Saturday 1 September 2018

காணாமல்போன கடிதங்கள்...!

காணாமல்போன கடிதங்கள்...! முனைவர் ரா.வெங்கடேஷ், சென்னைப் பல்கலைக்கழகம் இன்று (செப்டம்பர் 1-ந்தேதி) உலக கடித தினம். கடிதம் என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களையும் எழுச்சி மிகு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஆயுதமாகும். கடிதம் எழுதுதல் என்பது ஒரு தனிக்கலை. கடிதம் தகவல் பரிமாற்றத்திற்கான களம். ஒருவர் பிறரிடம் நேரடியாகப் பேச முடியாத சூழல் உருவாகும் போது உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகளை வார்த்தைகள் மூலம் புலப்படுத்தும் முறைமையாக கடிதங்கள் கருதப்படுகின்றன. கடிதங்கள் இரு தனிநபர்களுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் அல்ல. இது எழுத்து வடிவிலான உணர்வுப் பரிமாற்றம். இல்லை. உறவுப் பரிமாற்றம். தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படும் கடிதம் எழுதும் முறையை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி உலகக் கடிதம் எழுதும் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ரிச்சர்டு சிம்ப்கின் என்பவர் கையால் கடிதம் எழுதுவதை விரும்பி காதலித்தார். அவர் மூலம் தான் கடித தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மின்னல் வேகத்தில் தகவல்களைப் பரிமாற மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப் எனப் பல வசதிகள் இருப்பினும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகம் அறிந்த ஒரே தகவல் பரிமாற்ற வழி கடிதம் மட்டும் தான். எப்போது கடிதம் வரும் என ஏங்கிக் கிடந்தவர்களும் உண்டு. ஏன் இந்தக் கடிதம் வந்தது என்று பயந்து நடுங்கியவர்களும் உண்டு. காரணம் கடிதம் தாங்கி வரும் செய்தி இன்பமா? துன்பமா? தெரியாது. எனவே வீட்டு வாசலில் ‘தபால்’ என்ற குரல் கேட்டாலே வீடு மட்டுமல்ல அந்தத் தெருவே பரபரப்பாகிவிடும். வந்த கடிதத்தை ஒருவர் விடாமல் படித்து மகிழ்ந்ததுடன் உடனடியாகப் பதில் கடிதத்தையும் எழுதித் தபாலில் சேர்ப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களை வாழ்வியலோடும் சமூக எதார்த்தத்தோடும் உறவுகளை, நண்பர்களை, பகைவர்களைக் கூட கட்டிப்போட்ட மாபெரும் மக்கள் தொடர்பு சாதனமாக கடிதம் இருந்தது. ஆனால் இன்றைய கணினி உலகில் கடிதம் அனுப்புவதும், வருவதும் விலை மதிக்க முடியாத பரிசாக எண்ணிக் கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வாக மாறிவிட்டது. நட்புக் கடிதங்கள், பாராட்டுக் கடிதங்கள், பரிந்துரைக் கடிதங்கள், அலுவலகக் கடிதங்கள், காதல் கடிதங்கள், அரசியல் கடிதங்கள், உணர்ச்சிக் கடிதங்கள், வேண்டுகோள் கடிதங்கள், வணிகக் கடிதங்கள், இலக்கியக் கடிதங்கள் எனக் கடிதங்கள் பல வகைப்பட்டாலும் ஒவ்வொன்றும் ஒருவித ஆழமான, அழகான கருத்தினை வெளிப்படுத்துபவை. கடிதம் எத்தன்மைதாயினும் இதன் மூலம் எழுத்து, சிந்தனை, பொது அறிவு, பிறரை மதிக்கும் பண்பு, நயம்படக் கருத்துரைக்கும் பாங்கு, நட்பு பாராட்டுவது எனப் பல திறமைகள் வெளிப்படுகின்றது. இவற்றில் தனி நிலைக் கடிதங்களைக் காட்டிலும் பொது நிலைக் கடிதங்கள் சமூகத்திற்கானதாக இருப்பதால் அவை மக்களின் மனங்களில் ஊடுருவி உணர்வோடும் உதிரத்தோடும் கலந்து விடுகின்றன. இதற்கு பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கடிதங்களே சாட்சி. தமிழர்தம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, அரசியல் என அனைத்துத் தளங்களிலும் இழந்த அடையாளங்களை மீட்கப் போராடிய எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா. கட்சியினரின் கருத்துகளை அறிவதற்கும், தொண்டர்களுக்குச் சமகால அரசியல் போக்குகளை அறிவிப்பதற்கும், தலைமைக்கும் தொண்டர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கும் ‘தம்பிக்கு...’ என அவர் எழுதிய கடிதங்கள் அரசியலில் ஓர் புதிய பாதையை வகுத்தன. அண்ணாவைத் தொடர்ந்து திராவிடக் காரர்களை மட்டுமன்றி வெகுஜன மக்களையும் காலந்தோறும் தன் கடிதங்களால் கட்டிப்போட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். ‘உடன் பிறப்பே’ என அழைக்கும் அவரின் கடிதங்கள் முற்போக்குச் சிந்தனைகளை, மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் முழுப்பகுத்தறிவுக் கருத்தாக்கங்களாகத் திகழ்ந்தன. கலைஞரின் எழுத்துக்கள் சுருக்கமானதாகவும் எளிமையான தெளிந்த கருத்தாழம் மிக்க தன்மை கொண்டதாகவும் இருந்தன. தொண்டர்களுக்கான அறிவுரைகளையும் நாட்டு நடப்பையும் பிற கட்சியினரும் படித்து ரசிக்கும் அளவில் இலக்கிய நயம் குழைத்துத் தந்ததால் கலைஞரின் கடிதங்கள் காலம் கடந்தும் பேசப்படுவது மட்டுமன்றி, தொண்டர்கள் அவரின் கடிதங்களுக்காக ஏங்கும் நிலையையும் உருவாக்கியது. எந்தப் பிரச்சினையானாலும், கடிதம் எழுதி அதற்குப் பதில் கடிதம் பெறுவதையே பெரும் தீர்வாக எண்ணிக் கடிதங்களை வரைந்தார். மூதறிஞர் ராஜாஜி தனக்கு வரும் கடிதங்களைத் தவறாமல் படித்து அதற்குத் தன் கைப்பட பதில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் பிரதமரான நேரு சிறையிலிருந்த போது மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதம் மிகவும் புகழ் பெற்றவை. மகாகவி பாரதி தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் அன்பை வெளிப்படுத்தினாலும் மொழிப் பற்றையும் புரட்சிகர கவிதைகளையும் பறைசாற்றி நிற்கும். யார் மீதாவது கோபம் வந்தால் அவ்வளவுதான், அவருக்குக் கோபமாக கடிதம் எழுதும் பழக்கமுடையவர் ஆபிரகாம் லிங்கன். துன்பமான சூழலிலும் மனைவிக்கு அன்பையும் நம்பிக்கையையும் தன் கடிதங்கள் வழியே பகிர்ந்தவர் எழுத்தாளர் புதுமைப்பித்தன். தமிழறிஞர்கள் மு.வ., உ.வே.சா. போன்றோரின் கடிதங்கள் இலக்கியச் செழுமைக்கும் தொன்மைக்கும் சான்றுகளாக இன்றும் பேசப்படுகின்றன. கடிதம்! வெறும் வார்த்தைகளைத் தாங்கி வரும் காகிதம் அல்ல. எழுதுபவரின் எண்ணங்களைப் படிப்போரின் நெஞ்சில் பதிய வைக்கும் பண்பாட்டுப் பெட்டகம். உணர்வோடும் உறவோடும் கலந்து நிற்கும் காலக் கண்ணாடி. மகன் அம்மாவுக்கு எழுதும் கடிதம் அன்பின் வெளிப்பாடு. தந்தை மகனுக்கு எழுதும் கடிதம் அறிவுரைகளின் தொகுப்பு. நண்பர்களின் கடிதம் நட்பின் உன்னதப் பிரதிபலிப்பு. காதலர்களின் கடிதம் புது விடியலை வரவேற்கும் வாசல்கள். இப்படிக் கடிதங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் எழுத்தாளனை அறிமுகப்படுத்தும் அடையாளச் சீட்டு. மனித வாழ்வின் சாட்சியாகத் திகழும் கடிதங்கள் வாழ்க்கையை, காலத்தைப் பதிவு செய்கின்றன. எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த கடிதத்தின் முக்கியத்துவத்தை இழந்து நிற்கும் இன்றைய தலைமுறையிடம் எழுதும் வழக்கத்தை புதுப்பிக்க வேண்டும். அப்போது தான் கலாசாரப் பரிணாமம் அழிந்து விடாமல் பாதுகாக்க முடியும். இல்லையெனில் இனி வரும் தலை முறைகளுக்குக் கடிதம் காட்சிப் பொருளாகி விடும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts