Thursday, 18 October 2018

பாரதியார் பாராட்டைப் பெற்ற நாமக்கல் கவிஞர்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பேராசிரியர் க.சுபத்திரா நாளை(அக்டோபர் 19-ந்தேதி) நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்தநாள். “தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று தொடங்கும் பாடல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளெங்கும் பாடப்பட்டு வந்த பாடல் ஆகும். நாமக்கல் கவிஞர் எழுதிய கதை “மலைக்கள்ளன்” என்னும் பெயரில் திரைப்படமாக வெளி வந்த போது அந்தப் படத்தில் இடம் பெற்ற அவரது பாடலாகும். குடியரசுத் தலைவரின் விருது பெற்ற முதல் தமிழ்ப்படம் என்னும் பெருமையும் இப்படத்திற்கு உரியது, நாமக்கல் கவிஞரின் கதைக்குத் திரைக்கதையும் உரையாடலும் கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ளார். மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை “மலைக்கள்ளன்” பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக் கதை படமாக்கப்பட்டது. “மலைக்கள்ளன்” அனைத்து மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றது. நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை என்று பின்னாளில் உலகறிந்த இந்தக் கவிஞர் 1888-ம் வருடம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் என்ற ஊரில் பிறந்தார். அவ்வூர் போலீஸ் “ஏட்டு” ஆக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு எட்டாவது ஆண் குழந்தையாய்ப் பிறந்த ராமலிங்கம் தமது கவித்திறமையால் எட்டுத்திசையும் புகழும் பெருமை பெற்றார். தம் மகன் பெரிய படிப்பு படித்துப் பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் எனத் தந்தை ஆசைப்பட்டார். ஆனால் ராமலிங்கம் பிள்ளைக்கு நாட்டமெல்லாம் தமிழ் இலக்கியத்திலேயே இருந்தது.தமது பத்தொன்பது வயதில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஓவியக்கலையில் நாட்டம் கொண்டு அதில் திறமையை வளர்த்துக்கொண்டார். இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் தமது முடிசூட்டுவிழாவை டெல்லியில் நடத்தியபோது அந்த மன்னரை இவர் வரைந்து அனுப்பிய ஓவியத்துக்காகத் தங்கப்பதக்கம் பெற்றார். டெல்லிக்கு அழைத்து அந்த மன்னரோடு அமர்ந்து விருந்து அருந்த அழைக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றார். அரசரால் சிறப்புப் பெற்றவர் ஆங்கிலேய அரசை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தொடக்கத்தில் திலகருடைய தீவிரவாதக் கட்சியில் ஈடுபட்டார்.பின்னர் காந்தியின் அணிக்கு மாறினார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் காரைக்குடிக்கு அருகில் உள்ள கானாடு காத்தான் என்னும் ஊருக்கு வந்திருந்தார். அவரைப் பார்க்க ஆசைப்பட்டு நாமக்கல் கவிஞர் சென்றிருந்தார்.அவரைப் பாரதியாருக்கு “இவர் நல்ல ஓவியர்“ என்று அறிமுகப்படுத்தினார்கள்.“பிள்ளைவாள்! நீர் நம்மை ஓவியம் தீட்டும். யாம் உம்மைப் பற்றிக் காவியம் தீட்டுவோம்” என்று பாரதியார் கூறினாராம். இவர் பாடல்கள் இயற்றுவதிலும் ஈடுபாடு உடையவர் என்றதும் “ஏதாவது நீர் இயற்றிய பாடலைக் கூறும்.“ என்று பாரதியார் கேட்டுக்கொண்டாராம். ஆனால் மகாகவியின் முன் நமது பாடலா என்று நாமக்கல் கவிஞர் முதலில் தயங்கியுள்ளார்.“கூச்சம் எதற்கு? பாடும். என்று பாரதியார் தூண்டிய போதும் எந்தப் பாடலைக் கூறுவது எனத் தயங்கிய நாமக்கல் கவிஞர் கிட்டப்பா நாடகக்குழுவினருக்குத் தாம் எழுதிக் கொடுத்த பாடல் ஒன்றைக் கூறியுள்ளார்.“லங்காதகனம்” என்னும் நாடகத்துக்காக எழுதப்பட்ட பாடல்களுள் ஒன்று ராமனுடைய சோகத்தைக் கூறுவதாக அமைந்திருந்தது. “தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத் தான் வணங்கிக் கைகட்டிநின்றபேரும்” என்று பாடலின் முதல் அடியைச் சொன்னவுடனே எழுந்துநின்று கைதட்டி“பலே பாண்டியா! பலே!பலே!” என்று ஆனந்தக்கூத்தாடினாராம் பாரதியார். அவ்வாறு பாரதியாரின் உள்ளம் கவர்ந்த நாமக்கல் கவிஞர் பாரதியாரின் வழிவந்த தேசியக்கவிஞர் என்று புகழ்பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து விடுதலை உணர்வைக் கிளர்ந்து எழச் செய்யும் பாடல்களைப் படைத்தார். பரிசுக்காகவோ, பாராட்டுக்காகவோ தமது கவிதை படைப்பில் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. ‘கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.திருச்சிராப்பள்ளியில் டாக்டர் ராஜன் வீட்டிலிருந்து ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திற்குப் புறப்பட்ட சத்தியாக்கிரகப் போராளிகளின் ஊர்வலத்திற்கு இந்தப் பாடல் தான் வழிநடைப்பாட்டாக அமைந்தது. ராஜாஜி இந்தப் பாடலைப் பாராட்டி நாமக்கல் கவிஞருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். “இந்தச் சமயத்தில் சுப்பிரமணிய பாரதியார் இல்லையே என்று நான் எண்ணினேன். அந்தக் குறையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சத்தியாக்கிரகப் போர் முழக்கப் பாடலாக விளங்கிய இந்தப் பாட்டை ஒரு வாரப் பத்திரிகை லட்சக்கணக்கில் அச்சிட்டுத் தமிழ்நாடெங்கும் பரப்பியது. தமது பாடல்களாலும் நூல்களாலும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் நாட்டுப்பற்றை ஊட்டும் பணியில் அயராது ஈடுபட்டார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.மக்கள் மனங்கவர்ந்த தேசியக்கவிஞராகப் புகழ்பெற்றார். 1948-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் காந்தியடிகள் நினைவாக நினைவுத் தூண் ஒன்று நிறுவி அதனை அந்நாளைய தமிழக முதல்-அமைச்சர் குமாரசாமி ராசாவை கொண்டு திறக்கச் செய்தார். அன்று மாலை நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரைத் தலைமை வகிக்கச் செய்து அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணாவை சொற்பொழிவு ஆற்றச் செய்தார். அண்ணாவும் நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்கு நேர் சந்தித்து பேசினர். அப்போது “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று அண்ணா நாமக்கல் கவிஞருக்குப் புகழாரம் சூட்டினார். அவரது எழுத்தாற்றலையும் கவிதைச் சிறப்பையும் மனமாரப் பாராட்டி மகிழ்ந்தார். 1953-ம் ஆண்டு ‘சாகித்ய அகாடமி‘யின் நிர்வாகக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றார்.சாகித்ய அகாடமி என்னும் அமைப்பு இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனமாகும்.இந்திய மொழிகளின் இலக்கியப் படைப்பாளிகளின் சார்பாளர்கள் கலந்து செயற்படும் இந்த அமைப்புக்கு ஜவகர்லால் நேரு தலைவராக அப்போது விளங்கினார். முதல் கூட்டத்தில் நாமக்கல் கவிஞரை நேருவுக்கு அறிமுகப்படுத்தியபோது டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தமது அறிமுகவுரையில் “நாமக்கல் கவிஞர் ஓர் அரிய கலைஞர்; தலைசிறந்த தேசபக்தர்; தேசத்துக்காகத் தியாகம் பல செய்தவர்; சிறைவாசம் புரிந்தவர்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர்; “ஆடு ராட்டே சுழன்று ஆடு ராட்டே!“ என்று பாடித் தமிழ் நாட்டையே சுழன்று ஆடச் செய்தவர்“ என்று பாராட்டியது இங்குக் குறிப்பிடத்தக்கது. 1949-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவியை வழங்கிச் சிறப்பித்தது. தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இருமுறை இவர் நியமிக்கப்பட்டார். 1971-ல் இவருக்கு இந்திய அரசு ‘பத்மபூஷன்’ விருது வழங்கிச் சிறப்பளித்தது.திரைப்படமாக வெளிவந்து புகழ்பெற்ற மலைக்கள்ளன் என்னும் நாவலைத் தவிர இவர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார். ‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று முழங்கிய நாமக்கல் கவிஞர் 1972-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி காலமானார்.தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டி இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன நாமக்கல் கவிஞரின் வீரமுழக்கத்திற்கேற்பத் தமிழ்நாடு சிறந்துவிளங்கும் நிலையை உருவாக்குவதே அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக விளங்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts