Follow by Email

Sunday, 2 September 2018

தேரின் அழகில் மறைந்திருக்கும் இலக்கணம்

தேரின் அழகில் மறைந்திருக்கும் இலக்கணம் கவிஞர் எல்.பிரைட் நவீனப் போக்குவரத்து வாகனங்கள் அறிமுகமாகாத அந்தக்காலத்தில் மரச்சக்கரங்களால் உருவாக்கப்பட்ட ஊர்திகளே பயணம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை தேர்கள் என்றும் சப்பரங்கள் என்றும் வண்டிகள் என்றும் அழைக்கப்பட்டன. தேர்களைப் பெரும்பாலும் அரசர்களும், போர் வீரர்களுமே பயன்படுத்தி வந்தனர். ராமனின் தந்தை பத்துத்திசைகளிலும் தேர்களைச் செலுத்தும் வல்லமை பெற்றிருந்தாராம். அதனாலேயே அவர் தசரதர் என்று அழைக்கப்பட்டார் என்கிறது புராணக்கதை. ரிக் வேதத்தில் கயிறுகளால் இழுக்கப்படும் தேர்கள் பற்றியும், இந்திரன், வருணன், அக்கினி, சூரியன் போன்ற கடவுள்களுக்கு தியாகத் தேர்கள் பயன்பட்டமை பற்றியும் குறிப்புகள் உள்ளன. தேர்கள், போக்குவரத்துக்குப் பயன்படும் தேர்கள், போருக்குப் பயன்படும் தேர்கள், கடவுள்களின் தேர்கள் என்று மூன்று விதமான பயன்பாட்டில் இருந்ததாக அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. மேலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியங்கள், பன்னிருதிருமறைகள், புராணங்கள் ஆகியவையும் தேர்கள் பற்றிய செய்திகளை நமக்கு பெருமளவில் தருகின்றன. கடவுள்களைத் தேரில் வைத்து ஊர்வலம் போகும் நடைமுறை பல்லவர் காலத்துக்கு முன்பே பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரிகர் பாஹியான் தாம் கண்ட ஒரு பவுத்த மதத் தேரோட்டத் திருவிழாவைப் பற்றி தம் நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 1011-ம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த சோழர்கள் காலத்தில் கோவில்களில் தேர்த்திருவிழா நடத்துவது வாடிக்கையாகிவிட்டது என்றாலும், விஜயநகரச் சாம்ராஜ்ஜியம் செழித்திருந்த காலத்தில்தான் தேர் இழுப்பது சிறப்புப் பெற்றிருக்கிறது. தற்காலத்தில் செல்வம் மிகுந்த சிதம்பரம், மதுரை, திருப்பதி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை முதலிய ஊர்களில் உள்ள கோவில்களில் ஆண்டில் பலதடவை தேரோட்டம் நடத்தப்பெறுகிறது. திருவாரூர் தேரழகு எனப் புகழ்கிற போதே தமிழ்நாட்டிலுள்ள தேர்களில் எல்லாம் திருவாரூர் தேரே சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். இதேபோல் ஒடிசா மாநிலத்தின் பூரி என்ற ஊரிலுள்ள ஜகன்நாத சுவாமி கோவிலின் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. தேர்கள் ஊர்வலம் வரும்போது அவற்றைப் பெரும்பாலும் மனிதர்களே இழுப்பது வழக்கமாக உள்ளது. தேர் இழுப்பவர்களுக்கு நிலங்கள் தானம் விடப்பட்டதையும், அவர்களின் தலைமுறைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதையும் கல்வெட்டுகள், இலக்கியங்கள் விரிவாக விளக்குகின்றன. தேர்களை உருவாக்கும் சிற்பிகள் அவர்களின் கற்பனைக்கு ஏற்றபடி எல்லாம் தேரை வடிவமைத்துவிட முடியாது. தேர் எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பதற்கு மானசாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல் இலக்கணம் கூறுகிறது. அவ்விலக்கணத்தின்படி பார்த்தால் தேரும், கடவுளர்களின் கோவிலும், ஒரே மாதிரியான உருவ அமைப்பைப் பெற்றிருப்பதை அறியமுடியும். பெரும்பாலான தேர்கள் உறுதியுடைய இலுப்பை மரத்தினால் செய்யப்படுகின்றன. சக்கரம் வாகை அல்லது வேங்கை மரத்தினால் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தேரிலும் 250 முதல் 300 சிற்பங்கள் வரை இருக்கும். கோவிலைப் போன்றே அமைக்கப்பட்ட தேரின் அடிப்பாகத்தில் பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சொர்க்க வாழ்க்கை என்ற மூன்று விதமான வாழ்க்கை முறையின் அடிப்படையில் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. பூலோக வாழ்க்கையில் அரசர்கள், நடனக் கலைகள், காதல் காட்சிகள், ஆகாய வாழ்க்கையில் கின்னரர்கள், சொர்க்க வாழ்க்கையில் நடராசர், விஷ்ணு, ஆறுமுகன், கணநாதன் முதலிய கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்படுகின்றன. சைவர்களின் தேர்களில் வைணவக் கதைகளை விளக்கும் காட்சிகளைச் செதுக்கி வைக்கிறார்கள். தேரின் மேற்பாகம் சித்திரங்கள் வரையப்பட்ட தேர்சிலைகளால் மூடப்படுகின்றது. அழகிய உருவங்கள் கொண்ட தோரணங்களாலும் இப்பாகம் அலங்கரிக்கப்படுகிறது. கல்லால் தேர் செய்யும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தே தோன்றியிருக்கிறது. கல் தேர்களில் எல்லாம் சிறப்பு வாய்ந்ததாக ஒடிசா மாநில கடற்கரை ஓரத்தில் கோனாரக் என்ற ஊரிலுள்ள சூரியன் கோவில் இருக்கிறது. அதுகூட 14-ம் நூற்றாண்டில் தஞ்சை சோழ வம்சத்தினருக்கு உறவினரான ஒரு கலிங்க அரசனால் கட்டப்பட்டதாகும். விஜய நகர சாம்ராஜ்ஜிய அரசர்களும் கல்தேர்கள் செய்வதைத் தொடர்ந்து கையாண்டனர். விஜய நகர சாம்ராஜ்ஜியதின் தலைநகரான ஹரம்பி என்ற ஊரில் செய்யப்பட்ட கல்தேர் இதற்குச் சான்றாக உள்ளது. தற்காலத்தில் மரத்தேர்களோடு வெள்ளி, தங்கத்தால் ஆன தேர்களும், கோவில்களில் இழுக்கப்படுகின்றன. செல்வம் மிகுந்தவர்கள் இவ்வகைத் தேர்களை கோவில்களுக்குத் தானமாக வழங்குகிறார்கள். ‘ஊர்கூடி தேர் இழுப்போம்’ என்பது முதுமொழி. மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தெய்வங்களுக்கு முதல் மரியாதை செய்யவேண்டும் என்பதற்காகத்தான் தேர்த்திருவிழாவே கொண்டாடப்படுகிறது. அதை வசதியாக மறந்துவிட்டு தேர் இழுப்பதில் மனிதர்களில் யாருக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்கான கவுரவ பிரச்சினையாக திருவிழாக்கள் மாறி வருகின்றனவோ? என்ற அச்சம் எழுகிறது. ஒற்றுமையை வலியுறுத்திதான் ஆடி அசைந்து தெருத் தெருவாக ஊர்ந்து வருகிறது தேர். அனைவரும் அதை புரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts