Wednesday, 30 January 2019

மனித இமயம் மகாத்மா

மனித இமயம் மகாத்மா கவிஞர் ரவிபாரதி இ ன்று (30-ந்தேதி) தேசப் பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாள். சூரியனே எங்களைத்தான் கேட்டு எழும், விழும் என மார்தட்டிக் கொண்டிருந்த ஆங்கிலேய பேரரசை நம் புனித மண்ணை விட்டு ஓடச்செய்த மவுன பீரங்கி மகாத்மா. அதிசயமே பார்த்து அதிசயிக்கும் ஒரு மனிதர் இவர்தான். வாக்கு, செயல், சிந்தனை மூன்றிலும் உண்மையோடும் ஒழுக்கத்தோடும் வாழ்ந்து காட்டிய வரலாற்று நாயகர். இந்திய சுதந்திர போராட்ட வேள்வி தீயில் குதித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வந்தவர். அன்பின் வழியிலும், அகிம்சை நெறியிலும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை வீண் போகவில்லை. துப்பாக்கிகளை தூள்தூளாக்கி, அணுகுண்டுகளை அழித்து, விமானங்களை வீழ்த்துவதற்கு இந்த இரண்டுமே அவருக்கு போதுமானதாக இருந்தது. கூடவே அவர் கைக்கொண்ட உண்மையும், சத்தியமும் உறுதுணையாய் இருந்தது. மக்களின் உரிமைகளுக்காக தென் ஆப்பிரிக்க அரசாங்கத்தை எதிர்த்து போராடியபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், பெற்ற காயங்கள், கற்ற பாடங்கள் காந்தியின் உள்ளத்தை செம்மைப்படுத்தியது. தென் ஆப்பிரிக்க அரசை எதிர்த்து போராடியதால் அந்நாட்டு மக்கள் காந்தியை எதிரியாக கருதவில்லை. 1899-ல் நடந்த ‘போவர்’ யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர்களை தோளிலே தாங்கி தனது தொண்டர் படையோடு சென்று அவர்களை மருத்துவமனையில் சேர்த்த உத்தமர்தான் காந்தி. தென்ஆப்பிரிக்க ஜோகன்னஸ்பர்க்கில் மக்களை தாக்கிய ‘பிளேக்’ என்னும் கொள்ளை நோயை விரட்ட வைத்திய சாலையை அமைத்து அந்த நாட்டு அரசாங்கத்தின் பாரட்டை பெற்ற மனிதநேயர். தென் ஆப்பிரிக்காவில் பலமுறை சிறை சென்றபோதெல்லாம் காந்தியை கடுமையாக தாக்கி காயப்படுத்தியவர் ‘ஸ்மட்ஸ்’ என்னும் காவல் துறை அதிகாரி. காந்தி, விடுதலையாகி வெளியே வந்தபோது அந்த அதிகாரிக்கு சிறைச்சாலையில் தான் தயாரித்த காலணியை மகிழ்வுடன் பரிசாக கொடுத்தார். இதுபற்றி ‘ஸ்மட்ஸ்’ பின்னாளில் தனது நாட்குறிப்பில் ‘இந்த காலணியை அணிவதற்கு நான் தகுதியற்றவன். எனவே பூஜை அறையில் வைத்து பூஜிக்கிறேன் என உருக்கமாக எழுதி இருந்தார். உலக வரலாற்றில் அடிமைப்பட்டு கிடந்த பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் வித்தியாசமானது இந்திய விடுதலைப் போராட்டம். மகாத்மாவின் தலைமையில் நடந்த சுதந்திர போராட்டம் அகிம்சை, சத்யா கிரகம், ஒத்துழையாமை இயக்கம், உண்ணா நோன்பு போன்ற மென்மையான, உண்மையான அணுகு முறைகளே மேலோங்கி நின்றன. விடுதலை அடைந்து இந்திய நாடே இன்ப நிகழ்வுகளில் திளைத்து கொண்டிருந்தபோது, தன்னால் தான் விடுதலை கிடைத்தது என்ற ஒரு பெருமையும் இன்றி கொல்கத்தா அருகே நடைபெற்ற கலவரத்தை தடுத்து நிறுத்துவதற்காக நடைபயணம் சென்று கொண்டிருந்தவர்தான் இந்த வித்தியாசமான மாமனிதர். ‘அரசாங்கத்திற்கு எதிராக பேசி மக்களை போராட தூண்டுவது தவறு என்று தெரியும். இருந்தாலும் அதை செய்வது எனது கடமையென உணர்கிறேன். எனவே நீதிபதி அவர்களே எனக்கு நீங்கள் அதிகபட்ச தண்டனை தர வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் உரைத்தார். குற்றவாளி கூண்டில் நிற்பவர்கள் குறைந்தபட்ச தண்டனைக்கு தானே கோரிக்கை வைப்பார்கள். அதற்கு மாறாக காந்தியடிகளின் அதிசய கோரிக்கையை கேட்டு நீதிபதி ப்ரூம் பீல்ட் ஒரு நிமிடம் அதிர்ந்தே போனார். மதியை மயக்குகிற மதுவை எதிர்த்து கடுமையாக போராடினார் காந்தி. “மதுவிலக்கு என்பதை மனதளவிலும் ஏற்றுக்கொண்டு உண்மையாக, மக்களுக்கு செய்யும் நன்மையாக அதை செய்ய வேண்டும் என்பது தான் எனது கொள்கை. பலவந்தப்படுத்தி ஒரு மனிதனை பரிசுத்தமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு மட்டும் அதிகாரம் கொடுத்தால் நஷ்ட ஈடு கொடுக்காமல் அனைத்து மதுக்கடைகளையும் ஒரே நாளில் இழுத்து மூடிவிடுவேன்” என்று முழங்கினார். நாலுமுழ வேட்டி துண்டோடு மிக மிக எளிமையாக லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடுக்கு சென்ற காந்தியடிகளை பார்த்து இந்த அரை நிர்வாண பக்கிரி யார்? என கிண்டல் செய்தார் அந்தாட்டு பிரதமர் சர்ச்சில். அந்த மாநாட்டுக்கு பிறகு இதுபற்றி நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ‘ எனது ஆடையெல்லாம் சேர்த்து உங்கள் பிரதமர் உடுத்தியிருக்கிறாரே’ என நகைச்சுவை தொனியில் பதிலடி கொடுத்தார். தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து காந்தியின் பிஞ்சு உள்ளத்திலேயே முளைத்திருந்தது. காந்தி குழந்தை பருவத்தில் இருந்தபோது வீட்டில் வேலைபார்த்த ஒருவர், காந்தியின் தாயாரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். வெளித்திண்ணையில் டம்ளரை வைத்து நீரை ஊற்றி குடிக்க சொன்னார் காந்தியின் தாயார். பிறகு தண்ணீரை குடித்ததும் வேலைக்காரர் டம்ளரை கொடுத்தபோது, காந்தியின் தாயார் டம்ளரை கழுவி கொண்டு சென்றார். இது காந்திக்கு உறுத்தியது. அம்மா, வேலைக்காரரும் நம்மை போலத்தான். அவரை ஏன் இப்படி நடத்த வேண்டும்? என கண்டித்தார். தான் செய்த சத்தியத்தை ஒருபோதும் மீறாதவர் மகாத்மா. புலால் உண்ண மாட்டேன் என தாய்க்கு சத்தியம் செய்து இங்கிலாந்துக்கு சென்றார். அந்த சத்தியத்திலிருந்து சிறிதளவு கூட விலகவில்லை. பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாயே? என்று நண்பர்கள் ஏளனம் செய்தபோதும் அதனை மீறாத உறுதி கொண்டவர். தேசத்தந்தை காந்தியடிகள் நேர்மை, உண்மை, எளிமை, தூய்மை பற்றி பக்கம், பக்கமாக எழுதிக்கொண்டே செல்லலாம். நம் நாட்டை புனிதப் படுத்திய மகாத்மாவை உலக நாடுகளும் தலையில் வைத்து கொண்டாடுகின்றன. இந்த மனித கடவுளை முதலில் கேலி பேசிய சர்ச்சிலே ‘அடிமை இந்தியாவில் பத்திரமாக நாங்கள் பாதுகாத்த மகான் காந்தி ஒரு இந்தியரால் சுடப்பட்டு இறந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என வேதனையுடன் குறிப்பிட்டார். நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக பாடுபட்ட இந்த உத்தமரை நினைவுகூர்ந்தால் மட்டும் போதாது. அவர் காட்டிய நல்பாதையில் பயணிக்க முயற்சிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

No comments:

Popular Posts