Saturday, 20 October 2018

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ?

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு பாரா முகம் ஏனோ? ஆர்.எஸ்.வேலுமணி, பாரம்பரிய எலும்பு முறிவு வைத்தியர் மருத்துவம் என்பது நோயை குணப்படுத்தவும், அந்த நோய் மீண்டும் தாக்காமல் தடுத்து நிறுத்துவதற்கான கலை ஆகும். தற்கால மருத்துவம் காயங்களை கண்டறிந்து உயரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்து வைப்பதாக அமைகிறது. மருத்துவ தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை தான், எனினும் மருத்துவத்தின் எல்லா தடங்களிலும் இதன் நீட்சி வேண்டுமா? என்பதே கேள்வி. சித்தா, ஆயுர்வேதம் என்று நம் பண்டைய மருத்துவ முறைகள் பெருமையை பறை சாற்றினாலும், எலும்பு முறிவுக்காக தமிழர் மேற்கொண்ட பாரம்பரிய சிகிச்சை உலக அளவில் புகழ்பெற்றது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ எலும்புகள் மீது ஏற்படும் மோதலே எலும்பு முறிவு. மூடிய முறிவு, திறந்த முறிவு, நோய்நிலை முறிவு, அழுத்த முறிவு, பிறப்பு முறிவு என்று எலும்பு முறிவு பலவகைப்படும். இந்த பிரச்சினைக்கு கட்டு கட்டும் பாரம்பரிய சிகிச்சை முறை மிகவும் அறிவியல் பூர்வமானது. தற்காலத்தில் எலும்பு முறிவு பிரச்சினை ஏற்பட்டால்,அலோபதி மருத்துவத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் 5 முதல் 10 துளைகள் போட்டு, எலும்பின் மீது பிளேட் வைத்து, துளைகளில் திருகு கோர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நவீன சிகிச்சை மேற் கொள்வதற்கு தோலை அறுத்து, ரத்த நாளங்களை துண்டித்து தசைகளை சேதப்படுத்த வேண்டியதுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு எலும்பில் உள்ள பிளேட்டை அகற்ற மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் நம் முன்னோரின் சிகிச்சை முறையே அற்புதமானது. சேதமடைந்த தசையை நேராக்கி, முறிந்த எலும்பின் இரு முனைகளும் துல்லியமாக ஒன்று சேர்த்து கட்டு கட்டப்படுகிறது. இதன்மூலம் இரு முனை பகுதிகளுக்கிடையே எலும்பின் திசு மற்றும் ரத்த அணுக்களும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்றுகூடி இணைப்பு பாலம் உருவாகிறது. அதன்மீது கால்சியம் படிவங்கள் தானாகவே படிந்து எலும்புகள் மீண்டும் உறுதி பெறுகின்றன. சிகிச்சை நடைபெறும் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோரை கடினமான வேலைகளை செய்யவைத்தும், மெது மெதுவாக நடக்க வைத்தும் பயிற்சி தரப்படுகிறது. இதுவே நமது பாரம்பரிய சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையில் பக்க விளைவுகளும் கிடையாது. துளியும் ரத்தம் வீணாகாது. தற்கால நவீன சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் இந்த சிகிச்சை முறையில் பலன் கிடைக்க கூடுதல் நாட்களாகும். ஆனால் பலன் பெறும்போது எலும்பு முறிவு ஏற்பட்ட அறிகுறியே இருக்காது. அறிவியல் பூர்வமான இச்சிகிச்சை முறையை பல நாட்டவரும் நம்மை பார்த்து மேற்கொண்டு வருகின்றனர். 30 நாள் கரு தரித்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சைக்கு போக முடியாது. ஏனென்றால் மயக்க மருந்து கொடுத்தாலோ, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டாலோ அந்தப்பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. பாரம்பரிய மருத்துவ சிகிச்சையில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும்.அதே போல சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த முறையே சாலச்சிறந்தது. ஆனால் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைக்கு இன்று வரை மருத்துவ அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் வேதனை. கலைகள், விளையாட்டுகள், நடன நாட்டியங்கள் என பாரம்பரியத்தை மீட்டெடுத்து வரும் இச்சூழ்நிலையில் நமது பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதும் அவசியமானதாகும். எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை பெற விரும்பாதவர்கள் விருப்பப்படி எலும்பு முறிவுக்கு கட்டு கட்டும் பாரம்பரிய சிகிச்சை முறையை அரசு மருத்துவ மனைகளில் அறிமுகப்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவத்தை உதாசீனப்படுத்தாமல் சித்த மருத்துவத்தை தனிப்பிரிவாக செயல்படுத்தியது போல எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டு கட்டும் சிகிச்சை முறையை தனிப்பிரிவாக அரசு மருத்துவமனை, அரசு கல்லூரிகளில் பயிற்றுவித்து மக்கள் பயன் பெற செய்ய வேண்டும். நவீன மருத்துவத்துக்கு நாம் எதிரி அல்ல. அதேவேளையில் பாரம்பரியத்தை இழக்கவிட கூடாது என்பதே திண்ணம். “எலும்பு கடித்து வாழ்ந்தான் எம் பாட்டன் நூறாண்டு”, என்பது தமிழ் மக்களின் முதுமொழி. பாரம்பரியமும், நவீனமும் கலந்தால் இம்முதுமொழியும் சாத்தியம் தான். காலமே அதற்கு சாட்சியம் கூறட்டுமே.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts