Sunday, 21 October 2018

ஈரக் கண்களோடு ஒரு வீர வணக்கம்

ஈரக் கண்களோடு ஒரு வீர வணக்கம் ஆர்.திருநாவுக்கரசு,ஐ.பி.எஸ், துணை ஆணையர், நுண்ணறிவுப்பிரிவு இன்று (அக்டோபர் 21-ந்தேதி) வீர வணக்கநாள் 1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி. இந்திய தேசத்தின் இமயமலைப் பிரதேசம். கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் வெண்பனி மலைகள். மனித சுவடுகள் ஹாட்ஸ்பிரிங் என்ற இடம் வரை மட்டுமே அதிகம் நடந்து பழகி இருந்தது. ஓர் இருபத்தி இரண்டு பேர் கொண்ட குழுவினை தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி கரம்சிங், தனது குழுவினருடன் சீன எல்லையில் உள்ள லங்காலா என்னும் பகுதிக்குச் செல்ல ஆலோசனை செய்தார். மூன்று சிறு குழுக்களை அவர்கள் செல்ல வேண்டிய வழியினை ஆராய அனுப்பினார். அந்தி வேளையில் காற்றும் கூட தனது பயணத்தினை நிறுத்திக்கொண்டது. இரண்டு குழுக்கள் திரும்பி வந்து சேர்ந்தனர். நேரத்திற்கு திரும்பி வர வேண்டிய வயதுப் பெண்ணை, எதிர்பார்த்து காத்திருக்கும் தாயைப்போல், மூன்றாம் குழுவினர் சென்ற திசை நோக்கி காத்திருந்தார் கரம்சிங்.குளிர் இரவும், ஏக்கமும் அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தை மட்டுமல்ல, அவர்கள் மனதையும் கவ்வியது. விழித்த இரவில் காலடிச் சத்தம் தேடினர். மூன்றாம் குழுவில் சென்ற இரண்டு வீரர்கள், அவர்களுடன் சென்ற வழிகாட்டி மூவரின் பெயர்களையும் சத்தமாய் உச்சரித்துப் பார்த்தனர். பதிலே இல்லை. மறுநாள் அவர்கள் சென்ற திசைநோக்கி, இருபது வீரர்களும் பயணித்தனர். பனிக்கட்டியில் கால்கள் நழுவும் அப்பயணத்தில், கரம்சிங்கும், உடன் சென்ற வீரர்களின் பார்வையில் தூரத்து மலைமேல் மனித நடமாட்டம் தென்பட்டது. நம்மவர்கள்தான் என்று இவர்கள் கையசைக்க, அந்த குளிரினும் கொடிய எண்ணமுடைய சீனாகாரனின் தோட்டாக்கள், இந்தியச் சிப்பாய்களின் இதயங்களை ஊடுருவின. இருபதில், பத்துபேர் நடுகல்லாய் ஆனார்கள். ஏழு பேர் சிந்திய ரத்தத்தோடு சீனாவின் சிறைக்கைதியாகினர். எஞ்சியவர்களின் தகவலின் பேரில், இந்தியா சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, இறந்தவர்களின் உடல் இருபத்தி நான்காம் நாளில் (நவம்பர் 13) இந்திய மண்ணிற்கு திரும்பி வந்தது. “பொருதடக்கை வாளெங்கே! மணிமார் பெங்கே! போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத பருவயிரத் தோள்எங்கே எங்கே என்று கலிங்கத்துப் பரணி வரிகளை பாட எந்த சொந்தமும் அங்கு இல்லை. புகழுடம்புகள் விண்ணிற்கு ஆவியாகி, மேகத்தில் கலந்து இந்திய மனிதத்தின் மூச்சானது. 1960-ம் ஆண்டு, ஜனவரியில் காவல்துறை தலைவர்களின் மாநாடு கூடியது. ஹாட்ஸ்பிரிங்கின் நிகழ்வு ஒவ்வொருவரையும் ஒரு கனத்த துயரத்தில் ஆழ்த்தியது. உலகப் போரில் போரிட்டு உயிர் நீத்தவர்களுக்கு ஒரு “இந்தியா கேட்” போல தேசத்தின் ஒவ்வொரு மூலையிலும் தனது உயிரினை, இத்தேசத்திற்காக அர்ப்பணிக்கின்ற மத்திய மற்றும் மாநில காவல்துறையினரின் தியாகம் பறை சாற்றப்பட வேண்டும் என முடிவெடுத்தனர். நம் இந்திய வீரர்கள் உயிர் நீத்த நாளான அக்டோபர் 21-ஐ வீர வணக்க நாளாக அனுசரிக்க தீர்மானித்தனர். இன்று 59-வது வீர வணக்க நாள். இதுவரை 35ஆயிரத்துக்கும் அதிகமான காவல் வீரர்கள் இத்தேச நலனுக்காக பணியில் ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை இம்மண்ணுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார்கள்.அவர்களுக்கு நம் வீர வணக்கங்கள். அவர்களது, பிரிவால் வாடும் பெற்றோர், மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர்களுக்கு நம் ஈர வணக்கங்கள். காவல் பணி புனிதமானது. காக்கிச் சட்டை வீரம் செறிந்தது. காவல் பணி தேசம் காக்கும் நேசமான பணி. தேசத்தின் மாண்பு காக்கும் மகத்தான பணி. தேச மக்களின் சுதந்திரம் காக்கும் உன்னதப் பணி. பணிவோடு துணிவு காட்டும் தீரமான பணி. அல்லல் அழித்து, நல்லதை நிலைநிறுத்தும் அறப் பணி. எதிர்பாராததை எதிர்கொள்ளும் ஓர் அசாத்தியமான பணி. துடிப்பான இப்பணியில், ஆர்ப்பரிக்கும் அலை கடலில், கலங்கரை விளக்காய் உயர்ந்து நிற்கும் கடற்படையாய், விண்ணை முட்டும் மலைமீது எதிரியின் வழித்தடம் பார்த்து எல்லைப் பாதுகாப்பாய், நள்ளிரவில் புழுக்கம் கொள்ளும் பாலைவனத்திலும் வேலிகளைத் தாண்டவிடாத பாதுகாப்பு ராணுவமாய், பதுங்கியும் ஒதுங்கியுமிருந்து மனிதத்தை வேட்டையாடும் தீவிரவாதத்திற்கு எதிரான மத்திய பாதுகாப்பு படையாய், நாட்டின் தலைமையைப் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு படையாய், எல்லையில் பகைவரிடமிருந்து தேசம் காப்பதுபோல், உள்நாட்டில் கயவர்களிடமிருந்து சட்டம் ஒழுங்கை காக்கும் காவலாய் என பாதுகாப்பின் பல உருவில் நம் தேசத்தை சேதமில்லாமல் காப்பதுதான் காவல். “விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன் நாளை எடுத்து” என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கு இலக்கணமாய் ஒவ்வொரு நாளும், நம் இந்திய தேசத்தினை வீரத்தினால் காப்பவர்கள் நம் காவல் வீரர்கள். துப்பாக்கிகளோடு வரும் எதிரியையும் எதிர்கொள்ளுதல், கலங்க வைக்கும் கலகக்காரர்களை கட்டுப்படுத்துதல், பேரிடர் காலத்தில் பேருதவி செய்தல், அரக்க குணம் கொண்ட தீவிரவாதிகளை அடியோடு அழித்தல், மிருக குணம் கொண்ட குற்றவாளிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துதல் என ஒவ்வொரு நாளிலும், கொடூரமான அபாயங்களை நித்தமும் சந்திப்பது காவலரின் கடமை. தேசத்தின் அமைதிகாக்கவும், அதன் அபார வளர்ச்சிக்காகவும், அபாயத்தையும், இறப்பையும் பரிசாக பெறுபவர்கள் காக்கி சட்டையினர். இத்தகையை தியாகப் பரிசுகளைக் காவல் வீரர்கள் பெறுவதால்தான், ஒவ்வொரு இந்தியனின் தனிமனித சுதந்திரமும் காவல் கவசத்தால் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. வீரவணக்க நாளில், வீரர்களின் நினைவுத் தூண்களுக்கு முன்னால் ஈரக் கண்களோடு நிற்கும்போது போது, “உங்களின் சிறப்பான வருங்காலத்திற்காக எங்களின் இன்றைய அழகான நிகழ்காலத்தை அர்ப்பணித்தோம்“ என்று அர்பணித்தவர்களின் வாய் மொழிகள் மனதில் ஆழமாய் விழுகிறது.உலகெங்கிலும் பரவலாக பேசப்படுகின்ற தீவிரவாதம், வீதிகளிலே பயணிக்கின்ற ஒரு தனி மனிதனை அச்சுறுத்தினால், இந்த தேசத்திற்காகவும், தனி மனித சுதந்திரத்திற்காகவும், தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை மனதில் நிறுத்துவோம். அதன் பின்னர், ஓர் உறுதி ஏற்போம். பணியில் ஓர் உத்வேகம் கொள்வோம். இந்த தேசத்தினுடைய ஒற்றுமையையும், பாதுகாப்பையும், உறுதிப்படுத்தி ஒரு வளமான, அமைதியான எதிர்காலத்தோடு இந்த தேசம் விளங்க, நாம் எத்தகைய தியாகத்தையும் மேற்கொள்ள சூளுரைப்போம். ரத்தங்களை சிந்தத் துணிவது வீரம்! ரத்தங்களை வியர்வையாக்கி உழைப்பது ஈரம்!! ஓர் ஈர மனதோடு வீரவணக்கம் செலுத்தும் இந்நாளில், ஒரு வீர மனதோடு வாழ்கின்றோம் என்ற பெருமை கொள்வோம்!!!.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts