Follow by Email

Saturday, 1 September 2018

நீடித்த வெற்றி சாத்தியமா?

நீடித்த வெற்றி சாத்தியமா? முனைவர். மா.முரளி, காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கியவர் ஜான் எப்.கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தம்மைக் காண வரும் பர்வையாளர்களுடன் நாள்தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மை பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். ஒருமுறை பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தைத் தட்டி, ‘உன் எதிர்கால லட்சியம் என்ன?’ என்றார், கென்னடி. உடனே, ‘இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும். இதுதான் என் லட்சியம்’ என்றான் அந்தச் சிறுவன். விழிகளை உயர்த்திவிட்டு, ‘குட்’ என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதுதான் தனது லட்சியம் என்று சொன்ன அந்தச் சிறுவன் பிற் காலத்தில் அப்படியே ஆனான். அவன் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற பில்கிளிண்டன். அவரின் சிறுவயதிலே வந்த எண்ணம் வெறும் ஆசையோ, கற்பனையோ அல்ல. தீர்க்கமான தீர்மானம். அதனால் நாமும் நம் வாழ்வில் வெற்றிபெற தீர்க்கமான லட்சியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இடைவிடாத முயற்சியுடையவர்களே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிபெற முடியும். வெற்றியின் முக்கிய அம்சமே, எவ்வளவு கடினமாக நாம் உழைக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. ஆதலால் லட்சியம் என்ற ஒன்றை நாம் நம் வாழ்வில் ஏற்படுத்திக்கொண்ட பின்பு சும்மா இருந்துவிடக்கூடாது. இலக்கு நோக்கியே இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும். செல்லும் பாதை சரியாக இருந்தால் மெல்ல ஓடினாலும் வெற்றிதான். வாழ்க்கை என்பது நேரத்தால் ஆனது. வரலாற்றில் சாதனைகள் படைத்திட்ட பலரும் நேர மேலாண்மை உள்ளவர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். எல்லோருக்கும் 24 மணிநேரம் தான். அதைப் பயன்படுத்தும் வகையில் தான் வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் அமையும். ஆதலால் நேரத்தை நன்கு பயன்படுத்துங்கள், கடினமாக உழைத்திடுங்கள், வாழ்வில் வெற்றி நிச்சயம். பிரான்சு நாட்டைச் சேர்ந்த மாவீரன் நெப்போலியனிடம், ‘உங்கள் படையில் எத்தனை பேர் உள்ளனர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னைச் சேர்க்காமல் 50 ஆயிரம் பேர்? என்றார். ‘அப்படி என்றால் உங்களைச் சேர்த்து எத்தனை பேர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘1 லட்சத்து 50 ஆயிரம் பேர்?’ என்று பதில் கூறினார். இத்தகைய தன்னம்பிக்கை நமக்கு வர வேண்டும். வாழ்க்கையில் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள். எடுத்தக் காரியத்தை முடிக்கும் வரை தளராத மனஉறுதியுடன் செயல்படுங்கள்; உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். ‘உன் முகத்தில் உள்ள தழும்பும், குழி விழுந்த தோற்றமும் நடிப்புக்கு ஒத்துவராது’ என அவமானப்படுத்தப்பட்டவர் தான் நகைச்சுவை நடிகர் நாகேஷ். ‘உனக்கு நடிப்பெல்லாம் வராது’ என்று திருப்பி அனுப்பப்பட்டவர்தான் சார்லி சாப்ளின். குமாஸ்தா வேலைக்குத்தான் லாயக்கு என்று கிண்டல் செய்யப்பட்டவர்தான் மர்லின்மன்றோ. ஆனால் அவர்கள் திரையில் ஜொலிக்கவில்லையா? ஆதலால் உங்களது வாழ்க்கையில் ஏற்படும் அவமானங்கள் எல்லாவற்றையும் கடந்து சோர்வடையாது, ஏளனங்களை ஏணிகளாக்கி மிகக்கடினமாக உழைத்திடுங்கள், காரியத்தை ஆற்றிடுங்கள்; வெற்றி நிச்சயம். வாழ்க்கையில் முன்னேற நமக்கு சகிப்புத்தன்மை கட்டாயமாக வேண்டும். மற்றவரின் வீண்பேச்சுக்கு செவி கொடுக்காது, சகிப்புத்தன்மையுடன் நமது கடமைகளைத் திறம்பட ஆற்றினால் வாழ்வில் வெற்றி நிச்சயம். எதற்கும் ஒரு காலம் இருக்கிறது. அக்காலம் வரும் வரை நாம் வாழ்வில் பொறுத்திருக்க வேண்டும். பொறுமையைப் போலச் சிறந்த அணிகலன் எதுவுமில்லை. பூமிக்குஅடியில் பல வருடங்கள் இருக்கும் கரியின் பொறுமை தான் வைரம். பூமியின் மேல் மண்ணின் பொறுமைதான் மலை. பொறுமை என்பது நேரத்தைப் போக்குவது அல்ல. காலத்தை வெற்றிகரமாக மாற்றும் கலையாகும். மோனலிசா ஓவியம் வரைய டாவின்சிக்கு 4 ஆண்டுகள் ஆகின. அலெக்சாண்டர் பிளமிங், பென்சிலினை கண்டுபிடிக்க 8 ஆண்டுகள் ஆகின. தாஜ்மகால் கட்டி முடிக்க உஸ்தாது இசா என்னும் சிற்பிக்கு 22 ஆண்டுகள் ஆகின. திருமலைநாயக்கர் மகால் கட்டி முடிக்க 23 ஆண்டுகள் ஆகின. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டி முடிக்க 120 ஆண்டுகள் ஆகின. பைசாநகர கோபுரம் கட்டி முடிக்க, 174 ஆண்டுகள் பிடித்தது. ஆக, சாதனைகள் சாதாரணம் அல்ல. வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்துவிடாது. ஆனால் ஒரு நாளில் நிச்சயம் கிட்டும் என்பது திண்ணம். சாதனையா? சாதிப்பதற்கெல்லாம் வயது இருக்கிறது என்று தயவு செய்து யாரும் சொல்லாதீர்கள். எட்டயபுரத்து எழுச்சிக்கவிஞன், பாரதி என்ற பட்டம் பெற்றபோது அவருக்கு வயது 11. குற்றாலீசுவரன் மன்னார் வளைகுடாவை நீந்திக் கடந்து உலக சரித்திரம் படைத்தபோது அவருக்கு வயது 12. நீராவி எந்திரத்தின் அடிப்படைத் தத்துவத்தை ஜேம்ஸ்வாட் கண்டறிந்த போது அவருக்கு வயது 15. கணிதமேதை ராமானுஜத்தின் கணிதப்புலமை காசினியில் வெளிப்பட்ட போது அவருக்கு வயது 16. கலிலியோ பைசாநகரத்துச் சாய்ந்த கோபுரத்தின் அறிவியல் உண்மையைக் கண்டு கூறியபோது அவருக்கு வயது 17. மின்விளக்கை எடிசன் கண்டறிந்து ஒளிரச் செய்தபோது அவருக்கு வயது 22. ஜெட் என்ஜினை விட்டல் கண்டறிந்தபோது அவருக்கு வயது 23. ஆங்கில இலக்கியத்தில் கவிதைத்துறையில் மகத்தான படைப்புகளை கீட்ஸ் எழுதியபோது அவருக்கு வயது 26. தெர்மா மீட்டரை கலிலியோ கண்டுபிடித்த போது அவருக்கு வயது 28. கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்த போது அவருக்கு வயது 29. லாண்ட் என்பவர் போலராய்ட் கேமராவை கண்டுபிடித்த போது அவருக்கு வயது 30. சாதனைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்று பலபேர் இப்படி நிரூபித்திருக்கிறார்கள். உங்களாலும் இத்தகைய சாதனைகளை வாழ்வில் செய்யமுடியும் சாதனைகள் சாத்தியமே. ஒருவர் வல்லவராக மட்டும் இருந்தால் போதாது. நல்லவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதரும் இலக்கினை நிர்ணயித்து, இடைவிடாத முயற்சியோடு, கடின உழைப்பை மேற்கொண்டு, நேரத்தைப் பயன்படுத்தி, பொறுமைகாத்து, தன்னம்பிக்கையோடு, மனஉறுதியோடு, சகிப்புத்தன்மையோடு, வறுமையைப் பொருட்படுத்தாது, ஏளனத்தை ஏணியாக்கி, பிறரது வீண்பேச்சுக்கு செவிகொடுக்காது வாழ்ந்தாலும், ஒழுக்கம் உடைமை கொண்டவருக்கே வாழ்க்கையில் நீடித்த வெற்றி சாத்தியம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts