், உழைப்பற்ற செல்வம், அறமற்ற வாணிபம், பண்பாடற்ற கல்வி, மனிதநேயமற்ற அறிவியல், மனச்சான்றற்ற மகிழ்ச்சி, தியாகமற்ற வழிபாடு ஆகிய 7 சமுதாய பாவங்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முயன்றார். தாய்மை பொருளாதாரம் தான் காந்திய பொருளாதாரம். தன்னலமற்ற தாயன்பை பெற்றுவிட்டால் காந்திய பொருளாதாரம் நடைமுறையில் சாத்தியமாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வறுமை ஒழித்து வளம் பெருக்கிடுவோம்

வறுமை ஒழித்து வளம் பெருக்கிடுவோம் முனைவர் இரா. வெங்கடேஷ், உதவிப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம். இன்று (அக்டோபர் 17-ந்தேதி) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்! வளர்ச்சி என்பது பன்முகப் பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். அந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று இலக்கினை எட்டுவதற்குப் பல சவால்களை, தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. உலகில் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் இரு பெரும் சவால்களாக வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் உள்ளன. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அந்த வகையில் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பது வறுமையாகும். உலகப் பொருளாதாரங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்தியப் பொருளாதாரம் எழுந்து நிற்கிறது. பிரான்சைச் சேர்ந்த ஜோசப் ரெசின்கி என்பவர் தன் இள வயது வறுமைப் போராட்டங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள், ஏற்பட்ட விளைவுகளை இச்சமூகத்திற்கு உணர்த்திட 1987-ம் ஆண்டு அக்டோபர் 17-ல் பாரிஸ் நகரில் வறுமை ஒழிப்பு தினத்தைக் கடைப்பிடித்தார். தொடர்ந்து ஐ.நா. சபையும் 1992-ல் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்பெல்லாம் உண்ண உணவின்றி பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை எனப்பட்டது. தற்போதைய நவீன யுகத்தில் வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால் வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச் சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது. உலக வங்கி குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத திறனற்ற நிலை தான் வறுமை என்கிறது. இந்தியாவில் வறுமை என்பது இன்று நேற்று உருவானதல்ல. சங்க காலந்தொட்டு இவ்வறுமை நம் சமூகத்தைத் தொடர்ந்து துரத்தி வருகிறது. தமிழ்ப் புலவர்கள் பலர் வானம்பாடிகளாகத் திகழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வளமானதாக இல்லை. வறுமையைத் தொலைக்க வள்ளல்களைத் தேடி அலைந்த புலவர்கள் ஏராளம். அறம் பாடிய அவ்வையார் கூட கொடிது கொடிது வறுமை கொடிது என உரக்கச் சொன்னார். உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.150-க்கும் கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.75-க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே தான் உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும் அதில் பாதிப் பேர் தெற்காசியாவிலும் கால்வாசிப் பேர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தாலும் இந்தியாவின் தலையெழுத்தே வறுமைதான். உலக வங்கி அறிக்கைப் படி இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் வறுமைக்கு சாதியமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் மற்றும் லஞ்சம், சுயநல அரசியல் என எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் 80 சதவீத ஏழைகள் கிராமங்களில் வாழும் நம் நாட்டில் வறுமை உயர்வதற்கான சில அடிப்படைக் காரணங்களான பாரம்பரியத் தொழிலான விவசாயம் அழியும் சூழ்நிலை. புதிய நிரந்தர வேலைவாய்ப்புகளைக் கணிசமான அளவில் உருவாக்க இயலாமை.வளர்ச்சியின் பயன்கள் உண்மைப் பயனாளிகளைச் சென்றடையாமை. அத்தியாவசியப் பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான உழைப்பில் பற்றாக்குறை. அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு, வருமான ஏற்றத்தாழ்வுகள். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்கும் வறுமை நிலை வேறு. பேராசையால் உண்டாகும் வறுமை என்பது வேறு. இந்தியா இந்த இரண்டிலும் சிக்கித் தவிக்கிறது. ஆகவே தான் ஆப்பிரிக்காவில் உள்ள 26 வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சுமார் 42 கோடியே 10 லட்சம் பேர் இம்மாநிலங்களில் வறுமை நிலையில் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது. உலக நாடுகளில் பசியுடன் இருப்பவர் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. வறுமை இல்லா இந்தியா உருவாகுமானால் அதுவே உண்மையான மக்களாட்சி. எனவே வறுமை ஒழித்து வளம் பெருக்கிட சூளுரைப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 16 October 2018

பாட்டிலே கம்பன்...! வாழ்விலே கர்ணன்...!

பாட்டிலே கம்பன்...! வாழ்விலே கர்ணன்...! கவிஞர் கண்ணதாசன் அண்ணாதுரை கண்ணதாசன், (கவிஞர் கண்ணதாசன் மகன்) நாளை(அக்டோபர் 17-ந்தேதி) கவிஞர் கண்ணதாசன் நினைவு தினம். ‘என்னங்க அந்த வீட்டை வித்து தான் ஆகனுமா? அம்மா மெல்லிய குரலில் அப்பாவிடம் கேட்கிறார். இரவு மணி 10.30 இருக்கும். அப்பா பாட்டெழுதி விட்டு வீட்டுக்கு வந்து சிந்தனை செய்கின்ற நேரம். அவராக அழைத்தால் மட்டுமே அந்த நேரத்தில் அவரது அறைக்குள் நாங்கள் செல்ல முடியும். அம்மாவின் குரல்கேட்டு, அப்பாவின் அறை வாசலில் படுத்திருந்த நானும் எனது சகோதரர்களும் மெல்லதலையை நீட்டி அறைக்குள்ளே பார்க்கிறோம். அப்பா தலையை குனிந்தபடி யோசனையில் இருக்கிறார். நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்படும் செட்டியார்களிடம் ஒரு வழக்கம் உண்டு. பிள்ளைப் பேறு இல்லாத வசதியான செட்டியார்கள், வசதி குறைந்த செட்டியார்கள் வீட்டு பிள்ளைகளை சுவீகாரம்(தத்து) எடுத்துக் கொள்வார்கள். அப்படி வசதியான வீட்டுக்கு தத்து போனவர்களில் பெரும்பாலானோர் தங்களது ,புதிய செல்வச்சூழலில் தங்களது தாய் வீட்டை மறந்து போவது சகஜம். அப்பா மட்டும் விதிவிலக்கு. வசதி குறைந்த வீட்டில் இருந்து வசதி குறைந்த வீட்டுக்கு தத்து போனவர் அப்பா.ஆனால் பிறந்த வீட்டில் இருந்தவர்களை தன் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றினார். அப்பாவின் மூத்த சகோதரி ஒருவர் இளம் வயதிலேயே இறந்து போனார்.அவர் இறக்கும் தருவாயில் அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு” முத்து.. என் பிள்ளைகளை உன்னை நம்பி விட்டுட்டு போறேன்“ என்று சொல்லி விட்டு மரணமடைந்துவிட்டார். அந்தப் பிள்ளைகளை அப்பா தான் வளர்த்தார். அதில் முதல் பெண்ணுக்கு திருமணம். அதற்காக மந்தை வெளியில் இருந்த ஒரு சிறிய வீட்டை விற்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்.அது குறித்து அம்மா சொன்னதைதான் முதல் வரியில் நீங்கள் படித்தீர்கள். “பார்வதி, எப்ப வேணும்னாலும் வீடு வாங்கலாம், ஆனா நல்ல மாப்பிள்ளை வரும் போது கல்யாணத்தை முடிச்சிடணும்.நம்ம பிள்ளைகளுக்கு வேணுமேனு யோசிக்காத, நிச்சயமா நம்மபிள்ளைகள் நல்லா இருப்பாங்க” அப்பா சொல்ல, அம்மா மவுனமாக இருக்கிறார். சென்னை நகரில் அப்பா வாங்கிய நான்கைந்து வீடுகளும் உற்றார் உறவினர் பிள்ளைகளின் திருமணங்களுக்கு விற்கப்பட்டுவிட்டன.ஆனால் அன்று இரவு அம்மாவிடம் அப்பா சொன்னது போல இன்று வரை கவிஞரின் பிள்ளைகள் நாங்கள் அனைவரும் நன்றாக,வசதியாகவாழ்ந்து கொண்டிருக்கிறோம். கண்ணதாசனுக்கு மகனாக பிறக்க வேண்டி வரம் வாங்கிக் கொண்டு வந்து பிறந்ததாகவே நான் கருதுகிறேன். பதினான்கு பிள்ளைகள், இரண்டு மனைவியர், முப்பதுக்கும் குறையாத உறவினர்கள், பத்து உதவியாளர்கள், ஓட்டுனர்கள். இது தவிரவேலையாட்கள் ,கட்சிக்காரர்கள் என்று கவிஞரை நம்பி ஐம்பதுக்கும் அதிகமான குடும்பங்கள். இவர்கள் அனைவரையும் தன்னால் காப்பாற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை அப்பாவிடம் இருந்தது. பிள்ளைகள் என்ன கேட்டாலும் வாங்கித் தருவார்.இல்லை என்று சொன்னதே இல்லை. ஒருநாள் காலை. அப்பா வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டுஇருக்கிறார்.“ சார் மோடா” என்று வாசலில் ஒருகுரல்கேட்கிறது. பேப்பரில் இருந்து தலையை சற்று நிமிர்த்திப் பார்க்கிறார்.ஒரு வடநாட்டுக்காரன்,மோடா என்று சொல்லப்படும் பிரம்பு ஸ்டூல்களுடன் நின்று கொண்டிருந்தான்.ஏழு அல்லது எட்டு மோடாக்கள் அவன் உடலில் சுற்றி கட்டப்பட்டு இருந்தன.“ உள்ளே வா“ என்று அப்பா அவனை அழைத்தார். அவன் வந்து மோடாக்களை இறக்கி வைத்து விட்டு அப்பாடா என்று கீழே உட்கார்ந்தான். பிறகு அந்த மோடா மீது என்னை உட்கார சொன்னான். நான் உட்கார்ந்ததும் அதில் இருந்து பாட்டு சத்தம் கேட்டது. எனக்கும் என்சகோதரர்களுக்கும் ஒரேஆச்சரியம் .அந்த மோடாவின் உள்ளே ஒரு டிரான்சிஸ்டர் ரேடியோ வைக்கப்பட்டு இருந்தது.அதன்மீது உட்கார்ந்தால் ஒரே ஒரு ஸ்டேஷன் ஒலிக்கும் வகையில் அது செய்யப்பட்டு இருந்தது.ஒருஅரைமணி நேரம் கழித்து வீட்டில் அங்கங்கே பாட்டு சத்தம் கேட்டு, அம்மா வேகவேகமாக வாசலுக்கு வந்து பார்த்தால் ஏழு மோடக்களை வாங்கியிருந்தார்அப்பா. “ஒண்ணு வாங்குனா போதாதா? எல்லா மோடாவும் ஒரே ஸ்டேஷன்தான் எடுக்கும்..எதுக்கு காசைவீணாக்குறீங்க?“ என்றுஅம்மாகேட்க “ஒண்ணு வாங்குனா எல்லாம் சண்டை போட்டுக்குவாங்க. அந்த மோடாக்காரன் பாவம், இந்த வெய்யிலில இவளோத்தையும் தூக்கிக்கிட்டு தெருத்தெருவா அலையணும்”. இதுஅப்பா. பாட்டெழுத உட்கார்ந்தால் சரஸ்வதி அருளால் வார்த்தைகள் எப்படி பிரவாகமாக வந்ததோ, அதேபோல கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் போதெல்லாம் லட்சுமி கடாட்சத்தால் பணம் வந்து கொண்டே இருந்தது. எப்போதும் அவர் மனதில் இரக்கம் , இரக்கம், இரக்கம். எம்.ஜி.ஆர், சிவாஜியை விட அதிகம் சம்பாதித்தவர் அப்பா.ஆனால் ஒரு ரூபாய் கூடதவறான வழியிலோ, அரசியல்ஆதாயத்தினாலே ாவந்தது இல்லை. நேர்மையாக வாழ்ந்தால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எங்களுக்கு புரியும்படி வாழ்ந்து காட்டியவர். “1960-ம் வருடத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் உனக்கு இந்த விருதை தந்திருக்கணும்டா”- மோகன்குமாரமங்கலம் ‘டேய் தமிழ்நாட்டுல ஏதோ ஒரு மூலையில யாரோ ஒருத்தன் ஒரு பாட்டை கேட்டுட்டு, இது கண்ணதாசன் பாட்டுனு சொல்றான் பாரு, அது ஆயிரம் தேசியவிருதுகளுக்கு சமம்’. -இது அப்பா. அப்பாவின் நெருங்கிய நண்பரான மோகன்குமாரமங்கலம், மத்திய அமைச்சர் ஆனபோது, அப்பாவின் பெயரை சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதுக்கு பரிந்துரை செய்திருந்தார்.அதைத் தான் அப்பா பதைபதைத்துப் போய் வேண்டாம் என்று சொன்னார். தமிழ்நாட்டின் ஆறு முதல்-அமைச்சர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்.ஆனால் அப்பா யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்த்தது இல்லை. தன் செல்வாக்கை பயன்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதை அவர் தன் வாழ்நாளில் செய்ததே இல்லை. “டேய் நாகர்கோவிலுக்கு போறேன், வறீங்களா? ” அப்பா கேட்டது எங்களுக்கு ஒரே குஷி. எல்லா சகோதரர்களும் ஒரே குரலில் “சரி“ என்று கத்தினோம். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது. அம்மா மட்டும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.காரணம் ஒருதேர்தல் பிரச்சாரத்திற்காக அப்பா போகிறார் என்பது. 1969-ம் ஆண்டு. நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேசமணி காலமானதால் நடந்த இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரம் செய்ய அப்பாவும் ஜெயகாந்தனும் சென்றனர். எங்களுக்கு பள்ளிவிடுமுறை என்பதால் எங்களையும் அழைத்துசென்றார்.நான் சிறுவனாக இருந்தாலும், காமராஜர் அய்யாவுக்கு கிடைத்த மரியாதை என்னை பிரமிக்க வைத்தது. அப்பாவும் ஜெயகாந்தனும் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. நிச்சயம் காமராஜர் வெற்றி பெறுவார் என்று தெரிந்ததும் அப்பாவுக்கு சந்தோஷம், கன்னியாகுமரியில் மெரிலாண்ட் சுப்ரமணியம் விருந்தினர் மாளிகையில் அனைவரும் தங்கினோம். தினமும் காலையில் அங்கிருந்து கிளம்புவோம்.வழியில் எங்காவது குளத்தை கண்டால் வண்டியை நிறுத்த சொல்லி அப்பாவும் ஜெயகாந்தனும் குளத்துக்குள் இறங்கி விடுவார்கள். உடன் வந்த நண்பர்கள் எல்லாம்“ என்னங்க இவங்களும் குழந்தைகளோட குழந்தைகளா மாறிடுறாங்க“ என்று பேசிக்கொள்வார்கள். அப்பாவை அவ்வுளவு சந்தோஷமாக நாங்கள் அதற்கு முன் பார்த்தது இல்லை.பதினைந்து நாட்கள் முழுக்க முழுக்க அப்பாவுடன் நாங்கள் இருந்ததும்அது தான் முதல் தடவை.இன்றைக்கும் எங்கள் வீட்டு விழாக்களில் கூடும் போது அந்த இடைத்தேர்தல் நினைவுகளைப் பற்றி பேசாமல் இருந்தது இல்லை. நான் கண்ணதாசனின் மகன் என்ற கர்வம் எனக்கு உண்டு.ஆனால் தான் கண்ணதாசன் என்ற கர்வம் அப்பாவுக்கு என்றும் இருந்தது இல்லை .யாராவது அவரைப் புகழ்ந்தால் கூச்சத்தில் நெளிய ஆரம்பித்து விடுவார்.வாய்ப்புக்காக யாரையும் புகழ்ந்து பேசியதும் இல்லை, வாய்ப்பு தராததால் இகழ்ந்ததும் இல்லை.அவர் நினைத்து இருந்தால் பத்துவருடங்கள் தமிழ்சினிமாவில் எல்லாபடங்களுக்கும் அவரேபாடல்கள் எழுதி இருக்கலாம். புதிதாக பாடல் எழுத வந்தவர்களை போட்டியாக நினைத்தது இல்லை. “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய்“ என்ற தனிப்பாடலை அப்பாவிடம் போட்டுக்காட்டி, இது போல ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார் இயக்குனர். முழுபாடலையும் கேட்ட அப்பா, “இதுவே ரொம்ப நல்லா இருக்கு .அதுல“ சென்னையிலே கந்தகோட்டம் உண்டு” ங்கிற வரியை மட்டும் “சிறப்புடனே கந்தகோட்டம் உண்டு “என்று மாற்றிக் கொள்ளுங்கள்“ என்று அந்தபாடலை ,அந்தபாடல் ஆசிரியர் பெயரிலேயே வெளியிட செய்தார். பூவை செங்குட்டுவன் என்றஅந்த பாடல் ஆசிரியரின் திரையுலக பிரவேசத்திற்கு கதவுகளை திறந்துவிட்டார்.மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்உருகி ஓடும் மெழுகை போல ஒளியை வீசலாம்” தான் எழுதிய வரிகளைப் போல வாழ்ந்து மறைந்தவர்அப்பா.அதனால் தான் அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆனபிறகும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார், நிலைத்திருக்கிறார்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts