Friday, 31 August 2018

கபடியின் தாயகம் தடுமாறலாமா?

கபடியின் தாயகம் தடுமாறலாமா? ஜல்லிக்கட்டும், கபடியும் தமிழர்களின் வீரத்தை உலகம் முழுவதும் ஒளிரச் செய்துகொண்டு இருக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளாகும். இன்றைக்கு சர்வதேச அளவில் கபடியின் தாயகமாக இந்தியா விளங்குவதற்கு தமிழகம் தான் காரணம். ஏழைகளின் விளையாட்டாக கருதப்படும் இந்த போட்டியில் வெற்றிகரமாக ஜொலிக்க வேகம், விவேகம், ஆற்றல் மட்டுமின்றி சமயோசித அறிவும் அத்தியாவசியமானதாகும். ஒரு கால கட்டத்தில் ஆயிரம் ரூபாய் பணத்தை பரிசாக பார்ப்பதே அரிதாக இருந்த கபடி போட்டியில் புரோ கபடி லீக் வருகைக்கு பின்பு, திறமை மிக்க வீரர்களால் கோடிகளை கூட குவிக்க முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதுடன், போட்டியின் புகழும் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது என்றால் மிகையாகாது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விளையாட்டான கபடி (ஆண்கள்) 1990-ம் ஆண்டு பீஜிங்கில் (சீனா) நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அறிமுக ஆட்டமாக இடம் பிடித்தது. முதல் போட்டி தொடரிலேயே இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்தது. அந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை அறுவடை செய்து கொடுத்தது கபடி மட்டுமே. மற்ற எந்த போட்டியிலும் தங்கம் கிட்டவில்லை. அறிமுக போட்டி முதல் ஆசிய விளையாட்டில் இந்திய கபடி அணியின் ஆதிக்கம் உச்சத்தில் கொடிகட்டி பறந்தது. தொடர்ச்சியாக இந்திய அணி 7 தங்கப்பதக்கங்களை தனதாக்கி மகிழ்ந்தது. இதேபோல் 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக அங்கம் வகித்த பெண்கள் கபடியில் இந்திய அணி தொடர்ந்து 2 முறை தங்கப் பதக்கத்தை உச்சி முகர்ந்தது. கபடி என்றாலே அதற்கு இந்தியாதான் ராஜா என்றளவுக்கு நம் ஆதிக்கம் தொடர்ந்தது. எனவே இந்தோனேஷியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் கபடியின் முடிவு நமக்கு தித்திப்பை தரும் என்று எண்ணிய கபடி ரசிகர்களுக்கு ஏமாற்றமும், எரிச்சலும் தான் மிஞ்சி இருக்கிறது. ஆண்கள் கபடியில் இந்திய அணி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் தங்கம் தவறி வெண்கலமாகி போனது. லீக் ஆட்டத்தில் 23-24 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணி, அரைஇறுதியில் 18-27 என்ற புள்ளி கணக்கில் ஈரானிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதேபோல் இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டியில் 24-27 என்ற புள்ளி கணக்கில் ஈரானிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றது. இந்திய கபடி அணிகளின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருப்பதுடன், ஆதங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியர்களுக்கு அதிர்ச்சி தந்த இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, புரோ கபடியின் வருகை இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் புரோ கபடி அறிமுகம் ஆன பிறகு இந்திய கபடி சம்மேளனத்தை கைப்பற்ற பலரும் படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர். கபடி சம்மேளன நிர்வாகத்துக்கு எதிராகவும், இந்திய அணி தேர்வு குறித்தும் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளால் ஏற்பட்ட குழப்பமும் வீரர்களை மனதளவில் பாதித்து இருக்கலாம். ஏனென்றால், வழக்கு விவகாரத்தினால் போட்டியை நேரில் காண கபடி சம்மேளன நிர்வாகிகளால் செல்ல முடியாமல்போனது. ஒருவேளை அவர்கள் அதிகம் பேர் சென்று இருந்தால் அது வீரர்களுக்கு ஊக்கத்தை அளித்து இருக்கக்கூடும். போட்டி முடிவும் இந்தியர்கள் கொண்டாடும் விதமாக இருந்திருக்கலாம் என கபடி சங்கத்தினர் கருதுகிறார்கள். மேலும், நமது அணியின் தடுப்பு (டிபன்ஸ்) ஆட்டத்தில் பலவீனத்தை பார்க்க முடிந்தது. ‘சூப்பர் டேக்கிள்’ (1 முதல் 3 வீரர்கள் இருக்கையில் எதிரணி ரைடரை வெற்றிகரமாக பிடிப்பது) செய்ததில் ஈரான் அணியினர் சிறப்பாக செயல்பட்டதை மறுக்க முடியாது. நமது வீரர்களின் ஆட்ட வீடியோ காட்சிகளை பார்த்து ஈரான் நன்றாக தயாராகி இருந்திருக்கிறார்கள். கபடியில் கர்ஜிக்கும் சிங்கமாக வலம் வந்த நமது அணி சற்றே மேலோங்கிய மெத்தனத்தை கைவிட்டு இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். ஏனென்றால் போட்டிக்களத்தில் இறுதி வரை போராடுபவர்களுக்குத்தானே வெற்றி கிட்டும்! அணி தேர்விலும் அரசியல் புகுந்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுவும் நம் வெற்றியை பறித்ததில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. அதாவது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் சிபாரிசு அடிப்படையில் நியமிக்கப்படுவதால் அவர்களால் போதிய பங்களிப்பை அளிக்க முடியவில்லை என்ற குற்றசாட்டும் உள்ளது. இதற்கெல்லாம் மேலாக, ஆசிய போட்டிக்கான இந்திய அணியில் கபடியில் துடிப்பு மிக்க தமிழகத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் யாரும் இடம் பெறவில்லை. தமிழக வீரர் ரஞ்சித், வீராங்கனை ஜீவிதா ஆகியோர் 3 கட்ட பயிற்சி முகாமில் பங்கேற்றும் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது வேதனைக்குரியது மட்டுமின்றி விவாதத்துக்கும் உரியது. போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்றாலும் நம்மால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்டத்தில் நாம் கண்ட தோல்வியை நமக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக எடுத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் ஒலிம்பிக்கில் 8 முறை தங்கத்தை தனதாக்கிய இந்திய ஆக்கி அணி தற்போது பதக்க மேடை பக்கத்தில் கூட செல்ல முடியாமல் தடுமாறும் நிலையை கபடி அணியும் சந்திக்க நேரும். கபடியின் தாயகம் இப்படி தடுமாறலாமா? -ராஜ்

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts