Tuesday, 29 January 2019

ஆரோக்கியத்துக்கு பகையாகும் வாகன புகை

ஆரோக்கியத்துக்கு பகையாகும் வாகன புகை பி. தயாளன், பெரம்பலூர். ந வீன 21-ம் நூற்றாண்டில் உலகத்தை மிகவும் அச்சுறுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது சுற்றுச் சூழல் பாதிப்பு தான். சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட காற்று மாசினை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. நமது நாட்டிலும் டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்கள் காற்று மாசினை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதை கண்டு வருகிறோம். மனிதர்களின் எண்ணிக்கையை முறியடிக்கும் வகையில் வேகமாக பெருகி வரும் வாகனங்கள்தான் காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வளர்ச்சிக்காக காற்றைப் பெருமளவு மாசுபடுத்துகிறோம். இந்திய தேசத்தில் 2018-ம் ஆண்டின் கணக்கின்படி சுமார் 18 கோடி வாகனங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் அவற்றின் எண்ணிக்கை சுமார் 1½ கோடியை தொட்டுள்ளது. இதில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாக னங்களும், கனரக வாகனங்களும் அடங்கும். காற்று மாசு பொதுவாக புகை, தூசு, துகள், சாம்பல், நச்சுவாயு போன்றவைகளால் ஏற்படுகிறது. வாகனங்கள் உபயோகப்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றாலும் நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை எரியூட்டும்போதும் காற்று மாசடைகிறது. வாகனப்புகையினால் ஏற்படும் மாசு இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்து உள்ளது. இதிலிருந்து காரீயம், கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன், சல்பர்டைஆக்சைடு மற்றும் துகள்கள் வெளிப்படுவதால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிப்படைகிறது. இந்தியாவில் உள்ள வாகனங்களில் 75 சதவீதம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள். இதில் இரண்டு சக்கர வாகனங்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை மட்டும் 25 சதவீதம். இதிலும் பெரும் எண்ணிக்கையிலான வாகனங்களில் இரண்டு ஸ்ட்ரோக் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்கா போன்ற நாடுகளையும் ஒப்பிடும்பொழுது, நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் இங்குதான் வாகனங்களினால் ஏற்படும் புகை மாசுபாடு அதிகமாக உள்ளதாக கூறும் புள்ளி விவரங்கள் நம்மை வேதனைப் படுத்துகின்றன. புகை மாசின் 70 சதவீதம் வாகனத்தின் எக்சாஸ்ட் குழாய் மூலம் தான் வெளியாகிறது. டீசல் மூலம் இயக்கப்படும் கனரக வாகனங்களில் இருந்து அதிகமாக நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் துகள்கள் வெளியாகிறது. மேலும், இலகுரக வாகனங்களில் பயன்படுத்தும் பெட்ரோலினால் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோ கார்பன் வெளியிடப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சுலபமாக மாசுபடுவதுடன் உயிரினங்கள் மற்றும் நமக்கு இலவசமாக நோய்களை வாரி வழங்குகின்றன. வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன்டைஆக்சைடு, பூமி வெப்பமயமாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாசுகள் பூமியின் மேலுள்ள வளிமண்டலத்தில் ஓர் திரைபோல் படிந்துவிடுகின்றன. இதனால், பூமியின் மேல்பட்டுத் திரும்பும் சூரியனின் அகச்சிவப்புக் கதிர்களைத் திரைபோல் படிந்துள்ள மாசுத்திட்டுகள் தடுத்து விடுகின்றன. அவை மீண்டும் பூமிக்கே திரும்புவதால் பூமியினுடைய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெப்பம் கூடுவதால், துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகின்றன. வாகனப்புகையினால் ஏற்படும் பாதிப்புகளை நாம் குறைவாக எண்ணி விட முடியாது. அதிக அளவிலான நைட்ரஜன் டை ஆக்சைடினால் மார்புச்சளி, மூச்சுத் திணறல், பல் ஈறு வீக்கம், நுரையீரல் புற்றுநோய், கண் எரிச்சல் உண்டாகின்றன. கார்பன் மோனாக்சைடின் அளவு 300 பி.பி.எம். அளவைத் தாண்டும்போது தலைவலி, வாந்தி, ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவு குறைதல் உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்துகின்றன. கார்பன் மோனாக்சைடின் அளவு 1,000 பி.பி.எம். தாண்டும்போது சில நேரங்களில் உயிரிழப்பு கூட நேரிடலாம். ஹைட்ரோ கார்பன் அதிக அளவு வெளியிடப்படுவதால் மூச்சுக்குழாய் அடைப்பு, இருமல், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல், புற்றுநோய் மற்றும் உடல்சோர்வுகள் வந்து சேருகின்றன. காரீயம் நம் உடலில் அதிக அளவில் சேரும்போது நினைவாற்றல் குறைகிறது. சிந்தனையில் மாற்றம், சிறுநீரகத்தில் பழுது, அமைதியின்மை மற்றும் நுரையீரல் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இது மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இந்த நச்சுகள் காற்றில் அதிகமாக கலப்பதால் தாவர இலைகளின் வளர்ச்சி குன்றுகிறது. இலை சுருளுதல், காய்கள் முற்றாமலேயே பழுத்துவிடுதல் போன்ற அபாயம் நேரிடுகின்றன. வாகனப்புகையிலிருந்து வெளியேறும் துகள்கள் மண்ணில் படிவதால், அந்த நிலங்கள், பயிர்கள் மற்றும் செடிகள் வளர்வதற்குத் தகுதியற்றுப் போகின்றன. மேலும், தாவர இலைகளின் மீது துகள்கள் படிவதால் உணவு உற்பத்தி அதிக அளவு குறைந்து போகிறது. இப்படி பல்வேறு பாதிப்புகளை தரும் வாகனப்புகை மாசுக்கு தீர்வுதான் என்ன? வாகனங்களுக்குத் தூய்மையான, தரமான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். காரீயம் கலக்காத எரிபொருளை பயன்படுத்தினால் மிகவும் நன்மையே. சாலைகளை மேம்படுத்தி முறையாகப் பராமரித்தாலும் மாசுக்களை கட்டுப்படுத்த முடியும். நச்சுப்புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம். கார்கள், மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தலாம். மிகவும் பழமையான வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற பொறுப்பு வேண்டும். வெளிநாட்டில் மாசினை குறைப்பதற்காகசைக்கிள்களை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். நாமும் பக்கத்து இடங்களுக்கு செல்வதற்காவது சைக்கிளுக்கு மாறலாம். பெரும்பாலான வெளிநாட்டினர் பேட்டரி வாகனங்கள், எலக்ட்ரானிக் வாகங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். எனவே புகை மாசுவை கட்டுப்படுத்துவோம். தேசத்தை காப்போம்.

No comments:

Popular Posts