Saturday, 20 October 2018

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் செல்வங்கள்

நாம் நம் கையில் இருக்கும் பணத்தை வைத்தும், நகைகளை வைத்தும், சொத்துகளை வைத்தும் நமது வலிமையை மதிப்பிடுகிறோம். இது சரியல்ல. இரும்புப் பெட்டி ஒன்றின் மீது உட்கார்ந்துகொண்டு ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அங்கு வந்தவர், ‘‘இந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது?’’ என்று கேட்டார். ‘‘இது வெறும் இரும்புப்பெட்டி. இதில் ஒன்றும் இல்லை!’’ என்றார் பிச்சைக்காரர். ‘‘அப்படியா? இதில் ஒன்றும் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்றார் அவர். ‘‘இதில் ஒன்றும் இருக்காது சாமி. இதன் மீது உட்கார்ந்துகொண்டு 25 வருடமாகப் பிச்சை எடுக்கிறேன், எனக்குத் தெரியாதா?’’ என்றார் பிச்சைக்காரர். ‘‘நீங்கள் இந்த முடிவுக்கு வருவதற்கு முன் பெட்டியைத் திறந்து பார்த்ததுண்டா?’’ என்று கேட்டார் இவர். ‘‘இல்லை... இல்லை... திறந்து பார்த்தது இல்லை. ஆனால் இதில் ஒன்றும் இருக்காது’’ என்றார் அவர் அழுத்தமாக. ‘‘சரி, இதைத் திறந்துதான் பாருங்களேன்’’ என்றார் இவர். அந்தப் பிச்சைக்காரர் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, பெட்டி நிறைய தங்கக் காசுகள். மூச்சடைத்துப் போன பிச்சைக்காரர், ‘‘தங்கக் குவியல் மீது அமர்ந்தா இவ்வளவு காலம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன்?’’ என்றாராம். இந்த நபரின் கதைதான், நம்மில் பலரது கதையும். நம்மிடம் மறைந்துகிடக்கும் செல்வங்களை நாம் தேடிப் பார்க்கவில்லை. எனவே இப்படியெல்லாம் செல்வங்கள் நம்மிடம் இருப்பதும் தெரியாமலே போய்விட்டது. கண்களுக்குத் தெரியாத அல்லது நாம் உணராத செல்வங்கள் என்பவை... நேர்மைத்திறன் சிந்திக்கும் திறன் ஞாபகசக்தி கருணை உணர்வு நற்பண்புகள் உறுதியான உடல் நல்ல நண்பர்கள் நன்கொடை மற்றவர்களை மதிக்கும் பண்பு செய்த நல்ல காரியங்கள் நேர்மறைச் சிந்தனை குடும்பம் நண்பர்கள் இப்படி தனிப்பட்ட செல்வங்களைக் கண்டுபிடித்த சில இளைஞர்களை எனக்குத் தெரியும். உதாரணமாக, 2009-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாட்டில் முதல் மதிப்பெண் பெற்றவர், கரூரைச் சேர்ந்த ஓர் ஏழை மாணவர். அவரைப் பாராட்ட அவரது வீட்டுக்குச் சென்றேன். மாணவரின் தந்தையார் மறைந்துவிட்டார். அரசு கட்டித் தந்த சிறிய வீட்டில் தனது தாயாருடன் குடியிருந்தார். சித்தாள் வேலைக்குப் போகும் தாயார் தினமும் 200 ரூபாய் சம்பாதித்து மகனைக் காப்பாற்றிக்கொண்டிருந்தார். ‘‘எங்கம்மாவை நான் காப்பாற்ற வேண்டும், எனவே மருத்துவராக வேண்டும்’’ என்றார் அவர். இங்கிலாந்தில் வாழும் எனது டாக்டர் நண்பருக்கு அம்மாணவரை அறிமுகம் செய்துவைத்து, படிக்க உதவி செய்தேன். இன்று அந்த இளைஞர் ஒரு எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர். முதுகலைப் பட்ட மேற்படிப்பு படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இன்று அவர் சக்திவாய்ந்த மனிதர். ஆனால் அன்று அவரிடம் பணம் இல்லை. என்றாலும் அவர் ஏழை அல்ல. அவரிடம் பணம் தவிர்ந்த பல சொத்துகள் இருந்தன. ஆர்வம், அறிவு, சிந்தனைத்திறன், விடாமுயற்சி, தன்பிக்கை, உழைக்க விருப்பம் என்ற அந்தச் செல்வங்களை அவர் பயன்படுத்தினார். இன்று சொந்தக் காலில் தலைநிமிர்ந்து நிற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். நீங்களும் உங்களது அனைத்துச் செல்வங்களையும் ஆராய வேண்டும்.
ஒருமுறை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், உலகப் பெரும் செல்வந்தர் ஹென்றி போர்டின் மிகப் பெரிய சொத்து எது என்ற விவாதம் நடந்ததாம். அவரது வங்கிக்கணக்கு, நிலம், பண்ணைவீடு போன்றவை வெறும் 5 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 95 சதவீதம் அவரது போர்டு மோட்டார் நிறுவனம் என்று தீர்மானித்தனர் மாணவர்கள். ஆனால் ஒரு மாணவர் மட்டும் வேறுவிதமாகச் சிந்தித்தார். அவர், ஹென்றி போர்டின் மோட்டார் நிறுவனம், வங்கிக் கையிருப்பு, வீடு, தோட்டம் அனைத்தும் வெறும் 5 சதவீதம்தான் என்றார். மீதம் 95 சதவீதம் என்னவென்று பேராசிரியர் வினா எழுப்பினார். ‘‘அதுதான் அந்த ஹென்றி போர்டு என்ற மனிதர்’’ என்றார் அந்த மாணவர். அதற்கு விளக்கம் கேட்டபோது அவர் அளித்த பதில் என்ன தெரியுமா? ‘‘இந்தச் செல்வங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து பறித்தாலும் அந்தத் தனிமனிதர் இன்னொரு போர்டு நிறுவனத்தை உருவாக்கிவிடுவார்’’ என்பதுதான். தனிப்பெருமை வாய்ந்த ஒரு சொத்து, உங்கள் புத்தி. அதற்குத் தகுந்த பயிற்சி அளித்துத் தயார்ப்படுத்திக்கொண்டால், உலகில் நீங்கள் விரும்பும் பணத்தையும் புகழையும் அதிகாரத்தையும் சம்பாதித்துக்கொள்ள முடியும். செல்வம் எது என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே உங்களது நிகர மதிப்பை மதிப்பீடு செய்யும்போது, கையிருப்புப் பணத்தையும், வீட்டையும், நகைகளையும் மட்டும் வைத்துக் கணக்கிடாதீர்கள். உங்களுடைய திறமைகளையும், ஆசைகளையும், திட்டங்களையும், கனவுகளையும், உறவுகளையும், நண்பர்களையும், உங்களுக்கு இருக்கும் நேரத்தையும் சேர்த்துக் கணக்கிடுங்கள். பொருளாதார நிலையில் தாழ்ந்த ஒருவரின் மிகப் பெரிய சொத்து, அவரது அறிவுத்திறமைகள்தான். இருக்கும் செல்வத்தை எண்ணிவிட முடியும் என்றால் அவன் பணக்காரன் இல்லை. எண்ண முடியாத அளவில் மற்ற செல்வங்கள் இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை அதிகம் சம்பாதிக்க வேண்டும். அது நவீன காலத்தின் ரூபாய் நோட்டுகள் ஆகும். பண வசதி இல்லாத தந்தை ஒருவர் இரண்டு கைகளையும் விரிக்கும்போது அவரது குழந்தைகள் ஓடிவந்து கைகளில் அடைக்கலமாகின்றனர். அவர் அளவிலா ஆனந்தம் அடைகிறார். ஏழை என்றாலும் அவர் உண்மையிலேயே பணக்காரர்தான். இருந்த பணம் அனைத்தையும் இழந்தபின் ஒருவரைப் பற்றிய மதிப்பீடு எதுவோ அதுதான் அவரின் உண்மையான சொத்து. பணம் இல்லாதவர்கள் எல்லாம் ஏழை அல்ல. பணக்காரப் பெண்மணி ஒருவர் ஜவுளிக்கடைக்குச் சென்று, ‘‘மகனுக்குத் திருமணம், ஒரு மலிவான புடவை காட்டுங்கள். வேலைக்காரிக்குக் கொடுக்க வேண்டும்’’ என்றார். அன்று மாலையில் ஓர் ஏழைப்பெண் அதே கடைக்கு வந்து, ‘‘விலை உயர்ந்த ஒரு புடவையைக் காட்டுங்கள், முதலாளி அம்மாவுக்குப் பரிசளிக்க வேண்டும், அவரின் மகனுக்குத் திருமணம்’’ என்றாராம். இதில் பணக்காரர் யார், ஏழை யார் என்று சிந்தித்துப் பாருங்கள். வருமானத்தை வைத்துப் பிழைப்பவர்கள் ‘ஏழைகள்’, கொடுத்து வாழ்பவர்கள் ‘பணக்காரர்கள்’. பணமும் மண்ணும் பொன்னும் உடல்நலமும் உறவும் நண்பர்களும் இருந்தால் போதாது. ஒருவர் இன்புற்று இருக்க வேண்டும். செல்வத்தை எந்த அளவுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்பதில் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கிறது. பகிர்ந்து வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை. அதுவே பணக்கார வாழ்க்கை எனலாம். பணமில்லை என்றாலும் பணக்காரராக வாழ வழி உண்டு. உங்கள் பெற்றோரின் பெரிய சொத்து நீங்கள். இந்த நாட்டின் சொத்தும் நீங்கள்தான். உங்களை நம்பித்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. உங்களிடம் இருக்கும் அனைத்துச் செல்வங்களையும் ஆய்வு செய்யுங்கள். சில உயர்ந்த செல்வங்களை வரும் வாரங்களில் அறிவோம்.

No comments:

Popular Posts